இறுதிச்சுற்று சிந்தனைச்சோதனைகள்

நாம் இந்தத்தொடரில் பார்த்துவந்த  பல சோதனைகள்  ஒரு சூழ்நிலையை விவரித்துவிட்டு,  நாம்  எடுக்க வேண்டிய முடிவு என்ன என்று நம்மை யோசிக்கச்செய்வதின் மூலம் பல்வேறு விஷயங்களை நமக்கு சுட்டிக்காட்டி,  பல புதிய புரிதல்களுக்கு வழி வகுத்தன. சோதனைகளின் வடிவமைப்பிலேயே விவாதத்தில் பங்கு பெறுபவர்களின் புரிதலை ஒரு புறமாய் நகர்த்திச்செல்ல முயலும் உத்தியும் ஆங்காங்கே காணப்படுவதுண்டு. சமயத்தில் சில சோதனைகள் இந்த விதிகளுக்கும் நோக்கங்களுக்கும் அப்பாற்ப்பட்டு இறுதி இலக்கு என்று எதுவும் இல்லாமல் வெறுமனே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு ஒதுங்கிக்கொள்வதும் உண்டு. அத்தகைய சோதனைகளின் இலக்கு நமது ஆய்வுப்பார்வைக்கு ஒரு புதிய திசையை அறிமுகப்படுத்தி வைப்பது மட்டுமே. அப்படிப்பட்ட ஒரு சோதனையை முதலில் கொஞ்சம் அருகே சென்று பார்ப்போம்.
கன வடிவ பூமி
சென்ற இதழின் இறுதியில் பூமியை விட்டு வெளியே வேடிக்கை பார்க்கப்போனதுபோல், பூமியையே வேறு விதமாய் உருவகித்துப்பார்க்கிறது ஒரு சிந்தனைச்சோதனை. இதன்படி, பூமி ஒரு உருண்டையான கோளாக இல்லாமல் ஒரு கன வடிவத்தில் (Cube Shaped) இருந்தால் எப்படி இருக்கும் என்று பலர் கேட்டிருக்கிறார்கள், யோசித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பூமியின் மேல் நடக்கும்போது நாம் தட்டையான ஒரு தளத்தின் இறுதிவரை நடந்து சென்றபின் 90 டிகிரி கோணத்தில் உள்ள அடுத்த பக்கத்திற்கு தாவ முடியுமோ? அத்தகைய பூமி நடப்பதற்கும், ஓடுவதற்கும், ஸ்வாசிப்பதற்கும், சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் நமக்கு தெரிந்த உருண்டை பூமி போலவே இருக்குமா அல்லது அது தன் குணங்களில் பெரிதும் மாறுபடுமா? இது ஒரு சுவையான கேள்வி.

cubeearth

பிரபஞ்சத்தில் உலவும் கோள்கள் எல்லாம் உருண்டை வடிவில் இருப்பதற்கு முக்கிய காரணம் அவற்றின் நிறை காரணமாக உருவாகும் ஈர்ப்பு விசைதான். கல் மண் போன்ற பொருட்களை கலந்து கட்டி   பல்லாயிரம் கிலோமீட்டர்கள் நீள அகலம் கொண்ட கன வடிவத்தில் ஒன்று சேர்த்து ஒரு கோளாக அமைத்தோமானால், அங்கே உருவாகும் ஈர்ப்பு விசை,  நடுவில் இருக்கும் ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பித்து எல்லா திசைகளிலும் விரியும். எனவே அந்த அமைப்பில் சேர்ந்திருக்கும் எல்லா பொருட்களும் அந்த மையத்தை நோக்கி இழுக்கப்பட்டு, அந்த சேகரிப்பு (Collection of Objects) காலப்போக்கில் ஒரு உருண்டை வடிவமாக மாற்றி விடும். பூமி அளவுக்கு நிறை இல்லாத சிறிய கோள்களில் ஈர்ப்பு விசையும் குறைவாக இருக்கும் என்பதால் அவை வேண்டுமானால் உருண்டை இல்லாத வேறு வடிவங்களில் இருக்க முடியும். எனவேதான் பேர் சொல்லிக்கொள்ளக்கூடிய சைஸில் இருக்கும் எல்லா கிரகங்களும் உருண்டை வடிவில் இருக்க, எரிகற்கள் போன்ற பூமியோடு ஒப்பிடும்போது மிகச்சிறிதான பொருட்கள் ஏதேதோ கன்னாபின்னா வடிவங்களில் இருக்கின்றன.
EdZottiசிந்தனைச்சோதனைதானே, அதனால் எப்படியோ தட்டிக்கொட்டி ஒரு கனசதுர பூமியை உருவாக்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஈர்ப்பு விசை காரணமாக சிலகோடி வருடங்களில் அது திரும்பவும் உருண்டை ஆகி விடும் என்றாலும், அதற்கு இடைப்பட்ட காலத்தில் அந்த மாதிரியான ஒரு கிரகத்தில் வாழ்வது எப்படி இருக்கும் என்று படத்திலுள்ள எட் ஸோட்டி போன்ற சிலருடன் சேர்ந்து யோசிக்கலாம்.
கனவடிவ பூமியின் புயிஈர்ப்பு மையமும் உருண்டை பூமியின் ஈர்ப்பு மையத்தைப்போலவே அந்த வடிவின் மத்தியில் உள்ள ஒரு புள்ளியில் உட்கார்ந்திருக்கும். உருண்டை பூமியின் வெளிப்புற மேற்பரப்பு பூமியின் புயிஈர்ப்பு மையத்தில் இருந்து ஏறக்குறைய சமதூரத்தில் இருப்பதாக கொள்ளலாம். எனவே பூமியின் மேல் நாம் எங்கு இருந்தாலும் நாம் உணரும் ஈர்ப்பு விசை அவ்வளவாக மாறுவதில்லை. ஆனால் கனவடிவ பூமியின் மேற்பரப்பில் உள்ள இடங்கள் அதன் மையப்புள்ளியிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி இருக்கிறது என்பது இடத்திற்குஇடம் எக்கச்சக்கமாக மாறுபடும். எனவே கன வடிவ கிரகத்தின் ஈர்ப்பு விசை பொதுவாக ஒவ்வொரு பக்கத்தின் நடுவிலும் மிக அதிகமாகவும், விளிம்பை நோக்கி போகப்போக குறைவாகவும், எட்டு முனைகளிலும் மிகமிக குறைவாகவும் இருக்கும். இதன் விளைவுகள் பல்வேறு வகையான வினோதங்களுக்கு வழி வகுக்கும். முதலில் பூமியில் இருக்கும் தண்ணீர் பூராவும் ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அந்த கன வடிவத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் சுமார் ஆறில் ஒரு பகுதி தண்ணீர் மட்டும் ஒரு பெரிய கடல் போல் படத்தில் காட்டியுள்ளபடி  சேர்ந்திருக்கும். இந்த கிரகத்தில் இருக்கும் காற்றுக்கும் இதே கதிதான். மொத்தத்தில் எல்லாவிதமான பாய்பொருட்களும் (fluids) அந்தந்த பக்கத்து ஈர்ப்பு விசையால் அந்தப்பக்கத்தின் மையத்தை நோக்கி இழுக்கப்பட்டு, ஒரு குமிழ் அல்லது கொப்புளம் போல் சேர்ந்து காணப்படும். ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும் பூரா வளிமண்டலமும் (atmosphere) இதற்குள் அடங்கிவிடும்.  எனவே பிராணவாயு தேவைப்படும் உயிரினங்கள் இந்த கொப்புளங்களுக்குள்ளேயோ அல்லது வெகு அருகிலோ மட்டுமே வாழ முடியும். ஒரு பக்கத்தில் இருக்கும் கடலுக்கும் அடுத்த பக்கத்தில் இருக்கும் கடலுக்கும் தொடர்பு எதுவுமே இருக்காது. இயற்கையாக அப்படி ஒரு பூமி இருந்தால்,  ஒவ்வொரு பக்கத்துக்குள்ளும் இருக்கும் கடலுக்குள்ளிருந்து தனித்தனியே உயிரினங்கள் உருவாகி வளர்ந்திருக்கலாம். அவைகளுக்கிடையே தொடர்பு ஏதும் இருந்திருக்காது என்பதால், ஒரு பக்கம் மனிதர்கள் போன்ற உயிரினங்களும், இன்னொரு புறம் டைனோசார் போன்ற மிருகங்களும், வேறொருபுறம் பறவைகளும், பிரிதொருபுறம் பூச்சிகளும், மீன்களும் வளர்ந்து மற்ற பக்கங்களில் உள்ள உயிரினங்களைப்பற்றி எந்தவித ஸ்மரனையும் இல்லாமல் உயிர்வாழக்கூடும். ஒரு விதத்தில் இது பூமி போன்ற ஆறு கிரகங்கள் நமது சூரிய மண்டலத்துக்குள் இருந்து வருவதற்கு சமம்!
cube_earthஇப்போது நிறைய மாரத்தான் பந்தயங்களில் ஓடி பழகிய நீங்கள் இந்த கனவடிவ பூமியின் மூன்று பக்கங்கள் சேரும் ஒரு முனைக்கு ஓடிப்போய் பார்த்து விடுவது என்று ஓட ஆரம்பிக்கிறீர்கள். நமது உருண்டை பூமியின் ஆரம் (Radius) சுமார் 6,300 கி.மீ., நிலநடுக்கோடின் (Equator)  நீளம் (அதாவது உருண்டை பூமியின் சுற்றளவு) சுமார் 40,000 கி.மீ. அந்த மாதிரி சைஸூக்கு இணையான கனவடிவ பூமியில் ஒரு கடற்கரையில் இருந்து ஒரு மும்முனையை நோக்கி ஓட ஆரம்பித்தால், வெகு விரைவில் ஒரு குழிந்த கிண்ணத்தில் நடுவில் இருக்கும் சிறிதளவு தண்ணீரில் இருந்து விலகி கிண்ணத்தின் விளிம்பை நோக்கி ஓடும் எறும்பைப்போல் உணர்வீர்கள்! நீங்கள் ஓடிக்கொண்டு இருப்பது சமவெளியில்தான் என்றாலும், புவிஈர்ப்பு விசை உங்களை கனவடிவின் நடுப்புள்ளியை நோக்கி இழுப்பதால், கடலை விட்டு அந்த முனையை நோக்கி ஓட ஓட மிகவும் செங்குத்தான ஒரு மலைச்சிகரத்தின் மேல் ஏறுவது போல் இருக்கும்!
புரிகிறது, மலை ஏற்றம் எல்லாம் எனக்கு அத்துப்படி, நான் எவரெஸ்ட் சிகரத்தையே வெற்றிகண்டு கொடி நட்டிருக்கிறேனாக்கும் என்று நீங்கள் மார் தட்டுவதாக வைத்துக்கொள்வோம். நமக்குத்தெரிந்த அவ்வளவு பெரிய எவரெஸ்டின் உச்சி கடல் மட்டத்தில் இருந்து வெறும் 9 கி.மீ.தான். ஆனால் அந்த கனவடிவின் ஒரு பக்கத்தின் மத்தியில் இருந்து மூன்று பக்கங்கள் சேரும் ஒரு முனை எவ்வளவு தூரம் இருக்கும் தெரியுமோ? சுமார் 4,500 கி.மீ! அடேங்கப்பா, அவ்வளவு தூரமெல்லாம் நான் ஓடுவதாக இல்லை, பேசாமல் அந்த முனையை அடையும் முயற்சியை மூட்டை கட்டி வைத்துவிட்டு, நிலநடுக்கோட்டை சுற்றி ஒரு பாதயாத்திரை மட்டும் போய்க்கொள்கிறேன் என்று நீங்கள் பிளாணை மாற்றுவதாகக்கொள்வோம்.
அதாவது கனவடிவின் மேல்/கீழ் பக்கங்களை விட்டுவிட்டு, பாக்கி இருக்கும் நாலு பக்கங்களையும் ஒரு சுற்று சுற்றி விடுவது உங்கள் திட்டம். அந்த முனைகள் பக்கம் போனால் தேவையான அளவு ஸ்வாசக்காற்று கூட இருக்காது என்று தெரிவதால், நீங்கள் புத்திசாலித்தனமாக ஒவ்வொரு பக்கத்துக்கும் நடுவில் நிலநடுக்கோடுக்கு இணையாக ஒரு கோடு கிழித்து, அந்தக்கோட்டிலேயே பயணித்து நாலு பக்கங்களையும் சுற்றிவர முடிவெடுக்கீறீர்கள். யோசித்தால் அந்தக்கோடு நிலநடுக்கோடுக்கு இணை என்பதால், 40,000 கி.மீ. வரை இருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பெரிய கடல் வேறு உங்கள் பாதையில் குறுக்கிடும். எனவே, பாதயாத்திரை ஐடியாவை மெள்ள ஓரம் கட்டிவிட்டு, குறைந்தபட்சம் ஒரு விமானப்பயணமாக அதை மாற்றவேண்டி இருக்கும்.  பயணத்தை அப்படி ஒரு விமானத்தில் செய்தால் கூட, உங்கள் விமானம் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு போக முயலும்போது சுமார் 2,500 கி.மீ. உயர மலைகளை தாண்டுவது போன்ற முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அவ்வளவு எரிபொருளை செலவுசெய்ய வேண்டிய அவசியமும் ஏற்படும்! சாதாரணமாக 40,000 அடி உயரத்தில் நீங்கள் விமானத்தில் பயணிக்கும்போது  பூமியில் இருந்து இரண்டு கி.மீ உயரம் கூட அடைவதில்லை என்பதையும், எவரெஸ்டின் உயரம் 9 கி.மீ.தான் என்பதையும் திரும்ப ஒருமுறை நினைவு படுத்திக்கொள்ளலாம்.
தண்ணீர் கடல் கொப்புளங்கள் கனவடிவ பக்கங்களின் சைஸூடன் ஒப்பிடும்போது ரொம்ப சிறியதாகத்தான் இருக்கும் என்பதால், கனவடிவ பூமியின் காய்ந்த நிலப்பரப்பு எல்லாம் பெரும்பாலும் காற்று இல்லாமல், உயிரினங்கள் வாழமுடியாத பாறை பிரதேசங்களாக விண்வெளிக்குள் துருத்திக்கொண்டு நிற்கும்! நமது உருண்டை பூமியின் மேற்பரப்பு வளைந்திருப்பதால், கடற்கரையில் நின்றுகொண்டு நம்மை நோக்கிவரும் ஒரு பெரிய கப்பலை வேடிக்கை பார்த்தால், முதலில் அதன் உச்சியும் அது அருகே வரவர மேலிருந்து கீழாக மற்ற பாகங்களும் நமக்கு தெரியும் என்பதை பற்றி படித்திருப்பீர்கள் அல்லது நீங்களே சொந்த அனுபவத்தில் பார்த்திருப்பீர்கள்.  ஆனால் கனவடிவ பூமியின் மேற்பரப்பு உருண்டை பூமியைப்போல் வளையாத, அதிலும் காற்று மேகம் ஏதும் பார்வையை மறைக்காத சமவெளி என்பதால், நம்மால் மிகவும் நீண்ட தூரத்தில் இருக்கும் விஷயங்களை தடையின்றி பார்க்க முடியும்.  எனவே விமானத்தையும் தூக்கி கிடப்பில் போட்டுவிட்டு, நீங்கள்  ஒரு ராக்கெட்டில் ஏறிக்கொண்டு போய் இரண்டு பக்கங்கள் சந்திக்கும் கோட்டில் இருந்து இரண்டு பக்கங்களையும் பார்த்தால், குறைந்த புவிஈர்ப்பு விசையின் காரணமாக ஒரு மிகப்பெரிய மலை மேல் நிற்பது போன்ற அதே சமயம் எடை குறைந்து விண்வெளியில் இருப்பது போன்ற  உணர்வுடன், பல்லாயிரக்கணக்கான மைல்கள் வரை எந்தவித தங்குதடையும் இன்றி வெகு தூரத்தில் ஒரு கொப்புளம்போல் மிகவும் கீழே காட்சியளிக்கும் கடலை பார்க்க முடியும்! இப்படி யோசிக்க யோசிக்க மொத்தத்தில் மிகவும் வினோதமான ஒரு உலகமாய், ஆனால் நிச்சயம் நாம் வாழ ஒத்துவராத ஒரு பூமியாகத்தான் அது இருக்கும்!
வண்டுப்பெட்டி
LWittgensteinலூட்விக் விட்கென்ஸ்டெய்ன் இருபதாம் நூற்றாண்டின் முன் பாதியில் வாழ்ந்த ஒரு தத்துவபேராசிரியர். ஆஸ்த்ரியாவில் பிறந்து வளர்ந்து பின்னால் இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய இவர், ஒரு மொழியை பேசுவது என்ற ஒரு செயலின் மூலமாகவே அந்த மொழிக்கும் அந்த மொழியின் வார்த்தைகளுக்கும் அர்த்தம் கிடைக்கிறதே ஒழிய, அத்தகைய செயல் இல்லாத பட்சத்தில் மொழியோ அதன் அர்த்தமோ தனியாக நிலைப்பதில்லை என்று வாதாடியவர். கொஞ்சம் குழம்புகிறதல்லவா? குழம்பும் என்று புரிந்துகொண்ட பேராசிரியர், தான் சொல்ல வந்ததை விளக்க ஒரு சிந்தனைச்சோதனையை பரிந்துரைக்கிறார். இதன் மூலம் அவர் சுட்டிக்காட்ட விரும்புவது நம்முடைய புலன்கள் வழியே நமக்குக்கிடைக்கும் அனுபவங்களை நாம் மற்றவர்களிடம் மொழி வழியே பகிர்ந்துகொள்ளும்போது  தனிமனித சிந்தனை அந்த மொழியையும் புரிதலையும் எப்படி பாதிக்கிறது என்பதைத்தான்.
இந்த சிந்தனைச்சோதனையில் விட்கென்ஸ்டெய்ன் நம்மை பல தனிநபர்கள் கொண்ட ஒரு குழு சந்திப்பதாக யோசிக்கச்சொல்கிறார். குழுவில் உள்ள ஒவ்வொருவர் இடமும் ஒரு சிறிய பெட்டி இருக்கிறது. பெட்டிக்குள் அவர்கள் “வண்டு” என்று சொல்லும் ஏதோ ஒரு வஸ்து இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கும் பெட்டிக்குள் உள்ள வண்டை பார்க்க முடியுமே தவிர, மற்றவர்கள் பெட்டியில் என்ன இருக்கிறது என்று பார்க்கவே முடியாது. இந்நிலையில் நாம் ஒவ்வொரு நபரையும் அவர்களிடம் இருக்கும் வண்டை பற்றி விளக்கச்சொல்கிறோம். ஒவ்வொருவரும் தன் வண்டைப்பற்றி எவ்வளவு விளக்கினாலும், அவர்கள் யாரும் மற்றவர்கள் பெட்டியில் இருக்கும் வண்டுகளை பார்த்ததில்லை என்பதால், அவர்கள் சொல்வதில் எவ்வளவு அடுத்தவர்களுக்கு புரிகிறது, மற்றவர்கள் வண்டுக்கும் நமது வண்டுக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத விஷயங்கள். ஒருவர் பெட்டிக்குள் ஒரு குருவியும், இன்னொருவர் பெட்டிக்குள் ஒரு சோப்புக்கட்டியும், மற்றொருவர் பெட்டியில் எதுவுமே இல்லாமலும் கூட இருக்கலாம்! எனவே அந்தக்குழுவை ஒரு சிறிய சமுதாயமாக உருவகித்துப்பார்த்தால், அந்த சமூகத்துக்குள் சில காலங்களுக்கு அப்புறம் “வண்டு” என்பதே “சிறிய பூச்சி” என்பது போன்ற அர்த்தங்களுக்கு சிறிதும் சம்பந்தமே இல்லாமல்  “என் பெட்டிக்குள் இருக்கும் ஒரு பொருள்” என்று கூட புரிந்து கொள்ளப்படலாம்! உதாரணமாக வலி என்றால் என்ன என்பது தனிமனித அனுபவமாக நம் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் வலி என்று நான் சொல்வதும் நீங்கள் சொல்வதும் ஒரே விஷயம்தானா என்பது அறுதியாக சொல்லமுடியாத ஒரு விஷயம். எனவே ஒரு பொது சமுதாய அனுபவத்தில் இருந்து ஒரு விஷயம் கற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலோழிய, நாம் மொழி மூலம் விளக்கும் அல்லது விவாதிக்கும் எந்த ஒரு விஷயமும் உண்மையில் என்ன என்பது முக்கியம் இல்லாமல் போய்விடுகிறது. நாம் விவாதிப்பது எல்லாம் நமது பரஸ்பர மொழி அனுமதிக்கும் ஏதோ சில விஷயங்களை மட்டுமே!
அது சரிதான் என்றால், நமது பிரத்தியோக சிந்தனைகள் அந்தப்பெட்டிக்குள் இருக்கும் வண்டைப்போல என்கிறார் விட்கென்ஸ்டெய்ன். அடுத்தவருடைய வண்டை பற்றி அதாவது அவருடைய எண்ணங்களைப்பற்றி நமக்கு எதுவுமே சரியாகத்தெரிய வாய்ப்பில்லை என்பதால், நாம் பேசும் மொழி, நாம் சொல்ல விழையும் நமது எண்ணங்கள், என்று எதுவுமே அடுத்தவருக்கு நாம் நினைப்பது போல் போய் சேருகிறதா, புரிந்து கொள்ளப்படுகிறதா என்பதற்கெல்லாம் ஒன்றும் உத்தரவாதம் இல்லை! ஒவ்வொருவரும் அவரவர் உலகை, மற்றவர்கள் சொல்வதை, தங்களது அனுபவங்களை எல்லாம் புரிந்து கொள்வது அவரவர் சொந்த வாழ்வு அனுபவங்கள், மற்றும் புலன்கள் தரும் சமிக்ஞை முதலியவற்றை பொறுத்தது! தத்துவபேராசிரியர்கள் இதற்கு க்வாலியா (Qualia) என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
மனித மூளையும் சிந்தனைகளும்
மேலே நாம் பார்த்த இரண்டு சோதனைகளையும் இந்த தொடரை முடிக்கும்  நிமித்தமாகவே எடுத்துக்கொண்டோம். விட்கென்ஸ்டெய்ன் சொல்வது போல் நாம் ஒருவரோடு ஒருவர் உருப்படியாக கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்வதே மிகவும் கடினமான விஷயம் என்றால், அப்படிபட்ட ஒரு பெரிய இடர்ப்பாடு இருந்தும் மனித மூளையின் சிந்தனைகள் வழியே நாம் சாதித்திருப்பது கொஞ்சம் நஞ்சம் அல்ல. பிரபஞ்சத்தின் அளவு, வயது, சக்தியோடு எல்லாம் ஒப்பிட்டால், அற்பப்பதர் போல் தோன்றும் நம்மால், நமது கிரகமே உருண்டையாய் இல்லாமல் சதுரமாய் கனவடிவில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதில் இருந்து ஆரம்பித்து எவ்வளவு தூரம் போய் எவ்வளவு விஷயங்களை அலசி ஆராய முடிகிறது என்று யோசித்துப்பாருங்கள்! இந்தத்தொடரில் மட்டுமே நாம் எத்தனை துறைகளை, விஷயங்களை, காலங்களை தொட்டிருக்கிறோம்! அந்த அத்தனை சாகச அனுபவங்களுக்கும் தேவையானது வளமான கற்பனையும், உற்சாகமான சிந்தனையும் மட்டும்தான். பயணத்தை விடாது தொடர்வோம்.
(முற்றும்)
 

0 Replies to “இறுதிச்சுற்று சிந்தனைச்சோதனைகள்”

  1. தமிழில் இம்மாதிரியான தொடர் மிக மிக மிக அபூர்வம்.அருமையான,புதுமையான தொடர்.ஆனால்,எனக்கு இரண்டு,மூன்று முறை படித்தால்தான் புரிந்துக்கொள்ள முடிந்தது.சில கட்டுரைக்களை இன்னும் திரும்ப,திரும்ப படிக்கின்றேன்.இது போன்ற தொடர்களை எதிர்பார்க்கின்றேன்.நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.