அம்மாவின் தேன்குழல் – புத்தக முன்னுரை

ammavin_thenkuzhal

அகநாழிகை பதிப்பக வெளியீடு

 
நேசக்கரம் நீளும் உன்னதத் தருணங்கள்..
உண்மையில் நான் ஒரு வாசகன் மட்டுமே. என் எழுத்து ஒரு கிளைவிளைவே. என்னுடைய நண்பர்கள் குழுவில் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களை எளிதாக எண்ணி விடலாம். இலக்கிய உலகிலும் எனக்கு யாருடனும் பழக்கமில்லை. என்னைப் போன்ற ஏகலைவன்களுக்கு, துரோணர்களின் புத்தகங்களே குருநாதர்கள். எனக்குத் தெரிந்த பலர் புத்தகத்தை எடுத்தால், வெகு விரைவாகப் படித்து முடித்து விடுகிறார்கள். என்னாலெல்லாம் அவ்வளவு வேகமாக வாசிக்க முடியாது. ஒரு புத்தகத்தை  வாசித்துக் கொண்டு இருக்கும்போதே மின்னல்போல் பளீரென ஒரு எண்ணம் வெட்டும். அந்த எண்ணத்தின் பின்னால் இடியைப்போல கிடுகிடுவென சிறிது நேரம் ஓடினால், அது தொடர்பாக என் வாழ்வில்  நடந்த சம்பவங்கள், கடந்த காலப்பதிவுகள் அனைத்தும் என் முன்னே வந்து கொட்டும். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அப்படியே சிந்தனையில் மூழ்கிப் போய் விடுவேன். சிதறி விழும் சிந்தனைகளைக் கோர்த்துப் பார்க்கலாம்,
கவிதையாகவோ,  கட்டுரையாகவோ, சிறுகதையாகவோ எழுதிப் பார்க்கலாம் என்றெல்லாம் எனக்குத் தோன்றியதில்லை. அதுபற்றி உடனே நண்பர்களிடமோ, உறவுகளிடமோ பேசிவிட்டு, மீண்டும் புத்தகத்தை கையில் எடுத்துக் கொள்வேன். பெல்ஜியத்திற்கு புலம் பெயர்ந்தபோது உருவான வெறுமை, புதிய அனுபவங்கள், தாயக நினைவுகள் இவையே என்னை எழுதத்தூண்டியது என்று நினைக்கிறேன்.
எல்லோரிடமும் எழுதுவதற்கு ஏராளமாக விஷயங்கள் இருக்கிறது. எழுத்துலகில் இருக்கும் எத்தனையோ ஜாம்பவான்களை வாசிக்கிற போதெல்லாம்,  அவர்களைவிட,  ஒருபடி மேலே சென்று, பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது என்றும் தோன்றும். அதற்கு தொடர் பயிற்சியும், சிரத்தையும் அவசியம். அதேசமயம், தனிப்பட்ட முறையில், எழுதத் தொடங்கிய பின்பு என்னுடைய பார்வையில் ஏற்பட்ட மாற்றங்களை உணர முடிந்தது. அது வேறு சில அகதரிசனங்களுக்கு வித்திட்டது. எழுத்தாளர்கள் எல்லாம் வித்தைக்காரர்கள்; முடிச்சு போடுபவர்கள், வாசகர்களே தேடுபவர்கள்; புதிர்களை அவிழ்ப்பவர்கள் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பேன். எழுத்து என்பது ஒரு வித்தை, பொழுதுபோக்கு, மனதுக்கு இனிமை தரும் செயல், என்பது போன்ற கருத்துக்களெல்லாம் மாறி, அது ஒரு வகையான தேடல் என்பதை எழுத ஆரம்பித்த பிறகுதான் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு வாசகனாக நான் தேடியதற்கும், எழுத்தின் மூலமாக நான் தேடுவதற்கும் இருந்த வித்திதியாசம் புரிந்தது. எனக்கு தீராத மன உளைச்சல் தந்துகொண்டிருந்த ஒரு விஷயத்தை ஒரு எளிய சிறுகதை எழுதியதன் மூலமாக கொன்றழித்து பேரமைதி தேடிக்கொண்டேன் என்றால் நம்புவீர்களா? ஓரிரு பக்கங்களுக்கே இப்படி என்றால் ஆயிரமாயிரம் பக்கங்களை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் வித்தகர்களை என்னவென்று சொல்வது.
தமிழிலக்கிய உலகில் எனக்கான துரோணர்கள் ஏராளம். போருக்குச் செல்வதற்காக நான் வித்தை பழகவில்லை. இந்த வித்தையைப் பழகுவது எனக்குப் பிடித்திருக்கிறது. உண்மையில் இது வித்தையே இல்லை. இந்தப் படைப்பாளிகளைக் காண்பதற்கு பொறாமையாக இருக்கிறது. அவர்களுடைய உலகம் எப்படி இருக்கும் என்பதைத் தரிசிப்பதற்குப் பேராவலாக இருக்கிறது. அந்த உலகத்திற்கு எப்படியேனும் தப்பித்து ஓடிவிட வேண்டும் என்கிற அழுத்தம் எனக்குள் இருக்கிறது. வாசிப்பனுபவம் சிற்றின்பம் என்றால், படைப்பனுபவம் பேரின்பம். இவையிரண்டும் இருவேறு பாட்டைகளில் சென்று பெறப்படுபவை அல்ல; ஒரே பாட்டையின் இரு வேறு புள்ளிகள் அவை. எனக்குப் பேரின்பப் பேறு கிட்ட வேண்டும் என்கிற ஆவலின் கிளைவிளைவாகப் பிறந்தவைதான் ‘அம்மாவின் தேன்குழல்’ தொகுப்பில் உள்ள இந்தச் சிறுகதைகள்.
இன்றைய வாழ்க்கையே ஒரு பந்தயம் போலாகி விட்டது. எல்லோருமே முழு மூச்சாக களத்தில் இறங்கி, எதையோ நினைத்துக் கொண்டு, ஏதேதோ இலக்குகளைத் தேடி, எங்கெங்கோ ஓடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், யாருமே இந்த ஓட்டத்தை ரசிப்பதாகவோ, கூர்ந்து கவனிப்பதாகவோ தெரியவில்லை. இலக்கு என்பது வெற்றி, தோல்விகளால் குறுக்கும் நெடுக்கும் பின்னப்பட்ட ஒரு மாய வலை. அத்தகைய வலையில் மாட்டிக் கொண்டிருப்பதையே அறியாத குருட்டு மான்கள் நாம். எழுதத் தொடங்கிய பிறகுதான் என்னைச் சுற்றி நடக்கும் எளிய விஷயங்களைக் கூட, இன்னும் கூர்ந்து நான் கவனிக்க ஆரம்பித்திருக்கும் இந்த மாற்றத்தை என்னால் உணர முடிகிறது.
எப்படி இருப்பினும், என்னுடைய ‘அம்மாவின் தேன்குழல்’ சிறுகதையை திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள் தேர்ந்தெடுத்து எழுதியிராவிட்டால், அதன் பிறகு நான் எழுதியிருப்பேனா என்பது சந்தேகமே. இப்படியிருக்க, என்னுடைய சிறுகதைத் தொகுப்பு வெளிவரும் என்றெல்லாம் நான் கனவுகூட கண்டதில்லை. இந்தத் தொகுப்பிலுள்ள சில கதைகள் சென்னை நகரைப் பின்னணியாகக் கொண்டவை. ஆனால் பெரும்பாலான கதைகள் ஐரோப்பியப் பின்னணியில் எழுதப்பட்டிருபவை. ஓரிரு கதைகள் பெல்ஜியத்தில் துவங்கி ஒரே அடியில் சென்னைக்குத் தாவி முடியும். ஐரோப்பாவையே சென்னைக்கு கொண்டுவரும் முயற்சியையும் ‘பனிப்போர்வை’ கதையில் செய்திருக்கிறேன். இங்கு வந்த புதிதில், இங்கிருக்கும் இந்தியர்களும் சரி, ஐரோப்பியர்களும் சரி அடிக்கடி பண்பாட்டு வேறுபாடுகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதை காண முடிந்தது. அது இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தச் சிறுகதைகள் இந்தியாவையும், ஐரோப்பாவையும்  இணைக்க நான் செய்த முயற்சி என்று கொள்ளலாம். நாடுகளைக் காட்டிலும், இருவேறு உலகங்களில் வாழும் மனிதர்களை இணைத்துப் பார்க்கும் முயற்சி என்றே கூற வேண்டும்.
பண்பாடு என்பது ஒரு வெங்காயம்; பனிப்பாறை என்றெல்லாம் பேசுகிறார்கள். நான் முதன்முதலாக பெல்ஜியத்திற்கு 2005-ஆம் ஆண்டு வந்தபோது, என் முன்னே ஒரு பெரிய வெங்காயத்தைக் கண்டேன். பண்பாட்டு வேறுபாடுகளை பல்லடுக்களாகக் கொண்ட ஒரு வெங்காயம். மேற்புற அடுக்காக இருந்தது இவர்களின் வெள்ளைத்தோல். தோலை உரித்து எடுத்தேன். அடுத்த அடுக்கில் மொழி தெரிந்தது. அதையும் உரித்து எடுத்தேன். இப்படி ஒவ்வொரு அடுக்கில் ஒவ்வொரு வேறுபாடு என்று ஒன்றடுத்து ஒன்றாக வந்து கொண்டேயிருந்தது. நான் விடாமல் உரித்துக் கொண்டே சென்றேன். இறுதியில் ஒன்றுமில்லாமல் போனது. பண்பாடு என்பது ஒரு வெங்காயம் என்பது அப்போதுதான் புரிந்தது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு  ஒருநாள் நான் வசிக்கும் லூவன் நகரின் புறநகர்ப்பகுதியான ஹெரன்ட்டிற்கு சைக்கிள் வாங்குவதற்காகச் சென்றேன். அலுவலக நண்பர் ஒருவர் நாற்பது யூரோவிற்கு அவருடைய சைக்கிளை விற்பதாகக் கூறினார். அது ஒரு தோட்டஞ்சூழ்ந்த மிகப் பெரிய வீடு. அழைப்பு மணியை அழுத்தி விட்டு கதவருகே நின்று கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் கழித்து ஒரு வயதான பெண்மணி வந்து கதவைத் திறந்தார். சைக்கிள் வாங்க வந்திருப்பதாகத் தெரிவித்தேன். உள்ளே அழைத்து இருக்கையில் அமரச்செய்து, அவரது மகன் இன்னும் சில மணித் துளிகளில் வந்துவிடுவார் என்று டச்சு மொழியில் கூறினார். அப்போதுதான் நான் டச்சு மொழி கற்க ஆரம்பித்திருந்தேன். அவர் டச்சு மொழியில் கேட்ட கேள்விகளுக்கு, நான் ஆங்கிலத்தில் பதிலளித்துக் கொண்டிருந்தேன். அது சரியான பதிலா என்று கூட எனக்குத் தெரியாது. அவரும் அப்படியே நினைத்திருக்க வேண்டும். ஆனாலும் நான் இந்தியா என்று கூறும் போதெல்லாம் மெல்லிய புன்னகையை உதிர்த்தார். இருபது நிமிடங்களில் அவரது மகன் வந்து சேர்ந்தார். அவர் ஆன்டுவெர்ப் நகரத்தில் குடும்பத்துடன் வசிப்பதாகவும், அவரது தந்தை சில மாதங்களுக்கு முன்னால் காலமாகி விட்டதால், இரண்டு வாரங்களுக்கொரு முறை இங்கு வந்து தாயைப் பார்ப்பதாகவும் கூறினார். அதைக் கேட்டவுடன், அந்தப் பெண்மணி அழத் தொடங்கிவிட்டார். நான் அவருக்கு அருகே சென்றேன். அவர் என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு கண்ணீர் வடித்தார். அத்தனை பெரிய வீட்டில் அவர் தனியாகத்தான் வசித்து வருகிறார். சில நொடிகள் நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவேயிவில்லை. ஆனால் எங்களுக்கிடையே அமைதியாக ஒரு சம்பாஷனை நடந்து கொண்டிருந்தது. அவரிடம் ‘ஸ்டெர்க்.. ஸ்டெர்க்’ என்று தைரியமாக இருக்குமாறு கூறினேன். நான் வாங்க வந்த சைக்கிள் அவருடைய கணவருடையது என்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. அந்தச் சைக்கிளை எனக்கு இலவசமாகத் தந்து விடுமாறு அவரது மகனிடம் கூறினார். நான் மறுத்துவிட்டு நாற்பது யூரோவை அவரிடம் தந்தேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கிய சைக்கிள் அது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. போன மாதம் வாங்கியதுபோல் இருந்தது. அவரது கணவர் நன்கு பராமரிப்பார் என்று பெருமிதத்தோடு கூறினார் அந்த மூதாட்டி. அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு வரும்போது அவர் கூறியது எனக்குப் புரியவில்லை, அவர் மகிழ்ச்சியோடு இருக்கிறார் என்பதைத்தவிர. ‘என் கணவரின் சைக்கிள் நல்ல கைகளுக்குச் செல்கிறது என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி’ என்று நண்பர் மொழிபெயர்த்தார்.
இந்த இடத்தில் பண்பாட்டு வேறுபாடுகள் எங்கே போயின? பண்பாட்டு வெங்காயம் காணாமல் போயிருந்த உன்னதமான தருணம் அது. என்னால் அவருடைய முதுமையில் தனிமையின் வலியை உணர முடிந்தது. அவருக்கு வேண்டிய ஆதரவை அவரால் என் கரங்களிலிருந்து பெற முடிந்தது. மற்றவர்களை நாம் புரிந்து கொள்வதற்கும், நம்மை நாம் வெளிப்படுத்துவதற்கும் மொழியே தேவைப்படாத தருணங்கள் இருக்கின்றன. ஒரு பெல்ஜியனின் வலியை புரிந்து கொள்வதற்கு இன்னொரு பெல்ஜியனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கலாச்சார வேறுபாடுகள் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. என் தாத்தாவின் மறைவுக்குப் பிறகு என் பாட்டியைச் சந்தித்தபோது அவர் கிட்டத்தட்ட இந்த மூதாட்டி செய்வதையேதான் செய்தார். வலி என்பது அனைவருக்கும் ஒரேமாதிரியாகவே இருக்கிறது. இன்று யாரிடம் பேசிக் கொண்டிருந்தாலும், சில நிமிட உரையாடலுக்குப் பிறகு பார்த்தால், எல்லோருமே இன்றைய வாழ்க்கை முறைகளால் மன அழுத்தத்தில் சிக்குண்டு அவதிப்படுவதாகவே தோன்றுகிறது. அவர்களின் வலிகளைப் புரிந்துகொண்டு நேசக்கரம் நீட்டிய உன்னதத் தருணங்களைக் கதைகளில் கைப்பற்ற முயற்சித்ததன் விளைவுதான் இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள்.
புலம் பெயர்ந்தவர்கள் ஆரம்பகாலத்தில் பண்பாட்டு வேறுபாடுகளால் சந்திக்கும் பிரச்சினைகளை இந்தக் கதைகள் அதிகம் பேசுவது போன்று தோன்றினாலும், வேறுபாடுகளை மட்டுமே முன்னிறுத்திக் காட்டுவதுபோல் தெரிந்தாலும், பயணத்தின் இறுதியில் அது உருமாறும் கட்டம் ஒன்று வரும். அதுதான் நான் கண்டடைந்த தரிசனம். பண்பாட்டு வேறுபாடுகளைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பது மனிதர்களை மேலும் பிரிக்கவே செய்யும். வெங்காயமாவது, பனிப்பாறையாவது.. கண்ணுக்குத் தெரியும் வேறுபாடுகளைவிட, மறைந்திருக்கும் ஒற்றுமைகள் மூலமாகவே சக மனிதர்களிடம் நம்மை இணைத்துக் கொள்ள முடியும் – அவர்கள் எந்த நாட்டவர்களை இருந்தாலும். ஒற்றுமைகளைப் பார்க்கத் துவங்க இந்தத் தொகுப்பிலுள்ள சில கதைகள் உதவலாம்.
இந்தச் சிறுகதைத் தொகுப்பை நேர்த்தியாக வடிவமைத்து, சிறப்பான முறையில் வெளியிடுவதற்காக மிகுந்த சிரத்தையோடு உழைத்து, தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் உங்களிடம் கொண்டுவந்து சேர்க்க உதவிய அகநாழிகை பதிப்பகத்திற்கு என்னுடைய பாராட்டுகளும், நன்றிச்செண்டும்.
 
அன்புடன்,
மாதவன் இளங்கோ 
மின்னஞ்சல்: madhavan.elango@gmail.com
 
 

0 Replies to “அம்மாவின் தேன்குழல் – புத்தக முன்னுரை”

  1. சைக்கிள் சம்பவம் அப்படியே என் மனதை பிழிந்துவிட்டது.மனிதர்கள் யாவருக்கும் உணர்வுகள் ஒன்றே! மொழிகள் வேறானால் என்ன?
    தேன்குழல் புத்தகம் வாங்கும் விருப்பம் அதிகமாகிவிட்டது. முறுக்கைத் தேடி வந்து எழுத்தில் வீழ்ந்தவள் நான்.
    உங்கள் முன்னுரை அருமை!
    ஒரு விண்ணப்பம்: உங்கள் பதிவுகளில் காமெண்ட் பெட்டியில் இருக்கும்வேர்ட் வெரிஃபிகேஷனை எடுத்துவிட்டால் பின்னூட்டும் அன்பர்களுக்கு எளிதாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.