விதியின் பிழை காண் – பகுதி 3

வெளிப்புறம் – தருமன் வீட்டு வெளியே உள்ள தெரு – பகல்
உச்சி வெயில் கொளுத்துகிறது. தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.தருமன் வீட்டுக் கதவு திறக்கிறது. தருமனும் நாகையும் வெளியே வருகிறார்கள். பிறகு நாட்டார் வீட்டை நோக்கிச் செல்கிறார்கள்.

 

தருமன்

 

தெருவில் யாரும் இல்லை?

 

நாகை

 

பாண்டியர் ஊரில் இருந்து கிளம்பி விட்டார் என்று கேள்விப்பட்டேன்.

 

பேசிக் கொண்டே தெரு முனை திரும்பி நாட்டார் வீட்டின் பக்கத்தில் நிற்கிறார்கள். பந்தல் அதற்குள் காணாமல் போய் விட்டது. சில ஓலைகள் மட்டும் தரையில் கிடக்கின்றன. வெறும் மூங்கில் குச்சிகள் தரையில் நட்டு வைக்கப்பட்டு நிற்கின்றன.வீட்டில் யாரையும் காணோம்.

 

தருமன்

 

ராணியின் அறை பின்புறம் இருக்கிறது.

 

இருவரும் மெதுவாக வீட்டைச் சுற்றிக் கொண்டு போகிறார்கள். ஒரு பெரிய அரச மரம் பரந்து நிற்கிறது. அதன் கிளை ஒன்று முதல் மாடி ஜன்னலில் போய் உரசி நிற்கிறது.

 

நாகை

 

இந்த மரத்தின் வழியே ஏறி அந்த ஜன்னலில் புகுந்து குழந்தையை எடுத்திருக்கிறானா? அசகாய சூரன் தான்.

 

தருமன்

 

நான் கற்றது என்ன என்று சொல்கிறேன் கேள். எதையுமே அப்படி நம்பி விடக் கூடாது. இப்போது பார்.

 

தருமன் மரத்தின் கீழே சுற்றி வருகிறான். கீழே உற்றுப் பார்க்கிறான். பிறகு ஒரு காலை எடுத்து மரத்தின் மேல் வைக்கிறான்.

 

நாகை

 

அட, என்ன செய்கிறாய்?

 

தருமன்

 

எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது.

 

மரத்தின் மேல் மெதுவாக ஏறுகிறான். ஒரு தடிமனான கிளை சன்னலை ஒட்டிக கொண்டு செல்கிறது.தருமன் அதன் மேல் கால வைக்கிறான். பிறகு காலை எடுத்து அழுத்துகிறான். கிளை வளைகிறது.அவன் மேலே குனிந்து உட்கார்கிறான்.

 

தருமன்

 

நேற்று அந்தக் களப்பிரர் ஒற்றனைப் பார்த்தாய் இல்லையா?

 

நாகை

 

ஆமாம்

 

தருமன்

 

அவன் பருமனை இந்தக் கிளை தாங்காது

 

கீழே இறங்குகிறான்.
நாகை

 

வேறு யாராவது உதவி செய்தார்களோ?

 

தருமன்

 

அந்தக் கிளை என்னையே தாங்காது. ஒரு சின்னப் பையன் தான் போக முடியும்.

 

(கீழே சுற்றிப் பார்த்து விட்டு)
இங்கே எதுவும் தெரியவில்லை.

 

நாகை

 

சிறு பையன் போகலாம் என்றா சொன்னாய்?

 

தருமன்

 

ஆமாம்.

 

நாகை

 

ஒரு வேளை அந்தக் குள்ளன் ஒருவன் வந்தானே, அவன் வேலையாக இருக்குமோ?

 

தருமன்
(யோசித்து)
இருக்கலாம். அவன் எங்கே?

 

வெளிப்புறம் – நாட்டார் வீட்டுத் தெரு, பட்டத்திப் பாட்டி வீட்டு வாசல் – பகல்
பாட்டி வீட்டு வாசலில் ஏறி நாகை கதவைத் தட்டுகிறாள்.

 

நாகை

 

தெருவில் யாரும் இல்லை?

 

பதில் எதுவும் இல்லை.மறுபடித் தட்டுகிறாள்.பக்கத்து வீட்டில் இருந்து பெண் ஒருத்தி வெளியே வருகிறாள்.

 

பக்கத்து வீட்டுப் பெண்

 

பாட்டி கிளம்பி விட்டாளே. காலையிலேயே போய் விட்டாள்.

 

நாகை

 

எங்கே போய் விட்டாள்?

 

பக்கத்து வீட்டுப் பெண்

 

அவள் பேரன் ஒருத்தன் தென்காசியில் இருக்கிறானாம். யுத்தம் வந்தால் என்னால் இருக்க முடியாதடி என்று கிளம்பி விட்டாள்.

 

நாகை

 

யுத்தம் வருகிறதா? யாருக்கும் யாருக்கும்?

 

பக்கத்து வீட்டுப் பெண்

 

நாகை, அறியாப் பெண்ணாக இருக்கிறாயே? இளவரசனைக் களப்பிரன் கடத்திப் போய் விட்டானாமே? பாண்டியர் படைகளைக் கூட்டச் சொல்லி விட்டார். நூறு வருடமாக இந்த பூமி பார்க்காத யுத்தம் வருகிறது.

 

நாகை திரும்பிச் சற்றுத் தள்ளி நிற்கும் தருமனை பார்க்கிறாள்.

 

பக்கத்து வீட்டுப் பெண்

 

தருமா, ஏட்டை எல்லாம் எடுத்து உள்ளே வை. கத்தி சுற்றக் கற்றுக் கொள்.

 

பக்கத்து வீட்டுக்காரி உள்ளே போகிறாள்.
தருமன் மெதுவாக வந்து பாட்டி வீட்டுத் திண்ணையில் உட்கார்கிறான். தலையில் கை வைத்துக் கொள்கிறான். நாகை அவன் அருகில் வந்து நிற்கிறாள்.

 

தருமன்

 

என்னால் இவ்வளவு பெரிய சண்டையா?

 

நாகை

 

தருமா, அப்படி இருக்காது. இதில் வேறு ஏதோ சூது இருக்கிறது.

 

தருமன்

 

நான் என்ன பரிகாரம் செய்வது?

 

நாகை மெளனமாக இருக்கிறாள்.
பிறகு,

 

நாகை

 

நாமே குழந்தையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தால் என்ன?

 

தருமன்

 

எப்படி? என்னிடம் தான் சக்தி எதுவும் இல்லையே? இந்தப் பாட்டியும் தாத்தா கொடுத்த பெட்டியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டாள்.

 

நாகை

 

தருமா, உன்னிடம் வேறு சக்தி இருக்கிறது. இவ்வளவு பேரும் அந்த மரத்தைப் பார்த்திருக்கிறார்கள். உனக்கு மட்டும் தான் அந்தக் கிளை பற்றிக் கண்டுபிடிக்கத் தெரிந்திருக்கிறது. எந்த மந்திரமும் இல்லாமல் பல திருட்டுக்களைக் கண்டுபிடித்திருக்கிறாயே?

 

தருமன் யோசிக்கிறான்.

 

நாகை

 

சரி, அதை விடு. போர் வருகிறது. நாமும் பாட்டியைப் போலத் தென்காசி போனால் என்ன?

 

தருமன்
(நிமிர்ந்து பார்த்து)

 

பாட்டியைத் துரத்திப் போய் பெட்டியை வாங்கலாம் என்கிறாயா?

 

நாகை

 

நிச்சயமாக

 

தருமன் முகம் தெளிவடைகிறது.

 

தருமன்

 

அந்தப் பெட்டி கையில் கிடைத்தவுடன் இளவரசன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விடலாம்.

 

வெளிப்புறம் – சாத்தூரில் இருந்து தெற்கே செல்லும் சாலை – பகல்
தருமனும் நாகையும் கையில் மூட்டைகளுடன் நடந்து கொண்டிருக்கிறார்கள். சற்றே மேலே இருந்து பார்க்கும் பொழுது அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் சில வண்டிகள் போவது தெரிகிறது. இன்னும் சற்று முன்னால் பார்த்தால் பலர் நடந்தும் வண்டிகளிலும் தெற்கே போவது தெரிகிறது.தருமனும் நாகையும் களைத்துப் போய் தெரிகிறார்கள். தெற்கே, அவர்கள் போகும் திசையில் ஒரு புழுதிப் படலம் தெரிகிறது. வண்டிகள் ஒதுங்குகின்றன. இருவரும் ஒரு ஓரத்தில் நிற்கிறார்கள். மிதமான வேகத்தில் சில குதிரை வீரர்கள் போகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து ஒரு நூறு பேர் கொண்ட காலாட் படைப் பிரிவு போகிறது. வேகமாக நடக்கிறார்கள். அவர்கள் முகங்கள் களைத்திருக்கின்றன. உடையிலும் முகத்திலும் புழுதி படர்ந்திருக்கிறது. தருமனும் நாகையும் அவர்கள் தாண்டிப் போகும் வரையில் பார்க்கிறார்கள்.
உள்புறம் – ஒட்டன்சத்திரம். சாத்தூரில் இருந்து தெற்கே போகும் சாலையில் உள்ள சத்திரம் – பகல்
கூட்டம் கூட்டமாக ஆட்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பேச்சுச் சத்தம் மெலிதாகக் கேட்கிறது. பக்கவாட்டில் புகையுடன் சமையல் அறை. பின்னால் சில தங்கும் அறைகள் தெரிகின்றன.தருமனும் நாகையும் ஒரு ஓரத்தில் அமர்கிறார்கள். இலை வைக்கப்படுகிறது.சற்றுத் தள்ளி சத்திரம் நடத்துபவர் மெதுவாக ஒவ்வொரு கும்பலிடமும் நலம் விசாரித்து வருகிறார்.
பக்கத்து கும்பலில் வயதானவர் ஒருவர், உரத்துப் பேசுகிறார்.

 

வயதானவர்

 

முந்தின நாளே களப்பிரர் ஒற்றன் ஒருத்தனைப் பிடித்திருக்கிறார்கள். அவன் பெரிய மாயக்காரன் போல. இளவரசனைக் கண் வைத்து தூக்கிப் போய் விட்டான்.

 

இன்னொருவர்

 

பாண்டியரின் ஒரே மகன். தவம் இருந்து பெற்ற பிள்ளை. அவன் இல்லா விட்டால் நெல்வேலி, களப்பிரனுக்குத் தான். திட்டம் போட்டுச் செய்திருக்கிறான்.

 

வயதானவர்

 

இதற்குத் தான் அந்தக் காலத்தில் நாலு ராணி வைத்துக் கொள்வார்கள். பதினாறு பிள்ளை பெற்றுக் கொள்வார்கள். எவ்வளவு தூக்கிப் போனாலும் பத்தாது.

 

இதற்குச் சிலர் சிரிக்கிறார்கள்.

 

ஒருவர்

 

போர் என்று வந்தால் யார் செயிப்பார்கள்?

 

வயதானவர்

 

யார் செயித்தாலும், இந்த வருடம் வரி கூடும். சாப்பிட எதுவும் கிடைக்காது. எல்லாம் போர்க்களத்திற்குப் போய் விடும். நம் பெண்டு பிள்ளைகள் வயிற்றுக்கு இல்லாமல் திண்டாடும்.

 

சத்திர முதலாளி அருகில் வருகிறார். வயதானவரைப் பார்த்து,

 

முதலாளி

 

பெரியவரே, நேற்றாவது நல்ல தூக்கமா?

 

வயதானவர்

 

ஆமாம். முந்தைய நாள் போல இல்லை. முந்தைய நாள் அந்தக் குழந்தை அழுது தீர்த்து விட்டது.

 

தருமன் திரும்பிப் பார்க்கிறான்.

 

முதலாளி

 

சாமி, குழந்தையுடன் யாரும் தங்குவதில்லையே. பூனையாக இருக்கும்.

 

வயதானவர்

 

என்னவோ போ. ஒரே அலறல்.

 

முதலாளி அடுத்து தருமனிடம் வருகிறார்.

 

முதலாளி

 

சமையல் எப்படி? நன்றாகச் சாப்பிட்டீர்களா?

 

தருமன்

 

மிகப் பிரமாதம்.

 

(அவர் திரும்பும் போது)

 

ஐயா, நேற்றுக் குள்ளர்கள் யாரையாவது இங்கே பார்த்தீர்களா?

 

முதலாளி

 

ஆமாம். நாலைந்து பேர் வந்தார்கள். அவர்களை அறையில் தூங்க விடுவதில்லை. நாசமாகி விடும். மாட்டுக் கொட்டகையில் தூங்கிப் போனார்கள்.

 

(beat)

 

ஏன் கேட்கிறீர்கள்?

 

தருமன்

 

சாத்தூரில் நேற்றுப் பார்த்தோம்,. சரி, இப்படிப் போனார்களா என்று தெரிந்து கொள்ளத் தான். வேறொன்றுமில்லை.

 

முதலாளி

 

ஓஹோ. நேற்றுச் சாத்தூரில் இருந்து பல பேர் வந்திருந்தார்கள். சில சித்தர்கள் கூட வந்தார்கள். ஆனால் அவர்கள் நேற்று விடியும் முன்னே போய் விட்டார்கள். பிறகு பாண்டியர் தளபதி ஒருவர் வந்தார்.

 

(சுற்றிப் பார்க்கிறார்)

 

அதோ, அங்கே இருக்கிறாரே.

 

தருமனும் நாகையும் திரும்பிப் பார்க்கிறார்கள். சற்றுத் தள்ளி, இருட்டில், தென்னதரையன் அமர்ந்திருக்கிறான். தலை குனிந்தபடி இருக்கிறான்.

 

வெளிப்புறம் – சத்திரத்தின் பின்பக்கம் – பகல்
தருமனும் நாகையும் கை கழுவுகிறார்கள். தருமன் நாகையை அழைத்தவாறு மாட்டுத் தொழுவத்தின் பக்கம் செல்கிறான்.

 

நாகை

 

நீ என்ன நினைக்கிறாய்?

 

தருமன்

 

அந்தப் பெரியவர் உண்மையில் குழந்தை அழுவதைக் கேட்டிருந்தால்?

 

நாகை

 

ஐயோ, இளவரசனை இங்கே கொண்டு வந்தார்கள் என்கிறாயா?

 

தருமன்

 

கத்தாதே. அப்படியும் இருக்கலாம் இல்லையா? யோசித்துப் பார். குழந்தையை எடுத்தவர்கள் உடனே ஊரை விட்டுக் கிளம்பியிருப்பார்கள். தெற்கே வந்தால் இங்கே தான் வந்திருக்க வேண்டும், இல்லையா?

 

நாகை குதிக்கிறாள்.

 

நாகை

 

பிரமாதம். இப்போது இளவரசன் எங்கே?

 

தருமன்

 

அவசரப்படாதே. யாராவது இங்கே வந்திருந்தால் அடையாளம் ஏதாவது இருக்கும். நான் தேடிப் பார்க்கிறேன்.

 

தருமன் அந்தக் காலித் தொழுவத்துக்குள் போகிறான். ஒரு ஓரத்தில் வைக்கோல் போர் இருக்கிறது. அதன் அருகே தரையில் கோரைப் பாய்கள். தருமன் சற்று நேரம் அங்கே தரையைத் தேடுகிறான்.பிறகு வெளியே வருகிறான்.

 

தருமன்

 

ஒன்றுமே இல்லை.

 

நாகை
(தொழுவத்தின் பக்கத்தில் காட்டி)

 

அது என்ன?

 

தருமன் குனிந்து பார்க்கிறான். மண்ணில் மறைந்தும் மறையாமலும் ஏதோ தெரிகிறது. ஒரு கயிறு போல இருக்கிறது. அதை வெளியே இழுக்கிறான். வெளிச்சத்தில் பார்க்கிறான்.ஒரு வெள்ளிக் காசு வைத்த அரைஞாண் கொடி அது.
தருமன்

 

இளவரசனின் அரைஞாண். மீன் பொறித்திருக்கிறது.
(beat)
நல்லது. இளவரசன் உயிருடன் தான் இருக்கிறான். இல்லா விட்டால் இவ்வளவு தூரம் எடுத்து வருவானேன்.
நாகை

 

ராஜ வம்சமாயிற்றே. ஒரு வேளை பலி ஏதாவது கொடுக்கப் போகிறார்களோ?

 

தருமன்

 

தெரியவில்லை. தென்காசிநாதனிடம் தான் கேட்க வேண்டும்.
வெளிப்புறம் – சத்திரத்தின் வாசல் – பகல்
நான்கைந்து வண்டிகள் நிற்கின்றன. சிலர் அவற்றின் அருகே மூட்டைகளுடன் உட்கார்ந்திருக்கிறார்கள். பலர் போய் வந்தபடி இருக்கிறார்கள். தருமனும் நாகையும் சத்திர வாசலில் நிற்கிறார்கள்.

 

வண்டிக்காரன்
(கூவுகிறான்)

 

தென்காசி செல்பவர் சேர்ந்து செல்லலாம். வழியில் கவலை இல்லை.

 

நாகை

 

இவர்களுடன் சென்று விடலாம்.

 

தருமன்
(வண்டிக்காரனைப் பார்த்து)

 

வண்டிக் கூலி எவ்வளவு அண்ணே?.

 

வண்டிக்காரன்

 

பத்துப் பணம் கொடு.

 

தருமன் யோசிக்கிறான்.வண்டிக்காரர்களில் ஒருவன் இறங்கி சத்திர வாசலில் அமர்ந்து இருக்கும் தென்னதரையனிடம் போகிறான்.

 

வண்டிக்காரன்-2

 

வீரரே, எங்கே போகிறீர்? படைகளுடன் எல்லைக்கா?

 

தென்னதரையன் நிமிர்ந்து பார்க்கிறான்.

 

தென்னதரையன்

 

இல்லையப்பா, எல்லையில் எனக்கு வேலையில்லை.

 

(beat)
உண்மையில் எனக்கு எங்குமே வேலையில்லை.
வண்டிக்காரன்-2

 

உங்களை மன்னர் கூட்டத்துடன் பார்த்திருக்கிறேன். போர்க்காலம். வழியில் கள்ளர்கள் தொல்லை வேறு. எங்களுடன் தென்காசி வர முடியுமா?

 

தென்னதரையன் சிரிக்கிறான்.

 

தென்னதரையன்

 

காவலனாகவா?

 

வண்டிக்காரன்-2

 

ஆமாம்

 

தென்னதரையன்

 

என்னை நம்புவதற்கு நன்றி. என்ன கூலி தருவீர்கள்?

 

தென்னதரையன் எழுந்து பக்கத்தில் இருக்கும் வாளை எடுத்து இடுப்பில் கட்டிக் கொள்கிறான்.
வெளிப்புறம் – தென்காசிச் சாலை – பகல்
வண்டிகள் சாலையில் போகின்றன. சாலை இரண்டாகப் பிரிகிறது. ஒன்று நெல்வேலி போகிறது. இன்னொன்று தென்மேற்காக தென்காசி செல்லும் சாலையில் போகிறது.வண்டிகள் தென்காசி செல்லும் சாலையில் திரும்புகின்றன.தென்னதரையன் தருமனுக்கு அடுத்து வண்டியில் வெளியே காலைத் தொங்கப் போட்டு அமர்ந்திருக்கிறான். வண்டிக்காரர்கள் மெதுவாக ஏதோ பாடுகிறார்கள்.

 

நாகை
(தருமனிடம்)

 

அவர் அரசருடன் வந்தவர். போர் வருமா, என்ன செய்தி என்று கேள்.

 

தருமன்
(அரையனிடம் திரும்பி)

 

அய்யா, நீங்கள் அரசருடன் வந்தவரல்லவா?

 

தென்னதரையன்

 

ஆமாம் சோதிடரே

 

தருமன்

 

தென்காசியை நம்பி எல்லோரும் போகிறோம். நீங்களும் அங்கே வருகிறீர்களே. தென்காசியில் சண்டை வருமா என்ன?

 

தென்னதரையன்
(புன்னகையுடன்)

 

போர் என்று வந்து விட்டால் எங்கே வேண்டுமானாலும் சண்டை வரலாம். தென்காசியிலும் வரலாம்.

 

தருமன்

 

உங்கள் வீடு தென்காசியோ?

 

தென்னதரையன்

 

இல்லை. நான் திருச்செந்தூரைச் சேர்ந்தவன். ஊருக்குச் செல்ல மனம் வெட்குகிறது. அது தான் கடவுள் விட்ட வழி என்று கிளம்பி விட்டேன்.

 

(beat)
தருமன்

 

இளவரசர் காணாமல் போன அன்று இரவு உங்களை பாண்டியரின் அறையில் பார்த்தேன். உங்களிடம் அப்போதே ஒன்று கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.

 

தென்னதரையன்

 

என்ன, கேளுங்கள்.

 

தருமன்

 

அன்று இரவு, ராணி குழந்தையைக் கடைசியாக எப்போது பார்த்தார்?

 

பின்னால் உள்ள வண்டிக்காரன் ஒருவன் “அடேய் அடேய்” என்று கத்துகிறான். தென்னதரையன் கவனம் கலைந்து திரும்பிப் பார்க்கிறான். தருமனும் பின்னால் பார்க்கிறான்.

 

வழுதியின் குரல்

 

மிதித்து விடுவேன். நகர்ந்து போ

 

வண்டிக்காரன்

 

ஐயோ, நில்லப்பா

 

வழுதியின் குரல்
(கத்தி)

 

தென்னதரையரே, வெளியே வாரும்.

 

தென்னதரையன் புன்சிரிப்புடன் குதித்து இறங்குகிறான்.
தென்னதரையன்

 

வழுதி, இங்கே முன்னால் வா.

 

குதிரையில் வழுதி விரைந்து முன்னால் வருகிறான். குதித்து இறங்குகிறான்.
வழுதி
(இரு கைகளையும் நீட்டியபடி)

 

அரையரே!

 

இருவரும் கட்டித் தழுவி கொள்கிறார்கள்.
வழுதி

 

வண்டியை நிறுத்தச் சொன்னால் என்னைக் கள்ளன் என்று நினைத்துக் கொண்டான் இந்த மட வண்டிக்காரன்.

 

இறங்கி வந்த வண்டிக்காரர்களைப் பார்த்து,
தென்னதரையன்

 

பயப்பட வேண்டாம். நம் ஆள் தான். பெரும் வீரன்.

 

வழுதி வண்டிக்குள் இருக்கும் தருமனைப் பார்க்கிறான்.
வழுதி

 

அட, மந்திரவாதி! நீயும் இங்கு தான் இருக்கிறாயா?
வெளிப்புறம் – ஒரு சோலைக்கு அருகே வண்டிகள் நிற்கும் இடம் – மாலை
வண்டிகள் சுற்றி நிற்கின்றன. நடுவில் உலை கொதிக்கிறது. தென்னதரையனும் வழுதியும் ஒரு ஓரமாக நின்று பேசுகிறார்கள். தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை தெரிகிறது.

 

வழுதி

 

அச்சுதரின் கட்டளை தான் இப்பொழுது செல்கிறது. அவர் சொல்வதை அப்படியே செய்கிறார் அரசர்.

 

தென்னதரையன்

 

அரசர் முட்டாள் அல்ல வழுதி. இது அத்தனையும் அவருடைய திட்டம் தான். அதில் சந்தேகமில்லை. இப்பொழுது எங்கிருக்கிறார்?

 

வழுதி

 

கோவில்பட்டியில் பாசறை அமைத்திருக்கிறார். தூதுவர்கள் மூன்று பேர் மதுரைக்குப் போயிருக்கிறார்கள். இளவரசனை உடனடியாக திருப்பி அனுப்பச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.

 

தென்னதரையன்

 

உம்…இளவரசனைப் பற்றிச் செய்தி எதுவும் இல்லையோ?

 

வழுதி

 

இல்லை. ஆனால் உயிரோடு தான் இருக்கிறான் என்று சோதிடர்கள் சொல்கிறார்கள்.

 

தென்னதரையன் தொலைவில் உள்ள மலைத் தொடரைப் பார்க்கிறான்.

 

தென்னதரையன்

 

வழுதி, என்னை அரசர் வேலையில் இருந்து நீக்கி விட்டார் என்று தெரியும் இல்லையா? ஏன் என்னைத் தொடர்ந்து வந்தாய்?

 

வழுதி
(புன்னகையுடன்)

 

அரையரே, உங்களை அரசர் எப்படியும் திரும்ப அழைப்பார். படைத் தளபதி ஆக்குவார். நான் நெல்வேலியில் அந்தப்புரக் காவல் தலைவனாவேன். பல கனவுகள் உங்களை நம்பித் தான் இருக்கின்றன.

 

தென்னதரையன் சிரிக்கிறான்.

 

வழுதி

 

அத்தோடு போர் வருகிறது. வீரத்துடன் சற்றுத் தள்ளி இருந்து ரசிக்கலாம் என்று நினைத்தேன்.

 

தென்னதரையன்

 

தென்காசி உன்னுடைய சொந்த ஊர் இல்லையா?

 

வழுதி

 

ஆமாம். எங்கள் வீட்டிலேயே தங்குங்கள். அம்மா மிக நன்றாகச் சமைப்பாள்.
வெளிப்புறம் – தென்காசிச் சாலை – இரவு
உண்டு முடித்து எல்லோரும் தீயைச் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். ஒரு பெரியவர், பாணர், உடுக்கு ஒன்றை எடுத்து லேசாகத் தட்டுகிறார். பிறகு மெல்லிய, நடுங்கும் குரலில் ஒரு இரு வரிப் பாட்டு பாடுகிறார். எல்லோரும் தலையாட்டி ரசிக்கிறார்கள்.பாடி முடித்தவுடன், சிறு மௌனம்.

 

வழுதி

 

நல்ல காதல் பாட்டு ஏதாவது பாடுங்களேன்?

 

கூட்டத்தில் பிரயாணி ஒருவர் சிரிக்கிறார்.

 

பிரயாணி

 

போர் வருகிறது. என்னைப் போல வயது ஆனவர்களுக்கே தோள் துடிக்கிறது. இந்தக் காலத்து இளைஞர்களுக்குக் காதல் பாட்டுக் கேட்கிறது.

 

வழுதி புன்னகைக்கிறான். ஆனால் பதில் சொல்லவில்லை.

 

பிரயாணி-2

 

பாவம், இவர்கள் என்ன செய்வார்கள். இப்போது தான் சண்டையைப் பார்க்கிறார்கள். இத்தனை நாளாய் குதிரையில் அங்குமிங்கும் ஓடினால் போதும்.

 

பிரயாணி-1

 

நாட்டுக்கு ஒரு ஆபத்து என்றால் எல்லைக்கு ஓட வேண்டாமா? எனக்கே பிள்ளைகளை விட்டு விட்டு வாள் எடுத்து வரத் தோன்றுகிறது.

 

பாணர்
(வழுதியிடம்)

 

தம்பி, உனக்குக் காதல் பாட்டு நான் பாடுகிறேன். கவலைப்படாதே.

 

பாணர் மறுபடி ஒரு இரு வரிக் காதல் பாட்டுப் பாடுகிறார்.

 

வழுதி

 

பிரமாதம்

 

பாணர்

 

போருக்கு நடுவே காதலை நினைப்பவர்கள் தான் இந்தப் பாட்டுகளை எழுதியவர்கள். மதுரை வீரன் பாட்டு என்றே ஒரு பாடல் இருக்கிறது.

 

பிரயாணி – 1

 

நல்ல வீரம் பொங்கும் பாடல் ஒன்று பாடுங்கள். கேட்கும் போதே அந்தக் களப்பிரனை வெட்டிப் போடத் தோன்ற வேண்டும்.

 

ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்கும் தென்னதரையன் பேசுகிறான்.

 

தென்னதரையன்

 

போரும் கொலையும் ஒன்று தான்.

 

சிலர் அவனைத் திரும்பிப் பார்க்கிறார்கள்.

 

தென்னதரையன்

 

அரசர்களும் மந்திரிகளும் பெருந்தனத்தாரும் ஒரு நாளும் முந்தி நின்று போர் புரிந்ததாகச் சரித்திரமில்லை.

 

பிரயாணி – 2

 

அது என்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள். பாண்டியன் நெடுஞ்செழியனும், கரிகால் பெருவளத்தானும்..

 

தென்னதரையன்
(குறுக்கிட்டு)

 

அவர்கள் எழுதி வைத்த சரித்திரம்

 

(beat)

 

வெளிப்புறம் – மதுரை செல்லும் சாலை – பகல்
வீரர்கள் பலர் களைப்புடன் நடந்து போகிறார்கள்

 

தென்னதரையன்
(V.O)

 

வயல்களிலும் கழனியிலும் காடுகளிலும் வேலை பார்த்த வீரர்கள்.

 

அவர்கள் கையில் வேல்களும், வால்களும் மின்னுகின்றன

 

தென்னதரையன்
(V.O)

 

இந்தப் படை, இந்தப் புது வாட்கள், இந்தக் கூரிய வேல்கள், இவை எங்கிருந்து வந்தன?
வெளிப்புறம் – மதுரைக் கோட்டை வாசல் – பகல்
மதுரைக் கோட்டை வாசல் தெரிகிறது. மீனாட்சி அம்மன் கோவில் மணியோசை கேட்கிறது. பாண்டியனின் தூதுவர்கள் மீன் கொடியும் வெள்ளைக் கொடியும் பறக்க கோட்டை வாசலைத் தாண்டி குதிரைகளில் நுழைகிறார்கள்.

 

தென்னதரையன்
(V.O)

 

தூதுவர்கள் பேசும் முன்னரே இந்தப் போர் முடிவு செய்யப்பட்டு விட்டது.
வெளிப்புறம் – களப்பிரர் எல்லையில் ஒரு கிராமம் – பகல்
ஓலை வேய்ந்த கிராமத்து வீடுகள். அச்சுதனின் குதிரை வீரர்கள் கையில் தீப்பந்தங்களுடன் விரைந்து வருகிறார்கள். ஓசை இல்லாமல் கிராமத்து வீடுகள் தீப்பற்றி எரிகின்றன.

 

தென்னதரையன்
(V.O)

 

ஏன், இந்த இளவரசன் பிறக்கும் முன்னால் இந்தப் போரின் இந்த நிமிடம் முடிவு செய்யப்பட்டு விட்டது.

 

உள்புறம் – பாண்டியன் நெடுங்கோனின் பாசறை – பகல்
“சடக்” என்று ஒரு சத்தம். நம் கண் முன்னே பழைய தமிழ் வட்டெழுத்து தெரிகிறது. அதில் ஒரு குறுவாள் குத்தி நிற்கிறது. சற்றுத் தள்ளி வரும் பொழுது ஒரு பெரிய வரைபடம் மேசை மேல் விரிக்கப்பட்டு இருக்கிறது. நெடுங்கோன் அதன் முன்னால் குனிந்தபடி இருக்கிறான். சற்றுத் தள்ளி நெஞ்சில் கை கட்டியபடி, கூடாரத்தின் வெளியே பார்த்தவாறு நிற்கிறாள் ராணி. அச்சுதன் நெடுங்கோனுக்கு எதிரே நிற்கிறான்.

 

அச்சுதன்

 

அரசே, சேதுவின் அருகே விக்கிராந்தனின் மூன்றாவது படைப் பிரிவு இப்பொழுது நிற்கிறது. அதன் தளபதி விக்கிரம கேசரி உண்டு, உறங்கி ஆடல் பாடலை ரசித்து வருகிறான். சோழ நாட்டான். அவனுக்கு இங்கு நடப்பவை தெரியவே இல்லை.

 

நெடுங்கோன்

 

உம்

 

அச்சுதன்

 

மதுரையில் விக்கிராந்தனின் மகன் தான் இருக்கிறான். கோட்டையைப் பலப்படுத்திப் பல வருடங்கள் ஆகிறது. களப்பிரர் படைப் பிரிவில் பாதி தான் அந்தக் கோட்டையைப் பாதுகாத்து வருகிறார்கள். மதுரையில் வாழ்கை தினம் போல நடக்கிறது.

 

நெடுங்கோன்

 

என்ன சொல்ல வருகிறாய்? தெளிவாகச் சொல்.

 

அச்சுதன்

 

இன்னும் பத்து நாட்களுக்குள் கிளம்பினால் மதுரை நம் கையில்.

 

சிரிப்புச் சத்தம் கேட்கிறது. பாண்டியனும் அச்சுதனும் நிமிர்ந்து பார்க்கிறார்கள்

 

ராணி

 

எல்லோரும் குழந்தை இளவரசனை மறந்து விட்டது போலத் தெரிகிறது.

 

நெடுங்கோன்

 

என்ன உளறுகிறாய்?

 

ராணி

 

இளவரசன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. அதற்குள் உங்கள் பரம்பரைக் கனவுகளை நிறைவேற்றத் துடிக்கிறீர்கள்.

 

நெடுங்கோன்

 

என் பரம்பரைக் கனவுகளா? பைத்தியமா என்ன? உன் நண்பர்கள் அந்தச் சித்தர்களிடம் போய் காட்டு.

 

ராணி விடுவிடுவென்று கூடாரத்தை விட்டு வெளியே போகிறாள். பாண்டியன் வரைபடத்தில் மதுரை இருக்கும் இடத்தில் குத்தி நிற்கும் குருவாளை பிடுங்குகிறான்.

 

நெடுங்கோன்

 

பத்து நாட்களா? குற்றாலத்தில் நம் படையை நடத்த வேண்டியது தான்.

 

அச்சுதன்

 

அதில் ஒரு சிறு பிரச்சினை முளைத்திருக்கிறது.
வெளிப்புறம் – தென்காசி – பகல்
மாட்டு வண்டிகள் தென்காசி நகரத்துக்குள் நுழைகின்றன. நண்பகல் நேரம். கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய மைதானத்தில் நிற்கின்றன. சிலர் குதித்து இறங்குகிறார்கள்.தருமனும் நாகையும் இறங்கி நிற்கிறார்கள். வண்டிக்காரர்கள் மாடுகளைப் பார்த்துக் கூவும் சத்தமும் பலர் பேசும் சத்தமுமாக இருக்கிறது. வெய்யிலில் தூசி கிளம்புகிறது.தென்னதரையன் இறங்கி வருகிறான். நாகை அவனைப் பார்த்து,

 

நாகை

 

ஐயா,. அடுத்த முறை சாத்தூர் வரும் போது அவசியம் எங்கள் வீட்டுக்கு வந்து தங்கி போக வேண்டும்.

 

தென்னதரையன்

 

நன்றியம்மா. பார்த்துப் போய் வாருங்கள்.

 

வழுதி தளர்ந்த குதிரையுடன் அங்கு வருகிறான்.

 

வழுதி

 

மந்திரவாதி, பத்திரம். எங்கள் ஊர் பேய்கள் சாத்தூர் போல சாதுக்கள் இல்லை.

 

தருமன்

 

வீரரே, நான் மந்திரவாதி அல்ல. வெறும் சோதிடன்.

 

வழுதி

 

அரச சோதிடன் என்று சொல். போருக்கு நாள் குறிக்க அரசர் உன்னைத் தான் தேடிக் கொண்டிருக்கிறார்..

 

தருமன் முகம் இருள்கிறது. திரும்பி நடக்கிறான்.
தென்னதரையன் வண்டிக்காரனிடம் கூலி பெற்று வருகிறான்.
தென்னதரையன்

 

வழுதி, நாம் பிரிய வேண்டிய நேரம் வந்து விட்டது.

 

வழுதி

 

இன்னும் இல்லை. நம் வீட்டில் சாப்பாடு சாப்பிட்டுப் பிறகு பிரியலாம்.

 

தென்னதரையன்

 

உன் வீடு எங்கே? பக்கத்திலா?

 

வழுதி பதில் சொல்லும் முன்னால் பலர் சேர்ந்து பாடும் சத்தமும் சிறு முரசு ஒன்று அடிக்கும் சத்தமும் கேட்கிறது. ஒரு படைப் பிரிவு காலாட்களுடன் வீதியில் தாண்டிச் செல்கிறது. உரத்துப் பாடியபடி போகிறார்கள். அவர்களைச் சுற்றித் தூசி கிளம்புகிறது. தென்னதரையன் அவர்களுக்குப் பின்னால் தெரியும் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பார்க்கிறான்.
வழுதி

 

இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

 

தென்னதரையன்

 

இந்த மலைகளில் ஒரு ரகசியம் இருக்கிறது வழுதி.

 

வழுதி

 

ரகசியமா? அது என்ன?

 

தென்னதரையன்

 

முதலில் வீட்டுக்குப் போவோம். அங்கு பேசிக் கொள்ளலாம்.

 

வீதியில் இருவரும் பேசிக் கொண்டே போகிறார்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.