வள்ளியும் நானும்

ஊருக்கு மேற்குப் பக்கமுள்ள பரும்புக்காட்டில் இந்த நடுநிசியில் நின்றுகொண்டிருக்கிறேன். எனக்கு இடப்பக்கமுள்ள புளியமரத்திலிருந்து ஆந்தை ஒன்று இப்போதுதான் அலறி முடித்தது. கையில் இரண்டு லுங்கிகளும்,ஒரு மேல்பனியனும், சட்டையும் பொதியப்பட்ட ஜவுளிப்பை உள்ளது. ஊருக்குள் நாய்கள் குரைப்பது கேட்கிறது. கிளம்பி விட்டாள் போலும். மதியமே குறிப்பிட்டு சொல்லியிருந்த இந்த இடத்திற்கு வந்துவிடுவாளா என்ற பயம் இப்போது எனக்கு வருகிறது. விடியும்முன் தென்காசியிலிருந்து கொல்லம் செல்லும் முதல் பேருந்தைப் பிடித்துவிட வேண்டும்.
சாரல் மழை முடியப்போகும் ஆவணி மாதத்தின் ஒரு நாளில் மயிலப்பபுரத்து மாடசாமி நாடார் மகள் கல்யாணத்திற்கு பந்தல்போட லோடு ஏற்றிக்கொண்டு ராமுவோடு சென்றிருந்தேன்.செக்குத்தேவரின் பழைய மாட்டுவண்டியை வாடகைக்கு எடுத்திருந்தோம்.அடிப்பலகை பாதி சிதிலமடைந்து மணல் அள்ளுவதற்கு சிறிதும் ஏற்றதல்ல என்பதால் எங்களைப்போன்ற லோடு ஏற்றுபவர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.செவலைநிற கொம்பு சுருண்ட காளையும், வெள்ளை நிறத்தையொத்த தென்காசி கோபுரத்தின் உச்சி வடிவ கொம்புடைய காளையும் பூட்டப்பட்ட வண்டியில் தென்னந்தட்டியும், சவுக்கு மரக்கம்புகளையும் உயரக்கட்டி பரும்புவிளை கடக்கையில் எதிரில் பீடிக்கடைக்கு செல்வதற்காக அவசரமாக ஓடிவந்தவளை அப்போதுதான் முதலில் கண்டேன்.
“எல ராமு எதுத்தாப்புல வாரது யாருனு பிடிபடுதா”
“கொளத்துப்பூரு தங்கராசு பொண்டாட்டி ஜாடக்கி தெரிதுல்லா”
“கெழவியளு பின்னால சுத்துத நாயி ஓன்ட்ட கேட்டம்லா என்ன செருப்ப கழத்திதான் அடிக்கணும்”
“பின்ன யாருல. அவளுக்குத்தான் சுருட்டமுடி. அதுமில்லாம எடுப்பா சட்டபோடுதது அவாதான. அதான் சொன்னேன்”
“அவா முடி சுருட்டமுடியால ?தாயோளி குளிக்காம கொள்ளாம எண்ண ஒண்ணுந்தேய்க்காம நரிக்குறவத்தி மாதி சுத்துதவளப்போயி இந்தப் பிள்ளயோட சேக்கியல. ஒன்னியலாம் எப்பிடில கெட்டி அழுவுதா ஒம்பொண்டாட்டி”
“செரிடே மயிரு யாருன்னு சொல்லித்தொல”
“எனக்கும் எளவு யாருன்னு பிடிபடமிண்டுக்குல்லா. வண்டியத்தான் வெரசாவுடேன்.போயிப்பாப்போம்.”
“இதுக்கு மேல செக்குத்தேவன் மாட்ட தார்க்கம்பால குண்டில இடிச்சேம்னு வைய்யி இங்கேயே படுத்துக்கிடும்.பெறவு தலயில அள்ளிதான் செமக்கணும் பரவால்லியா”
“சரி என்னணியும் போய்த்தொலை”என்றவாறு நான் அவளைக் கூர்ந்து கவனிக்கத்தொடங்கினேன்.வாடாமல்லிக்கலரில் வெள்ளை, சிவப்பு, ஊதா நிறப்பூக்கள் நிறைந்த சேலை உடுத்தியிருந்தாள்.சுற்றுவட்டாரத்தில் அதைப்போல தேர்ந்தெடுத்து இடுப்பு செருகி யாரையும் பார்த்திருக்கவில்லை என்பதால் வண்டி நெருங்க நெருங்க பதட்டம் அதிகமாகியது. இடப்புறம் பிரியும் கிளைச்சாலையில் யாரோ கழித்துப்போட்ட எலுமிச்சம்பழம் வெட்டப்பட்டு குங்குமம் தடவி இருதுண்டாகிக் கிடந்தது. ஆள்காட்டி குருவிகள் இரண்டு விருட்டென்று ஆவாரஞ்செடிக்குள் பாய்ந்தன. கூடைப்பையை கையில் தொங்கலிட்டவாறு பீடி சைஸ் பார்த்துக்கொண்டே வரும் அவளின் உருவம் பெரிதாகிக்கொண்டே வந்தது. இருவழித்தட மண்சாலையின் இருபுறமும் நெருஞ்சிக்கொடிகள் மண்டிக்கிடப்பதால் வண்டியும் அவளும் சந்திக்கும் புள்ளியில் எப்படியும் அவளிடம் பேசிவிடலாம் என்பதே எனக்கு உற்சாகமாய் இருந்தது.
ராமு அதற்குள் பீடி பற்றவைத்துவிட்டான்.
“எல அவா போறவர பீடி குடிக்காம இரேம்ல. எனக்கு செட் ஆவுதானு பாப்போம்”
“கி கி கி எல அதுக்குலாம் அண்ணன மாதி மச்சம் வேணும்ல”அவன் சிரிக்கும்போது தொடையைத் தட்டிக்கொள்வது வழக்கம்.
“உன் மச்சத்த பாத்துட்டாலும் செத்தருதலி இப்பம் கீழ போடுதியா இல்லியா”என்று வாயில் புகைந்த பீடியை பிடுங்கி எறிந்தேன்.
அவளும் மாட்டுவண்டி வருவதை அறிந்தவளாய் மெதுவாக நடக்கலானாள். சிறிது நேரத்திற்கெல்லாம் நாங்கள் சாலையின் பக்கவாட்டிலிருந்த எருக்கஞ்செடி சாட்சியாக சந்தித்துக்கொண்டோம். அவளே பேசத்தொடங்கியது இன்னும் வியப்பெனக்கு.
“இப்பிடி வழிய மறிச்சிக்கிட்டு வந்தியன்னா நாங்க எப்பிடி நடக்குறதாம்.சுத்தி வேற நெரிஞ்சிமுள்ளா கெடக்கு”
“அதான் செருப்பு போட்ருக்கியல்லா வெலவி போவேண்டியதான”என்ற ராமுவை புடதியில் ஒரு அடி அடித்தேன். அவன் தலைப்பாகை அவிழ்ந்து விழுந்தது.
“செத்தறுதலி மாட்டதான் கொஞ்சம் சைடுல ஓட்டேன். அவிய நடக்க முடியாமதான சொல்லுதாவ” என்று வழிந்து கொண்டிருந்தேன்.
“ஒங்களுக்கு தெரிது வண்டி ஓட்டுதவருக்கு தெரிய மாண்டேங்கு என்ன செய்ய”
“எல அங்க கெடங்கு கெடக்குல அறுதலி”
“மயிறு தள்ளுல நான் ஓட்டுதேம்பாரு”என்று அவனிடம் தார்க்கம்பைப் பிடுங்கி மாட்டை எருக்கஞ்செடிகள் தாண்டி இடப்புறம் ஒரு முழநீளம் பாதைதாண்டி விலக்கினேன்.அவளுக்கு நடக்க ஏதுவாக இருந்தது. சிரித்துக்கொண்டாள். கட்டிக்கேந்திப்பூ அந்த சுருள் முடிகளுக்குள் அத்தனை அழகாய்ப் பூத்திருந்தது. ராமு என்னை அவன் வீட்டு கருவாட்டுச் சட்டியை கவ்விச்சென்ற நாயைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஒங்களுக்கு எந்த ஊரு?இதுவர இங்குனோடி பாத்ததில்லியே”என்றேன்.
“மேல ஊர்தான். எங்க அக்காவுக்கு கல்யாணம் ஆயிட்டுல்லா அதான் அவா பாஸ்புக்க யாம்பேருக்கு மாத்திருக்காவ. அதான் நான் போறேன் பீடிக்கடைக்கி”
“ஓகோ. இந்த வெயிலுக்கிள இப்பிடி கொட ஒண்ணும் இல்லாம போறியள”
“கொடயெல்லாம் இல்ல. செரி நான் வாறேன்” என்றவாறு நடக்கத்தொடங்கினாள்.
வலப்புறம் பூட்டியிருந்த செவலக்காளை அவளை நுகர்வதுபோல் தலையசைத்தது.அவள் சற்று பயந்தவளாய் விலகி ஓட்டமும் நடையுமாகக் கடந்தாள்.
“ஒங்க பேரு என்னனு சொல்லலிய”
“உண்டு வளந்தவா“என்ற ராமுவை நான் அடிக்கும்போது “வள்ளி” என்று குரல் மட்டும் கேட்டது.
“எல ராமு பாத்தியா இன்னும் ஒருதேறம் பேசுனா செட்டாயிரும் போலுக்க”
“மண்ணாங்கட்டி தார்க்கம்ப கொண்டால.மாடு எங்க நிக்கிப்பாரு.மதியத்துக்குள்ள போயி எறக்கிட்டு இன்னொரு நட வரணும் யாவம் இருக்கட்டும்.அவிய சொன்னத வச்சிப் பாத்தா இப்ப கலியாணம் ஆனதுன்னா சம்முவம் நாடார் வீட்டுப்பிள்ளனு நெனக்கென்.வேண்டாம்டா”என்ற ராமு அப்போது பற்றவைத்த பீடியை பலம் கொண்டமட்டும் வழித்து நொடியில் தூக்கியெறிந்தான்.
மாடுகள் மெல்ல தள்ளாடி நடக்கத்தொடங்கின.தூரத்தில் அவள் உருவம் மறையும்வரை திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றேன்.
அதன்பின் அவள் ஊரின் எல்லையிலுள்ள பாலத்தில் அந்த ஊர் நண்பனுடன் அடுத்தநாளே அந்த நேரத்திற்கு சென்று காத்திருந்தேன். அன்று அவளுடன் இரண்டுபேர் வந்ததால் பேசமுடியவில்லை. அருகில் நின்ற சைக்கிளுக்கும், அவளுக்கும் இடையேயான தொலைவில் கிடந்தது யாரோ பறித்துப் போட்டுவிட்டுச் சென்ற போகன்வில்லாப் பூங்கொத்து. சிரித்தவாறே கடந்தாள்.
இப்படியே பேச வழியற்றுப் பல நாட்கள் கடந்தன.அந்த நாட்களில் அவள் கண்ணும் மூக்கும்,சுருள்முடியும்,கண்ணாடி வளையலும்,தாவணியும்,ரவிக்கையும்,ரவிக்கையில் படர்ந்த வியர்வை ஈரமும் அவ்வளவு பேசின.பீடிக்கடைக்குச் செல்கையில் தினமும் எப்படியாவது பார்த்துவிடுவேன்.பார்க்கும்போதெல்லாம் நான் வழிவேன்.அவள் கன்னமும்,கண்களும் சிரிக்கும்.
அதன்பின் நான்கைந்து மாதங்கள் கழித்து அவள் ஊரின் கிழக்குப்பக்கமுள்ள வயல்காட்டில் கடலை மூடை ஏற்றச் சென்றிருந்தேன். கடலை வயலில் தப்புக்கடலை பொறுக்குவதற்காக சண்டையிட்டுக்கொண்டிருந்த பாம்படக் காதுள்ள பாட்டியையும்,சிறுவனையும் வேடிக்கைப் பார்த்தவாறு வரப்பில் அமர்ந்திருக்க தூரத்து பம்ப்செட்டில் யாரோ குளிப்பது தெரிந்தது.இரண்டு ஆட்டுக்குட்டிகள் வரப்பில் முன்கால் மடக்கி மேய்ந்துகொண்டிருந்தன.யாராக இருந்தாலென்ன பொழுது போகவேண்டும்.கடலை மூட்டைவேறு இன்னும் கட்டப்படாமல் இருக்கிறது என்றெண்ணி பம்ப் செட்டையடைந்தேன்.
சேலையிலும் தாவணியிலும் பார்த்த அவளை  வெற்று உடலில் கட்டிய ஈரப்பாவாடையொடு கண்டதும் சகல நரம்புகளும் வெலவெலத்துப் போயின.அப்போதுதான் தொட்டிக்குள் முங்கி எழும்பியிருந்தாள்.என்னைக் கண்டதும் இதழ் விலகாத சிரிப்போடு பாவாடையை இறுக்கிக்கொண்டாள்.மைசூர் சந்தன சோப்பின் வாசம் வாய்க்கால் வரப்பெங்கும் வியாபித்திருந்தது.துவைத்த துணிகள் இறுக்கி பிழியப்பட்டு நீண்ட கல்லில் கிடந்தன.
“அப்புறம் என்ன வள்ளி பேசவே முடியல”
“என்ன பேசணுமாம்.நீங்க என்ன லோடு அடிக்கியளா”
“இப்ப தெரியுதா என்ன பேசணும்னு”
முழுவதுமாகச் சிரித்தாள்.இடுப்புயர வளர்ந்திருந்த துவரைச்செடி காற்றில் அசைந்து கொடுத்தது பார்க்க இதமாக இருந்தது.
“ஆமா லோடு அடிப்பேன்.நாளுக்கு செலவு போவ எறனூரு ரூவா மிஞ்சும்.வாரத்துல எப்பிடியும் நாலு நாளாது வேல இருக்கும்”
“எந்த ஊரு நீங்க”
“மடத்தூர்தாம்”
“அய்யய்யொ அந்த ஊர்க்காரவியதான எங்க ஊருக்கு தொவைக்க வருவாவ”
“ஆமா. நாங்கதான் கோயில் கொடைக்கி அலங்காரம் பண்ண வருவோம். கல்யாண வீட்டுக்கு நெல்லளக்க வருவோம்.பிரசவம் பாக்க வருவோம். செத்த வீட்டுக்கு சங்கு ஊதவும் வருவோம்”
“தெரியும் தெரியும்”என்றவளின் குரல் சற்று களைத்திருந்தது.
“என்னிய பிடிக்கலியா”
“ஒங்க ஊர்க்காரவியள எங்க வீட்டுல பிடிக்காத”
“ஒங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லியா”
“பிடிக்கலனா உங்களப்பாத்து சும்மா சும்மா இளிச்சிட்டு பேருக்கமாட்டேன்”என்றவள் கல்லில் கிடந்த துவைத்த துணிகளை தோளில் அள்ளிப்போட்டுக்கொண்டே விருட்டென்று கடந்து விட்டாள்.பாவாடையிலிருந்து ஈரம் சொட்டிக்கொண்டேயிருந்தது. துவரைச்செடியின் மறைவிலிருந்து இன்னொரு உருவமும் மறைந்ததுபோல் இருந்தது.
அன்று இரவு ஓடைமணலில் அமர்ந்து நண்பர்களோடு குடித்துவிட்டு வீடு திரும்புகையில் வீட்டின் முன்னால் நான்கைந்துபேர் நின்று கொண்டிருந்தனர்.ஆங்காங்கே தெருவின் சந்துகளில் நின்று சிலர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“இன்னா வந்துட்டான் என்னனு கேளுடே மாரியப்பா”
“எல பக்கத்து ஊரு சம்முவம் அய்யா வீட்டு பிள்ளகூட ஒனக்கு என்னல பேச்சுவேண்டிக்கெடக்கு”
“இல்லப்பா நா சும்மாதான் பேசிக்கிட்டு இருந்தேன் கடல மூட ஏத்தயில.தப்பா ஒண்ணும் பேசலிய”
“என்னல ஒடம்பு உறுத்துதா.செவ்வில ஒண்ணு போட்டம்னா தெரியும்.அந்த பிள்ளேட்ட இல்லாத பொல்லாத சொன்னத நானும் பாத்தேம்டே பீடம் தெரியாம சாமி ஆடுதியோ”என்றவருடன் ஒருமுறை சந்தையில் மாடு ஏற்றுகையில் சண்டையிட்டது நினைவுக்கு வந்தது.
“எய்யா அவன் எதும் தப்பா போறபய இல்ல. நா வேண்ணா கண்டிச்சு வைக்கென்” “உம் மொகத்துக்காவ பாக்கென் சரஸ்வதி. அவன் இனும அந்த ஏரியா பக்கம் வரப்பிடாது ஆமா சொல்லிப்பிட்டேன்”
ஆளாளுக்கு ஏதேதோ மிரட்டிவிட்டு சென்றனர்.அம்மா நெடுநேரம் வரை அழுதுகொண்டிருந்தாள். அப்பா முற்றத்தில் அமர்ந்து புகைத்தவாறு தொழுவத்தையே நோக்கிக்கொண்டிருந்தார்.
அந்த சம்பவம் நடந்த அடுத்த நாள் சைக்கிளில் பக்கத்து ஊருக்கு செல்கையில் சண்முகம் அண்ணாச்சி பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த வள்ளியை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிடித்திருந்தது. தூரத்தில் துள்ளிச் சென்ற ஆட்டுக்குட்டியை பார்க்க எத்தனித்தவள் என்னை நோக்கியப் பார்வையில் அவளின் மனநிலையை உணர்ந்தேன்.
அதன்பின் ஒருமாத கான்ட்ராக்ட் வேலைக்காக கேரளா சென்றுவிட்டேன். மனது பரும்பு காட்டுக்குள்ளும், வரப்புகளிலும், பூப்போட்ட சேலையிலுமே லயித்திருந்தது.
“ஏம்ல பேயடிச்ச மாதியே சுத்துத”என்ற நண்பர்களுக்கு நமட்டுச் சிரிப்பை மட்டுமே வெளிப்படுத்த முடிந்தது.
ஒருமாதம் கழிந்து திரும்புகையில் பக்கத்து ஊரில்(வள்ளியின் ஊரில்) கோவில் கொடைக்கான களேபரங்கள் தொடங்கியிருந்தன.பந்தல் ஆர்டர் ராமு எடுத்திருந்தான். அவனுடன் பந்தல் போட செல்கிறேன் என்றதற்கு அம்மா கடுமையாகத் திட்டினாள். அதைப் பொருட்படுத்தாது அவனுடன் சென்றேன்.கோவில் ஊருக்கு கிழக்கு பக்கம் ஒதுங்கினாற்போலிருந்தது. கோவிலின் முன்னால் முதல் குழி எடுத்து கம்பு நட எத்தனிக்கையில் சீமக்கருவேல மரங்களுக்கு மத்தியில் கத்தரிப்பூ நிற தாவணியில் நின்றது அவள்தான்.
“இங்க எதுக்கு வந்திய? இப்ப யாராது பாத்தாங்கன்னா கொன்னுருவானுவ” என்று நான் கூறுவதற்குள் கண்களில் நீர் சூழ்ந்துகொண்டது அவளுக்கு. எனக்கு அழுதால் அவமானமாகிவிடும் என்ற தன்மான உணர்ச்சியால் கட்டுப்படுத்திக்கொண்டேன்.
marapachicouple
“நம்ம கல்யாணம் பண்ணிக்கிடுவோமா”
“செரி”என்று அடுத்த நொடியே கூறினேன் அதற்காகக் காத்திருந்தவனாய்.ஆனால் எங்கு சென்று வசிப்பது என்பதெல்லாம் அப்போதைக்கு தோணவில்லை.கேரளாவில் சென்ற இடத்தில் நல்ல பெயர் எடுத்திருந்ததால் அங்கு ரப்பர்பால் எடுக்கும் வேலையில் சேர்ந்து கொள்ளலாம் என்று மனக்கணக்கு போட்டு ஒரு முடிவுக்கு வந்தவனாய்”இன்னைக்கு நைட்டு பன்னண்டு மணிக்கு மேக்க இருக்க பரும்பு காட்டுக்குள நிப்பேன்.வந்துருங்க”என்றதற்கு சரி என்றன அவள் கண்கள்.
என்ன இது நாய்கள் தொடர்ச்சியாக குரைத்துக்கொண்டே இருக்கின்றன. யாராவது விழித்து விட்டார்களா? இம்முறை நான்கைந்து ஆந்தைகள் சேர்ந்து அலறுகின்றன. இங்கிருந்து மயிலப்பபுரம் விலக்கு சென்று தென்காசி நெடுஞ்சாலையை அடைந்து ஏதாவது ஒரு வண்டியில் ஏறினால்தான் கொல்லம் செல்லும் முதல் பேருந்தைப் பிடிக்க முடியும். அதோ ஒரு டார்ச் வெளிச்சம் இருட்டில் செருகப்பட்டு நீண்டு வருகிறது. ஏன் எனக்கு வியர்க்கிறது? செருப்பில் ஈரம் கசிந்து பிசுபிசுக்கிறது. வெளிச்சம் நெருங்குகிறது.இப்போது இரண்டு மூன்று இடங்களில் வெளிச்சம் தெரிகிறது.
“தாயோளி ராத்திரியோட ராத்திரியா சோலிய முடிச்சிற வேண்டியதான்.அந்தக்கூதிவுள்ள நாலு நாளக்கி அழும் பெறவு பாத்துக்கிடலாம்”என்ற அந்த பரிச்சயமான குரல் கேட்டுப் பதறி திரும்பி ஓடுகிறேன்.முழுபலத்தோடு என்முதுகில் வந்து விழுகிறது கனத்தக் கல்லொன்று.

0 Replies to “வள்ளியும் நானும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.