மனைமாட்சி – ஒரு பகுதி

“மீனுக் குட்டி. இங்க பாரு. அக்கா உனக்கு டெடி பேர் வரைஞ்சிருக்கேன். உனக்குப் புடிச்ச டெடிபேர்.“ மீரா நோட்டுப் புத்தகத்தைக் காட்டியபோது எட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் மீனா அழுகையைத் தொடர்ந்தாள்.
“பசிக்குதுக்கா. அம்மாவை வரச்சொல்லு“ கால்களை உதைத்துக்கொண்டு அழுதாள்.
பள்ளியிலிருந்து திரும்பி அரைமணி நேரமாகக் காத்திருக்கிறார்கள். வீடு பூட்டிக் கிடந்தது. சிறிது நேரம் படிகளில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மீனா பசிக்கிறது என்று அழத் தொடங்கிய பிறகு சமாதானப்படுத்துவதற்காக அவளைக் கீழே அழைத்து வந்திருந்தாள் மீரா. சிறிது நேரம் சீ சாவிலும், சறுக்குப் பலகையிலும் விளையாடினார்கள். மீரா வாசலில் கண்வைத்தபடியே மீனாவை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தாள். இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு அப்பாவை அழைக்கலாம் என்று யோசித்திருந்தாள்.
விளையாட்டும் வேடிக்கையும் சலித்துப் போய் இப்போது மீனா அடம்பிடித்துக் கொண்டிருந்தாள். அடுக்ககத்தின் மேலாளர் கந்தசாமியின் அறைக்குச் சென்று எட்டிப் பார்த்தாள். மாநகராட்சி கட்டண அட்டையை சரிபார்த்துக் கொண்டிருந்தவர் “உங்கம்மா இன்னும் வர்லையா?“ என்று மீராவிடம் கேட்டார்.
“வர்லை அங்கிள். ஒரு ஹெல்ப் பண்ணணும். எங்கப்பாவுக்கு போன் பண்ணணும். உங்க செல்போன்ல போட்டுத் தரமுடியுமா? ப்ளீஸ்.“ மீரா தன்மையுடன் கேட்டாள். தியாகுவின் நம்பரை அழுத்தி காதில் வைத்த கந்தசாமி காத்திருந்தார். ஆனால் தியாகுவிடமிருந்து பதில் வரவில்லை. “அப்பா எடுக்க மாட்டேங்கறார் மீரா. கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடி கூப்பிட்டுப் பாக்கலாம். இல்லைனா அவரே மிஸ்டு கால் பாத்துட்டு கூப்பிடுவார்“ என்றவர் அழுதுகொண்டிருக்கும் மீனாவைப் பார்த்து “என்ன பசிக்குதுன்னு அழறாளா?“ என்று கேட்டார்.
ஆமாம் என்று தலையாட்டிய மீரா “நாங்க வெயிட் பண்ணறோம் அங்கிள்“ என்று தங்கையை அழைத்துக்கொண்டு பூங்காவிற்கு நடந்தாள். கந்தசாமிக்குப் பாவமாக இருந்தது. ஆனால் எதையும் செய்யமுடியாது. சாந்தியிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள முடியாது.
மீனாவுக்கு காகிதக் கப்பல் செய்து அல்லிகள் அசைந்த சிறிய அலங்காரத் தடாகத்தில் மிதக்கவிட்டுக் கொண்டிருந்தபோது கந்தசாமி செல்போனை எடுத்துக்கொண்டு ஓடிவந்தார். “அப்பா பேசறாங்க பாப்பா“
மறுமுனையிலிருந்து தியாகு பேசினான் “என்னம்மா. வீடு பூட்டிருக்கா? அம்மாவுக்கு பேசிப் பாத்தேன். எடுக்கலை. நீங்க இருங்க. அப்பா இப்ப வந்தர்றேன்.“
“மீனு. அப்பா இப்ப வந்துருவார். கொஞ்ச பொறுத்துக்க“ என்று செல்போனை கந்தசாமியிடம் தந்தவள் “ரொம்ப தேங்க்ஸ் அங்கிள். உங்களுக்குத் தொந்தரவு குடுத்துட்டோம். ஸாரி“ என்றாள்.
கந்தசாமி அவளது பொறுப்புணர்வை மெச்சியபடியே அறைக்குத் திரும்பினார்.
பத்தாவது நிமிடத்தில் தியாகு வந்து சேர்ந்தான். அழுது களைத்திருந்த மீனாவை அள்ளிக்கொண்டு வீட்டுக்கு ஓடினான். தன்னிடமிருந்த சாவியைக்கொண்டு கதவைத் திறந்தான். டைனிங் டேபிளின் மீது கையிலிருந்த பொட்டலத்தை வைத்துப் பிரிக்கத் தொடங்கிய சமயத்தில் மீரா தங்கையின் சீருடையைக் கழற்றிவிட்டு கழிவறைக்கு அழைத்துச் சென்றாள். முகத்தை கழுவிவிட்டு வேறு உடைமாற்றி அழைத்து வந்தாள்.
“அப்பா மீனுக்குட்டிக்கு புடிச்ச சாக்லேட் கேக் வாங்கிட்டு வந்துருக்கேன் பாரு. வா வா. சாப்பிடு. குட்டிக்கு தொப்பை ரொம்ப பசிச்சிருச்சா. வா.. வா. மீரு நீயும் எடுத்துக்க வா“
மீரா சமையலறைக்குச் சென்று தண்ணீர் ஜாடியைக் கொண்டுவந்தாள். மீனு எப்போதும் பருகும் மஞ்சள் வண்ண டாம் அண்ட் ஜெர்ரி கோப்பையில் தண்ணீர் ஊற்றித் தந்தாள்.
“என்னம்மா ஸ்கூல் பிடிச்சிருக்கா உனக்கு?“ மீராவிடம் கேட்டபடியே கடிகாரத்தில் மணி பார்த்தான்.
“நல்லா இருக்குப்பா. எனக்குப் பிடிச்சிருக்கு.“
மீராவிடமிருந்து வேறு மாதிரி பதில் வராது என்று தியாகுவுக்குத் தெரியும். எட்டாவது படிக்கும் இந்த வயதில் இவளுக்கு எங்கிருந்து இத்தனை முதிர்ச்சியும் பொறுமையும் சாதுர்யமும் கூடி வந்திருக்கிறது என்று அடிக்கடி அவன் வியப்பதுண்டு. விபரம் தெரிந்த நாளிலிருந்து சாந்தியை எதிர்பார்க்காமல் அவளே ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டிருந்தாள். குளித்து தலைபின்னி இருவருக்குமான மதிய உணவு டப்பாக்களை தயார் செய்து தண்ணீர் நிரப்பி புத்தகப் பைகளை தயார் செய்து தங்கையின் காலணிகளை அணிவித்து தானும் தயாராகி எந்த நிலையிலும் பதட்டமில்லாமல் பள்ளிக்குப் புறப்படத் தெரியும் அவளுக்கு. அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக்கொள்ளும் வேளைகளில் இன்னொரு அறையில் கதவைச் சாத்திக்கொண்டு மீனாவை சமாளிக்கவும் தெரியும். அம்மா சமைக்காத வேளைகளில் இருக்கும் ரொட்டியையும், பழங்களையும்கொண்டு பசியாற்றிடவும் தெரியும்.
செருப்பை உதறி எறிந்தபடியே சாந்தி உள்ளே வந்தாள். வேர்த்து விறுவிறுத்து அவசரமாக ஓடி வந்ததில் மூச்சிறைத்தது. தியாகுவைப் பார்த்ததும் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு “அப்பாடா“ என்றாள்.
“பசங்க வந்திருப்பாங்களேன்னு அவசரமா ஓடி வந்தேன். நல்லவேளை. நீங்க வந்துட்டீங்க. அம்மாடி மீனு. என்ன சாப்படறே?“ மீனுவின் தலையைத் தடவிக்கொண்டே “நீ எப்பிடி இந்த நேரத்துல?“ என்று அவனைக் கேட்டாள்.
“பசங்க போன் பண்ணாங்க. உன்னைக் கூப்பிட்டுப் பாத்தேன். எடுக்கலை. அதான் வந்து பாக்கலாம்னு சொல்லிட்டு வந்தேன்“
“ஈஷா கிளாஸ் போனேன். வழக்கமா நாலு மணிக்கு முடிஞ்சிருமில்லை. இன்னிக்குன்னு பாத்து கொஞ்சம் லேட்டாயிடுச்சு. போனையும் அட்டெண்ட் பண்ண முடியலை. கீழே சாவியக் குடுத்துட்டு போகலாம்னு பாத்தா அவசரத்துல மறந்துட்டேன்.“
மீரா அவள் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்ளாதவளாய் மதிய உணவுப் பாத்திரங்களை உள்ளே எடுத்துச் சென்றாள். கழற்றிப் போட்ட சீருடைகளையும் காலுறைகளையும் வாஷிங் மெஷினில் போட்டு ஓடவிட்டாள்.
“அப்பா, நீங்க ஆபிஸ் போவேண்டாமா?“ என்றதுமே தியாகு எழுந்துகொண்டான்.
உள்ளறையில் சேலை மாற்றிக்கொண்டிருந்த சாந்தியிடம் “ஆபிஸ் போயிட்டு வந்தர்றேன்“ என்று சொல்லிவிட்டு நகர்ந்தவன் மீராவைப் பார்த்து கையசைத்துவிட்டு வெளியேறினான்.
மீராவை எண்ணி நெகிழ்ந்தபடியே நடந்தவன் கந்தசாமியின் அறையருகே நின்றான். “ரொம்ப தேங்க்ஸ் கந்தசாமி. நல்லநேரத்துல உதவி பண்ணினீங்க.“ என்றவன் பையிலிருந்து இன்னொரு கொத்து சாவிகளை எடுத்து நீட்டினான். “இது வீட்டுக்கான இன்னொரு செட் சாவி. நீங்க பத்திரமா வெச்சுக்கங்க. இப்பிடி எதாவது சந்தர்ப்பத்துல தேவைப்படும். மேடத்துக்கு இங்க சாவி இருக்கறது தெரிய வேண்டாம். ப்ளீஸ்“
“புரியுது சார். நான் பாத்துக்கறேன். நீங்க போயிட்டு வாங்க“ என்று கைகொடுத்தான்.
அல்லிகளுக்கு நடுவே மீராவின் காகிதக் கப்பல் மெல்ல அசைந்து நகர்ந்துகொண்டிருந்தது.

***

எம்.கோபாலகிருஷ்ணனின் புதிய நாவலான ‘மனைமாட்சி’யிலிருந்து ஒரு பகுதி.  நாவலைக் குறித்த அவருடனான நேர்காணலை இங்கே படிக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.