நன்றியறிவிப்புகள் – பீடர் வாட்ஸ்

முன் குறிப்பு:
சொல்வனத்தில் நிறைய மொழி பெயர்ப்புகள் வருகின்றன. கதை கவிதைகளைத் தவிர பலவகை இதர Issue03_Watts_309x360மொழிபெயர்ப்புகளும் வந்திருக்கின்றன. இருந்த போதும் அவற்றிலிருந்தெல்லாம் மாறுபட்ட ஒரு விஷயம் இந்தக் கட்டுரையில் இருப்பது. இது ஒரு நாவலுக்கு அதன் எழுத்தாளர் எழுதிய நன்றி அறிவிப்பு அத்தியாயம். நன்றி அறிவிப்பு என்பது வழக்கமாக ஒரு பட்டியலில் பெயர்களாக இருக்கும். மனைவிக்கோ, கணவருக்கோ, மகள்/ மகன்களுக்கோ ஆதுரத்தைத் தெரிவித்து அவர்கள் உதவியின்றி இதை எழுதி இருக்க முடியாது என்பனவெல்லாம் இருக்கும். இந்த அத்தியாயத்திலும் அவை இருக்கின்றன. பின் எதற்கு இங்கு இது?
பீட்டர் வாட்ஸ் என்ற கனடிய அறிவியல் நவீன எழுத்தாளர் எழுத்தாளர்களின் எழுத்தாளர் போல அறியப்படுபவர். இந்தச் சொற்றொடருக்குப் பொதுவாக என்ன உள்ளர்த்தம் என்றால், அவர் எழுதுவது பிற எழுத்தாளர்களுக்கு உவப்பாக இருக்கும், சராசரி வாசகர்களுக்கு அத்தனை ஈடுபாட்டைக் கொணராது என்பது. வாட்ஸின் நாவல்கள் அத்தகையன அல்ல. அவை சராசரி வாசகரையும் ஈர்க்கக் கூடியவை, ஆழ்ந்த வாசகர்களையும், நுட்பமாக அறிவியல், சமூக ஆய்வியல்களில் வாசிக்கக் கூடியவர்களையும் ஈர்க்கக் கூடியவை. வாசகத் திரள் இவருக்குப் பின் வருமா என்றால் அது ஐயம்தான். ஆனால் கணிசமான எண்ணிக்கையில் வாசகர்கள் இவரது நாவல்களைப் படிக்கிறார்கள்.
இதைச் சொல்லக் காரணம், இவரது நாவல்கள் ஒரே நேரம் சிக்கலானவை, பலதுறை நிபுணத்துவத்தைப் பின்னணியாகக் கொண்டு அமைபவை என்பதெல்லாம் இருந்தாலும், அவற்றை பொதுவாசகருக்கு அருகே கொண்டுவரும் திறமை இவருக்கு இருக்கிறது என்று சொல்லத்தான்.
பீட்டர் வாட்ஸின் நாவல்கள் தனியொருவரின் ‘படைப்புத் திறன்’ என்ற பிரம்மப் படைப்புகள் இல்லை. தனியொருவரின் திறன் அவற்றைக் கொண்டு வந்தது என்பது உண்மை, ஆனால் வாட்ஸ் தன் அங்கீகரிப்பில் சுட்டுவதைக் கவனித்தால் எத்தனை பேர் இந்த நாவல் உருவாகக் காரணம் என்பது விளங்கும்.
21ஆம் நூற்றாண்டின் அறிவியல் என்பதே பற்பல பத்துப் பேர்களின் ஒத்துழைப்பால்தான் ஒவ்வொரு ஆய்விலும் முன்னேறுகிறது, அல்லது பின்னடைகிறது. ஆம், சில நேரம் ஆய்வுகள் முன்னேற்றம் என்று உணரப்பட்ட ஒன்று உண்மையில் முன்னேற்றமில்லை, அது பிழைபட்டது மட்டுமல்ல, பாதகங்களையும் கொண்டு வருவது என்றுணர்த்துவதால் ஒரு நேரம் அது முன்னேற்றம், இன்னொரு கோணத்தில் பின்னடைவு.
மேன்மேலும் அறிவியல் துறைகள் தனித்துறைகளாக நிற்க இயலாது பல துறைகளின் குறுக்கு வெட்டு இயக்கத்தால் சிறப்படையும் தன்மை கொண்டுள்ளன. இந்தக் குறுக்கு வெட்டு இயக்கமே பீட்டர் வாட்ஸின் அங்கீகரிப்பில் சிறப்பாக வெளிப்படுகிறது.
அறிவியல் துறைகள் மட்டும்தான் இப்படிக் கூட்டுழைப்பால் மேம்படுகின்றன என்றில்லை, புனைவுகளும் கூட்டுழைப்பால் மேம்படுகின்றன என்று வாட்ஸ் சிறிதும் கூச்சமில்லாமல் நம்மிடம் சொல்கிறார். எத்தனை பேர்களுக்கு அவர் கடன்பட்டிருக்கிறார் என்று பார்க்கையில் நாம் வியப்படைவோம்.
பதிப்பாசிரியர்கள் மட்டுமல்ல, பல சக எழுத்தாளர்கள் மட்டுமல்ல, பல மாணவர்கள், பல வகை வாசகர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து இப்படி ஒரு படைப்பை உண்டு பண்ணியிருக்கிறார். ஒப்புக்கு அவர்களைக் கலக்கவில்லை. பலரின் கருத்துகளும், ஆய்வு முயற்சிகளின் விளைவுகளும் இவரது நாவலில் பங்கு வகிக்கின்றன.
எதிர்கால பிரம்மாக்கள் பல பத்துப் பேரின் கூட்டணியாகவே இருப்பார்கள் என்று தெரிகிறது. இந்தத் தன்மை இங்கிலிஷ் இலக்கியத்தில் மட்டுமல்ல பல மேலை இலக்கியங்களிலும் காணப்படுவதுதான். தமிழில் இப்போதுதான் இப்படிப்பட்ட படைப்பு முயற்சிகள் தலைகாட்டத் துவங்கியுள்ளன. வருங்காலத்தில் தமிழிலும் இத்தகைய கூட்டுமுயற்சிகள் எழும் என்று நம்புவோம். ஏனெனில் தனிநபரின் அசாத்தியத் தாவல்களை நம்புவது என்பதுமே ஒருவகையில் புராணங்களில் காலூன்றிய சிந்தனைதான்.
மைத்ரேயன்
பி.கு : பீட்டர் வாட்ஸ் பற்றிய விக்கி குறிப்பில் அவரது பல புனைவுகள் பற்றிய தகவல் கிட்டுவதால் அவற்றை இங்கு கொடுக்க முயலவில்லை.

 
இது நாள்பட்ட விவகாரம். மூன்று பதிப்பாசிரியர்கள், மூன்று குடும்பத்து சாவுகள், சதையை அரித்துச் சாப்பிடும் வியாதியோடு கிட்டத்தட்ட சாவுக்கு அருகில் வந்த போராட்டம். குற்றவாளிதான் என ஒரு நீதிமன்றத் தீர்ப்பு. ஒரு திருமணம்.
இப்போது இது.
இந்த ‘இது’ என்னவாக இருக்கிறது என்பது பற்றி எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை- ஆனால் கெட்டதோ, நல்லதோ, உதவி இல்லாமல் இதை என்னால் பூர்த்தி செய்திருக்க முடியாது. உண்மையாக, உதவி இல்லாமல் இப்போது உயிரோடே இருந்திருக்க மாட்டேன். அதனால், முதலாகவும், மிக முக்கியமாகவும் கெய்ட்லின் ஸ்வீட் என்பவரின் பங்களிப்பு பற்றி என் அங்கீகரிப்பைத் தருகிறேன், ஏனெனில் அவள்/ர் இல்லாமல் நான் இன்று இருக்க மாட்டேன்; ஃபிப்ரவரி 12 ஆம் தேதி, 2011 அன்று, திசுப்படல அழற்சியால் என் தசை அணுக்கள் மரிக்கத் தூண்டப்பட்டு நான் இறந்திருப்பேன். (அன்று டார்வின் தினம், உண்மையாகத்தான், தேடிப் பாருங்கள்.) என் உயிரைக் காப்பாற்றியதற்கு ஒரு எதிர்மாறான சன்மானமாக, கெய்ட்லின், ஷவர் குளியலிலும், படுக்கையிலும், ரெஸ்ட்ராண்டுகளிலும் முடிவில்லாத மணிகளுக்கு நான் புலம்புவதைக் கேட்க வேண்டி இருந்தது. முடிவில்லாத அந்தப் புலம்பல், இந்த கதைக் காட்சி எப்படி ஏகப்பட்ட பிரசங்கமாக இருக்கிறது, அந்த முடிவு எப்படி வலிந்து பெறப்பட்டதாக இருக்கிறது என்று போகும். அவர் அப்போது ஒரு நேர்த்தியான முடிவை யோசனையாகக் கொடுப்பார், அது எனக்குமே நாளாவட்டத்தில் தோன்றியிருக்கும், ஆனால் அனேகமாகக் கெடு தினத்துக்கு முன்னால் தோன்றி இருக்காது. அவருடைய அறிதலுணர்வில் கிட்டியவை தங்கமானவை, அவற்றைச் செயல்படுத்துவது படுமோசமாக இருந்தால் அந்தக் குறை என்னுடையது, அவருடையதல்ல.
முதல் சில அத்தியாயங்களுக்கு ஜிப்ரால்டர் பாயிண்ட்டில் [இங்கிலாந்தில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட இயற்கை வளமிக்க இடம்], இரு வேறு குழுக்களின் உதவியால் ஒரு வேலைப்பட்டறையில் இது பரிசீலிக்கப்பட்டது மிக உதவியது (மைகெல் கார், லௌரி சானர், ஜான் மக்டெய்ட், எக்கி மெய்ன்ஸ், எலிஸபெத் மிட்ச்செல், டேவ் நிக்கல், ஜானிஸ் ஓ’கானர், மற்றும் ராம் ஸ்டாஃபர் ஆகியோர் இவர்கள்.) பிறகு ஸீஸல் தெருவில் இருந்தவர்கள் மேடலன் ஆஷ்பி, ஜில் லும், -மறுபடியும்- டேவ் நிக்கல், ஹெலென் ரைகென்ஸ், கார்ல் ஷ்ரோய்டெர், ஸாரா ஸிம்மன்ஸ், மைகெல் ஸ்கீட், டக் ஸ்மித், ஹ்யூ ஸ்பென்ஸர், டேல் ஸ்ப்ரௌட் மற்றும் டாக்டர். ஆலன் வைஸ்.
இந்தப் புத்தகத்தை எழுத உதவியாக இருந்த பல விஷயங்களைக் கொடுத்தவை எவை என்று நான் பல வருடங்களாய் பட்டியல்களை உருவாக்கி வைத்திருக்கிறேன்; பல உள்ளொளி வீச்சுகள், சுட்டுக் குறிப்புகள், இப்படி இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற வகைப் பித்துக்குளித்தனமான பிரமைகள் போன்ற அவற்றை ஆவணப்படுத்த முயன்றிருக்கிறேன். ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பியவர்களோடும், அந்த அடர்த்தியான கட்டுரைகளை உண்மையிலேயே எழுதியவர்களோடும், வலைப்பதிவுகளில் போகிற போக்கில் கருத்துதிர்த்தவர்களோடும், மதுக்கடைகளில் வாக்கு வாதத்தின்போது என் மார்பில் விரலால் குத்தி விமர்சனங்களையும், கருத்துகளையும் முன்வைத்தவர்களோடும் தொடர்புகளைப் பசுமையாக வைத்திருக்க முயன்றிருக்கிறேன். விஷயதானம் செய்தவர்களை அவரவர் அளிப்பிற்கேற்ப வரிசைப்படுத்தவும் முயன்றிருக்கிறேன்: (வெளியீட்டுக்கு முந்தைய) இரண்டாம் கட்ட வாசகர்; அறிவியல் துறை நிபுணர்; தேவைப்பட்ட போதெல்லாம் தகவலைக் கொட்டிக் கொடுத்தவர்; எதிர்க் கருத்துகளுக்கு ஆதரவாளராக இருந்து சோதித்தவர், இப்படி.
பெரும்பாலும், என்னால் இதைச் செய்ய முடியவில்லை. பலரிடமிருந்து ஒரே மாதிரியான விஷயங்கள் கிட்டியது ஒரு காரணம். வென் வரைபடத்தில் (Venn Diagram) பல வண்ணங்கள் ஒரே பகுதியில் மேலே மேலே சுமத்தப்பட்டால் இறுதியில் கிட்டுவது குழம்பிய சாம்பல் நிறமாகவே இருக்கும், அதே போல. அதனால், பலரைப் பற்றி யோசிக்கையில் பெருமளவு நான் அகர வரிசைப் பட்டியலையே கொடுக்க வேண்டி வருகிறது. நிக் ஆல்காக், பெவர்லி பாம்பரி, ஹன்னு ப்ளூமிலா, ஆண்ட்ரூ பூவ (Buhr), நான்ஸி ஸெரெல்லி, அலெக்ஸீ ஷெபெர்டா, க்ரிஸ்டீனா சோடொரோவ்க்ஸா, ஜேகப் கோயென், ஆன்னா டாவொர், ஆலிக்ஸ் டெல்லாமொனிகா, ஸிபில் ஐஸ்பாஹ், ஜான் எனெர்ஸன், வால் க்ரிம், நார்ம் ஹால்டமேன், தோமஸ் ஹார்ட்மான், டாக்டர். ஆன்ட்ரூ ஹெஸ்ஸெல், கீய்த் ஹனிபோர்ன், ஸேத் கைப்பர், டாக்டர். எட் கெல்லர், க்ரிஸ் க்னால், லியானிட் கொடொகாட்ஸ்கி, டொ-மிங் லும், டானியேல் மக்டானல்ட், டாக்டர். மாட் மகார்மிக், சீனெடும் ஓஃபோக்பு, ஜீஸஸ் ஒல்மொ, க்ரிஸ் பெப்பர், ஜான்னா ரான்டினா, கெல்லி ராப்ஸன், பாட்ரிக் ‘பஹுமர்’ ரோஷ்ஃபோர்ட், டாக்டர் காஜ் ஸொடாலா, டாக்டர். ப்ராட் டெம்பிள்டன், மேலும் ராப் டக்கர். அடுத்து ஒரு மர்மமான நபர், “ரான்டம் ஜே” என்ற பெயரில் மட்டும் அறியப்படுபவர்.
சிலரோ, குறிப்பிடத்தக்க வகையிலும், தனிச் சிறப்புடனும், அளவற்ற முறைகளில் உதவினார்கள். டான் ப்ரூக்ஸ் அங்கலாய்த்தார், சவால்களெழுப்பினார், அவ்வப்போது பயணங்களில் உடன்துணையாகவிருந்தார். க்ரிஸ்டின் ஷொஃப் டிஎன் ஏ bar coding கின் அத்தியாவசியக் கூறுகளைப் போதித்தார், ஆனால் நான் அதைப் புரிந்து கொள்வதில் தடுமாறியதற்கு அவரால் ஏதும் செய்ய முடியவில்லை. (அவர் எனக்கு ஒரு டஜன் தாவர, மிருக வகைகளின் சுத்திகரிக்கப்பட்ட டி என் ஏ இருந்த ஒரு சிறு குப்பியைக் கொடுக்க வழி செய்தார், தாய்நாட்டுப் பாதுகாப்பு இலாகாவின் சோதிப்புக்கு என் கன்னத்தின் உள்ளிருந்து ஒரு தீற்றலைக் கொடுக்குமுன், இந்தக் குப்பியின் உள்ளிருந்தவற்றால் என் வாயை ஒரு முறை கழுவி விட்டு நான் அந்தத் தீற்றலைக் கொடுக்க முடிந்தது.) லெயோனா லுட்டரோட்ட கடவுளை ஒரு தொடரும் தயாரிப்பு என்று விவரித்தார், அது என் புத்தியில் ஒரு ஒளி உமிழ் டயோடைப் பளீரென ஏற்றியது. டாக்டர் டெபொரா மக்லென்னென் என்னை கட்டணச் சுவர்களைத் தாண்டி நுழைந்து விட உதவி செய்தார். ஷீலா மிகெஸ் எனக்குக் காட்டிக் கொடுத்த ஒரு ஒட்டுச் செயல் திட்டம், பின்குறிப்புகள், சுட்டுக்குறிப்புகள் ஆகியவற்றில் புதுத் தகவலை நுழைக்க உதவியது (அந்தப் பகுதியைப் படித்த பிறகு அதே காரணத்துக்காக அவரை நீங்கள் வெறுக்கத் தீர்மானித்தால், என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியும். ) ரே நிகல்ஸன் என்னை மிக எச்சரிக்கையாக இருக்கச் செய்தார், அதனால் என் லினக்ஸ் பெட்டி இயக்கத்தில் இருந்தது. மார்க் ஷோவெல் நான் பயன்படுத்திய மடிக்கணினியின் க்ஷீணித்த நிலையைப் பார்த்து, பரிதாபப்பட்டார். காட் (காதரின் என்ற பெயரின் சுருக்கப் பெயர்) ஸ்பார்க்ஸ் நான் உலகின் பாதி தூரத்துக்கு அப்பால் பயணித்து இடம் பெயர வழி செய்தார், என் அந்த வருடம் என் வாழ்விலேயே மோசமான வருடம் என்ற நிலையிலிருந்து என் வாழ்விலேயே சிறப்பான வருடம் என்ற நிலைக்குச் சாய்ந்து மாறக் காரணமாக இருந்த தாங்கு புள்ளியாக இருந்தார்.
இவர்களில் சிலர், மாமிசத்தாலான வெளியாகிய உலகில் நண்பர்கள், மற்றவர்கள் ஒளிச்சில்லு உலகில் தோழர்கள். வலைவெளியிலும், புறத்தேயும் என்னோடு வாதிட்டிருக்கிறார்கள். எக்கோப்ராக்ஸியா உருப்பெற்றுக் கொண்டிருக்கையில் அதன் பகுதிகள் கசிந்து வெளியானபோது எல்லாம் அதோடு சமர் செய்து பிழைகளைக் குத்திக் காட்டினார்கள். மனித குலத்தின் மரபணுவியலிலிருந்து எந்திரங்களின் பிரக்ஞையிலிருந்து உலோகத்தைச் சாப்பிடும் நுண்கிருமி வரை சகலவிதமான விஷயங்கள் பற்றியும் பிரசுரங்களுக்குச் சுட்டுக் குறிப்புகளைக் கொடுத்தார்கள். அவர்கள் ஒரு சிறு படைதான், ஆனால் மிக்க புத்தி சாதுரியம் கொண்ட படை, என்னுடைய அனைத்து முயற்சிகளையும் மீறி நான் அவர்களில் சிலரையாவது மறந்திருக்கலாம். அப்படி நான் கவனிக்கத் தவறியவர்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
இனி ஹாவர்ட் மொர்ஹைம் பற்றி. ‘என் புத்தகத்தை வாங்கு’ என்பதிலிருந்து ‘நீ உடனடியான வருங்காலத்தில் நடப்பதாக, ஒரு கடல் உயிரியலாளரை வைத்து ஒரு பொறிநுட்ப மர்மக் கதை எழுதினால்தான் நான் அதை விற்க உதவுவேன்’ என்று சொல்பவர் வரை பற்பல வகையான ஏஜெண்டுகளோடு நான் மல்லுக்கட்டினேன். ஹாவர்டோ எனக்கு எதில் உத்வேகம் கிட்டுகிறதோ அதை எழுதச் சொன்னார்: அதை விற்பது, அவர் வேலை என்று அவர் அழுத்திச் சொன்னார். டார்வினியப் போட்டி நிலவும் சந்தையில் பிழைக்க இந்த அணுகல் அத்தனை உசிதமானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் எழுத்தை முன்னிலையில் வைக்கும் ஒருவரை இதில் சந்திக்க நேர்ந்ததுதான் என்னவொரு பாக்கியம். ஒரு முரண்-நகை என்னவென்றால், என் அடுத்த நாவல் அனேகமாக கிட்டத்து வருங்காலத்தில் வாழும் ஒரு கடல் உயிரியலாளரைப் பற்றிய பொறிநுட்ப மர்மக் கதையாகத்தான் இருக்கப் போகிறது.
பீடர் வாட்ஸ்
 
பிற சுட்டிகள்
1. பீடர் வாட்ஸ் நேர்காணல்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.