அஃகம் சுருக்கேல்

This entry is part 37 of 48 in the series நூறு நூல்கள்

நாஞ்சில் நாடன் கட்டுரைத் தொகுப்பு – ஒரு மெச்சல்

ஆள்வது என்றால் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. துன்புறுத்துவது அல்ல, பரிபாலனம் செய்வது. மேன்மையுறக் கலந்துறவாடுவது.போற்றுவது.
ஒருமுறை நாஞ்சில் நாடன் அவர்களிடம், “‘நமஹ’ என்கிற சம்ஸ்க்ருத சொல்லின் பொருள் எனக்குத் தெரியாது; ஆனால் அதற்குப் பதிலாக தமிழ் வழிபாட்டுத் துதிகளில் ‘போற்றி’ என்று இருப்பது தெரியும். தமிழன் காலங்காலமாகப் போற்றி போற்றி என்று யாரையாவது முகஸ்துதி செய்து கொண்டே இருப்பவன் போலும்” என்று சொன்னேன். உடனே அவர் ‘போற்றி’ என்பது புகழ்வது மட்டுமல்ல; அதற்கு இன்னும் பல ஆழமான பொருள்கள் உண்டு என்று விளக்கினார். போற்றுவது என்பது அக்கறையோடு பேணுவதும் கூட. மதிப்பு தருவது மட்டுமின்றி அன்பு செலுத்துவதும் கூட என்றெல்லாம் பேசினோம். அந்த விதத்தில் ஆள்வது என்பது இவையனைத்துமானது.
ஆள்பவன் என்பவன் இப்படி இருந்தால் ‘ஆபயன் குன்றாது; அறு தொழிலோர் நூல் மறவார்’ குடியாள்பவன் இப்படி என்றால் எழுத்தாள்பவன் எப்படி இருக்க வேண்டும்? மொழியின் மீது, சொல்லும் பொருளின் மீது முழுக்கட்டுப்பாடும், மோகமும், போற்றுதலும், நுண்ணறிவும், புலனுணர்வும், மொழியின் பரப்பையும், வீச்சையும் துல்லியமாய் கணிக்கும் திறனும் உடையவனாக இருக்க வேண்டும். மொழியை ஆள வேண்டும். போற்றிப் பேண வேண்டும். அவன்தான் எழுத்தாளன். இது எம்மொழிக்கும் பொருந்தும். பாக்கிப் பேர் ‘எழுத்துபயோகிகள்’ மட்டும்தான். தமிழில் அரிதாகக் கிடைக்கிற எழுத்தாளர்களில் நாஞ்சில் நாடனும் ஒருவர்.
இத்தகைய எழுத்தாளர்களிலும் வாழ்நாள் சுருக்கத்தாலும், வாழ்வின் நெருக்கத்தாலும், மனப் பாங்கினாலும் தேர்ந்தோ, எதேச்சையாகவோ எழுத்தின் பல்வேறு துறைகளிலும் கவனத்தைச் செலுத்தாதவர் அல்லது செலுத்துபவர் என்று இரு பெரும் பிரிவுகள் உண்டு. புதுமைப் பித்தனும், மௌனியும் நாவல் எழுதியதில்லை. ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி முதலியவர்கள் போல் நாஞ்சில் நாடனும் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை போன்ற பல பிரிவுகளிலும் தடம்பதித்தவர். தடம் பதித்தவர் என்றால் ஏனோ தானோ என்று அல்ல. முழு வீச்சுடனும் ஆழமாக. இவை தவிர திரைக்கதை, மேடைப் பேச்சு, உரையாடல், நேர்காணல் என்னும் பல துறைகளிலும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப் பணி புரிந்து வருபவர்.
இப்போது எழுத்துகளை புனைவு, அ-புனைவு என்று பிரிக்கும் வழக்கம் வந்துள்ளது. முன்பெல்லாம் கதை, கவிதை மற்றும் கட்டுரை என்று சொல்வதுதான் வழக்கம். இந்த புனைவு மற்றும் அபுனைவு ஆங்கில Fiction, non-fiction ஆகிய இரண்டின் தமிழ்ப்படுத்துதல். புனைவு. இதில் எத்தனை அபுனைவு? இந்த அபுனைவில் எவ்வளவு புனைவு? உலக இலக்கியத்தில் இது போன்ற கறாரான, மூச்சு முட்டும் கட்டுப்பாடுகள் எப்போதோ தளர்ந்து விட்டன. ‘Fiction, nonfiction – the two are bleeding into each other all the time.’ என்கிறார் ஜெஃப் டையர். இதை தமிழில் செய்தவர்களில் நாஞ்சில் நாடன் முக்கியமானவர். இவரது கதைகளில் கட்டுரைத் தன்மை திடீரென்று கதையாகும் மாயம் நிகழும். உதாரணத்திற்கு இரண்டு: ‘வனம்’ என்கிற சிறுகதை, மற்றும் சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் வெளியான ‘பெருந்தவம்’ என்கிற கதை. அதே போல் இவரது கட்டுரைகளில் சிறுகதைகளின் சுவை இருக்கும்.

agham_surukkel

கதை, கட்டுரை மட்டுமல்ல. கவிதையும் அப்படித்தான். நம் மரக்காலால் அளக்க முடியாத மகாநதி. கவிதை என்பது கவிதைகளில் மட்டுமே எழுதப்படுவது மட்டுமன்று. அது கவி உளத்திலிருந்து பிறப்பது. அப்படிப் பார்த்தால் இப்போது கவிதைகள் பலவற்றில் கவிதை இல்லை என்று சொல்லி விடலாம். எழுத்தின் இசை கவிதை. ஒரு கதையில், ஒரு கட்டுரையில் ஒரு கவிதை வரி மனதை ஆண்டு விடும். ‘மோகமுள்’ என்கிற தலைப்பே கவிதை. ‘கற்பு கற்பென்று கதைக்கிறீர்களே, இதுதான் ஐயா பொன்னகரம்’ என்கிற வரிகள் கவிதை. ‘கம்பனுக்குள் வந்த கதையில்’ நாஞ்சில் நாடன் தன் கம்ப ராமாயண ஆசிரியர் திரு ரா.பத்மநாபன் பற்றிக் குறிப்பிடுகையில் “ரா.ப. வுக்கு எந்த விதத்திலேயும்  உபகாரம் செய்திருக்கலாகும் என அவர் இறந்து ஒரு வனவாச காலம் கடந்தபின்பு, இந்த நூலை (கம்பனின் அம்பறாத் தூணி) காணிக்கையாக்கி நான் அவருக்குக் கடன் செய்கிறேன். நீர்க்கடன் அல்ல நூற்கடன்” என்கையில் சொல்லாலும், பொருளாலும் நோக்கத்தாலும் கவிதை நிகழ்ந்துவிடுகிறது.
எனவே கட்டுரை அல்லது அபுனைவு என்பது நல்லதோர் எழுத்தாளனின் ஆளுமையில் வறண்ட தரிசு நிலம் அல்ல. அவன் கலை புணர்ந்து பெறும் குழந்தைகளுக்கு நாம் வைக்கும் பெயர்களால் அவற்றின் குணம் கட்டுப்படப் போவதில்லை.
கட்டுரை உட்பட எழுத்தின் அடிப்படை, வாழ்க்கையின் அடிப்படையுமான, அதே சமயம் சொல்லிச் சொல்லித் தேய்வழக்காகி விட்ட ‘உண்மை, அன்பு, அழகு’தான். அதை எம்மொழியில் சொன்னால் என்ன? ‘Truth Beauty, Love’ என்றாலும், ‘சத்யம், சிவம் சுந்தரம்’ என்றாலும் ஒன்றுதான். மேன்மையான எழுத்து இவற்றின் மேல் மலர்வது.
‘உண்மை’ பற்றிச் சொல்கையில், நாஞ்சில் நாடன் அவர்களின் கதைகளிலேயே கூட ஒரு தகவல் இருந்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிறார் வெங்கட் சாமிநாதன். அப்போது கட்டுரைகள் பற்றி என்ன சொல்வது. கட்டுரைகள் என்பவை எழுத்தாளனின் தொடர்ந்த உரையாடல். அவன் சொல்லும் விஷயங்கள் தவிர அவனைப் பற்றியும், நம்மைப் பற்றியும் அவ்வெழுத்துகள் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். அதில் தில்லு முல்லுகள் செய்வது, திரிப்பது என்பவை பஞ்சமா பாதகங்களை விட கொடியவை. நாஞ்சிலின் கட்டுரையில் உள்ள தகவல்கள் பலமுறை பல கோணங்களில் சரிபார்க்கப்பட்ட பின்பே அச்சுக்கு வருபவை. அவரது மனச் சாய்வுகள், பிடித்த பிடிக்காத தன்மைகள் என்று வாசகர் சிலவற்றைக் கருதலாம். ஆனால் தகவல் பிழைகள் இரா.
‘அன்பு’ என்பது துன்பம் துடைத்தல். அதை மகத்தான எழுத்துகள் செய்து கொண்டே இருக்கின்றன. அதனால்தான் அநியாயத்துக்கு எதிரான, எனவே ஏழைகளுக்கும், பலஹீனமானவர்களுக்கும், வஞ்சிக்கப் பட்டவர்களுக்கும் ஆன, அதே சமயம் அதன் மூலம் ஆதாயம் தேடாத குரலாக நாஞ்சில் நாடன் எழுத்துகள் ஒலிக்கின்றன. இந்தத் துன்பங்களுக்குக் காரணமான வாழ்க்கைச் சீரழிவுகளைப் பற்றி மீண்டும், மீண்டும் பேசுகின்றன.
‘அழகு’ என்பது துல்லியம், சரியான அளவு, தன்மை. சொல்ல வந்த விஷயத்தைப் பிசிறின்றிச் சொல்வது. இதற்கு அகத்தெளிவும், விஷய அறிவும் அவசியம். ‘The difference between the right word and the almost right word is the difference between lightning and a lightning bug.’ என்கிறார் மார்க் ட்வெய்ன். இந்த விஷயத்தில் வார்த்தைப் பற்றாக் குறை என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் எழுதுபவர் நாஞ்சில் நாடன். பழந்தமிழ்ச் சொற்கள், சமீப காலம் வரை இருந்து பிற மொழி மோகத்தால் வழக்கற்ற தமிழ்ச் சொற்கள் என்று கொட்டிக் கிடக்கும் நமது கருவூலத்தின் சாவி இவர் வசம் இருக்கிறது. இவரது நடை பழந்தமிழ் போல் இருக்கிறது. நவீன உலகுக்கு இது சாத்தியப்படுமா என்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி : ‘நீங்கள் நவீனம் என்பதை ஆங்கிலம் என்று நினைக்கிறீகளா, அல்லது ஒரு மொழியின் உயிர்த் தன்மை என்று நினைக்கிறீர்களா?’
மேலும் கூடியவரை தமிழ்ச் சொற்களையே தனிப் பேச்சிலும் பயன்படுத்தும் இவர் தேவை இருக்கையில் பொருளின் தன்மை கருதி பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை. ஒரு கலைஞனால் எந்த ஒரு மொழியையும் எப்படி துவேஷிக்க முடியும்?
உலக நாடுகளுக்கும், இந்தியாவின் பலபகுதிகளுக்கும் சென்று வந்தவரும், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளவருமான இந்த நாகர்கோவில் தமிழர், அடிப்படையில் ஒரு விவசாயியாகவே தன்னைப் பாவிக்கிறார். இவரது உறவு முதலில் மண்ணோடு, பயிர்களோடு, தாவரங்களோடு, விலங்குகளோடு, பறவைகளோடு. இந்த உறவுகளின் வலிமையின் காரணமாகவே இவருக்கு மனித உறவுகள் சீராகவும், சிக்கலற்றும், அன்போடும் இருக்க வேண்டும் என்கிற அக்கறையும், அதுகுறித்த தற்காலச் சூழல் மற்றும் தாக்கங்களால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அழிவு பற்றிய அச்சமும் ஒருங்கே உள்ளன. அதனல்தான் “இந்தியா பூராவும் செல்போன்களின் விதவிதமான வல்லிசைகளால் நிரம்பி பிரபஞ்சத்தில் வழியும் காலம் வெகு தூரத்தில் இல்லை” எனக் கவலுறுகிறார். “செண்பகப் பறவைக்குத் தெரியுமா அதன் பெயர் செண்பகம்” என்று என்று வினவுகிறார். “இவ்வுலகு மனிதர்க்கு மட்டுமே சொந்தமானது அல்ல” என்பதை நமக்கு நினைவு படுத்துகிறார்.
எழுத்தாளன் நேர்மையாக இருக்க வேண்டும். சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல். எல்லாம் சரி என்பதல்ல இக்கோல். எது சரி என்பதுதான். நாஞ்சில் நாடன் சில இடங்களில் ஒரு விஷயத்தின் இரண்டு பக்கங்களையும் சொல்லிச் சென்று விடுவார். உதாரணம் : “பர்வம்’ என்னும் வடமொழிச் சொல்லின் தமிழ் வார்ப்பே பருவம் என்றும் சொல்வார்கள் அற்ப மகிழ்ச்சி அடைய.”
ஆனால் இது போன்ற பெரிய ஆபத்தில்லா உபாதைகளைப் போலன்றி உயிர் கொல்லும் நோய்கள் பற்றி சர்வ நிச்சயமாகத் தன் நிலைப்பாடு இதுதான் என்பதை ஐயத்துக்கிடமின்றிச் சொல்லி, தான் யார் என்பதையும் காட்ட இவர் தயங்குவதில்லை. இது தமிழுலகில் அரிதான குணம். பாசாங்கு , சுயலாபக் கணக்கின் இடையறாத துரத்தல் தவிர அச்சத்தின் காரணமாகவும், தரங்கெட்ட சமூக அபாயங்கள் காரணமாகவும் இத்தகைய தீர்மானமான கருத்துகளைச் சொல்ல பலரும் தயங்குகிற சூழலில் தன் கருத்து இதுதான் என்பதை எள்ளளவும் தயங்காது உரத்துச் சொல்லும் இவர் துணிவு அரிதினும் அரிதானது. அத்துணிவினால்தான் “கம்ப ரசம் எழுதப்படலாம். கீமாயணம் எழுதப் படலாம். கொண்டு வந்து போட்டுக் கொளுத்து எனலாம். இராமனைச் செருப்பால் அடிக்கலாம். செருப்பு மாலை போடலாம். சீதையின் மேலாக்கை மாநாட்டு ஊர்வலத்தில் விலக்கி விலக்கிக் காட்டலாம். ஆனால் கம்பனும், அவனது இராமாயணமும் யாவற்றையும் வென்று வாழும்.” என்று இவரால் சொல்ல முடிகிறது.
அவரைப் பற்றி அவரே சொல்வது போல தமிழுடன் சகவாசம், இசையுடன் இசைவு, இளையவர் நட்பு இவரை முதுமையடையாமல் பார்த்துக் கொள்கிறது. அது நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொய்வின்றி எழுதி வரும் இவர் எழுத்தில் தெரிகிறது.
தத்துவச் சேற்றுக்குள் கால் வைக்காதவர். இவரது வாழ்க்கை நெறி முறையும், அது குறித்து இவரது உறுத்தாத அறிவுரையும் மிக எளிமையனவை : “சக மனிதனைச் சகித்துக் கொள்ள முயல வேண்டும். சக மனிதனைப் புரிந்து கொள்ள முயல வேண்டும். முடியுமானால் நான் சக மனிதன் மீது அன்பு செய்ய முயல வேண்டும்.” “உலகம் அயோக்கியமயமாக இருக்கட்டும். நமக்கு வாய்த்திருக்கும் நல்ல தன்மைகளை அற்ப சுகங்களுக்காக இழக்க நாம் தயாராக இல்லை” இவ்வளவுதான். இதை விட வேறு என்ன வேண்டும்?
நாஞ்சில் நாடனின் இக்கட்டுரைகள் தீவிரமான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் அவரது எழுத்தின் இயல்பான நகைச்சுவை, ‘கன்னியாகுமரி கடலை என்ன செய்வதென்று தெரியாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் ஐயன் திருவள்ளுவன் சிலை’ என்பன போன்ற கவனிப்புகளாக, படிக்கும் சுவாரஸ்யத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கும்.
‘செந்தமிழ்க் காப்பியங்கள்’ கட்டுரை ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், கம்ப ராமாயணம், மகாபாரதத் தமிழாக்ககங்கள், பெரிய புராணம், சீறாப்புராணம், இரட்சணி யாத்திரிகம், தேம்பாவணி என காப்பியங்கள் பற்றி சுருக்கமான அறிமுகங்களைத் தரும் முக்கியமான கட்டுரை. இது நாஞ்சில் நாடனின் இன்னொரு தொண்டு. தமிழன் தன்னிடம் உள்ள முத்துகளையும், வைர, வைடூர்யங்களையும் பற்றி கிஞ்சித்தும் அறியாமல் பிறரைப் பழிப்பதிலோ, பிரிவினை பேசுவதிலோ, வெற்று கோஷங்கள் எழுப்புவதிலோ, தமிழ்த் தொண்டு ஆற்றி விட்ட நிம்மதியில் உறங்கிக் கிடக்கிறான். ‘மொழியை அரணாகப் பயன்படுத்த, அதன் மூலம் இனத்தை, மரபை, பண்பாட்டை, இலக்கியச் செல்வங்களைக் காக்க நமது செயல் திட்டங்கள் என்ன’ என்று சிந்திக்க ஒரு நொடி ஒதுக்குவதில்லை. அவனிடம் “கேளப்பா இவையெல்லாம் உன் சொத்து. கண் திற” என்று அறிமுகம் செய்கிறார்.
பல முக்கியமான தகவல்களைத் தரும் அறிவு சார் கட்டுரைகள் இவரது இன்னொரு தொண்டு. இவை தமிழில் எங்குள்ளன? யார் எழுதியவை? அவை பற்றிய அறிமுகம், மற்றும் கிடைக்குமிடம், அந்நூல்களின் சிறப்பு பற்றி எழுதுகிறார்.
கணித முதுகலைப் பட்டதாரி. புள்ளியியல் படித்தவர். அபார நினைவாற்றல் உள்ளவர். இணையத்தின் துணையின்றியே பல நீண்ட விரிவான தகவல்களையும், பட்டியல்களையும் தரக் கூடியவர். கலைத் தன்மை, தர்க்கம் இரண்டும் ஒரு சேர இயங்கும் முழு மூளைக் காரர். இவ்வொத்திசைவினால் தாவரங்கள், தல விருட்சங்கள், மாடன்கள் என்று நீண்ட பட்டியல்களைத் தருகையிலேயே அவற்றின் உட்பொருளையும், அவை நம் வாழ்வாதாரங்கள் என்பதை நமக்கு உணர்த்தவும் இவரால் முடிகிறது.
இயற்கையும் நாமும் ஒன்றுதான் என்கிற அடிப்படை உணர்வை இவரது கட்டுரைகள் வாசகருக்குத் தொடர்ந்து கடத்துகின்றன. மறந்து போன உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன. வெட்டுப்பட்ட ஆல மரத்தின் வெட்டுப் பரப்பில் உட்கார்ந்தது, இவருக்கு அறியாச் சிறுவனாய் தன் சித்தப்பா, சித்தி மடியில் அமர்வதைப் போல் இருக்கிறது. இது எவ்வளவு உண்மைகளை வாசகருக்கு ஒரு சேர அளிக்கிறது ! அமர்ந்தது மரத்தடி கூட இல்லை. என்றோ இருந்த ஆல மரத்தின் வெட்டுப் பரப்பு. அந்தப் பரப்பு மனித மடி ஆகிறது. அறியாச் சிறுவனின் வாழ்வில் மடி எவ்வளவு உந்நதமான, பாது காப்பான, நிம்மதியான இடம்? வளர்ந்த மனிதன் சாகும் வரை அத்தகு மடி தேடித்தானே அலைகிறான், கோயில் கோயிலாக, தலைவன் தலைவனாக, கொள்கை கொள்கையாக, கேளிக்கை கேளிக்கையாக . . . . அந்த மடி, உலகோர் குறுக்கி எதிர்பார்ப்பது போல் சொந்தப் பெற்றோரது கூட இல்லை. தாய் தகப்பனைப் போல் அல்லது தாய் தந்தையினும் சாலப் பரிந்து வாழ்வமுதூட்டிய சித்தப்பா சித்தி மடி.
“அல்லாஹூ ஆலம்’ என்பதில் ஆலம் என்பதன் பொருள் உலகம். உலகமே இறைவன், இறைவனே உலகம்” என்று பொருள் சொன்ன நண்பரின் இச்சொற்றொடரில் ஆலம் என்கிற சொல்லினால் ஈர்க்கப் பட்டு “கடவுள் ஆலம், கடவுள் ஆலம், கடவுள் ஆலம்”  என்று இவர் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்க்கிறார். ஆல மரத்தின் வெட்டுப் பரப்பு சித்தப்பா சித்தி மடி ஆகையில் ஆலம் கடவுளும்தானே? அனைத்தும் கடவுள்தானே?
ஆனால் நாஞ்சில் நாடன் குணரூபமான (abstract) விஷயங்களில் ருசி கண்டு அங்கேயே உழல்பவர் அல்ல. மிகவும் யதார்த்தமானவர். நிஜ வாழ்க்கையை சரியாக்கும் பணியில் தளாராது ஈடுபடுபவர். அதனால்தான் நம்மிடம் கேட்கிறார் : “நாம் ஒன்றாக நின்று – வேற்றுமைகளுக்கு உள்ளும் ஒற்றுமையாக நின்று காசி என்று நினைத்தால் ராமேஸ்வரம் நினைவுக்கு வருவதைப் போல கூட்டாக உய்யப் போகிறோமா? அல்லது தன்படை சுட்டுச் சாகப் போகிறோமா?” கவனமும் கவலையும் மிக்க இக் கேள்விக்கு நாம் வாழ்வதன் மூலமாகச் சொல்லும் பதிலில் இந்தியாவின், தமிழனின் எதிர்காலம் உள்ளது.
ஓர் எழுத்தாளனின் பணி இதுதான். மனித குலத்தைத் துண்டாடுவனவற்றை மறுதலிப்பது. அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்று என்கிற உண்மையை விட்டு அசையாதிருப்பது. அதைச் செய்யும் இக்கட்டுரைகள் ஒரே நூலாக வருவது மிகுந்த மகிழ்ச்சிக்குக் காரணமாகிறது.
தமிழ் மொழி, சமுக சிந்தனை, கல்வி, இலக்கியம், கலை, பண்பாடு, குடும்பம், உறவுகள், இயற்கை முதலிய பல்வேறு தளங்களில் கூர்மையான பார்வைகளையும், கருத்துகளையும் நேர்மையாக வைக்கும் திரு நாஞ்சில் நாடன் அவர்களின் பல கட்டுரைகளிலிருந்து பெரும்பாலான இத்தன்மைகள் வெளிப்படுமாறு இத்தொகுப்பு அமைந்திருக்கிறது.

****
Aggam_Surkkel_Nanjil_Nadan_Books_Essays_Tamil_Letters_Cover_2015
தொகுப்பாசிரியர் : ஜி. ஆர். பிரகாஷ்

நூல் கிடைக்குமிடம் : மாலதி பதிப்பகம், கோவை. தொடர்புக்கு : 9 9946  95242, 94881 85920
மின்னஞ்சல் :  malathipathipagam@gmail.com

விலை : ரூ. 150/-

Series Navigation<< ச. தமிழ்ச்செல்வனின் ’பேசாத பேச்சு’அறுபடலின் துயரம் – பூக்குழி >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.