வாசகியாயிருத்தல்

Writers_Chat_Music_Open_Books_Lit_Person_Typewriters_author_meets

படுக்கை வசதி கொண்ட பேருந்திலேயே சென்று பழக்கப்பட்டதால் இருக்கை வசதி கொண்ட பேருந்தும், குண்டும் குழியுமான பாதைகளும் அயர்ச்சியைத் தந்தது. படுக்கை வசதி கொண்ட பேருந்தில் கூட இந்த சாலையில் வசதியாக பயணம் செய்துவிட முடியப்போவதில்லை என்று தொன்றியது. எது எப்படியோ பயணங்கள் இனிமையானவை தான், எந்த ஒரு காரணமும் இல்லாமலேயே கூட, ஆனால் இனிமையான காரணத்துடனான இந்த பயணத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தது மனம். பயணத்தை அனுபவித்து செய்வதின் இன்பம் அந்த பயணத்திற்கான காரணமாக இல்லாமல் வேறதாக இருக்க முடியும்? ஒரு எழுத்தாளனை பார்க்க சென்று கொண்டிருக்கும் இந்த பயணம் என்னளவில் வித்யாசமான அனுபவம் தான். என் நண்பனும் இன்னும் காதலை சொல்லிக்கொள்ளாததால் நண்பனாக உடனிருந்தான், மிகவும் ஆச்சரியமாக என் கவனத்தை எள்ளளவும் பெறாமல். முகநூலில் நிலையை புதுப்பித்தால் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருகிறேன் என்று போட்டுக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

ஏன் இந்த பயணம் என்றும், ஒரு எழுத்தாளனை சந்திக்கத்தான் வேண்டுமா என்றும் யோசனையாக இருந்தது, என்றாலும் வாசிப்பின் மீதான விருப்பத்தின் ஆழம் தான் இந்த பயணத்திற்கு என்னைத் தூண்டியது. வாசிப்பு இன்றைக்கு நேற்று ஆரம்பித்த பழக்கமில்லை, முதன்முதலில் நூலகத்திற்கு சென்றபோது எனக்கு எத்தனை வயதென்று நினைவில்லை, 7ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். முதன் முதலில் நூலகத்தில் கையொப்பமிட்டு வாசித்த இன்பம் இன்றும் இனிக்கிறது. பள்ளி நூலகத்தில் எடுத்து வாசித்த சிண்ட்ரெல்லா கதையையும், கிரேக்க கதைகளையும் இன்றும் பசுமையாக நினைவுபடுத்திக்கொள்ள முடிகிறது. கல்லூரியில் பெரியார் வாசிக்காமல் இருந்திருந்தால் இந்த பயணமே கூட சாத்தியப்பட்டிருக்காது என்று தான் படுகிறது.

“பொம்பள பிள்ளைக்கு என்ன பழக்கம், எப்ப பாத்தாலும் புத்தகமும் கையுமா?”

“சாப்பிடறப்ப கூட புத்தகமா, தூக்கி போடு.”

“பறிட்சை முடிந்த கையோடு புத்தகமும் கையுமா உட்கார்ந்தா ஆயுடுச்சா, சமைக்க கத்துக்கோ, போற வீட்ல நல்ல பேர் எடுக்கற வழியப்பாரு”.

“ராத்திரி 12 வரைக்கும் என்ன கதை புத்தகம் படிக்க வேண்டி கடக்கு? எடுத்து வைச்சிட்டு படு போ”

எத்தனை யேச்சு, பேச்சுக்களுடன் பழகிய பழக்கம்? மாடிப்படிகளில், துணிதுவைக்கும் கல்லில், மொட்டைமாடியில், கட்டிலடியில் என மறைந்து மறைந்து வாசித்துப் பழகிய பழக்கம். இரண்டு மூன்று நூலகங்களில், ஒவ்வொன்றிலும் இரண்டிற்கும் மேல் அடையாள அட்டை வைத்துக்கொண்டு வாசித்துப் பழகிய பழக்கம். வடை சுற்றிய காகிதமானாலும், கடலை சுற்றிய காகிதமானாலும் படித்துவிட்டே எறிந்து பழகிய பழக்கம். வேலை தேடிக்கொண்டிருந்த நாட்களில் டீ, காப்பி வாங்க காசில்லாமல் போனால் கூட பரவாயில்லை என்று வார இதழ்கள் வாங்கி படித்துப் பழகிய பழக்கம்.

”கல்யாண்ஜி கவிதைகள் ரொம்ப நல்லா இருக்குப்பா, நீ சொன்னது உண்மை தான்”

“நானெல்லாம் அதை 13 வயசிலேயே வாசிச்சாச்சி, நீ ரொம்ப லேட்”

என் நண்பன் என்னிடம் கூறிய போது கோபம் வரவில்லை. பெண்ணென்றால் வட்டமொன்றை போட்டுக் கொண்டு தான் இயங்க வேண்டும் என்ற சராசரி குடும்பத்திலிருந்து வந்தவள் நான். இன்று வரை எனக்கான வட்டத்தை சற்று பெரிதாக்கிக் கொள்ள முடிந்ததே தவிர, அதன் எல்லையை அழித்துவிட முடியவில்லை. எந்த ஒரு சாதாரண வாசகனையும் போல நானும் கல்கி, சாண்டில்யன், சுஜாதா, பாலகுமாரன் என்று தான் வாசிப்பைத் தொடங்கினேன். இத்தனை எழுத்தாளர்களா, இத்தனை வகைகளா என்று தெரிந்து கொள்ள நீண்ட காலம் பிடித்தது. இன்று யோசிக்கையில் இப்படி இருந்தவிட்ட இயலாமை சற்றே வலிக்கிறது. என் வாசிப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவன் என்பதால் இவன் மேல் ஏகப்பட்ட பிரியம், ஆனால் என்ன செய்து அந்த பிரியத்தை தீர்த்துவிடமுடியும்? ஒரு விளையாட்டு வீரன் மேல், ஒரு கதாநாயகன் மேல், ஒரு இசையமைப்பாளர் மேல், ஒரு பாடகர் மேல் வைக்கும் பிரியம் போன்றதல்ல இது. அதனால் தான் விசிறி என்று பொதுப்படுத்திவிடாமல் வாசகர் என்று ஒரு தனியான அடையாளம் வந்ததோ என்னவோ? மேற்கூறியவர்கள் மேல் வைக்கும் பிரியத்திற்கும், எழுத்தாளன் மேல் வைக்கும் பிரியத்திற்கும் அதிக வேறுபாடுகள் உள்ளதாக நம்புகிறேன். நான் அவனிடம் என்ன எதிர்பார்த்து போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் அவன் நட்பு நிச்சயம் ஒரு கிடைக்கற்கரிய பொக்கிஷம் என்று தான் நம்புகிறேன்.

“அம்மா நான் அந்த எழுத்தாளனை பார்க்க போயிட்டுருக்கேம்மா, போய் சேர்ந்த உடனே உனக்கு கால் பண்ணறேன்”

“ஆமா, உனக்கு பாக்க வேற ஆளே கிடைக்கலயா? என்னமோ பண்ணு”

அம்மா காலையில் கூறியதையும் அவனுக்காக வரிந்துகட்டிக்கொண்டு பேசியதையும் நினைத்தால் சிரிப்பாக வந்தது. எத்தனையோ சாக்கடைத்தனமான செயல்களை செய்துகொண்டும், புன்முகத்துடன் அப்படியான செயல்களை எதிர்கொண்டும் இருக்கும் இவர்கள், வெளிப்படையாக எழுதும் ஒரு எழுத்தாளனை இகழ்ச்சியாகப் பேசுவது மிகவும் ஆச்சரியமான ஒன்று. இவர்களின் தூய்மைகளை வேறுபடுத்திக் காட்டவாவது ஒருவன் வேண்டாமா? அவன் எழுத்துக்களில் பாலியல் அதிகம் என்பது தான் என் அம்மாவின் கசப்பிற்குக் காரணம். அவனின் பாலியல் எழுத்துக்களை கோவிலில் உள்ள பாலியல் சிற்பங்கள் போலத் தான் எடுத்துக்கொள்ள முடிகிறது. அவன் மேலுள்ள அளவு கடந்த மரியாதை மற்றும் பிரியம் தான் நான் இப்படி எடுத்துக்கொள்ள காரணமென்றால் இருந்துவிட்டு போகட்டுமே, அவன் அப்படி எழுதுவதால் என்ன புதிதாக கெட்டுவிடபோகிறது. மேலும் அவன் பெண்களின் சார்பாக வைக்கும் தத்துவார்த்த தர்க்கங்களின் ஆழமும், புனிதமும் எனக்குத் தெரியும். அவன் எழுத்து பெண்ணிற்குமானது, பெண்ணிற்காக எழுதப்பட ஆண் எழுத்துக்களை அவன் வாயிலாக மட்டுமே அதிகம் வாசித்துள்ளேன். அப்படி எழுதியவர்கள் பலர் இருக்கிறார்கள் தான், ஆனால் எனக்கென்னவோ இவனைத் தான் கொண்டாடத் தோன்றுகிறது.

எத்தனை யோசித்தாலும் தீராதவை அவனைப் பற்றிய எண்ணங்கள். இப்படி ஆர அமர அனுபவங்களை அசைபோட ஏற்ற சமயம் பயணங்களில் தான் வாய்க்கிறது. இடையிடையே விழித்துக்கொண்ட பொழுதெல்லாம் அவனைக்காண சென்று கொண்டிருக்கிறோம் என்பதை தான் முதலில் நினைத்துக் கொண்டேன். குழந்தைகள் தீபாவளிக்கான நாட்களை எண்ணிக் கொள்வதைப்போல இன்பம், ஒரு குறுகுறுப்பு. இந்த வயதில் இப்படியான சந்தோசங்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. இப்படியான என் உணர்வுகளை முதிர்ச்சியின்மையாக நினைத்துக் கொள்பவர்கள் நிச்சயம் பாவப்பட்டவர்கள்.

கடற்கரை நகரங்களுக்கே உரிய பிரத்யோகமான சீதோசன நிலையில் ஒரு அதிகாலை வேலையில், பேருந்திலிருந்து இறங்கினேன். இனிமையாக தொடரும் பயணமும், நினைத்துப்பார்த்துக் கொண்ட நினைவுகளும் மனதில் மெலிதான சந்தோசத்தைக் கொடுத்தது, மிகவும் இயல்பான உற்சாகத்துடன் என் நண்பன் பேசிய ஆட்டொவில் ஏறினேன். என்னால் தனியாக இந்த சந்திப்பை நிகழ்த்திக்கொள்ள முடியாது என்று தோன்றியது, ஒரு வகையில் என் நண்பன் தான் என்னளவில் இந்த சந்திப்பை இயல்பானதொன்றாக்க முடியும் என்று தோன்றுகிறது.

oOo

த்தனை பெரிய நிகழ்வும் மிக இயல்பாக, எளிமையாக ஒரு கணத்தில் நிகழ்ந்து விடுகிறது, அந்த நிகழ்வைப் பற்றிய எதிர்பார்ப்புகளும், அந்த நிகழ்வின் தாக்கமும் தான் கடினமானது, அலங்காரமானது. எளிமையான ஒரு இல்லத்தில், மிக எளிமையான ஒரு அறையில் அழுத்தப்பற்றிய கைக்குலுக்கலுடன் எங்கள் சந்திப்பு மிக இயல்பாக நிகழ்ந்தது.

”வணக்கம்ண்ணா”.

“வாங்க” சம்பிரதாய பேச்சுக்கள்,

அவன் முகம் எனக்கு பரிட்சயமான ஒன்று தான், புத்தகங்களில், வலையில். ஆனால் நேரில் பார்க்க அத்தனை கடுமையானதாக இல்லை என்று பட்டது, எனக்கென்னவோ அனைத்து எழுத்தாளர்களையும் கடுமையான முகம் உள்ளவர்களாகத்தான் யொசிக்கத்தோன்றுகிறது. அவன் எழுத்துக்களை கண்டு நான் பொதுவாக மிரள்வதால் அப்படி உருவகித்துக் கொண்டேனோ என்னவோ..

எந்த புத்தகத்தைக் கண்டாவது நீங்கள் மிரண்டதுண்டா? மிரளும் அதே சமயம் விரும்பியதுண்டா? என்னிடம் அவனெழுதிய அப்படியான புத்தகம் உள்ளது, எந்த ஒரு புத்தகமும் என்னுடன் இத்தனை பயணப்பட்டதில்லை, இத்தனை கவனம் பெற்றதில்லை, எந்த புத்தகத்தையும் மகிழ்வான கணங்களுக்கான பக்கங்கள், கவலையான கணங்களுக்கான பக்கங்கள், சோர்வான கணங்களுக்கான பக்கங்கள் என்று பிரித்து வைத்துக்கொண்டு வாசித்துக் கொண்டாடியதில்லை. அவன் எழுத்து என்னை வேறொரு உலகத்திற்கு கொண்டு சென்று விடுகிறது, வார்த்தைகளின் வசீகரம் புத்தகத்திற்குள் என்னை இழுத்துக்கொண்டு சென்றுவிடுகிறது, அப்படியான பொழுதுகளில் புத்தகத்தை விட்டு வெளியேறவே முடியாமல் அதிலேயே சுலன்றுகொண்டிருந்து அதன் பக்கங்களில் தொலைந்துள்ளேன் என்பதை நீங்கள் நம்ப மறுத்தால் நீங்கள் அப்படியான புத்தகங்களை படித்ததில்லை என்று தான் கூறுவேன்.

அவனுடைய கதைகளை மறுபடியும் படிக்கும் போது அவனது கதாபாத்திரங்களின் நம்பிக்கைகளை நான் கொண்டிருப்பதை நினைத்தால் பயமாக இருக்கும், இது நானாக வேண்டுமென்றே செய்து கொண்ட ஒன்றில்லை என்பதை நான் இங்கு குறிப்பிடத்தேவையில்லை. ஆளுமை என்ற வார்த்தைக்கு என்னளவில் அர்த்தமே அவன் தானோ என்று மயக்கமாக உள்ளது. இப்படியான ஆளுமையுள்ளவனை காணவந்துவிட்டதை நினைத்தால் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் பேச ஆரம்பித்த சற்று நேரத்திலெல்லாம் மிகவும் பழகியவனைப் போல உணர்ந்தாலும் என் அறியாமையை காட்டிவிடக் கூடாது என்பதால் பெரும்பாலும் மௌனமே காத்தேன், ஆனால் ஏதாவது பேசத்தானே வேண்டும்.

“நிறைய குறிப்பெடுத்துக்கொண்டு எழுதுவீங்களாண்ணா?” கேள்வியைக் கேட்டுக்கொண்டிருக்கும் போதே எத்தனை பைத்தியக்காரத்தனமான கேள்வியென்று மனதிற்குள் இயலாமை படர்ந்தது.

ஒரு கதையின் பெயரைக்குறிப்பிட்டு, மூன்று தலைமுறைகளை தொட்டு எழுத வேண்டியிருந்ததால், அவற்றிற்கான ஆண்டுகள் சரியாக இருக்க வேண்டும் என்று மிகவும் பிரயாசைப்பட்டேன் என்றான். நான் உடனே அந்த கதையின் சாரத்தையும், அது எந்த கதைத்தொகுப்பில் உள்ளதென்றும், அது எனக்கு மிகவும் பிடித்த கதையென்றும் கூறிய போது எனக்கு பெருமை பிடிபடவில்லை, எத்தனையோ கதைகளில் அந்த கதையை நியாபகம் வைத்துள்ள அளவு அவனைப் படித்துள்ளேன், ஏதோ வர வாய்ப்பிருந்து அவனைக் காண வந்துவிடவில்லை என்ற பெருமை எனக்கு.

அவன் பேச்சு போர்ஹேஸை தொட்ட போது என் மனதில் ஒரே குதூகலம், அவன் நிச்சயம் போர்ஹேஸை குறிப்பிட்டு பேசுவான் என்று எதிர்பார்த்தேன். என் நண்பன் தடுமாறிய போது எந்த புத்தகத்தில் எந்த இடத்தில் போர்ஹேஸை குறிப்பிட்டுள்ளான் என்று சரியாகக் கூறினேன். பெயர் போடுதல் என்பது ஒரு கலை, சில எழுத்தாளர்கள் பெயர் போட்டு எழுதுவது ஏதோ வரலாறு படிப்பது போல இருக்கும், இவன் எழுதுவது அந்த பெயரை அறிமுகப்படுத்திக்கொள்ள தூண்டும்.

போர்ஹேஸ் என்றொரு எழுத்தாளனை உங்களுக்குத் தெரியுமா? இந்த பெயரைத் தொட்டுள்ள நிறைய எழுத்தாளர்களை நான் படித்துள்ளேன், ஆனால் இந்த பெயர் எனக்கு அறிமுகமாகியது அவனால் தான், அவன் குறிப்பிட்டுள்ளான் என்பதால் தான் போர்ஹேஸ் என் கவனத்தைப்பெற்றான். மேலும் எத்தனை பெயர்கள்? எத்தனை நிகழ்வுகள்? எத்தனை விசயங்களை அவன் எனக்கு அறிமுகப்படுத்தியுள்ளான்? அறிமுகப்படுத்திக்கொள்ள தூண்டியுள்ளான்? எத்தனை விதமான விசயங்கள், எத்தனை விதமான கற்பனைகள், எத்தனை வித்யாசமான கதையாடல்கள், எத்தனை வசீகரமான வார்த்தைகள், எத்தனை கசப்பான உண்மைகள். மிரண்டுவிடும் பெயர்கள் தான், மிரண்டுவிடும் செய்திகள் தான், மிரண்டுவிடும் செல்லாடல் தான். ஆனால் அந்த மிரட்சியின் வெளிப்பாடு அவன் எழுத்துக்களை நிராகரித்துவிடுவது அல்ல கொண்டாடுவது.

“பியர் குடிக்கிறீங்களா?, ஆர்டர் பண்ணவா?” அவன் தான், என்னிடம் தான். மிக இயல்பாக மறுத்தேன், தேனீரை மறுப்பது போல். இப்படி கூட நடந்துகொள்ளவில்லையென்றால் அவனுடைய வாசகியென எப்படி சொல்லிக்கொள்வது? இதில் பெரிதாக அலட்டிக்கொள்ள எந்த தேவையும் இல்லை, போலியான எந்த மனப்பாங்கையும் நான் வளர்த்துக் கொள்ளவில்லை, அதற்கான கூலியை எங்கெங்கும் நான் பெரும்போதிலும். மேலும் போதை சாரயத்தினுடைய தாக்கம் மட்டும் தானா? போதையை அவன் எனக்கு இதற்கு முன் அளித்ததேயில்லையா என்ன?

குஜராத் கலவரத்தில் கண்ணீருடன் உயிருக்காக கெஞ்சுபவனின் புகைப்படம், பூகம்பத்தில் கணவன் மனைவியாக கட்டிப்பிடித்தபடி இறந்திருந்த புகைப்படம், ஒரு எலும்பும் தோலுமான சிறுவனும் அவன் பின்னாள் உட்கார்ந்திருக்கும் கழுகு புகைப்படம் போன்ற புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா? அந்த புகைப்படங்கள் பாதிக்கும் அளவு மனதை பாதிக்கும் கதாபாத்திரங்களை படித்துள்ளீர்களா? அப்படியான கதாபாத்திரங்கள் நிரம்பியவை தான் அவனுடைய புத்தகங்கள். அந்த புகைப்படங்களை என்னால் நிச்சயம் இன்னொரு முறை பார்த்துவிடவே முடியாது. ஆனால் அவன் எழுத்தின் மீதான போதை இப்படியான ஒரு தாக்கமுள்ள அவன் எழுத்துக்களைக் கூட மீண்டும், மீண்டும் படிக்கத்தூண்டுவது எந்த விதத்திலும் சாராய போதைக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. மேலும் போதை, ஒரு பெண்ணாக எனக்கு அறிமுகமில்லாத ஒரு விசயம், ஆனால் போதையை மிகுதியான காட்டத்துடன் எனக்கு அறிமுகப்படுத்தியது அவன் தான்., மயங்கக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ள எந்த நிகழ்வுகளும் கிடைக்கப்படாதவள் நான், ஆனால் மயக்கத்தை பல்வேறு கதையாடல் மூலம் எனக்கு பரிசளித்தவன் அவன். அந்த மாய புத்தகத்தை படிக்கப் படிக்க எனக்கு அப்படியான போதையின் மற்றும் மயக்கத்தின் தெவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவை எனக்கு மட்டுமேயான பிரத்யோகமான அனுபவமாக, நிலைப்பாடாக நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.

இயல்பாக பியரை மறுத்த என் செய்கைக்காக அவன் முகத்தில் எந்த ஒரு ஆச்சரியமோ, சலனமோ இல்லை. நீண்ட நேரம் கழித்தே என் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டான், கடைசி வரை நான் என்ன செய்கிறேன் என்று கேட்டுக்கொள்ளவே இல்லை. அவனின் அனைத்து உரையாடல்களும் பெரும்பாலும் என் நண்பனுடன் தான். என் பேச்சிலிருந்து நான் அவன் எழுத்துக்களை ஆழமாக படித்துள்ளேன் என்றும் பெரும்பாலும் அவனுடைய எல்லா புத்தகங்களையும் படித்துவிட்டேன் என்றும் அவன் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது.

தனக்கு நிறைய தெரியும் என்று காட்டிக்கொள்ள நண்பன் அதிகம் பிரயாசித்தான், பொதுவாக பெரும்பாலோனோர் கேட்டிராத பியானோ இசைகளைப் பற்றி, பியானோ இசையமைப்பாளர் பற்றி என் நண்பன் பேசிய போதிலும், சங்க பாடல்கள் மற்றும் ஆழ்ந்த இலக்கியம் பேசிய போதும் கூட அவன் ஆச்சரியப்படவில்லை. “இப்படியெல்லாம் நீ இல்லாம இருந்தா என்னை படிச்சிருக்கவே மாட்ட” என்ற ஒரு அலட்சிய மனோபாவம் தான் அவனிடம் இருந்தது என்று படுகிறது.

நானும் பெரிதாக எதற்காகவும் அலட்டிக்கொள்ளவில்லை. இப்படியான அனுபவங்களுக்கு ஒரு வாராகத் தயாராகத்தான் வந்திருந்தேன். மனதில் படர்ந்த ஆழமான அமைதியுடன், மிரண்டு விடக்கூடிய சூழ்நிலைகளிலும் கொஞ்சம் கூட மிரளாமல் அவனை தொடர்ந்து கவனித்தேன். மேலும் அவனை அவனுடைய புத்தகங்களில் உள்ள கதாபார்த்திரங்களில் தேடிக்கொண்டிருந்தேன் என்று தான் கூறவேண்டும். ஆச்சரியமாக அதை ஒட்டிய ஒரு பேச்சும் வந்தது.

”அந்த புத்தகத்தில், அந்த கதாபாத்திரத்தின் அப்பா கூடை பின்னும் தொழில் செய்யராரே, உங்க அப்பா கூடை பின்னும் தொழில் செய்தாரான்னு கேக்கரான்யா ஒருத்தன், அப்படியே பார்த்தாலும் அந்த கதாபாத்திரம் தான் கூடை பின்றதா நான் எழுதிருக்கேன், இப்படியான ஆட்களை என்னய்யா செய்வது”.

”….. புத்தகம் தானேண்ணா?” எப்படியோ தவறான பெயர் வாயில் வந்துவிட்டது அதுவும் இரண்டு புத்தகங்களின் பெயர்களை ஒன்றினைத்து. நான் மாயபுத்தகம் என்று கூறிக்கொண்டிருந்த புத்தகத்தின் பெயரும், அவன் குறிப்பிட்ட புத்தகத்தின் பெயரும் சற்றே ஒன்றானதால் வாயில் சட்டென விட்டது.

“இல்லை, அந்த புத்தகம் வேறு, அது ….” அவன் அப்படி குறிப்பிட்டது நான் வெகுவாக ரசித்த அந்த மாய புத்தகத்தினை தான், அப்படி ஒரு புத்தகத்தை எனக்கு தெரிந்திருக்க முடியாது என்பது போல் அவன் பேசிவிட்டது எனக்கு வலித்தது. இத்தனை தான், இத்தனை தான் நான் என்னை வெளிக்காட்டிக்கொண்டது.

யோசித்துப்பார்த்தால், ஏன் இப்படி, ஏன் இப்படி என்று பதைபதைப்பதற்கான அனுபவங்கள் கிடைக்கப்படாத வாழ்க்கை தான் என்னுடையது, அதனால் தானோ என்னவோ ஏன் இப்படி, ஏன் இப்படி என ஒவ்வொரு வாசிப்பின் இருதியிலும் பதைபதைப்பதற்கான அனுபவங்கள் நிறைந்த புத்தகங்களை எனக்கு கொடுத்துள்ளான், அவன் நிச்சயம் அசாதாரண குணமுடையவனாகத்தான் இருக்க முடியும், அவனுக்கு தன் கதாபாத்திரங்களுக்கு வலியை மட்டும் தான் கொடுக்கத்தெரியும், அவனை எனக்கு பெரும்பாலும் தெரியும், அவன் வாழ்க்கை, அவன் படிப்பு, அவன் குடும்பம் மற்றும் இன்னபிற, என்னை அவனுடைய வாசகியென சொல்லிக்கொள்ள மிகுந்த பிரயாசைப்பட வேண்டியதாக உள்ளது, அவன் வாசகி என்ற நிலையை நான் அத்தனை எளிதாக அடைந்துவிடவில்லை, வாசகியென சொல்லிக்கொள்ள அவன் என்னென்ன மதிப்பீடுகள் வைத்துள்ளானோ? அல்லது இல்லையோ? ஆனால் நான் வைத்துள்ளேன், ஒருவனின் வாசகியென என்னைக் கூறிக்கொள்ள நான் பல மதிப்பீடுகள் வைத்துள்ளேன், அத்தனை மதிப்பீடுகளையும் பூர்த்திசெய்து கொண்டு தான் அவனின் வாசகியென என்னை சொல்லிக்கொண்டுள்ளேன்.

“பின்னவீனத்துவம் எழுதுவதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் யாரண்ணா சொல்வீர்கள்?” அவன் பதில் கூறவேயில்லை. யாரை மனதில் வைத்துக்கொண்டு நண்பன் கேட்கிறான் என்று எங்கள் மூவருக்குமே தெரிந்திருந்தது.

“ஏண்ணா சினிமாவிற்கு போகவில்லை” சினிமாவிற்கு போன எந்த எழுத்தாளனையும் குறையொன்றும் கூறிவிடவில்லை.

என் நண்பன் சுவாரஸ்யமான எந்த கேள்வியையும் அவனிடம் கேட்டுவிடவில்லை. எனக்கான கவனத்தை அவன் கொடுக்கவில்லை, அல்லது நான் பெற்றுக்கொள்ளவில்லை, ஆம், நான் பெற்றுக்கொள்ளவில்லை என்பது தான் உண்மையாக இருக்க வேண்டும், அவனுடன் தனியாக இருக்கப்பெற்ற பொழுதுகளில் கூட அவனிடம் நான் அவனை எத்தனை படிக்கிறேன் என்று கூறிவிட முடியவில்லை. அது சம்பிரதாயமான சொல்லாடலாகத்தான் இருக்கும் என்று யோசித்தேனோ என்னவோ, எதையுமே கூறிக்கொள்ளவில்லை. காரணம் பிடிபடவேயில்லை. என்னுள் இருந்த பல்வேறு எண்ணங்களை எந்தெந்த வரிசையில், எந்தெந்த முகபாவனையில், எந்தெந்த ஒலி அலைவரிசையில் அவனிடன் பேச வேண்டும் என்று 100 முறைக்கும் மேல் ஒத்திகை பார்த்துக்கொண்டதை நினைத்தால் சிறு பிள்ளைத் தனமாக இருந்தது.

“வரேண்ணா, உடம்பை பார்த்துக்கொங்க”.

“பெங்களூரு போய் சேர்த்த உடன் கட்டாயமா கால் பண்ணி செல்லிடுங்க”.

சம்பிரதாயமான ஆனால் அக்கறையான விடைபெறும் படலம்.

oOo

டலின் பிரம்மாண்டம் என்னை எப்போதும் மலைத்து நின்றுவிடச் செய்கிறது, எனக்கு என்றுமே கடல் சற்று பயம் தான், ஆனாலும் கடற்கரை மீது அளவுகடந்த ஆசை, அரிதாகவே வருவதால் எதையாவது யோசித்துக்கொண்டு பல மணி நேரம் உட்கார்ந்துவிடுவேன். இன்று என்னுள் அவனின் நினைவுகள் மட்டும் தான் நிறைந்திருந்தது. பொதுவாக நிறைவான சந்திப்புதான் என்றாலும் ஏதோ ஒரு நிரடல்.

பெண்ணாக இருப்பதற்கான கடனை எல்லா இடங்களிலும் அடைத்துக்கொண்டே இருக்க வேண்டியிருப்பதை நினைத்தால் எரிச்சலாக இருக்கிறது. ஒரு சாராயக்கடையில். கடற்கரையில், ஒரு உணவகத்தில் எளிதாக கிடைக்கப்பெறும் எழுத்தாளன் மற்றும் வாசகனுக்குறிய நெருக்கத்தை அதனாலான பந்தத்தை ஒரு வாசகியால் பெற்று விடவே முடியாதோ என்று மிரட்சியாக இருக்கிறது. இரவு நேர சாலைகளைப் போல், இரவு நேர தேனீர் கடைகளைப்போல், எழுத்தாளர்களின் நெருக்கமான வாசகர் வட்டம் கூட ஆண்களால் மட்டுமே ஆனதோ? அதுவும் இவனைப்போன்ற ஒரு எழுத்தாளனின் வாசகர் வட்டதிற்குள் ஒரு பெண்ணால் வரவே முடியாதோ என்று ஏக்கமாகவும் இருக்கிறது.

பெண்ணானதால் இப்படி இருக்கலாம், பெண்ணுடல் சார்ந்த அரசியலும் இதில் அடங்கியிருக்கலாம், என்னவோ அதுவும் கூட நான் பெண்ணாய் பிறந்ததற்கு அடைக்கவேண்டிய கடன் தான். எத்தனை பெண் விடுதலை பேசித் திரிந்த போதிலும் ஒரு வெள்ளைக்கார பெண்மணி சுட்டிக்காட்டிய பிறகே தன் மனைவிக்கு சுதந்திரம் கொடுத்த பாரதியின் வழிவந்தவர்கள் தானே இவர்கள் என்று அலட்சியமாக இருக்கிறது. ஒரு எழுத்தாளனின் மேல் வைக்கும் பிரியம் அவன் எழுத்தின் மீது வைப்பது தான் அதை மீறி வசீகரிக்க அவனிடமும் ஒன்றுமில்லை, என்னிடமும் ஒன்றுமில்லை. அவனுடன் அதிகம் பேசவேண்டும், விவாதிக்க வேண்டும், எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான் என் விருப்பமாக இருந்தது, அப்படி நடக்காதது தான் என்னுள் நிரடலாக இருக்கிறது, அவனுடனான ஒரு பயணம், அவனுடனான கடற்கரை, அவனுடனான சில மணித்துளிகள் எனக்கு கிடைக்கப்பெறுமா? அது பெண் உடல் அரசியல் தாண்டி இயல்பானதாக அமையுமா? ஒரு முறை நிச்சயம் முயன்று தான் பார்க்க வேண்டும் என்று தோன்றியது, அது அத்தனை எளிதாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை என்று பட்டது!

கடற்கரையில் அவனுடனான சந்திப்பை சுற்றி பலவற்றையும் யோசித்தவாரே நீண்ட நேரம் உட்கார்த்திருந்தேன், கையில் அவன் கொடுத்த, அப்போது தான் வெளியான ஒரு புத்தகம். நண்பன் கடலில் நீந்திக்கொண்டிருந்தான். இத்தனை தூரம் வந்ததற்காக கடலில் சம்பிரதாயமாக கால் நனைத்தேன், முழங்கால் முட்டியைத் தாண்டி அலைகள் என்னைத் தொடாத தூரத்தில் நின்று கொண்டேன். கடலில் நீந்தி, கடலில் படகு விட்டு, கடலின் உப்பு காற்றிலேயே வாழும் மக்களை கண்டு பொறாமையாக இருந்தது. கடற்கரையிலேயே நின்றுவிடும் துயரத்துடனும், அவன் கொடுத்த புத்தகத்துடனும் கடலை விட்டு நகர்ந்தேன். கையும் மனமும் அந்த புத்தகத்தை பற்றிக்கொண்டது. என்னால் நிச்சயம் அந்த புத்தகத்தைப் படித்து முடித்துவிடாமல் தூங்க முடியப்போவதில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.