[stextbox id=”info” caption=”இணையம் – விழியம் – பொழுதுபோக்கு”]
இந்தியாவில் ஸ்டார் தொலைக்காட்சியை ரூபர்ட் முர்டாக் (Rupert Murdoch) வாங்கிய போது சொன்னார்: “என்னிடம் பத்து வருடத்திற்கான பே-வாட்ச் இருக்கிறது. அதை ஏற்கனவே ஐம்பது மொழிகளில் மொழிபெயர்த்து ஐம்பது நாடுகளில் காலூன்றி இருக்கிறேன். அதே போல் இன்னொரு பத்து மொழிகளில் டப்பிங் செய்தால் இந்தியாவில் ஸ்டார் டிவியை அடித்துக்கொள்ள ஆளே இருக்க முடியாது!” இப்பொழுது நெட்ஃப்ளிக்ஸ் அதே போல் எல்லா நாடுகளுக்கும் காலூன்ற முயல்கிறது. ஐம்பது நாடுகளில் ஐம்பது மில்லியன் சந்தாதாரர்களை வைத்துக் கொண்டிருந்தாலும், இந்தியாவிலும், சீனாவிலும், பிரேசிலிலும் பரவலாக ஊடுருவ விரும்புகிறது. அங்கெல்லாம் இணையத் தொடர்பு எப்படி இருக்கிறது, வலையை செல்பேசியில் பார்க்கிறார்களா – என்பதைக் கண்டுகொள்ளாமல், நெட்ப்ளிக்ஸின் ”மார்க்கோ போலோ” எப்படி படமாக்கப்பட்டது என்பதை விவரிக்கும் கட்டுரையை நியு யார்க் டைம்ஸில் வாசிக்கலாம்.
http://www.nytimes.com/2014/11/30/business/media/how-to-build-an-empire-the-netflix-way-.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”விளையாட்டுப் போட்டிகளுக்கான பெண் செய்தியாளர்”]
’மகளிருக்கு அனுமதி கிடையாது’ என்னும் பலகையைக் கண்டு கொள்ளாமல் செய்தி சேகரிக்க சென்றபோது குண்டுகட்டாக ஜெனிஃபரை தூக்கிக் கொண்டுவந்து வெளியே வீசியிருக்கிறார்கள். முதன்முதலாக சூப்பர் ஸ்டார் ரெஜி ஜாக்ஸனை பேட்டி காணச் சென்றபோது காலுறை தவிர வேறு எதுவும் அணியாததைக் கண்டு கொள்ளாமல் அவரிடம் கேள்வி கேட்டு, அதற்கு முகத்திலறைந்தாற் போல் வந்த கணைகளை படிக்கும்போது ஆண்பாலுக்கு சாதகமாகத்தான் பேஸ்பால் போட்டியாளர்களின் மனம் இருப்பது புலப்படுகிறது. முப்பதாண்டுகள் முன்பு பேஸ்பால் விளையாட்டுகளைப் பற்றி எழுதுவதற்காக நாளிதழில் பெண் நிருபராக ஆன கதையை 1992ல் எழுதியது இப்பொழுது மறு பதிப்பாக வந்திருக்கிறது. இந்த சுயசரிதை பதிவு வெளியான பின் நடந்த சுவாரசியங்களையும் மறுவினைகளையும் தொடர்கதையாக ஜெனிஃபர் ப்ரிக்ஸ் பகிர்கிறார்.
http://thestacks.deadspin.com/my-life-in-the-locker-room-a-female-sportswriter-remem-1658779274
[/stextbox]
[stextbox id=”info” caption=”தாய் மொழி”]
குழந்தைகள் தங்களுடைய தாய்மொழிகளைக் கற்றுக் கொள்வதே இல்லை. அவர்களின் இரத்தத்திலேயே அது ஊறி இருக்கிறது. இது 1960களில் நோம் சாம்ஸ்கி முன்வைத்த சிந்தனையாக்கம். வயது ஆக ஆக, உடல் வளர்வது போல் சொந்த மொழியின் புலமையும் தானியங்கியாக உள்ளூர ஊறுகிறது; இலக்கணம் பிடிபடுகிறது. அந்த சிந்தனை சரியா என்று இந்தக் கட்டுரை கேள்வி எழுப்புகிறது. ஆங்கிலத்திற்கும் ஃப்ரெஞ்சு மொழிக்கும் உள்ள வேற்றுமைகளை அந்தந்த நாட்டின் பாப்பாக்கள் அறிந்து கொள்வது ஒரு புறம் இருக்கட்டும். ஃபிரென்ச்சுக்குள்ளேயே எந்த இரண்டு வினைச்சொற்களும் சொல்லி வைத்தது போல் ஒரே மாதிரி அமைவதில்லை. இவ்வளவு கடினமான மொழிகளை கேட்பதினாலும் புழக்கத்தினாலும் மட்டுமே தெளிவாகவும் சரளமாகவும் சிறார்கள் பேசத் துவங்குகிறார்கள் என்கிறார்கள்.
http://aeon.co/magazine/culture/there-is-no-language-instinct/
[/stextbox]
[stextbox id=”info” caption=”ஆணும் பெண்ணும்”]
துருக்கியை இஸ்லாமிசத்தை வலியுறுத்தும் கட்சி ஆள்கிறது, துருக்கியின் முன்னாள் ‘செகுலரிய’ முலாம் அழிந்து துருக்கி பல மேற்காசிய நாடுகளைப் போல மனித உரிமைகளும், சகிப்புத் தன்மையும் அற்ற நிலப்பரப்பாக மாறி வருகிறது என்பது இந்தியாவில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரிந்த இஸ்லாமியக் குழுக்கள் பிறருக்கு இது தெரியாமல் இருக்கத் தேவையான புகை மூட்டப் பிரச்சாரங்கள் செய்யும் திறமை உள்ளவர்கள் என்பதாவது தெரிந்திருக்கலாம். பொதுவாக இந்தியர்கள் உலகில் தம் ஜனநாயக நாட்டுக்கு என்னவெல்லாம் அச்சுறுத்தும் வளர்ச்சி இருந்தாலும் கவலைப்படாமல் தம் போக்கில் தம் வழக்கமான பகல் கனவுகளில் ஊறியபடி, தம் அன்றாடப் பிரச்சினைகளை மட்டும் தீர்க்க எல்லா வழிகளையும் தேடிப் பெறுவதில் வாழ்வைக் கழிக்கிறார்கள். ஆனால் துருக்கியின் பிரதமருக்கு இப்படி வாழ்க்கைப் பிரச்சினைகள் எல்லாம் முக்கியமல்ல. அவருக்குத் தலையாய பிரச்சினை என்னவென்றால் பெண்கள் துருக்கியிலும், இதர இஸ்லாமிய நாடுகளிலும் சம உரிமை கேட்கிறார்களே என்ற பெரும் எரிச்சல். பெண்களுக்கு இஸ்லாமிய சமூகத்தில் சம உரிமையா என்று பொங்கி எழுகிறார் பாருங்கள்! ஆண்களை விடக் கீழானவர்களே பெண்கள், பெண்கள் ஒரு போதும் ஆண்களுக்குச் சமமாக ஆக முடியாது என்று திட்டவட்டமாகப் பன்னாட்டரங்கில் அறிவித்திருக்கிறார்.
தாயாக ஆவது இஸ்லாமில் மிக அவசியம், அதை எதிர்க்கும் பெண்ணியவாதிகள் அச்சுறுத்தும் வளர்ச்சி என்றெல்லாம் பேசி இருக்கிறார். காலிஃபேட் துருக்கியின் எல்லைகளில் வளர்ந்து உள்புறம் நோக்கி வளரத்துவங்கி இருக்கிறதில்லையா, இன்னும் கூடத் தீவிரமாகப் பேசுவார். கொஞ்சம் பொறுத்தால் தெரியும்.
http://www.thedailybeast.com/cheats/2014/11/25/turkey-s-erdogan-says-women-not-equal.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”நேரம் போவதே தெரியாமல் போகும் வித்தை”]
எண்களை எப்படிப் பார்க்கிறோம்? ’க’ என்றால் தமிழில் ஒன்று; ரோமன் எழுத்துக்களில் ஆங்கில ஐ (I) போட்டால் ஒன்று; எல்லோருக்கும் தெரிந்த எண் ”1”. அதே எண் 1, 10 என்னும் எண்ணில் இருந்தால் பத்தைக் குறிக்கும். ரோமன் எழுத்தில் X (எக்ஸ்). நேரத்தை எப்படி கணக்கிடுகிறோம்? ஒரு வினாடி; இரண்டு நிமிடம்; மூன்று மணி நேரம். உடலுக்கு இந்த கணக்கெல்லாம் தெரிவதில்லை. மூளைக்குத்தான் இந்த கடிகார நேரம். அதே போல் இசையும் வேறொரு உலகத்தில் இயங்குகிறதா? நேரம் உணர்தலை இயல்பாகவே அகநிலையாக -நம் வாழ்வில் ஒரு அங்கம் என்பதை இசை நிரூபிக்கிறது. நம் மூளையில் இசையின் மாய வேலை எப்படி நடக்கிறது என்பதைப் பற்றி இசையமைப்பாளர் ஜோனதன் பெர்கர் விவரிக்கிறார்.
http://nautil.us/issue/9/time/how-music-hijacks-our-perception-of-time
[/stextbox]