பல வருடங்களுக்கு முன் குடும்பத்தோடு நாங்கள் எங்கோ பயணித்திருந்தபோது சாப்பாட்டிற்காக வழியில் பஸ் ஏதோ ஒரு சிற்றூரில் நின்றது. அப்போது ஒரு பெண்மணி உள்ளூர் தக்காளி, மலிவாக விற்கிறேன், வாங்கிக்கொள்ளுங்கள் என்று பஸ்ஸின் ஜன்னல் அருகே வந்து விற்றுக்கொண்டிருந்தார். நன்கு பழுத்த பார்க்க பளிச்சென்று இருந்த தக்காளி அரை விலைக்கு கிடைத்ததால், நாங்களும் பஸ்ஸில் இருந்த பல பயணிகளும் கிலோ கணக்கில் உற்சாகமாக வாங்கிக்கொண்டோம். ஐந்தே நிமிடத்தில் கூடை தக்காளியையும் விற்றுவிட்டு நடையை காட்டினார் அந்தப்பெண்மணி. வீட்டுக்கு வந்து அந்த தக்காளிகளை நறுக்கியபோது ஒவ்வொரு தக்காளிக்குள்ளும் ஒரு ஊசி மூலம் நிறைய தண்ணீர் பம்ப் செய்து எடையை ஏற்றியிருந்தது தெரிய வந்தது! இந்த மாதிரியான சில்லறை ஏமாற்றுகளில் இருந்து பங்கு சந்தையில் பல கோடி ரூபாய் அளவில் ஹர்ஷத் மேத்தா போன்றவர்கள் செய்த ஏமாற்றுத்தனங்களை, தாங்கள் பாதிக்கப்படாத வரை, பலர் “சாமர்த்தியம்” என்று சற்றே மகிழ்வுடன் வர்ணிப்பதை பார்த்திருப்பீர்கள்.
சென்ற இதழில் திரும்பத்திரும்ப ஊடாட வேண்டிய அவசியம் இல்லாத நிலையில், ஒரு தனி நபரின் இடத்தில் இருந்து பார்த்தால் எதிராளியை முடிந்த அளவு பின்னுக்குத்தள்ளி ஏமாற்றிவிட்டு நமக்கு சாதகமாக எவ்வளவு லாபம் சம்பாதிக்க முடிகிறதோ அவ்வளவு சம்பாதித்துக்கொண்டு போய் விடுவதுதான் சரியான மூலோபாயமாக (Strategy) அமைகிறது என்று கைதிகளின் திண்டாட்டம் என்ற சிந்தனைச்சோதனை வழியே பார்த்தோம். எங்களுக்கு தக்காளி விற்ற பெண் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் அந்த ஏமாற்று வேலையை செய்ததால், மறுநாள் அதே வாடிக்கையாளர்கள் தன்னிடம் திரும்ப வியாபாரம் செய்ய விரும்ப மாட்டார்களே என்ற கவலை அவருக்கு இல்லாமல் போகலாம். எனவே அவர் இந்த உத்தியை உபயோகித்து சாமர்த்தியசாலி பட்டம் பெற முயற்சிக்கிறார்.
அதுவே நீங்கள் ஒரு ஊரில் காய்கறிக்கடை வைத்து பல வருடங்கள் வியாபாரம் செய்ய வேண்டும் என்றால், இந்த தந்திரம் பலிக்காது. ஆனால் அப்போது வியாபாரியான நீங்கள் ஏமாற்றுவதற்கு பதிலாக உங்களிடம் கறிகாய் வாங்க வருபவர் உங்களை ஏமாற்ற முயலலாம். உதாரணமாக பார்ப்பதற்கு பெரிய மனிதர் போல உடை அணிந்த ஒருவர் நிறைய சாமான்களை உங்கள் கடையில் வாங்கிவிட்டு இதோ டிரைவரிடம் பணம் கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு கம்பி நீட்டி விடலாம். அப்படியானால் எல்லோரையும் எல்லோரும் முடிந்த அளவு ஏமாற்றிக்கொண்டே இருக்க முயல்வதுதான் புத்திசாலித்தனமா? இப்படி ஏமாற்ற முயன்றால்,ஒரு சமூகமும் அதன் பொருளாதார அமைப்புகளும் எப்படி நல்லவிதமாக இயங்கி வளர முடியும்? எல்லோரையும் நம்பி அன்போடும் பண்போடும் வாழ நினைப்பவர்கள் எல்லோரும் ஏமாளிகளா? ஆமாம் என்றால், காலகாலமாய் பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும், எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும், மதங்களும் போதிப்பது எல்லாம் தவறா?
தொடர்முறை கைதிகளின் திண்டாட்டம்
இதைப்பற்றி யோசித்த மிச்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் ஆக்ஸில்ராட், நீதி, நியாயம் என்றெல்லாம் சமூகம் நமக்கு போதிப்பதை ஓரங்கட்டிவிட்டு அறிவியல் பூர்வமாக வாழ்வில் நாம் எப்படி நடந்து கொள்வது லாபகரமானது என்று ஆய்ந்து பார்க்க முடிவெடுத்தார். இந்த ஆய்வுக்காக 1980 வாக்கில் அவர் ஒரு போட்டியை அறிவித்தார். போட்டி அதே கைதிகளின் திண்டாட்டம் சிந்தனைச்சோதனையின் அடிப்படையில் அமைந்ததுதான். சென்ற பகுதியில் நாம் பார்த்த தங்கப்பந்துகள் தொலைக்காட்சி நிகழ்ச்சியை போலவே, போட்டியில் பங்கேற்கும் இருவரும் “பிரி” அல்லது “பறி” என்ற இரண்டில் ஒரு தேர்வை செய்யவேண்டும். சென்ற இதழில் நமக்கு பரிச்சயமான கண்ணாயிரமும் மூக்காயிரமும் இப்போதும் விளையாடுவதாக வைத்துக்கொள்வோம். நமக்கு முன்பே தெரிந்தது போல் இருவரும் செய்யும் தேர்வைப்பொறுத்து இந்த ஊடாடல் படத்தில் காட்டியுள்ள நான்கு கட்டங்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் முடியும்.
இந்தப்போட்டியின் விதிகளின்படி இருவரும் ஒத்துழைக்க முடிவு செய்து “பிரி” தேர்வை செய்திருந்தால், இருவருக்கும் தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படும்.
ஒருவர் “பிரி” தேர்வை செய்யும்போது அடுத்தவர் ஏமாற்ற முனைந்து “பறி” தேர்வை செய்தால், ஏமாற்றுபவருக்கு ஐந்து புள்ளிகள் அளிக்கப்படும். ஆனால் ஏமாளிக்கு புள்ளிகள் ஏதும் கிடைக்காது.
இருவருமே அடுத்தவரை ஏமாற்ற முடிவு செய்து “பறி” தேர்வை செய்தால், ஒவ்வொருவருக்கும் தலா ஒரு புள்ளி மட்டும் வழங்கப்படும்.
இது வரை ஆட்டத்தின் அமைப்பு தங்கப்பந்துகள் போலத்தான் என்றாலும், ஒரே ஒரு தேர்வோடு ஆட்டத்தை நிறுத்தி விடாமல், ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு எதிராளியுடனும் இருநூறு முறை திரும்பத்திரும்ப ஆட்டத்தில் பங்கேற்று விளையாட வேண்டும். திரும்பத்திரும்ப என்ற சொற்றொடரை தொடர்முறை (iterative) அல்லது தொடற்தடவை என்று சொல்லலாம். பலமுறை அதே எதிராளியுடன் விளையாடுவதால், அவர் நம்பகமானவரா இல்லையா என்பதை எடை போட்டு புள்ளிகளை பிரித்துக்கொள்வதா அல்லது பறித்துக்கொள்வதா என்று சுற்றுக்குச்சுற்று வெவ்வேறு முடிவுகள் எடுத்து நம்மால் விளையாட முடியும். நம்மோடு நல்லவிதமாக ஒத்துழைக்காத ஒருவரை ஞாபகம் வைத்துக்கொண்டு நாமும் அடுத்த சுற்றுகளில் பதிலுக்கு நிராகரிக்கலாம். நிஜ வாழ்வில் தண்ணீரை தக்காளி விலைக்கு நம் தலையில் கட்டியபெண்ணிடம் திரும்ப காய்கறி வாங்க நாம் போகாதிருப்பதற்கு அல்லது போலீஸிடம் பிடித்துக்கொடுப்பதற்கு இது சமம்.
அளிக்கப்படும் புள்ளிகள் (Reward) ஒருவர் மட்டும் ஏமாற்றும்போது ஏமாற்றுபவருக்கு மிக அதிகமாகவும், இருவரும் ஒத்துழைக்கும்போது கொஞ்சம் கம்மியாகவும், இருவரும் ஏமாற்றும்போது இன்னும் குறைந்தும், ஒருவர் மட்டும் ஏமாற்றும்போது நம்புபவருக்கு இருப்பத்திலேயே குறைவாகவும் இருக்க வேண்டியது முக்கியம். போட்டியின் குறிக்கோள் முடிந்த அளவு அதிகபட்ச புள்ளிகளை சேர்ப்பதுதான் என்பதால், இந்த ஏற்றதாழ்வுகளுடன் புள்ளிகள் அளிக்கப்பட்டால்தான் தனிச்சுற்றுகளில் ஏமாற்றுவது நிறைய லாபத்தை ஈட்டிக்கொடுக்கும் என்றாலும், எதிராளியை ஏமாற்றாமல் நம்பி ஒத்துழைக்க முயல்வது சரியான மூலோபாயமா (strategy) என்பதை சரியாக அலசி ஆய்ந்து பார்க்க முடியும்.
இந்தப்போட்டிக்கு நிச்சயம் வெற்றி பெரும் என்று தாங்கள் நம்பும் ஒரு சிறப்பான உத்தியை அனுப்பி வைக்குமாறு உலகெங்கிலும் பல துறைகளில் பணி புரிந்து வரும் நிபுணர்களை பேராசிரியர் ஆக்ஸில்ராட் கேட்டுக்கொண்டார். அப்படி வந்து சேர்ந்த 14 மூலோபாயங்களையும் கணினி நிரலிகளாக்கி ஒவ்வொரு நிரலியையும் மற்ற 13 நிரலிகளுடன் தலா 200 முறை ஊடாட விட்டார். யோசித்தால் இது 14 பேர் கொண்ட ஒரு சமூகத்தில் ஒவ்வொருவரும் ஊரில் உள்ள மற்ற 13 பேர்களுடன் தலைக்கு 200 முறை ஊடாடுவதற்கு (அல்லது வியாபாரம் நடத்துவதற்கு) ஈடாகும்.
போட்டிக்கு பலவிதமான மூலோபாயங்கள் வந்து சேர்ந்தன. உதாரணமாக
- எப்போதும் எதிராளியை ஏமாற்று (அதாவது எப்போதுமே “பறி” தேர்வு).
- எப்போதும் எதிராளியை நம்பு (எப்போதுமே “பிரி” தேர்வு).
- ஒரு முறை “பிரி”, மறு முறை “பறி” என்று மாற்றிக்கொண்டே இருத்தல்.
- முதலில் “பறி” தேர்வு மட்டும். நூறு புள்ளிகள் சேர்ந்தபின் “பிரி” தேர்வு. (நிறைய சம்பாதித்த பின் சற்று பரோபகாரியாய் மாறி தானம் வழங்குவது போல)
- முதல் ஐம்பது முறை எதிராளி என்ன செய்கிறான் என்று புள்ளி விவரம் சேகரித்து, அதில் “பிரி”யோ “பறி”யோ எது நிறைய இருக்கிறதோ, அதை செய்தல்.
நீங்கள் இந்தப்போட்டிக்கு உங்களது உத்தி என்று ஒன்றை அனுப்ப வேண்டுமெனில், அது என்னவாக இருக்கும் என்று சற்றே யோசித்துப்பாருங்கள்.
ஒவ்வொரு எதிராளியுடனும் 200 முறை ஆட்டத்தை ஆடுவதால், பல விதங்களில் நாம் லாபநஷ்ட கணக்கு போட்டுப்பார்த்து மூலோபாயங்களை உருவாக்க முடியும். இதனாலேயே போட்டியில் பங்கேற்ற பல கணித, பொருளாதார, சமூகவியல் விற்பன்னர்கள் மிகவும் சிக்கலான பல உத்திகளை பரிந்துரைத்திருந்தனர். இறுதியில் இந்தப்போட்டியில் வெற்றிபெற்ற மூலோபாயம் எது தெரியுமோ? ஆஸ்த்ரியாவைச்சேர்ந்த கணிதப்பேராசிரியர் ஆனட்டோல் ராபொபோர்ட் அனுப்பி இருந்த “அடிக்கு பதிலடி” என்ற ஒரு எளிய மூலோபாயம்தான். இதன்படி ஆட்டத்தில் இறங்கும் நிரலி முதல் சுற்றில் எந்த ஒரு எதிராளியையும் நம்பி ஒத்துழைக்க முனைந்து “பிரி” தேர்வையே செய்யும். எதிராளியும் அதே “பிரி” தேர்வையே செய்தால், அடுத்த சுற்றிலும் “பிரி” தேர்வுதான். இது தொடரத்தொடர இரண்டு பக்கமும் மூன்று மூன்று புள்ளிகளாக ஒவ்வொரு சுற்றிலும் பெற்றுக்கொண்டு போகும்.
முதல் சுற்றில் ராபொபோர்ட் நிரலி ஒத்துழைக்க முனைந்து “பிரி” தேர்வை செய்யும்போது எதிராளி ஏமாற்ற முனைந்து “பறி” தேர்வை செய்தால், அடுத்த சுற்றில், ராபொபோர்ட் நிரலி ஒத்துழைக்க மறுத்து “பறி” தேர்வை செய்யும். இந்த சுற்றில் எதிராளி நல்லவனாகி “பிரி” தேர்வு செய்தால், ராபொபோர்ட் நிரலி எதிராளியை மன்னித்து அடுத்த சுற்றில் “பிரி” தேர்வை நாடும். அதாவது முதல் முறை தொடர்பு கொண்டு ஊடாடும்போது எதிராளியை நம்புவது, அதன் பின் முந்தைய சுற்றில் எதிராளி என்ன செய்தானோ அதையே அடுத்த சுற்றில் திரும்பச்செய்வது என்பதுதான் இந்த மூலோபாயம்.
நிஜ வாழ்வில் முதல் முறை ஒருவரை சந்திக்கும்போது அவர் நல்லவராக இருப்பார் என்று நம்பி அவரோடு ஒத்துழைத்து ஊடாடுவதும், அப்போது அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப்பொறுத்து அடுத்த முறை அவரை அதேபோல் நாம் நடத்துவதும் இந்த உத்திக்கு இணை. ஒருவர் நம்மை ஏமாற்ற முயன்றால் அவரை திருப்பி அடித்தாலும், அவரை ஒழிக்காமல் விடமாட்டேன் என்று ஆத்திரப்படாமல், அவர் திருந்தி ஒத்துழைக்க ஆரம்பித்தால், பழைய சரித்திரத்தை அறவே மறந்து திரும்பவும் அவரை நல்லபடியாக நடத்துவதும் இந்த மூலோபாயத்தின் குறிப்பிடத்தக்க குணாதிசயங்கள்.
இந்த உத்தியின் நடத்தையை புரிந்து கொள்வது எளிது என்பதால், இதை விட மிகவும் சிக்கலான மூலோபாயங்கள் சில சுற்றுகளில் இதனை புரிந்து கொண்டு ஒத்துழைக்க ஆரம்பித்து விடுகின்றன. இரண்டு ஆட்டக்காரர்களும் இதே உத்தியை உபயோகித்தாலும் இருவருக்கும் நல்ல பலன் கிடைக்கிறது. எதிராளி எவ்வளவு புள்ளிகள் சேர்த்திருக்கிறான், முந்தைய சுற்றுகளில் எத்தனை முறை நம்மை ஏமாற்றினான் என்பதைப்பற்றி எல்லாம் இந்த உத்தி கவலைப்படுவதில்லை. இது பொறாமை, பேராசை, வன்மம் போன்ற குணங்கள் இல்லாமல் விளையாட்டில் ஈடுபடுவதற்குச்சமம். ஆனால் இந்த உத்தி தான் ஏமாற்றப்பட்டால், உடனே திருப்பி அடிக்கவும் தவறுவதில்லை. எனவே சமர்ப்பிக்கப்பட 14 உத்திகளையும் எதிரெதிராக 200 முறை விளையாட விட்டபோது கடைசியில் இந்த “அடிக்கு பதிலடி” (Tit for Tat) மூலோபாயம்தான் மிக அதிக புள்ளிகள் பெற்று வென்றது. எல்லோரையும் எப்போதும் ஏமாற்றுவேன் போன்ற உத்திகள் மிகக்குறைந்த புள்ளிகளே பெற்று தரவரிசையில் (Ranking) மிகவும் கீழே போய்ச்சேர்ந்தன.
இந்த முடிவுகளை அறிவித்து சிலவருடங்கள் ஆனபின் பேராசிரியர் ஆக்ஸில்ராட் போட்டியை திரும்ப நடத்தினார். முந்தைய வருடப்போட்டியில் தங்கள் உத்தி எப்படி செயல்பட்டது, எங்கே உதை வாங்கியது என்று நன்கு ஆராய்ந்து புரிந்துகொண்டு பலர் இன்னும் நுட்பமான முறைகளில் எதிராளியை ஏமாற்றி புள்ளிகள் சம்பாதிக்க முனைந்து புதிய பல மூலோபாயங்களை சமர்ப்பித்தனர். இந்த முறை 30 உத்திகள் வந்திருந்தன. எனினும், இறுதியில் வெற்றி பெற்றதேன்னவோ அதே “அடிக்கு பதிலடி” மூலோபாயம்தான்!
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் 30 உத்திகளில் 29 ஏமாற்று உத்திகளாகவும், ஒன்று மட்டும் அடிக்கு பதிலடி உத்தியாகவும் இருக்கும் பட்சத்தில், இந்த உத்தி வெற்றி பெற முடியாமல் போகலாம். ஆனால் பலமுறை பல விதங்களில் செய்யப்பட்ட ஆய்வுகள், முடிந்த அளவு ஏமாற்றமுயலும் மூலோபாயங்கள் ஒன்றை ஒன்று நசுக்கி விட, அடிக்கு பதிலடி போன்ற எதிராளியை நம்ப முயற்சிக்கும் உத்திகள், ஆட்டம் பல சுற்றுகள் நடக்கும்போது ஒன்றுக்கொன்று உதவிக்கொண்டு, இறுதியில் வெற்றிக்கொடி நாட்டி தரவரிசையில் உயரத்தில் இடம் பிடிப்பதை நிரூபித்திருக்கின்றன.
இந்த வெற்றிகளை மேலும் ஆராய்ந்து, இந்த உத்தியை இன்னும் கூட சிறக்கச்செய்ய முடியுமா என்று பார்த்திருக்கிறார்கள். உதாரணமாக, இதே உத்தியை பயன் படுத்தும் கண்ணாயிரமும், மூக்காயிரமும் ஊடாடும்போது, ஒரு முறை கண்ணாயிரம் மூக்காயிரத்தை ஏமாற்றும்போது மூக்காயிரம் கண்ணாயிரத்தை நம்புவதாக ஒரு சுற்று ஆட்டம் நடப்பதாகக்கொள்வோம். அடுத்த சுற்றில் இருவரும் தங்கள் நிலையை மாற்றிக்கொள்வர். ஆனால் அதற்கடுத்த சுற்றில் திரும்பவும் பழைய நிலைக்கே தாவுவார்கள் என்பது புரிகிறதல்லவா? இந்த நிலையை அவர்கள் அடையும்போது இதிலிருந்து வெளிவரவே முடியாமல் மாட்டிக்கொள்ள நேரும். இத்தகைய நிலையிலிருந்து மீள்வதற்காக, “இரண்டாவது அடிக்கு பதிலடி” (அதாவது, ஒருமுறை ஏமாற்றப்பட்டாலும், எதிராளிக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்துப்பார்ப்பது என்ற கொள்கை) போன்ற உத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதையும் உடனே தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஏமாற்று மூலோபாயங்கள் முயலும் என்பதால், எப்போதும் “இரண்டாவது அடிக்கு பதிலடி” என்பதாக இல்லாமல், பொதுவாக “அடிக்கு பதிலடி” உத்தி, அவ்வப்போது எதிர்பாராத சமயங்களில் “இரண்டாவது அடிக்கு பதிலடி” என்று கொஞ்சமாக விட்டுக்கொடுக்கும் கொள்கைகளும் ஆய்வில் உண்டு.
மான் வேட்டை
இரண்டு வேட்டைக்காரர்கள் வேட்டையாட போகும்போது, இருவரும் சேர்ந்து செயல்பட்டால், பெரிய விலங்கான ஒரு மானைத்துரத்திப்பிடிக்கலாம். ஆனால் அவர்கள் தனித்தனியே செயல்பட்டால், மான்களை பிடிக்க முடியாது. அதிகபட்சம் முயல் போன்ற சிறு விலங்குகளை மட்டுமே பிடிக்க முடியும். மானைப்பிடித்தால் முயலைப்பிடிப்பதைவிட லாபம் அதிகம். ஆனால் உடன்வரும் கூட்டாளி நன்றாக வேலை செய்யும் ஒரு வேட்டைக்காரர் என்று உறுதியாக தெரியாத பட்சத்தில், அவரோடு சேர்ந்து உழைத்து இறுதியில் மானைப்பிடிக்காமல் போவதற்கு, தனியாகப்போய் முயல்களைத்துரத்துவது வெறும் கையோடு வீட்டுக்குப்போகும் சாத்தியக்கூற்றை குறைக்கும் புத்திசாலித்தனம். இல்லையா? இதுவும் கைதிகளின் திண்டாட்டத்தின் ஒரு மாறுபாடுதான். வியாபார உலகில் இன்டெல் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் சேர்ந்து இயங்கி நிகழ்த்திய விண்டெல் புரட்சியை (Wintel Revolution) இருவரும் ஒத்துழைத்து பெரிய வேட்டையாடி எக்கச்சக்க லாபம் சம்பாதித்தற்கு இணையாகச்சொல்லலாம். ஒத்துழைக்காமல் தனித்தனியே முயன்றிருந்தால் முயல்களைத்தான் பிடித்திருக்கமுடியும்.
மொத்தத்தில் இப்படிப்பட்ட பல ஆய்வுகள் மற்றும் சிந்தனைச்சோதனைகள் வழியே தெரிவது என்னவென்றால், தனித்தனி உடாடல்களில் எதிராளியை ஏமாற்றுவது அதிக லாபம் சம்பாதித்துக்கொடுப்பதைப்போல் தோன்றினாலும், பல மனிதர்கள் சேர்ந்து வாழும் சமூகத்திலோ, பல நிறுவனங்கள் இயங்கும் பெரிய பொருளாதார அமைப்புகளிலோ, பல்வேறு உயிரினங்கள் பரிணாம வளர்ச்சிக்காக போட்டியிடும் சூழ்நிலைகளிலோ கூட, ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து செயல்படுவது தனியொருவருக்கு மட்டுமின்றி அந்த மொத்த அமைப்புக்கும் நிறைய லாபத்தை ஈட்டித்தருகிறது என்பதுதான். எனவே இந்த விதிகளும், ஆய்வின் முடிவுகளும் காசு பணம் சம்பந்தப்பட்ட பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி பல்வேறு துறைகள், அமைப்புகள், சூழ்நிலைகள், உயிரினங்கள் என ஊடாடல் தேவைப்படும் நிலமைகள் எல்லாவற்றிக்கும் பொருந்தும்.
தலைகீழ் பாடம்
வணிகவியலுக்கும் பொருளாதாரத்திற்கும் நிறைய சம்பந்தம் உண்டு என்பதால், பல பகுதிகளைக்கொண்ட இந்தக்கட்டுரைத்தொடருக்குள் போன இதழில் வந்த பகுதியும் இந்தப்பகுதியும் மட்டும் ஒரு மினி தொடர் என்று சொல்லலாம். எனவேபோன பகுதியின் ஆரம்பத்திற்கு ஜோடியாய், இந்த பகுதியை இன்னொரு பேராசிரியர்-மாணவர்கள் கதையைச்சொல்லி முடிக்கலாம். இரண்டு வருடங்களுக்கு முன் அமெரிக்காவிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் நிஜமாகவே நடந்த கதை இது. கணினியியலில் ஒரு வகுப்பு நடத்திய பேராசிரியர் பீட்டர் ப்ரோலிக் தன் வகுப்பிலுள்ள மாணவர்களுக்கு ஒரு தேர்வில் மதிப்பெண்களை ஒரு ஒப்பீட்டு முறைப்படி வழங்க முடிவு செய்தார். அதன்படி தேர்வை வகுப்பிலேயே மிகச்சிறப்பாக எழுதும் ஒருவருக்கு நூறு மதிப்பெண்கள் (அதாவது அமெரிக்க வழக்கப்படி A கிரேடு). மற்ற அனைவரது பதில்களும் அந்த நூறு மதிப்பெண் பெற்ற விடைத்தாளுடன் ஒப்பிடப்பட்டு பதில்கள் எவ்வளவு நன்றாக இருக்கின்றனவோ அவ்வளவு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
மாணவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமோ? திட்டமிட்டு அத்தனை பேரும் ஒன்றாக தேர்வை புறக்கணித்தார்கள்! தேர்வு நடக்க வேண்டிய அன்று பீட்டர் ப்ரோலிக் கேள்வித்தாளுடன் வகுப்பினுள் காத்திருக்க, தேர்வெழுதவேண்டிய மாணவர்கள் அனைவரும் வகுப்புக்கு வெளியே எந்த ஒரு மாணவரும் உள்ளே போய்விடாமல் பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தனர். யாராவது ஒருவர் உள்ளே சென்று தேர்வை எழுதி இருந்தால், மற்றவர்களும் தேர்வை எழுத வேண்டி இருந்திருக்கும். ஆனால் அன்று தாங்களாகவே கிழித்த கோட்டை எந்த மாணவரும் தாண்டவில்லை. எனவே தேர்வின் மிகச்சிறந்த விடைத்தாள் என்று எதுவுமே இல்லாததாலும், எல்லா மாணவர்களின் “விடைகளும்” அதே அளவுக்கு “சிறப்பாக” இருந்ததாலும், ஒப்பந்தப்படி பேராசிரியர் வகுப்பில் இருந்த அத்தனை பேருக்கும் நூறு மதிப்பெண்கள் வழங்கினார்! இது எப்படி இருக்கு?
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் புத்திசாலி மாணவர்களுக்கும் அவர்களிடையே மதிப்பெண்களுக்கு நிலவும் கடும் போட்டிக்கும் பேர் போனதென்பதால், மாணவர்கள் இவ்வளவு ஒற்றுமையாக செயல்படுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று வியந்திருக்கிறார் அந்தப்பேராசிரியர்! அடுத்த செமெஸ்டெரில் இருந்து இந்த மாதிரி கிரேடு கொடுக்கும் முறையை நிறுத்தி விட்டார். ஆகவே அடுத்த சுற்று ஆட்டத்தில் மாணவர்கள் இதே உத்தியில் மதிப்பெண்களை அள்ளிக்கொண்டு போக முடியாது. ஆனால் அந்த முதல் சுற்றில் மாணவர்களின் சாதூர்யத்தை பாராட்டுவதா, தன்னை முட்டாள் ஆக்கி விட்டார்கள் என்றெல்லாம் புலம்பி சண்டை போட்டுக்கொண்டிருக்காமல், தான் கொடுத்த வாக்குப்படி நடந்துகொண்ட பேராசிரியரை பாராட்டுவதா, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று இதை ஒத்துழைப்புக்கு எடுத்துக்காட்டாய் கருதுவதா அல்லது ஒரு சமூகமே சேர்ந்து ஒருவரை ஏமாற்ற முடியும் என்று இது நிரூபிப்பதாக எடுத்துக்கொள்வதா என்று பலரும் இன்னும் யோசித்துக்கொண்டு இருப்பதாய் கேள்வி!
(தொடரும்)