அழுகையின் விதிமுறைகள்
பிறந்தவுடன்
சிசுக்கள்
அழுதே ஆகவேண்டும்.
அல்லது
அழுகையை
அவைகளிடமிருந்து
எப்படியாவது
உருவி எடுத்துவிட வேண்டும்.
மேலும்
எப்ப வேண்டுமானாலும் அழலாம்
குழந்தைகள்.
நல்லதொரு அழுகைக்குப்பின்
உறங்கவும் கூடும்
என்பதால்
குழந்தைகளுக்கு
அழுகை
எப்பவும் நல்லது.
பெண்கள் அழ
விதிமுறைகள் ஏதுமில்லை.
வீட்டில், வேலையிடத்தில்
கூட்டத்தில்
தனியறையில்
எப்பவும்
எப்படியும்
அழலாம்.
பெற்றோர்
நண்பர்
மனைவி
குழந்தைகள்
சடலம் முன்
ஒருவேளை அழலாம். தவிர
அழவே கூடாது ஆண்கள்
அதுவும் பொதுவில்.
வேலைகள்
அதிகமில்லாத நாளில்
வீட்டில் யாருமில்லாமல் இருக்கையில்
எப்பவாவது நேரம் கிடைக்கையில்
சாவகாசமாய் அழலாம்.
ஆனால்
ஏதோவொரு பொந்துக்குள்
அடைந்து கொண்டு
அழுகை
வர மறுக்கும்.
பின்னொரு பொழுதில்
எதிர்பாராமல்
நெடுநாளைய நண்பன் போல
வரவேற்பறையில் வந்து
அமர்ந்திருக்கும்.
அழாத அழுகைகள்
ஒருபோதும்
விட்டு விலகுவதில்லை
நம்மை கைவிடுவதுமில்லை.
அவை
இருட்டுவதற்காக
நம் படுக்கையறையில்
காத்திருக்கின்றன.
வெளியேறுகையில்
தலைக்குமேல்
நிரந்தரமாக கவிந்துகொண்டு
மேகத்தைப்போல தொடர்கின்றன.
ஆகவே
அழுகையை
உடனே அழுதுவிடுவது நல்லது.
அந்த பழைய நடிகரைப்போல
முகத்தை
திருப்பிக்கொள்ளலாம்
கைகளால் மறைக்கலாம்
அல்லது
அழுவது தெரியாமலிருக்க
குளியலறையில் நுழைந்து
தாழிட்டுகொள்ளலாம்.
அழுதபின்
கண்களை துடைக்க வேண்டியதில்லை
மேலும்
குளித்துக்கொண்டே அழுதால்
யாருக்கும் தெரியாது.
சில சமயம்
நமக்குமே கூட.
– வேணுகோபால் தயாநிதி
மலைகள் வரையப்படாத குழந்தைகள் ஓவியத்தில்
உதிக்க இடம் இல்லாமல்
அலைந்து கொண்டிருந்தான் சூரியன்
வெட்டப்பட்ட மரங்களின் பின்னே
சிதைக்கப்பட்ட மலையும்
அணிவகுத்துச் சென்றுவிட்டபின்
ஓவியத்தில் மட்டும்
சிறிதுகாலம் நினைவு கூரப்பட்ட அந்த மலை
இப்போது குழந்தைகளின் கற்பனையிலிருந்தும்
கரைந்து விட்டிருந்தது
அனாதரவாய் அலைந்து கொண்டிருந்த சூரியன்
இப்போது
கட்டடங்களின் பின்னிருந்து
உதிக்கப்பழகியிருந்தான்
மலையும் மரங்களுமில்லாப் பாழ்வெளியில்
பொழிந்த பச்சைவெயிலைக் குடித்து
பசியாற ஆரம்பித்தன உயிர்கள்
திசைக்கொன்றாய் நெளிய ஆரம்பித்திருந்தன நட்சத்திரங்கள்
தீப்பிடித்திருந்த இன்னொரு மலையில்..
– அமைதிச்சாரல்