1986லிருந்து 89 வரை பூடானில் வசித்தோம். மகன்கள் இருவரும் வீட்டுக்கு அருகில் இருந்த பள்ளிக்கு பூடான் உடையான பொக்கு அணிந்து செல்வார்கள். காலை வேலை அவசரத்தில் நீள அங்கியான அந்த உடையை அவர்களுக்கு அணிந்துவிடவே அரை மணி நேரம் ஒதுக்க வேண்டும். மேடுகளும் தாழ்வான பகுதிகளுமான அந்த மலைப் பகுதியில் அமைந்திருந்த பள்ளியின் வளாகத்தில் இருந்த விளையாட்டு மைதானத்தில் எளிமையான, சாதாரண விளையாட்டுப் பொருட்களே இருக்கும். ஒரு டயரை கயிற்றில் தொங்கவிட்டு அதில் ஊஞ்சல் ஆடும் குழந்தைகளும், ஒரு குச்சியில் சக்கரத்தைக் கட்டி வண்டியோட்டும் குழந்தைகளும் இன்னும் கண்முன் இருக்கின்றனர். இன்றைய பூடான் மன்னர் என் சிறிய மகனின் வகுப்புத் தோழர் என்பது உபரி தகவல். ஏதோ புகை மண்டலம் போல்தான் நினைவு என்று இன்று என் மகன் கூறுகிறான் என்பது வேறு விஷயம் – அன்று அவனுக்கு 7 வயது :-).
சலசலவென்று ஓடும் திம்பு ஆற்றை ஒரு மூங்கில் பாலத்தின் மீதேறிக் கடந்து பள்ளிக்கு சற்று மலையேறி செல்ல வேண்டும். அருமையான இயற்கை வளம் நிறைந்த சுழ்நிலை. அவர்களைப் பள்ளியில் விட்டுவிட்டு நானும் சுற்றுபுறம் ஊரைச் சுற்றி கொஞ்சம் ரசித்துவிட்டுப் பின்னரே வீட்டுக்குத் திரும்புவேன்.
என் அந்த நகர் வலங்களில் திம்புவில் இருக்கும் சோர்டன் எனப்படும் கோவில்களும் அடக்கம். சோர்டன் என்று பொதுவாக கூறப்பட்டாலும் அவற்றில் சில அரசர்களின் அல்லது புத்த குருமார்களின் நினைவுஸ்தலமாகவும் இருக்கும்.
அப்படி சோர்ட்டன்களில் சுற்றிப் பார்க்கும்போது அவர்கள் வழிபாட்டு முறை, கோவில் அமைப்பு, அங்கே பூஜையில் உள்ள சிலைகள் மற்றும் ஓவியங்கள் எல்லாம் ஏதோ நம்ம கோவில்களில் இருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும். அந்தச் சிலைகள் / ஓவியங்கள், சிற்சில வேறுபாடுகள் தவிர, அச்சு அசலாக நம் இந்துமத கடவுள்களின் உருவங்கள் போன்றே இருக்கும். “தங்கா” எனப்படும் தாவரங்கள் மூலம் உருவாக்கப்பட்ட வண்ணங்களில் துணியில் தீட்டிய ஓவியங்களில் இருக்கும் கதைகள் பல, தேவர்கள், அசுரர்கள் என்று நம் இதிகாசக் கதைகள் போலவே இருக்கும். அடிப்படையில் தீமையை வெல்லும் நன்மை என்பதே கருத்து.
பூடானில் பின்பற்றப்படும் மதம், திபேத்திய பௌத்தம் – மஹாயானா பௌத்தம். அந்தச் சோர்டன்களில் இருந்த ஓவியங்களுக்கும் இந்து மத இதிகாசக் கதைகளுக்கும் பல ஒற்றுமைகளைக் கண்ட நான் திபேத்திய மதக் கதைகள் மற்றும் புத்த மதத்திலும் இந்து மதத்திலும் இருக்கும் ஒற்றுமைகள் என்று சிலக் கட்டுரைகள் எழுதினேன். அவற்றிலிருந்து ஒரு தொகுப்பு இங்கே.
வருடங்கள் – 1988 – 90
உயர்ந்து நின்ற அந்தக் கோபுரத்தின் கீழ், தரையில் ஒரு வயதான பெண் மண்டியிட்டு பல முறை நமஸ்காரம் செய்து வழிபட்டுக்கொண்டிருந்தாள். கோவில் பிராகாரத்தில் சுற்றி வந்து கொண்டிருந்த ஒருவர் அங்கிருந்த ஒரு பெரிய மணியை சுழற்றியபடி வாயால் ஏதோ ஸ்லோகம் சொல்லிக்கொண்டிருந்தார். மற்றொரு மூலையில் அமர்ந்த வண்ணம் ஒரு மூதாட்டி கையில் ஜெபமாலையை உருட்டியபடி ஸ்லோகங்கள் முணுமுணுத்துக்கொண்டு, ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். கோவில் உள்ளே மலர் மாலைகள் அணிந்த மூலவர் மூர்த்திக்கு அருகே சிறு சிறு கிண்ணங்களில் தண்ணீர், பழங்கள் என்று பலவித நைவேத்திய பொருட்கள். மணக்கும் ஊதுபத்தியும் அழகாக முத்து போல் எரியும் நெய் விளக்குகளும் ஒரு தெய்வீக சூழ்நிலையை பூர்த்தி செய்தது.
சற்று கண்களை மேலே தூக்கி விட்டத்தையும் சுவர்களையும் பார்த்தால் பளிச்சென்ற நிறங்களில் அழகிய வண்ண ஓவியங்கள். எல்லாம் அசுரர்கள், தேவர்கள், கடவுள்கள் என்ற இதிகாசக் கதைகள்.
ஆனால் இவையனைத்தும் ஏதோ நம் இந்தியக் கோவிலைப் பற்றி விவரிக்கப்போகிறேன் என்று நினைக்காதீர்கள். நான் நின்று கொண்டிருந்தது பூடான் நாட்டின் தலைநகரான திம்புவில் சோர்டன் எனப்படும் ஒரு புத்த மதக் கோவிலில். வழிபடுபவர்கள் அனைவரும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள்.
பொதுவாக புத்த மதம் உருவ வழிபாடில்லாதது என்று பள்ளியில் படித்த ஞாபகம் எனக்கு. அதனால் பூடானில் புத்த கோவில்களில் கடவுள் சிலைகள் ஓவியங்கள், அசுரக் கணங்கள், தேவர்கள் என்று பார்த்தபோது பெரும் வியப்பாக இருந்தது.
ஆரம்பத்தில் புத்தர் வாழ்க்கை நெறிகளைப் பற்றி எளிதாகவே சொல்லியிருந்தாலும் அவருடைய சீடர்கள் பலர் புத்தரின் கருத்துக்களைப் பரப்புபோது அவற்றுக்கு பலவித பரிமாணங்கள் கொடுத்து பரப்பினார்கள். இவையனைத்தும் சாதகம் செய்யப்பட்டு வழி வழியாக இசை வழி கதைகளாகச் சொல்லப்பட்டவை. புத்த மதத்தின் ஆகமங்கள் பல இப்படி வாய்வழி சாதகங்களாக, கதைகளாக ஆசியா முழுவதும், தெற்காசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிடையே பரவின. திபேத்திய கலைகளும், கலாசாரமும் இதன் அடிப்படையிலேயே வளர்ந்தது.
உலக வரைபடத்தில் இமாலய மலைகளுக்கு நடுவே கடுகைவிட சிறிதாகத் தோன்றும் இந்த பூடான் நாட்டில் புத்த மதம் வேரூன்ற காரணம் புத்தரின் சீடர்கள். அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவிலிருந்து கிளம்பி ஆசிய நாடுகள் முழுவதும் பயணம் செய்து அவர் கொள்கைகளைப் பரப்பினார்கள். கௌதம புத்தருக்கு பின் வந்த மத குருக்களில் பத்ம சாம்பவா என்பவர்தான் முதன் முதலில் புத்தரின் கோட்பாடுகளை கிழக்காசிய நாடுகளில் பரப்பியவர். பிரிவினைக்கு முன் இருந்த இந்தியாவில் பிறந்த இவர் புத்தரின் கோட்பாடுகளைப் பரப்ப திபெத் சென்றார். பின்னர் பூடான் மன்னர் ஒருவரின் நோயைக் குணப்படுத்துவதற்காக அவர் பூடானுக்கு வந்தார். நோயைக் குணப்படுத்தும் அவரது சக்தியை வியந்து, அந்த மன்னர் பத்மசாம்பவாவின் சீடரானார். ஆனால் அந்த பிரதேசங்களில் அதுவரையில் கோலோச்சிய “பான்” என்கிற மதத்தைச் சார்ந்த மதவாதிகள் புதிதாக ஒரு மதம் தங்கள் எல்லைக்குள் வருவதை எதிர்த்தனர்.
அவர்களை சமாதானப்படுத்த பத்ம சாம்பவா திபெத்தில் செய்த மாதிரியே இங்கும் அப்போது வழக்கத்தில் இருந்த “பான்” மத சாக்கியங்க்களையும், சடங்குகளையும் சேர்த்து புத்தமத கோட்பாடுகளைப் பரப்பலானார். அங்கு வழி வழியாக வழங்கி வரும் இதிகாசக் கதைகளின் படி, பத்மசாம்பவா மற்ற அசுர கணங்களையும் தேவதைகளையும் தன சொல் கேட்கும்படி அடக்கி வைத்து, தான் வலியுறுத்தும் புதிய மதத்தைப் பின்பற்ற வைத்தார் என்று கதை போகிறது.
இந்தியாவிலும் ஆரம்ப காலங்களில் “பான்” எனப்படும் அந்த வாழ்க்கை முறைதான் பலகாலம் இருந்து வந்தது என்றும் இயற்கை சக்திகளே கடவுள்களாக வழிபடப்பட்டன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மதங்கள் அடிப்படையில் நம்பிக்கைகள் நாளடைவில் உருவாயின என்று குறிப்பிடுவார்கள். இந்த அடிப்படையில்தான் இந்தப் பிரதேசங்களில் புழங்கிய பழங்கால நம்பிக்கைகள், சடங்குகள் பலவும் புதிதாக வந்த புத்த மதத்திலும் கலந்து புழங்கலாயிற்று. புத்தரின் பல அவதாரங்கள் என்ற நம்பிக்கையும் இப்படி இந்து மத நம்பிக்கையிலிருந்தே வந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். எட்வர்ட் கொன்ஸ் என்கிற மேலை நாட்டு ஆய்வாளர் தனது “The Lotus of Real Dharma” புத்தகத்தில் இதைப் பற்றி குறிப்பிடும்போது, புத்த வேதங்களில் கௌதம புத்தர், தான் அனைத்து உயிர்களிலும் வாழ்ந்து, அவற்றை செயல்படுத்துவதாக சொல்கிறார் என்கிறார்.
கௌதம புத்தருக்கு முன்னால் பல புத்தர்கள் இருந்ததாகவும், அவர்கள் மீண்டும் மீண்டும் மறு அவதாரங்கள் எடுத்து வருகிறார் என்பதும் திபேத்திய புத்த மதத்தின் நம்பிக்கை. இந்த மாதிரியான நம்பிக்கைகளும் இதிகாசக் கதைகளும் பூடானின் கலாசாரத்தில், வாழ்க்கை முறையில் ஊடுருவிக் கலந்து இருக்கிறது. அவர்களின் கட்டிடக்கலை, மற்றும் இயல் இசை என்று எல்லா அம்சங்களிலும் இந்த நம்பிக்கைகள் பல்வேறு விதமாக வெளிப்படுகின்றன.
அவர்களது கட்டிடக்கலையின் முக்கிய அம்சம் இந்தக் கதைகளைச் சொல்லும் ஓவியங்கள். கட்டிடங்கள் அனைத்துமே பல வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டு இருக்கும். விழாக்காலங்க்களில் அல்லது முக்கிய அரசு நிகழ்வுகளில் இடம் பெறும் கலை நிகழ்ச்சிகளில் பிரதானம் இந்த இதிகாசக் கதைகளின் அடிப்படையில் அமைந்தவைதாம். இந்து மதத்தில் விஷ்ணுவின் அவதாரமாக கல்கி அவதாரம் இன்னும் வரும் என்று சொல்வதுபோல் இங்குள்ளவர்களிடமும் புத்தர், மைத்ரேயா என்கிற இன்னொரு அவதாரம் எடுப்பார் என்று நம்பிக்கை நிலவுகிறது.
இங்கும் சங்கு, சக்கரம், தாமரை, புள்ளி வைத்த கோலம் போன்றவை புனித அடையாளங்கள். திபெத் மற்றும் பூடான் போன்ற இடங்களில் எல்லாவிதக் கட்டிட அமைப்பிலும் இவை ஒவியங்களாகவோ சிற்பங்களாகவோ இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இதிகாசக்கதைகளின் படி புத்தரின் ஒவ்வொரு அவதாரமும் தோன்றும் போதும், பிறகு அவர் சொல்படி சீடர்கள் கொள்கைகளைப் பரப்பும்போதும் இதிகாசக் கதைகள் பல உருமாறி அல்லது பலக் கிளைக்கதைகள் தோன்றி, வழி வழியாக சொல்லப்பட்டு இன்று பலவித கோணங்களில் நிலவுகின்றன.
பலக் கதைகள் இன்றும் வாய் வழியாகவே சொல்லப்பட்டு வருகின்றன. “தங்கா” என்கிற பட்டுத்துணி ஓவியம் மற்றும் சோர்டன்களில் உள்ள ஓவியங்கள் சிற்பங்கள் இவற்றில் பல்லாயிரம் கதைகள் உள்ளன. வசுத்ரா என்கிற தேவதை 6 கைகளுடன் காட்சியளிக்கிறாள் ஒரு ஓவியத்தில். ஒவ்வொரு கடவுள் அல்லது தேவதைக்கும் ஒரு முக்கியத் தொழில் உண்டு. மஞ்சுஸ்ரீ என்கிற தேவதை கல்வி மற்றும் நல்லறிவுக்கு பொறுப்பானவள். நம்ம சரஸ்வதியோ என்று எண்ண வைக்கும் சாந்தமான தோற்றம். மகா காளா என்னும் தேவதை தீமையை அழிக்கும் ஆக்ரோஷமான உருவம். பன்னிரண்டு கைகள் தலைகளுடன் கூடிய உருவமைப்பு. காலடியில் ஒரு அசுரனைப் போட்டு மிதித்தபடி இருப்பாள். நம்ம ஊர் காளி போல…
அவலோக்தியேச்வரா என்கிற கடவுள் நம் விஷ்ணு போல காக்கும் கடவுள். கருணை ஸ்வரூபம். எட்டு கைகள் பல தலைகள்.
இப்படி ஆகமப்படி சிலைகள் அல்லது ஓவியங்கள் வடிக்கும் கலைஞர்கள் கதைகளில் சொல்லியிருப்பதுபோல் தங்கள் படைப்பை அமைப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தங்கள் கற்பனையையும் தாராளமாகாவே சேர்ப்பார்கள். சில சமயம் ஒரு சிறிய பலகையிலேயே பலக் கதைகள் ஓவியமாகத் தீட்டபட்டு இருக்கும்.
திபேத்திய புத்த மதக் கலாசாரத்தின் இந்த வகை கலை வேலைப்பாடுகளில் சிறப்பு அம்சம், அதிலுள்ள பல நுணுக்கமான விவரங்கள். விவரிக்கப்பட்ட கதைகளில் ஒவ்வொரு அம்சமும், ஒவ்வொரு சம்பவமும் விரிவாக நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட்டு இருக்கும். ஒரு பெரிய சிற்பம் இருந்தால், அதில் கால்கள் கைகளில் கூட விரிவான சித்திரங்கள் தீடப்படிருக்கும். இன்னும் சிலவற்றில் ஒரு கடவுளே பலவித ரூபங்க்களில் காட்சி தருவார். நம் பிள்ளையார் போன்ற தும்பிக்கை உருவமும் உண்டு. பெயர்தான் வேறு. சிம்மவாக்டா என்கிற சிங்கத் தலைக் கொண்ட ஒரு கணம் அல்லது தேவதை, பல கைகளுடனும், நுணுக்கமாக செதுக்கப்பட்ட ஆடையுடனும் ஒரு இடத்தில் காட்சி தருகிறது. நுணுக்கமான பூக்கள் டிசைனும், இரட்டை மீன்கள், சங்கு சக்கரம், போன்ற 8 புனித அ டையாளங்களும் அடிக்கடி நிறைய கலை வேலைப்பாடுகளில் இடம் பெற்றிருக்கும்.
வட்ட வடிவான பூக்கள், தாமரை, மற்றும் நம் பக்கங்களில் சொல்வதுபோல் மண்டலம் எனப்படும் ஒருவகை கோலமும் இந்த பாரம்பரிய ஓவியங்களில் இடம் பெற்றிருக்கும்.
சில ஓவியங்களில் அதை வரைந்தவர் தன் கற்பனை வளம் முழுவதையும் கொட்டி வரைந்திருப்பார். சொர்க்கம் போன்று ஒரு இடத்தைக் கற்பனை செய்தால் அங்கே காவல்காரர்கள் உட்பட அனைத்து விவரங்களும் அந்த வேலைபாட்டில் இருக்கும். பூடான் அரசரின் மாளிகையில் கழுகு முகத்துடன் கூடிய ஒரு கடவுள் தோற்றம் இடம் பெற்றிருக்கும். ராவண் என்றொரு உருவமும் உண்டு. ஆனால் இது ராமாயணத்தின் வில்லன் ராவணன் அல்ல.
மகாகாலா என்கிற கடவுளின் கையில் வில்லும் அம்பும் தத்ரூபமாக இருக்கும். அவலொக்திஸ்வரா என்கிற கருணை கடவுளுக்கு கன்னோன் (Kannon) என்ற பெயரும் உண்டு.
பாரம்பரிய நெறிகளையும் கலாசாரங்களையும் பாதுகாத்து தொடர வேண்டும் என்ற பூடானின் கொள்கைப்படி, அங்கே அனைத்து கட்டிடங்களிலும் இப்படிப்பட்ட பாரம்பரிய ஓவியங்களே இடம் பெற வேண்டுமென்று ஒரு சட்டமும் உள் ளது. வீடுகளிலும் பெரும்பாலும் அப்படியே.
இப்படி பாரம்பரியக் கலைகள் பயிற்றுவிப்பதற்கு பிரத்யேகமாக கல்விக்கூடங்கள், பயிற்சி இடங்கள் உள்ளன. பொதுவாக மக்கள் அனைவருமே ஒரு ஆத்மார்த்த ஆர்வத்துடன் தொடர்ந்து இக்கலைகளில் ஈடுபட்டு வருவதால் பாரம்பரிய கலாசாரம் இங்கே பரிமளித்து வருகிறது.
இமய மலைதான் உலகில் மிகக் குறைந்த வயதுடைய மலைத் தொடர்ச்சி என்பார்கள். நம் ஊர்கள் பக்கம் இருக்கும் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்கள் மிகத் தொன்மையானவை. கற் பாறைகள் அதிகம். ஆனால் இமயம் வயதில் சிறியதென்பதால் கற் பாறைகள் அதிகம் படிந்திராது. இதன் காரணமாகவோ என்னவோ இந்தப் பகுதிகளில் கற்சிலைகள் அதிகம் இல்லை. ஆனால் உலோகச் சிலைகள் நிறைய உண்டு – புத்தரின் அவதாரங்கள், மற்றும் மேற்ச்சொன்ன கலாசார அடையாளங்களில். இந்த வடிவங்கள் உருவாக்கும் அச்சுகள், சில பூஜை சம்பந்தமான பொருட்கள், மற்றும் கட்டிடங்களில் தூண்கள் கதவுகள் போன்றவற்றைத் தவிர மரச் சிலைகளும் அதிகம் தென்படவில்லை.
சித்திரங்கள் வரைவதற்கு பெரும்பாலும் துணிகள் சுவர்கள் இவையே பயன்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு பூஜையறையிலும் தங்கா எனப்படும் பட்டுத்துணில் ஆனா ஓவியம் இருக்கும். துணியால் மற்றும் மலர்களால் மாலை அணிவித்து வழிபடப்படும்.
இந்த ஓவியங்கள் இன்றும் பெரும்பாலும் தாவர வண்ணக்கலவைகள் மூலமே உருவாக்கப்படுகின்றன. மாறி வரும் உலகில் தற்போது சில இடங்களில் நவீன கலவைகளும் புழக்கத்தில் உள்ளது. தங்காக்களில் பொதுவாக நடுவில் பத்ம சாம்பவாவின் உருவமும் சுற்றிலும் அவருடைய 8 அவதாரங்களின் உருவங்களும் அமைந்திருக்கும். இன்னும் சில விரிவான ஓவியங்களில் ஆங்காங்கே அசுர, மற்றும் தேவதை உருவங்களும் கதைகளும் இருக்கலாம்.
இந்தப் புனித ஓவியங்கள் வரைவதற்கு நிறைய வரைமுறைகள் உள்ளன. சித்திரம் வரைபவர் தன்னை சுத்திகரித்துக்கொண்டு ஆரம்பிக்க வேண்டும். வரையும் முழு நேரமும் சுத்தமாகவே பக்தியுடன் இருக்க வேண்டும். முதலில் நடு நாயகமான சித்திரம் வரைய வேண்டும். மற்றவை பின்னர். அடிப்படை வரைவு ஒரு கரித்துண்டால் வரையப்படும். நம் உடல் அளவுகள் கணக்குப்படி பாகங்கள் துல்லியமாக கணக்கிட்டு வரையப்படும். சில சமயம் உதவியாட்கள் முதல் வரைவு வரைந்தாலும் ஓவியத்தின் முக்கியக் கட்டங்கள் தலைமை ஓவியராலேயே வரையப்படும். மத சம்பந்தமான விவரங்கள் வரையப்படும்போது ஆகமங்களில் சொல்லியிருப்பதுபோல் இருக்கிறதா என்று கவனிக்க மத குரு ஒருவர் மேற்பார்வை பார்ப்பார். கண்ணுக்கு இதமாகவும் பளிச்சென்றும் இருக்கும் இந்த ஓவியங்களின் வண்ணங்களும், உருவங்களின் கூர்மையும் மிக அழகு.
எத்தனையோ விதங்களில் மக்கள் நவீனத்துக்கு மாறி வந்தாலும் கலை, கலாசாரம், நம்பிக்கை என்று வரும்போது பாரம்பரியத்தைத் தொடர்வதுதான் இதம் என்று இன்றும் பெரும்பாலோர் நினைக்கிறார்கள்.
வருடம் 2014
நான் அங்கு இருந்தபோது பூடானில் தொலைகாட்சிகள், சினிமாக்கள் கிடையாது. ஒரே ஒரு அரசுச் செய்தித்தாள் மட்டுமே. இன்று எல்லாமே உண்டு. அன்று முழுக்க முழுக்க மன்னராட்சி. இன்று பூடானில் தேர்தல்கள் நடத்தப்பட்டு அங்கே முழு ஜனநாயகம் கோலோச்சுகிறது. மாறாத ஒன்று, மக்கள் தங்கள் அரசரின் / அரசக் குடும்பத்தின் மேல் வைத்திருக்கும் மரியாதையும் பிரியமும் மற்றும் கலாசாரத்தின் மீதான பற்றும்.