பாதாம் மாமி

Badam-Halwa

ஒற்றைநாடி தேகம். பச்சை நரம்புகள் பளிச்சிடும் வெண்ணிற மேனி. அரக்கு அல்லது சிகப்பு நிறத்தில் சுங்கடிப் புடைவை.முற்றிலும் வெண்மயிர்க் கற்றைகளாய்ப் போன சிகை. இடுங்கிய கண்கள். சுருக்கம் நிறைந்த நெற்றியில் பளிச்சென்று மீனாட்சி கோவில் தாழம்பூக் குங்குமம். இவற்றுடன் கூடவே பாதாம் மாமி என்ற வினோதமான பட்டத்துடன்தான் அவர் எங்களுக்கு அறிமுகமானார். என் பிள்ளைகளுக்குச் சொல்லி கொடுக்க அவரிடம் ஏராளமான சுலோகங்களும், நாட்டுப்புற பாடல்களும் பாதாம் மாமி வசம் ஏராளமாக இருந்தன. பெருந்தன்மையும், பொறாமையின்மையும் அவருடைய மேட்டுக்குடிப் பிறப்பின் சாட்சியங்களேயன்றி அந்த பாதாம் மாமி என்ற சிறப்புபெயரல்ல..

ஆனந்தபவனம் என்றழைக்கப்பட்ட அந்தப் பல்குடியிருப்பு பகுதியின் முகப்பில் இருந்த இல்லத்தில்தான் முதலில் குடியேறினோம். அவருடைய வங்கிக்கிளை அந்தப்பகுதியில் அருகில் இருந்தது என்பது முக்கிய காரணம் .நான்கு கிரௌண்ட் நிலத்தில் இந்தக் காலத்து ஃபிளாட்டுகளைப் போல மேலும் கீழுமாக நான்கு குடியிருப்பு, பக்கவாட்டில் வரிசை வீடுகளாக ஐந்து வீடுகள் இறுதியில் மாடிக்கு செல்லும் பகுதியில் ஒரு சின்ன காற்று புகாத அறை. அந்த காற்றுப் புகாத அறையில்தான் பாதாம் மாமியை முதன் முதலில் சந்தித்தோம்.

சுவரில் ஒரு மர ஸ்டாண்ட். அதில் மீனாட்சியம்மன் படம்.சில்பி வரைந்தது. இரண்டு சிறிய பித்தளை விளக்கு.தரையில் ஒரு மடக்கும் வசதியுடைய நாடா கட்டில்.ஓரத்தில் ஒரு பச்சை பெயிண்ட் அடித்த பெரிய ட்ரங்க் பெட்டி. கூரையில் மடித்துணி உலர்த்த ஒரு கொடிக்கயிறு. துளசியும்,ஊதுபத்தியும் மணக்கும் ஒரு பொட்டு தூசு இல்லாத சுத்தமான வீடு. இரைச்சலின்றி சன்னமான குரலில் பேசும் மாமியிடம் மற்ற குடித்தனக்காரர்கள் ஓர் இழிவான அங்கதத்தில் மாமியைப் பற்றி குறிப்பிட்ட அந்த மேட்டுக்குடி புலம்பலை நான் கேட்கவில்லை.

“ஏன் அவருக்கு இப்படி ஒரு பட்ட பெயர்?“ என்று என்னிடம் கேட்ட என் கணவருக்கு என்னால் இவ்வாறுதான் பதில் கூற முடிந்தது.

“ஸ்டோர் குடித்தனத்தில் எல்லா குடித்தனக்காரங்களும் ஒரேமாதிரி இருக்கமாட்டாங்க. அடுத்தவங்களை வாரிவிடுவதும், குதர்க்கமா பேசுறதும், மட்டம் தட்டறதும்தான் பொழுதுபோக்கு. அப்படி ஒரு காரணமாத்தான் அந்தப் பெயர் அந்த மாமிக்கு. இந்த ஊருக்கு வந்த புதிதில் மாமிக்கு தன்னையும் தன் உயர்குடி பிறப்பையும் நிரூபிக்க பாதாம் ஹல்வாவை விட்டால் வேறு சாட்சியமில்லாததால் தனது பாதாம்ஹல்வா செய்முறை குறித்து பிரஸ்தாபித்திருக்க வேண்டும். அது யாரவது பொல்லாத மாமியின் வாயில் புகுந்து புறப்பட்டு இப்படி ஒரு பட்டபெயருடன் வெளிவந்திருக்கும்.தன்னையும், தன குடிப்பெருமைகளையும் இழந்துவாழும் துர்பாக்கியம் ஆண்களைவிட பெண்களுக்குதான் அதிகம்.” என்றேன்.

“மாமி பாதாம் ஹல்வா நல்லா பண்ணுவாங்களா? “

“நல்லாவா? பிரமாதமா பண்ணுவாங்களாம்.கால் கிலோ அரைகிலோவெல்லாம் இல்லை. கிண்டினா மெகா அளவில்தான் கிண்டுவாங்களாம்.இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா இவ்வளவு வம்பு பேசறாங்களே இந்தக் குடித்தனக்காரங்க ஒரு முறை கூட மாமியைக் கூப்பிட்டு ஹல்வா கிளறித்தரச் சொன்னதே இல்லியாம். சொல்லப்போனா மாமி பாதாம் ஹல்வா கிளறி இவங்க யாருமே பார்ஹ்ததில்லையாம். இருந்தாலும் மாமிக்கு இவங்க இப்படி ஒரு பேரு வச்சிருக்காங்க. என்ன ஒரு ஐரணி இல்ல? “

“நிஜமாவா?“ என்று ஆச்சரியப்பட்ட என் கணவருக்கு மாமியைக் கூப்பிட்டு மெகா அளவில் பாதாம் ஹல்வா கிளறித் தரச்சொல்லும் சந்தர்ப்பம் ஒன்று வாய்த்தது.

முப்பது பணியாளர்களுக்கும் மேற்பட்ட கிளையின் தலைமை மேலாளராக பதவி ஏற்றுக் கொண்டதற்கு ஒரு சின்ன கெட்-டுகெதர் ஏற்பாடாயிற்று. இவருக்கும் வயது காரணமாக அந்நிய இடங்களில் உணவு அருந்தும் பழக்கம் அருகி வந்ததால் வீடில்லேயே கெட்-டுகெதருக்கு ஏற்பாடானது. சுவீட் காரம் காபி என்று முடிவானது.16க்கு 16 அடி பரிமாணம் உள்ள பெரிய ஹாலில் வாடகைக்கு பிளாஸ்டிக் நாற்காலிகள் போட்டு விருந்தினர்களை உபசரிப்பது என்று முடிவானது. முப்பது பேருக்கு ஸ்வீட் என்றதும் நான் எவ்வித முன் சிந்தனையுமின்றி ‘ பாதாம் ஹல்வா ‘ என்றேன்.

“பாதாம் ஹல்வா என்றால் பாதாம் மாமி“ என்றார் என்கணவர். நான் மாமியின் அந்தச் சிறிய கூண்டு போன்ற வீட்டின் முன் போய் நின்றேன்.

“ஒண்ணுக்கு ரெண்டுன்னு சர்க்கரை போட்டா ரொம்ப தித்திப்பா இருக்கும். ஒண்ணுக்கு ஒன்றைன்னு போடலாம். நெய்யும் விழுதா ஒருகிலோ வேண்டியிருக்கும். அரைகிலோ பாதாம் பருப்பிற்கு ரெண்டு கிலோ பாதாம் ஹல்வா கிளறலாம். ஒரு வாரம் வச்சிண்டு சாப்பிடனும்னு நினைச்சியான்னா ஒரு கிலோ பாதாம் பருப்பு ஒன்றரை கிலோ ஜீனி ரெண்டு கிலோ நெய் வாங்கிடு, ஒரு லிட்டர் பசும்பால் வேணும். எல்லாமே நல்ல தரமான பதார்த்தமா வாங்கு. பாதாம்பருப்பை நாலுமணிநேரம் இளஞ்சூடான தண்ணீரில் ஊறவை. நன்னா ஊறினப்புறம் எனக்கு சொல்லி அனுப்பு. மிச்சதை நான் பார்த்துக்கிறேன்.” என மாமியும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டார்.

பாதாம்பருப்பு ஊறிவிட்டதைச் சொல்வதற்கு மாமி வீட்டிற்குச் சென்றேன்.மாமி ட்ரங்கு பேட்டியின் முன்பு அமர்ந்திருந்தார். பெட்டி திறந்திருந்தது.மாமியின் மடியில் அந்துருண்டை மணக்கும் கிளிப்பச்சை நிறத்தில் கண்ணைப்பறிக்கும் பட்டுத்துனியின் சின்ன விரிப்பு இருந்தது.பட்டுத்துணியின் மேலே கையகல வெள்ளிச்சிலை ஒன்று. கருக்காமல் வெளீரெரென்று ஜ்வலிக்கும் அம்பாளின் வெள்ளிச் சிலை.

“மீனாட்சி அம்மனின் சிலை“ என்றார் மாமி.

பிறகுதான் நானும் பார்த்தேன். மடிசார்கட்டு. ராஜ கிரீடம். ஒயிலாக சாய்ந்த இடுப்பு. கையில் கிளியுடன் அது மீனாட்சிதான். குறைந்தது ஐநூறு கிராமுக்குக் குறையாத எடையில் அந்தச்சிலை இருக்கும். மீனாட்சியின் ஒவ்வொரு நெளிவும்,வளைவும், ஒயிலும், அழகும் அந்த சிலையில் பிரதிபலிப்பதைக் கண்டு வியந்து போனேன்.

“உக்கார்ந்துக்கோ“ என்று அந்த சின்னஞ்சிறு அறையில் தன் அருகில் எனக்கும் ஒரு இடம் ஒதுக்கிக் கொடுத்தார் மாமி. நான் நெருக்கி அமர்ந்தேன்.

“ஐம்பொன்சிலை பண்ற ஸ்தபதி ஒருத்தன் அப்பாவுக்கு சினேகிதனா இருந்தார். எங்களுக்கு பூர்வீகம் சோழவந்தான். அப்பா அங்கே பெரிய பண்ணையார். அப்பாவுக்கு பண்ணையார் என்ற ஜபர்தஸ்து எதுவும் கிடையாது. வலதுகை கொடுப்பது இடதுகைக்கு தெரியாதுன்னு சொல்லுவாளே அப்படி ஒரு வள்ளல்தனத்தோட அப்பா இருந்தார். அதுவே அவரோட பலமும் பலவீனமும். ஊரில வெள்ளம் வந்திடக் கூடாது. விடிய,விடிய ஒண்ணுமில்லாத ஏழை சேரி ஜனங்களுக்கு எங்க வீட்டில்தான் மூணு வேளையும் சாப்பாடு. கோட்டையடுப்பில்தான் சமைப்போம். அப்படி ஒரு கை வாரி வாரி கணக்கு தெரியாம குடுக்க போய், சொத்தையெல்லாம் இழந்து, மதுரையில் ஒரு செட்டியாரிடம் மாத சம்பளத்துக்கு கணக்கு எழுதும்படியானது. அது வேற கதை.எதுக்கு சொல்றேன்னா அந்த ஸ்தபதியோட ரெண்டு பொண்ணு கல்யாணமும் அப்பா மூலமாத்தான் நடந்தது. அதுக்கு பிரதிகூலம்தான் இந்தச் சிலை. “

அவருடைய பழைய இனிய நினைவுகளைப் பகிரும்போது முகம் அசாத்திய மலர்ச்சியை அடைந்தது.

அதன்பிறகு அந்த வெள்ளி சிலையை எடுத்து பத்திரமாக டிரங்கு பெட்டியின் அடியில் வைத்து பெட்டியை மூடிவிட்டு என்னுடன் வந்தார்.

மாமி நிதானமாக பாதாம் பருப்புகளின் மேல் ஓட்டினைப் பிரித்துசற்று மஞ்சள் நிறமான பருப்புகளை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றத் தொடங்கினார்.

“பருப்பு நன்னா திடமா இருக்கு. அப்பாவும் இப்படிதான்.எது உசத்தியோ அதைத்தான் தருவிப்பார். நகை,துணி,பண்டம் பாத்திரம் எல்லாம் அவருக்கு உசத்தியா இருக்கணும். குங்குமப்பூ காச்மீரத்திலிருந்து நேரா வீட்டுக்கு வரும். கண்ணில இமை காப்பதுமாதிரிதான் என்னையும் எங்கக்காவையும் அவர் வாழ வச்சார். இதுக்கு அதுக்குன்னு எல்லாத்துக்கும் பணியாட்கள் இருந்தாலும் சமைக்கறது மட்டும் நானும் எங்கக்காவும் மட்டும்தான். அம்மாவுக்குக் கூடமாட ஒத்தாசை செஞ்சே சமையல் பழகிடுத்து. தீபாவளி வந்துட்டா நாந்தான் பாதாம் ஹல்வா கிளறணும். அப்பெல்லாம் படி கணக்குத்தானே. இத்தனை படின்னு கிளறினா சோழவந்தான் முழுக்க வாசனையா இருக்கும்.பண்ணையாட்கள் எல்லோருக்கும் தீபாவளி ஸ்வீட் என்னோட பாதாம் ஹல்வாதான்.“

மீண்டும் ஒரு முறை பாதாம்பருப்பின் கழிவுகளை அகற்றினார். இப்பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் பாதாம் பருப்புகள் மின்னிக் கொண்டிருந்தன.

மாமி என்னிடம் “ஆட்டுக்கல் இருக்கா?“ என்று கேட்டார்.

மின்சாதனகளை நம்பி ஓடும் அவசர யுகத்தில் ஆட்டுகல்லுக்கு அவசியமிருப்பதில்லை என்றேன். மாமி அரை மனதுடன் மாவு அரைக்கும் மின் எந்திரத்தில் பாதாம் பருப்புகளை பசும்பால் விட்டு அரைக்கத் தொடங்கினார். அரைத்த விழுதை ஒரு எவர்சில்வர் தாம்பாளத்தில் போட்டு பரத்தினார்.

“ஃபான் காத்தில் இந்த விழுதை அரைமணிநேரம் ஆறவைக்கலாம்.“

எனக்கு மாமியுடன் கொஞ்சம் அந்தரங்கமாக பேச அரைமணிநேரம் கிடைத்ததற்கு சந்தோஷப்பட்டேன்.

குங்குமம் என்பது கணவன் உள்ள பெண்களின் அடையாளம் என்பது இப்போது பெரும்பாலும் மீறப்பட்டு வந்தாலும் மாமி பழங்காலத்து மனுஷி என்பதால் மாமியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

“மாமி ! உங்க கணவர் உங்க கூட இல்லையா? “

மாமி மேலும் ஒரு நெடுங்கதைக்கு தயாரானது போல பேசத்தொடங்கினார்.

“அப்பா எல்லா சொத்தையும் தான தர்மம் பண்ணியே தொலைச்சிட்டார். கணக்குவழக்கு சரியா பார்க்கலியா இல்லை கூட இருந்தவங்க மோசம் பண்ணிட்டாங்களா தெரியலை. சகோதரிகள் ரெண்டு பேரு கல்யாணமும் நாதஸ்வர கச்சேரி, சதிர் கச்சேரின்னு அமர்க்களமா நடந்தது. அக்கா கல்யாணமான எட்டாவது மாசம் புருஷனை வைசூரிக்கு பறிகொடுத்துட்டு வந்தா. என் வீட்டுகாரருக்கு எந்தளவுக்கு சொத்து இருந்ததோ அந்தளவுக்கு குடி கூத்தியா கடன் எல்லாம் இருந்தது. ஒரே சுழலா சுழற்றி அடிச்சது. நான் தூக்கி வீசப்பட்டப்போ அப்பாவும் இல்லை; புருஷனும் விட்டுட்டு போயிட்டார். அண்ணா மட்டும்தான். அண்ணாவிற்கும் அப்பா சொத்தை கட்டி காப்பாத்த தெரியலை. அண்ணா வீட்டில் கொஞ்ச காலம் இருந்து பார்த்தேன். மன்னியோட ஜாடைமாடையான பேச்சு கேட்க சகிக்கவில்லை. அண்ணாவும் வயசுகாலத்தில் அவன் பசங்களோட பெங்களூரில் செட்டில் ஆயிட்டான். எனக்கு போக்கிடமில்லாம தெரிஞ்சவங்க வீட்டில் பத்து பாத்திரம் தேச்சிண்டு சமைச்சுப் போட்டுண்டு காலத்தை ஓட்டிண்டிருக்கேன் . எந்த ஜன்மத்துப் பாவமோ என் வாழ்க்கை இப்படி ஓடிண்டிருக்கு. “

நான் ஸ்டோர் ரூமிற்குள் கைவேலை இருப்பதுபோல சென்று வெளியில் தெரியாமல் அழுதுவிட்டேன். என்னால் அப்போது அப்படி உணர்ச்சிவசப்பட மட்டும்தான் முடிந்தது.

“எவ்வளவோ போயாச்சு. அவர் ரேசுக்கும், குடிக்கும், கூத்துக்கும் எவ்வளவோ கொடுத்தேன். காசு மாலையிருந்து வைர மூக்குத்தி வரை. வெள்ளிகுத்துவிளக்கிலிருந்து வெண்கலஉருளி வரையில்.என் மீனாட்சியை மட்டும் கொடுக்கமாட்டேன்னுட்டேன். அடிச்சார்; சுவத்தில் மண்டையை மோதினார்;கத்தினார்;தகாதவார்த்தைகள் பேசினார்.நான் பிடிவாதமா இருந்துட்டேன். என் வாழ்க்கை மொத்தத்துக்கும் சாட்சியா இருந்தவளை கேவலம் சாராயக் கடனுக்கு கொடுப்பாளா? என்ன ! என்னைப் பத்தி எதுவுமே சொல்லாம பெருசா பாதாம் ஹல்வா கிளறத் தெரியும்னு பீத்த்திண்டிருக்கக் கூடாது. விளக்குமாத்துக்கு எதுக்கு பட்டுக் குஞ்சலம்னு அம்பாள் நினைச்சிருக்கணும். அதான் பாதாம் மாமின்னு பட்ட பேரை எனக்கு வாங்கி கொடுத்துட்டா.ஆனா இவா என்னை பாதாம் மாமின்னு கூப்பிடறச்சேயெல்லாம் எனக்கு என் அப்பாவோட வாழ்ந்த நாட்கள்தான் நினைவுக்கு வரும்.அது சந்தோஷமான விஷயம்தானே? “

பேசிக் கொண்டே மாமி ஹல்வாவைக் கிளறி தட்டி பரத்திக் கொட்டினாள். மாமி செய்த ஹல்வா மிகவும் சுவையாகவும் நேர்த்தியாகவும் இருந்தது என்பதைத் தனித்து சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் கெட்-டுகெதருக்கு வந்தவர்கள் பாதாம் ஹல்வாவை சாப்பிட்டுவிட்டு இது போன்ற ஹல்வாவை அவர்கள் வாழ்நாளில் சுவைத்ததில்லை என்றது மட்டும் நிஜம். குடித்தனக்காரர்களுக்கும் கொஞ்சம் கொஞ்சம் பாதாம் ஹல்வாவைக் கொடுத்து இது மாமி பண்ணியது என்று கூறிவிட்டு வந்தேன்.மாமியைப் பற்றி விசாரித்தவர்களிடம் மாமியின் மேட்டுக்குடி வாழ்வை மட்டும் சொன்னேன்.

கெட்-டுகெதர் முடிந்த இரண்டு நாட்கள் கழித்து மாமிக்கு ஒரு தரமான பருத்தி சுங்கடி புடைவை ஒன்று வாங்கிக் கொடுக்க நானும் அவரும் முடிவெடுத்தோம். தெற்குமாசி வீதியில் ஒரு நூல் சேலைக்கடையிலிருந்து நல்ல பச்சை நிறத்தில் சுங்கடிச் சேலை எடுத்துக் கொண்டு மாமியை பார்ப்பதற்கு சென்றேன்.

“நானே உங்க வீட்டுக்கு வரணும்னு இருந்தேன். வா! வா!“ என்று வரவேற்றார்.மாமியின் கைகளில் வெற்றிலை,பழம், மலர்களுடன் ஒரு பெரிய பித்தளை தாம்பாளம் இருந்தது.

நான் மாமியின் முன்பு நமஸ்கரித்து எழுந்தேன்.

“மனிதர்களை மனிதர்களாகவே எடுத்துண்டாப் போதாதா? யாருக்கு எதை நான் நிரூபிக்கணும்? அன்போட ஒரு புன்னகை போதாதா? தூக்கி எறியப்பட்டு, தூக்கி எறியப்பட்டு எனக்கு வாழ்க்கை பழகிடுத்து. ஆரம்பதிலெல்லாம் ஆணுக்கு ஒரு மாதிரியாவும் , பெண்ணுக்கு ஒரு மாதிரியாவும் இந்த வாழ்க்கை ஆக்கி வெச்சிருக்கேன்னு தோணும். ஆத்திரமா வரும். அதையும் பழகிக்கக் கத்துண்டேன். இருந்தாலும், இந்த மனசு என்னிக்காவது சொன்ன பேச்சை கேட்டிருக்கா? உள்ளூர ஒரு ஆசை இருந்திண்டே இருந்தது. சின்னக் குழந்தைகள் ஐஸ்க்ரீமுக்கு ஆசைப்படுமே அது மாதிரி ஓர் ஆசை. நான் எங்க அப்பா வீட்டில் ராஜாங்கம் பண்ணிண்டு இருக்கறச்சே, பெரிய பெரிய சட்டியில் பாதாம் ஹல்வா கிளறினேனே அது மாதிரி சாகறதுக்குள்ள ஒரு தடவையாவது பாதாம் ஹல்வா கிளறணும்னு ஆசைப்பட்டேன். பாடறவாளுக்கும்,சித்திரம் தீட்டறவாளுக்கும், கதை எழுதறவாளுக்கும் எவ்வளவு பாராட்டு காதில விழுந்தாலும் மனசு திருப்தியடையாது . இன்னும் ஒரு பாராட்டு கேட்கமாட்டோமோன்னு மனசு அடிச்சிக்கும். எனக்கும் அப்படி அடிச்சிண்டது. நான் பேருல மட்டுமில்லை நிஜமாவே பாதாம் ஹல்வா செய்யத் தெரிஞ்ச மாமிதான் அப்படின்னு காட்ட எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்த உனக்கு நான் நன்றி சொல்லணும்.“ என்றார் மாமி.

“என்ன மாமி நன்றி அதிதுன்னு பெரிய வார்த்தை சொல்றீங்க? “

மாமிக்கு அதற்குமேல் பேச முடியவில்லை. நா தழுதழுத்து விட்டது.

என் முன்னால் பித்தளை தாம்பாளத்தை நீட்டினார். வெற்றிலை,பாக்கு,பழம்,பூச்சரம், ஒரு ரூபாய் நாணயம் இவற்றுடன் அன்று நான் மாமி டிரங்க் பெட்டியில் பார்த்த வெள்ளி மீனாட்சி சிலையும் இருந்தது.

“மாமி என்ன இது?“ நான் பதறினேன்.

“வர்ற தாம்பூலத்தை வேண்டாம்னு சொல்லக் கூடாது. வாங்கிக்கோ. நீ என்னை புரிஞ்சிண்டதுக்கு இந்த மீனாட்சி ஒரு சாட்சி. அவ்வளவுதான். எடுத்துக்கோ“ என்ற மாமியின் த்வனியில் ஒரு அதிகாரம் தெரிந்தது.

தாம்பூலத்தப் பெற்றுக்கொண்ட என் கைகள் நடுங்கியவண்ணம் இருந்தன.

0 Replies to “பாதாம் மாமி”

  1. ஆஹா! கதை மிக அருமை. என்ன ஒரு எதார்த்தமான கதை சொல்லும் முறை. இயல்பான நடை-அழகான முடிவு. வாழ்க! இன்னும் இது போன்று எழுதுங்கள். நன்றி

  2. மீனாக்ஷி அருளில் பாதா மாமி நன்றாக இருக்கவீண்டும். மிக அருமையான பெருமைக் குறிய கதை.மேன்மலக்களின் குணம் எது என்று மாமி காண்பித்துவிட்டார். நன்றி ஜி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.