விதியின் பிழை காண் – திரைக்கதை – பகுதி 2

Indian_Temples_Tamil_Nadu_Horses_Architecture_Arts_Sculptures

 

வெளிப்புறம் – சாத்தூர் கிராமத்தின் பெரிய தெரு – பகல்
நல்ல கூட்டம். நாட்டார் வீட்டு வாசலில் இருந்து ஊரின் எல்லை வரை ஆண்களும் பெண்களுமாக, வண்ண வண்ண உடை உடுத்தி நிற்கிறார்கள். கூட்டத்தின் முன் பக்கம் ஊர் பெரிய மனிதர்களுடன் நாட்டாரும் அவர் குடும்பமும் நிற்கிறார்கள். பக்கத்தில் இரு பிராமணர்கள் பூரண கும்பத்துடன் அரசன் வரவுக்காகக் காத்திருக்கிறார்கள்.
 
கூட்டத்தின் ஓரத்தில், அங்கங்கே குதிரை வீரர்கள் சிலர் சுற்றிப் பார்த்தவாறே இருக்கிறார்கள். நாட்டாருக்குச் சற்றுத் தள்ளி, தன் குதிரை மேல் அமர்ந்திருக்கிறான் தென்னதரையன்.
 
நல்ல வெய்யிலில், நாட்டார் வீட்டுக் கூரையின் மேலிருந்து ஒரு ஆள் ஒருவன் குரல் கொடுக்கிறான்.
 

 

அறிவிப்போன்

 

பாண்டியர் வருகிறார்….

 

பாதையில் திரும்பி வருகிறது பாண்டியரின் ஊர்வலம். கூட்டத்தார் பரபரப்புடன் முன்னால் வருகிறார்கள். முரசுகள் அடிக்கின்றன. துந்துபிகளை ஊதுகிறார்கள். சத்தத்திற்கு இடையே, முன்னால் வரும் குதிரை வீரர்கள் பிரிந்து நிற்கிறார்கள்.
 
பாண்டியன் நெடுங்கோன் அலட்சியமாகக் குதிரையை நடத்தியவாறே வருகிறான். கருத்த திருமேனி. நல்ல உயரம. நெற்றியில் சந்தனமும், விபூதியும் இட்டுக், களையான முகம்.
 
அவனுக்குப் பின்னால் இன்னொரு குதிரையில் ஒற்றர் படைத் தலைவன் அச்சுதன் வருகிறான்.
 
சற்றுத் தள்ளி பல்லக்கு ஒன்று வருகிறது. அதற்கு பின்னால் சில தாதிமார்கள் நடந்து வருகிறார்கள்.
 
ஊர்வலம் இன்னும் பின்னால் தொடர்கிறது. பல வீரர்கள். உடைகள் மற்றும் இதரப் பொருட்களுடன் வண்டிகள், என்று வந்து கொண்டே இருக்கிறது.
 
நாட்டாரும் பிறரும் முன்னால் வருகிறார்கள். பிராமணர்கள் மந்திரம் சொல்கிறார்கள். வாத்தியங்கள் இன்னும் முழங்குகின்றன. பாண்டியன் குதிரையில் இருந்து குதித்து இறங்குகிறான்.
 
நாட்டார் முன்னால் வந்து ஏதோ சொல்கிறார். அவன் சிரித்தவாறே சுற்றிப் பார்க்கிறான். சற்றுத் தள்ளி நிற்கும் தென்னதரையனைப் பார்த்துக் கை அசைக்கிறான். தென்னதரையன் வணங்குகிறான்.
 
பல்லக்கு வந்து நிற்கிறது. உள்ளிருந்து ராணி ருக்மிணி தேவி, குழந்தையைக் கையில் எடுத்தவாறே இறங்குகிறாள். இருபத்தைந்து வயதிருக்கும். பெண்களுக்குச் சற்று அதிகமான உயரம்; ஆனால் வாளிப்பான உடல். கம்பீரமாக இருக்கிறாள். அரசனுடன் வந்து நிற்கிறாள். மந்திரங்கள் சொல்லி முடித்ததும் எல்லோரும் நாட்டார் வீட்டை நோக்கிப் போகிறார்கள்.
 
தென்னதரையன் சுற்றிப் பார்க்கிறான். ஒற்றர் தலைவன் அச்சுதன் அவனை நோக்கி வருகிறான்.
 

 

அச்சுதன்

 

அரையா, இங்கே நன்றாகச் சாப்பிட்டுத் தூங்கி வருகிறாய் போலிருக்கிறது?

 

தென்னதரையன்
(முறைத்தவாறே)

 

அச்சுதரே, நான் தூங்கி மூன்று நாட்கள் ஆயிற்று. அரசர் கூடாரத்தில் உங்களைப் போல அடைந்து கிடக்கும் பழக்கம் எனக்கில்லை.

 

அச்சுதன்
(சிரிக்கிறான்)

 

இவ்வளவு பொறாமை இருக்கக் கூடாது. அது சரி, இங்கே என்ன கண்டு பிடித்தாய்? களப்பிரர் எல்லைக்கு அருகில் இருக்கிறோம்.

 

தென்னதரையன்

 

அரசர் இவ்வளவு தூரம் வந்திருக்கக் கூடாது. ஆனால் இங்கே ஆபத்து எதுவும் இருப்பது போலத் தெரியவில்லை.

 

அச்சுதன்
(மர்மமாக)

 

நிச்சயமாகவா சொல்கிறாய்?

 

தென்னதரையன்

 

அச்சுதரே, நீங்கள் ஒற்றர் படைத் தலைவர். உங்களுக்கு ஏதாவது தெரிந்தால், என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது உங்கள் கடமை.

 

அச்சுதன்

 

என்னப்பா செய்வது? அரசரே உன்னை நம்புவதில்லை. நான் என்ன செய்ய? வேலையில் கொஞ்சம் சுறுசுறுப்பாக இரு. தூங்காதே.
குதிரையை நகர்த்திச் செல்கிறான். தென்னதரையன் கோபத்துடன் அவனை முறைத்துப் பார்க்கிறான்.
 
சற்று தூரத்தில் ராணியும், அரசனும் நாட்டார் வீட்டுப் படியேறிச் செல்கிறார்கள்.
 
வெளிப்புறம் – சாத்தூர் வனதுர்க்கை கோவில் – பகல்
சாத்தூர் வனதுர்க்கை கோவில் வாசலில் பூசாரி ஒருவர் பெருக்குகிறார். துடைப்பத்தை தூண் ஒன்றில் தட்டி விட்டு நிமிர்ந்து கோவிலுக்கு வரும் பாதையைப் பார்க்கிறார். நீளப் பாதையில் மக்கள் ஒன்றிரண்டாக வந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு மேட்டில் மேலே ஏறிப் பாதை மறைகிறது. கோவிலுக்கு வெளியே சிறு மைதானம் ஒன்று சுத்தமாக இருக்கிறது. சுற்றி பெரும் காடும் புதர்களும் பரந்து போகின்றன.
 
தருமனும் நாகையும் புதுத் துணி உடுத்தி கோவிலுக்குள் போகிறார்கள். அம்மனைக் கும்பிட்டு விட்டு கல் தரையில் அமர்கிறார்கள். அவர்களுக்கு அருகில் கோவிலுக்குள் வயதான கிழவி ஒருத்தி பூமாலை கட்டிக் கொண்டிருக்கிறாள்.
 

 

பூசாரி

 

என்னப்பா தருமா, அரசரைப் பார்த்தாயா? எப்படி இருக்கிறார்?

 

தருமன்

 

ஒரே கூட்டம் அண்ணே. எல்லாம் இடித்து தள்ளினார்கள். போங்களப்பா நீங்களும் உங்கள் அரசரும் என்று நான் வெளியே வந்து விட்டேன்.

 

நாகை

 

நான் பார்த்தேன். இரண்டு பேரை ஏறி மிதித்துப் பார்த்து விட்டேன். இதற்கெல்லாம் யோசிக்கவே கூடாது.

 

கிழவி

 

எங்கள் காலத்தில் இளம் பெண்கள் எல்லாம் அரசர்கள் கண்ணில் படவே மாட்டோம். இவன் சிறுவனாக இருக்கும் பொழுது இவன் அப்பா இங்கே வந்தார். எல்லோரும் வீட்டில் தான் இருந்தோம்.

 

நாகை

 

நீ மட்டும் சன்னல் வழியே பார்த்துக் கொண்டு இருந்திருப்பாய்.

 

சனங்கள் இன்னும் வருகிறார்கள். சில மரத்தடிகளில் உட்கார்ந்து கொள்கிறார்கள். சிறுவர்கள் சிலர் மரங்களின் மீது ஏறுகிறார்கள். தூரத்தில், மேட்டின் மேல் இரு குதிரை வீரர்கள் ஏறி வருகிறார்கள். மேட்டின் மேலேயே நிற்கிறார்கள்.

 

பூசாரி

 

ஏனப்பா, அரசருக்குக் காவல் பலமாக இருக்கிறது? சண்டை எதாவது வரும் போல இருக்கிறதோ?

 

தருமன்

 

எங்கள் வீட்டுக்குக் கூட இரண்டு வீரர்கள் வந்தார்கள். என்னவோ தெரியவில்லை.

 

கிழவி

 

நூறு வருடமாக யுத்தம் என்று ஒன்றே இல்லை. இப்படியே விட்டால் இந்த ராஜாக்களுக்குப் பொழுது போகாது. அடித்துக் கொண்டு சாக வேண்டும்.

 

பூசாரி

 

பாட்டி, சும்மா இரு. யார் காதிலாவது விழுந்து வைக்கப் போகிறது.

 

சுற்றிப் பார்க்கிறார். சற்றுத் தள்ளி பெரிய தாடி வைத்துக் கொண்டு, வெள்ளை உடை உடுத்தி ஒரு பெரியவர் அமர்ந்திருக்கிறார். கால்களை மடக்கிப் பத்மாசனத்தில் அமர்ந்து யோக நிஷ்டையில் இருப்பது போலக் கண் மூடி அமர்ந்திருக்கிறார். அவர் அருகே இன்னும் இருவர் அது போலவே உடை உடுத்தி, பெரிய குங்குமப் பொட்டுடன் அமர்ந்து இருக்கிறார்கள். பூசாரி அவர்களைப் பார்க்கிறார். தருமனும் நாகையும் திரும்பிப் பார்க்கிறார்கள்.

 

நாகை

 

யார் இவர்கள்? முன்னால் இங்கு பார்த்ததில்லையே? அரசருடன் வந்திருக்கிறார்களா?

 

பூசாரி

 

நானும் முன்னால் பார்த்ததில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன்.

 

தருமன்

 

பொதிகை மலைச் சித்தர்கள் போல இருக்கிறார்கள். அம்மன் வழிபாடு செய்பவர்கள் என்று நினைக்கிறேன்.

 

பூசாரி

 

சித்தர்களே தான். சாக்தர்கள். சிவனை விடச் சக்தி பெரியவள் என்று சக்தியைக் கும்பிடுபவர்கள். அரசர்க்கு உண்மையில் இவர்களைப் பிடிக்காது. அரச குடும்பத்தவர்கள் எல்லோருமே சிவ பக்தர்கள். ஆனால் நம் ராணி மலை நாட்டைச் சேர்ந்தவள் இல்லையா? ராணிக்கு இவர்களிடத்தில் பக்தி உண்டு.

 

கிழவி

 

ஆச்சு, இதை வைத்துக் கொண்டு சிவனா சக்தியா என்று அடுத்த யுத்தம் வந்து விடும். எல்லோரும் கத்தியைத் தூக்கிக் கொண்டு சுற்றுவார்கள்.

 

பூசாரி

 

பாட்டி, நீ சும்மா இருக்க மாட்டாய்? அரசர் வரும் நேரம் வந்து விட்டது.

 

கோவிலைச் சுற்றியும், கோவிலுக்கு உள்ளும் நல்ல கூட்டம்.
மேட்டின் மேல் வழுதியும் பெருமாளும் குதிரையில் அமர்ந்து சுற்றிப் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

 

வழுதி

 

நல்ல காடு. ஒரு படையே இங்கே மறைந்திருந்தாலும் நமக்குத் தெரியாது.

 

பெருமாள்

 

அதற்குத் தான் ஒற்றர் தலைவர் அச்சுதர் இருக்கிறார்.

 

வழுதி

 

உன்னிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். அவருக்கும், நம் அரையருக்கும் என்ன தான் பிரச்சினை?

 

பெருமாள்

 

பெரிய இடங்களில் இருக்கும் பிரச்சினை தான்.

 

இருவரும் பேசியபடி நிற்கும் பொழுது அவர்கள் குரல் மங்குகிறது. சற்றுத் தள்ளி அவர்கள் கவனிக்காத நேரத்தில் ஒரு புதர் லேசாக அசைகிறது. அடுத்த வினாடி அதைத் திறந்து கொண்டு மலையன் என்னும் குள்ளன் வெளியே வந்து நிற்கிறான்.
உள்புறம் – நாட்டார் வீட்டில் பாண்டியனின் மாடி அறை – பகல்
பாண்டிய மன்னன் நெடுங்கோன் சன்னல் அருகே நின்று வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறான். சற்றுத் தள்ளி ஒற்றர் தலைவன் அச்சுதன் மெளனமாக நிற்கிறான். அறை சற்று இருட்டாக இருக்கிறது.
 
தென்னதரையன் உள்ளே வருகிறான். அரசன் அவனைக் கவனிக்காதது போல சன்னல் வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறான்.
 

 

நெடுங்கோன்

 

இந்த சன்னல் வழியாக யார் வேண்டுமானாலும் என் உயிரைப் பறிக்கலாம். நெல்வேலியைப் போல இல்லாத திறந்த சன்னல்கள்.

 

அரையனும் அச்சுதனும் மெளனமாக இருக்கிறார்கள்.
 
நெடுங்கோன் திரும்பி அரையனைப் பார்க்கிறான்.
 

 

நெடுங்கோன்

 

அரையா, காவல் பலமாக இருக்கிறதா?

 

தென்னதரையன்

 

அரசே, நம் பார்வையை மீறி யாரும் உள்ளே வர முடியாது.

 

நெடுங்கோன் அச்சுதனைப் பார்த்துக் கண்ணடிக்கிறான்.

 

நெடுங்கோன்

 

பார்ப்போம்

 

உள்ளே, அடுத்த அறையில் குழந்தை அழும் சத்தம் கேட்கிறது.

 

தென்னதரையன்

 

அரசே, இன்று காலை இந்த ஊருக்கு வரும் பாதையில் சில குள்ளர்களைப் பார்த்தோம். உங்களைப் பார்த்து ஏதோ விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றார்கள். நான் விரட்டி விட்டேன்.

 

நெடுங்கோன் முகம் மாறுகிறது. மறுபடி சன்னல் வழியே வெளியே பார்க்கிறான்.
வெளிப்புறம் – வனதுர்கை கோவில் – பகல்
மந்திரச் சத்தம் முதலில் கேட்கிறது. சடார், சடார் என்று ஹோம குண்டத்தில் சுள்ளிகள் பற்றிக் கொள்ளும் சத்தம். நம் கண் முன்னால் வாய் பிளந்த ஒரு அசுரனின் முகம் தெரிகிறது. சற்றுப் பின்னால் வரும் பொழுது அந்த அசுரன் கோவிலின் முகப்பில் உள்ள ஒரு சிற்பம் என்று தெரிகிறது. கீழே ஹோம குண்டம் எரிகிறது. மக்கள் கூட்டத்தின் தலைகள் தெரிகின்றன. பாண்டியன் நெடுங்கோன் சம்மணமிட்டு தீயின் முன்னால் அமர்ந்திருக்கிறான். அவன் அருகே ராணி. மந்திரச் சத்தங்கள் ஓங்கிக் கேட்கின்றன.
 
தென்னதரையன் கோவிலைச் சுற்றி வருகிறான். அரசனுக்கு அருகில் அச்சுதன் நிற்கிறான். சற்றுத் தள்ளி கணியனும் பெருமாளும்.
 
டனார், டனார் என்று மணிச் சத்தம் கேட்கிறது. அரசன் எழுந்து நிற்கிறான். எல்லோரும் சன்னதியைப் பார்க்கிறார்கள். அம்மனின் திரு உருவம் முன்னால் ஆரத்தி காட்டத் தொடங்குகிறார்கள். நெடுங்கோன் கையைத் தூக்கிக் கும்பிடுகிறான். கண்ணை மூடுகிறான்.
 
“வீல்” என்று ஒரு அலறல் கேட்கிறது. நெடுங்கோனைச் சுற்றி உள்ள கூட்டத்தை பிளந்து கொண்டு ஒருவன், கோவில் வாசலுக்கு நேராக வந்து நிற்கிறான். அவன் கையில் ஒரு குறுவாள். கணியன் திகைத்து அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கிறான். கத்தி வைத்திருப்பவன் அரசனை நோக்கிப் பாய்கிறான்.
 
வினாடி நேரத்தில் அச்சுதன் அவனைத் தட்டி விடுகிறான். அவன் மேல் கணியனும் பெருமாளும் விழுகிறார்கள்.
 
அரசன் மூடிய கண்ணை மெதுவாகத் திறக்கிறான். சுற்றி மணிச் சத்தம் நின்று விடுகிறது. பெரும் அமைதி. அவன் திரும்பிப் பார்க்கும் போது கீழே கிடந்த மனிதனைத் தூக்கி நிறுத்துகிறார்கள்.
 

 

நெடுங்கோன்

 

யார் நீ?

 

அந்த மனிதன் மெளனமாக இருக்கிறான்.
 
அச்சுதன் கீழே குனிந்து அந்த மனிதனின் கத்தியை எடுக்கிறான். அதன் பிடியை உற்று நோக்குகிறான்.
 

 

அச்சுதன்

 

அரசே, இதில் களப்பிரர் இலச்சினை பொறித்து இருக்கிறது.

 

நெடுங்கோன் புன்னகைக்கிறான்.

 

நெடுங்கோன்

 

உன் தலைவனுக்கு இருக்கும் நாடு போதாது போல் இருக்கிறது?

 

நெடுங்கோன்
(மற்றவர்களைப் பார்த்து)
கொட்டடியில் வையுங்கள். அம்மன் வேலையெல்லாம் முடிந்து விட்டு பார்த்துக் கொள்ளலாம்

 

திரும்பி சந்நிதியைப் பார்க்கிறான்

 

நெடுங்கோன்

 

ஆரத்தி தொடரட்டும்.

 

மறுபடியும் மணிச் சத்தம் கேட்கிறது. உடுக்கு சத்தமும் சேர்ந்து கேட்கிறது. அரசன் கை கூப்பி வணங்குகிறான்.

 

வெளிப்புறம் – வனதுர்கை கோவில் வெளியே – பகல்
தென்னதரையன் கோவிலுக்கு வெளியே நிற்கிறான். தூரத்தில் களப்பிரர் ஒற்றனை இழுத்துப் போகிறார்கள். அதைப் பார்த்து விட்டுத் திரும்புகிறான்.
 
கோவிலின் உள்ளிருந்து நெடுங்கோனும் ராணியும் வெளியே வருகிறார்கள். சுற்றி உள்ள கூட்டம் விலகுகிறது.
 

 

நெடுங்கோன்
(அரையனைப் பார்த்து)
உன் ஆட்கள் வேலை பிரமாதம். சன்மானம் கொடுக்கச் சொல்கிறேன்.

 

தென்னதரையன் வணங்குகிறான்.
 
நெடுங்கோன் சற்றுத் தள்ளி உள்ள குதிரையை நோக்கிப் போகும் பொழுது கூட்டத்தை விலக்கி கொண்டு நாம் முன்னே பார்த்த மலையன் என்னும் குள்ளன் வருகிறான். வந்து அரசன் காலில் விழுகிறான்.
 
உயர்ந்து நிற்கும் அரசன், குள்ளனைப் பார்த்துத் திடுக்கிட்டு
 

 

நெடுங்கோன்

 

அடேய், யார் நீ? எழுந்திரு.

 

தென்னதரையன் அரசனுக்கு முன்னால் வந்து குள்ளனைத் தூக்க முயற்சி செய்கிறான். குள்ளன் குதித்து எழுகிறான்.

 

மலையன்

 

அய்யா, எங்களைக் காப்பாற்ற வேணும். குற்றாலத்தில் எங்கள் குலம் போய் விடும். காடு எல்லாம் வெட்டி..

 

நெடுங்கோன் குறுக்கிட்டுக் கத்துகிறான்.

 

நெடுங்கோன்

 

அடேய், அதற்காக இங்கே ஏன் வந்தாய்? நெல்வேலியில் எவ்வளவு முறை உங்களைப் பார்த்திருப்பேன். ஓடிப் போ. மறுபடி உன்னைப் பார்த்தேன், உன் உயிர் உன்னுடையது இல்லை.

 

நெடுங்கோன் கோபத்துடன் விலகிப் போகிறான். தென்னதரையன் அவன் பின்னால் போகிறான். ராணி பல்லக்கின் அருகில் குழந்தையுடன் நிற்கிறாள். குள்ளனையே பார்க்கிறாள்.

 

வெளிப்புறம் – நாட்டார் வீட்டின் எதிரே உள்ள தெரு – பகல்
நாட்டார் வீட்டின் எதிரே பெரிய பந்தல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேலையாட்களின் சத்தமாக இருக்கிறது. தென்னதரையனும் அவன் ஆட்களும் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு தொன்னையில் பொங்கல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

வழுதி
எனக்குப் புரியவில்லை. ஒற்றனை நிறுத்தியதால் இவர்களுக்கு சன்மானமா?

 

தென்னதரையன்
(புன்னகையுடன்)

 

ஆமாம்

 

கணியன்
ஏன் கேட்கிறாய்?

 

வழுதி
நான் பைத்தியம் போல வெளியே வெய்யிலில் சுற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு ஒன்றும் கிடையாதா?

 

எல்லோரும் சிரிக்கிறார்கள்.

 

தென்னதரையன்
உன்னையும் என்னையும் தாண்டித் தான் அந்த ஒற்றன் உள்ளே வந்திருக்கிறான்.

 

பெருமாள்
இந்தக் குள்ளன் எங்கிருந்து வந்தான்? திடீரென்று வந்து தொலைக்கிறான்?

 

வழுதி
அவர்களுக்கு மந்திர வித்தை தெரியும் என்று குற்றாலத்தில் சொல்வார்கள். மாயமாக மறைந்து கொள்வார்கள். அவர்களிடம் மிகவும் சாக்கிரதையாக இருக்க வேண்டும்.

 

தென்னதரையன்
நாம் ஆளை விட்டு விட்டு மந்திரம், தந்திரம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். பாண்டியர் நம் மீது கோபப்படப் போகிறார்..

 

வழுதி
அதோ பாருங்கள், இந்த ஊர் மந்திரவாதி போகிறான்.

 

தருமன் சற்றுத் தள்ளித் தெருவைக் கடந்து போகிறான்.

 

தென்னதரையன்
மந்திரவாதியா? உனக்கு எப்படித் தெரியும்?

 

வழுதி
சாதாரண மந்திரவாதியல்ல அரையரே. என்னைப் பார்த்தவுடன் என் பூர்வீகம் எல்லாம் சொல்கிறான். பேசாமல் பெருமாளை ஊருக்கு அனுப்பி விட்டு இவனை நம்முடன் சேர்த்துக் கொள்ளலாம்.

 

தருமனை தொடர்ந்து போகிறோம். அவன் நாட்டார் வீட்டைத் தாண்டி தெருவின் மறு பக்கம் செல்லும் பொழுது ஒரு குரல் கேட்கிறது.

 

பட்டத்திப் பாட்டி
தருமா, இங்கே வந்து விட்டு போ.

 

தருமன் சலிப்புடன் பாட்டியின் அருகே போகிறான். பட்டத்திப் பாட்டி மெதுவாகப் பாக்கு இடித்துக் கொண்டிருக்கிறாள்.

 

பட்டத்திப் பாட்டி
எப்படி இருக்கிறாய்?

 

தருமன்
பாட்டி, இதைக் கேட்கவா இங்கே கூப்பிட்டாய்?

 

பட்டத்திப் பாட்டி
தருமா, பாட்டி கொஞ்ச நாளில் உயிரை விட்டு விடுவேன். அதற்கு முன்னால் ஒரு நாலு வார்த்தை
பேசக் கூடாதா?

 

தருமன்
நீ இப்படித் தான் ரொம்ப நாளாகச் சொல்லி கொண்டிருக்கிறாய்.

 

பட்டத்திப் பாட்டி
உன் தாத்தா என்னிடம் எவ்வளவு அன்பாக இருப்பார் தெரியுமா? உன்னைப் பார்த்தால் அவரைப் பார்ப்பது போலவே இருக்கிறது.

 

தருமன்
சரி, சந்தோஷம். நான் கிளம்புகிறேன்.

 

தருமன் திரும்புகிறான்.

 

பட்டத்திப் பாட்டி
உன் தாத்தாவின் பெட்டி ஒன்று கூட நம் வீட்டில் தான் இருக்கிறது. கடைசி நேரத்தில் வாங்க மறந்து விட்டார்.

 

தருமன் திடுக்கிட்டுத் திரும்பி,

 

தருமன்
பாட்டி, இதை ஏன் முன்னால் சொல்லவில்லை? எங்கே இருக்கிறது பெட்டி? திறந்து பார்த்தாயா?

 

பட்டத்திப் பாட்டி
நீ எங்கேயோ அவசர வேலையாகப் போகிறாயே, போய் விட்டு வா.

 

தருமன்
பாட்டி, இப்போது இது தான் முக்கியம். பெட்டி எங்கே?

 

பட்டத்திப் பாட்டி
உள்ளே எங்கோ பரண் மேல் இருக்கிறது. பார்த்து வைக்கிறேன்.

 

உள்புறம் – நாட்டார் வீட்டில் பாண்டியனின் அறை – இரவு
மெல்லிய மத்தள ஒலி வெளியே இருந்து கேட்கிறது. நாட்டார் வீட்டில் ஒரு அறையில் பாண்டியன் நெடுங்கோன், பளபளக்கும் ஒரு கண்ணாடி எதிரே நிற்கிறான். இடுப்பு கச்சையைச் சரி செய்து கொள்கிறான். தென்னதரையனும் அச்சுதனும் சற்றுப் பின்னால் நிற்கிறார்கள்.
 
பாண்டியன் திருநீறு இட்டுக் கொள்கிறான்.
 

 

நெடுங்கோன்
அந்தக் குள்ளர்கள் என்ன ஆனார்கள்?

 

தென்னதரையன்
ஊருக்கு வெளியே துரத்தி விட்டோம். ஆனால் போகிற மாதிரித் தெரியவில்லை.

 

நெடுங்கோன்
அச்சுதா, அவர்கள் மேல் ஒரு கண் வை.

 

பாண்டியன் திரும்பி அறையை விட்டு வெளியே வருகிறான். ராணி அலங்காரத்துடன், குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு நிற்கிறாள். அரசன் இளவரசனைப் பார்த்துப் புன்னகைக்கிறான். சிறிது திருநீறை எடுத்து அவன் நெற்றியில் பூசுகிறான்.
 
பிறகு ராணியின் கையைப் பிடித்தவாறே வாசலை நோக்கி நடக்கிறான். வெளியே மத்தளத்தின் சத்தம் அதிகமாகிறது. ஒரு வேலையாள் வாசல் கதவைத் திறக்கிறான். அந்தி மங்கி வரும் வேளை. வெளியே தீப்பந்தங்கள் எரிகின்றன.
 

 

(CONTINUOUS)

 

வெளிப்புறம் – நாட்டார் வீட்டுக்கு வெளியே – இரவு.
வாசலை ஒட்டிய மேடையில் ஏறி அரசன் அமர்கிறான். ராணி அவன் அருகே அமர்கிறாள். தெருவுக்கு மறுபக்கம் உள்ள மேடையில் பாடுபவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். இடையே நல்ல மக்கள் கூட்டம்.
 
பாடல் தொடங்குகிறது. இருள் கவிகிறது. நாட்டார் அரசருக்கு அருகில் சிலரை அழைத்து வருகிறார். தருமன் கூட்டத்தில் இருந்து எழுந்து வருகிறான்.
 
அவன் மேடையில் ஏறி வரும் போது நாட்டியம் நடக்கிறது. அரசர் முன்னால் யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார். நாட்டார் அடுத்து தருமனைக் காட்டி:
 

 

நாட்டார்
சோதிடர் பெருந்துறையாரின் பேரன். தருமன் என்று பெயர். அசாத்தியமாகக் குறி சொல்லுவான்.

 

நெடுங்கோன்
உன் பாட்டனாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல சொல் வாய்த்தவர்.

 

நாட்டார்
போன மாதம் நம் வீட்டில் தொலைந்து போன நகைகளை மீட்டுக் கொடுத்தான்.

 

நெடுங்கோன் தலையாட்டுகிறான்.
 
தருமன் திரும்பி இறங்க இசை பெரிதாகிறது.ராணி அரசனிடம் ஏதோ சொல்கிறாள். பிறகு எழுந்து குழந்தையைத் தூக்கியவாறே உள்ளே செல்கிறாள்.
 
பாண்டியன் கம்பீரமாக அமர்ந்திருக்கிறான். நாட்டியம் தொடர்கிறது.
 
வெளிப்புறம் – நாட்டார் வீட்டின் எதிரே உள்ள பந்தலும் தெருவும் – இரவு நேரம்
(இந்தக் காட்சி ஒரே இடத்தில் பல நேரங்களில் காட்டப்படுகிறது.)
கூத்து முடிந்து வெகு நேரமாகி விட்டது.
 
பல குரல்கள் பேசும் சத்தம் மெதுவாக மங்குகிறது.
 
தீப்பந்தங்கள் பல அணைகின்றன. தெரு வெளிச்சம் குறைகிறது.
 
ஊர்க்காவலன் மெதுவாகத் தாண்டி நடந்து போகிறான்.
 
மூன்றாம் சாமத்தைக் குறிக்கும் விதமாக மூன்று முறை மணி அடிக்கும் ஓசை கேட்கிறது.
 
“இரவு – மூன்றாம் சாமம்” என்று INSERT தெரிகிறது.
 
“வீல்” என்று ஒரு அலறல் கேட்கிறது.
 
திரையில் இருட்டு.
 
உள்புறம் – தருமனின் வீடு – இரவு

 

திரையில் இருட்டு
 
“தொம், தொம், தொம்” என்று கதவை இடிக்கும் சத்தம் கேட்கிறது.ஒரு சிறு விளக்குத் தெரிகிறது. தருமன் எழுந்து உட்கார்கிறான்.மறுபடி “தொம், தொம், தொம்” என்று சத்தம்.
 
தருமன் எழுந்து நின்று கதவுக்கு அருகே வந்து நிற்கிறான்.
 

 

தருமன்

 

யார்?

 

வழுதி

 

கதவை திற தருமா. பாண்டியர் அழைக்கிறார்.

 

தருமன் தாழை நீக்கிக் கதவைத் திறக்கிறான். வாசலில் வழுதி நிற்கிறான். அவனுக்கருகே தீப்பந்தத்தைக் கையில் பிடித்தவாறு பெருமாள் நிற்கிறான்.

 

வழுதி

 

சீக்கிரம் கிளம்பி வா. மன்னர் அழைக்கிறார்.

 

தருமன் சுற்றிப் பார்க்கிறான். தெருவில் குதிரைகள் பாய்ந்து போகின்றன. வீரர்கள் சிலர் ஓடுகிறார்கள்.
 
பேசாமல் திரும்பிப் போய் ஒரு மேல் துண்டைப் போர்த்திக் கொண்டு வாசலுக்கு வருகிறான். அவன் கையில் ஒரு தோல் பெட்டி ஒன்று இருக்கிறது. நாகை இதற்குள் வாசலில் வந்து நிற்கிறாள்.
 

 

நாகை

 

ஐயா, என்ன விஷயம்?

 

வழுதி பதில் சொல்லாமல் நிற்கிறான்.
 
தருமன் வெளியே வருகிறான்.
 

 

தருமன்

 

என்ன விஷயம் என்று சொன்னால்…

 

வழுதி

 

இளவரசனை, பாண்டியர் மகனைக் காணவில்லை.
உள்புறம் – நாட்டார் வீட்டில் ராணியின் அறை – இரவு

 

ராணி தலை குனிந்து கட்டிலில் உட்கார்ந்திருக்கிறாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகுகிறது.
 
அந்த அறையின் நடுவில் பாண்டியன் நிற்கிறான். எதிரே தென்னதரையனும் அச்சுதனும் நிற்கிறார்கள். அறையில் இரு எண்ணை விளக்குகள் எரிகின்றன.
 

 

நெடுங்கோன்

 

அரையா, வாசல் வழியாக யாரும் வரவில்லை என்கிறாயா?

 

தென்னதரையன்

 

அரசே, யாரும் வரவில்லை. நான் உங்கள் அறை வாசலில், இந்த அறையைப் பார்த்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தேன். பின் வாசலில் காவல் இருந்தது. ஒரே வழி, அதோ, அந்த சன்னல் தான்.
எல்லோரும் திரும்பிச் சன்னலைப் பார்க்கிறார்கள். ராணி தலை குனிந்தவாறே இருக்கிறாள். சன்னலுக்கு வெளியே நல்ல இருட்டு.

 

நெடுங்கோன்

 

எடுத்துப் போனவன் இன்னும் ஊரில் இருக்கலாம், இல்லையா?

 

உள்புறம் – நாட்டார் வீட்டில் ராணியின் அறைக்கு வெளியே, மாடிப்படி அருகே – இரவு

 

தருமன் படி ஏறி வந்து நிற்கிறான். வழுதி ராணியின் அறைக்கு வெளியே போய் நிற்கிறான். உள்ளே பார்க்கிறான். பிறகு, தருமனைப் பார்த்துக் காத்திருக்குமாறு சைகை செய்கிறான்.
 
ஒரு வீரன் மாடியில் வேகமாக வருகிறான். வழுதியிடம் போய்,
 

 

வீரன்

 

களப்பிரர் ஒற்றன் ஒருவனைக் காலையில் பிடித்தோம் இல்லையா? அவனைக் காணோம்.

 

வழுதி உள்ளே செல்கிறான். தருமன் தலை குனிந்து ஏதோ முணுமுணுக்கிறான்.
 
வழுதி, வெளியே வந்து,
 

 

வழுதி

 

தருமா, வா.

 

தருமன் ராணியின் அறைக்குள் மெதுவாகப் போகிறான். வழுதி வாசலிலேயே நின்று விடுகிறான். உள்ளே எல்லோரும் அவனையே பார்க்கிறார்கள். அவன் நெடுங்கோனுக்குத் தலை வணங்குகிறான்.

 

நெடுங்கோன்

 

தருமா, இளவரசனைக் காணவில்லை

 

ராணியிடம் இருந்து ஒரு விசும்பல் கேட்கிறது. பாண்டியன் அவளைத் திரும்பிப் பார்த்து விட்டு மறுபடி தருமனைப் பார்க்கிறான்.

 

நெடுங்கோன்

 

இப்போது என் மகன் எங்கிருக்கிறான், சொல்வாயா?

 

தருமன்
(தயக்கத்துடன்)

 

முயற்சி செய்கிறேன் அரசே.
நெடுங்கோன்

 

முயற்சி செய்து பார்க்க இது நேரமில்லை. எந்த மாடனையோ, சாத்தனையோ கூப்பிட வேண்டுமோ, கூப்பிடு. நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்.

 

தருமன்

 

சரி அரசே

 

தருமன் ஒரு ஓரமாகச் சென்று அமர்கிறான். கையோடு கொண்டு வந்த பெட்டியைத் திறக்கிறான். எல்லோரும் அவனையே பார்க்கிறார்கள். நெடுங்கோன் கையை ஆட்டுகிறான். தென்னதரையன் போய்க கதவைச் சாத்துகிறான். ராணியும் தருமனையே பார்க்கிறாள்.
 
தருமன் உள்ளிருந்து ஏதோ ஒரு பொருளைக் கையில் எடுத்துச் சற்று நேரம் கண் மூடி அமர்கிறான். பிறகு கண்ணைத் திறக்கிறான்.
 

 

தருமன்

 

அரசே, வடக்கே மதுரை போகும் சாலையில் சில குதிரை வீரர்கள் தெரிகிறார்கள்.

 

நெடுங்கோன்
(பரபரப்புடன்)

 

இளவரசன் அவர்களுடன் இருக்கிறானா?

 

தருமன்

 

ஒருவன் கையில் ஒரு மூட்டை தெரிகிறது.

 

நெடுங்கோன் சட்டென்று அச்சுதன் பக்கம் திரும்புகிறான்.

 

நெடுங்கோன்

 

அச்சுதா, உடனே உன் ஆட்களை அந்தக் களப்பிர நாய்கள் பின்னால் அனுப்பு.

 

அச்சுதன் வெளியே போகிறான். தென்னதரையனும் அவன் பின்னால் போகிறான்.

 

நெடுங்கோன்
(தயக்கத்துடன்)

 

சோதிடா, குழந்தை உயிரோடு இருக்கிறானா?

 

தருமன் உடல் லேசாக நடுங்குகிறது.

 

தருமன்

 

உயிருடன் தான் இருக்கிறான், அரசே.
வெளிப்புறம் – சாத்தூரில் இருந்து மதுரை போகும் சாலை – பகல்

 

லேசாக விடியத் தொடங்கும் நேரம்.
 
பத்து பதினைந்து குதிரை வீரர்கள் நிற்கிறார்கள். பெரும் உடம்பு படைத்த வீரர்கள். போர்க்குதிரைகள்.
 
அச்சுதன் அவர்களுக்கு எதிரே, இன்னொரு குதிரையில் அமர்ந்திருக்கிறான்.
 

 

அச்சுதன்

 

முதலில் இளவரசனை மீட்க முயற்சி செய்யுங்கள். அப்படி இல்லாமல் எல்லையைத் தாண்டி விட்டால் வடக்கன்குளம் கிராமம் வருகிறது. அங்கே களப்பிரனின் எல்லைக் காவல் படை இருக்கிறது. அது வரை சென்று விட்டால்…

 

அவன் பேசும் குரல் மட்டுப்படுகிறது. எதிரே சாலை நீளமாகச் செல்கிறது. சற்று நேரத்தில் அச்சுதன் பேசி முடித்து விட்டு குதிரையை அப்பால் நடத்துகிறான். வீரர்கள் ஒன்றாகச் சாலையில் கிளம்புகிறார்கள். கிழக்கில் சூரியன் தெரிகிறான்.

 

உள்புறம் – தருமனின் வீடு – பகல்

 

தருமனின் வீட்டில் அவன் அமர்ந்து இருக்கிறான். தலையில் கை வைத்து இருக்கிறான்.

 

நாகை

 

தருமா, இளவரசனைக் காணவில்லையாமே? வீடு வீடாக வந்து தேடித் போனார்கள். உன்னை பாண்டியர் எதற்காக கூப்பிட்டார்?

 

தருமன்

 

இளவரசன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துச் சொல்ல.

 

நாகை
(ஆச்சரியத்துடன்)

 

உன் புகழ் அவ்வளவு பரவி விட்டதா?

 

தருமன்

 

நாட்டார் சொல்லி இருக்கிறார்.

 

நாகை

 

சரி, நீ கண்டுபிடித்துச் சொன்னாயா?

 

தருமன் மெளனமாக இருக்கிறான்.

 

நாகை

 

என்ன சொன்னாய்?

 

தருமன்

 

குழந்தை வடக்கே போயிருப்பதாகச் சொன்னேன்.

 

நாகை

 

நல்லது தானே. கண்டு பிடித்து விடுவார்கள். நீ கவலைப்படாதே.

 

நாகை உள்ளே போய் சிறிது பால் கொண்டு வருகிறாள். தருமன் மறுபடி முகத்தை மூடி அமர்ந்திருக்கிறான்.
 
அவன் அருகில் வந்து,
 

 

நாகை

 

இந்தா, குடி. களைத்துப் போய் இருக்கிறாய்

 

தருமன் கையை விலக்குகிறான். அவன் கண்களில் நீர் வடிகிறது.

 

தருமன்

 

நாகை, தவறு செய்து விட்டேன்.

 

நாகை

 

என்ன சொல்கிறாய்?

 

தருமன் கண்ணைத் துடைத்துக் கொள்கிறான்.

 

தருமன்

 

தாத்தா இறந்து போவதற்கு முன்னால் நான் எப்படி இருந்தேன், நினைவிருக்கிறதா?

 

நாகை

 

ஊர் சுற்றிக் கொண்டிருந்தாய்.

 

தருமன்

 

தாத்தா இறந்த பின்னர் திடீரென்று குறி சொல்லத் தொடங்கினேன். அவர் பெரும் சக்தி உள்ளவர். அவர் வாழ்ந்த காலத்தில் எனக்கு இந்த வித்தையைச் சொல்லிக் கொடுக்க எவ்வளவோ முயற்சி செய்தார்.
 
அவர் போன பின்பு வயிற்றுப் பிழைப்புக்கு என்ன செய்ய? நானும் குறி சொல்ல முயற்சி செய்தேன். அவர் சொன்ன மந்திரங்களை எல்லாம் சொன்னேன். இருந்தாலும் எனக்கு அந்தச் சக்தி வரவில்லை.
 
தாத்தாவோடு நம் பரம்பரைச் சக்தி தொலைந்து விட்டது.
 

 

நாகை

 

பிறகு உனக்கு அந்த சக்தி மறுபடி எப்படி வந்தது?

 

தருமன்

 

வரவில்லை

 

நாகை
(குழப்பத்துடன்)

 

பின்னே? நாட்டார் வீட்டு நகையைக் கண்டுபிடித்தாயே?

 

தருமன்
(தலை குனிந்தவாறே)

 

நாகை, அதற்கு மந்திரம் தேவையில்லை. சில சமயம் தொலைந்து போன இடத்தைப் பார்த்து, நம் அறிவை பயன்படுத்தினாலே போதும். பல விஷயங்களைக் கண்டுபிடிக்கலாம்.

 

நாகை

 

நேற்றுக் காலையில் கூட அந்த வீரனின் சொந்த ஊரைக் கண்டுபிடித்துச் சொன்னாயே?

 

தருமன்

 

அது மிகச் சுலபம். ஒவ்வொரு ஊரிலும் தமிழ் சற்று மாறும். அவன் பேச்சை வைத்தே கண்டுபிடித்து விட்டேன்.

 

நாகை

 

அடப்பாவி

 

தருமன்

 

இன்னும் கேள். தாத்தாவின் மந்திரங்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தேன். வீடு முழுவதும் தேடினேன். நேற்றுக் கூட பட்டத்திப் பாட்டி ஏதோ பெட்டியைப் பற்றிச் சொன்னாள்.

 

வெளியே குதிரைகள் போகும் சத்தம்.

 

நாகை

 

இப்போது இளவரசன் உண்மையில் எங்கே?

 

தருமன்

 

எனக்குத் தெரியாது. அரசர் எதிரே நான் எப்படி என்னைப் பற்றிச் சொல்வது?
(beat)
களப்பிரர் ஒற்றனைக் காணோம் என்பதை வைத்து இளவரசன் வடக்கே போவதாகச் சொல்லி விட்டேன். ஆனால் உண்மையில் அவன் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியாது.

 

வெளிப்புறம் – மதுரை போகும் சாலை – பகல்

 

மதுரை போகும் சாலையில் குதிரைகள் பறந்தோடுகின்றன.

0 Replies to “விதியின் பிழை காண் – திரைக்கதை – பகுதி 2”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.