இராவணனாலும் அவன் தம்பியராலும் துன்புற்ற தேவர்கள் தங்கள் இடர்தனைக் களைந்து கொள்ள திருமாலை எண்ணித் தியானிக்கின்றனர். எம்பெருமான் அவர்களுக்கு அருள் செய்வதற்காக கருமுகில் தாமரைக் காடு பூத்து இரு சுடர் இருபுறத்து ஏந்தித் திருவொடும் பொலிய கருடாழ்வாரின் மேல் வந்து தோன்றினார்.
“சங்கும், சக்கரமும், அனந்தாழ்வானாகிய ஆதிசேடனும் எந்தம்பியராக வந்து என்பாதங்களைப் பணிய வளைமதில் அயோத்தியில் தயரதன் மதலையாய்த் தாரணி வருகுதும்”
என்று பெருமாள் அவர்களுக்கு அருளிச் செய்து இராமனாக அவதரித்தார்.
விசுவாமித்திர முனிவனின் வேள்வி காத்து, வில் முறித்துச் சீதாபிராட்டியை மணம் புரிந்து அயோத்தி வந்து புகுந்தார். மந்தரையின் சூழ்ச்சியால் மனம் மாறிய சிற்றன்னை கைகேயி,“நீ போய்ப் பூழிவெங்கானம் நண்ணிப் புண்ணிய நதிகள் ஆடி ஏழிரண்டாண்டின் வா” என்று இராமனிடம் கூற அவர் உடனே ‘மன்னவன் பணி அன்றாகில் நும் பணி மறுப்பனோ? என்பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ? இப்பொழுதே போகின்றேன், விடையும் கொண்டேன்” என்று வனம் புகுந்தார்.
வனத்திலே இராமனின் வருகைக்காக வழிமேல் விழிவைத்து ஓர் ஆத்மா பல காலமாகக் காத்துக் கொண்டிருக்கிறது. பெருமாளை நினைந்து நினைந்து மனமெல்லாம் அவரே ஆகி அளவில் காலமாக அது பரமாத்மாவை நினைத்துத் தவம் செய்து வருகிறது.
அதுதான் ‘சவரி’ என்னும் பெருமகள். அவள் வேடர் குலத்தைச் சார்ந்தவள். இராமபிரான் வருவதற்குச் சில நாட்கள் முன்பு ஈசனும் நான்முகனும் தேவரும் வந்து “உன்னுடைய ஆசு அறு தவத்திற்கு எல்லை வந்து விட்டது. இராமன் இங்கே எழுந்தருளப் போகிறார். நீ அவருக்குப் பூசைகள் செய்து எம் உலகம் வருக” என்று சொல்லிப் போயினர்.
“இன்று வருவாரோ! நாளை வருவாரோ! என்று வருவார்” என்று “வினைகளை அழித்த வினையறு நோன்பினாள்” எனக் கம்பன் போற்றும் சவரி காத்திருக்கிறாள்.
வினை அறு என்றபோது நல்வினையும் இல்லை; தீவினையும் இல்லை; எல்லாம் ஒன்று என்ற சமநிலை என்னும் பொருள் வருகிறது. இன்பம், துன்பம், நன்மை, தீமை எல்லாவற்றையும் ஒன்றாய் எண்ணும் பரிபக்குவமே பரம்பொருளை அடையும் நிலை; அந்நிலையை அடைந்து சவரி காத்திருக்கிறாள்.
சவரி இருக்கும் இடத்தை அடைய இராமபிரானுக்கும் இலக்குவனுக்கும் வழிகாட்டுபவனே கவந்தன் எனும் ஒரு அரக்கன்தான். அவன் பிறவியில் ஒரு தேவன் ஆவான். முனிவர் சாபத்தினால் அரக்கனாக இருக்கும் அவன் வயிற்றிலே தன் வாயை வைத்திருப்பவன். இரு கைகளையும் பிரித்து வைத்து அவற்றுக்கிடையே வரும் உயிரினங்களை உண்டு வருபவன். அவனை இராமன் வதம் செய்து தன் காலால் உதைத்துத் தள்ள கவந்தனுக்குச் சாப விமோசனம் ஏற்படுகிறது. அவன் மீண்டும் தேவனாகிறான். அவன்,
”தாயினும் உயிர்க்கு நல்கும்
சவரியைத் தலைப்பட்டு அன்னாள்
ஏயதோர் நெறியின் எய்தி
இரலையின் குன்றம் ஏறி”
என்று கூறுவதாகக் கம்பர் பாடுகிறார். அதாவது கவந்தன் ”ஓர் உயிரை அதன் தாய் தாங்குவதைவிட அன்பு காட்டுபவள் சவரி” என்று அறிமுகப்படுத்துகிறான். அவளைச் சென்று அடைந்து பின் ருசியமுகம் எனும் மலையினைச் சென்று சேருங்கள் என அவன் வழி காட்டுகிறான்.
இராமயணத்தில் மற்றுமொரு வேடனையும் பார்க்கிறோம். அவன்தான் குகன். குகனுக்கும் சபரிக்கும் ஓர் ஒற்றுமையைக் காணலாம். குகனைக் குறிப்பிடும் போது கம்பன் “தாயினும் நல்லான்” என்பான். அதுபோலவே சபரியைக் கவந்தன் வாயிலாகக் காட்டும்போது “தாயினும் உயிர்க்கு நல்கி” என்று கம்பன் பாடுவது குறிப்பிடத்தக்கது.
கங்கைக் கரையில் குகன் இராமனைக் காண வருகிறான். அவனது குல வழக்கப்படி மீனும் தேனும் பழங்களும் கொண்டு வந்து ஏற்றுக் கொள்வீர் என்று இராமனிடம் வேண்டுகிறான். சபரி கடித்துத் தின்று தரும் பழங்களை உணவாக ஏற்கும் இராமன் குகன் கொடுத்தவற்றிலிருந்து ஒரு பழத்தையும் எடுத்துத் தின்றதாகச் சான்றில்லை.
இதற்கு வைணவ சித்தாந்த அடிப்படையில் ஒரு வியாக்கியானம் கூறப்படுகிறது. பகவானை ஒரு குருவின் வழிகாட்டுதலில்தான் அடைய வேண்டும். சபரி அப்படித்தான் மாதங்க முனிவரின் கூற்றுப்படிதான் இராமனை அடைகிறாள். குகன் அப்படி இல்லை. எனவேதான் சபரி கொடுத்த பழங்களை இராமபிரான் ஏற்றதாகச் சொல்வார்கள்.
சபரி முற்பிறவியில் சித்ரவாகன் எனும் ஒரு கந்தர்வராஜனின் பெண்ணாவள். அவள் வித்தோத்ரா எனும் ரிஷிக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். அந்த முனிவர் எப்பொழுதும் நோன்பு, தவம் என்றே காலம் கழிக்கிறார். எனவே சபரி கல்மாசா எனும் வேடனைச் சேர்கிறாள். இதை அறிந்த முனிவர், நீ வேட்டுவச்சியாகப் போகக்கடவாய், இராமபிரான் வரும் போது உனக்குச் சாப விமோசனம் கிடைக்கும்” என்று அவளுக்குச் சாபம் கொடுக்கிறார்.
சபரி பற்றி இன்னுமொரு கதையும் வழங்கி வருகிறது. அவள் ஒரு வேடனின் மகள். பார்க்க அழகாக இல்லையெனினும் அவள் இதயம் புனிதமானது. அவள் தந்தை அவளுக்குத் திருமணம் செய்வதற்குமுன் அவர்கள் குலவழக்கப்படி 1000 ஆடுகளைப் பலியிட ஏற்பாடு செய்கிறான். உயிரினங்கள் பலிகொடுப்படுவதை விரும்பாத சபரி திருமணத்தன்று விடியற் காலையில் வீட்டை விட்டு வெளியேறி காட்டுக்குள் சென்றுவிடுகிறாள்.
அங்கே மரக்கிளைகளில் இரவுப்பொழுதில் தங்கியிருந்து பகலில் தவம் செய்யும் முனிவர்களுக்குத் தீர்த்தம், மற்றும் பூக்கள் கொண்டு வந்து தரும் சேவைச் செய்துவரும்போது மதங்க முனிவர் பார்த்து அருள் செய்ததாக ஒரு கதை கூறுகிறது. மற்றுமொரு வரலாறும் உண்டு.
காட்டுக்குவந்த சபரி அங்கிருந்த முனிவர்களிடம், “தன்னை ஒரு சேவகியாக ஏற்றுக் கொண்டு பிரம்ம ஞானம் கற்பிக்க வேண்டும்” என்று வேண்டுகிறாள். ஆனால் அந்த முனிவர்கள் எல்லாரும் சபரி தாழ்த்தப்பட்ட குலம் சார்ந்தவள் என்றும் அவளுக்குப் பிரம்ம ஞானம் கற்கத்தகுதி கிடையாது என்றும் கூறிவிடுகின்றனர். ஆனால் மதங்க முனிவர் சபரியை ஏற்கிறார்.
“நீ என் ஆசிரமத்திலேயே தங்கலாம்; இங்கே உன் கைங்கர்யப் பணிகளை கேற்கொள்ளலாம்; நான் உனக்கு அடைக்கலம் தந்தேன்” என்கிறார். சபரி அங்கேயே தங்கியிருந்து அமைதியாகப் பகவானை எண்ணித் தன்னால் இயன்ற கைங்கர்யச் செயல்களைப் புரிந்து வருகிறாள்.இப்படி இருக்கையில் மதங்க முனிவருக்கு வயதாகிறது. அவர் ஒரு நாள் சபரியை அழைத்து, “மகளே! எனக்கு வயதாகி விட்டது. எனவே நான் இப்பூத உடலைத் துறந்து மோட்ச உலகம் செல்லப் போகிறேன்.’ என்றார். சபரி உடனே, “ஸ்வாமி, தாங்கள் செல்லும் மேலான இடத்திற்கு என்னையும் அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் இல்லாமல் என்னால் இங்கு வாழமுடியாது.” என்றாள்.
அதற்கு மதங்க முனிவர், “மகளே! ஒரு நாள் இராமபிரான் இங்கு வருவார். அதுவரை நீ இங்கேயே இரு. அவர் வந்தபிறகு அவரைத் தரிசித்தபின் நீ என்னிடம் வரலாம்” என்று பதில் கூறினார். இராமன் என்று வருவான் எனச் சரியாகத் தெரியாததால் சபரி நாள்தோறும் காட்டிற்குச் சென்று பழங்கள் பறித்துவந்து இராமனுக்காகப் பல்லாண்டாகக் காத்திருக்கிறாள்.
மதங்க முனிவரின் ஆசிரமத்திற்கு அருகில் ஓர் அழகான பாம்பசார் எனும் பெயருள்ள ஏரி இருந்தது. சபரி தினம்தோறும் அந்த ஏரிக்குச் சென்று பானையில் நீர் எடுத்து வருவது வழக்கம். அப்படி ஒருநாள் செல்லும்போது அந்த ஏரிக்கரையில் நீண்ட தாடியுடன் சடை முடிகளுடன் இருந்த ஒரு முனிவர் சபரி தன் பானையில் தண்ணீர் எடுப்பதைப் பார்த்தார். “இந்த தாழ்த்தப்பட்ட வேடர் குலப்பெண் நாம் பயன்படுத்த முடியாதபடி இந்த நீரைக் களங்கப்படுத்திவிட்டாள்” என எண்ணிய அவர் ஒரு கல்லை எடுத்து அவள் மேல் சினத்துடன் எறிந்தார்.
அது சபரியின் காலில் பட்டு இரத்தம் வந்த்து. அத்துடன் அந்த இரத்தத் துளிகள் ஏரியின் நீரிலும் விழுந்தன. அடுத்த நொடியில் அந்த ஏரியின் தண்ணீர் முழுவதும் இரத்தமாகி விட்டது. ”தாழ்த்தப்பட்ட பெண்ணின் இரத்தம் சிந்தியதால் இந்த ஏரியின் நீர் முழுவதுமே இரத்தமாகிவிட்டது. நாங்கள் இனி என்ன செய்வது? என்று அந்த முனிவர் உரக்கக் குரல் எழுப்பினார்.
சபரி பானை நீரை எடுத்துக் கொண்டுபோய் ஆசிரமத்தை அடைந்தாள். அங்கே காலில் கல்லடியால் கொண்ட வலியால் அழுதுகொண்டு இருந்தாள். குடிக்கவும், புண்ணிய காரியங்கள் செய்யவும் நீரில்லாமல் முனிவர்கள் எல்லோரும் துன்பப்பட்டனர். அந்த ஏரி நீரைச் சுத்தமாக்க பல யாகங்களும் செய்தனர். புனித நீறுகளை மந்திரங்கள் ஜெபித்து நீரில் தெளித்துப் பார்த்தனர். ஆனால் எவற்றாலும் இரத்தம் போகவில்லை.
அப்போது ஒரு முனிவர் “இராமபிரான் வந்திருக்கிறாராம். காட்டில் இருக்கிறாராம். அவரைப் பார்த்து அருள் செய்ய வேண்டினால் அவர் வந்து இந்த இரத்தத்தை மீண்டும் நல்ல தண்ணீராக மாற்றுவார்” என்றார். இராமனும் அவர்கள் அழைப்பை ஏற்று பாம்பசார் ஏரிக்கு வந்தார். ஏரி முழுதும் இரத்தமாக இருப்பதைக் கண்டார்.
“நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவர் கேட்டார்.
“தங்கள் பாதம் இந்த இரத்தத்தைத் தொட்டு இது மீண்டும் தண்ணீராக மாறும் அருள் செய்ய வேண்டும்” என்றனர்’
இராமர் பாதங்கள் பட்டும் இரத்தம் மாறவில்லை. முனிவர்கள் “கையில் அதை எடுத்துக் கொள்ளுங்கள்; மாறலாம்.” என்றனர். இராமர் கையில் எடுத்தும் இரத்தம் மாறவில்லை. “பெருமானே! தாங்கள் இதனால் வாயைத் துடைப்பதோடு உமிழ்ந்து பாருங்கள் “ என்று வேண்டினர். இராமர் அந்த இரத்தத்தைக் இரண்டு கைகளாலும் எடுத்தார். அப்போது இலக்குவன் “அண்ணா! இது இரத்தம்” என்று சொன்னதையும் கேட்காமல் அதனால் உதடுகளைத் துடைத்து வாயில் விட்டும் துப்பினார். அப்பொழுதும் அது மாறவில்லை. உடனே இராமர் ”இது எப்படி நிகழ்ந்தது?” என்று கேட்க முனிவர்கள் நடந்த்தைச் சொன்னார்கள்.
சபரியின் பெயரைக் கேட்டதும் இராமர் இருகைகளையும் நெஞ்சின் மீது வைத்துக் கொண்டு, ”இது சபரியின் இரத்தமல்ல. என் இதயத்திலிருந்து வந்த இரத்தம். நான் இதைத் தூய்மையாக்க முடியாது.” என்றார். முனிவர்களோ, “நாங்கள் தண்ணீர் இன்றி மிகவும் துன்பப்படுகிறோம். எம் வாழ்க்கையே கஷ்டமாகி விட்டது” என்றனர்.
இராமர், “நான் சபரியைக் காணவே வந்துள்ளேன். அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று உரைத்தார். முனிவர் ஒருவர் சென்று சபரியிடம் இராமர் அழைப்பதாகச் சொன்ன உடனேயே சபரி அன்பு மேலீட்டு ஓடோடி வந்தாள். அவளின் நிழல் கூட இராமரின் பாதங்களில் படக்கூடாது என்று நினைத்த முனிவர்கள் அவளைத் தடுக்க முயல ஓடி வந்த சபரியின் காலடி மண்துகள் விழுந்த உடனேயே ஏரியின் இரத்தம் மீண்டும் தண்ணீராக மாறியது.
முனிவர்கள் அனைவரும் மிகவும் வியப்படைந்து சபரியின் பக்தியின் மேன்மையை உணர்ந்தனர்.
அப்படிப்பட்ட வினையறு நோன்பினாள் சபரியைக் காணக் கவந்தன் வழிகாட்ட இராமபிரான் தம்பி இலக்குவனுடன் சவரி குடிகொண்டுள்ள மதங்க முனிவரின் ஆசிரமம் வருகிறார். அந்த ஆசிரமம் எப்படிப்பட்டது?
”எண்ணிய இன்பம் அன்றித் துன்பங்கள் இல்லை ஆன புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றது” என்று அதைக் கமபன் பாடுகிறார்.
அந்த ஆசிரமத்திற்குப் பெருமை வரக் காரணம் இராமபிரானைக் காண்போம் என்ற நம்பிக்கையில் தவம் செய்யும் சவரிதான். நம்பிக்கை வைத்தோரை நம்பிக் கை தந்து அருள் செய்பவர்தானே திருமால்.
வந்த உடனேயே இராமபிரான் சவரியிடம் “தீது இன்றி இருந்தனை போலும்” என்று கேட்கிறார். அதாவது ‘தாங்கள் சுகமாக இருக்கின்றீர் போலும்’ என்று சாதாரண மாந்தரைப்போல நலம் விசாரிக்கிறார்.
அயோத்தி நகர வீதிகளில் நகரமாந்தர் எதிர்ப்படும்போது “எது வினை? இடர் இலை? இனிது நும் மனைவியும் மதிதரு குமரரும் வலியர்கொல்” என்று சிறு வயதிலேயே விசாரித்த வள்ளலல்லவோ இராமபிரான்!
சவரி தன் தெய்வத்தைக் காணுகிறாள். இராமனைத் துதிக்கிறாள். பக்திப் பெருக்கு மேலிடுகிறது. ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஆறாகிறது. அருவியாய்க் கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது.
“எம்பெருமானே! உம்மைத் தரிசித்ததால் எனது பொய்யான உலகப்பற்று அழிந்து போனது. நான் மேற்கொண்ட தவத்தின் பயன் இப்போது கிட்டியது” என்று இராமனைத் துதிக்கிறாள்.
“ஆண்டு அவள் அன்பின் ஏந்தி அழுது இழி அருவிக் கண்ணன் மாண்டது என் மாயப் பாசம் வந்தது வரம்பில் காலம் பூண்ட மாதவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள்” என்பது கம்பன் வாக்கு.
பாகவதர்களுக்கும் ஆழ்வார்களுக்கும் பக்தர்களுக்கும்விருந்தான பெருமாளுக்கே விருந்து படைக்கிறாள் சவரி.
“எந்தையே! நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை பொருந்திட இன்றுதான் என் புண்ணியம் பூத்தது” என்று தந்தையே என்னும்படி சவரி உரைக்க இரமபிரானோ “அம்மனை! வருந்துறு துயரம் தீர்த்தாய்” என்கிறார்.
பக்தை ’தந்தையே’ என வழிபடப் பெருமாள் ‘தாயே’ என அருளிச் செய்யப் பகவானும் பாகவதரும் ஒன்றுபடும் அற்புதமான நிலை அங்கே நிலவுகிறது.
பிறகு சுக்ரீவன் தங்கியிருக்கும் ருசியமுகம் என்னும் மலையை அடைய வழியைக் காட்டும் அறிஞர் போல அதாவது ஞானாசிரியன் போல சவரி கூற இராமபிரான் கேட்டருளினாராம்.
பெருமாளுக்குத் தெரியாதா? ஆனால் ஆசாரியன் வழிச்செல்லவேண்டும் என்பதுதானே வைணவச் சித்தாந்தம்.
“பின் அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே
தன் உடல் துறந்து தான் அத்தனிமையின் வீடு சேர்ந்தாள்”
என்று சவரி மூதாட்டி வீடு பேறு அடைந்ததைக் கம்பன் பாடுவார்.
கம்பராமாயணத்தில் சவரி என்றழைக்கப்படும் சபரியைப்பற்றி 9 பாடல்களே உள்ளன. ஆனால் கம்பர் இந்த 9 பாடல்களையே தனிப்படலமாக ‘சவரி பிறப்பு நீங்கு படலம்’ என்று அமைத்துள்ளார். ’சபரி’ என்று வால்மீகி குறிப்பிடுவதை கம்பர் தமிழ் ஒலிக்குறிப்பிற்கேற்ப ’சவரி’ என்று காட்டுவது குறிப்பிடத்தக்கது. வால்மீகியிலும் சவரி பற்றி விரிவாகக் கூறப்படவில்லை.
தியாகராஜர் தன்னுடைய ஒரு கீர்த்தனையில், சபரி பெற்ற பாக்கியம் மிகப்பெரிது எனும் பொருளில் “எந்தனின்னே வரநிந்துனு சபரி பாக்கியம்” என்று பாடுகிறார். துளசிதாஸர் தம்முடைய ” இராம சரித மானஸ்” எனும் காவியத்தில் சபரியைக் காட்டுகிறார். அதில் இராமன் சபரியிடம் அம்மூதாட்டி செய்ததாக ஒன்பது வகையான பக்திகளைக் கூறுகிறார். இவை நவவித பக்தி என்று கூறப்படும். அவை :
1. சத் சங்கம் சேருதல். அதாவது எப்பொழுதும் பகவானின் பெருமை பேசும் நல்லவர்களின் குழாத்தோடு சேருதல்.
2. எப்பொழுதும் பகவானின் திரு நாமங்களையும் புகழையும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாதல்.
3. குருவை அடைந்து அனுக்கிரகம் பெறுதல்.
4. பகவானைப் போற்றிக் கீர்த்தனைகள் கேட்டல்.
5 பகவானைப் பற்றிய பஜன், ஜெபம் செய்தல்.
6. புலன் அடக்கத்தைக் கடைபிடித்தல்.
7. பாகவதர் மீது பக்தியுடன் இருத்தல்.
8. பிறர்தம் பக்தியில் தப்பு காணாமல் இருத்தல்.
9. பகவானே கதி என்று சராணகதி அடைதல்
இராமபிரான் சபரியை நோக்கி, “ நீ இவை எல்லாவற்றையுமே செய்திருக்கிறாய். ஆனால் யார் ஒருவர் இவற்றில் ஒன்று மட்டுமே செய்கிறாரோ அவர் கூட நற்கதி அடைவார்கள்” என்று கூறுவதாக துளசிதாஸர் காட்டுகிறார்.
சபரி பற்றிப் பல செவி வழிக்கதைகள் வழங்கி வருகின்றன. சபரி இராமன் என்று வருவான் என்று தினந்தோறும் காத்திருக்கிறாள். இராமன் வருகிறான். சபரி வரவேற்று, அவன் உண்பதற்காகப் பல பழங்களைப் பறித்துக் கொண்டு வருகிறாள். அவற்றைக் கொண்டு வந்து,
”எம்பெருமானே, நான் உங்களுக்காக இனிப்பான பழங்களையே கொண்டு வந்துள்ளேன். அவை இனிப்பாக உள்ளனவா என்று அவற்றைக் கடித்துச் சுவைத்து, அவை இனிப்பாக உள்ளன என்று அறிந்த பிறகுதான் கொண்டு வந்துள்ளேன்.” என்று கூறுகிறாள். இராமன் அவ்ற்றை எடுத்து தின்ன முற்படும் போது, இலட்சுமணன்’
“அண்ணா, இவை கடிக்கப்பட்டு பாதி தின்னப்பட்டவை. இவற்றைத் தின்பது நல்லதல்ல” என்கிறான். ஆனால் இராமன் ஒரு பழத்தினை எடுத்துத் தின்று விடுகிறார். பிறகு இலட்சுமணனைப்பார்த்து,
”தம்பி, இவை மிகவும் இனிப்பானவை; இவை போன்ற பழங்களை இதற்குமுன் நான் உண்டதே இல்லை. மேலும் எப்படிப்பட்டவராக இருப்பினும் அவர் ஒரு பழம், ஓர் இலை, ஒரு மலர், கொஞ்சம் தீர்த்தம் அன்புடன் கொடுத்தால் நான் அதனை உள்ளன்போடு ஏற்றுக் கொள்வேன்” என்று கூறுகிறார்.
உள்ளன்போடு ஒருவர் கொடுப்பது எச்சிலாக இருப்பினும் இறைவன் அதை ஏற்றுக் கொள்வான் என்பதை இது காட்டுகிறது. நாம் இதையே பெரிய புராணத்திலும் காணலாம். அங்கும் இதே போன்று ஒரு வேடன்தான் வருகிறான் அவன் பெயர் கண்ணப்பன். வேட்டையாட வந்த அவன் மலைமேல் குடுமித் தேவரைக் கண்டு அவரை வழிபடத் தொடங்குகிறான். அப்போது அவன் இறைச்சியைத் துண்டுகளாக்கி, அவற்றை ஒரு கோலினுள் கோர்த்துத் தகுந்த பத்த்தில் வேக வைத்து, சுவையாக இருக்கிறதா என்று தன் வாயினுள் போட்டு கடித்துப் பார்த்துப் பின் இறைவனுக்கு நிவேதனமாகச் சமர்ப்பிக்கிறான். இதைச் சேக்கிழார் பெருமான்
”கோலினுள் கோர்த்துக் காய்ச்சி
கொழும்தசை பதத்தில் வேவ
வாலிய சுவைஞர் காண்பன்
வாயினில் அதுக்கிப் பார்த்துச்
சாலவும் இனிய எல்லாம்” என்று பாடுகிறார்.
சவரியின் சரிதம் எதைக் காட்டுகிறது? எல்லாம் ஒன்று என்ற பக்குவ நிலையை ஏற்கும் மனத்தை எல்லாரும் பெறவேண்டும். பெருமாள்மீது முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். அவரையே எண்ணி எண்ணி மனத்தால் நோன்பிருக்க வேண்டும். நாள்தோறும் அவர் வருவார் வருவாரென்று எக்கணமும் தயாராக இருக்க வேண்டும். இப்படி இருப்போர்க்கு அதாவது முழு நம்பிக்கையுடன் முழு மனத்துடன் தன்னை நினைப்போர்க்குத் தனிப்பெரும் நாயகன் திருமால் தவறாமல் வந்து அருளிச் செய்வார் என்பதே “வினை அறு நோன்பினாள்” சவரி காட்டும் வழியாகும்.
Nice article describing Sabari’s Bhakthi. Lot of new information on Sabari’s life too. Where can one find these ? Which piece of literature? Would appreciate the reference. Thank you.