வணிகவியல் சிந்தனைச்சோதனைகள்

கல்லூரியில் படிக்கும் நான்கு மாணவர்கள் வகுப்பை கட் அடித்துவிட்டு சினிமா பார்க்கப்போகிறார்கள். அவர்களின் பேராசிரியர் கடைசி நிமிடத்தில் ஒரு அறிவிப்பு செய்து அந்த வகுப்பில் ஒரு திடீர் தேர்வு நடத்திய விஷயம் மறுநாள்தான் அவர்களுக்கு தெரிய வருகிறது. பேராசிரியரிடம் சென்று நடந்த உண்மையைச்சொல்லி மன்னிப்பு கேட்க மனமில்லாத மாணவர்கள் நிலைமையை சமாளிக்க ஒரு திட்டமிடுகிறார்கள். அதன்படி நால்வருமாய் பேராசிரியரை அணுகி, முதல் நாள் தாங்கள் நால்வரும் படிப்பதற்காக பக்கத்து ஊரில் இருக்கும் பெரிய நூலகத்திற்கு சென்றதாகவும், வகுப்புக்கு திரும்பிவரும்போது வழியில் கார் பஞ்சர் ஆகிவிட்டதால் கால தாமதமாகி வகுப்புக்கு வரமுடியவில்லை என்றும் கதை விடுகிறார்கள். கதையை கேட்ட பேராசிரியர், “பரவாயில்லை, நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஒழுங்காய் உண்மையை சொன்னதால், உங்களுக்கு அந்த தேர்வை திரும்ப எழுத இன்னொரு வாய்ப்பை தருகிறேன். நாளைக்கு வாருங்கள்” என்று சொல்கிறார். பேராசிரியர் தலையில் மிளகாய் அரைத்து விட்ட குஷியுடன் மாணவர்கள் அன்றிரவு பாடத்தை படித்து தங்களை தயார் செய்துகொண்டு மறுநாள் தேர்வெழுத வந்து சேருகிறார்கள். பேராசிரியர் அவர்களை தனித்தனியே நான்கு அறைகளில் தேர்வெழுத அமர்த்தி கேள்வித்தாளை கொடுக்கிறார். ஐந்து மதிப்பெண்களுக்கு பாடம் சம்பந்தமான கேள்விகள் அதில் இருக்க, மிச்சம் 95 மதிப்பெண்களுக்கு ஒரே ஒரு எளிய கேள்வி: பஞ்சர் ஆனது காரில் இருக்கும் நான்கு சக்கரங்களில் எந்த சக்கரம்?
அந்த நகைச்சுவை துணுக்கு “கைதிகளின் திண்டாட்டம்” (Prisoner’s Dilemma) என்ற ஒரு பிரசித்தி பெற்ற சிந்தனைச்சோதனையின் ஒரு வெளிப்பாடுதான் என்று சொல்லலாம்.
கைதிகளின் திண்டாட்டம்
Tucker1950 வாக்கில் ராண்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த மெரில் ப்ளொட், மெல்வின் டிரெஷ்சர் என்ற இருவர் உருவகித்த ஒரு கருத்தாக்கத்தை, பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தைச்சேர்ந்த கணித பேராசிரியர் ஆல்பெர்ட் டக்கர் இன்னும் சீராக வடிவமைத்து, அதற்கு இந்த பெயரையும் கொடுத்து, உலகத்திற்கு அறிமுகப்படுத்தி பிரபலமாக்கினார். இந்த சோதனை சொல்ல வருவது சரியான பகுத்தறிவுடன் செயல்படும் மனிதர்கள் கூட பல சமயங்களில் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து செயல்பட மாட்டார்கள் என்பதைத்தான்.
இந்தக்கதையில் இரண்டு கைதிகள். ஒருவர் கைதி கண்ணாயிரம் அடுத்தவர் கைதி மூக்காயிரம் என்று வைத்துக்கொள்வோம். இருவரும் சேர்ந்து ஒரு பெரிய குற்றம் புரிந்திருக்கிறார்கள். இவர்களை போலீஸ் பிடித்துவிட்டாலும், குற்றம் நடந்த இடத்தில் சரியான தடயங்கள் கிடைக்காததால், அவர்கள்தான் அந்தக்குற்றத்தை செய்தார்கள் என்று நிரூபிக்க போலீசாரிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே போலீசார் இருவரையும் தனித்தனி அறைகளில் வைத்து விசாரிக்கிறார்கள். விசாரணை பல நாட்கள் தொடர்ந்தாலும், கண்ணாயிரமும், மூக்காயிரமும் சந்தித்து பேசிக்கொள்ள வாய்ப்பே இல்லை. இருவரும் புத்திசாலிகள். ஆனால் விசாரணையில் ஒருவன் என்ன சொல்லி வைப்பான் என்று அடுத்தவனுக்கு தெரியாது. எனவே விசாரணையை நடத்தும் போலீஸ் அதிகாரி கண்ணாயிரத்திடம், “நீ குற்றம் நடந்த இடத்தில் இருந்தாய் என்று எங்களுக்கு தெரியும். எனவே உன்னை ஒரு வருடம் நிச்சயம் சிறையில் அடைக்கப்போகிறோம். ஆனால் நீ போலீஸ் தரப்புக்கு மாறி, குற்றத்தை மூக்காயிரம்தான்  செய்தான் என்று சாட்சி அளித்தால், உன்னை விடுதலை செய்து விடுவோம். மூக்காயிரம் பத்து வருடம் சிறைக்குப்போவான். அதற்கு பதில் நீ வாயை மூடிக்கொண்டு இருந்து விட, மூக்காயிரம் எங்கள் தரப்புக்கு மாறி, உனக்கு எதிராக சாட்சி அளித்தால், நீ ஒழிந்தாய். உன்னை பத்து வருடம் உள்ளே தள்ளி விடுவோம். என்ன சொல்கிறாய்?”, என்றுகேட்கிறார்.
கண்ணாயிரம், “அப்படியா? சரி, நான் மூக்காயிரத்திற்கு எதிராக சாட்சி சொல்லும்போது, அவனும் எனக்கெதிராக சாட்சி சொன்னால்?”, என்று வினவ, போலீஸ் அதிகாரி, “அப்போது நீங்கள் இருவருமே தலா ஐந்து வருடங்கள் கம்பி எண்ண வேண்டி வரும்”, என்கிறார்! அடுத்த அறையில் இருக்கும் மூக்காயிரத்திடமும் இதே பேரம் பேசப்படுகிறது.
தர்க்கரீதியாக யோசித்தால், இந்தக்கதை நான்கு விதங்களில் முடியக்கூடும். அதை கீழ்கண்டவாறு அட்டவனைப்படுத்தி பார்க்கலாம்.

kanmooku

கைதிகள் கண்ணாயிரம், மூக்காயிரம் இருவருமே ஒத்துழைக்க மறுத்து மௌனம் சாதிப்பதை இடதுபக்க மேல் கட்டம் குறிக்கிறது. இந்நிலையில் இருவருக்கும் தலா ஒரு வருட சிறை தண்டனை கிடைக்கும். இருவருமே போலீசின் பக்கம் சாய்ந்து சாட்சி சொல்வதை வலது பக்க கீழ் கட்டம் குறிக்கிறது. இப்போது இருவருக்கும் தலா ஐந்துவருடங்கள் தண்டனை கிடைக்கும். மற்ற இரண்டு கட்டங்களும் ஒருவர் சாட்சி சொல்லி விடுதலை பெற, மற்றவர் 10 வருடங்கள் தண்டனை பெறும் நிலையை காட்டுகின்றன.
நீங்கள் இந்தக்கைதிகளில் ஒருவராக இருந்தால், வாயை மூடிக்கொண்டு இருப்பீர்களா? அல்லது அடுத்தவனை காட்டிக்கொடுத்து உங்கள் தண்டனையை குறைத்துக்கொள்ள பார்ப்பீர்களா? ஒரு வெளியாளாக இருந்து இந்த நான்கு நிலைகளையும் அலசினால், இருவரும் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டு, ஒரு வருட சிறை தண்டனையை அனுபவித்து வருவதுதான் கைதிகளுக்கு அனுகூலம் என்று தெரிகிறது. இந்த இடதுபக்க மேல் கட்ட சூழ்நிலையில் மொத்த சிறை தண்டனை 2 வருடங்கள்தான். மற்ற மூன்று கட்டங்களிலும் மொத்த தண்டனை 10 வருடங்கள். எனவே இதுதான்  இருப்பதிலேயே குறைச்சல் என்பதால், தர்க்கரீதியாக இரண்டு கைதிகளுக்கும் ஏற்றது இந்த நிலைதான் என்பதில் சந்தேகமில்லை.
அடுத்து ஒரு கைதியின் நிலையிலிருந்து இதை அலசலாம். உதாரணத்திற்கு நீங்கள் கண்ணாயிரம் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த அறையில் இருக்கும் உங்கள் கூட்டாளி மூக்காயிரம் ஒரு வேளை மௌனம் சாதிக்கலாம் அல்லது சாட்சியாக மாறலாம். அவன் மௌனம் சாதிக்கும் பட்சத்தில், நீங்கள் சாட்சியாளராக மாறி, அவனை மாட்டிவிட்டுவிட்டு விடுதலை பெற முயல்வதுதான் புத்திசாலித்தனம். இல்லையா?
இப்போது மூக்காயிரம் சாட்சியாக மாறியிருந்தால்? அந்த நிலையிலும், கண்ணாயிரமான நீங்களும் சாட்சியாக மாறிவிடுவதுதான் புத்திசாலித்தனம். இல்லாவிடில் நீங்கள் ஏமாளியாக 10 வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிவரும்!
எனவே, வெளியிலிருந்து பார்க்கும்போது மௌனம் சாதிப்பதுதான் புத்திசாலித்தனமான முடிவாக தோன்றினாலும்,  ஒரு கைதியின் நிலையிலிருந்து பார்த்தால், கூட்டாளிக்கு துரோகம் செய்துவிடுவதுதான் சரியான மூலோபாயமாக (Strategy) தெரிகிறது! இந்த முரண்பாடுதான் இந்த சோதனை நமக்கு சுட்டிக்காட்டும் வினோதம்.
அப்படி துரோகம் செய்து தப்பிக்க முயன்றால், கண்ணாயிரமான என்னை, தண்டனை முடிந்து வெளிவரும் மூக்காயிரம் பின் ஒரு நாள் பழி வாங்க மாட்டானா? அல்லது சிறைக்கு வெளியே இருக்கும் அவனது மற்ற கூட்டாளிகளோ, குடும்பத்தினரோ என்னை அடிக்க வர மாட்டார்களா, தர்மம், நண்பனிடம் எனக்குள்ள விசுவாசம் என்றெல்லாம் ஏதும் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். கேம் தியரி (Game Theory) என்ற துறையில் அலசிப்பிழிந்து உலர்த்தப்பட்ட இந்தப்பிரச்சினையில், அலசல்களை எளிதாக்க வேண்டும் என்பதற்காக அந்த வேறுபாடுகள் முதல் கட்ட ஆய்வில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அவையும் சேர்த்து அலசப்படும்போது பிரச்சினையின் குணாதிசயங்கள் மாறுபடும். அவை இரண்டாம் கட்ட ஆய்வில் அலசப்பட்டு இருக்கின்றன. நாம் அங்கே போகும்முன் இந்த எளிய வகை முதல் கட்ட திண்டாட்டத்தைப்பற்றி இன்னும் கொஞ்சம் பேசலாம்.
சிறை தண்டனை, கைதிகள் எடுக்கும் முடிவு என்ற பின்னணியுடன் இந்த சோதனை விவரிக்கப்பட்டாலும், வணிகவியலுக்கும் இதற்கும் நிறைய சம்பந்தம் உண்டு. உங்கள் ஊர் அளவில் பல்பொடி விற்கும் இரண்டு சிறிய கடைகளோ அல்லது உலக அளவில் கார்கள் விற்கும் இரண்டு கம்பெனிகளோ இந்த திண்டாட்டத்திற்கு உட்பட்டவைதான். உதாரணமாக ஹோண்டா மற்றும் டொயோட்டா கார் கம்பெனிகளை முறையே கண்ணாயிரம் மற்றும் மூக்காயிரம் என்று எடுத்துக்கொள்வோம். இரண்டு நிறுவனங்களும் 2015ல் விளம்பரத்திற்காக செலவழிக்கும் தொகையை அதிகப்படுத்த போவதில்லை, கார் விலையையும் மாற்றப்போவதில்லை என்று முடிவெடுத்தால், அது இரண்டு கைதிகளும் மௌனம் சாதிப்பதற்கு இணை. இரண்டு கம்பனிகளும் ஏறக்குறைய 2014ல் சம்பாதித்த அதே அளவு லாபத்தை 2015லும் பெறுவர். இது இடது பக்க மேல் கட்டத்து நிலையை குறிக்கிறது.
திடீரென்று டொயோட்டா கம்பெனி தாங்கள் தயாரித்து விற்கும் கார்களின் விலையை குறைத்து தள்ளுபடி கொடுத்து விற்க ஆரம்பித்தால், அது அவர்கள் கார் விற்பனையை அதிகரித்து ஹோண்டா கம்பெனி விற்பனையை குறைக்கும். ஹோண்டா கம்பெனி தள்ளுபடி விற்பனையை மேற்கொள்ளாதவரை, இது இடது பக்கத்து கீழ் கட்டத்து நிலைக்கு ஆட்டத்தை தள்ளுகிறது! அதுவே ஹோண்டா கம்பெனி தள்ளுபடி விற்பனையில் இறங்க, டொயோட்டா ஏதும் செய்யாவிடில், வலது பக்கத்து மேல் கட்டத்திற்கு இடம் மாறுவோம். இரண்டு கம்பெனிகளும் விலையை குறைத்து போட்டியிட்டால், வலது பக்கத்து கீழ் கட்டத்துக்கு வந்து சேருவோம்!
இப்படியாக இந்த எளிய சோதனை விளம்பர பட்ஜெட், தள்ளுபடி விற்பனை, புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்துதல் என்று பலவிதமான சூழ்நிலைகளில் தலையை காட்டும். நீங்கள் காய்கறிக்கடையில் கொத்தவரங்காய் வாங்கும்போது கூட இந்த சோதனையை சந்திக்கிறீர்கள்! நீங்கள் கடைக்காரர் கேட்ட விலையை பேரம் பேசாமல் கொடுத்து காய் வாங்கினால், நீங்கள் ரொம்ப முயற்சி எதுவும் செய்யாமல் சுலபமாக ஆனால் அதிக விலை கொடுத்து காய் வாங்குகிறீர்கள். நீங்களும் காய்கறி கடைக்காரரும் ஒத்துப்போவதால் இது இடது பக்க மேல் கட்டம். எக்கச்சக்கமாய் பேரம் பேசி, நீங்களும் களைத்து, கறிகாய் கடைக்காரரையும் கழுத்தறுத்து காய் வாங்கினால், அது வலது பக்க கீழ் கட்டம். ஓரளவு பேரம் பேசி வேலையை முடித்தால், மிச்சமிருக்கும் இரண்டு கட்டங்களில் ஒன்றில் போய் நிற்ப்பீர்கள்!
இந்த சோதனையை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது .”தங்கப்பந்துகள்” என்ற ஒரு இங்கிலாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி. இதிலும் இரண்டு கைதிகளுக்கு ஈடாக இரண்டு போட்டியாளர்கள். போலீஸ்காரருக்கு பதில் நிகழ்ச்சித்தொகுப்பாளர். ஆரம்பச்சுற்றுகளில் இரு போட்டியாளர்களும் ஏதேதோ கேள்விகளுக்கு விடை சொல்ல, அவர்கள் இருவரும் வெல்லும் பரிசுப்பணம் சேர்ந்து ஒரு பொதுக்கணக்கில் இருக்கும். கடைசி சுற்றில் இந்தப்பணம் எப்படி பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பதுதான் நமக்கு சுவையான விஷயம். இறுதிச்சுற்றுக்கு வரும்போது இருவருமாய் சேர்ந்து ஒரு லட்ச ரூபாய் சேர்த்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இறுதிச்சுற்றில் இரு போட்டியாளர்களுக்கும் வெளிப்புறத்தில் ஒரே மாதிரியாய் தோன்றும் இரண்டு தங்கப்பந்துகள் கொடுக்கப்படும். ஒரு பந்துக்குள் “பிரி” (Split) என்றும் இன்னொரு பந்தில் “அபகரி” (Steal) என்றும் எழுதப்பட்டிருக்கும். இரண்டு போட்டியாளர்களும் இரண்டில் ஒரு பந்தை தேர்தேடுக்க வேண்டும். ஒருவர் என்ன தேர்ந்தெடுக்கிறார் என்பது அடுத்த போட்டியாளருக்கு தெரியாது. தேர்ந்தெடுப்பு முடிந்தவுடன், நிகழ்ச்சி தொகுப்பாளர் சொல்லும்போது இரண்டு போட்டியாளர்களும் தங்களின் தேர்வை எதிராளிக்கும் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரே சமயத்தில் காட்ட வேண்டும். ஒரு முறை தேர்வை செய்தபின் அதை மாற்றிக்கொள்ள அனுமதி கிடையாது.
நமது கதாபாத்திரங்களான கண்ணாயிரமும், மூக்காயிரமும் இந்த இறுதிச்சுற்றை விளையாடுவதாக வைத்துக்கொள்வோம். அவர்கள் தேர்ந்தெடுக்கும் பந்துகளைப்பொறுத்து முன் போலவே நான்கு விதமாக அந்தச்சுற்று முடியலாம். அவர்கள் இருவருமே “பிரி” என்கிற தேர்வை செய்தால், இருவரும் ஒத்துழைப்பதாக அர்த்தம். அப்போது இருக்கும் மொத்த பரிசுத்தொகையும் இரண்டாகப்பிரிக்கப்பட்டு இருவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும்.
இருவருமே “அபகரி” என்ற தேர்வை செய்தால், இருவரும் தலையில் துண்டை போட்டுக்கொண்டு வீட்டுக்கு போக வேண்டியதுதான். மொத்தப்பணத்தையும் தொலைக்காட்சி கம்பெனி வைத்துக்கொண்டுவிடும்.
ஒருவர் மனிதநேயத்துடன் “பிரி” பந்தை தேர்ந்தெடுக்க, அடுத்தவர் பேராசையுடன் “அபகரி” பந்தை தேர்ந்தெடுத்தால், “பிரி” பந்தை தேர்ந்தெடுத்தவர் தோற்று வெறும் கையுடன் வீடு திரும்ப, “அபகரி” பந்தை எடுத்தவர் எல்லாப்பணத்தையும் பெற்று வெற்றியாளராவார்! இந்த நான்கு சாத்தியக்கூறுகளும் அடுத்த படத்தில் காட்டப்பட்டு இருக்கின்றன.

thangappandhu

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி பல வருடங்கள் நடந்தது. நிகழ்ச்சி முடிந்தபின் யாரும் வந்து வெற்றி பெற்றவரை உதைக்கப்போவதில்லை. போட்டியாளர்கள் இருவரும்.ஆட்டம் முடிந்தபின் மறுபடி சந்திக்க வேண்டிய அவசியம் கூட ஏதும் இல்லை. இது போட்டியாளர்களுக்கு நன்கு புரிந்த விஷயம். ஆகையால் திரும்பத்திரும்ப ஊடாட வேண்டிய அவசியமில்லாத இருவருக்கிடையே நிகழும் கைதிகளின் திண்டாட்ட முரண்பாட்டுக்கு இது சரியான எடுத்துக்காட்டு. அவர்கள் இருவரும் ஒருவருக்கெதிரே அமர்ந்திருப்பதால், தங்கள் தேர்வுகளை செய்யும்முன் எதிராளியுடன் சில நிமிடங்கள் பேச அனுமதிக்கப்படுகிறார்கள்.
பல முறை இந்த நிகழ்ச்சியில் கடவுள் நம்பிக்கை உள்ள, தர்மநியாயத்தை கடைபிடிக்கும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான, படித்த, சமூகத்தில் நல்ல மதிப்புள்ள ஒரு பெண் என்றெல்லாம் தன்னை கூறிக்கொள்ளும் ஒரு போட்டியாளர், சற்றே பயமுறுத்தும் தோற்றத்துடன் காணப்படும் எதிராளியான ஒரு ஆணிடம், “என்னை பார்த்தாலே தெரியவில்லையா? கடவுள் மீதும், என் குழந்தைகள் மீதும் சாட்சியாக நான் “பிரி” பந்தைதான் எடுக்கப்போகிறேன். எனவே நீங்களும் “பிரி” பந்தையே தயவு செய்து தேர்ந்தெடுங்கள். நாம் பரிசுத்தொகையை பிரித்தெடுத்துக்கொண்டு நம் குடும்பத்தினரை மகிழ்விப்போம், பெருமை படுத்துவோம்” என்று மன்றாடிவிட்டு, அந்த பயமுறுத்தும் ஆண் மனம் நெகிழ்ந்து “பிரி” பந்தை எடுக்க, இவர் “அபகரி” பந்தை எடுத்து பூரா பரிசுப்பணத்தையும் அடித்துக்கொண்டுபோன நிகழ்வுகள் உண்டு. “பிரி” பந்தை எடுத்து ஏமார்ந்த போட்டியாளர் அவமானத்துடன் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு வீட்டுக்குப்போக வேண்டியிருக்கும்.
நீங்கள், இந்த போட்டியில் எதிராளியை நம்புவீர்களா? அல்லது எதிராளியை எப்படியாவது உங்களை நம்ப வைத்து அவரை “பிரி” பந்தை எடுக்க வைத்துவிட்டு நீங்கள் “அபகரி” பந்தை எடுத்துக்கொண்டு ஏமாற்ற முனைவீர்களா? இந்தக்கேள்வியை நன்கு யோசித்து உங்கள் முடிவை எடுத்துவிட்டு, கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் யூட்யூப் வீடியோவில் ஒரு புத்திசாலி போட்டியாளர் என்ன செய்கிறார் என்று பாருங்கள்!

அடுத்த இதழில் இப்படி ஒரே ஒருமுறை மட்டும் ஊடாடாமல், திரும்பத்திரும்ப இரண்டு தரப்பினரும் வியாபாரம் நடத்த வேண்டியிருக்கும் பட்சத்தில் கதை எப்படி மாறும், அப்போது இந்த சோதனையில் இரு தரப்புகளும் உபயோகிக்கும் தந்திரங்களும், மூலோபாயங்களும் என்னென்ன, தர்மம்/விசுவாசம் போன்ற மனித நற்குணங்களுக்கு இந்த ஆட்டத்தில் என்ன பங்கு என்று பார்ப்போம். இதை ஏதோ சாதாரண திருடன் போலீஸ் கதை என்று எண்ண வேண்டாம். இந்தப்பிரச்சினையை அலசி ஆராய்ந்து ஒருவர் பொருளாதார நோபல் பரிசே வாங்கி இருக்கிறார்!
(தொடரும்)

0 Replies to “வணிகவியல் சிந்தனைச்சோதனைகள்”

  1. ரொம்ப நாளாக படிக்க வேண்டும் என்று இருந்தேன். ஒரு மூச்சில் இன்று
    படித்து முடித்தேன். மிகவும் சிறப்பாக இருக்கிறது. தென் தமிழ் நாட்டில் என் பள்ளிக்கூட பருவத்தில் கல்கண்டு மற்றும் முத்து காமிக்ஸ் மூலம் பொது அறிவு பெற்ற காலத்தோடு ஒப்பிடுகையில் இது ஒரு பொற்காலம் இணையம் ஒரு அக்ஷய பாத்திரம் (ஹில்பர்ட் ஹோட்டலின் சமயலறையில் இருக்குமோ?) என்று தோன்றுகிறது.
    இந்த கைதியின் திண்டாட்டம் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் மிகப்பெரிய முரண்பாட்டை தீர்த்து வைக்கும் பணியை செய்ய ஆரம்பித்திருக்கிறது. உயிரினங்கள் எல்லாம் போட்டியிடுபவை. அவைகள் ஒத்துழைத்தால் ஏமாந்து போய்விடும், அபகரி பெட்டியைத் திறக்கும் சக விலங்குகள் முட்டையிட்டு குட்டிபோட்டு வம்சம் விளங்கவைக்கும். பிரி பெட்டியைத் திறக்கும் விலங்குகள் விருத்தியாகாமல் போய்விடும். அப்படி இருக்க என் மனிதனால் “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேரொன்றையேன் பராபரமே ” என்று பாட முடிகிறது? நம்மிடம் என் பரர்நலம் ஒத்துழைப்பு ஆகியவை கொஞ்சமேனும் இருக்கிறது? போட்டியும் சுயநலமும் நய வஞ்சகமும் புரியக் கூடியவை. பொது நலமும் ஒத்துழைப்பும் அறிவியலால் விளக்க முடியாதது, என்று கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. அதை மாற்றி அதையும் விளக்கமுடியும் என்று நிரூபித்தது இந்த கைதியின் திண்டாட்டம் சிந்தனைச் சோதனைதான்.
    ஏட்டிக்குப் போட்டி (tit-for-tat) எனும் மூலோபாயம் இன்னும் வரும் கட்டுரைகளில் வரும் என்று நினைக்கிறேன்.
    மிகவும் நன்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.