மிஸ். குஷ்பு தக்காளி, ஜி.எம்.

tomatoGM corngm lemon

கலப்பினச் சேர்க்கை எனப்படும் ஒட்டு முறையும், மரபணு மாற்றம் என்று அறியப்படும் ஜி.எம்.ஓ முறையும் — இரண்டுமே அடிப்படையில், இடையில், இறுதியில் — மரபணுமாற்றம்தான்.

ஒட்டுமுறை எனப்படும் முறையானது இயற்கையாகவும் நிகழும். மனிதர்களாலும் நிகழ்த்தப்படும்.

நம் முன்னோர்கள் விளைநிலங்களில் மரபணு மாற்றம் செய்து தங்கள் விவசாய நிலங்களிலும் பயிர்களை உருவாக்கி இருக்கிறார்கள். பத்துப் பதினைந்து இல்லை. ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் இந்தியாவில் இருந்தன. தற்போது உலகம் முழுமையும் சில நூறு வகைகள் இருந்தாலே அதிகம்.

இந்தியாவில் அரிசி விதைகளுக்காகக் கூடும் சந்தை ஒன்றில், அடுத்த தலைமுறை விதையைத் தராத செடியைக்கூட நீங்கள் பார்க்கலாம். ஆனால், அந்தச் செடியை அந்த விவசாயிகள் எவரும் அடுத்தவருக்குத் தருவதில்லை. எந்த அரசின் தலையீடும் இன்றி, தாங்களாகவே உருவாக்கி, அவற்றின் குணங்களை அறிந்து, தங்களுக்கு தாங்களே, அத்தகைய விதைகளுக்குத் தடை செய்துகொள்கிறார்கள் (என்று தரம்பால் பற்றிய மிக அருமையான ஒரு அறிமுகம் தரும் வீடியோ சொல்லுகிறது:

இந்த வகையிலும் மரபணு மாற்றம் பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த இந்திய மரபு முறையில் ​ஒரு புதிய செடிக் குடும்ப வகை உருவாக ஆறில் இருந்து பத்து தலைமுறைகள் செலவழியும். கோலூன்றிய தாத்தாக்களின் செடி அவர்கள் மாதிரி மெதுவாத்தான் வரும்.

இந்தப் பண்டைய முறையே சரி என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் கேட்க வேண்டிய கேள்வி:

“8000த்திலிருந்து 10000 ஆண்டுகள் பழமையான இந்த முறையை, நம் முன்னோர்கள் உருவாக்கினார்கள். பயன்படுத்தினார்கள். எதனால்?”

பயிரின் பலவீனங்களை நீக்கி உபயோகமானதை உருவாக்குவதற்குத்தான். தேவையானதைத் தயாரிக்கத்தான்.

அதாவது, பஞ்சம், செடிகளுக்கு வரும் வியாதி, ஒட்டுண்ணிகள், களைகள் இவற்றை எதிர்த்து– அல்லது இவற்றால் பாதிக்கப்படாமல் பயிர்கள் வளர்ந்து மானுடரான நமது சாப்பாட்டுக்கும், நமது வியாதிகளைப் போக்கவும், அதிக மகசூல் பெறவும், தொழில் வளர்ச்சிக்கும்…..

எந்த இரு செடிகளை கலப்பினம் செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்திருக்கிறார்கள் கோலூன்றி வரும் தாத்தா பாட்டிகள். குணம், குற்றம் நாடி முடிவு செய்து, கலப்பினம் செய்திருக்கிறார்கள்.

அதாவது, நம்மிடையே பிரபலமாக விதந்தோததப்படும் ஸோஷியல் எஞ்சினியரிங்கான ஒரு ஜாதிக்காரர் இன்னொரு ஜாதிக்காரரைக் கல்யாணம் செய்துகொள்வதை ஒத்தது இந்த ஜெனட்டிக் எஞ்சினீயரிங்கானது.

டார்வின் தியரியானது எவலூஷன் தகவமைப்புப் பற்றிப் பேசுகிறது. அதைத் தங்களுக்குச் சாதகமாக தகவமைத்துக்கொண்டு, கலப்புத் திருமணத்தால் பிறக்கும் குழந்தைகள் முந்தைய தலைமுறையைவிட அதிக அறிவும், உடல் பலமும், ஞானமும், இன்ன பிறவும் எக்ஸ்ட்ராவாகத் தகவமைந்து கொள்வார்கள் என்று சொல்லுபவர்களும் உண்டு.

இப்படிக் கலப்புத் திருமணம் செய்வதால், மனிதர்கள் பிறப்பு அடிப்படையில் உயர்வு தாழ்வு பார்ப்பதை நிறுத்திவிட்டு 100% சமத்துவ சுவர்க்கத்தை அடைந்துவிடலாமாம். தேவையானவை எக்ஸ்ட்ரா பெரிதாக அமைந்து நம் குழந்தைகள் எல்லாம் X-மென்கள் ஆகப்போகும் நாளே நன்னாள்.

அப்படிச் சொல்லப்படும்போது, அஸ்து சொல்லாமல் தும்மித் தொலைக்கும் சில பார்ட்டிகள் உண்டு.

அவர்கள் இதுபோன்ற நல்லவை மட்டும்தான் நடக்கும் என்று சொல்லிவிட முடியாது. மருத்துவத்தில் படித்தபடி, விளைவு நல்லதாகவும் இருக்கலாம். கெட்டதாகவும் இருக்கலாம். அல்லது உடனடியாக நம்மால் கணிக்க முடியாதவையாகவும் இருக்கலாம். அப்படி எந்தவகை விளைவாக இருந்தாலும், இரண்டு மூன்று தலைமுறைகளில் ஒரு உச்ச நிலையை அடைந்துவிடும். அதாவது, நல்லதோ கெட்டதோ, அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு கட்டத்தில் அது அப்படியே நின்றுவிடும் என்று சொன்னார்கள்.

சொல்லியதால், ஜாதி வெறியர் என்று வசவுப் பட்டம் வாங்கிக் கொள்வார்கள். கலப்புத் திருமணத்துக்கு எதிராகப் பேசும் டாக்டர்கள் முர்தாபாத், முர்தாபாத். ஆனால், அவர் பேசும் அறிவியல் நமக்குப் பிடித்தபடி ’தகவமைக்க’ முடிந்தால் ஜிந்தாபாத் !

இதனால் அறியப்படும் (திருடர் கழக) நீதி யாதெனில்:

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

இதனால் அறியப்படும் (திருவள்ளுவர் கழக) அநீதி யாதெனில்:

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.

திருக்குறளாம். திருக்குறள். வெங்காயம். கடவுள் இல்லை என்ற ஆண்டவன் சொன்ன வெங்காயம். மரபணு மாறிய தக்காளிக்கு வாருங்கள். திருக்குறளைத் தூக்கிப் போட்டுவிட்டு மரபணு மாற்ற ஸயன்ஸ் பேசுவோம்.

பரவலான தகவல்களால் ஜி.எம். என்று நம்மால் அழைக்கப்படும், நம்மால் வில்லனாக உருவகிக்கப்படும் பயிர் உருவாக்கும் முறையும் ஒட்டுமுறைதான். ஆனால், வித்தியாசங்கள் உண்டு.

முதல் வித்தியாசம்: பண்டைய முறை போல விவசாய நிலங்களில் மட்டும் இல்லாமல் ஒரு பரிசோதனைச் சாலையில் முதலில் உருவாக்கப்பட்டு, பின் நிலத்தில் பயிரிடப்பட்டு, பின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

முழுவதும் மேற்கத்திய (அதாவது நவீன) அறிவியல் முறையில் செய்யப்படுவதால், தொழிலகங்களால் நடத்தப்படுவதால், நிச்சயம் உலகம் முழுவதும் மிகவிரைவில் ஏற்கப்பட்டுவிடலாம்.

இருந்தாலும், இந்த மரபற்ற மரபணு மாற்றத்தின் பலனை அனுபவிக்க மரபுப்படி பல்லைக் கடித்துக்கொண்டு பொறுங்கள். அறிவியல் ராக்கெட்டின் முடுக்கத்தைப் பாலிடிக்ஸ் சாலைத்தடைகள் குறைக்கின்றன. இன்னும் சில வருடங்களுக்கு விவசாயத்தின் ராக்கெட்-விஞ்ஞானம் நொண்டியடித்துக் கோலூன்றித்தான் வரும்.

இரண்டாவது வித்தியாசம்: பண்டைய முறை போல பத்துத் தலைமுறை வரை ஒரு பயிர் தகவமைந்து மாறுவதற்குக் காத்திருக்க வேண்டாம். முதல் தலைமுறையிலேயே வித்தியாசமான முழுவதும் வேறுபட்ட ஒரு புதிய பயிர்க்குடும்பம் உருவாகிவிடும். F1 விதைகள் என்று இவற்றுக்குப் பெயர்.

இங்கனம் முதல் தலைமுறையிலேயே முழுமையான ஒரு பயிர்க்குடும்பம் உருவாவதால் பலன்கள் விரைந்து கிடைக்கும்.

இது தொழிலகங்கள் காப்பிரைட் உரிமையை உடனடியாகப் பெற உதவுகிறது. எனவே, தொழிலகங்கள் இதை ஊக்குவிக்கின்றன.

காப்பிரைட் என்றால் பணம். பணம் என்றால் வாழ்க்கை. பணம் சம்பாதித்தலே வாழ்வு. வாழ்வாங்கு வாழ காப்பிரைட் வாங்கு என்கிற இந்த முறையை ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்துகின்றன. அதை நம் பிரதமர் ஜி இந்தியாவில் கள ஆய்வு செய்ய அனுமதித்துள்ளார். அப்புறம், இந்திய மீடியாக்களும் அவை போன்ற மற்ற அமெரிக்க என்.ஜி.ஓக்களும் பிரச்சினை செய்யவும் பின்வாங்கிவிட்டார். இந்தப் பின்வாங்கும் தைரியம் உமக்கு மட்டுமே உண்டு என நம்மால் பாராட்டுக்கும் தகுதியானார்.

அப்படி ஒருபக்கம் பாராட்டும் அசமஞ்சமாய் நாமிருக்க, சமீபத்தில் மதுரைப் பல்கலைக்கழகம் மரபணுமாற்றம் செய்து உருவாக்கிய அரிசி ஆய்வுக்கு அனுமதி பெற்று உள்ளது. (விவரங்களுக்கு: மரபணு மாற்றிய அரிசி )

இந்த முறையைத்தான் புலிநகத்தைக் கொன்றைப் பூவோடு மரபணு மாற்றம் செய்த ஒரு எழுத்தாளர் ஆதரித்துசீனாவோடு மரபணு மாற்றம் செய்துகொண்டிருக்கும் செய்தித்தாளின் தமிழ் வடிவத்தில் கட்டுரை செதுக்கினார்: விவசாயத்திற்கு எதிரானதா அறிவியல்

அதற்கு ஆதரவாக புத்தகத்தை முகத்தோடு மரபணு செய்த சமூக ஊடகம் ஒன்றிலும் பெரிய சண்டை போட்டார். அவர் பெயர்கூட பறவை அரசனை தெய்வத்தோடு மரபணு மாற்றம் செய்து கொண்டு இருக்கும் என்கிற டிப்ஸோடு அடுத்த வித்தியாசத்தைப் பார்ப்போமா ?

மூன்றாவது (அடுத்த) வித்தியாசம்: மரபணு மாற்றம் என்பது பயிர்க்குடும்பங்களுக்கு இடையே மட்டும் இல்லாமல், மற்ற உயிரினக் குடும்பங்களுக்கும் பயிர்க்குடும்பங்களுக்கும் இடையே நடத்துவது. நவீன மேற்கத்திய, டார்வினிய-க்ரிகோர்மெண்டலிய வழிகளின்படி இது சாத்தியமாகி உள்ளது.

அதாவது ஜாதிவிட்டு ஜாதி, இனம் விட்டு இனம் கல்யாணம் இல்லை. ஆட்டோடு மனுசன் ’கண்ணாலம்’ செய்துகொள்ளலாம். ஆனால், அந்த ஆட்டை உடனடியாக வெட்டி அவன் சாப்பிடாமல் மற்றவர்களுக்குச் சாப்பிடக் கொடுத்துவிட வேண்டும்–என்று எக்காலத்துக்கும் பொருந்தும் ஒரே மெய்ஞானமரபு சொல்லுவதுபோல தொழிலகங்களும் (அதாவது, கார்ப்பரேட்டுகளும்) செய்து பார்க்கின்றன.

இந்த ஒரே அமைதி – ஒரே அன்பு மெய்ஞானமரபுகள் எதிர்க்கிற டார்வினும், க்ரிகோரியும் பிறந்து 200 வருடங்களுக்குப் பின்னர், பாலாடைக்கட்டியை (காலனிய மரபணுமாற்ற மொழியின்படி சொன்னால், cheese. தமிழில், சீஸ்.) உருவாக்குவதற்காக Chymosin என்கிற தரகரைப் பயன்படுத்தினார்கள்.

1990ல் இது பொது விநியோகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அமெரிக்காவில்தான். மிகவிரைவாகக் காப்பிரைட் செய்து பணம் சம்பாதிக்கும் கனவுக்குக் காப்பிரைட் வாங்கி இருப்பவர்கள் அவர்கள்தானே. எனவே, அங்கே அது அனுமதிக்கப்பட்டது.

நாமும் அந்த சீஸைச் சாப்பிட்டுக்கொண்டே கேமராவின் முன்னால் “ஸே சீஸ்” என்று ஜி.எம்முக்கு ஆதரவாகக் கோஷம் போட்டுக்கொண்டு இருக்கிறோம் என்பதை க்ஷேத்ராடணங்களை ஸெல்ஃபி ஃபோட்டோ எடுத்து அனுப்பும் ஜி.எம்முக்கு எதிரான சுதேசி ஜிக்கள் மறந்துவிட வேண்டாம்.

இங்ஙனம், எவலூஷன் தியரிப்படி உருவான காசு கொட்டும் விஷயத்துக்கும் எவலூஷன் தியரி அப்ளை ஆகவேணும். எனவே, நான்கே வருடங்களில், சீஸுக்குள் நுழைந்த என்ஸைம் எவால்வ் ஆகி நம் சாம்பாருக்குள் நுழைந்த ரப்பர் தக்காளியாக மிகக் கச்சிதமாக உருவானது.

நீங்கள் மிக ஸூட்சுமமானவர்கள். கருணைக் கிழங்குகள் நசுங்கினாலும், கடைகளில் இப்போது கிடைக்கும் தக்காளி நசுங்குவதேயில்லை என்பதைக் கவனித்திருப்பீர்கள். உண்மையில், அதற்காகத்தான் அந்தத் தக்காளியே உருவாக்கப்பட்டது.

அப்போதுதான், அழுகாமல் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் சென்று நிறைய நிறைய எடுத்துச் சென்று நிறைய நிறைய பணத்தை அமெரிக்கத் தொழிலகங்கள் சம்பாதிக்க முடியும் ? எனவே, அமெரிக்கா அதற்கும் ஒப்புதல் அளித்துவிட்டது.

இந்தத் தக்காளியின் அப்பா அம்மா தொழிலகம் கால்ஜீன் (Calgene). ஏன் கால் அரை முக்கால் என்று ஜீன் கொட்டவேண்டும், முழுமையாகவே ஜீனைக் கொட்டுங்கள் என்று சொல்லி கால்ஜீனை தத்து எடுத்துக்கொண்டது மன்ஸாண்டோ. பிள்ளையை தத்து எடுப்பது அந்தக் காலத்து மரபணு மாற்ற முறை. பெற்றவர்களையே தத்து எடுப்பது (விலைக்குத்தான்) இந்தக் காலத்து ஜி.எம்.ஓ. முறை.

அம்மா அப்பா கம்பனியாக இருந்த கால்ஜீன், தான் பெற்றெடுத்த இந்தத் தக்காளிக்கு வைத்த பெயர் Flavr Savr. அதை பெங்களூர் தக்காளி என்ற பெயரில் பெங்களூரில் நான் வாங்கிக் கொண்டிருக்கிறேன். உங்கள் ஊரிலும் அந்தப் பெயர்தான் இருக்கும். மூளைச் சரக்கை அமெரிக்காவுக்குக் கொடுத்து, முடிச் சரக்கை வாங்கிப் போடத்தான் ஐடி பெங்களூரே உருவானது. சரி. தமிழ்நாட்டில் என்ன பெயர்? குஷ்பு தக்காளி என்று பெயர் வைத்து, நடிகைக்குக் கட்டிய கோயிலில் பிரசாதமாகத் தந்தால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

இது ரப்பர் போல இருப்பதைப் பார்த்துச் சிலர் இந்தத் தக்காளியில் தவளை ஜீன் கலந்திருக்கிறது என்று கிளப்பி விடுவார்கள். நம்பாதீர்கள். ஆட்டோடு கண்ணாலம் செய்வதுபோல தக்காளியோடு குடும்பம் நடத்த தவளை இன்னும் கன்வெர்ட்டாகவில்லை. அதேபோல இந்தத் தக்காளியில் பன்றியின் மரபணுவும் கலக்கவில்லை. (ஒட்டகம், பசு, ஆடு, காளைகளில் பன்றி மரபணு கலந்திருப்பதை மட்டும் வெளியே சொல்லிவிடாதீர்கள். ப்ராமிஸ் ? தக்காளி, இப்படிக் கிளப்பிவிட்டால் நெறையப் பேருக்கு இஷாலாகிவிடும்.)

எந்தவிதமான மிருக ஜீனும் எந்தப் பயிரிலும் கலக்கப்படவில்லை என்கிறது மன்ஸாண்டோவின் ஒரு ப்ளாக். அது அஸ்வத்தாம அதஹ மாதிரி உண்மை. ஏனென்றால், அத்தகைய ஆய்வுகளைச் செய்ய மன்ஸாண்டோ ஆய்வுக்கூடங்களை அமைத்தது. எதிர்ப்புகள் காரணமாக அவை மூடப்பட்டன என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.

ஆனால், தவளை பன்றி ஜீன்கள் இல்லாமல் உருவானதுதான் இந்த ரப்பர் தக்காளி. நம்பலாம். வள்ளலார் முறையில் ஜீவகாருண்யமாகச் சமையல் செய்யலாம். பிரியாணியில் கிடக்கும் ஒட்டக ஈரலைச் சந்தேகப்பட்டாலும், தக்காளியைச் சந்தேகப்படவேண்டியதில்லை.

தக்காளியை அழுகச் செய்யும் வஸ்து polygalacturonase. அந்த வஸ்துவை செயல்படவிடாமல் செய்யப் பாட்டாளிவர்க்க சினிமா மரபின்படி தக்காளிவர்க்கத்துக்கு மெஸேஜ் சொல்லி அனுப்பிவிட்டார்கள் – செய்திRNA மூலம். செய்திRNA = mRNa. m என்பது message.

பொலிட்பீரோ உத்தரவு போட்டால் காம்ரேட் கட்டுப்படுவார். சைபீரியாவில் குளிர் ஜாஸ்தி. அதுபோல, இனி அழுகாதே என்று தக்காளிக்குச் செய்தி அனுப்பிவிட்டார்கள் விஞ்ஞானிகள். கிடைத்த செய்திக்குத் தக்காளி கட்டுப்பட்த்தான் வேண்டும். நாட்டுத் தக்காளிக்குத்தான் அது கேதச் செய்தி.

இப்படித் தக்காளியில் மட்டுமல்ல மற்ற எல்லாப் பயிர்களிலும் செய்யலாம் எனத் தக்காளிக்குள் செய்தியைத் தடை செய்த தொழிலகங்கள் அமெரிக்க அரசுக்குச் செய்தி அனுப்பினார்கள்.

தொழிலகங்கள்தான் அமெரிக்க அரசு. அமெரிக்க அரசே ஒரு தொழிலகம். எனவே, இப்போது அமெரிக்காவில் மன்சாண்டோ போன்ற கம்பனிகள் உருவாக்கும் பழங்கள், காய்கறிகள் மட்டுமே அரசு அங்கீகாரம் பெற்றவையாகிப் போயின என்று ஜி.எம்முக்கு எதிரானவர்கள் சொல்கிறார்கள்.

உண்மையா, இல்லை “தகவமைப்பா” என்பது மன்சாண்டோவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும்தான் தெரியும். நான் மௌண்ட்ரோட் மகாவிஷ்ணுவைச் சொல்லவில்லை. அவர் ஜி.எம்முக்கும் மன்ஸாண்டோவுக்கும் எதிரி. அவருக்குப் பிடித்த திகில் கதை இது. மேலும், மன்சாண்டோ அமெரிக்கக் கம்பனி. சீனக் கம்பனி இல்லை.

இப்படி மண்சாண்டோ விஷ்ணுவால் படைக்கப்பட்ட BT பருத்திதான் இந்த வீடியோவில் ஹிந்திக்காரர்களால் எதிர்க்கப்படுகிறது. (ஸுத்தத் தமிழ்வாதிகள் கவனிக்கவும். ஹிந்திக்காரர்கள். ஹிந்திக்காரர்கள். நவீன விஞ்ஞானத்தை எதிர்க்கும் பார்ப்பனப் பனியா பாஸீஸ வடவர்கள்.)

BT பருத்தியில் இருக்கும் இந்த BTயில் Bயின் அர்த்தம் பேஸிலஸ். Tயின் அர்த்தம் தெரியாது. அதாவது எனக்குத் தெரியாது. கூகிளில் பார்த்துக் கொள்ளுங்கள். ஒட்டுமொத்தமாகச் சொன்னால் ஒரு பாக்டீரியாவின் மரபணுவை எடுத்து பருத்தியின் மரபணுவோடு ஒட்டுமொத்தம் செய்து உருவாக்கி இருக்கிறார்கள்.

எதற்காக? எட்டு, பத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் கலப்பினம் செய்த அதே காரணங்களுக்குத்தான். அதாகப்பட்டது, இந்தப் பதிலின் 8வது 9வது பாராக்களின்படி, அவற்றை மறுபடி, மறு-படி செய்தால்:

பயிரின் பலவீனங்களை நீக்க. அதாவது, பஞ்சம், செடிகளுக்கு வரும் வியாதி, ஒட்டுண்ணிகள், களைகள் இவற்றை எதிர்த்து அல்லது இவற்றால் பாதிக்கப்படாமல் பயிர்கள் வளர்ந்து மானுடரான நமது சாப்பாட்டுக்கும், நமது வியாதிகளைப் போக்கவும், அதிக மகசூல் பெறவும், தொழில் வளர்ச்சிக்கும்…..

எந்த இரு செடிகளை கலப்பினம் செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்து, முடிவு செய்து, கலப்பினம் செய்திருக்கிறார்கள்.

முன்னோர்களின் நோக்கத்திற்கும் மன்ஸாண்டோவின் நோக்கத்திற்கும் மேலாகப் பார்த்தால் அதிக வித்தியாசங்கள் இல்லை. கீழாகக் கீழான 6 வித்தியாசங்கள் இருக்கலாம் என்று ஜிஎம்மை எதிர்ப்பவர்கள் சொல்லக்கூடும். இருந்தாலும், இந்தவகை ஜி.எம்மால் என்னவெல்லாம் சாத்தியங்கள் இருப்பதாக அவர்களே சொல்கிறார்கள் ?

– சிறிய நிலத்தில் அதிக மகசூல்.

பங்களாதேஷ், முகல்ஸ்தான், பாகிஸ்தான், திருச்சபைகள், இலங்கை, தலித்ஸ்தான், சீனா போன்ற சுதந்திர நாடுகளுக்குக் கொடுத்தது போக மிஞ்சி இருக்கும் வறண்ட கொஞ்சூண்டு கோமணப்பூமிகளில் முப்போகம், நாற்போகம் என எழுச்சிக் கூட்டங்கள் நடத்திக் கலக்கிவிடலாம், கலக்கி.

– இந்த அற்புத எழுச்சிக் கூட்ட மகசூலும் அடிக்கடி பெறலாம்.

அடிக்கடி என்றால், காங்கிரஸ் மத்தியில் ஆளும்போது மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வரும் எலக்‌ஷன்களின் எண்ணிக்கையைவிட அதிக அடிக்கடி. நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்.

– செடிகளுக்குப் பூச்சிக் கொல்லி அடிக்கிறேன் என்று சொல்லி தங்களுடைய உடம்பை விவசாயிகள் கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் பெண்டாட்டியிடம் சொன்னது போல “நெருங்காதே போ” என்று செடிகளே தங்களைக் கொல்லும் பூச்சிகளிடம் சொல்லிவிடும்.

சிவன் வந்து திருநீலகண்ட தம்பதிகளை நெருங்க வைத்ததுபோல செடிகளையும் பூச்சிகளையும் நெருங்க வைப்பதற்காக சிவசேனைக்கார்ர்கள் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள். அவர்களுக்குப் பூஜை செய்து குளிர்விக்க அமெரிக்காவிற்கே அவர்கள் ஷேத்ராடனம் செய்ய மொன்ஸாண்டா ஏற்பாடு செய்தது. (செய்தி: BJP, Shiv Sena MPs all packed for Monsanto-sponsored US junket)

இப்படி டூர் வாய்ப்புகள் கிடைக்காத முற்போக்குவாதிகள் பொறாமையால் சுதேசிப் பிற்போக்குவாதிகளை எதிர்க்கிறார்கள்.

நெருங்குவதுதான் முதல் பாவம். உண்மையான ஒரே சாமி நவீன அறிவியல் மட்டுமே. புனித மொன்சாண்டோ கம்மிங் சூன் கம்மிங் சூன் எனும் பார்வை முற்போக்குவாதிகளுடையது. சீக்கிரம் வந்துவிட்டால் டைவர்ஸ் வாங்குங்கள் மன்ஸாண்டோ உருவாக்குவதை வாங்காதீர்கள் எனும் சுதேசிப் பார்வை பிற்போக்குவாதிகளுடையது.

– உலகில் லட்சக்கணக்கானவர்களுக்குச் சாப்பாடு.

சரியான விநியோகமுறை, பாதுகாப்பு முறை இல்லாமல் லட்சக்கணக்கானவர்கள் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்குப் போய்ச் சேரவேண்டிய காய்கறிகளும், பழங்களும் போக்குவரத்துக்களின்போதும் சேமிப்புக் கிட்டங்கிகளும் அழிந்துவிடுகின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து எல்லார் கையிலும் நெடுநாட்கள் கெடாத ஆப்பிள் தருகிறது ஜி.எம். அறிவியல். ஒவ்வொருவர் கையிலும் புனித நூல் தந்து ரட்சிப்பு தரத்துடிப்பது போல.

லட்சக்கணக்கில் துடிக்கத் துடிக்கப் புனிதவிசாரணைகள் செய்ததில் உள்ள அந்த உன்னதத் துடிப்பைத்தான் கவனிக்க வேண்டும். மானுடவியல் படித்து சமத்துவம், கருணை, எக்ஸ்ட்ரா போதிக்கும் அம்பேத்காரே அப்படித்தான் வழிகாட்டுகிறார். (The higher castes have conspired to keep the lower castes down). அத்தகைய உன்னதப் பார்வையோடுதான் மன்ஸாண்டோவும் நல்ல துடிப்பான நோக்கத்தில் துடிக்கத் துடிக்கச் செயல்படுகிறது என்று ஒபாமாவின் ஊரில் சொல்லுகிறார்கள்.

– அலர்ஜியை இல்லாமல் செய்யலாம்.

மனிதர்கள் சிலருக்கு சில உணவுகள் அலர்ஜி. உதாரணமாய், கடலை. இந்தக் கடலையில் அலர்ஜியை உருவாக்கும் ப்ரோட்டினை எடுத்துவிடலாம். அதனால், அலர்ஜி உள்ளவர்களும் பீச்சுகளில் நன்கு கடலை போடலாம். பீச்சுகளில் சுண்டல்-கடலை விற்கும் பாட்டாளிச் சகோதரர்களுக்காகவே இந்த வரப்பிரசாதம்.

மனிதர்களுடைய ஜீனை மாற்றம் செய்ய போப்பாண்டவர் சம்மதிக்கும் வரையில் மனிதரில் மாற்றாமல் கடலையில் ஜீனை மாற்றம் செய்வது செக்யூலரிஸ செம்மரபுக்கும் பொருத்தமானதேயன்றோ.

– சத்துக்களை அதிகரிக்கலாம்.

இப்படி மரபணு மாற்றம் செய்தால் அந்தப் பயிர்களில் இருக்கும் சத்துக்களை அதிகரிக்கலாம். அதிகரித்து இருக்கிறார்கள்.

உதாரணமாக, தங்க அரிசி. (Our commitment to help in the fight against vitamin-A deficiency) இதில் இருக்கும் விட்டமின் ஏவானது பசலைக்கீரையில் (தமிழில்: ஸ்பினாச்சில்) இருப்பதையும் விட அதிகம் இருப்பதையும், விட்டமின் ஏ குறைபாடால் வியாதி வந்தவர்களை குணப்படுத்துவதையும் நிரூபித்து இருக்கிறார்கள். இப்படி விட்டமின் ஏ விட்டமின் பி என்பதெல்லாம் மன்சாண்டோ விட்ட கதை, எல்லாம் விட்டமின் ப என்கிறார்கள் சுதேசிவாதிகள்.

– அதேபோல, கெட்ட கொழுப்பை உருவாக்கும் ஐட்டங்களை நீக்கலாம். ஃபில்ட்டர் காப்பியில் இருக்கும் காஃபினை ஃபில்ட்டர் செய்து நீக்கலாம்.

கொழுப்பு நீங்கி, டயபடீஸ் ஆண்மைக்குறைவு பெண்மைக்குறைவு ஹார்ட் அட்டாக் ஸ்ட்ரோக் நீக்கி பயமின்றி ஐட்டங்களை வாயிலும் பீச்களிலும் தள்ளிக்கொண்டு வாழ்வாங்கு வாழலாம்.

– பாதுகாப்பானது.

59 நாடுகளில் உள்ள நம்பத்தகுந்த, எந்த அமைப்பையும் சாராத நம்பிக்கைக்கு உரிய விஞ்ஞானிகளால் ஜி.எம். விதைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன. 25 வகைப் பயிர்களில் ஏறத்தாழ 319 வகை புது ஜி.எம்.ஓக்களை உருவாக்கி இருப்பதற்கு 2497 ஒப்புதல்கள் கிடைத்துள்ளன.

– நோய்கள் நீங்கும்.

நோயெதிர்ப்புச் சக்திகளை செடிகளில் அதிகரித்து அவற்றை உணவாக மனிதர்களுக்குக் கொடுக்கலாம். அதனால் நோய்கள் நீங்கும். வேக்ஸின்கள்கூடத் தேவையில்லை. இதன் மூலம் எய்ட்ஸ் போன்ற வியாதிகளை இல்லாமல் செய்யலாம். என்ன, சில உறைகளின் விற்பனை கொஞ்சம் டல்லாகும். தெருவோர முனைகளில் திரவியம் தேடுவது ப்ரைட்டாகும். நிறையப் பேர் முருங்கைக்காய் விலக்கி சிரமப்பட, சிலர் விலக்குதலை விலக்கி, விலக்கி, ஹம்கோ தஸ் என்று தங்களுக்குப் பிடித்த டார்வின் சொன்னபடி எவால்வ் ஆவார்கள்.

– கேன்ஸர் மற்றும் எலும்புருக்கி நோய்களை எதிர்க்கிற உருளைக்கிழங்குகளை உருவாக்கி உணவாக்கமுடியும்.

– ஆந்த்ராக்ஸ் போன்ற கொடிய உயிரியல் ஆயுதங்களுக்கு எதிரான எதிர்ப்புசக்தியை உணவின் மூலமாக உருவாக்க முடியும்.

– டயரியா மற்றும் ரத்தசோகையை குணமாக்கும் அரிசிகளை உருவாக்க முடியும்.

அதாவது, மருத்துவமும்-விவசாயமும் கைகுலுக்கலாம்.

இங்கனம் எல்லாம் பேசி அமெரிக்காஆஆஆவ்-வால் செய்யப்பட்ட எந்த விஷயத்தையும் வாவ் சொல்லி awe ஆகி முற்போக்குவாதிகளாக ஆவதற்குப் பதிலாக சில சுதேசி ஜிக்கள் இதை எதிர்க்கிறார்கள்.

இப்படி எல்லாம் சந்தேகப்படுகிறார்கள்:

– இங்கனம் உருவான பயிர்கள் மற்ற பயிர்களைவிட வலுவானவை என்பதால் மற்றவற்றை அழித்துவிட்டால்…

– களை எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர் ஒன்றின் மகரந்தம் காற்றின் வழியாக மற்றொரு செடியில் கலந்து அந்தச் செடியின் குட்டிக்கும் களை எதிர்ப்பு சக்தி வரலாம். அந்தச் செடியே ஒரு களையாக இருந்தால்…

– மரபான பயிர்களுக்கு, மரபணு மாற்றம் செய்த சூழலில் தகவமைந்து கொள்ள முடியாமல் போயிற்று. கலப்புத் திருமணம் செய்துகொள்ளாத அயர்லாந்து உருளைக்கிழங்குகள் இப்படித் தகவமைய முடியாமல், இட ஒதுக்கீடு இன்றி அழிந்து ஒரு பஞ்சம் வந்ததே, அது போன்ற ஒரு பஞ்சம் வந்தால்…..

– மானுட நலனை மட்டும் கவனத்தில் கொள்கிறீர்கள். பறவைகள், விலங்குகள், பூச்சிகள் போன்றவற்றிற்கு இதனால் ஏதேனும் பாதிப்பு நடந்தால்….

– தற்கொலை செய்யும் விவசாயிகளின் சதவீதத்தில் கணிசமானோர் BT பருத்தி விவசாயிகளாக இருப்பதால்…

_ BT பருத்தியானது பணப்பயிர்கள் விளையும் இடங்களில் மட்டுமே விளைகிறது. மற்ற இடங்களில் வளரமுடியாமல் இருப்பதால்….

– BT எதிர்த்த பயிர்க்கொல்லிப் பூச்சிகள் போய், பதிலாகப் புதுவகை உண்ணிகள் உருவாகி, வால் போய் கத்தியாக வந்துகொண்டே இருப்பதால்….

– 500க்கும் மேற்பட்ட நம்பகம் மிக்க ஆய்வுகள் ஜி.எம். விதைகள் தீய விளைவுகளை உருவாக்குகின்றன என்று சொல்லுவதால்….

– ப்ரேஸில் கடலை போன்ற ஒரு தாவரத்தில் இருக்கும் அலர்ஜி உருவாக்கும் ஐட்டத்தை எடுத்து இன்னொரு தாவரத்தில் புகுத்தி, அந்த தாவரம் பெரும்பாலானவர்கள் உண்ணும் அரிசி போன்றவையாக இருந்து தொலைத்தால் ….

– அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஆய்வு செய்து ஏற்கப்பட்ட ஒருவிஷயம் இந்தியாவின் சூழலுக்குப் பொருந்தாமல் தீமையை விளைவித்தால்….

– ஆய்வகங்களில் உயிர்னப்பன்மை இல்லை. அதனால், ஆய்வு முழுமையானதல்ல. உறவார்ந்த விவசாய முறை (sustainable agriculture) ஆக நம் மரபு முறைகள் கைவசம் இருப்பதால்…

– பருத்தி போன்ற வணிகப் பயிர்களில் BT ஜீனை வைத்து, அந்த BT ஜீன் மனிதர்களின் உணவுப் பயிர்களுக்குள் மகரந்தச் சேர்க்கையாகிப் புகுந்தால்….

– மருந்துத் தொழிலகங்கள் ஏற்கனவே சந்தேகத்துக்கு உரியன. அவையும் விதைத் தொழிலகங்களும் ஒன்று சேர்ந்தால்….

– இந்த ஜி.எம். விதைகளை வைத்து விவசாயம் செய்தபின் நிலமானது வேறு விதைகளை ஏற்க முடியாமல் போகும் நிலை வந்தால்…

– (கார்ப்பரேட்டுகளால்) வளரும் (?) நாடுகளும் சோப்ளாங்கி விவசாயிகளும் விதைகள் விற்கும் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்துக்கு உள்ளானால் ….

– ஜி.எம். விதைகள் தவிர வேறு விதைகளே இல்லை என்கிற நிலை உருவானால்….

– விதைகளுக்குக் காப்புரிமை வாங்கி இருப்பதால், தொழிலகங்கள் பயிரிட அவற்றை விவசாயிகளுக்குத் தர மறுத்தால்…

– பாரம்பரிய விதைகளும், விவசாய முறைகளும் அழிந்து போயிருந்தால் ….

– எல்லாவற்றின்மேலும் லேபிள் ஒட்டும் அமெரிக்கா மரபணுமாற்றம் செய்த விதைகள் மேல் இவை ஜி.எம். விதைகள் என்று லேபிள் செய்ய மறுப்பதால்…..

– இதில் வியாதி தீர்க்கும் நன்மைகள் எல்லாம் வளரும் நாட்டு (அதாவது கார்ப்பரேட்டுகளால் சுரண்டப்படுகிற) நாட்டு மக்களின் வியாதிகள் குறித்தே இருப்பதால்….

என்று பல தால்களைக் காரணமாகக் காட்டி தால் சாப்பிடும் சுதேசி ஜிக்கள் எதிர்க்கிறார்கள்.

பிரச்சினை என்னவென்றால், இந்த ஜிஎம் பயிர்கள் வெளிவந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்கிறார்கள் அதன் ஆதரவாளர்கள். அவர்கள் கோபம் எல்லாம் பத்தாண்டுகளாகப் பிரச்சினை இல்லாதபோதும் பத்தாம்பசலிகள் இந்த நவீன அறிவியல் முறைக்கு எதிராகப் பிரச்சினை செய்கிறார்கள் என்பதுதான்.

வெளியாகி ஏறத்தாழ 31,55,69,520 நொடிகள் ஆகிவிட்டதே. வெறும் 10000 ஆண்டு பத்தாம்பசலி மரபுக்காகவா இதை எதிர்க்கிறீர்கள் சுதேசிப் பதர்களே! என்று அமெரிக்காஆஆஆவ் வியப்படைகிறது.

​அமெரிக்காவே வியப்படையும் இந்த விஷயம் குறித்து எனக்குத் தெரிந்தது மிகவும் கொஞ்சம்தான், யூ நோ? தெரியாதவைதான் நிறைய.

வயிற்றுக்கு ஈனாத போது காதுக்கும் ஈய யாராவது வந்து ஈவார்கள். அதுவரை, 90 சதவீதம் ஜி.எம். செய்யப்பட்ட, தொழிலகங்களால் ப்ராஸஸ் செய்யப்பட்ட உணவுபோன்ற வஸ்துக்களை வயிற்றுக்கு ஈந்து வாழ்வை சுருக்கும் முற்போக்குவாதிகளாக நாம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

0 Replies to “மிஸ். குஷ்பு தக்காளி, ஜி.எம்.”

  1. மரபணு மாற்றம் சரி அல்லது தவறு என்ற முடிவை இந்தக் கட்டுரை தரவில்லை. ஆனால் இதைப் போன்ற கட்டுக்கோப்பான கட்டுரைகளைத் தமிழில் நான் படித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் விறுவிறுப்பான நடையில் அதே சமயம் பல புதிய தகவல்களுடன் மிகச் சிறப்பாக எழுதப்பட்ட கட்டுரை. மரபணு மாற்றம் குறித்து தமிழில் வெளியாகி உள்ள கட்டுரைகளில் இது முதன்மையானதாக விளங்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.