விதியின் பிழை காண் – திரைக்கதை – பகுதி – 1

வருடம் கி.பி.500. தென் தமிழகத்தில் நூறு வருடங்களாக அமைதி நிலவுகிறது.
மதுரையை ஆண்ட களப்பிரரும் திருநெல்வேலிப் பாண்டியரும் போரின்றி ஆட்சி செலுத்துகிறார்கள்.

இரண்டு நகரங்களுக்கும் நடு வழியில் தூங்கி வழிகிறது சாத்தூர் கிராமம்.கிராமத்தின் அருகே உள்ள காட்டில் வனதுர்க்கை கோவில். தன்னுடைய மனைவி மற்றும் ஒரு வயதுக் குழந்தையுடன் அங்கு படையலிட வர இருக்கிறான் பாண்டியன்.

இச்சிறு கிராமத்தில் திருட்டுப் போன மாடுகள் மற்றும் நகைகளைக் கண்டுபிடித்துக் கொடுத்துப் பிழைப்பு நடத்துகிறான் தருமன் என்னும் ஜோசியன். அவனுடைய மூதாதையர் யாவரும் சோதிடர்கள், மற்றும் மந்திரவாதிகள். தருமனிடம் உறங்குகிறது அவன் வாழ்க்கையைப் பெரிய ஒரு ரகசியம்.

பாண்டியனின் ஆபத்துதவிகள் சாத்தூரை நோக்கி வரும் பொழுது, வழியில் சில குள்ளர்களைப் பார்க்கிறார்கள். பாண்டியனைப் பார்க்க விரும்பும் இந்தக் குள்ளர்களை அருவருப்புடன் துரத்தியடிக்கிறார்கள். பாண்டியன் மறுநாள் கிராமத்திற்கு வருகிறான். வனதுர்க்கை கோவிலில் படையலிடுகிறான். அன்று இரவு, சாத்தூரின் பெரிய நாட்டார் வீட்டில் தங்குகிறான்.

இரவு நடு ஜாமத்தில் ராணியின் அறையில் இருந்து அலறல் கேட்கிறது.

சாத்தூர் கிராமத்தில் நடக்கும் ஒரு பெரும் குற்றம், போருக்கு வித்திடுமா? சோதிடனின் ரகசியம் என்ன?
திரையில் காண்போம்…

fancy_poem_article_post_separator

soldiers on horse

FADE IN:

 

வெளிப்புறம் – மதுரை செல்லும் சாலை – இரவு
SUPERIMPOSE:

 

“கி.பி. ஆறாம் நூற்றாண்டு தென் தமிழ் நாட்டில் களப்பிரர் ஆட்சி. களப்பிரன் விக்கிராந்தன் கையில் மதுரை மாநகரம். நெல்வேலியை தலைநகராகக் கொண்டு பாண்டியன் நெடுங்கோன் ஆண்ட காலம்.
நூறு வருடங்களாகத் தமிழகத்தில் அமைதி துலங்குகிறது.ஒரு இரவு. மதுரை செல்லும் சாலை.”
 
இரவு நாலாம் சாமம். மதுரை செல்லும் சாலையில் நான்கு குதிரை வீரர்கள் போகிறார்கள். போர்க் குதிரைகள். வீரர்கள் நால்வர் தோல் கவசம் அணிந்திருக்கிறார்கள். கவசம் அணியாமல் துண்டு போர்த்திய அவர்களுடைய தலைவன், தென்னதரையன் முன்னால் செல்கிறான்.
 
தென்னதரையனுக்கு முப்பது வயதிருக்கும். சராசரி உயரம், ஆனால் வலிமை மிகுந்த உடல்.
தென்னதரையனின் இடது பக்கம் இளம் வீரனான வழுதி வருகிறான். வலது பக்கம் பெருமாளும் கணியனும் வருகிறார்கள்.
 
முதலில் மௌனமாகச் செல்கிறார்கள். நிலா வெளிச்சம். இரு பக்கமும் முள் காடுகள். குதிரைகள் மெல்ல நடக்கின்றன.
வழுதி

 

தென்னதரையரே, குதிரைகள் களைத்து விட்டன. சாத்தூரை நெருங்கி விட்டோம். சற்றே இளைப்பாறிச் செல்லலாமே?
பெருமாள்

 

அரையா, வழுதிக்கு இளைப்பாற வேண்டுமாம்.
தென்னதரையன், திரும்பிப் பார்த்துப் புன்னகைக்கிறான்.
தென்னதரையன்

 

இன்னும் நான்கு நாழிகை தான். நெருங்கி விட்டோம்.
வழுதி

 

பாண்டியர் நாளை காலை கோவிலுக்கு வருகிறார். நாம் இப்படி நடு ராத்திரி போய் என்ன செய்ய?
குதிரைகள் மெதுவாக நடக்கின்றன. சுற்றிப் பார்க்கிறார்கள்.
வழுதி

 

(CONTD)
பேய் நடமாடும் இடமாகத் தோன்றுகிறதே, அது தான் கேட்டேன்.
சாலையோரத்தில் ஒரு இடிந்த மண்டபம் தெரிகிறது. அதைப் பார்த்தவாறே மெதுவாகத் தாண்டிப் போகிறார்கள்.
பெருமாள்

 

நூறு வருடங்களுக்கு முன்னால் இந்த இடமெல்லாம் போர்களமாக இருந்தது. மதுரையை விட்டுப் பாண்டியர் வரும் போது கடைசிச் சண்டை இங்கே தான் நடந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
கணியன்

 

யார் செயித்தார்கள்?
வழுதி

 

எல்லாப் போர்களிலும் பாண்டியர் தான் செயிப்பார். உனக்குச் சொல்லித் தரவில்லையா?
தென்னதரையன் சிரிக்கிறான்.
பெருமாள்

 

அந்தப் போர் முடிந்த பிறகு இங்கு ஆயிரக்கணக்கில் பேய்களும் பிசாசுகளும் சுற்றுவதாகக் கேள்வி.
தென்னதரையன்

 

பெருமாள், வழுதியை பயமுறுத்தாதே. அம்மாவைப் பார்க்க ஓடி விடப் போகிறான்.
எல்லோரும் சிரிக்கிறார்கள்.
திடீரென்று,
பெருமாள்

 

அரையா, இது என்ன?
சாலையில் சற்றுத் தொலைவில், மங்கலான வெளிச்சத்தில் சில உருவங்கள். குள்ளமாக, வினோதமான தலையுடன்.
வீரர்கள் உற்றுப் பார்க்கிறார்கள். தென்னதரையன் குதிரையைத் தட்டி விடுகிறான். குதிரைகள் நெருங்க உருவங்கள் சற்றுத் தெளிவாகின்றன.
வழுதி

 

அட குள்ளர்களப்பா.
கணியன்

 

யார் அது…குள்ளர்கள்?
வழுதி

 

மலைச் சாதி. குற்றாலத்தில் திரிவார்கள்.
குதிரைகள் இன்னும் நெருங்க, குள்ளர்கள் தெரிகிறார்கள். தலையில் ஓலைத் தொப்பி. குதிரைச் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்து நிற்கிறார்கள். குதிரைகள் சடசடவென்று பாய்ந்து அவர்களைச் சுற்றி வளைத்து நிற்கின்றன. பின்னால் முள்காடு.
தென்னதரையன்

 

அடேய், யார் நீங்கள். எங்கே போகிறீர்கள்?
மலையன் என்னும் குள்ளன் முன்னால் நிற்கிறான்.
மலையன்

 

ஐயா சாத்தூர் போகிறோம்..பாண்டியரைப் பார்க்க.
பெருமாள்

 

அது என்ன…உன் மூட்டைக்குள்?
மலையன் மூட்டையை முன்னே வைக்கிறான்,
மலையன்

 

அரசருக்குக் கொடுக்க காட்டுத் தேனும் தினைமாவும்.
தென்னதரையன் முகத்தைச் சுளிக்கிறான்.
தென்னதரையன்

 

அடேய், அரசருக்கு ஏன் இந்தப் பழந்தேன்? திரும்பிப் போ..குரங்குகளுடன் போய் விளையாடு.
வீரர்கள் சிரிக்கிறார்கள்.
மலையன்

 

(தயக்கத்துடன்)
ஐயா, பாண்டியருக்கு ஒரு விண்ணப்பம் செய்ய வேண்டும். எங்கள் மலையில் மரமெல்லாம் வெட்டி, எரித்துக் கூடாரம் பண்ணி..

 

தென்னதரையன்

 

(உரத்த குரலில்)
ஏய், இப்போது போகிறாயா..இல்லையா?
குதிரையை முன்னே நகர்த்துகிறான். மலையன் பயந்து பின்வாங்கி விழுகிறான். வீரர்கள் சிரிக்கிறார்கள்.
வழுதி

 

குள்ளா, வேண்டுமானால் அந்த மரத்தை பிடித்துத் தொங்கு. பாண்டியர் போகும் போது விளையாட்டுக் காட்டலாம்.
குள்ளர்கள் பின்வாங்கிச் செல்கிறார்கள். திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே போகிறார்கள்.
தென்னதரையன்

 

(வீரர்களிடம் திரும்பி)
தம்பிகளா…நேரமாயிற்று. விடியப் போகிறது. சீக்கிரம்.
குதிரைகள் சாலையில் விரைந்து சென்று மறைகின்றன.

 

வெளிப்புறம் – சாத்தூர் கிராமத்தில் ஒரு தெரு – பகல்

 

பெண்கள் வாசல் தெளிக்கிறார்கள். குடிசை வீடுகள் பல இருக்கின்றன. சில ஓட்டு வீடுகள். ஒரு வீட்டின் பின்னே மாட்டு தொழுவம் ஒன்று தெரிகிறது. அதை நெருங்க நெருங்க பால்கார கோவிந்தன் அழைக்கும் குரல் கேட்கிறது.
கோவிந்தன்

 

செல்லி…செல்லி..?
தொழுவத்தின் பின்னால் போய்த் தேடுகிறான். அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்து சிலர் சேர்ந்து தேடுகிறார்கள்.
பக்கத்து வீட்டார்

 

செல்லி…செல்லி..?
இன்னொருவர் தொழுவத்தின் கூரையைப் பார்க்கிறார்.
கோவிந்தன்

 

அடக் கடவுளே. இது எங்கே போய்த் தொலைந்ததோ…
கோவிந்தன் மனைவி

 

கட்டிப் போட்டாயா இல்லையா?
தேடியவர்கள் எல்லோரும் வந்து சேர்ந்து கொள்கிறார்கள்.
பக்கத்து வீட்டார்

 

எவனாவது திருடிக் கொண்டு போயிருப்பான்.
கோவிந்தன் மனைவி

 

எவ்வளவு முறை சொல்லி இருக்கிறேன் தெரியுமா? மாட்டைக் கட்டிப் போடு, கட்டிப் போடு… நான் என்ன சொன்னாலும் மரியாதை கிடையாது.
பக்கத்து வீட்டார்- 3

 

பேசாமல் சோசியக்காரன் தருமனிடம் போய்க் கேளேன். சரியாகச் சொல்லி விடுவான்.
கோவிந்தன்

 

தருமனா? அவன் நம்மை எல்லாம் பார்ப்பானா?
பக்கத்து வீட்டார்- 3

 

ஏன் பார்க்காமல்? போன மாதம் நாட்டார் வீட்டு நகைகளை அவன் தான் கண்டுபிடித்துக் கொடுத்தான்.
பக்கத்து வீட்டார்- 2

 

அவன் தாத்தா போன பின்பு பிரமாதமாகக் குறி சொல்கிறான்.
கோவிந்தன்

 

ஏதோ பிசாசு உதவி இருக்கிறது என்கிறார்களே, அது தான் யோசிக்கிறேன்
கோவிந்தன் மனைவி

 

(தலையை விரித்துப் போட்டுக் கொண்டு)
இப்போது செல்லி வரா விட்டால் நீ வர வேண்டாம்
கோவிந்தன் அவளைப் பார்க்கிறான். அவளே பிசாசைப் போல நிற்கிறாள். சுற்றி உள்ள எல்லோரையும் பார்க்கிறான். பிறகு துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு கிளம்புகிறான்.

 

உள்புறம் – தருமன் வீடு – காலை.
சோதிடன் வீட்டின் உள்ளே, சூரிய வெளிச்சம் சன்னல் வழியே கோடுகளாக விழும் இடத்தில் தருமன் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறான். கண்கள் மூடி தியானத்தில் இருப்பது போல இருக்கிறான். இருபத்தைந்து வயதிருக்கும். கறுப்பாகக், களையாக இருக்கிறான். நெற்றியில் திருநீற்றுக் கீற்று.
அவனைச் சுற்றிப் பல ஓலைச் சுவடிகள் இரைந்திருக்கின்றன. சற்றுத் தள்ளி ஒரு அடைப்புக்குப் பின்னால் இருந்து விநோதமாகப் பாத்திரங்கள் உருட்டும் சத்தம் கேட்கிறது. சற்று நேரத்தில் அவன் மனைவி, நாகை, வெளியே வருகிறாள்.
நாகை தருமன் அருகே வந்து நிற்கிறாள். அவன் கண் மூடியபடி இருக்கிறது. அவள் தொண்டையைச் செருமுகிறாள்.
தருமன்

 

சொல்
நாகை

 

வீட்டில் பால் இல்லை
தருமன்

 

(கண்களைத் திறக்காமலே)
சற்று நேரத்தில் அதுவாக வரும்.
“தருமா, தருமா..” என்று வெளியில் இருந்து குரல் கேட்கிறது.
நாகை வெளியே போய் பார்க்கிறாள். தருமன் அப்படியே அசையாமல் அமர்ந்திருக்கிறான். உள்ளே பால்கார கோவிந்தன் வருகிறான்.
தருமன்

 

(கண்களைத் திறந்து)
வா கோவிந்தா. செல்லியைத் தேடி வந்தாயா?
கோவிந்தன்

 

(ஆச்சரியத்துடன்)
உனக்கு எப்படி..
தருமன்

 

வேப்பம் தோப்பு இருக்கிறதில்லையா? அங்கே போய்ப் பார். செல்லி சுற்றிக் கொண்டிருக்கும்.
கோவிந்தன்

 

அங்கே யார் அவளைக் கொண்டு போய் விட்டது?
தருமன் சிரிக்கிறான்
தருமன்

 

இரவு நீங்கள் எல்லாம் தூங்கும் பொழுது இங்கே மாடன் சுற்றுகிறான். அவனுக்கு இது ஒரு விளையாட்டு…மாட்டோடு விட்டானே அது வரை சரி. வீட்டுக்குள் வராமல் பார்த்துக் கொள்.
கோவிந்தன்

 

(நடுக்கத்துடன்)
ஐயோ..இந்தத் தொல்லை வேறா?
திரும்பிக் கிளம்புகிறான்
தருமன்

 

ஏனப்பா..மாடு கிடைத்தால் எனக்கு தட்சிணை கிடையாதா?
கோவிந்தன்

 

(நின்று)
என்ன வேண்டும் சொல்லு?
தருமன் நாகையைப் பார்த்துப் புன்னகைக்கிறான்..
வெளிப்புறம் – சாத்தூர் கிராமத்துப் பிரதானத் தெரு – பகல்
குதிரை வீரர்கள் ஐவரும் தடதட என்று சாத்தூர் வீதிகளில் செல்கிறார்கள். வீதியிலேயே பெரிய வீடான நாட்டார் வீட்டின் எதிரே போய் நிற்கின்றன குதிரைகள். வீதியில் ஒரு வீட்டுத் திண்ணையில் இருந்து ஒரு தாத்தா கண்ணைச் சுருக்கிப் பார்க்கிறார்.

 

கோட்டை போன்ற வீடு. அதன் உச்சியில் மதில் போல இருக்கும் சுவற்றில் ஒரு ஈட்டி தெரிகிறது. வீட்டு வாசலில் ஒரு வீரன் நிற்கிறான். அவர்களைப் பார்த்து எதுவும் கேட்கும் முன்னால்
தென்னதரையன்

 

அடேய், போய் நாட்டாரை அழைத்து வா
வீரன் பயத்துடன் உள்ளே ஓடுகிறான்.
வீட்டு மதில் மேலிருந்து ஒரு குரல் கேட்கிறது
மதில் வீரன்

 

(கத்துகிறான்)
யார் நீங்கள்?
குரல் லேசாக நடுங்குகிறது.
தென்னதரையன்

 

(வழுதியிடம்)
நாட்டார் தான் இந்த ஊர் பெருந்தனத்தார்.
வழுதி

 

வீட்டைப் பார்த்தாலே தெரிகிறதே.
மதில் வீரன்

 

(இன்னும் உரத்து)
யார் நீங்கள், சொல்லுங்கள்.
ஈட்டி லேசாக ஆடுகிறது.
கணியன்

 

(நிமிர்ந்து பார்த்து)
அடேய், ஈட்டியை மாற்றிப் பிடித்திருக்கிறாய்
சரேலென்று ஈட்டி மறைகிறது. பிறகு மறுபடி வருகிறது.
மதில் வீரன்

 

சரியாகத் தான் பிடித்திருக்கிறேன்.
குதிரை வீரர்கள் உரத்துச் சிரிக்கிறார்கள்.
வழுதி

 

(சுற்றிப் பார்த்து)
என்ன, கிராமத்துக் கிளிகள் யாரையும் காணோம்?
மதில் வீரன்

 

பதில் சொல்லுங்கள். இல்லா விட்டால்…
வீட்டுக்குள் இருந்து நாட்டார் ஓடி வருகிறார். சற்று குண்டாக இருக்கிறார்.
மதில் வீரன்

 

(கத்தி)
சாக்கிரதை
வேல் பறக்கிறது. வேறு எங்கோ போய்ச் சொத்தென்று விழுகிறது.
நாட்டார் வெளியே வருகிறார். மேலே பார்த்து,
நாட்டார்

 

முட்டாப் பயலே, சும்மா கிட.
(வீரர்களிடம்)
வாருங்கள், வாருங்கள். தென்னதரையரே, உள்ளே வாருங்கள்.
தென்னதரையன் குதிரையில் இருந்து குதித்து இறங்குகிறான்.
தென்னதரையன்

 

வழுதி, பெருமாள், ஊரை ஒரு சுற்றுச் சுற்றி வாருங்கள்.
வழுதி குதிரையை நகர்த்துகிறான். தென்னதரையன் நாட்டாருடன் வீட்டுக்குள் செல்கிறான்.
உள்புறம் – நாட்டார் வீடு – பகல்.
வீடு உள்ளே சுத்தமாக இருக்கிறது. புதுச் சுண்ணம் அடித்து மன்னர் வருகைக்குத் தயாராக இருக்கிறது.
நாட்டார்

 

அரசர் வருவதற்கு எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டன.
வீட்டின் ஒவ்வொரு அறையாக தென்னதரையன் செல்கிறான். நல்ல பெரிய வீடு. திறந்த சன்னல்கள். உள்ளே ஒரு மாடிப் படி ஏறிப் போகிறது. தென்னதரையன் பின்கட்டில் போய்ச் சமையல் அறையைப் பார்க்கிறான். அண்டா குண்டாக்கள் இறைந்து கிடக்கின்றன.
நாட்டார்

 

மன்னரின் அறை மேலே இருக்கிறது.
இருவரும் படியேறிப் போகிறார்கள். மேலே இரு பக்கமும் இரு பெரிய அறைகள். நாட்டார் வலது பக்க அறைக்குள் போகிறார். தென்னதரையன் பின் தொடர்கிறான்.

 

விசாலமான அறை. அங்கங்கே திரைச்சீலைகள் தொங்குகின்றன. நடுவே பெரிய கட்டில். தென்னதரையன் அறையைச் சுற்றி வருகிறான். கதவில்லாத சன்னல்கள் இரண்டு அந்த அறையில் இருக்கின்றன.
நாட்டார்

 

எதிரே ராணியின் அறை. அதைப் பார்க்கிறீர்களா?
தென்னதரையன்

 

போகலாம்.
இருவரும் அந்த அறையில் இருந்து வெளியே வந்து எதிரில் உள்ள அறைக்குச் செல்கிறார்கள். இந்த அறையில் ஒரே ஒரு சன்னல் இருக்கிறது. தென்னதரையன் மெதுவாக நடந்து அந்த சன்னல் அருகே நிற்கிறான்.

 

பிறகு குனிந்து வெளியே பார்க்கிறான்.

 

வெளியே ஒரு அரச மரம் கிளைகளை விரித்து பரந்திருக்கிறது.
வெளிப்புறம் – சாத்தூர் கிராமத்து தெரு – பகல்.
வழுதியும் பெருமாளும் மெதுவாக குதிரையில் அந்த வீதியைத் தாண்டித் திரும்புகிறார்கள். பக்கத்து வீதியில் சிறு வீடுகள். சுற்றித் தோட்டங்கள். வீடுகளின் இடையே மரக் குச்சியால் வேலிகள் வைத்து இருக்கிறார்கள்.

 

தெருவில் போகிற வருகிறவர்கள் நின்று குதிரை வீரர்களை நிமிர்ந்து பார்க்கிறார்கள்.
வழுதி

 

வேடிக்கை பார்க்கிறார்கள் பார். ஏதாவது வித்தை காட்டு.
பெருமாள் கத்தியை எடுத்து ஒரு சுற்றுச் சுற்றுகிறான். பிறகு கை மாற்றிச் சுற்றுகிறான். தெருவில் பலர் நின்று பார்க்கிறார்கள்.
குதிரை வீரர்கள் தொடர்ந்து போகிறார்கள்.
அந்தத் தெருவின் முடிவில், ஒரு வீடு தெரிகிறது. அதன் தோட்டத்தில் தருமன் குழி தோண்டிக் கொண்டிருக்கிறான். வீரர்கள் இருவரும் சற்று நேரம் நின்று அவனைப் பார்க்கிறார்கள்.
உள்ளிருந்து நாகை வெளியே வருகிறாள்.
பெருமாள்

 

என்னப்பா செய்கிறாய்? இவ்வளவு பெரிய குழி தோண்டி இருக்கிறாய்?
தருமன் அவர்களை நிமிர்ந்து பார்க்கிறான். பிறகு, மண்வெட்டியை பக்கத்தில் வைத்து விட்டு நிற்கிறான்.
தருமன்

 

பெரிய கதை அய்யா. என் தாத்தா ஒரு அருமையான நூல் எழுதினாராம். அதை எங்கோ புதைத்து விட்டதாகக் கேள்வி. அது தான் தேடுகிறேன்.
வழுதி

 

அப்படி என்ன நூல் எழுதினார்? காம சாத்திரமோ?
தருமன் சிரிக்கிறான்.
தருமன்

 

காம சாத்திரமாக இருந்தால் இந்நேரம் இந்தத் தெரு முழுவதும் தோண்டி இருப்பேன்.
பெருமாள் சிரிக்கிறான்.
நாகை

 

நீங்கள் அரசரின் படை வீரர்களா?
பெருமாள்

 

மெய்காப்பாளர்கள். ஆபத்துதவிகள் என்று கேட்டிருக்கிறீர்கள?
நாகை

 

ஆமாம். அரசருக்காக உயிரையே கொடுப்பவர்கள்.
வழுதி

 

அதே தான்.
நாகை

 

இவருக்கு கூட அரசாங்க வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும்
பெருமாள்

 

ஏன்? இப்போது உன் தொழில் என்ன?
தருமன் நாகையை முறைக்கிறான்.
நாகை

 

இவர் சோதிடர்
பெருமாள்

 

அட..பிரமாதம்.
(வழுதியைக் காட்டி)
இவனுக்கு எப்போது கல்யாணம் ஆகும் சொல்லேன்? எங்கே போனாலும் பெண்களைப் பார்த்து விழிக்கிறான்.
தருமன் சிரித்து விட்டுச் சும்மா இருக்கிறான்.
வழுதி

 

இரு. அதை விட ஒரு சோதனை. நான் எந்த ஊர்க்காரன் என்று சொல் பார்க்கலாம்?
தருமன் கண்ணை மூடி ஒரு வினாடி யோசிக்கிறான். பிறகு,
தருமன்

 

தென்காசி, அல்லது அதற்கு அருகில்.
வழுதியும் பெருமாளும் அவனை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
நாகை

 

அவர் சொல்வது சரியா?
பெருமாள்

 

சரி தான். குற்றாலத்தில் குரங்குகளுடன் திரிந்து கொண்டிருந்தான்.
வழுதி

 

சோதிடா, நீ சரியான ஆள் தான். நெல்வேலிக்கு வா. அரசர் சபையில் இடம் இருக்கிறது.

 

இருவரும் குதிரையை நகர்த்திச் செல்கிறார்கள்.

 

(திரை விரிகிறது..)

0 Replies to “விதியின் பிழை காண் – திரைக்கதை – பகுதி – 1”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.