கருத்தடை தொழில்நுட்பமும், சந்தைகளும்

Male_Birth_Control_RISUG_Sperms_Kids_Unwanted_Children_Condoms_Medical_Reversible-Vasectomy

கரு உருவாவதும்,உருவாகாது இருப்பதும் பெண்ணின் பொறுப்பாகவே சமூகம் கருதி வருகிறது. திட்டமிடாத கருத்தரிப்பு என்பது, கருத்தரிக்காது இருப்பதைப் போன்றே ஒரு பெரும் அழுத்தத்தை பெண்களுக்கு ஏற்படுத்தக் கூடியது.
ஆண்களுக்கான கருத்தடை செயல்முறைகளும் கருவிகளும் மிககுறைவான அளவிலேயே வரவேற்கப்பட்டிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், வாஸக்டமி கருத்தடை முறையில், விந்துக்கள் கருத்தரிக்க வைக்க இயலும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்த ஐயங்கள். வெளியே அணிந்துகொள்ளும் சாதனங்களை வாங்குவதிலும், பயன்படுத்துவதிலும், அதனை அழிப்பதிலும் இருக்கும் சமூக ரீதியான தயக்கங்கள், அழுத்தங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
ஆண்கள், மிகக் குறைந்த செலவில், ஒரே ஒரு முறை சிறிய அறுவை சிகிக்சை செய்து கொண்டு 15 வருடங்களுக்கு ஒரு கருவியும் பயன்படுத்த வேண்டாத சூழல் உருவானால், அதற்கான வரவேற்பு எப்படி இருக்கக்கூடும்? அதுவும், தேவைப்பட்ட போது, மீண்டும் கருத்தரிக்க வைக்கக் கூடிய இயல்பு நிலைக்கு வெகு விரைவில் திரும்பக் கூடிய வாய்ப்போடு இருக்குமானால், அதற்கு கிடைக்ககூடிய வரவேற்பு பன் மடங்காக இருக்கவேண்டுமல்லவா?
‘இல்லை’ என்பதுதான் கசப்பான உண்மை. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு , இந்தியா, சீனா, பங்களாதேஷ், அமெரிக்கா போன்ற நாடுகளில் பாட்டண்ட் செய்யப்பட்ட ரைஸக் (c) என்ற தொழில் நுட்பம் , ஆண்களின் தயக்கத்தைப் போக்குமளவிற்கு நம்பிக்கை தருமென ஒன்றல்ல, இரண்டல்ல, பதினைந்து ஆண்டுகள் சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட போதும், இன்றும் மக்களை அடையாத நிலையில் இருக்கின்றது.
விந்து உயிரி வெளிவரும் வாஸ் டிஃபரென்ஸ் எனப்படும் குழாயை , தற்போது புழக்கத்தில் இருக்கும் அறுவை சிகிக்சை முறையில், சிறிய அளவில் வெட்டிவிடுகிறார்கள். இதனால் விந்துஉயிரி வெளியேறாத நிலையில் ஆணின் விந்துப் பையிலேயே அழிந்துவிடுகிறது. மீண்டும் கருத்தரிக்க வேண்டினால், அந்த ஆணின் விந்துக்குழாயை ஒட்ட வைக்க வேண்டும். இதில் சில மருத்துவ சிக்கல்களும், உளவியல் சிக்கல்களும் இருக்கின்றன.
எனவே, விந்துக் குழாய்களில் செய்யப்படும் எந்த நிகழ்வையும் ஆண் சமூகமும், மருத்துவ உலகும் சற்றே அவநம்பிக்கையுடனே அணுகுகின்றன.
இந்த பயங்களெல்லாம் இல்லாத ஒன்றான ரைஸக் முறை பற்றி சிறிது பார்ப்போம்.
Reversible Inhibition of Sperm Under Guidance என்பதுதான் இதன் முழுப்பெயர். பெயரிலேயே இது தெளிவாக செயலிழந்த விந்துகக்ளை மீண்டும் செயல்பட வைக்கும் முறை என்பதைக் காட்டுகிறது. இதன் மூலப்பொருளான ஸ்டைரீன் – மாலேய்க் அன்ஹைட்ரைடு (Styrene/maleic anhydride) என்ற கூட்டு பாலிமர் வேதியற்பொருளை, 1970களில் ஐ.ஐ.டி காரக்பூரில் கண்டுபிடித்த டாக்டர் சுஜோய் குஹா, முதலில் அதனைக் கொண்டு, செயற்கை இதயம் செய்யவே எண்ணினார் என்று சொல்லப்படுகிறது.
பின்னர், இந்தியாவின் மக்கள் தொகைப்பெருக்கத்திற்கு தீர்வு காணும் வகையில் இந்தப் பாலிமர் மாற்றப்பட்டது. பசை போன்று உருவாக்கப் பட்ட நிலையில், இந்தப் பாலிமர், டை எத்தில் சல்ஃபாக்ஸைடு என்ற கரைப்பானுடன் சேர்த்து , வாஸ் டிஃபரன்ஸ் குழாயில் செலுத்தப் படுகிறது. இந்தப் பசை, குழாயின் உட்புறச் சுவற்றில் படிந்து கொள்கிறது.
விந்துக்கள் வாஸ் குழாயில் வெளியேறும்போது, இந்தப் படலம், அவற்றைச் செயலிழக்கச் செய்கிறது. வெளி வரும் விந்துக்கள் நீந்திச் சென்று முட்டையை அடைய முடியாதிருப்பதால் ,கருவுருகாமல் தடுக்கப்படுகிறது. இவ்வளவுதான் இதன் செயல்பாடு. மிக எளிது.
இப் பாலிமர் படலம் செயல்படும் முறை இன்றும் பலவாறு விவாதிக்கப் படுகிறது.
பாலிமர் படலத்தில் உலர்ந்த மூலக்கூறுகள் இருப்பதால் ( அன்ஹைட்ரைடு), விந்துக்களிலிலிருக்கும் திரவத்தினால் நீராற்பகுப்பு ( hydrolysis) வினையை நடத்துகிறது என்றும், இதனால் விந்து செயலிழந்து போகிறது என்றும் ஒரு விரிவாக்கம் சொல்லப்படுகிறது.
இதனைக் கண்டுபிடித்த அறிவியலாளர் குஹா , “பசைப்பொருளில் பாஸிடிவ், நெகடிவ் சார்ஜுகள் பரந்து இருக்கின்றன. அவற்றினிடையே பசைப் பரப்பில் விந்து செல்லும் போது, விந்தின் உட்புறமிருக்கும் சார்ஜ்கள் இவற்றால் கவரப்பட்டு, விந்துவின் வெளிச்சுவர் உடைபடுகிறது. இதனால் விந்து செயலிழக்கிறது” என்று விவரிக்கிறார்.
எது எப்படி இருப்பினும், விந்து செயலிழந்து போவது உறுதி என்பதை , விலங்குகள், மனிதர்களில் செய்யப்பட்ட சோதனைகள் பதினைந்து வருடங்களுக்குப் பின்னும் உறுதி செய்கின்றன.
இந்த அளவுக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய ஒரு தொழில்நுட்பம் ஏன் பிரபலமாகவில்லை? மருந்துக் கம்பெனிகள் ஏன் ஏற்று எடுத்து பெரிய அளவில் உற்பத்தி செய்யவில்லை?
இங்குதான் சந்தைப்படுத்தும் விகாரம் வெடிக்கிறது. மருந்துக் கம்பெனிகளுக்கு , பெருமளவில் விற்கின்ற, அடிக்கடி விற்கின்ற பொருள் இருக்குமானல் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு மாதாமாதம் கருத்தடை மாத்திரைகள் விற்க இயலுமானால், அதில் வருகின்ற லாபம், ஆண்களுக்கு கருத்தடை உறைகள் விற்பதில் கிடைக்கும் லாபம், ஒரேயொரு முறை செய்துகொள்ளும் சிறு அறுவை சிகிக்சையால் கம்பெனிகளுக்குக் கிடைத்துவிடப் போவதில்லை.
மேலும், ஒரு முறை அறுவை சிகிக்சை செய்து கொண்ட ஆண், தானும் உறை வாங்க மாட்டான். தனது இணையாளையும் மருந்து மாத்திரைகள் பயன்படுத்தச் சொல்லி வற்புறுத்த மாட்டான். ஆண் அறுவை சிகிக்சை செய்து கொண்ட போதிலும், உறையணியாமல், இயற்கை நிலையில் இன்பம் துய்க்க இயலுமானால், அதில் கருத்தரிக்கும் ஆபத்து இல்லாதிருக்குமானால், எந்தப் பெண்ணும் கருத்தடை சாதனங்களை வாங்கமாட்டாள். எனவே ரைஸக், சந்தைக்கு வருவது மருந்துக் கம்பெனிகளுக்கு இழப்பையே தரும்.
மருந்துக் கம்பெனிகளின் லாபி, ரைஸக் சோதனையையும், அதனைப் பிரபலப் படுத்தும் முறைகளையும் தடுத்தன. இந்தியாவில் clinical trials என்ற மனிதர்களில் பரிசோதனை செய்யும் நிலைக்கு மிக பலவீனமான வரவேற்பு கிடைத்துவருகிறது. இரண்டு வருடங்களில் 65 ஆண்களே பரிசோதனைக்கு பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். தேவைப்படுவோர் 500 பேர். இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் ICMR ஏற்று நடத்த முற்படும் இந்த நாடளவிய பரிசோதனை நடத்தப்பட்டது பட்னா, உதாம்ப்பூர், லூதியானா போன்ற வட மாநிலங்களில் மட்டுமே முதலில் ஆட்களை பதிவு செய்திருந்தவர்கள், மெதுவாக இப்போது கர்நாடகா, மஹாராஷ்ட்ரா மாநிலங்களிலும் ஆட்களைச் சேர்க்கிறார்கள். ஒரு பொது அறிவிப்பும் இன்றி , விளம்பரம் இன்றி இவர்கள் இப்படி நாடளவிய முக்கியமான பரிசோதனை நிகழ்த்த முற்படுவது, அரசு இயந்திரங்களின் அறிவின்மையா என்று விளங்கவில்லை. ஒரு இணைய தளத்தில், இந்த பரிசோதனையில் எவ்வாறு பதிவு செய்யவேண்டும் எனக் கேட்டு பல ஆர்வலர்கள் எழுதியிருந்தும் ஒரு வழி நடத்துதலும் காணப்படவில்லை.
இப்போது அமெரிக்காவில் parsemusfoundation.org என்ற தன்னார்வல நிறுவனம், ரைசக் தொழில்நுட்பத்தை சற்றே மாற்றி வாஸாஜெல் என்ற பெயரில் தயாரித்து வருகிறது. அமெரிக்க உணவு மற்றும் மருந்துஅதிகாரக் குழு USFDA இன்னும் சில வருடங்கள் வாஸாஜெல்-லை பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டுமென்று அறிவித்திருக்கிறது. 2016ல் வாஸாஜெல் சந்தைக்கு வரலாம். வாஸாஜெல் , ’இந்திய தயாரிப்பான ரைஸக்- போன்ற ஒன்று, ஆனால் அதுவேயில்லை’ என்று பார்ஸிமியஸ் ஃபவுண்டேஷன் தனது வலைத்தளத்தில் அறிவித்திருக்கிறது.. இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம், தொழில்நுட்பம், அதன் வருவாய் இப்போது அமெரிக்காவுக்கு செல்லும்.
இப்போது ஸ்மார்ட் ரைசக் என்ற ஒரு மாறிய உருவில் ரைஸக் மூலக்கூற்றுடன் இரும்பு மற்றும் தாமிர அணுக்களை இணைத்து அதன் வீரியத்தையும், செயல்பாட்டில் பாதுகாப்பையும் அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.
இருப்பினும், எந்த மருந்துக் கம்பெனியும் இதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்களுக்கு மாதமொரு முறை உட்கொள்ளவும் என்று பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகளையும், மூன்றாந்தர விளம்பரங்களும் , போட்டோக்களையும் கொண்ட ஆணுறைகளையும் மருந்துக்கடைகளில் விற்றால் போதுமானது. இழப்பு வளர்ந்து வரும் நாடுகளுக்கும், அவற்றின் சமூக அழுத்தத்தில் திணறும் பெண்களுக்கும்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.