உங்கள் கேள்விக்கு என்ன பதில் – 5

கேள்வி 15: நான் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். தொழு உரத்திற்கு மேல் உயிரி உரம் பயன்படுத்துவது தேவையா? உரக்கடைகளில் திரவ வடிவில் விற்கப்படும் உயிரி உரங்கள் நன்றா, தீதா?

– சுகவனம் சுரேஷ், பாஸ்கரராஜபுரம்

உயிரி உரங்களைப் பற்றி விளக்கவே நிறைய பக்கங்கள் வேண்டும். வேறு கேள்வியைப் பரிசீலிக்க இயலும் என்று தோன்றவில்லை. ஆனால் உங்கள் கேள்வி மிக நன்று. இயற்கை விவசாயம் செய்வோர் அனைவரும் அறிய வேண்டிய விஷயம் இது.

ஒரு பயிர் நோயின்றி வாழ வேர்மண்ணில் கரிமங்களை (Humus) உயர்த்த வேண்டும். வனங்களில் இயற்கையாவே கரிமங்கள் உயர்கின்றன. அடர்ந்த காடுகளில் மரங்களிலிருந்து உதிரும் சருகுகள் குவியல்களாகப் பரப்பப்பட்டிருப்பதைக் காணலாம். அந்தச் சருகுகளை கம்பால் விலக்கிவிட்டு, மரத்தடி மண்ணை எடுத்துப் பாருங்கள். கரேலென்று லேசாக இருக்கும்.

அதுதான் ஹ்யூமஸ் என்ற கரிமம். அதைச் சோதித்துப் பார்த்தால், கோடிக்கணக்கான உயிரிணிகள் அங்கு இருப்பது தெரியும். இந்த நுண்ணியிரிகளை அடையாளப்படுத்தி செயற்கை முறையில் கல்ச்சர் செய்து பிளாஸ்டிக் குப்பிகளில் ஊற்றி லிட்டர் நானூறு ரூபாய், ஐநூறு ரூபாய் என்று விற்கப்படுகிறது. இவற்றில் முக்கியமாக ரைசோபியம், வேம், சூடோமோனஸ், ஈ.எம்., பாஸ்போ பேக்டீரியா, அசோஸ்பைரில்லம், பாஸிலஸ் சப்டிலிஸ் என்று குறிப்பிட்ட சிலவற்றைக் கூறலாம்.

குப்பியில் அடைத்து திரவ வடிவில் விற்கப்படும் நுண்ணுயிரிகளின் ஆற்றல் கேள்விக்குரியவை. வர்த்தகரீதியில் ஏதோ ஒரு பிராண்ட் பெயரில், சக்தி, சமந்தா, சத்தியம், ஆச்சி, பேச்சி என்று விற்கப்படுகின்றன. உள்ளே இருக்கும் நுண்ணுயிரிகள் பற்றிய விபரம் இருக்காது. ரசாயன நுண்ணூட்டங்களான போரான், தாமிரம், துத்தநாகம் போன்றவை கலக்கப்பட்டிருக்கலாம். எந்தப் பயிருக்கு எந்த நுண்ணுயிரி தேவை என்ற விபரம் இல்லாமல் இருக்கும். பணம் உள்ளவர்கள் விளம்பரத்தை நம்பி வாங்கிச் செல்லலாம்.

ஆனால், வேளாண்மை பல்கலைக்கழகங்கள் வழங்கும் நுண்ணுயிரி கலவைகள் நம்பத்தக்கவை. அவர்கள் பிராண்ட் பெயர் இல்லமால் நுண்ணுயிரிகளின் பெயரில் வழங்குவர். இவர்களின் தயாரிப்புகள் உரக்கடைகளில் கிடைக்காது. ஆகவே, அவசரத்துக்கு முந்துதவியாக நல்ல நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கிப் பயன்படுத்தலாம். பொதுவாக, வெளியில் விற்பவர்கள் பெரும்பாலும் பல்கலைக்கழகங்கள் தரும் தாய் உயிரிகளை வாங்கித்தான் கல்ச்சர் செய்கிறார்கள். அப்படி பெருக்கம் செய்யும்போது நோய்த்தாக்கம் இல்லாமல் இருந்தால்தான வேர்களில் நுண்ணுயிரிகள் வேலை செய்யும்.

சுருக்கமாக சில குறிப்புகள் தருகிறேன். இதன்மூலம், எந்தப் பயிருக்கு எந்த நுண்ணுயிரி அவசியம் என்று அறிக:

ரைசோபியம், – பருப்பு வகைப் பயிர்கள், வேர்க்கடலை (நைட்ரஜன்)
அட்டோ பாக்டர் – புஞ்சை தானியங்கள் (நைட்ரஜன்)
பாஸ்போ பேக்டீரியா – எல்லா பயிர்களுக்கும் (பாஸ்பரஸ்)
அசோஸ்பைரில்லம் – நெல் (நைட்ரஜன்)
வேம் (மைக்கோரிசா) – எல்லாப் பயிர்களுக்கும் (பாஸ்பரஸ்)

மேற்கூறியவற்றில் முதல் நான்கும் பாக்டீரியா நுண்ணுயிரிகள். இவை மண்ணில் நைட்ரஜனை நிலை நிறுத்தி நைட்ரேட்டாக பயிர்களுக்கு ஏற்றித் தரும். மண்ணில் ஈரப்பதம் உள்ளபோது இந்த ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. இதைதான் உயிரியல் தழைச்சற்று ஏற்றம் என்பர் (Biological Nitrogen Fixation). ஆனால் பாஸ்போ பாக்டீரியா மண்ணில் உள்ள மணிச்சத்து என்றழைக்கப்படும் பாஸ்வரத்தை பயிருக்கு ஏற்றும். வேம் என்பது Vesicular Arbuscular mycorrhiza எனப்படும் காளான் நுண்ணுயிர். வாயுவாக உள்ள நைட்ரஜனை நைட்ரேட்டாக்கும். காளான் நுண்ணுயிரிகள் எல்லாவிதமான பிராணிகளின் சாணத்திலும் உள்ளன. பசுமாட்டுத் தொழுவுரத்தில் நிறைய உண்டு.

2000px-Nitrogen_Cycle.svg
உயிரியல் தழைச்சற்று ஏற்றம் என்பர் (Biological Nitrogen Fixation)

இயற்கை விவசாயத்தில் ஏற்படும் பல்வேறு வேர் நோய்களுக்குரிய மருந்தாகவும் பல நுண்ணுயிரிகள் செயல்படுகின்றன. அவையாவன:

டிரைகோடெர்மா விருடி (காளான் நுண்ணுயிரி)
சூடோமோன்ஸ் ஃபுளோரசன்ஸ் (பாக்டீரியா)
பாசிலஸ் சப்டிலஸ் (பாக்டீரியா))
புவேரியா பஸ்ஸியானா (காளான் நுண்ணுயிரி)
வெர்ட்டிலியம் லகானி (காளான்)
மெட்ரிசியம் – காளான்
பேசிலோ மைசஸ் லைலாசினஸ் (காளான்)

மேற்கூறிய ஏழு நுண்ணுயிரிகளைத் தெளிப்பானாகவும் மூலிகைப் பூச்சி விரட்டிக் கரைசலில் கலந்து பயன்படுத்தினால் வேர் அழுகல், இலைப்புழு, மாவுப்பூச்சி, அசுவினி, காய்ப்புழு கட்டுப்படும்.

இப்போது நுண்ணுயிரிகளில் ஈ.எம். என்ற திறமி நுண்ணுயிரிக் கலவையும் உள்ளது. பயிர்களுக்கு மட்டுமல்ல, பினாயில் மாற்றாகவும் குளியலறையில் சிலர் பயன்படுத்துகின்றனர். இந்தக் கலவையில் சுமார் எண்பது வகை நுண்ணுயிரிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. நிலக்கரிச் சுரங்கத்தில் வெளியாகும் கழிவுகளில் இருந்து “ஹ்யூமிக் அமிலம்” என்ற பெயரில் திரவம் தயாரித்து விற்கப்படுகிறது. இவற்றைப் பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் அவரவர் விருப்பம். அடிப்படை கருத்து எதுவெனில் மேற்கூறிய அவ்வளவு நுண்ணுயிரிகளும் இயற்கை உரங்களான பிராணிகளின் கழிவு, பறவைகளின் கழிவு, உலர்ந்த சருகுகள், பலவகை பிண்ணாக்குகள், பஞ்சகவ்யம், மீன் குணபம், வராக குணாபம், அமிர்தகரைசல், தேங்காய்ப்பால்- மோர்க்கரைசல், பழக்காடி ஆகியவற்றில் உண்டு.

மண்ணிற்குள் நுண்ணுயிரிகளின் பெருக்கம், மண்புழுக்களின் பெருக்கத்துடன் தொடர்புள்ளது. மண்புழுக்களின் எண்ணிக்கையைப் பெருக்க தொழுவுரம், குணபம், பழக்காடி, பஞ்சகவ்யம், பால், மோர, பச்சிலை\க் கரைசல், உலர்ந்த சருகுகள் உதவும்போது, அதிக விலை கொடுத்து செயற்கையாய்ப் பெருக்கப்பட்ட நுண்ணுயிரிக் கலவையைத் தவிர்க்கலாம். நுண்ணுயிரிகள் செய்யும் பணி, பயிருக்கு வேண்டிய தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியவற்றை வேர்கள் வழியே பயிருக்கு ஏற்றித் தருவதுதான்.

இயற்கை உரங்களில் குறிப்பாக தொழுவுரம் வழங்காமல், நுண்ணுயிரிக் கலவைகளை மட்டும் பயன்படுத்திப் புண்ணியமில்லை. கல்ச்சர் செய்த நுண்ணுயிரிகளுக்கு உணவாக தொழுவுரம் மாறும்போதுதான் வேர்களில் இருந்து பயிர்களுக்கு ஊட்டம் செல்லும். தொழுவுரங்களுடன் சேர்த்து கடைகளில் விற்கப்படும் நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தலாம். மண்புழுக்கள் பெருகிவிட்டால், ,மண்புழுக்களுக்கு உணவு தந்தால் போதும். கல்ச்சர் செய்த நுண்ணுயிரிகளுக்கு தனி உணவு தேவையில்லை. ஈ.எம். எனப்படும் திரவ உணவின் மாற்று குணபம், பழக்காடி, மோர் ஆகியவற்றின் கலவை போதும். குணப வகைகளில் மீன் அமினோ அமிலம் எளிதாகத் தயாரிக்கலாம். வெல்லச் சர்க்கரையில் மீன் துண்டுகளை இட்டு, மோரையும் பழக்காடியையும் (திராட்சை, பப்பாளி, வாழைப்பழம்) கலந்து நொதித்தால் திறமி நுண்ணுயிரிகள் உருவாகிவிடும்.