ஆண், பெண் மற்றும் மூன்றாம் இனம்?

Pregnancy_Kids_Child_He_She_Women_Females_Uterus_Love_hysterectomy

ந்த வாசகத்தைச் சொல்லாத பெண்ணே இருக்க முடியாது. “இதென்னதுக்கு மாசாமாசம்..?” அப்படியான அலுப்போடு பேச்சாக மட்டுமே இருந்த ஒன்று இப்போது, அடுத்த கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது.

மனநிலை சரியில்லாத, தனக்கு என்ன நிகழ்கிறதென்றே உணர முடியாத பெண் பிள்ளைகளுக்கு, அதன் காரணமாகவும், கர்பப்பையில் ஏதும் நோவுற்றிருந்து அதனால் உயிருக்கே ஆபத்து போன்ற கட்டங்களில் மட்டுமே பெண்ணிற்கு அவளின் கர்ப்பப்பை எடுக்கப்படும்.

ஆனால், சமீப காலங்களாக தன் தொழில் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பும் பெண்கள், திருமணம் செய்து கொள்ள விரும்பாத பெண்கள், அல்லது பிள்ளை பெற்று முடித்து, இனி தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் பெண்கள் என இருப்பவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் மருத்துவர்களிடம், ”கர்ப்பபையை எடுக்க முடியுமா தொழிலுக்கு இடையூறாக இருக்கிறது” என கேட்கின்றனரென்றும் அப்படிக் கேட்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்றும் சில கைனகாலஜிஸ்டுகளிடமிருந்து தகவல் கேட்டறிய முடிந்தது,

சட்டப்படி அது தவறு என இவர்கள் மறுத்துவிடுவதாகவும் மருத்துவர் சொன்னார்.

சட்டப்படி தவறா, நெறிமுறைத் தவறா என்பதை நாம் ஆராய்வதை விட அப்படியான ஒரு தேவை பெண்ணுக்கு ஏன் வந்தது என சிந்திப்பது அந்த கருப்பொருளின் அடிநாதத்தை அறிய உதவலாம். சீர் செய்ய முடியலாம்.

”என்ன தொழிலுக்காக கர்பப்பையை எடுப்பதா?” என அதிர்ந்தோம் எனில் நாம் கொஞ்சம் வெளித் தகவல்களில் பின் நிற்கிறோம் என்றே பொருள்.

இதோ அடுத்த தகவல்….

ஒருவர் படித்து முடித்து தன் தொழிலில் தீவிரமாக இயங்கும் காலம் இருபது முதல் நாற்பது வரை. அந்த காலகட்டங்களிலேயே குழந்தைப் பேற்றைப் பற்றிய முடிவை பெண் எடுக்க வேண்டி இருக்கிறது. இந்நிலையில், இரண்டையும் ஒரு சேர இணைப்பது சிரமமாக இருப்பதும், அதே நேரத்தில் இப்படியான சூழல் இல்லாத ஆண்கள் விஞ்சிவிடுவதாகவுமான காரணத்தால், பெண்கள் தன் கரு முட்டையை இளவயதுகளில் உறைய வைத்து சேகரித்து வைத்துவிட்டு, பின் முடிவெடுக்கும் போது பிள்ளை பெற்றுக்க்கொள்ளலாம் என eggsurance.com போன்ற நிறுவனங்கள் ஒரு திட்டத்தை ஆரம்பித்திருப்பதாகவும்..செய்திகளில் வாசிக்க முடிகிறது.

சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனமும் தன் ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டில், பெண்களுக்கு என இருக்கும் பிரசவ விடுமுறை, போன்றவையுடன் கூடுதலாக, பெண்களுக்கு கரு முட்டை உறைய வைக்க ஆகும் மருத்துவ செலவும், ஆண்களுக்கு விந்தணு உறையவைத்துச் சேகரிப்பதும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் தேர்ந்தெடுக்கிறவர்களுக்கும் வாடகைத் தாய் திட்டத்திற்கான செலவிற்கும் பணம் ஒதுக்குவதாகச் செய்தியில் படிக்கிறோம். இதில் அதிக கவனத்தைக் கவராதது விந்தணு சேகரிப்பு. ஏனெனில், இதை பிள்ளைப் பேற்றிற்கு வழி இல்லாத தம்பதியருக்குக் கொடுக்கும் நோக்கிலேயே செய்வதாக புள்ளிவிவரம் சொல்வதாலும் அப்படி சேகரிப்பது என்பது அதன் உரிமையாளரின் தேவை அதில் அதிகம் இல்லை என்பதாலும், இது அதிக கவனத்தைப் பெறவில்லை.

       மருத்துவர் கர்பப்பை எடுப்பதைப் பற்றிப் பேச ஆரம்பித்தபோது, இப்படி ஒரு வாய்ப்பிருந்தால் நாமும்,,? என ஒரு ஆசை எனக்கும் மனதில் வந்து போனதுதான், ஆனால் பின் விளைவுகள், தொடர் உடல்நலக்கோளாறுகள் வருமோ எனும் தயக்கமும் கூடவே.

எனக்கும் அப்படித் தோன்றியதுண்டு என்பதால், என்னை நானே கவனிக்க, மற்றும் தோழிகளோடு உரையாடியும் சிலவற்றை இனம் காண முடிந்தது,

இனி சொல்லப்படுவனவற்றை, இந்திய மனநிலை மற்றும் இந்திய சரி தவறுகளோடு மட்டும் பொருத்திப் பார்க்காமலும், நாம் ஆணோ/பெண்ணோ அந்த கட்டுக்களிலிருந்தும் வெளி வந்து பார்ப்பதும் நல்லது. ஏனெனில் இது உலகளாவியதல்லவா?

     உண்மையில் இதை ஒட்டி சில கேள்விகள் ஆரம்பத்தில் எழும்.

இது தனிப்பட்ட பிரச்சினை, அல்லது தனிப்பட்ட தேர்வு. இது பொதுவில் வைக்கப்பட்டு அரசியலாக்கப்பட வேண்டிய ஒன்றா? அப்படி பொதுவில் வைக்கப்பட வேண்டிய தேவை இந்த பிரச்சினைக்கு இருக்கிறதா? அப்படி வைக்கப்பட வேண்டுமெனில் அதற்கான காரணம் என்ன?

இது ஒருவரின் தனிப்பட்ட தேர்வு?

கர்பப்பை பெண்ணின் தனிப்பட்ட உடலுறுப்பு அதில் அவளுக்கு மட்டுமே நூறு சதவீத உரிமை உண்டு. எனில் பின் மற்றவர்கள் அதில் சொல்லவும் பேசவும் என்ன இருக்கிறது.?

இருக்கிறது. கர்பப்பையின் மற்றும் அது சார்ந்த வலி அவளுக்கு அதனால் அதிலிருந்து வெளியேற ஒன்றைச் செய்கிறாள். கர்பப்பையின் பலன் சமூகத்துக்கு அதனால் அதைப் பாதுகாக்கவும் சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை எனில் சட்டம்போட்டு முடக்குவதா? (இந்திய பல் மருத்துவர் சவிதா ஹாலப்பனவர் – அயர்லாந்தில் அபார்ஷன் அனுமதிக்கப்படாமல் உயிர் துறந்த இந்தியப்பெண்… பிரச்சினை நினைவுக்கு வருகிறதா?)

இல்லை. அவளின் தேவை என்ன? என்ன பிரச்சனை கர்பப்பையினால்..? எது அவளை அப்படியான முடிவை நோக்கி நகர்த்தி இருக்கிறது.?

டிவியில் வெள்ளை டைட் பேண்ட்டோடு ஒரு பெண் மலையேறினால் அது நிச்சயம் நேப்கின் விளம்பரமேதான். ஒரு போதும் அது நடக்கவே நடக்காத, … விளம்பர சாமர்த்யம்.

விளையாட்டுப் போட்டிகள், பரிட்சை, தொழில் காரணங்களால் அந்த நாட்களை ஒத்திப் போடுவதே அதிகம் நிகழ்கிறது. அந்த நாட்கள் சுலபமாக அதாவது மற்ற நாட்களைப் போல கடக்க முடியாதவை.

மருத்துவர், வழக்கறிஞர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என பல பெண்களிடம் இதைப் பற்றி பேசியபோது, எங்கே கிளம்புவதென்றாலும் முதலில் அந்த நாட்களா என சிந்திக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளோடு புறப்பட வேண்டும். கழிப்பிட வசதி இல்லாத இடம் எனில் போக முடியாது. நுணுக்கமான ஆனால் சொல்ல முடியாத எரிச்சலுணர்வும், பதட்டமுமாக கழியும் நாட்கள். ஆனால் அதே வேலையில் கூட வேலை பார்க்கும் ஆண் அந்த நேரத்தை உபயோகித்து ஒரு படி மேலேறுவானே எனும் பதட்டமும் உடன் சேரும்.

டுத்த கேள்வி

அவள் தன்னைப் பற்றி வெளிக்காட்டிக் கொண்டதை சமூகம் காதில் வாங்கவில்லையா? அல்லது இவள் வெளிப்படுத்தவே இல்லையா?அல்லது சொல்லிச் சொல்லி காதில் வாங்காததால் இவளே எடுத்த முடிவா?

கர்பப்பை எடுப்பதைப் பற்றி பேசிய போது அனேகர் சொன்னது ”ஆமா ஆமா அத எடுத்திட்டா எப்டி வேணா மேயலாமில்ல?”

ஆக, அதை எடுப்பதென்பது வேண்டாத பிள்ளையை வயிற்றில் சுமப்பதைத் தவிர்க்க என்றே புரிந்து கொள்ளப்பட்டது. படுகிறது. (ஆனால் அப்படியான ஒரு காரணமும் இருந்தாலும் அதில் என்ன தவறோ?) முதலில் அதை எடுப்பதில் உள்ள பிரச்சினைகளில் கவனம் வைப்பது நல்லது.அல்லவா? பதின் வயதுகளில் ஆரம்பித்து, அறுவது வயதுவரை தொடரும் மாதாந்திரத் தொந்தரவுகள் இருக்கட்டும். நான் பிள்ளையே பெறப்போவதில்லை. அல்லது பெற்று முடித்த பின்னும் இது எதற்கு? என பெண் சிந்திப்பது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான் கவனத்திற்குறியது, அந்த சிந்தனைப் போக்கு சரிதானா?அல்லது அந்த சிந்தனைக்கு அவளை வரவிடாமல் செய்ய வேண்டுமெனில் சமூகத்திடம் தீர்வேதும் இருக்கிறதா?

உலக உழைப்பில் மூன்றில் இரண்டு பங்கு பெண்ணினுடையது. அவள் பெறும் ஊதியம் மூன்றில் ஒரு பங்கு. அவள் பெயரிலான சொத்து 1% இது புள்ளிவிவரம் சொல்லும் செய்தி.

உற்பத்தியாளரின் கோணத்திலிருந்து பார்த்தால், வேலை எவர் செய்கிறாரோ அவருக்கு ஊதியம். எவர் அதிக வேலை செய்கிறாரோ அவருக்கு அதிக ஊதியம்.

பெண்ணை வேலைக்கு வைத்தால் குறைந்தபட்சம் மாத விடுமுறை, பிள்ளைப்பேற்றுக்கான விடுமுறை.. பாதுகாப்பு காரணங்களுக்காக இரவு வரை அவள் வெளி வேலை செய்யமுடியாமல் போதல்…

இரவு வரை வெளி வேலை செய்ய முடியாமல் போதல் என்பது அவளது ’முடியாமல் போதல்’ அல்ல. அதாவது அது அவளது disability அல்ல. குரங்கு மரம் தாவும் அது நம்மால் முடியாது என்பது போன்றது அல்ல. தாவ மரமே இல்லை அதனால் முடியாது என்பது போன்ற சூழல் சார்ந்த ஒன்று. அல்லவா? அப்படியிருக்க முடியாமல் போகும்படியான சூழலை யார் தந்தார்கள்? பிள்ளைப் பேற்றுக்கான விடுமுறை எனில் அது அவள் பிள்ளை மட்டுமல்ல சமூகத்தின் எதிர்காலம்..இதைப்பற்றி ஒவ்வொரு உற்பத்தியாளரும் கவனித்துக் கொண்டிருக்க இயலாது எனில் அரசுதான் கவனிக்க வேண்டும். அந்த அரசும் அதைச் செய்யாத போது..பெண் இந்த முடிவை நோக்கித் தள்ளப் படுகிறாளோ?

மூன்றாவதான கேள்வி

தாய்மை என்பது புனிதம் என்றே சொல்கிறோமே அது நிஜமில்லையா? ஏனெனில் அதன் ஆதாரமே வேண்டாம் என பெண்(சிலர்) சொல்லும் அளவிற்கு அதில் விஷயம் ஏதும் இல்லையா?

உண்மையில் தாய்மை என்பது புனிதம் என சொல்லி வைத்தால்தான், அவள் வலி மிகுந்த பிள்ளைப் பேற்றுக்கு சம்மதிப்பாள். தாய்மை புனிதம் என்றால்தான், அதற்கான வேலைகளை அவள் செய்வதும் அதன் பிரதிபலனாக தாயரை மகன் வைத்துக் காப்பதும் உணர்வுபூர்வமாக நிகழும். ஆக தாய்மை எனும் இருபாலாருக்கும் இருக்க வேண்டிய ஒரு உணர்வை பெண்ணுக்குள் ஏற்றி உணர்வுபூர்வமாக அதை இருவரும் புரிந்து கொண்டால் மட்டுமே, அடுத்த தலைமுறைக்கான வித்தாக உதவியாக அது முடியும். அதனால் மட்டுமே அது புனிதம். ..எனவே அந்தப் புனிதம் எனும் tag சில இடங்களில் காக்கப்பட வேண்டியதும் கூட.

அது புனிதம் எல்லாம் இல்லை என பெண்ணோ, அல்லது அப்படியான கல்டிவேடர் டேஸ்டில் இருக்கும் எவருமோ சொல்ல மாட்டார்கள். ஏனெனில் இப்போதிருக்கும் அவர்களது சர்வைவல் ஆட்டம் காணுமோ எனும் தயக்கமும் காரணம்.

நிச்சயம் இது பொதுவில் வைக்கப்பட்டு அரசியலாக்கப்பட வேண்டிய ஒன்றே.

ஏனெனில், இருவருக்கிடையேயான ஒரு பிரச்சினை எனில் அதைக் கண்டுகொள்ளாதிருந்தால், பல சமயங்களில் அந்த பிரச்சினைஅவர்களால் தீர்க்கப்பட்டுவிடும்தான். ஆனால் அதே பிரச்சினை பலருக்கும் வரும் பட்சத்தில்,அல்லது வரலாம் என யூகிக்கப்படும்பட்சத்தில் வெளிப்படையாகப் பேசி, அதை அரசியலாக்கினால் மட்டுமே, அது பலரின் கவனத்தையும் பெற்று, அந்தப் பிரச்சினை தனக்கான தீர்வை சமூகத்திடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

பெண்ணும் ஆணும் ஒரு போதும் சமமாக முடியாது. ஏனெனில் இருவரின் சுமைகளும் வெவ்வேறு. ஆனால் களமோ ஒன்றேதான். இதற்கு சுமையை அவனும் கூட சேர்ந்து சுமப்பது தீர்வாகுமா? அல்லது அந்த சுமையை இன்னும் இளவயதில் சுமந்துவிட்டு, பின் ஆணோடு இவள் போட்டி போடலாமா? (ஆணோடு எதற்கு போட்டி? எனும் கேள்வி தொடர்பற்றது என்றாலும், ”தன்னை எது ரெகக்னைஸ் செய்கிறதோ அதை நோக்கியே இருவரும் செல்கிறார்கள்” என்பதே இதற்கான பதில்)

இவை எதற்கும் சரி பதில் கிடைக்காதெனில் பெண் தனக்குத் தானேயான ஒரு உலகை சிருஷ்டிக்கக்கூடும். அவள் மட்டுமே டாமினேட் செய்யக்கூடிய ஒன்றாக அது ஆகலாம். ஏனெனில், எல்லாவற்றையும் கண்டுபிடித்த அறிவியல் இன்னும் கர்ப்பப்பையைக் கண்டுபிடிக்கவில்லை.

    சரி இது இப்படியே தொடர்ந்தால் வேறென்னென்ன நடக்க வாய்ப்பிருக்கிறது?

அதன் பின்னும் இது தொடர்ந்தால், மனித இனத்தில் மூன்றாவதாக இன்னொரு இனம் சேரலாம். ஆண், பெண் மற்றும் பிள்ளை பெற்றுத்தர வளர்க்க மட்டுமே தயாராக இருக்கும் ஒரு இனம். ஆணோ பெண்ணோ, தன் தேவை திட்டம் அடிப்படையில் இவர்களை நாடி, கடையில் துணி கொடுத்து தைத்து வாங்குவது போல விந்தணுவோ, கரு முட்டையோ கொடுத்து தனக்கான பிள்ளைய்ப் பெற்றுக் கொள்ளும் நிலை வரலாம்.

யுனிசெக்ஸாக இருந்த உயிரிகள் ஆண்/பெண் எனப் பிரிந்தது போல, மூன்றாகலாம். அதன்பின் வேறு வழியின்றி யுனிசெக்ஸாகவும் மாறலாம்.

அது சரியா தவறா என்பதை விட, இயற்கையான முறையில் இந்த பிரச்சினையைச் சரி செய்ய வழி ஏதும் உள்ளதா? என பார்ப்பதே சரி.

’இது உசத்தி’ என ஒவ்வொரு இனத்திற்கும், குழுவிற்கும் எதோ ஒன்றிருக்கும். இங்கே அது ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறோ? ஒரு வேளை இந்தக் கேள்வியில் பதில் இருக்குமோ?

நாம் என்ன செய்யப்போகிறோம்?

0 Replies to “ஆண், பெண் மற்றும் மூன்றாம் இனம்?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.