முடி

 
இன்னும் சில நாட்களில் மொத்தமாய் கொட்டித் தீர்ந்துவிடும்.
ஏற்கனவே பின்மண்டையில் முழுநிலவு உதித்துவிட்டது. முன்மண்டை தற்காலிகமாகத் தப்பி நிற்கிறது. தற்போது எனக்கிருக்கும் தீராத மன உளைச்சலுக்குக் காரணமே இந்த முடிப்பிரச்சினை தான். முப்பத்தி இரண்டு வயதுதான் ஆகிறது. இன்னும் திருமணம் கூட ஆகவில்லை.
எனக்கு முன்னால் நின்றுகொண்டிருப்பவர்களிடம் என் வயதைக் கேட்டால், ‘இருபத்தைந்து இருக்கும்’ என்று கூறுவார்கள். மாறாக எனக்குப் பின்னால் இருப்பவர்களிடம் கேட்டால் ‘நாற்பதுக்கு மேல் இருக்கும்’ என்று உறுதியாகக் கூறுவார்கள்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள். கல்லூரிப் படிப்பு முடித்து சென்னையில் வேலைக்கு சென்ற காலத்தில் நான் ஒரு மாடலாக இருந்தவன். பி.எஸ்.என்.எல், சென்னை சில்க்ஸ், ஃபான்டா, அப்புறம் கெல்லீசில் இருக்கும் ஏதோ பெயர் தெரியாத துணிக்கடை என்று பல விளம்பரங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் பி.எஸ்.என்.எல் விளம்பரத்தில் மட்டும் தான் சொல்லிக்கொள்ளும் வகையில் தெரிவேன். மற்ற விளம்பரங்கள் அனைத்திலும் கூட்டத்தில் எங்காவது நின்று கொண்டிருப்பேன். கண்டுபிடிப்பது மிகக் கடினம். அதுவும் ஃபான்டா விளம்பரத்தில் எனது பின்னந்தலை மட்டுமே தெரியும். அந்தத் துணிக்கடை விளம்பரத்தில் முக்கியமான இரண்டு மாடல்களில் நானும் ஒருவன். துணிக்கடையினர் கெல்லீசில் ஒரு மாபெரும் விளம்பரப் பலகை ஒன்றை வைந்திருந்தார்கள். அந்த விளம்பரத்திலும் என் முகம் தெரியாது. இன்னொரு மாடல் இடுப்பில் டவலைக் கட்டிக்கொண்டு அவனுடைய துணிகளனைத்தையும் எடைக்கு போடுவது போன்ற ஒரு விளம்பரம். நான் எடைக்கு துணிகளை எடுக்கும் ஆசாமியாக லுங்கி கட்டிக்கொண்டு, பனியன் அணிந்து, தராசை தூக்கிப்பிடித்தபடி, பின்புறத்தைக் காட்டிக்கொண்டு அமர்ந்திருப்பேன். அந்தப் படத்தில் என் தலைமுடியின் நீளத்தையும், அடர்த்தியையும் நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.
இப்போது அதே விளம்பரத்தை மீண்டும் எடுத்தால் நிச்சயம் என்னைக் கூப்பிட மாட்டார்கள். ஜடை போட்டுப் பின்னும் அளவுக்கு அடர்ந்த முடி குடிகொண்டிருந்த இந்த முன்னாள் மாடலின் பின்மண்டை இப்போது மின்னிக் கொண்டிருக்கிறது – பிளாஷ் பிரச்சினைகள் வரும் அளவிற்கு.
அவ்வளவு தூரம் எதற்குப் போக வேண்டும். ஐந்து வருடங்களுக்கு முன்பு பெல்ஜியத்திற்கு வந்த போது கூட தலையில் முடி பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தது. அன்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் என் தங்கை எடுத்த புகைப்படமே அதற்கு சாட்சி.
என்னை விட்டு இத்தனை வேகமாக என் தலைமுடி விலகி ஓடிக்கொண்டிருப்பதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம்.
கவலை அதிகம் இருந்தால் முடி கொட்டும் என்கிறார்கள். கடன் அதிகம் இருந்தாலும் கொட்டும். ஏழரை வருடங்களுக்கு முன்பு வாங்கிய வீட்டுக்கடனை இப்போதுதான் கட்டி முடித்தேன். சென்னையில் இருந்த போது, வாங்கிய சம்பளத்தில் பாதிக்கு மேல் மாத தவணை கட்டுவதற்கே சரியாக இருந்தது. நான்கு வருடங்கள் செவ்வனே கட்டிவந்தும் அசல் மாறாமல் அப்படியே அய்யனார் சிலைபோல் இளித்தபடி அமர்ந்து கொண்டிருந்ததைக் கண்டபோதுதான் முடி கொட்ட ஆரம்பித்திருக்க வேண்டும்.
சத்தான உணவு எடுத்துக் கொள்ளாததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். உணவுக்கா பஞ்சம் இந்த தேசத்தில்? நமக்குத்தான் எதையும் செய்யத் தெரிவதில்லை. சாம்பார் செய்ய நினைத்தால் ரசமாகிறது. வெஜிடபிள் பிரியாணி செய்ய நினைத்தால் தக்காளி சாதமாகிப் போய்த்தொலைகிறது. சமைப்பது கூட கடினமில்லை. ஆனால் அதற்குப் பிறகு வரும் பாத்திரங்களைக் கழுவும் படலத்தை நினைத்துப் பார்த்தாலே நடுக்கம் வருகிறது. இதனாலேயே பெரும்பாலும் தயிர் சாதத்துடனும், ரொட்டியுடனும் ஓடுகிறது வண்டி. அவ்வப்போது ரெடிமிக்ஸ், ஃபுரோசன் ஃபுட் எடுத்துக்கொள்வதும் உண்டு.
உள்ளூர் இந்தியக் குடும்பஸ்தர்கள், அவர்களின் குழந்தைகளுக்குப் பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் என்று ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி விருந்துக்கு அழைப்பார்கள். இதுபோன்ற அழைப்புகளையெல்லாம் மறுப்பதே கிடையாது. அந்த நாட்களில் மட்டும்தான் நல்ல சாப்பாடே! ஓட்டலுக்கும் போக முடியாது. அதுவும் நான் வசிக்கும் லூவன் நகரின் பேருந்து நிலையத்திற்கு எதிரிலுள்ள ஹிமாலயன் ரெஸ்டாரண்டில் தினந்தோறும் சாப்பிடவேண்டும் என்றால் இன்னொரு முறை வங்கியில் கடன் வாங்கி, வட்டி கட்ட வேண்டியது தான்..
பெல்ஜிய நாட்டில் தண்ணீரின் கடினத்தன்மை அதிகம் என்கிறார்கள். அதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். இத்தனை நாட்களாக எனக்குத்தான் அது தெரியாமல் போயிருக்கிறது. இப்போது தண்ணீர் வரும் இடங்களில் எல்லாம் பில்ட்டர் மாட்டி வைத்திருக்கிறேன். கடினத்தன்மை கொண்ட தண்ணீரில் குளிப்பதற்கென்றே சிறப்பு ஷாம்பு ஒன்றையும் வாங்கி வைத்திருக்கிறேன். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். சரி. திருமணம் என்கிற ஒன்று நடக்கும் வரையிலாவது இருப்பதைக் காப்பற்றிக்கொள்வது நல்லது.
எனக்கென்னவோ இவை எல்லாவற்றையும் விட அதிமுக்கியமான காரணமாகப்படுவது – ‘பார்ட் போலன்’ என்னும் ஆசாமி தான்!
பார்ட் என்னுடைய மேலதிகாரி. அவர் ஒரு தொட்டால் விரிஞ்சிக் கண்ணன். தொட்டதற்கெல்லாம் கோபம் பொத்துக்கொண்டு வந்து கண்கள் விரிந்து, கன்னம் சிவந்து, வாய் கூப்பாடு போட ஆரம்பித்துவிடும். என் வாழ்நாளில் இத்தனை பதற்றம் நிறைந்த மனிதனை நான் பார்த்ததில்லை. எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் இந்த மனிதரின் பதற்றம் அவரோடு இருந்துவிட்டால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால், அது என் தலைமுடி வரை அல்லவா நீண்டிருக்கிறது. என் சொட்டைக்கு நிச்சயம் இந்த மனிதர் தான் பிரதான காரணம் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் அவரது முன்னுரிமைகள் என்னை முழி பிதுங்க வைக்கும். ‘பிரசல்சு நகரில் உள்ள அலுவலகத்தில் சில பிரச்சினைகள். நீ உடனே அங்கு செல்லவேண்டும். அவர்களோடு அமர்ந்து இந்த வார இறுதிக்குள் பிரச்சினைகள் தீர்த்துவிட்டு வர வேண்டும்’ என்று கூறி அனுப்பி வைத்த இரண்டு நாட்களில் அவரிடமிருந்து அழைப்பு வரும். ‘இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது தெரியுமா? நீ அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? உன் இஷ்டம் போலெல்லாம் நடந்துகொண்டால், அப்புறம் நான் எதற்கு?’ என்று கத்துவார்.
வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணிவாக்கில் அழைத்து, ‘இது அதிமுக்கியமான வேலை. திங்கள்கிழமை காலைக்குள் முடித்துவிடு!’ என்பார். வேறு வழியே இல்லாமல் வார இறுதி முழுவதும் அமர்ந்து வேலை செய்யவேண்டும்.
இது போன்ற செயல்களை, இந்தியாவில் தங்கள் பெயரைத் தாங்களே சுருக்கி வைத்துக்கொள்ளும் ஐ.டி பிராஜக்ட் மானேஜர்களான என்.கே-கள், விஷி-கள், ராண்டி-கள் செய்து பார்த்திருக்கிறேன். வெள்ளிகிழமையானால் மூன்று மணிக்கே கிளம்பி விடும் சுதந்திர விரும்பிகளான ஐரோப்பியர்களில் இவர் ஒரு வித்தியாசமான மனிதர்.
என்றைக்காவது ஒருநாள் சற்று முன்னதாக கிளம்பினால் போதும். நான் பையைத் தூக்கிக்கொண்டு நடந்து போவதை ஓரக்கண்ணால் பார்ப்பார். சில சமயங்களில், ‘ஏன் அடிக்கடி சீக்கிரம் கிளம்பிவிடுகிறாய்?’ என்பார். அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அதுபோல் சென்றிருப்பேன். அவருடைய போலி அழுத்தங்களின் காரணமாக இரவு வரை நான் வேலை பார்த்த நாட்களும், அவர் கொன்றழித்த என் வார இறுதிகளும் எப்போதுமே அவர் நினைவில் தங்குவதில்லை. அவருக்கென்ன? அவர் மட்டும் செவ்வாய் கிழமை, வெள்ளிக் கிழமைகளில் யாருக்கும் சொல்லாமல் சீக்கிரமாகவே காணாமல் போய் விடுவார். நமக்குத்தான் சிரமம்.
‘இவர் ஒரு ரேசிஸ்டா?’, ‘நான் ஒரு இந்தியன் என்பதால் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறாரா?’ என்றால் அதுவும் இல்லை. எங்கள் அணியில் இருக்கும் யோஹான் டி வொல்ஃப்-பிற்கும் இதே நிலைமைதான். அலுவலக நேரத்தில் அடிக்கடிப் புகைப்பிடிக்க வெளியே செல்கிறான் என்று அவனுடைய லைட்டரை ஒருமுறை பிடுங்கி வைத்துக்கொண்டார். யோஹான் இந்த மனிதரின் செயல்களை எந்த நிலையிலும் மதித்தாகவே தெரியவில்லை. அவன் வேறொரு லைட்டரை வாங்கி வைத்துக்கொண்டான். அவனுக்கும் வெள்ளிகிழமை மாலை வேலைகளை ஒதுக்குவார். அவன் அவை அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ‘டாட் வோல்கன்ட வீக்’ என்று கூறிவிட்டு நடையைக் கட்டிவிடுவான். திங்கள்கிழமை எப்படி இருந்தாலும் கத்துவார். குதிப்பார். அதைப்பற்றியெல்லாம் அவனுக்கு கவலை இருந்ததில்லை. ஆனால், அதை அவன் வேறுவிதமாகவும் சமாளித்தான். வெள்ளிக்கிழமைகளில் நாங்கள் அமர்ந்திருக்கும் லூவன் அலுவலகத்திற்கு வருவதை நிறுத்திவிட்டான். கென்டு நகரில் இருக்கும் எங்களின் கிளை அலுவலகத்துக்குச் சென்று விடுவான்.
எங்கள் நிறுவனத்தில் வாரத்திற்கு ஒருநாள் வீட்டிலும், ஒருநாள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அலுவலகத்திலும் வேலைப் பார்க்கலாம் என்கிற சலுகை இருந்தது. இந்தச் சலுகைகளையெல்லாம் நான் அவ்வளவாக அனுபவித்ததே இல்லை. பார்ட் என்னை அனுபவிக்கவிட்டதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அதன் உண்மையான காரணம் வீட்டிலிருந்து வேலை பார்த்தால் நாளொன்றுக்கு இருபது யூரோ ஃபுட் அலவன்ஸ் கிடைக்காமல் போய்விடும். எல்லாவற்றுக்கும் பார்ட்டின் மேல் வெறுமனே பழிசுமத்த எனக்கு விருப்பமில்லை.
யோஹான் திங்களன்று வீட்டிலிருந்தும், வெள்ளியன்று கென்டிலிருந்தும் ‘வேலை செய்வான்’. ‘வீட்டிலும், கென்டிலும் இருப்பான்’ என்று தான் சொல்லவேண்டும். புதன்கிழமை எங்கிருப்பான் என்று யாருக்கும் தெரியாது. புதன்கிழமைகளில் என்ன காரணத்தினாலோ பார்ட் வேலைக்கு வருவதில்லை. வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே எங்கள் நிறுவனத்திற்கு வேலை பார்க்கிறார். மீதம் ஒருநாள் அவருடைய சொந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறாரோ என்னவோ? இங்குள்ள பெரும்பாலானோர் அவர்களுடைய சொந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.
பெல்ஜியத்தில் பள்ளிகூடங்கள் புதன்கிழமை அன்று அரைநாள் மட்டுமே இயங்குகின்றன. குழந்தைகளை பார்த்துக் கொள்ளவதற்காக வேண்டி, பெண்கள் பெரும்பாலும் அன்றைக்கு வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் அல்லது அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு விடுவார்கள். குழந்தைக் காப்பகங்களுக்கு பெருஞ்செலவு செய்வதை இவர்கள் விரும்புவதில்லை. ஆனால் பார்ட் வராமல் இருப்பதற்கான காரணம் இதுவாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
எவரையும் விட்டுவைத்ததில்லை இந்த மனிதர்.
ஆறுமாதங்களுக்கு முன்பு டெய்சி நெவென் என்கிற அழகிய இளம் பெண் எங்கள் அணியில் சேர்ந்தாள். ஏனோ யோஹான் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. அமோரியை அவளுக்கு பட்டியாக நியமித்து இருந்தார் பார்ட். அவளுக்கு சொல்லிக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல், காபி அருந்துவதலிருந்து, உணவு வரை அத்தனை நேரமும் அவளுடனேயே இருந்தான் அமோரி. அவனை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அவனுக்கு முடி நீளம். தன்னுடைய குதிரைவால் முடியால் என்னுடைய பொறாமையை மட்டும் சம்பாதித்து வைத்திருந்தவன், நான் புறமுதுகு காட்டியபடி நின்றுகொண்டிருந்த போட்டோவை என்னைக் கேட்காமலேயே பேஸ்புக்கில் போட்ட நாளில் இருந்து என் ஜன்ம எதிரியாகி விட்டான்.
டெய்சியால் பார்ட்டின் நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. ஒருநாள் அவருடன் கைபேசியில் பேசிமுடித்துவிட்டு, ‘ஹீ ஈஸ் எ மேல் சாவினிஸ்ட்!’ என்று கத்திவிட்டு தடாலென கைபேசியை மேஜை மீது வீசி எறிந்தாள். சாவினிஸ்ட் என்பதை விடுங்கள். இவரைப் பார்த்து ஒரு சாடிஸ்ட் என்று கூட சொல்லமுடியாது. சாடிஸ்டுகள் பிறருடைய துன்பத்தில் இன்பம் காண்பவர்கள். இந்த மனிதர் சந்தோஷப்பட்டே நான் பார்த்ததில்லையே. வரையறுக்கவே முடியாத ஒரு பிறவி.
டெய்சிக்கு சாவினிஸ்ட், அமோரிக்கு சாடிஸ்ட் என்று இன்னும் எத்தனை பேரிடம் எத்தனை இஸ்டுகளை வாங்கிக் குவித்து வைத்திருக்கிறாரோ தெரியவில்லை.
கடைசியில் டெய்சி, காரல் வாண்டர்கோட்டனிடமே முறையீடு செய்துவிட்டாள். காரல் எங்கள் டைரக்டர். அவரோ அவள் விரும்பியபடியே அவளை மட்டும் வேறு டிபார்ட்மென்டுக்கு மாற்றினாரே தவிர, பார்ட்டின் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாய்த் தெரியவில்லை. அதற்குக் காரணம் அவருடைய எல்லா ப்ராஜக்டுகளும் சிறப்பாக போய்க் கொண்டிருப்பதனால் இருக்கலாம். எல்லாவற்றையும் என் தலையில் தாங்கிக் கொட்டவைத்துக் கொண்டிருக்கிறேனே! என் எதிரி அமோரியே என்னை பார்ட்டின் ‘ரெக்டராண்ட்’ என்று கூறுவான். டச்சு மொழியில் ‘வலதுகை’. இப்படியும் கூறிவிட்டு, ‘நல்ல வேலை இடதுகை இல்லை. இந்தியாவில் இடதுகையை வேறு சில விஷயங்களுக்கு உபயோகிப்பார்கள்’ என்று சொல்லிச் சிரித்து வெறுப்பேற்றுவான். காரலுக்கு நான் செய்துகொண்டிருப்பவைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. பார்ட் சொன்னாரோ இல்லையோ. நேரடியாகவே பாராட்டத் தெரியாத மனிதர், காரலிடம் பெரிதாக அப்படி என்ன சொல்லியிருக்கப் போகிறார். கண்டிப்பாக என்னுடைய உழைப்பைக் காட்டி இவர் நல்ல பெயர் வாங்கியிருப்பார்.
இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், இத்தகைய சர்வாதிகார மனப்போக்குடைய, நரம்புக்கோளாருடைய, எதிர்மறையான, பிடிவாதமிக்க ஒரு மனிதருடன் மூன்று வருடங்களாக குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் எனக்கு ஏன் முடி கொட்டக்கூடாது?
இவருக்கு அடுத்து எனக்கு அதிக மன உளைச்சலைத் தருவது, எங்கள் அலுவலகத்திலேயே எனக்கு அறவே பிடிக்காத இந்த எலிவேட்டர். ஆனால் என்ன செய்வது, ஆறாவது தளத்தில் இருக்கும் என்னுடைய இருக்கைக்கு அதில் தானே சென்று வரவேண்டியிருக்கிறது. அந்தப் பாழாய்ப்போன எலிவேட்டரின் உள்ளே மூன்று புறங்களிலும் கண்ணாடிகள் இருக்கும். மூன்று கண்ணாடிகளிலும் முன்னூறு சொட்டைகள் தெரியும் போது மனதில் தோன்றுவதை விவரிக்க முடியாது. அங்கேயே அமர்ந்து அழுதுவிடலாம் போல் இருக்கும். இதனாலேயே எலிவேட்டரில் ஏறியவுடன் கதவைப் பார்த்தபடி நின்றுகொள்வேன்.
முழுச்சொட்டையுடையோரைப் பார்க்கும் போதெல்லாம், இவர்களுக்கு நம் நிலைமை பரவாயில்லை என்று மனதைத் தேற்றிக்கொண்டாலும், முன்னூறு சொட்டைகள் காட்டும் இந்த லிப்டும், எரிச்சலூட்டும் முகபாவங்கள் காட்டும் இந்த பார்டும், குதிரைவால் கொண்டையான் அமோரியும் என் முடி கொட்டுவதை இன்னும் தீவிரப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
நான் வேறு தளத்திற்குச் சென்று விடவேண்டும் அல்லது வேறு அலுவலகத்துக்குச் சென்று விட வேண்டும். ஆனால் ஏனோ எனக்கு பார்டை விட்டு வேறு பிராஜக்டிற்கோ, வேறு டிபார்ட்மென்டிற்கோ சென்றுவிட வேண்டும் என்று தோன்றவில்லை. நான் இந்தியாவிலிருந்து வந்தபோது ஒரு தற்காலிக ஒப்பந்த பணியாளனாகத்தான் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். பார்ட் தான் எனக்கு நிரந்தரப் பணியிடம் பெற்றுத் தந்தார். எனக்கு நன்றாகத் தெரியும். இந்த நிறுவனத்தில், ஒரு இந்தியனுக்கு வேலை பெற்றுத் தருவதென்பது அத்தனை எளிதான காரியமில்லை. என்னதான் கடுமையாகவும் நேர்மையாகவும் வேலை செய்தாலும், வெளிநாட்டான் வெளிநாட்டான் தான். அவனுக்கு என்று சில எழுதப்படாத வரம்புகள் இருக்கின்றன. அலுவலகத்தில் மட்டுமல்ல, வெளியிலும் கூட இவர்களில் பெரும்பாலானோருக்கு இருக்கும் செனோஃபோபியாவையும், இவர்கள் காட்டும் சட்டில் ரேசிசத்தையும் சகித்துக் கொண்டு தான் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது.
அனைத்திற்கும் மேலாக, மொழிப்பிரச்சினை. வேறு அணிக்கு மாறிச் சென்றால் ஆங்கிலத்தை மட்டும் கட்டிக்கொண்டு பிழைக்க முடியாது. மொழியறியாதவன் என்கிற கவலையெல்லாம் சிறிதும் இல்லாமல், பாவம் பார்க்காமல் டச்சு மொழியில் பேசிக்கொண்டு இருப்பார்கள். அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. அவர்களுக்கு ஆங்கிலம் சரியாக வராது. ஆங்கிலத்தைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆட இது என்ன தமிழகமா?
என் மன உளைச்சலுக்கான முதல் காரணகர்த்தாவாக எனக்கு பார்ட் தென்பட்டாலும், மேலே கூறிய இந்த இரண்டு விஷயங்களில், பார்ட் தனித்தே நிற்கிறார். இன்னும் சொல்லப்போனால் எல்லா விஷயத்திலும் இந்த மனிதர்களைக் காட்டிலும் அவர் முரண்பட்டவராகவே தெரிகிறார்.
முடி உதிர்ந்தது உதிர்ந்தது தான். திருமணம் ஆகி இருந்தால் இவ்வளவு கவலைப்படமாட்டேன். சத்தியமூர்த்தி மாமா தான் எனக்கு பெண் பார்க்கும் படலத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். இதற்காகவே இந்தியாவிற்கு வருடத்திற்கு இரண்டு, மூன்று முறை சென்று வருகிறேன். ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கும் போதும் அவர் சொல்வது – ‘இவனுக்கு முழுக்க முடி கொட்றதுக்குள்ள ஒரு பொண்ண பாத்து முடிக்கணும். எனக்கே இந்த வயசிலே இவ்ளோ முடி இருக்கு. இவனுக்கு ஏன் இப்படி?’
.
அவர் மட்டுமா?
நான்கு வருடங்கள் கழித்து தற்செயலாக என்னை பார்த்த நண்பரொருவர், ‘என்ன பயங்கரமா மாறிட்டீங்க?’ என்று கேட்டார்.
சொட்டை! எவ்வளவு பயங்கரமான ஒரு வார்த்தை!
என் கல்லூரி நண்பர்கள் அதற்கு மேல் சென்று, ‘என்ன மச்சான் மாடி காலியாகிட்டே வருது!’ என்பார்கள். தோற்றத்தை வைத்து பகடி செய்வதில் நம் மக்களை யாரும் விஞ்சிவிட முடியாது.
இவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே எதையாவது செய்ய வேண்டியிருந்தது. அலோபதி, ஆயுர்வேதம், நேச்சுரோபதி, பலவித எண்ணைகள், அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட எர்வாமாட்டின் என்று அத்தனையும் முயன்றாகி விட்டது. அவ்வப்போது ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட செல்ஃபி-கள் எடுத்தது தான் மிச்சம்.
சமீபத்தில் கூட கபோக்கி என்கிற அமெரிக்க ப்ராடக்ட் ஒன்றைப் பற்றி இணையத்தில் பார்த்தேன். இலவச சாம்பிளுக்கும் விண்ணப்பித்துவிட்டேன். சிப்லா கூட டுகெயின் என்கிற ஜெல்லைத் தயாரித்திருக்கிறது. தடவிய ஆறுமாதங்களில் முடி வளர்ந்து விடுகிறதாம். டாக்டர் ரெட்டி லேப்சின் மின்டாப்பை பற்றி அங்கு வேலைபார்க்கும் நண்பன் மிலிந்தனிடமே கேட்டுவிட்டேன். அவனோ, ‘மின்டாபும் வேண்டாம். டுகெயினும் வேண்டாம். இரண்டிலும் மினாக்சிடில் இருக்கிறது. அது மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.’ என்று கண்டிப்புடன் கூறிவிட்டான். எதற்கு இந்த வேண்டாத வம்பு என்று விட்டுவிட்டேன்.
இவற்றாலெல்லாம் ஒரு பிரயோஜனமும் இல்லை. எதிர்காலத்திற்குத் தயாராவது மட்டுமே சிறந்த வழி. எனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொள்வது பற்றி தீவிரமாக சிந்தித்து வருகிறேன். விக் வாங்கலாமா என்றால் அதெல்லாம் ஊரறிந்த வித்தை. அதற்குச் சொட்டையே மேல். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பாலு மகேந்த்திராவைப் போல் எப்போதும் தொப்பி அணிந்துகொண்டிருப்பார். அது அவருக்கான பாணி. சொட்டை உள்ள சிலர் மொட்டை அடித்துக்கொள்கிறார்கள். அது போல் செய்யலாம். எனக்கென்னவோ சொட்டையை விட மொட்டை சற்று மேலானதாகத் தோன்றுகிறது. அது அவ்வளவு எரிச்சலூட்டக்கூடிய வார்த்தை இல்லை. பயங்கரமாயும் இல்லை. ‘மொட்டை, இங்க வா’ என்பதற்கும், ‘சொட்டை இங்க வா’ என்பதற்கும் நிச்சயம் கடலளவு வித்தியாசமிருக்கிறது. எனவே நிச்சயம் முன்மண்டையில் முடி முழுவதுமாகக் கொட்டிவிட்டால், நான் நிச்சயம் மொட்டை அடித்துக்கொள்வேன்.
1613
இருப்பினும் இப்போதெல்லாம் முடிக்குத் தேவையான அத்தனை உணவுகளையும் ஒழுங்காக எடுத்துக்கொள்கிறேன். வாரத்தில் ஒருமுறைதான் தலைக்குக் குளிக்கிறேன். அதுவும் தலைக்கு மட்டும் பாட்டில் வாட்டர். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்கிறேன். அலுவலகத்திலும் அதிகமாக வேலை பார்ப்பதை கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்த்து வருகிறேன். பார்ட்டின் வலதுகை என்கிற பட்டமெல்லாம் எனக்குத் தேவையில்லை.
அன்றைக்கு வெள்ளிக்கிழமை.
பத்தரை மணியாகியும் பார்ட் வரவில்லை. வழக்கமாக எட்டரை மணிக்கெல்லாம் வந்துவிடுபவர் ஆயிற்றே. குறுஞ்செய்தி அனுப்புவார். அதுவும் இல்லை.
யோஹான் கைபேசியில் அழைத்தான்.
“மோஹான்’, என்று எப்போதும் போல் விளித்தான். அது மோஹான் இல்லை மோகன் என்று பலமுறை சொல்லியும் அவனுக்கு ஏறவில்லை. அவன் பெயர் யோஹான் என்பதால் அவன் பெயரில் இருக்கும் ‘J’-இற்கு பதிலாக ‘M’ இருப்பதால் அப்படி அழைக்கிறான்.
‘ஒரு வருத்தமான செய்தி!’ என்றான்.
‘ஏன் இன்றைக்கு பார்ட் கென்ட் அலுவலகம் வந்துவிட்டாரா?’ என்றேன் சிரித்துக்கொண்டே.
‘ஜோக்ஸ் அபார்ட், பார்ட்ஸ் வைப் பாஸ்ட் அவே’.
‘வாட்?’
பார்ட்டின் மனைவி இறந்து விட்டார் என்றா கூறினான்? எப்படி இவனால் இதைக் கூட எந்தவித உணர்ச்சியுமின்றிக் கூற முடிகிறது.
அவன் தொடர்ந்தான். ‘ஆமாம். இப்போதுதான் காரல் தொலைபேசியில் அழைத்து விஷயத்தைத் தெரிவித்தார்.’
‘என்ன காரணம்?’
‘தெரியவில்லை. நாளைக்கு இறுதிச் சடங்கு! காரல் இன்று மாலை பெரு நாட்டிற்குச் செல்வதால் என்னால் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டார். நீ அவருக்கு நெருங்கியவன் என்பதால், உன்னையும் கண்டிப்பாக போக முயற்சி செய்யச் சொன்னார்.’
நான் எப்போது அவருக்கு நெருங்கியவன் ஆனேன்.
‘நிச்சயம் வருகிறேன் யோஹான். ஆனால் என்ன காரணம் என்று தெரியுமா? ‘
‘என்ன காரணம் என்று தெரியவில்லை, மோஹான். காரல் ஏதோ அவசரமாகத் தொடர்பைத் துண்டித்துவிட்டார். மாலை புறப்படுவதற்கு முன்பு அழைக்கிறேன் என்றார். ஆனால், அமோரி ஒருமுறை பார்டின் மனைவிக்கு ஏதோ பிரச்சினை என்று கூறியிருக்கிறான். நான் சரியாக கவனிக்கவில்லை. அவன் சைப்ரசில் இருந்து வந்துவிட்டானா என்று தெரியவில்லை. போன் செய்து பார்க்கவேண்டும். இறுதிச்சடங்கு நடக்குமிடத்தின் முகவரியை உனக்கு அனுப்பி வைக்கிறேன்.’ என்றான்.
அதற்கு மேல் எனக்கு வேலையே ஓடவில்லை.
காரணம் என்னவாக இருக்கும்? இந்த ஆசாமி வீட்டிலும் இதே போன்று நடந்து கொள்பவரோ? இப்படி இருந்தால் யாருக்குத்தான் உடன் வாழப் பிடிக்கும்? விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருப்பாளா? இருக்காது. இவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்து விடுவார்களே. அந்த முடிவுக்கெல்லாம் போக மாட்டார்கள். ஆக்சிடண்டாக இருக்குமா? ஆனால், அமோரி அவருடைய மனைவிக்கு ஏதோ பிரச்சினை என்று கூறியிருக்கிறானே? பிரச்சினை என்றால்? மனநலம் குன்றியவளா? இருக்காது. அமோரிக்கு பார்ட்டை சுத்தமாகப் பிடிக்காது. அவன் ஏதேனும் உளறியிருப்பான். சொல்ல முடியாது. உண்மையாகவும் இருக்கலாம். இந்த யோஹான் சரியாக கேட்டிருக்கவேண்டும். ஜடம். இவர்கள் சக மனிதர்களின் சொந்த விஷயங்களில் மூக்கையும் நுழைக்க மாட்டார்கள்; அக்கறையும் கொள்ளமாட்டார்கள். அப்படியே ஓரிருவர் அக்கறை காட்டினாலும் ஏன் மூக்கை நுழைக்கிறாய் என்றும் முறைத்துக்கொள்வார்கள்.
பார்ட்டை தொலைபேசியில் அழைக்கலாமா? அவர் எப்போதும் போல் எரிந்து விழுந்தால் என்ன செய்வது? நமக்கெதற்கு வம்பு! இதையெல்லாம் யோஹானைப் போலவே ஒதுங்கி நின்று பார்க்கப் பழகிக்கொள்ளவேண்டும். இந்நேரம் அவன் அலுவலகத்திலிருந்து கிளம்பியிருப்பான். பார்ட் இருந்தால் போன் செய்துவிடுவார். இப்போது அவனுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. அவன் என்னமாதிரியான மனநிலையில் இருப்பான் என்று யோசித்துப் பார்த்தேன். பார்ட் இன்னும் சில நாட்கள் அலுவலகத்துக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்கிற எண்ணம் தோன்றியபோது என்னுடைய மனமும் லேசாக இன்புற்றது. உதடுகள் என்னை அறியாமல் விரிந்து புன்னகைத்த அடுத்த கணம், ‘என்ன மாதிரியான சாடிஸ்ட் நான்?’ என்கிற கேள்வி எனக்குள்ளே எழுந்து என் வக்கிர எண்ணங்களை ஒடுக்கியது. மனம் உடனே துக்கமடைவதற்கான காரணங்களைத் தேடியது. அவரில்லாமல் இந்த வேலை கிடைத்திருக்குமா? கடனை அடைத்திருப்போமா? ஏதோ பாவம் கோபப்படுகிறார், திட்டுகிறாரே ஒழிய, முதுகுக்குப் பின்னே என்னைப் பற்றி யாரிடமாவது தவறாகப் பேசியிருக்கிறாரா? பதட்டக்காரர். ஏதோ ஒரு விஷயத்தில் இயலாமையோ அல்லது மனப்பிறழ்வோ அல்லது வேறெந்தக் காரணத்தினாலோ எல்லாவற்றுக்கும் பதற்றம் கொள்கிறார். இப்போது பாவம் மனைவியை இழந்துவிட்டு என்ன செய்துகொண்டிருக்கிறாரோ?
அடுத்த நாள் காலை காரை எடுத்துக்கொண்டு ஹெயிஸ்ட்-ஆப்-டென்-பெர்க் சென்றேன். எவ்வளவு நீண்ட பெயர் இந்த நகருக்கு? மலை-மேலமைந்த-ஹெயிஸ்ட் நகரம். லூவன் நகரிலிருந்து நாற்பத்தைந்து நிமிட தூரம். பார்ட்டின் வீடு இந்த நகருக்கு அருகே உள்ள இட்டெகெம் என்கிற கிராமத்தில் இருக்கிறதாம். இறுதிச் சடங்கு ஹெயிஸ்ட்லுள்ள ஒரு ஈமச்சடங்கு மண்டபத்தில் நடக்கிறதாம். வழக்கமாக இதுபோன்ற சடங்குகள் தேவாலயத்தில் தான் நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பார்ட் ஒரு நாத்தினாக இருக்க வேண்டும்.
ஈமச்சடங்கு மண்டபம் இருந்த இடம் ஒரு குட்டித் தீவைப்போல் காட்சியளித்தது. சுற்றிலும் தண்ணீர். அமைதியான இடம்.
யோஹான் அந்தத் தீவுக்குச் செல்லும் குறுகிய பாலத்தின் மீது நின்று கொண்டிருப்பது தெரிந்தது. காரை நிறுத்திவிட்டு அங்கு சென்றேன்.
மண்டபத்திற்கு வெளியே இருந்த புல்வெளியில் கோட்டு போட்ட கனவான்களும் நன்கு உடையணிந்த பெண்களும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரின் கைகளிலும் தாள்கள் இருந்தன. அந்தப் பெண்மணியைப் பற்றி இவர்கள் அனைவரும் எழுதிக்கொண்டு வந்துள்ளதை இன்னும் சில நேரத்தில் வாசிப்பார்கள் என்று யோஹான் கூறினான். காரலிடம் தான் முந்தைய நாள் மாலை பேசியவற்றைப் பற்றியும் மெதுவாக சொல்லிக்கொண்டே வந்தான்.
இருவரும் மண்டபத்திற்கு உள்ளே சென்றோம்.
வரவேற்பறையில் ஒரு இளம் வயது பெண்ணின் புகைப்படம் வைக்கப்பட்டு, அதற்கருகே விதம் விதமான மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்திருந்தார்கள். பார்ட்டின் மனைவி தனது இளம் வயதில் எடுத்த புகைப்படமாக இருக்க வேண்டும். பார்ட்டுக்கே நாற்பத்து ஐந்து வயதாகிறது. அவரது மனைவிக்கு ஒரு ஐந்து குறைவாக இருக்கலாம். ஆனால், அந்தப் புகைப்படத்தில் வசீகரமான புன்னகையுடன் காணப்பட்டார்.
வரவேற்பறையைக் கடந்து ஹாலுக்குள் நுழைந்த போது, பார்ட்டும் அவருக்கு அருகே மூன்று குழந்தைகளும் நின்று கொண்டிருந்தார்கள். மூவரும் எட்டிலிருந்து, பதினைந்து வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்.
அவர்களுடைய கண்களை ப் பார்த்தேன் – சிவந்திருந்தன. முந்தைய இரவு முழுவதும் நிறைய அழுதிருக்கவேண்டும் என்று தோன்றியது. பார்ட் ஏன் இத்தனை நாளாய் இவர்களைப் பற்றியெல்லாம் பேசவேயில்லை. யார்தான் பேசுகிறார்கள்!
பார்ட்டை நெருங்கினேன். அவருக்குக் கைகொடுத்து ஆறுதல் சொல்ல நினைத்த அடுத்தகணம், என்னைக் கட்டிக்கொண்டு கதற ஆரம்பித்தார். பார்டின் இந்த செயல் நான் இதுவரை கண்டிராதது. குழந்தைகள் ஓடிவந்து அவரின் முதுகைப் பற்றிக் கொண்டார்கள். என்னையறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது. பேரமைதி நிலவிய அந்தக் கூடத்தில் அவரது கதறல் என்னை நிலைகுலைய வைத்தது.
“கடந்த இரண்டு ஆண்டுகளில் என்னென்னவோ செய்த பார்த்துவிட்டேன். தீவிரமான சிகிச்சை! இருந்தும் காப்பாற்ற முடியவில்லை. எங்களை விட்டு நிரந்தரமாகப் போய்விட்டாள்.’ என்று உடைந்துபோன குரலுடன் பேசினார்.
கூடத்தின் மையத்தில் அவரது மனைவியின் உடல் ஒரு மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்தது. யோஹான் அதற்குள் அங்கே சென்று மலர் வளையத்தை வைத்துவிட்டு அமைதியாக நின்று கொண்டிருந்தான்.
பார்ட் என் கைகளைப் பற்றி, ‘உன்னிடம் ஏதேனும் தவறாகப் பேசியிருந்தால் மன்னித்துவிடு!’ என்றார்.
எனக்கு வயிற்றில் என்னவோ செய்தது. எனது வலதுகையை இறுகப் பற்றிக்கொண்டிருந்த அவரது கைகளை தட்டிக்கொடுத்தவாறு, என் கண்ணீரை அடக்கத் திணறிக்கொண்டிருந்தேன்.
அவரது மனைவியின் உடல் வைக்கப்படிருந்த இடத்துக்குச் சென்றேன். மேஜைக்கருகே கீழே அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி ஒன்றை வைத்திருந்தார்கள். எல்லோரும் மலர்வளையங்களை அங்கே வைத்திருந்தார்கள். நான் மட்டுமே பூச்செண்டு கொண்டு வந்திருந்தேன்.
சலனமின்றி படுத்துக்கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் முகத்தைப் பார்த்தேன். நீண்ட நாளைய வலி நீங்கி, களைப்புடன் அமைதியாக அவர் உறங்கிக்கொண்டிருப்பது போல் இருந்தது.
அவரது தலையைப் பார்த்தேன். ஒரு முடி கூட இல்லை.

0 Replies to “முடி”

  1. Nice story! it treads easily through all the layers of a FOB life with subtle humor and a pretty good review of all the treatments for hair fall :)..but its only a matter of time before one accepts the inevitable!
    liked the way- how the story unraveled and ended on the time tested sujatha way, but still stood on its own without being too melodramatic and held its black humor touch with its last line
    thanks!

  2. நல்ல படைப்பு…நகைச்சுவை யுடன் கூடிய யதார்தமான கதை…. அ முத்துலிங்கத்தின் கதைகள் போல்வாசகர்களுக்கு வெளி நாட்டு வாழ்க்கையின் சிக்கல்களை அற்புதமாக வெளிக்கொணர்ந்துள்ளீர்கள்…..முடி கருவாக ஆரம்பமாகி பின் boss க்கும்இவருக்குமான உறவை நோக்கிப் போய் இறுதியில் boss இன் மனைவியின் நோய் பற்றிய பதற்றத்தை ஏற்படுத்தி மனைவியின் முடி பற்றி முடிந்தது கதை கருவை விட்டு விலகியதாய் பட்டது…….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.