நேருக்கு நேர்

இக்கதை “வாசிப்போம் சிங்கப்பூர் 2013” நிகழ்ச்சியின்போது சிங்கப்பூர் தேசிய நூலகத்தினால் வெளியிடப்பட்ட நான்கு மொழிச் சிறுகதைகளில் ஒன்று.
மலாய் மொழி மூலம் தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் எம் எஸ் ஸ்ரீ லக்ஷ்மி

sv-ws-logo-2அந்த வாரத்திற்குரிய வரலாற்றுப் பாடத்திற்கான விரிவுரை முடிந்தது. சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தை நோக்கி விரைந்தேன். நான் அந்தப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவன். நூலகத்தில் புதிய பகுதியின் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தபடி அன்றைய விரிவுரையின் உள்ளடக்கத்தை நினைவுகூர்ந்தேன். சொற்களால் சொல்லமுடியாத சோகத்தை எனக்குள் உணர்ந்தேன். அந்த உணர்வு அசெளகரியத்தைத் தந்ததோடு தொடர்ந்து என்னை நன்றாகவே பயமுறுத்திக்கொண்டிருந்தது. என்னுடைய எண்ணங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. அமைதியான அந்தச் சூழல் சொல்லொணாச் சோகத்தை அடைகாத்துக்கொண்டிருந்த என் மனத்தை மெதுவாக மாற்றி இலகுவாக்கியது. நாட்டின் வரலாறு குறித்த தகவல் குறிப்புகளோடு முடிவுக்கு வந்தது.
“வரலாறு மனித எண்ணங்கள் அனைத்தையும் வடிவமைக்கிறது” என்று அந்தப் பருவத்தின் தொடக்க விரிவுரையிலேயே வரலாற்றுப் பாட விரிவுரையாளர் வகுப்பில் கூறியிருந்தார். அந்த வரி ஒரு முழக்கவரியைப் போல ‘நச்” என்று உள்ளத்தில் ஒட்டிக்கொண்டது. அடிக்கடி என்னை யோசிக்கவும் வைத்தது. ஆம்! எந்த ஒரு நாடும் அதன் முன்னோர்களைப் பற்றிய வரலாற்றைப் படிப்பதில் நிச்சயம் பெருமிதம் கொள்ளும். இந்தோனீசியா, வியட்னாம், இந்தியா, ஜப்பான் போன்ற பல நாடுகளின் வரலாறுகளை – வரலாற்றுத்தலைவர்கள் மிகப் பலரைச் செல்வம் போலப் பெற்றிருந்த அந்த நாடுகள் சிறந்திருந்ததைப் படித்தபோதெல்லாம் எப்படியும் எனக்குள்ளும் பேருவகை பிறந்ததை நானும் உணர்ந்திருக்கிறேன். போராட்டத்திற்குத் தேவையான கருவிகள் போதிய அளவு இல்லாதிருந்தபோதிலும் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய அத்தலைவர்களின் உறுதியையும், நெஞ்சுரத்தையும், பொறுப்புணர்வையும் நான் கைதட்டிப் பாராட்டியிருக்கிறேன். ஆனால் நமது சொந்த வரலாறு??
மாறாக நான் மலாய் வரலாற்றைக் கற்றபோதெல்லாம் எனக்குள் ஆதரவில்லா உணர்வுகளும், அவநம்பிக்கையும், கோபமுமே எழுந்தன.மலாய்க்காரர்களாகிய நாங்கள் என்ன பெற்றிருந்தோம்? ஜோஸ் ரிஷால், ஹோ சி மின், சூலலாங்கோன் போல நம்மிடையே ஒருவர் இருக்கிறாரா? நாம் பெருமிதம் கொள்ளத்தக்க முன்னணித் தலைவருக்குரிய தகுதி பெற்ற தலைவர் யார்? டத்தோ ஓன் பின் ஜபார்? திரு யூனோஸ் பின் அப்துல்லா? யார்? யார்? நாம் உண்மையிலேயே எல்லாவற்றையுமே இழந்துவிட்டோமா? அனைத்துலகநிலையில் பாராட்டும்படியான மலாய்த்தலைவர் ஒருவரை உருவாக்க இயலாமல் போய்விட்டோமா? நம் வரலாறு தொடர்பான இந்த இழப்புணர்வும் அடையாளச்சிக்கலும் என்னுடைய குழந்தைகளுக்கும் ஒருகாலத்தில் தொடருமா?
இழப்பு என்ற வார்த்தை சொல்வதற்குச் சுலபமாகத் தோன்றலாம். ஆனால் துன்பந்தரும் உண்மையான உட்பொருளைச் சுமந்துள்ளது என்பது கலை இலக்கியத்துறை போல மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.என் சொந்த இனத்தின் வரலாற்றைப் படிக்கும்போது எனக்குள் நிச்சயமாக இந்த இழப்பு ஏற்படுகிறது. இன்று நாம் பெற்றிருப்பதெல்லாம் அயல்நாட்டுத் தாக்கங்களால் உருவான உற்பத்திப்பொருள்கள் தான் . நம்முடையது என்று பெருமைப்படத்தக்கது ஒன்றுமே இல்லை.இந்தத் தருணத்தில் ஒருவேளை நீங்கள் நான் இனவாதக் கொள்கையைக் கொண்டிருப்பதாக என் மீது குற்றம் சாட்டலாம் அல்லது இனஆதிக்கக் கொள்கை உடையவன் என்று கூடப் பிரகடனப்படுத்தலாம். அப்படியானால் நீங்கள் தவறு செய்தவர்கள் ஆவீர்கள். இதை எழுதுவதற்கு முன் அப்படிப்பட்ட இன ஆதிக்க உணர்வை அழித்துவிட்டவர்களில் நான் தான் முதலாவதாக இருப்பேன்.பரந்த இந்த உலகில் மிகுதியான வேற்றுமை கொண்ட இனக் குழுக்களில் ஒரு பகுதியைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்வதைவிட உண்மையில் ,மனித குலத்தில் நானும் ஓர் உறுப்பினர் என்று சொல்லிக் கொள்வதில் மிகுந்த பெருமை அடைவேன். ஆனால் மனிதனாக இருப்பது இதுவா ? மற்றவர்கள் மீது அன்பு காட்டுவதற்கு முன் நம்மைப்போல் இருப்பவர்களிடம் அன்புகாட்ட முயல்வது தானே? என் சொந்த இனத்தின் மீது அன்பு காட்டுவது தவறு என நீங்கள் நினைக்கிறீர்களா?
hang_tuah

ஹங்துவா

மாலைப்பொழுது செல்லச்செல்ல நான் அமர்ந்திருந்த நூலகத்தின் மூலைப்பகுதியில் வெறுமையும், அமைதியும் அதிகரித்தன.மயக்கந்தரும் அமைதியான அந்தச் சூழல் எனக்குள் ஆழமா , இன்னும் ஆழமாகப் பதிந்து என்னை ஆழ்ந்த சிந்தனைக்குள் வீழ்த்தியது.
நான்: “ ஒரு காலத்தில் நீங்கள் பெரிய வீரன் .ஆனால் உங்கள் வலுவான உடலில் ஓடிய வீரம் சார்ந்த குருதியைத் தவறாகப் பயன்படுத்திவிட்டீர்கள்.”
ஹங்துவா: “மலாய் மக்கள் ஒருபோதும் விசுவாசமின்மையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் “
நான்: “ஆம்! உண்மைதான்.அந்தக் காரணத்திற்காகத் தான் மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டுக் கொடிய அரசனுக்கு ஆதரவு காட்ட விரும்பினீர்கள்.”
துவா: “சங் சபூர்பாவுக்கும் டெமாங் லேபார் டானுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தால் நான் கட்டப்பட்டிருந்தேன்.”
நான்: நானும் கூட அந்த ஒப்பந்தத்தால் கட்டப்பட்டிருந்தேன். ஆனால் இன்னும் கூட என்னால் சிந்திக்க முடியும்.
துவா: ” நீ இப்போது நிகழ்காலத்தில் பேசிக்கொண்டிருக்கிறாய்.ஆனால் என்னுடைய காலத்தில் சுமார் 500 வருடங்களுக்கு முன்பு சுல்தான் மிகமிக உயர்ந்தவராகக் கருதப்பட்டார்.”
நான்: “அதனால்தான் உங்களது உயிர்த்தோழனாகிய ஜெபாட்டைக் கொல்ல விரும்பினீர்களா? ஐயோ என்ன கழிவிரக்கம்!அதனால்தான் நீங்கள் பயனற்ற பொம்மைத்தலைவனாகி நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களை இழந்தீர்கள் “.
துவா: “இல்லை! நீ வரலாற்றைத் தவறாகத் திரித்துச் சொல்கிறாய்.மலாய்க்காரர்கள் இந்தப் பூமியிலிருந்து மடியப்போவதில்லை.”
நான்: ஆம்! துவா! மலாய்க்காரர்கள் இந்தப்பூமியிலிருந்து மடியாமல் இருக்கலாம் என்று நீங்கள் சரியாகச் சொன்னீர்கள் ! ஆனால் ஐயோ! அதைத்தவிர வேறு எது அழியாது? நம்மைப் பின்தங்கியவர்களாக, தீய எண்ணம் கொண்டவர்களாக, பொறாமைக்குணம் கொண்டவர்களாக , பிரிவினையை விரும்பும் குணமுள்ளவர்களாக ஆக்கிய பண்புகளும் மனப்போக்குகளும் என்னாவது ?
மஹ்மூட் : நீ மிகவும் கடுமையாகக் குற்றம் சாட்டுகிறாய்.
நான்: அப்படியிருந்தால் மன்னிக்கவேண்டும். ஆனால் ஜெபாட் சொன்னது போல ஓர் அரசன் என்பவன் பணிய வேண்டியவன்; கொடிய அரசன் என்பவனோ பணிய மறுப்பவன்.”
நான்: அதற்கும் மேலாக உனது கவனமற்ற செயல்களால் மலாக்காப் பேரரசுக்கு இடர்தரும் கோளாறுகளைக் கொண்டுவந்தாய். உன் சொந்த மக்களின் குறைகளை நீக்குவதைவிட உன்னைத் திருப்திப்படுத்தும் உனது பதவியாசைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்தாய்.அழகிய பெண்கள் மீது தணியாத மோகமும் காமமும் கொண்டிருந்தாய். ஒருவரின் மகளாக அல்லது மனைவியாக இருக்கட்டும். அவர்கள் எல்லாரையும் நீ கையகப்படுத்தினாய்.நான் இன்னும் உன்னை மதிப்பதாக நீ நினைக்கிறாயா மஹ்மூட் ?
மஹ்மூட் : நீ மிகவும் பண்பற்றவன். உனக்கு உடனே மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும்.
நான்: ஆம்! மஹ்மூட் ! உனக்குப் பணிய மறுக்கும் எவரையும் கொடிய,இரக்கமற்ற முறையில் கொல்வதுதானே உனக்குப் புகலிடம்.என்னவென்று சொல்வது!உனது அலட்சியத்தால் தானே மலாக்கா போர்த்துகீசியர்களின் கைகளில் சிக்கியது? உடனே மலாய்க்காரர்களின் உரிமைகள் பறிபோயினவே!அவற்றை மீண்டும் பெறமுடிவில்லையே?ஐயோ! நீ எங்களை விட்டுப்போய் இன்றிலிருந்து 400 ஆண்டுகள் கழிந்துவிட்டன.ஆனால் பாதகமான விளைவுகளை உண்டாக்கிய உனது வழிமுறைகள் இன்று வரைக்கும் மேம்படுத்தப்படவேண்டியவைகளாக உள்ளனவே !
நான்: மேலும் காசிம் அஹ்மட் அவர்களின் ஆய்வேட்டைப் படிப்பதற்கு முன்பு வரை உன்னை மதித்தும் போற்றியும் இருந்திருக்கிறேன். காசிம் அஹ்மட்டின் ஆய்வேடு உனது மீத்திறத்தை அடையாளம் காட்டியது. உன் காலத்தில் நீ சிந்தனையில் மிகவும் முன்னேறியிருந்தாய் ஜெபாட்.ஆனால் நீயும் தவறு செய்வதிலிருந்து விலகவில்லை என்பதை வருத்தத்துடன் அறிந்துகொண்டேன்.
ஜெபாட் : அப்படி நான் என்ன செய்தேன்?என் நெருங்கிய சகோதரன் துவா சார்பாக உருப்படாத அவதூறுகள் பேசிய கொடிய சுல்தானை எதிர்த்து வஞ்சம் தீர்த்துக்கொள்ள முயன்றேன்.
நான்: இல்லை ஜெபாட்! உண்மையில் உனது செயல்கள் எல்லாம் நேர்மை,உன்னத நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் பிறந்திருந்தாலும் ஐயோ ! உனது மதிப்பு மிக்க செயல்கள் எல்லாம் உனது கூடா ஒழுக்கத்தால் கலப்படமாகி அசுத்தமாகிவிட்டனேவே ! வெட்கமே இல்லாமல் ஒழுக்கங்கெட்ட வாழ்வைக் கொண்ட நீ பணிப்பெண்களிடமும், அரண்மனையில் உள்ள பெண்களிடமும் வரம்புமீறி நடந்துகொண்டு அவ்விடத்தைவிட்டு வெளியேறுமுன் கோபம் கொண்டு பலரைக் கொன்றாய்.ஜெபாட்! நீ கலகக்காரனாய் இருந்தாய் . ஆனால் சுயவிருப்புடன் அரசாங்கச்செயல்களைக் குழப்பிக் கொண்டவனாய் உருவாயினாய்.நீ எண்ணெயையும் தண்ணீரையும் கலப்பதுபோல் எந்தச் செயலை முன்மாதிரியானவர் ஒருவர் வாழ்வில் செய்யக்கூடாதோ அதைச் செய்தாய்.
ஜெபாட்: ஆனால் நான் உண்மைக்காகப் பரிந்துபேசினேன்!
நான்: நீ உண்மைக்காகப் பரிந்துபேச வேறு வழிகளைத் தேர்வுசெய்து இருக்கவேண்டும். தர்மத்திற்காகப் போராடும் ஒருவர் அதர்ம வழிகளை மேற்கொள்ளலாமா ?
நான்: அப்துல்லா! உங்கள் தைரியத்தைப் பாராட்டுகிறேன்.மற்றவர்கள் அமைதியாக இருக்கும்போது நீங்கள் துணிச்சலோடு பேசினீர்கள்.நீங்கள் நெஞ்சுரத்தோடு மலாய் மக்களின் பலவீனங்களை வெளிப்படுத்தினீர்கள். ஆனால் நீங்களும் தவறிழைத்து விட்டீர்கள்.
அப்துல்லா: எனது எழுத்துக்களால் என்னை அப்படி எடைபோட வேண்டுமா?
நான்: உண்மையில் நீங்கள் மலாய்மக்ககளின் குறைகளைத் தைரியத்துடன் விமர்சித்திருந்தீர்கள். ஆனால் நீங்கள் கையாண்ட முறையினால் அதை ஏற்றுக்கொள்வது கடினமாகிவிட்டது. நம் மக்களின் பலவீனங்களைச் சுட்டிக்காட்ட எண்ணியது சரிதான்.ஆனால் உள்ளிருந்தே குறை கூறுவதற்குப் பதிலாக மலாய் மக்களைப் படிப்படியாக மேம்படுத்த முயன்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
அப்துல்லா: மலாய் இலக்கிய வளர்ச்சிக்கு எனது பங்களிப்பை நீங்கள் எல்லாம் மறந்துவிட்டீர்களா?
நான்: அதை மறக்கமாட்டேன்.குறிப்பாக நீங்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு அரிய,தொன்மையான பல இலக்கியப் பனுவல்களின் தொகுப்புகளைக் கண்டுபிடித்து அவற்றை ராபிள்ஸிடம் ஒப்படைத்தீர்கள் . ராபிள்ஸ் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்றபோது கப்பல் தீப்பிடித்துக்கொள்ளத் தாங்கள் கொடுத்த அந்தக் கையெழுத்துப்பிரதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன.உங்கள் சொந்த இன மக்களின் நன்மைகளைக் கவனிக்கத்தவறிய நீங்கள் காலனித்துவ ஆட்சியாளர்களை வழிபட்டீர்கள்.
அப்துல்லா: நான் அதைச் செய்தது தவறா?
நான்: நான் நீதிபதி அல்ல. ஆனால் உங்களது வழிமுறைகள் பரிவற்ற மதிப்பீட்டாளராக என்னை மாற்றியுள்ளன. அப்துல்லா உங்களைப் போன்ற மக்களின் மனப்போக்கை என்னால் பொறுத்துக்கொள்ள இயலாது. உங்களைப் போன்றவர்கள் மலாய்மக்களை எதற்கெடுத்தாலும் குறைகூறுவதில் எப்போதுமே சிறந்தவர்கள். ஆனால் எங்களின் ஒட்டுமொத்தப் பிரச்னைகளுக்கும் தீர்வுகாண முயற்சி செய்யமாட்டீர்கள். நானாக இருந்தால் உங்களைப்போல் பணிவுள்ள,வெறும் வேடிக்கை பார்ப்பவராக இருப்பதைவிடக் களமிறங்கி என் எதிரிகளால் தோற்கடிக்கப் படுவதையே விரும்புவேன். இக்காலத்தில் உங்களைப்போல் பலரும் இருக்கிறார்கள் அப்துல்லா. மேலும் அவர்களில் ஒருவர்கூட நிலைமையை மேம்படுத்த உதவுவதில்லை.
சாபா: வெகு சுலபமாக மனம் தளராதே. நாளை பிரகாசமான நாளாக இருக்கும் என நம்பிக்கை வை.
நான்: ஆனால் இதெல்லாம் உண்மையாக இருந்தால் நான் எப்படி நம்பிக்கை வைக்கமுடியும்?ஐயா! எனக்கு நானே பொய் சொல்லிக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறீர்களா?
சாபா: இல்லை. அதிருப்தி நிச்சயமாக ஒருவிதத்தில் நல்லதுதான். இந்த மனப்போக்கு ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும். ஆனால் வெறும் அதிருப்தியைக் காட்டுவதைவிட அறிவார்ந்த முறையில் தீர்வுகளைக் காண முயல்வது நல்லது.
நான்: ஐயா சாபா அவர்களே! உங்களின் ஆலோசனைகளை நான் மிகவும்
உயர்வாக மதிக்கிறேன்.ஆனால் நாம் இருவரும் முற்றிலும் வேறுபட்ட காலத்தில் (சூழலில்) வாழ்கிறோம்.
சாபா: பிறகென்ன ! குழந்தையே! பிரச்னைகள் ஒரேமாதிரியானவைதாம் என்பதை அறிந்துகொள்.
நான்: நான் என்ன செய்யமுடியும்?நான் வெறும் இளங்கலைமாணவன் தான்.
சாபா: பழங்காலத்திலிருந்து மலாய்மக்களைத் தொல்லைப்படுத்தும் தாழ்வுமனப்பான்மையில் நீ இன்னும் கட்டுண்டிருப்பது இரங்கத்தக்கது. உனது சொந்தத் திறமையில் உனக்குச் சிறிதும் நம்பிக்கை இல்லையா?
நான்: ஐயா! உங்களைப்போல் முதன்முதலில் பல்கலைக்கழகத்தில் அடியெடுத்துவத்த மலாய் மாணவன் நான் இல்லை. இலண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து இரண்டாம் வகுப்பில் சிறப்புத்தேர்ச்சி பெற்றுத் தேறிய முதல் மலாய்ப்பட்டதாரி நீங்கள் தான். உங்களைப்போல் மலாய்க்காரர்களின் குறைகளைப் பற்றிக் கட்டுரைகள் எழுதவில்லை. நான் தலைவன் இல்லை .நீங்கள் வித்தியாசமானவர் . உங்கு அசீஸ் தம்முடைய “ காலக்கரையில் அடிச்சுவடுகள் ” என்னும் புத்தகத்தில் தங்களின் சிறப்பைப் பாராட்டியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை நான் வெறும் இளங்கலை மாணவன். எனது சொந்த உலகில் எல்லாவற்றையும் வெறுமையாகவும் , பயனற்றதாகவும் காணும் பார்வை உடையவன்.
சாபா: குழந்தாய்! நீ தவறாகப் புரிந்துகொண்டுள்ளாய் .மலாய் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பவன் நீயே தவிர நானல்லன். நீ இந்தப் பல்கலைக் கழகத்தில் படிப்பதே கல்வி குறித்த நம் மக்களின் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நிரூபிக்கிறது அல்லது நீ எதிர்பார்ப்பதுபோல எல்லாப் பெரிய மாற்றங்களும் ஓர் இரவுக்குள் நிகழ்ந்துவிடுமா?
நான்: ஆனால் போர்த்துக்கீசியர்களின் ஆட்சிக்காலத்திலிருந்து சுதந்திரம் பெற்றது வரை மலாய்மக்கள் ஏன் முன்னேறாமல் இருந்துள்ளனர்?
சாபா: திருமறையாம் திருக்குரானின்படி அல்லாஹ் ஒன்றுமற்றதிலிருந்து பிரபஞ்சத்தை ஆறு நீண்ட காலகட்டங்களுக்குள் உருவாக்கினார்.அல்லாஹ் அவர்கள் “ஆகுக ;அப்படியே ஆகுக” என்று ஏன் சொல்லவில்லை ? கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவர் ஏன் பிரபஞ்சத்தை உருவாக்கவில்லை? ஏனென்றால் நல்ல விஷயங்கள் எல்லாம் நடைபெற நீண்ட காலம் ஆகும்.
நான்: அதற்கு எத்தனை காலம் பிடிக்கும்?நான் மலாய் இனத்தவன் .என்னுடைய இனத்தின் வரலாறு ,என் பண்பாடு , எங்கள் இலக்கியம் ,எங்கள் தத்துவம் எல்லாம் உண்மையில் பெருமைப்படத்தக்கவை “ என்று எப்போது சொல்லமுடியும்? இந்தநாள் வரை உண்மையான பதிவேடு உருவாக்கப்படவும், உலகமே பாராட்டக்கூடிய தத்துவஞானி உருவாகவும் எத்தனை காலம் ஆகும்?
சாபா: நடைபயிலக் கற்றுக்கொள்ளும் நம் மக்களின் வரலாற்றை உலக வரலாற்றில் மிக உயரிய நாகரிக வளர்ச்சியடைந்த மக்களோடு ஒப்பிடுவது போலத் தோன்றுகிறது. ஈரானியர்கள்,அரேபியர்கள் ,யூதர்கள் ,ஜப்பானியர்கள்,சீனர்கள் , இந்தியர்கள்,மேலை நாட்டவர்கள் ஆகிய இனத்தவர்கள் வரலாற்று அடிப்படையில் பொற்காலத்தைப் பெற்றுள்ளனர். இருண்ட காலத்தில் நாம் தூக்கி வீசப்படுமுன் நாமும் சிறிதுகாலம் வெளிச்சத்தில்தான் வாழ்ந்தோம்.ஆனால் நமது இருண்டகாலம் இன்னும் முடிவடையவில்லை. இந்தக் காலகட்டத்தில் ஓர் இளங்கலை மாணவனாக இருந்தும் இன்னும் நீ காலனியாதிக்கத்தின் கொள்கைகளைக் கொண்டிருப்பது வருந்துதற்குரியது.
நான்: நீங்கள் நினைப்பது போல் நான் இல்லை.ஐயா! ஆனால் ,சொந்த இன மக்களை எப்போதுமே சுரண்டத் தயாராய் இருந்த முட்டாள் அரசர்களால் நம் முன்னோர்கள் ஆளப்பட்டார்கள் என்பதை நினைத்து நான் பெருமைப்பட வேண்டுமா?வரலாற்றுத் தலைவர்களுள் யாரை நான் உண்மையிலேயே முன்மாதிரியாகக் கொள்ளமுடியும்?
சாபா: காலனித்துவ ஆட்சியாளர்கள் ஒருகாலத்தில் நமது அரசர்களை இராணுவபலத்தைக் காட்டி அடிக்கடி அச்சுறுத்தி முட்டாளாக்கியிருக்கவேண்டும் என்பதை உன்னால் பார்க்க முடியவில்லையா? பெண்டாஹரா தெபோக், டத்தோ பஹாமான் ,ராஜா சூலான், துன் பாத்திமா , துன் தேஜா எனப் பலரையும் முன் மாதிரிகளாகக் கருதமுடியாதா?
நான்: ஐயா! உண்மையானதாகவோ அல்லது உண்மையல்லாத ஒரு விஷயத்துக்காகக் கல்வியாளர்களுக்கு எதிராகச் சண்டையிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
சாபா: ஏன் கூடாது ?ஓர் இளங்கலைப்பட்டதாரியாக நீ குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சம்பவங்கள் குறித்த விருப்பு வெறுப்பற்ற நோக்குநிலையைப் பெற முயல்வது அவசியம் அல்லது காலனியாதிக்கத்தின் கொள்கைகளை ஆதரித்த டோம் பிரேஸ்,வின்ஸ்டெட், ஸ்வெட்டென்ஹாம், அலது மாக்ஸ்வெல் போன்றோர் கூறிய கூற்றுக்களை நம்பவேண்டும்.
நான்: நான் வெறும் இளங்கலை பயிலும் மாணவன்தான். நான் தலைவன் இல்லை .
சாபா: நான் உன்னை வீர புருஷனாக வேண்டும் விரும்பவில்லை .உன்னுடைய வரலாற்றைப் பற்றிப் பெருமைப்படவேண்டும் என்று நீ நம்பினாலே போதுமானது. நார்வே நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர் இஸ்பெனைத் தெரியுமா?” மக்களின் பகைவன்” என்னும் நாடகத்தில் முத்ன்மைப்பாத்திரம் “ தனியாக நிற்பவன் எவனோ அவனே இந்த உலகில் மிகச் சிறந்த பலசாலி “ எனக் கூறும்.
நான்: ஆனால் அது மிகவும் கடினமானது.
சாபா: கடந்த காலங்களில் எல்லாம் அழிந்துவிடவில்லை.நாளைப் பொழுது இன்னும் இருக்கிறது என்று நீயும் உன்னைப் போன்றவர்களும் நம்பினால் அது கடினமானதன்று.
நான்: அதனை நான் எப்படி அடைவது?
சாபா : படி; உண்மையில் அறிவுமிக்கவனாகு. நம் இனத்தின் வரலாறு , நம் பண்பாடு, நம் இலக்கியம் , நம் தத்துவம் ஆகியவற்றை மீண்டும் கண்டுபிடித்துப் புத்துயிர் பெறச்செய். அறிவின் மூலமும் ,கற்றலின் மூலமுமே மக்கள் முன்னேற முடியும்.உலகத்திற்கு மதிப்புமிக்க வகையில் பங்காற்றமுடியும்.
நான் : நான் புரிந்துகொண்டேன். நான் முயல்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். நன்றி ஐயா !
சாபா: சரி . அல்லாஹ் உன்னை ஆசீர்வதிப்பாராக.
நூலகம் மூடப்படுவதற்கு அடையாளமாக மணி ஒலித்தது.  அந்த ஓசை என் எண்ணங்களைக் கலைத்தது.என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். இரவு மணி 10.45 ஆகி விட்டிருந்தது. விரிவுரைக் குறிப்புகளையும் ,கோப்புகளையும் விரைவாக ஒழுங்குபடுத்திக்கொண்டு படிக்கட்டுகளில் ஓடியபடி இறங்கினேன். பல்கலைக்கழக வளாகப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தேன்.மனச்சோர்வும் , தனிமையும் விடைபெற்றது போன்ற உணர்வு பெற்றேன் . 175 என்ற பேருந்து சேவைக்காகக் காத்திருந்தேன். அன்று மாலைப்பொழுதில் நடந்தவை என் சிந்தனையில் மீண்டும் மீண்டும் ஓடின.இறுதியில் கடைசிப்பேருந்து வந்தது. நான் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.