'நான் கண்ட பாரதம்' – அம்புஜத்தம்மாள் சுயசரிதையிலிருந்து

அம்புஜத்தம்மாள்

சிறை சென்றவர்; காந்தியவாதி. அந்த  நாள் சென்னையின் மிக முக்கிய பிரமுகரும் கற்ற மேதையுமான ஸ்ரீனிவாச ஐயங்காரின் புதல்வி. மிகப் பணக்கார சூழலில் பிறந்து காந்தியத்தின் எளிமையாலும் சுதேச பக்தியாலும் கவரப்பட்டு காந்தியப் பணிகளில் ஈடுபட்டவர்.

 

நான் கண்ட பாரதம் (சுயசரிதம்) – எஸ். அம்புஜத்தம்மாள்

(வெளியிடுவோர்: ஶ்ரீனிவாச காந்தி நிலையம், சென்னை)

[புத்தகத்தின் சில பக்கங்களை மட்டும் இங்கு கொடுக்கிறோம்.]

அணிந்துரை
உத்தர ராம சரிதத்திலே அஸ்வமேத மகா மண்டபத்திலே லவ குசர் யாழின் இசையுடன் இராமகாதையைப் பாடுகின்றார்கள். பால்வடியும் குழந்தைகள் வாயிலிருந்து அமுதமாக ராமாயணம் பொழிகிறது.
ஶ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தன் கதையைத் தான் கேட்கிறார். உள்ளம் உருகி அரியாசனத்திலிருந்து ஒவ்வொரு படியாக இறங்கி வருகிறார். குழந்தைகள் தன்னைப் புகழ்ந்து பாடுவதிலே மனம் இரங்கி அப்படிச் செய்கிறாரா? ராமாயண காதை பூராவும் தர்மமும், தியாகமும், வீரமும், பக்தியும், அன்பும், பண்பும் கலந்து மகா காவ்யமாக அமைந்திருக்கிறது. தன் கதை என்பதையே மறந்தார், மனம் நெகிழ்ந்தார்.
சுய சரிதம் எழுதும் மனப்பக்குவம் பெற்றவர்கள் தன் வாழ்க்கை வரலாறு என்பதை மறக்கக் கூடிய வகையிலே தன்னலமற்ற பொது வாழ்க்கையில் எழுதுகிறார்கள்.
அரசியல் தலைவர்கள் பலர் தன் சுய சரிதத்தை எழுதி இருக்கிறார்கள்; எவ்வளவோ சாதனைகள் புரியலாம், அரசியல் உலகிலே பல அற்புத சாகஸங்களைச் செய்து வெற்றி அடைந்திருக்கலாம். ஒருவனை அரியாசனத்தில் ஏற்றலாம், இறக்கலாம். ஆனால் எல்லாவற்றிலிருந்தும் ஓய்வு பெறும்போது திரும்பிப் பார்த்து சுயசரிதம் எழுத எல்லோராலும் இயலாது. சுயம் சரிதம் எழுத சில சட்ட திட்டங்கள் இருக்கின்றன. பெயர்தான் சுயசரிதமே தவிர அப்பெரியவர்களுடைய வாழ்க்கை பொது நலப் பணியிலே தன்னை மறந்து உலகத்துக்கு எப்பவும் பாடுபடுவதிலே இன்பத்தைக் காணும் மனப்பாங்கு பெற்றுள்ள மிகச் சில பேர்தான் சுய சரிதம் எழுதத் தகுதி பெற்றவர்கள்.
‘நான் கண்ட பாரதம்’ என்ற அருமையான புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். பத்துப் பக்கங்கள் படித்ததுமே ஏதோ ஒரு நல்ல சுவையான நாவலைப் படிக்கிறோம் என்ற எண்ணம் உண்டாகிறது. உயர்தர நகைச்சுவை அடுக்கடுக்கான விஷயங்கள் விறுவிறுப்பு, புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போதே கதாநாயகிக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு பெருந்துன்பம் அதை ஒட்டி வாழ்க்கையிலே ஒரு திருப்பம் இவைகள் நம் கண்ணீரைப் பெருக்குகிறது.
மேலும் படிப்போம், காங்கிரஸ் சரித்திரத்தைப் பார்க்கலாம், பாரத தேசத்தின் விடுதலைப் போராட்டத்திலே எத்தகைய நெஞ்சை அள்ளும் நிகழ்ச்சிகளை காக்ஷிகளாக காண்கின்றோம், எத்தனை எத்தனையோ தியாகிகள் நீறு பூத்த நெருப்பைப் போல் வெளியுலகுக்குத் தெரியாமல் இருந்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் அறிகிறோம்.
பிரதிபலன் கோராத அன்பு உருவமான தாய் குலத்தில் தோன்றிய பத்மஶ்ரீ அம்புஜம்மாள் அவர்கள் தமிழ் நாட்டிலே உயர்தர குடும்பத்தில் பிறந்து சுயசரிதம் எழுதக்கூடிய மிகத் தகுதிவாய்ந்த பெண்மணி ஆனார். உரிய காலத்திலே புத்தக வடிவிலே எழுத்தோவியமாக ஒரு கதையைப் போல கலை குன்றாமல் எழுதி விட்டார்கள் எனப் படிக்கும்போதே பூரிப்படைகிறோம்.
பெண்களுக்குப் பிறந்த இடத்துப் பெருமை எப்பவுமே உண்டு. பத்மஶ்ரீ அம்புஜம்மாள் அதற்கு விலக்கானவர் அல்ல. தன் குடும்பத்தினர் உற்றார் உறவினர் அனைவருடைய குண நலனைப் பற்றி ஹாஸ்யமாக, சில இடங்களில் உருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். தேசீயப் போராட்டத்திலே, தன்னுடன் ஒத்துழைத்த சகோதர சகோதரிகளை மனமாரப் பாராட்டி நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.
புத்தர் பெருமான் உலகின் துன்பங்களைக் கண்டு மனம் கலங்கி முடி அரசைத் துறந்தார். தென்னாட்டிலே ஶ்ரீமான் ஶ்ரீனிவாஸ அய்யங்காருடைய ஒரே செல்லப்பெண் அம்புஜவல்லி, அலங்கார வல்லியாக இருந்து, சிறுமி தன்னுடைய பாட்டி நகைகளைக் கூட ஆசைப்பட்டுக் கேட்ட பெண், பின்னால் அன்னை கஸ்தூரிபா, காந்தியைச் சந்திக்கிறார், அன்னையின் கைகளில் இரும்பு வளையல்கள். இந்தத் தோற்றம் அம்புஜம்மாளின் மனதையே மாற்றி அணிகலன்களுக்குப் பதில் அன்பை, தேசபக்தியை, தெய்வபக்தியை, சமூகநலப்பணியை எல்லாம் சேர்த்து ஆபரணங்களாக அணிந்திருக்கிறார். இந்தப் புத்தகம் அம்மாதிரியான உயர்ந்த நோக்கங்களை நமக்குச் சொல்லத் தவறவில்லை.
இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டுச் சற்று நேரம் சிந்தித்தோமானால், மகாத்மாஜீ, கஸ்தூரிபா போன்ற ஆன்ம சக்தி உள்ள உயர்ந்தவர்கள் எத்தனை மக்களை நல்வழிப் படுத்த முடியும் என்பதையும் தெளிவாக அறிகிறோம்.
இன்று உலகிலேயே பெரிய பிரச்சினையாக இருக்கும் ‘தலைமுறை இடைவெளி’ என்று அல்லல்படும் மக்களுக்கு இப்புத்தகம் ஒரு வரப்பிரசாதம்.
அழகான தெளிந்த நீரோட்டம் போன்ற தமிழ்நடை, குழப்பமின்றி எழுதப்பட்ட விஷயக் கோர்வை.
‘நான் கண்ட பாரதம்’ ஶ்ரீனிவாஸ காந்தி நிலையத்தின் வெள்ளி விழாவிலே நமக்குக் கிடைத்த அரிய பரிசு.
வசுமதி ராமசுவாமி
17 Dr. ரங்காச்சாரி ரோடு, 
சென்னை-4

 
என் கல்வி
என் சகோதரனை ஏழாவது வயதில் பழைய கால சம்பிரதாயப்படி, தாய் வழிப்பாட்டனாருடைய சீர்வரிசைகளோடு மேள sv-ws-logo-2தாளங்களுடன், மயிலாப்பூர் பி.எஸ். ஹைஸ்கூலில் சேர்த்தார்கள். ஆனால் எனக்கு அக்ஷராப்பியாசம் (எழுத்தறிவித்தல்) கூட நடைபெறவில்லை. காரணம் முன்பெல்லாம் பெண் குழந்தைகளுக்குக் காது குத்தல், அக்ஷராப்பியாசம் செய்வித்தல் ஆகிய சடங்குகள் கிடையாது. பெண்களுக்கென்று தனிப்பள்ளிக்கூடம் இல்லாமையால், என் தாயார் என்னைப் பள்ளிக்கூடத்துக்கே அனுப்பவில்லை. அதற்குப் பதிலாக இந்திய கிறிஸ்துவ சங்கத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியையைக் கொன்டு எனக்குக் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வாத்தியாரம்மா, முதலி அரை மணி நேரம் எனக்கு பைபிள் சொல்லிக் கொடுத்து விட்டு, பிறகுதான் தமிழ், கணக்கு, ஆங்கிலம் போன்ற பாடங்களைக் கற்பிப்பார். ஆறு மாதத்திற்கு ஒரு முறை வாத்தியாரம்மா மாறி விடுவார். புது வாத்தியாரம்மா வந்ததும், பழைய வாத்தியாரம்மா கற்றுக் கொடுத்த பாடங்கள் சரியில்லை என்று கூறி, மறுபடியும் முதல் வகுப்புப் பாடப் புத்தகத்தையே சொல்லிக் கொடுக்க ஆரம்பிப்பார்.
இந்த ஆசிரியைகள் வெகு சாமர்த்தியம் உள்ளவர்கள். இயேசு கிறிஸ்துவின் ஜீவிய சரித்திரத்தை அவர்கள் வெகு உருக்கமாகச் சொல்வார்கள். கிறிஸ்துவுக்கு முள்ளாலான கிரீடத்தை அணிவித்து முள்ளாலான செங்கோலைக் கையில் கொடுத்துச் சிலுவையில் அறையக் கூட்டிப் போனதைச் சொல்லும்போது எனக்கு அழுகை வந்து விடும். உடனே வாத்தியாரம்மா, ‘பார்த்தியா பாப்பம்மா? எங்க இயேசு கிறிஸ்து மனிதர்களுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார், உங்கள் கடவுள்களில் யாராவது இப்படிக் கஷ்டப்பட்டிருக்கிறாரா?’ என்று கேட்பார்.
அந்தக் காலத்திலேயே செல்வந்தர் வீட்டுக் குழந்தைகளுக்கு வெள்ளையர்களின் சில பழக்கங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். காலில் சாக்ஸ், ஷூ இல்லாமல் நானும் என் தம்பியும் வெளியே செல்ல மாட்டோம். என் தம்பி வெல்வெட் நிஜார், சொக்காய், தொப்பி ஆகியவைகளை அணிந்துதான் வெளியே செல்வான்.
நான் சிறிய வயதில் குதிரைச் சவாரி செய்திருக்கிறேன். குதிரையின் மேல் லேடீஸ் சேணம் பூட்டி உட்கார்ந்து கொண்டு, லகானை நான் பிடித்துக் கொள்வேன்.
கடிவாளத்தைக் கோச்மேன் பிடித்துக் கொண்டு அழைத்துச் செல்வான்.
குதிரையை வேகமாக ஓட்டிச் சவாரி செய்ததில்லை. தினமும் ஒரு முறை குதிரை மேல் அமர்ந்து மயிலாப்பூர் பெரிய குளத்தைச் சுற்றி வருவேன். என் சகோதரனுக்குக் கால் சரியில்லாததால், குதிரைச்சவாரி செல்ல அவனுக்கு அனுமதி கிடையாது.

oOo

கப்பியும் பாப்பியும்
ஸ்மால் காஸ் கோர்ட்டில் ஜட்ஜாக இருந்த ஸி. ஆர். திருவேங்கடாச்சாரியின் மனைவி சீதம்மா. இவர்கள் என் தாயாரின் மூத்த சகோதரி. லக்ஷ்மி விலாசத்தின் எதிரில் சீதாவிலாஸ் என்ற பங்களாவில் வசித்து வந்தார்கள். திருவேங்கடாச்சாரியின் இளைய சகோதரன் கும்பகோணம் லட்சுமி ராகவ அய்யங்கார். இவரும் ஒரு பிரபலஸ்தர், ஜட்ஜ். அவர்களுக்கு ஆறு பெண்கள், நாலு பிள்ளைகள் இருந்தனர்.
என் தாய்க்கு அடுத்த மூத்த சகோதரி ஜெயம்மா என்பவளின் கணவர், பேங்கில் ஏஜண்டாக வேலை பார்த்து வந்தார். அவர் குடும்பத்துடன் லட்சுமி விலாசத்திலேயே இருந்தார். இவர் திருநெல்வேலி செவ்வலைச் சேர்ந்தவர். இவர் பெயர் ரங்கமணி அய்யங்கார். இவரை பாங்க் மாப்பிள்ளை என்றும் அழைப்பார்கள்.
இவருடைய பெண் கல்பகம், என்னோடு ஒத்த வயது உடையவள். இவளை “கப்பு” என்று அழைப்பார்கள். எனக்கு என்னுடைய பாட்டியின் பெயராகையால் யாரும் அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட மாட்டார்கள். அதற்குப் பதிலாக என்னை “பாப்பி” என்று அழைப்பார்கள். என்னுடைய தாய் தந்தையர் பாப்பம்மா அல்லது பாப்பு எனக் கூப்பிடுவார்கள்.
சுப்பி, பாப்பி என்ற நாங்கள் இருவரும், சிறுவயதிலிருந்தே இணை பிரியாத் தோழிகளாக இருந்தோம். என் தம்பி பார்த்தசாரதியைப் “பாச்சா” என அழைப்பார்கள்.
என் சகோதரன் பள்ளிக்குச் சென்ற பிறகு, நான் சுப்பியோடு விளையாடுவேன். எங்கள் வீட்டில் வருஷாவருஷம் நவராத்திரி விழாவை வெகு விமரிசையாகக் கொன்டாடுவார்கள். தினந்தோறும் மாலை வேளைகளில் என் தாயார் எங்களுக்கு ராமன், கிருஷ்ணன், ஆய்ச்சி வேஷங்களைப் போட்டு, வீடு வீடாக ஊர் அழைக்க அனுப்புவார்கள். என் தம்பிக்குப் பெண் வேஷமும், எனக்கு ஆண் வேஷமும் போடுவார்கள்.
எங்களுக்குப் பாட்டும், பிடிலும் கற்றுக் கொடுக்க, பாட்டு வாத்தியார் நடேசய்யர் வருவார். அவரிடம் ஜட்ஜ் சுந்தரமய்யரின் பெண், ஸர். ஸி.வி. கிருஷ்ணசாமி அய்யரின் பெண்கள் இவர்களெல்லாம் பாட்டுக் கற்றுக் கொண்டார்கள்.
எனக்கு ஜலதோஷம் வந்து விடும். வாய்ப்பாட்டும் பாட முடியாது. அதனால் நான் பிடிலும், சுப்பி வாய்ப்பாட்டும் கற்றுக் கொண்டோம்.
பாட்டு வாத்தியாருக்கு மாதச் சம்பளம் ரூபாய் இருபது, இதை எல்லாரும் அதிகம் என்பார்கள். வாத்தியாரிடம் நான் சங்கீதம் கற்றுக் கொண்டதை விட, என் தாயார் நன்றாகப் பாட்டுக் கற்றுக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், நான் சில சமயம் மறந்த அடிகளை என் தாயார் ஆரம்பித்துத் தருவார். நாங்கள் பாட்டு கற்றுக் கொள்ளும்போது, வாசற்படியின் அருகில் அம்மா ஒரு ஈஸிசேரில் அமர்ந்து எங்களைக் கவனித்துக் கொண்டிருப்பார். ஒரு போதும் அவர் எங்களைத் தனியே அமர்ந்து கற்றுக் கொள்ள அனுமதித்ததில்லை.
என் தகப்பனார் விருப்பப்படி என் தாய் ஆங்கிலமும் பியானோவும் ஓர் ஆங்கிலோ இந்திய மாதிடம் கற்றுக் கொண்டாள். என் தாய் பியானோ நன்றாக வாசிப்பாள். அவர்கள் வாசிக்கும்போது எனக்கு அழுகை வரும். ஏன்? ஏன் என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை.

oOo

ஜானம்மாவின் சோக வாழ்க்கை
என் தாயின் கடைசித் தங்கை ஜானம்மாவின் வாழ்க்கை மிக சோகமாக முடிந்து விட்டது. எழும்பூரில், திருவனந்தபுரம் திவான் ராம அய்யங்கார் என்பவரின் பிள்ளைக்கு அவள் வாழ்க்கைப்பட்டாள். இப்பொழுதும் எழும்பூரில் ‘திவான் ராம அய்யங்கார் ரோடு’ என்று இருக்கிறது.
ஜானம்மாளுக்கு வயது ஐந்து இருக்கும்போது, திவான் வீட்டிலிருந்து அவளைப் பெண் கேட்க வந்தார்கள். முதலில் என் பாட்டிக்கும் தாத்தாவுக்கும், தம் குழந்தைக்கு அவ்வளவு சிறு வயதிலேயே மணம் முடிக்க இஷ்டமில்லை. எனினும், பின்னால் அவர்கள் வார்த்தையில் மயங்கி, திருமணத்தை நடத்தி விட்டார்கள்.
ஜானம்மாவின் புக்ககம் உள்ளூரிலேயே இருந்ததால், அடிக்கடி அவளை அழைத்துப் போக ஆள் வரும். ஆனால் குழந்தை ஜானம்மா போக மறுப்பாள். அவளை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி, செவிலித் தாயுடன் புக்ககத்திற்கு அனுப்பி வைப்பார்கள். அங்கு சில நாள் தங்கி விட்டு, மறுபடியும் தன் பிறந்த வீட்டிற்கே திரும்பி வந்து விடுவாள்.
ஜானம்மா சித்திக்கும் எனக்கு ஆறு வயது வித்தியாசம். ஜானம்மாவின் கணவர் பி ஏ பி எல் படித்து மாமனாரிடமே அப்ரெண்டிஸாக இருந்தார்.
அவர் பார்ப்பதற்கு கறுப்பாகவும், பருமனாகவும் இருப்பார்.
ஜானம்மாவின் பதினாலாவது வயதில், அவள் மாமியார் வீட்டுக்குப் போய் விட்டாள். அங்கே அவள் ஒரு வருடம் கூடத் தன் கணவனுடன் வாழவில்லை. ஒரு நாள் “வெளியே போய் வருகிறேன்” எனக் கூறிப் போன கணவர், பின்னர் வீடு திரும்பவே இல்லை. அவரை எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
நான்கு மாதங்கள் கழித்து, அவர் ஓர் ஊரில் இருப்பதாகவும், கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்து விட்டதாகவும் தெரிய வந்தது. உடனே ஆள் அனுப்பி அவரைக் கூட்டி வர ஏற்பாடு செய்தார் ஸர்.வி. பாஷ்யம் அய்யங்கார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். “என் மனைவியை வேண்டுமானால் இங்கு கூட்டி வந்து விடுங்கள்!” என்று அவர் கூறினாராம். இதைக் கேட்ட என் பாட்டனாருக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. “இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்துக்கு மாறியவனுடன் என் பெண் வாழ வேண்டியதில்லை. இனி அவள் என்னுடனேயே இருக்கட்டும்.” என்று அவர் சொல்லி விட்டார்.
இது நடந்து ஆறு மாதம் கூட ஆகவில்லை. திடீரென்று ஜானம்மாவின் கணவன் இரண்டு நாள் காய்ச்சலில் இறந்து விட்டதாகச் செய்தி வந்தது. அப்போது நான் மிகவும் சிறியவள்.
என் பெரியம்மா வீட்டில் ஆறு பெண் குழந்தைகள் என்று சொன்னேன் அல்லவா? அந்த ஆறோடு ஏழாவதாக ஜானம்மா இருந்து வந்தாள். அவளுடைய வாழ்க்கையின் சோகக்கதை அவளைத் துன்புறுத்தாத வண்ணம், சீதம்மா (பெரியம்மா) அவளைப் பராமரித்து, அரவணைத்துப் பாதுகாத்து வந்தாள்.

oOo

புதிய பங்களா; புதிய வாழ்க்கை
எனக்கு நாவல் படிப்பதில் ரொம்ப ஆர்வம். நான் எப்போது பார்த்தாலும் நாற்காலியிலோ சோபாவிலோ அமர்ந்து, இராவ்பகதுர் சம்பந்த முதலியார் அவர்களின் நாடகங்களையும், பிற நாவல்களையும் படித்துக் கொண்டே இருப்பேன். இதைப் பார்த்தால் அம்மாவுக்குக் கோபம் வரும். புத்தகத்தைப் பிடுங்கி எறிந்து விடுவாள். ஆனால் என் அம்மாவுக்குத் தெரியாமல் அவற்றை நான் படித்து விடுவேன். ‘காதலர் கண்கள்’ போன்ற புத்தகங்களை நான் பலமுறை படித்திருக்கிறேன். அதன் விளைவாக நான் அடிக்கடி கற்பனை உலகத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தேன் என்றால் அது மிகையாகாது. எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு புத்தகம் போஜராஜன் சரித்திரம். அதன் அட்டைப் படத்தில் அழகான பெண் ஒருத்தி நின்று கொண்டிருப்பாள். அவள் காலடியில் போஜராஜன் மண்டியிட்டுக் கொண்டு உட்கார்ந்து இருப்பான். அதைப் பார்த்து அந்தப் பெண் கட்டியிருக்கும் சிற்றாடை போல் நாமும் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டாயிற்று. அம்மாவை எனக்கு அம்மாதிரி புளியங்கொட்டைச் சிற்றாடை வாங்கித் தரும்படிக் கேட்டேன். அந்தச் சிற்றாடையைக் கட்டிக் கொண்டால் என் காலிலும் ஒரு ராஜகுமாரன் மண்டியிட்டு வேண்டுவான் என்ற எண்ணம் போலும்!
என் மனம் இப்படியெல்லாம் ஒரு தனிக் கற்பனை உலகில் சஞ்சரித்ததற்கு, என் விவாகத்தைப் பற்றிப் பெற்றோரும் மற்றோரும் அடிக்கடிப் பேசிக் கொண்டிருந்ததை ஒரு முக்கியமான காரணம் என்று கூற வேண்டும்.
இந்தப் பருவத்தில் பெற்றோருடைய நற்போதனைகள், கட்டுக் காவல்கள், பெரியோர்களூக்கு ஆற்ற வேண்டிய பணிவிடைகள் இவையெல்லாம் பெண்களுக்கு வேம்பாகக் கசப்பது இயற்கை. வீம்பு, பிடிவாதம், சோம்பல், கோபம் இவைகள் எனக்கு அந்தக் காலத்தில் மிகுதியாக இருந்தன. இவற்றைப் போக்குவதற்காகவோ என்னவோ பெரியோர்கள் என்னை அடிக்கடி என்னை வீட்டு வேலைகள் செய்யும்படி தூண்டிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் என்னை வேண்டும் என்றே துன்புறுத்துவதாக எண்ணி, நான் ஆத்திரம் அடைவேன்.
பாட்டி, அத்தை முதலிய பெரியோர்கள் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளுக்கு, இளம் பிராயம் முதல் மாமியார் வீட்டுப் பூச்சாண்டி காட்டி பயமுறுத்துவது நமது இந்து சமூகத்தின் பழமையான பண்பாடுகளில் ஒன்றாகும்.
என் தாயார் அம்மாதிரி என்னை பயமுறுத்துவதில்லை. ஆனால் எனக்குத் திருமனம் ஆகி நான் என் மாமியார் வீட்டுக்குப் போய் விட்டால், அங்குள்ள பெரியோர்களின் சொல்லைக் கேட்டு நடக்க வேண்டும், சோம்பல் கூடாது, வீட்டு வேலைகளை ஒழுங்காகச் செய்யப் பழக வேண்டும், ஊர்வம்பு பேசக் கூடாது. கணவனோ மாமியாரோ நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு பரிவோடு பணிவிடை செய்ய வேண்டும் என்றெல்லாம் என் அன்னையார் எனக்கு அறிவுரை கூறுவார். அக்காலத்தில் பெண்களுக்குத்தான் இப்படியெல்லாம் புத்திமதிகளைக் கூறுவார்களேயன்றி, ஆண்பிள்ளைகளுக்கு நற்போதனைகள் செய்வதில் பொதுவாக அதிக கவனம் செலுத்தமாட்டார்கள். ஒழுக்க நெறிகளில் கூட பெண்களுக்குத்தான் அதிகமான கண்டிப்பும் கட்டுப்பாடும் இருந்து வந்தன.
என் தாயாரின் புத்திமதிகள் என் காதில் அப்போது ஏறுவதில்லை என்றே சொல்லலாம். ஆனால், அந்த அறிவுரைகள் வீணாகவில்லை. அவர் அன்று என் மனத்தில் விதைத்த வித்துக்கள் முளைத்து உரிய காலத்தில் பரிபக்குவம் அடைந்து, இன்று இந்த முதிர்ந்த வயதிலும் எனக்குப் பலனளித்து வருகின்றன என்பதை நான் உணர்கின்றேன்.
1910ம் வருஷம், என் தந்தையார் பல இடங்களில் தேடி அலைந்து, கடைசியில் லஸ்சர்ச் ரோடிலிருந்த ’அம்ஜத்பாக்’ என்ற பழைய பங்களாவை விலைக்கு வாங்கினார். அதன் விலை அப்போது ரூ.20,000/- பங்களா வாங்குவதற்கு முன், என் தாயாரையும், என் தம்பியையும், என்னையும் கூட்டிக் கொண்டு போய் எங்களுக்கு அந்த வீட்டைக் காண்பித்தார். பங்களாவைச் சுற்றிலும் பெரிய தோட்டம். அது புற் பூண்டுகள் நிறைந்து காடாக இருந்தது. அதில் தூங்குமூஞ்சி மரங்களும், கொடுக்காய்ப் புளி மரங்களும் நிறைந்து இருந்தன. தோட்டத்தின் முன்பக்கம் நாவல் மரம், குன்றி மணி மரம், விளாமரம், வில்வமரம் முதலியவைகளும், கோடியில் ஓர் ஆலமரமும் இருந்தன. வாசற்புறத்தில் ஒரு சந்தன மரமும், மூங்கிற் புதர்களும், சில குட்டைகளும் இருந்தன. காம்பவுண்டுச் சுவர் கிடையாது. வரிசையாய் இருந்த கொடுக்காப் புளி மரங்களோடு லந்தானா கொடி தான் வேலியாய் பின்னிக் கொண்டு இருந்தது.
நான்கு பக்கங்களிலும் விசாலமான வராண்டாவுடன், பெரிய பெரிய அறைகள் கொண்ட அரண்மனை போல் இருந்தது அந்த பங்களா. எங்களைத் தோட்டக்காரக் கிழவன் சுற்றிக் காட்டினான். தான் வளர்த்த ரோஜாச் செடியிலிருந்து சில பூக்களையும் பறித்துக் கொடுத்தான்.
வீடு திரும்பியதும், “உங்களுக்கு இந்த பங்களா பிடித்திருக்கிறதா?” என்று கேட்டார் என் தந்தை. எங்களுக்குச் சொல்லவா வேண்டும்? ஒரே சந்தோஷம்! குழந்தைகள் நாங்கள் இருவரும் ஒரே குரலாக “பிடித்திருக்கிறது. வாங்கி விடலாம்!” என்றோம். ஆனால் என் தாயாருக்குத் திருப்தி இல்லை. காரணம், அந்த பங்களா பல இடங்களில் இடிந்தும் பாழடைந்தும் காணப்பட்டது. குசினி என்ற சமையல் அறை தூரத்தில் இருக்கிறது என்றும், பங்களா தனக்குப் பிடிக்கவில்லை என்றும் என் அன்னை கூறிவிட்டார். ஆனால் என் தந்தை விடவில்லை. “சமையலுக்குத் தனியாக நம் விருப்பம் போல் மாற்றிக் கட்டிக் கொள்ளலாம்” என சமாதானம் கூறி, அம்மாவை அவர் சம்மதிக்க வைத்து விட்டார்.
இதுபோல்தான் எப்போதும் நடக்கும். அப்பா அம்மாவை வெறும் அபிப்பிராயம் கேட்பாரே தவிர, முடிவில் செயல்படுவது தன்னிஷ்டம் போல் தான். என் அம்மாவும் பெரும்பாலும் அப்பாவுக்கு விட்டுக் கொடுத்து அனுசரித்தே போவார்.
“அம்ஜத்பாக்” பங்களாவை வாங்கி, குசினியை மாட்டுக் கொட்டிலாக்கி, சமையல் அறை தனியாகக் கட்ட ஏற்பாடு செய்திருந்தார் என் தந்தை.
வருடாந்தர சாமான் வாங்கும் சமயம் வந்தது. அம்மா வருஷத் தேவைக்குமேல் அதிகமாகப் பருப்பு வாங்கினாள். அத்துடன் இரண்டு பரிசாரகர்கள் வந்து வத்தல், வடாம், அப்பளம் முதலிய பண்டங்களை நிறையத் தயாரிக்கத் தொடங்கினார்கள். பகல் நேரங்களில் என் தாயாரின் சிநேகிதிகள் ஒன்றுகூடி, அம்மாவொடு சேர்ந்து அப்பளம் இட்டார்கள். என்னையும் இடச் சொன்னார்கள். இம்மாதிரியான வேலைகள் தடபுடலாக ஒரு மாதகாலம் நடைபெற்றன. இதெல்லாம் எதற்கு என்று எனக்குப் புரியவில்லை. பிறகு ஒருநாள் என் அம்மாவின் சினேகிதி “அம்புஜவல்லி சம்ர்த்து! தன் கல்யாணத்துக்குத் தானே அப்பளம் இடுகிறது!” என்று கூறியபோதுதான், இவையெல்லாம் என் விவாகத்தை முன்னிட்டுச் செய்யப்படுகின்றன என்பதை நான் புரிந்து கொண்டேன்.
ஒருநாள் என் தகப்பனாரும் தாயாரும் என்னை அருகில் அழைத்து, “உனக்காக ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கிறோம். பி.ஏ. படித்து இருக்கிறான். படிப்பில் நல்ல கெட்டிக்காரன். நல்ல மார்க்குகள் வாங்கியிருக்கிறான். பார்ப்பதற்கு லக்ஷணமாக இருக்கிறான். அவனை நீ பார்க்க வேண்டுமா?” என்று கேட்டார்கள்.
எனக்கு அப்போது வயது பன்னிரண்டு. சிறியவளாக இருக்கும் போது, “நான் டாக்டருக்குப் படிக்கப் போகிறேன் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போவதில்லை” என்று சொல்வேனாம். பெரியவர்கள் ரொம்பக் கட்டாயப் படுத்தினால், “படித்த மாப்பிள்ளையாக இருந்தால் பண்ணிக் கொள்கிறேன்!” என்பேனாம். அந்தக் கற்பனை உலகத்தில் உலாவி வந்த அம்புஜவல்லி வேறு; இப்பொழுது தாய் தந்தையர் முன் நிற்கின்ற அம்புஜவல்லி வேறு அல்லவா? பெற்றோர் இப்படிக் கேட்டவுடன், இயற்கையான சங்கோசத்துடன் சற்று நேரம் தயங்கியபின், “நீங்கள் பார்த்தாலே போதும்!” என்று நான் கூறிவிட்டேன்.

oOo

பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ அளிக்கப்படும் ஏட்டுப் படிப்பைத் தவிர, அறிவு முதிர்ச்சிக்கான எந்த வித அனுபவமோ, கேள்வி ஞானமோ இல்லாமல் வாழ்கிறார்கள் இக்காலத்துப் பெண்கள்.
ஆனால் அக்காலத்தில் பெண்களுக்குக் கல்வியறிவு குறைவாக இருந்தாலும் கேள்வி ஞானமும் அனுபவ அறிவும் நிரம்ப இருந்தன. அவற்றை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமையினால், அவர்களின் சிறப்பியல்புகள் நீறு பூத்த நெருப்பைப் போல் மறைந்து இருந்தன. ஆகையினால், மேல்நாட்டுப் பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்தியப் பெண்கள் மிகவும் பின் தங்கியவர்கள் போல் காணப்பட்டார்கள். எனினும், சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் தோற்றுவிக்கப்படுகின்ற நெருக்கடியான காலங்களில், அவர்கள் மிகப் பெரும் பொறுப்புக்களையும் ஏற்றுத் தக்க முறையில் செயலாற்றக் கூடிய ஆற்றலும், அறிவும் படைத்தவர்கள் என்பதற்கு, பாரத நாட்டின் சரித்திரம் சான்று கூறுகிறது.
சமூக வாழ்க்கையும், கல்வி அறிவும் ஒருவருடைய மனக் கதவுகளை திறக்கும் திறவு கோல்கள் என்று சொல்லலாம். அனுபவ ஞானமே அறிவுச் சுடரைத் தூண்டி விடும் தூண்டுகோல் எனலாம். எனினும் ஜன்ம சித்தமாக இல்லாத ஒன்றை கல்வி அறிவோ அனுபவ ஞானமோ கொடுக்க முடியாது.
பரம்பரையாக வந்த பழமைப் பண்பாடும், பூர்வ வாசனைகளுமே ஒருவருடைய வாழ்க்கைப் பாதையை நிர்ணயிப்பதற்குக் காரணமாகின்றன. குணநலன்கள் கல்வி அறிவாலோ, அனுபவங்களினாலோ கிடைக்கக் கூடியவை அல்ல.அவை ஜன்மாந்திர சுகிருதத்தினால் மட்டுமே கிடைக்கக் கூடியவை. என்னைப் பொறுத்த வரையில், எங்கள் ரிக்ரியேஷன் கிளப்பின் வாயிலாக எனக்கு ஏற்பட்ட புதிய தொடர்புகளும் அனுபவங்களுமே, பிற்காலத்தில் நான் என் வாழ்க்கையை சமூக நலப்பணிகளுக்கு அர்ப்பணித்து விடும் அளவிற்கான ஒரு மனோபக்குவத்தை, என்னிடத்தே தோற்றுவித்தன என்று கூற வேண்டும்.
இதற்கிடையில், கும்பகோணத்தில் நோய்வாப்பட்டிருந்த என் மாமியார் காலமானார் என்ற செய்தி, எங்களுக்குத் தெரிய வந்தது. என் கணவர் பி.ஏ.பி.எல். பாஸ் செய்துவிட்டு என் தந்தையாரிடமே அப்ரண்டிஸாக இருந்து வந்தார்.
என் விவாஹத்துக்குப் பிறகு, நான் என் மாமியார் வீட்டுக்குப் போனதே கிடையாது. என் கணவருக்கு உடன் பிறந்த சகோதரர்கள் மூவர். ஆனால் சகோதரி ஒருவர் கூடக் கிடையாது என்பது, என் விவாஹத்தின்போது நான் அறிந்த விஷயம்தான். அதன்பிறகு அவர் குடும்பத்தின் விஷயங்கள் ஒன்றுமே எனக்குத் தெரியாது.
என் கணவர் எங்கள் வீட்டிலேயே தங்கி விட்டதால் அவர் குடும்பத்துக்கும் எங்களுக்கும் போக்குவரத்து இல்லாமலே போய் விட்டது.
நான் கேள்விப்பட்ட அளவில் என் மாமனாருக்கு என் பெற்றோர் மீது கோபம் என்று தெரிந்தது. வரதட்சணை இல்லாது விவாஹம் செய்தது, நான் பெரியவள் ஆனதற்கு முறைப்படி சோபனம் சொல்லாதது, இவ்விரண்டுமே அதற்குக் காரணங்கள். மேலும் என் தந்தையாரின் கண்டிப்பான சுபாவமானது, அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவை வலுப்படுத்துவதற்கு உதவி புரிவதாய் அமையவில்லை.
பெண் கொடுத்த சம்பந்தி என்ற முறையில், என் தந்தையார் அவர்களுக்கு மரியாதை செலுத்தி, அடிக்கடி கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளவில்லையென்பதில் அவர்களுக்கு ஒரு பெரிய கோபம். இம்மாதிரியான பல காரணங்களினால் என் மாமனாரும் மாமியாரும் என்னைத் தங்கள் வீட்டுக்கு அழைக்க வேண்டும் என்றோ மருமகளாகிய என்னைப் பார்க்க வேண்டும் என்றோ விரும்பாமலே இருந்து விட்டனர்.
என் தலைத்தீபாவளிக்குப் பிறகு, என் மாமியார் வீட்டாரை நான் சந்தித்ததே கிடையாது. மாமியார் இறந்துவிட்ட செய்தி கேட்டதும், என் கணவருடன் நானும் கும்பகோணம் போகப் புறப்பட்டேன். ஆனால் என் தந்தையார் என்னை அங்கே அனுப்ப இஷ்டப்படவில்லை. ஆனாலும், என் வற்புறுத்தலுக்காக அவர் என்னை அனுப்ப இசைந்தார்.
எனக்குத் துணையாக சீமா சித்தி என்ற சிறிய பாட்டியை என்கூட அனுப்பி வைத்தார் என் தாயார். கும்பகோணத்தை அடைந்ததும் என் கணவர் நேராக தன் வீட்டுக்குப் போய்விட்டார். நானும் சித்திப்பாட்டியும் ரெட்டியார் குளத்தெருவிலுள்ள என் சிறிய தாயார் கல்யாணி அம்மாள் வீட்டிற்குப் போய் சேர்ந்தோம்.
அன்று பிற்பகல் நான் வாசல் திண்ணையில் உட்கார்ந்து இருந்தேன். அது சமயம் ஒரு பாட்டியம்மாள் குடுகுடு என்று உள்ளே வந்து என்னைப் பார்த்து “ஏண்டி அம்மா? நீ தானா தேசிகன் ஆம்படையாள்? பட்டணத்துப் பெண்ணா? இப்பத்தான் வழி தெரிஞ்சுதா உன் மாமியார் வீட்டுக்கு வர? நான்கு வருஷமா உன் மாமியார் படுத்த படுக்கையா இருந்தா; வந்து பார்த்தியா?” என்று கேட்டார்.
நான் திடுக்கிட்டுப் போனேன். எனக்குக் கோபமும் அழுகையுமாக வந்தது. அதற்குள் என் சித்தி, “அதையேன் போய் கேட்கிறே அது சிறுசு அதற்கென்ன தெரியும்? இவா கூப்பிட்டாத்தானே அவள் வருவதற்கு? இதை யார் நீ கேட்பதற்கு?” என்று கூறினாள்.
“ஆமாண்டியம்மா! தெரியாதவளுக்கு ஏதாவது நல்லதைச் சொல்ல வந்தா, பொல்லாப்புப் பட்டம்தான்!” என்று கோபித்துக் கொண்டு திரும்பிப் போய் விட்டாள் அந்தப் பாட்டி.
நான் சித்தியைப் பார்த்து, “என்ன அழகு உன்னுடைய ஊர்? முன்பின் தெரியாத ஒருவர் இப்படி என்னை வம்புச் சண்டைக்கு இழுக்கிறார் என்றால், தெரிந்தவளாயிருந்தால் எவ்வளவு சண்டை போடுவார்களோ! இந்த ஊரே சண்டைக்கார ஊராக இருக்கும் போலிருக்கே?” என்று கேட்டேன்.
அது முதற்கொண்டு கும்பகோணத்தார் என்றால் எனக்கு ஒரு வித பயத்தோடு கூட வெறுப்பும் ஏற்பட்டு விட்டது.
மாமியாரின் ஈமக்கடன்கள் பத்து நாட்கள் நடந்தன. ஒவ்வொரு நாளும் காலை பத்து மணிக்கு என் சின்னப் பாட்டி என்னை ஒரு மாட்டு வண்டியில் என் கணவர் வீட்டிற்கு அழைத்துப் போய், மாலையில் திரும்பவும் சித்தி வீட்டிற்கு அழைத்து வருவார்கள்.
காரிலோ, குதிரை வண்டியிலோ, மாட்டு வண்டியிலோ நாங்கள் போனால், கூட ஒரு பெண்ணும் ஆணும் துணைக்குக் கூட்டிச் செல்வது எங்கள் குடும்ப வழக்கம்.
என்னை முதல் தடவையாக என் மாமியார் வீட்டில் கொண்டு வந்து விட்டபோது, வாசலில் இருந்த என் மாமனார் “இவள் ஏன் இப்ப வந்தாள்?” என்று கேட்டாராம்.
மருமகள் முதன் முதலில் ஒரு சுப காரியத்துக்காக வராமல் துக்க காரியத்துக்காக வருகிறாளே என்று அவர் எண்ணினாரோ என்னவோ தெரியவில்லை.
என்னுடைய மூத்த ஓர்ப்படியார்கள் தான் எல்லா வீட்டுக் காரியங்களையும் செய்து கொண்டிருந்தார்கள். பரிசாரகன் கிடையாது. துரு துரு என்று அவர்கள் ஓடி ஆடி வேலை செய்வதை நான் என் மனதிற்குள்ளேயே பாராட்டினேன். ஆனால், அவர்களுடைய வைதிக ஆசாரங்களும் பழக்க வழக்கங்களும் எனக்கு முற்றிலும் புதியவையாக இருந்தன. ஆகவே அவைகள் எனக்குப் பிடிக்கவில்லை.
சென்னையில் அம்ஜத்பாக் வீட்டு நிலைமைக்கும், கும்பகோணம் ஐய்யங்கார் தெரு வீட்டு நிலைமைக்கும் எவ்வளவு தாரதம்யம்! கும்பகோணம் ஒரு தனி உலகம் என்றே எனக்கு அப்போது தோன்றியது.
பத்தாம் நாள், பத்துக் கொட்டும் சமயம் – குடும்பப் பெண்கள் அனைவரும் வீதியில் – புழுதி மண்ணில் விழுந்து புரண்டு, மார்பில் அடித்துக் கொண்டு அழலானார்கள். என்னையும் அவ்வாறு செய்யச் சொன்னார் ஒரு மூதாட்டி. ஆனால், எனக்கு அவர்களைப் போல் விழவும் தெரியவில்லை, அழவும் தெரியவில்லை! என்னைப் பார்த்து “ஏண்டி தூண் போல் நிக்கறே?” என்று ஏசினார்கள். நான் என்ன செய்வது?
என் தாத்தா இறந்த போது கூட, லேடி பாஷ்யம் அய்யங்கார் இம்மாதிரி எல்லாம் செய்யவில்லையே? அப்போது அவர் மௌனமாகக் கண்ணீர் வடித்துக் கொண்டு நின்றிருந்தார். நான் அதுகூடச் செய்யவில்லை வெறுமே நின்று கொண்டிருந்தேன்.
எல்ல்லோரும் காவேரிக்குப் போய் ஸ்நானம் செய்து ஈரப்புடவையுடன் வீடு திரும்பினோம். எனக்கு ஆற்றில் இறங்கப் பயம். மேலும் இம்மாதிரி வெட்ட வெளிகளில் எனக்குக் குளித்துப் பழக்கமில்லை. குளிக்கவும் தெரியாது. எப்படியோ பக்கத்திலிருந்த பெண்கள் என்னைப் பிடித்துக் கொண்டு முழுக்காட்டி விட்டார்கள். ஈரத்துணியோடு வீட்டிற்கு வந்த எனக்கு, அன்று இரவு குளிர் ஜுரம் வந்து விட்டது.
நல்லவேளையாக, ஜுரம் அவ்வளவு கடுமையாக இல்லை. எனவே மூன்றாம் நாள் நான் பட்டிணம் வந்து சேர்ந்தேன். இதுதான் நான் என் மாமியார் வீட்டிற்குப் போன முதல் தடவையும் கடைசித் தடவையுமாகும்.
நான் கும்பகோணம் போய் வந்த பிறகு தான், என் மாமியார் வீட்டுச் சூழ்நிலையும், என் கணவர் தம் இளமைப் பருவத்தில் இருந்த நிலையும் எனக்கு ஒருவாறு புரிந்தது.
என் மாமியார் வீட்டார் சாதாரண வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பழைய பழக்க வழக்கங்களில் நம்பிக்கை கொண்டவர்கள். அவ்வளவாக பரந்த நோக்கம் இல்லாதவர்கள். ஸ்திரீகளைத் தாழ்வாக நினைப்பவர்கள். அவர்கள் நன்கு படித்த புத்திசாலிகளேயானாலும், கர்வம் மிக்கவர்கள்.
இவையெல்லாம், அவர்களுடன் பத்து நாள் தங்கியிருந்தபோது, அவர்களுடைய பேச்சுக்களிலிருந்தும் பழக்க வழக்கங்களிலிருந்தும் நான் புரிந்து கொண்ட விஷயங்கள். இதனால், பொதுவாகவே கும்பகோண வாசிகள் என்றாலே எனக்குப் பிடிக்காமல் போய் விட்டது. அவர்களை நான் வெறுக்கலானேன் என்று கூடச் சொல்லலாம். என் பாட்டி தாத்தாக்களான லேடி பாஷ்யம் அய்யங்காரும் மதுரை சேஷாத்ரி அய்யங்காரும் கூட மிகவும் ஆசார சீலர்கள்தான், ஆனால், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் இவ்வ்வலவு கொடுமையானதாக இருந்ததில்லை.
எங்கள் குடும்பத்தினரிடத்தே பரந்த மனப்பான்மை இருந்தது. அதோடு பெண்களைத் தாழ்வாக நினைக்கும் பழக்கமும் அவர்களிடம் கிடையாது. கல்விச் செருக்கும் அவர்களிடம் காணப்பட்டதில்லை. சென்னை வந்த சில தினங்களுக்கெல்லாம், என் தந்தையாருக்கும் அவர் மாப்பிள்ளைக்கும் ஒரு சிறு பூசல் ஏற்பட்டது. முதலில் அதன் காரணம் எனக்கு விளங்கவில்லை. என் தாயார் சொன்ன பிறகுதான் நான் அதைத் தெரிந்து கொண்டேன்.
இந்தப் பூசலுக்குக் காரணம்: என் கணவருக்கு அவர் தகப்பனாரிடமிருந்து வந்த ஒரு கடிதம்தான். அதில் அவர், “நீ ஒரு பணக்கார வக்கீலின் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறாய். உனக்கு மாதா மாதம் கைச் செலவுக்கு வேண்டிய பணத்தை இனிமேல் உன் மாமனாரிடமே கேட்டு வாங்கிக் கொள். நான் அனுப்ப முடியாது!” என எழுதியிருந்தாராம்.
என் கணவர் இந்த விவரத்தை வெளியே சொல்ல முடியாமல், யாரிடமும் பேசாமல் கோபமாக இருந்தார்.
இதைக் குமாஸ்தா மூலம் அறிந்த என் தகப்பனாருக்கு, தன் சம்பந்தி மீது கோபம் வந்து விட்டது. அவரைப் பணத்தாசை பிடித்தவர் என்று திட்டினார். ஆனால் தன் மாப்பிள்ளை மீது அவர் கோபப்படவில்லை. “சகஜமாய் நீ ஏன் என்னைக் கேட்டிருக்கக் கூடாது?” என்று அவர் மாப்பிள்ளையை நோக்கிக் கேட்டார்.
பிறகு என் தாயார் சிபாரிசின் பேரில் என் கணவருக்கு நூறு ரூபாய் கொடுக்க ஏற்பாடாயிற்று. இந்தச் சிறு விஷயம் என் மனதில் ஒரு தேவையற்ற கல்மிஷத்தை ஏற்படுத்தி விட்டது. அதாவது, என் கணவர் என்னை என் பணத்திற்காகத்தான் மணந்து கொண்டாரோ என்று நான் ஐயுறலானேன்.

oOo

0 Replies to “'நான் கண்ட பாரதம்' – அம்புஜத்தம்மாள் சுயசரிதையிலிருந்து”

  1. அவரின் வீட்டை, அவரின் வாழ்க்கையைத் தாண்டி பார்வை செல்லவே இல்லையே .
    அல்லது பாரதத்தை அவர் கண்ட பக்கங்கள் இங்கே பகிரப் பட வில்லையா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.