சீமைக் காரைச் சாலை

Village_Road_Telugu_Andhra_India_Empty_TN_TamilNadu

“அது என்ன எளவுல?படம் கிடம் எடுக்கானுவளா? மயிறு மாதி கெடக்கத் தெருவ கோட்டிக்காரப்பயலுவ என்ன நோண்டிக்கிட்டு நிக்கானுவ?” நீண்டு கிடந்த, சாணி மொழுகிய வெளிப்புறத் திண்ணையில் அமர்ந்து,பல்குத்திக்கொண்டு நின்றிருந்த காளிமுத்துவிடம் வினவினார் கோளவடியார். எதிர்ப்புற சின்னமணி வீட்டிலிருந்து ஒரு சீரற்ற காட்டாற்றுத் தடம் போல் கருந்திட்டாய் கொசுமொய்த்து நெளிந்துகொண்டிருந்தது சாக்கடை. மூன்று நான்கு இடங்களில் இதைப்போல் தெருவின் குறுக்காகப் பாய்ந்து கொண்டிருந்த சாக்கடைக் கோடுகளுக்கிடையில் அந்த ஊரின் அனைத்து தலைமுறையினரின் கால்தடம் தின்று சித்திரை வெயிலில் தணியாமல் கிடந்தது சுடுபுழுதி.
“பொண்டாட்டிய ஓளியான் சின்னமணி ஆட்டப்பத்திட்டுப் போனான் தாய்ளி தெருலாம் புளுக்கையா கெடக்கு”என்று தரையில் விரித்திருந்த துண்டை எடுத்துக் காலில் ஊறிப்போயிருந்த புண்ணை மொய்த்துக் கொண்டிருந்த ஈக்களை விலக்கினார். அதற்குள் சத்தம் கேட்டு சின்னமணியின் மனைவி தெருவிற்கு வந்து கண்ணை இடுக்கி முழுக்கால்சட்டை அணிந்து தூரத்தில் நின்றிருந்த மூவரை நோக்கியவாறே”ஆடு தெருவுலதானயா புளுக்கப் போட்டுருக்கு. ஒம்ம வீட்டுக்குள வந்து போட்டமாதி துள்ளுதியரு.”
“ஆமா, சீமையில இல்லாத ஆடு வளக்கா. ஒன்னமாதிதான ரத்தினமும் ஆடு வளக்கான் அவென் எவ்ள நேக்கா தொழுவுக்கிளயே புளுக்கப் போடவச்சி பத்திட்டு போறான்.வந்திட்டா வரிஞ்சி கெட்டிக்கிட்டு.”
“ஒமக்கு நல்லா வாயி கொழுத்துப் போச்சிய்யா. கெளவி ரெண்டு நேரம் பொங்கி தட்டுனா பெறவு நீரு சும்மாவா கெடப்பியரு,”என்றவள் சற்றுத் தூரத்தில் பீடி சுற்றிக்கொண்டிருந்த மூவர் குழுமத்தை நோக்கி சென்றாள்.
“இன்னக்கி என்ன எளவோ தெரியல தெருவே அலூசமாத்தான் தெரியுதுடே. எல காளி என்ன மயித்த பாத்துக்கிட்டு நிக்க. அவனுவள கூப்புடுல என்னனு கேப்பம்.”
கிழக்கு மூலையிலிருந்து செவலைக்கலர் வேட்டை நாயொன்று வாலைச்சுருட்டி குரைத்துக்கொண்டே வந்து கோளவடியாரின் “ச்சை பொசகெட்டுப்போயி அலையிதியோ” என்ற சொல்லில் அடங்கி அவரின் காலைச்சுற்றி வந்து வாலை ஆட்டிக்கொண்டே புண்ணை நக்கத்தொடங்கியது.வலிப்பதுபோல் சுகமாய் இருந்தது அவருக்கு.
மூவரில் கண்ணாடி போட்டிருந்த கருத்த நடுத்தர வயதுக்காரர் காளிமுத்துவோடு வந்தார்.”என்ன பெரியாளு ஊருல ஆம்பளய ஒச்சயே காணோம்.”
“அது இருக்கட்டும்டே. நீங்க யாரு?என்ன பண்ணிக்கிட்டு கெடக்கிய? ஆம்பளய என்ன வேல சோலிக்கி போவாம பொண்டாட்டிய முந்தாணைக்கிளய கெடப்பானுவ?”
“அடேயப்பா ரெத்தம் இன்னும் சூடாதான் இருக்கு பெரியாளுக்கு. எத்தின நாளக்கித்தான் இந்தச் சாக்டைக்கிள கெடப்பியரும்.அதான் ரோடு போட அளவெடுக்க வந்துருக்கோம்.”
“ஏ பராவால்லிய நம்ம கடலு பயலுக்கு ஓட்டுப்போட்டதுக்கு உருப்படியான வேலயப் பாக்கான். பாத்தியால காளி.செரியா ஒங்க சோலிய பாருங்க,” என்றவர் துண்டை விரித்துத் திண்ணையில் படுத்துக்கொண்டார்.அந்த நாயும் அவர் கால்மாட்டில் சுருண்டுகொள்ள, காளிமுத்து வயற்காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
ஒருபுறம் சற்று மேடாகவும்,மறுபுறம் தாழ்ந்தும் கிடந்த அந்தக் கீழமேல் சாலையின் அளவுகளைக் குறிக்கத்தொடங்கினர்.வடபுற வரிசையில் உள்ள ஏழுவீடுகளில் கோளவடியாரின் வீடும்,தென்புறமுள்ள ஒன்பது வீடுகளில் சின்னமணி வீடும் நடுவில் இருந்தன.சின்னமணி வீட்டிற்கு அடுத்தாற்போல் வடக்குப் பார்த்த அம்மன் கோவில்.கோவிலுக்கு எதிரிலுள்ள காலி இடத்தில் சீமைக்கருவேலமரம் மண்டிக் கிடக்க அந்தப் பகுதியில் நூல் கட்டி அளந்து கொண்டிருந்தனர்.பெரியவர் படுத்திருந்த திண்ணையின் பாதிப்பகுதி தெருவில் வந்தது.அவர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.
“என்ன பெரியாளு ஒம்ம திண்ண பாதித் தெருவுக்கிளலா வருது,”என்ற குரல் தெளிவில்லாமல் காதில் விழ சத்தத்தில் எழும்பினார்.
“என்னய்யா சொன்னிய?”
“ஒம்ம தெரணை பாதித் தெருவுக்கிள வருது அதான் சொன்னேன்”
“நல்ல கதயா இருக்குடே.எங்க அய்யா இந்த வீடு வைக்கதுக்கு வெங்கடாம்பட்டி பரும்புக் காட்டுலருந்து மண்ணு செமந்தவரு.இப்ப வந்துப்புட்டு தெருவுக்குள வருது மயித்துக்கிள வருதின்னுட்டு.கெடக்க எடத்துல ரோட்ட போட்டுட்டு போவேண்டியதானடே.”
“இப்ப கெடக்க எடத்துல ரோடு போட்டா ஒம்ம வீட்டுக்கிட்ட மட்டும் சூப்பிவுட்ட பனம்பழமாதி இருக்கும்.அதும்போவ அதுக்கு அப்புருவல் நீரு வாங்கித்தருவியரா?வேணும்னா கிராம்ச கூட்டியாந்து நீரு அளந்துக்கிடும்.இன்னும் ரெண்டு நாள்ல வேல தொடங்கிரும் பாத்துக்கிடும்,” என்றவர் அவரின் பதிலுக்கு எதிர்பாராமல் நூலை அடுத்த வீட்டு சுவற்றையொட்டி கட்டத் தொடங்கினார்.காலுக்குள்ளே சுருண்டு கொண்டது அவர் நிழல்.ஒருவழியாக அளவு எடுத்து முடிய பீடி சுற்றிக்கொண்டிருந்த பெண்களிடம் நீர் வாங்கிக் குடித்துவிட்டு கிளம்பிவிட்டனர்.கிளம்பும்முன் பக்கத்து பெத்தட்டி வீட்டு திரணையும் தெருவில்தான் வருகிறது என்று அவர்கள் கூறியதில் கோளவடியாரின் சந்தோசம் திரும்பியிருந்தது.
அன்று இரவு கோளவடியாரைச் சுற்றி நான்கைந்து பேர் அமர்ந்து சாலை போடுவதைப்பற்றிப் பேசத்தொடங்கினர்.இரண்டு சாக்கடைகளுக்கிடையிலுள்ள மண்ணில் கபடி விளையாடிக்கொண்டிருந்தனர் சிறுவர்கள்.மறுபுறம் பெண்குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து ஏதோ விளையாடிக்கொண்டிருந்தனர்.அம்மன் கோவில் விளக்குக் காற்றில் அணைவதுபோல் பம்மாத்து காட்டிக்கொண்டிருந்தது.பெண்கள் சிலர் பீடி சுற்றிக்கொண்டிருக்க,குடித்துவிட்டு வந்து ஊரைத்திட்டிக்கொண்டிருந்த பரமசிவம் அப்போது கோளவடியாரிடம் நெருங்கினான்.
“எலே கோளவடி.நீ என்ன பெரிய இவனோடே.ரோடு போடுதவங்கட்ட சண்டைக்கி போனியாம்லா.”
“எல ஒன் வயசென்ன அவரு வயசென்ன ஏலங்க அவரப்பாத்து,”என்ற காளிமுத்துவை, “நீ என்ன அவருக்கு ஒத்தால.என் சித்தப்பன நா எப்பிடி வேணும்னாலும் கூப்புடுவேன் ஒனக்கு எங்கல வலிக்கி”.
“சரிதாம்பா என்னணியும் கூப்புட்டுத்தொலை.”
“எல நம்ம தெரணைய இடிப்பேம்னு சொல்லுதானுவ, என்ன செய்ய இப்ப அத சொல்லு.”
“ஆமா பெரிய தெரணக் கெட்டி வச்சிருக்கான் மயிராண்டி.அவனவன் ரோடு போட வரமாட்டுக்கானேனு கெடக்கானுவ கெளட்டுக்கூதி ஒனக்குத் தெரணை கேக்குதாங்கும்.”
“கழுதைக்குத் தெரியுமால கரும்பு ருசி.”
“மயிலப்புரத்துல போயி பாரு ரோடு எப்பிடி போட்டுருக்கானுவன்னு.நீ மயிரு இந்தத் திரணை இதவிட்டா கீழக்கடைக்காரன் திரணை.வேற என்ன தெரியும் ஒனக்கு?.பிள்ளகுட்டி இருந்தாலாது கல்யாணம் காச்சினு நாலு எடத்துக்குப் போவ.அந்தக்கடனும் இல்ல.”
ஆழ்ந்த மௌனம் எல்லோரிடத்தும்.பரவலாகக் குழந்தைகளின் குரல்மட்டும் கேட்டுக்கொண்டிருக்க விருட்டென்று எழும்பி வீட்டுக்குள் சென்றுவிட்டார்.வாசலில் படுத்துக்கிடந்த நாய் எழும்பி வால் குழைத்து ஆட்டி மீண்டும் படுத்துக்கொண்டது.
“எல கொஞ்சமாது அறிவு இருக்கால.யாருக்குமே கேடு நெனக்காத மனுசனப்போயி இப்பிடி சொல்லிட்டியே.”
“நான் எப்பவும் போல வெளாட்டுக்குதான சொன்னேன்.சித்தப்பன் பொசுக்குன்னு கோவப்பட்டுட்டான்.அதான் நா இருக்கம்லாயா பெறவு என்ன வெசனம்,”என்றவன் வீட்டுக்குள் நுழையும் முன் அவன் தள்ளாடி வருவதைக் கண்ட நாய் உள்ளேவிடாமல் குரைத்தது. “சனியன ஒன்னக்கொல்லுதன் பாரு மொதல்ல,” என்றவன் அப்படியே திரணையில் சரிந்து விழுந்தான்.சிறிது நேரம் குரைத்துவிட்டு அவனருகிலேயே நாய் படுத்துக்கொண்டது.
அடுத்த நாள் அதிகாலையில் குளத்திற்குச் சென்றுவந்து வழக்கம்போல அமர்ந்து தண்ணீர் பிடிக்கும் பெண்களைக் கிண்டலடிக்கத் தொடங்கினார் கோளவடியார்.
சைக்கிளை உருட்டிக்கொண்டே வந்த பரமசிவம் ”என்னடே ராத்திரி பெரிய வெசனத்துல பேட்ட.சும்மா வெளாட்டுக்கு சொன்னதுகூடப் பொறுக்கலியோ.”
“போலப் போயி வேலயப் பாரு.சடங்கான பிள்ளய வீட்டுல வச்சிக்கிட்டு இன்னும் நாலு பாட்டுல வாங்கிக் கழுத்துல கெட்டிக்க.”
“இதாம்யா என் அசல் சித்தப்பன்,” என்றவன் இடக்காலால் பெடலை அழுத்திக் கிளம்பினான்.
“என்ன வள்ளியம்ம பாவடைய இன்னும் கொஞ்சம் தூக்கி கெட்டிக்கிடேன்.”
“கெளவரு நல்லா கிலாவுதாரு.வாரும் தொழுவுல வந்து சாணிய அள்ளும்.”
“அடி செறுக்கி என்னியவா சாணி அள்ள கூப்புடுத.பெத்தட்டி எங்க போனான்.”
“ஒமக்கு அவர இழுக்கலனா ஒறக்கம் வராத,”என்றவள் இடுப்பில் குடத்தை இடுக்கிக்கொண்டு கிளம்பினாள்.
சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பி வடக்குக் குளத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
அடுத்த வாரத்தில் இதேபோல் ஒருஅதிகாலை வேளையில் சின்ன லாரியில் மண் வருகிறதென்று தெருக் குழந்தைகள் அனைவரும் ஊர் எல்லைக்கு ஓடியதைக் கண்டு இவரும் ஆர்வமிகுதியில் சென்றார்.செம்மண் நிரம்பிய இரண்டு வண்டிகள் வந்தன.மண்ணை எங்குத் தட்டுவதென்று ஒரு பெரிய ஆராய்ச்சி நடந்தது.எங்கு பார்த்தாலும் சாக்கடையும், மாட்டுச்சாணியும், தண்ணீர் பிடிக்கும் பாத்திரங்களும்,சாக்கில் காயப்போட்ட வத்தல்களும்,விறகுக்கட்டுகளும் கிடக்க எங்கு மணலை தட்டுவதென்று தெரியவில்லை.ஒருவழியாகக் கோவிலுக்கு எதிரில் சீமக்கருவேலையின் ஒரு கிளையை வெட்ட மண்தட்ட இடம் கிடைத்தது.
தினமும் குழந்தைகள் மண்ணில் விளையாடும் புது விளையாட்டுக்களை உருவாக்கிக் கொண்டனர். எவ்வளவு சத்தம் போட்டாலும் சிறிது நேரம் விலகி பின் மீண்டும் தொடங்கினர்.இவ்வாறாக ஒருவாரம் கடக்கக் குவியலாக இருந்த மண் சரிந்து தெருமட்டத்தை அடைய முயற்சித்துக் கொண்டிருந்தது.மறுநாள் காலையிலேயே முள்ளை வெட்டிப்போட்டு மண்ணை மூடிவிட்டார் யாரும் விளையாடாமலிருக்க.
அதன்பின் ஒருவாரம் கழிந்த ஒரு நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளிவந்து ஒதுங்குவதற்குச் சென்ற கோளவடிக்கு யாரோ மண்ணில் இருப்பதுபோல் தெரிந்தது. யார்ரே என்ற சத்தத்துடன் நெருங்க விருட்டென்று மண்ணைப் பெட்டியில் அள்ளிக்கொண்டிருந்த உருவம் சீமக்கருவேல மரங்களுக்கிடையில் கிடந்த ஒத்தையடிப்பாதையில் மறைந்தது.யாரோ மண் எடுக்கிறார்கள் என்று எண்ணியவராய் காலையில் இதற்கொரு முடிவு கட்டவேண்டும் என்று உறுதிகொண்டார்.
காலையில் தெருவில் நின்ற சின்னமணியிடம் “ஏ நம்ம மெம்பர பாத்து இந்த ரோடு போடுதது என்னனு கேளுங்கல.இல்லனா இந்த மண்ணு எல்லாம் காலியாப்பேறும் பாத்துக்கிடுங்க.”
“யோவ் நீரு என்ன மயிரப்புடுங்கிதியராங்கும்.இங்க நிக்கப் பயலுவள கூட்டிட்டு போவேண்டியதான,” என்றவன் எதிரே வந்த காளிமுத்துவை மெம்பரைப் பார்க்கப் போகச்சொன்னான்.
“ம்க்கும்.நாய ஏவுனா நாயி வாலை ஏவிச்சாம்.ஒருத்தனும் வரண்டாம்பா நானே பாத்துக்கிடுதேன்,”என்றவர் தொழுவத்தில் கிடந்த சைக்கிளை உருட்டிக்கொண்டு கிளம்பினார்.
மெம்பரை சந்தித்துப் பேச அடுத்த வாரத்தில் சல்லிக்கற்கள் வரத்தொடங்கின. மணல் பக்கத்திலேயே சல்லிக்கற்களைத் தட்டச்செய்து அதன்மேலும் முள் வெட்டிப் போட்டுவிட்டார்.கோளவடியாருக்கு தினமும் இரவில் அதன்மேல் ஒருகண் யாராவது கல் எடுக்கிறார்களா என்று.படுத்துக் கிடக்கையில் சிறிய சத்தம் கேட்டாலும் எழும்பி வந்து பார்ப்பார்.”இவனுவ எப்பதான் ரோடு போடுவானுவ,”என்று தினமும் சலித்துக்கொள்வார்.
அதன்பிறகு ஒருநாள் மெம்பர் கடல் ஊருக்கு வர பிடித்துக்கொண்டார்.”ஏ என்னடே நெனச்சிக்கிட்டு இருக்க நீ?மண் கல்லுனு கொண்டாந்து ஒரு மாசத்துக்குப் போட்டா இத காவ காக்கிறது யாருப்பா? சீக்கிரம் வேலயத்தொடங்கி முடிப்பியா.”
“இந்தா அதுக்குத்தான வந்தேன். நாளாக்கழிச்சி ஆளு வந்துரும்யா ஒரு வாரத்துல உம்ம காலு சிமெண்ணுலதான் மிதிக்கும் பாத்துக்கிடும,” என்றவன் கல்குவியலை நோக்கி,”யோவ் என்ன பாதிக் கல்லுக் கூட இல்லியே.என்ன ஆளுங்கயா.”
‘நான் காவகாக்கப்பொயி இம்புட்டாது கெடக்கு.பெறவு என் திரணையப் பாதி இடிச்சானுவனா அத கொஞ்சம் அப்பிடியெ பூசி குடுக்கச் சொல்லிருப்பா.”
“ஒமக்கு செய்யாம யாருக்குயா செய்யப் போறேன்.”
பேசிக்கொண்டிருக்கையில் வடக்குத்தெருவில் சத்தம் பலமாகக் கேட்டது. ஆதி வீட்டு மாடு பித்தட்டி வயலுக்குள் சென்று மேய்ந்து விட்டதென்று, பித்தட்டி ஆதி வீட்டு முன்பு நின்று கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டிருந்தான். அந்தப் பக்கமாகச் சென்றவர் “செரிடே செரிடே என்னனு கேட்டுக்கிடுவோம். வாயில்லா சவம் போயி உழுந்துட்டு போலுக்கு. நீ யாம்ல ஒழுங்க கெட்டலயாங்கும்,” என்று ஆதியை ஒரு காட்டு காட்டிவிட்டு மாட்டுத்தொழுவத்தைப் பார்த்தார். சல்லிக்கற்கள் தொழுவத்திலுள்ள குழிகளில் நிரம்பிக்கிடக்க மண்குவியல் அடுப்பாங்கரை ஓரத்தில் சாக்கு மூடப்பட்டுக் கிடந்தது.
“நீரு ஒம்ம சோலி மயித்தமட்டும் பாரும்,” என்ற பித்தட்டி குரலோடு வீட்டுத் திண்ணையை அடைந்தார். அன்று இரவு ஓடியது இவந்தான்.சல்லிக்கல்லை எப்போ எடுத்துட்டு போனான்னு தெரியலிய என்று ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தார். அதற்குள் மெம்பரும் கிளம்பிவிட்டான்.
நான்கு நாட்கள் கழித்து ஒரு லாரி நிறைய ஆட்களுடன் காங்கிரீட் வண்டி சகிதம் வந்திறங்கியது. ஆடு மாடுகள் அதிகாலையிலேயே அவிழ்த்துச் செல்லப்பட்டன.
தெருவை மட்டப்படுத்தி மண் பரப்ப பாதித்தெருவுக்குக் கூட மண் போதவில்லை. என்றாலும் அதை அப்படியே நிரத்தி மேட்டுப்பகுதியை வெட்டி பள்ளத்துக்குள் தள்ளி ஒரு வழியாக மட்டப் படுத்தினர்.என்றாலும் திருப்பி அளவு பார்த்த மேஸ்திரிக்கு மேடு பள்ளமாக இருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.பின் கற்களை நிரப்பி ரோலர் கொண்டு அழுத்த அன்றைய பணி முடிந்தது.
இரவில் தெருவில் அமர்ந்தவர்களுக்குத் தெரு எப்போதும் இல்லா அகலமாக விசாலமாக இருந்தது.சாக்கடை கற்களுக்குள் ஊடுருவிக்கொண்டிருந்தது.
“செரிடே ஏதாது விசேசம்னா பந்தல் எப்பிடி போடுதது,”என்று இடிக்கப்பட்ட பாதித் திண்ணையில் அமர்ந்துகொண்டு கூறினார் கோளவடியார்.தெருவில் இருந்தவர்களுக்கும் “அட ஆமா நம்ம யாருக்குமே தோணல பாத்தியளா,”என்று சலித்துக்கொண்டு என்ன வழி என்று ஆராயத்தொடங்கினர்.
“ஒரு வழி இருக்கு.இப்பமே ஒரு அடிக்கு தோண்டி ஒரு கம்பு நட்டு வச்சி காங்ரீட்டு காஞ்சதும் எடுத்துருவோம்.பெறவு மண்ணப்போட்டு மூடிட்டா எப்ப வேணும்னாலும் தோண்டிக்கிடலாம்லா,” என்றான் காளிமுத்து.
“இவன் சொல்ததும் சரியாத்தாம்டே இருக்கு.அப்பிடினா தெரு புல்லா குழியாத்தானல கெடக்கும்.”
“இல்ல பெருசு.வீட்டுக்கு நாலு குழி போடுவோம். இப்ப ஒம்ம வீட்டுக்கு நேர் எதித்தால சின்னமணி வீடு இருக்கதால ரெண்டு வேருக்கும் சேத்து நாலு குழி போட்டாப் போதும்லா.”
“அதும் சரிதான்.காலைலே காங்க்ரீட் போடுத்துக்கு முன்னால சொல்லிரணும் என்ன.”
கோளவடிக்கு நிம்மதியாக இருந்தது.
மறுநாள் அதிகாலையிலேயே வேலை தொடங்கிவிட்டது.மெஸின் காங்க்ரீட்டை கக்க தெருவின் கிழக்கு முனையிலிருந்து நிரப்பிச் சமப்படுத்திக்கொண்டு வந்தனர்.
கோளவடியர் பந்தல் போடுவதற்குக் கம்பு நடும் எண்ணத்தைக்கூறி அவர்களை வைக்க ஏவினார்.”யோவ் இப்பிடிலாம் வச்சா ரோடு பிச்சிக்கிட்டு பேறும் பெறவு ஏங்கிட்ட கேக்கக்கூடாது ஆமா,”என்றவர் அவர்கள் எண்ணப்படியே இரண்ட்டி கம்பை நட்டுக்கொண்டே சென்றார்.
“கீழக்கடைகாரன் மனைவி மெல்ல காங்க்ரீட் போடுபவர்களிடம் சென்று,”அண்ணாச்சி ஒரு சட்டி காங்க்ரீட் தாங்களேன்.அடுப்பாங்கரையில போடணும்,”என்றாள்.
”எம்மா உங்களுக்குத் தந்தா இப்பா எல்லாரும் வருசயா வந்துருவாவள,”என்றான் மேஸ்திரி.
ஒரு சட்டித்தான்யா என்று தலையைச் சொறிந்தாள்.விடுக்கென்று ஒரு சட்டியை வாங்கிக்கொண்டு இடுக்குக்குள் செல்ல பண்டாரம் பொண்டாட்டி பார்த்துவிட்டாள். நம்ம வீட்டுக்கிட்ட வரும்போது நம்மளும் எடுத்துக்கிடவேண்டியதான் என்று தீர்மானித்துக் கொண்டவளாய் “மேஸ்திரி நமக்கும் காங்க்ரீட் வேணும் பாத்துக்கிடும்,” என்றாள்.
“இப்பிடியே எல்லாரும் கேட்டியன்னா தெருவு ஒரு மாசம் கூடப் பெலக்காது பாத்துக்கிடுங்க.”
“அப்ப அவளுக்கு யான் குடுத்தியரு?”.
வேறு வழியற்றுக் கேட்டவர்களுக்கெல்லாம் கொடுக்க வேண்டியதாகி விட்டது.ஏற்கனவே மண் ஜல்லி கலவைக்குப் பத்தவில்லை.ஒருவழியாக இருப்பதை வைத்து நிரத்திப் போட்டுவிட்டனர்.தெரு முழுவதும் இரண்டடி உயரத்தில் கம்பு நடப்பட்டிருந்தது பந்தல்கால் நடுவதற்கு.
எல்லோரது ஆடு மாடுகளும் பின்புறமாக வந்துவிடச் சின்னமணியின் இரண்டு ஆட்டுக்குட்டிகள் மட்டும் அடங்காமல் துள்ளிக்கொண்டு வந்ததன.சின்னமணி எவ்வளவோ தடுத்தும் காங்க்ரீட்டுக்குள் சென்று கால் புதைத்துக் கத்திக்கொண்டே அங்கும் இங்கும் அலைக்கழிந்தன.ஒருவழியாகச் சின்னமணி மனைவி அழைக்க அவளை நோக்கி சென்றன.சமதளமாய் இருந்த தெருவெங்கும் ஆட்டுக்குட்டியின் கால்தடங்கள் பதிந்தன.கோளவடியார் சின்னமணியைத் திட்டித்தீர்த்தார்.
நாட்கள் உருண்டோட ஐப்பசி மாத மழை தொடங்கியது.இரண்டு மழைக்குப்பின் சாலை முழுவதும் பாளம் பாளமாக வெடித்து,வெறும் சல்லிக்கற்கள் மட்டும் துருத்திக்கொண்டு நின்றன.பந்தலுக்கு வைக்கப்பட்ட குழியிலிருந்து உதிரத்தொடங்கிய சாலை எல்லா இடங்களிலும் பரவி வெடித்திருந்தது மழைக்கு முன்பே.தெருவில் விறகு உடைக்க வேண்டாம் என்று எத்தனையோ முறை கோளவடியார் சண்டையிட்டும் யாரும் கேட்கவில்லை.
தொடர்ச்சியான மழையில் துண்டு துண்டாகிக் கிடந்த சாலை முழுவதும் பாசிப்பிடித்துக்கிடக்க ஓர் அதிகாலையில் எழும்பிய கோளவடியார் வாசலிலிருந்து தெருவில் கால்வைக்க வழுக்கி விழுந்தார். இடிக்கப்பட்ட பாதித் திண்ணையில் தலை மோத வாசலில் படுத்திருந்த நாய் ஆங்காரமாய் நின்று குரைக்க ஆரம்பித்தது.

புகைப்படம் நன்றி: Chronicles of Nemam

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.