கவிதைகள்

தனித்த பறவையின் நிலப்பரப்பு

red-bird
விளையாடுவதற்கு
அணில்களும்
பறவைகளும்
அற்ற பைன் மரங்கள்
சோம்பி நிற்கின்றன குளிரில்
கூந்தலில் பனியை ஏந்தி.
நூற்றாண்டுகளின் குரோதம்
அல்லது கருணை. பனியால்
புவியை வென்றுவிடுவது போல
தழுவிக்கொண்டிருக்கும் வானம்.
வெண்கடலாய்
விரைத்துக்கிடக்கும் பூமி.
பெருவெடிப்பின் சூடு
ஆழத்தில் எங்காவது மீதமிருக்கலாம்.
பனிக்குள் மறைந்துவிட்ட
ஒற்றையடி பாதையில்
மறுமுனையில் எங்கோ
மறைந்திருக்கும்
மீதி உலகம்.
பிடுங்கி
தலைகீழாய் நட்டது போல்
இலையின்றி நிற்கும் பிர்ச் மரம்
அருவியின் மறுபுறம்
நிற்கும் பாறையெனெ
தன் ஞானத்தை கையளித்தபடி
தனிமையில்
யாருக்கோ எதற்கோ அசைவற்று
காத்திருக்கும்
ஒரு முதிய பறவை.

oOo

கருந்துளை

புராணங்கள்
இதிகாசங்கள்
ஆய்வுகள்
பலமுறை நீரூபித்தது
கருந்துளைதான். இருந்தும்
கருமைதான் அதன் நிறமென
சொல்வதற்கில்லை.
மாந்தளிர்
தவிட்டு நிறம்
கண்ணைப்பறிக்கும் பொன்னிறம்
அல்லது வெண்மை
என எங்குமிருக்கும்.
கவனமற்ற புதர்
கத்தரிப்பு, கவனமாக நீக்கப்பட்டு
ஏதுமற்ற மையம்
இவற்றில் மறைந்திருக்கும்.
கோள்களின் ஆகர்ஷம்
ஈர்ப்புவிசை
பிரபஞ்ச பேராற்றல்
இவற்றையெல்லாம் விட
வலியது மிகவும்.
நெருங்கிவரும் எதையும்
உறிஞ்சி விழுங்கி
உடைத்து செரித்துவிடும்.

oOo

நம் கடைசி இடம்

கடைசி சுவாசத்தை கசிந்தபடி.
நம் முத்தத்துக்காக
காத்துகொண்டிருக்கும் தேநீர்
சீக்கிரமே அடங்கிவிடும்
அதன் சுவாசம்.
அதற்குள் தயவுசெய்து
எப்படியாவது திரும்பிவிடு
உன் இருக்கைக்கு.
எல்லாவற்றையும்
நாம் விரும்பியது போலவே
செய்துவிட்டு
எதை எதையோ கடந்து வந்தோம்
நமக்காக காத்திருக்கும்
கடைசி இருக்கையையும் விட்டு
நாம் செல்ல வேண்டிய இடம்
இருக்கைகள் காரணங்கள்
இனி ஏதுமில்லை.
நம் இருக்கைகளை தீர்மானிப்பது
நாம் மட்டுமல்லவே?
ஆகவேதான் சொல்கிறேன்.

oOo

மந்திரத்தின் சமையல்காரி

நீட்டி அழைக்கும் பாட்டியின் பிடியை விட்டு
பாய்ந்தோடி வந்தாள்
குளியலறையிலிருந்து
உள்ளாடை மட்டும்
அணிந்த அம்முக்குட்டி.
திவலைகள் பூத்த முதுகுடன்
தீப்பெட்டி அளவு அடுப்பை
விரிப்பில் வைத்து
சரியான சர்க்கரையில்
காப்பி கலந்தாள்
அப்பாவுக்கு ஒரு கரண்டி
அம்மாவுக்கு இரு கரண்டி
தாத்தாவுக்கு இல்லாமலும்
விருந்தாளி எனக்கு தனியாகவும்.
விரல் அளவு தட்டை வைத்து
வெறுங்கையில் மாவை ஊற்றி
வேகவைத்த இட்டிலியை, தோசையை
கேட்டு வைத்தாள். கூடவே
தொட்டுக்கொள்ள
கொத்தமல்லி துவையலும்.
அனைத்தையும் பார்த்தபடி
ஓரமாய் ஆர்வமாய்
வாலாட்டி அமர்ந்திருந்தது
ஆணைக்கு கட்டுப்பட்ட டைகர்.
இன்னொரு இட்டிலி கேட்கும் முன்
குரைத்தோடிய டைகர் பின்னால்
குதித்தோடி பறந்து போனாள்.
சிற்றுண்டியுடன்
காப்பியும் குடித்த களிப்பில்
பேசிக்கொண்டிருந்தேன் இன்னும் கொஞ்சம்.
கிளம்புமுன் நினைத்துக்கொண்டேன்
இன்னொருநாளும் வரவேண்டும்
இன்னும் கொஞ்சம் சாப்பிட.
வேணுகோபால் தயாநிதி

fancy_poem_article_post_separator

பரல்கள்

சுயமறுத்துச்
சலங்கைகள் சிதற
நடனமாடிச் செல்கிறது மழை.
மோகம் சுமந்த
மேகம் சுமந்து
அலைமோதுகிறது காற்று
இருப்பிடம் குழம்பி.
வியர்க்கும் மேகம்
சுமந்த பரல்களில்
மாணிக்கங்கள் இல்லை.
விசாரிக்கும் தாழ்வாரங்களில்
விசிறும் காற்றில்
வெண்ரத்தமாய் வடிகின்றன
முத்துப் பரல்கள்.
rain
 
தேனம்மை லெக்ஷ்மணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.