அறுபடலின் துயரம் – பூக்குழி

This entry is part 38 of 48 in the series நூறு நூல்கள்

“நீங்கள் ஏன் சிவாஜியை கல்யாணம் செய்துகொள்ளவில்லை?”
நடிகை பத்மினியின் வெளிநாட்டுப் பயணம் அது. கனடாவில் ஏற்பாடாகியிருந்த ஒரு நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பத்மினி சென்றிருக்கிறார். எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் வீட்டில் நாட்டியப் பேரொளி பத்மினி தங்குவதற்கு ஏற்பாடாகி இருக்கிறது. இந்த அனுபவத்தை “எதிர்பாராத அடி – நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு” என்ற கட்டுரையாக அ. முத்துலிங்கம் எழுதியிருக்கிறார். (அங்கே இப்போ என்ன நேரம்? – பக்கம்: 55, தமிழினி வெளியீடு)
விமான நிலையத்திலிருந்து பத்மினியை அழைத்துக்கொண்டு அ.முத்துலிங்கம் காரில் பயணிக்கும் தருணம், அவருடன் பத்மினியை வரவேற்க வந்திருந்த பெண்மணி ஒருவர் தான் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார். முத்துலிங்கம் திடுக்கிட்டு பத்மினியைப் பார்த்திருக்கிறார். அவரோ தூரத்தில் நிலை கொள்ளும் பார்வையுடன் அந்தக் கேள்வியை எதிர்கொண்டு, மௌனத்தையே பதிலாக அளித்திருக்கிறார். பத்மினி கனடாவில் தங்கியிருந்த மூன்று நாட்களில் –அவரைச் சந்திக்க வந்திருந்த ஏராளமான நபர்களின் மூலம் – இருபதுக்கும் மேற்பட்ட முறை இதே கேள்வி மறுபடியும் மறுபடியும் கேட்கப்படுகிறது:
“நீங்கள் ஏன் சிவாஜியை கல்யாணம் செய்துகொள்ளவில்லை?”
அவர்களில் ஒருவருக்கும் வாய் திறந்து பத்மினி பதில் சொல்லவில்லை என்கிறார் முத்துலிங்கம். வேறேதோ சந்தர்பத்தில் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கையில், உரையாடல் எங்கெங்கோ தொட்டுச் செல்லும்பொழுது:
“நான் நாயர் பொண்ணு. அவர் கள்ளர் ஜாதி. நடக்கிற காரியமா?”
– என்று தன்னையும் மறந்த நிலையில் சொல்லியிருக்கிறார் பத்மினி. இந்த சம்பவத்தை நடுகல்லாக வைத்துக்கொண்டு பார்த்தால், சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல, பொது வாழ்வில் சாதித்தவர்களால் கூட நினைத்த வாழ்கையை ஏற்படுத்திக் கொள்ள முடியாத சூழல் தான் நம்மிடையே இருந்திருக்கிறது. இன்று வரையிலும், இந்தச் சூழலில் பெரிதான மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பது தான் யதார்த்த உண்மை. இருவேறு சாதியைச் சேர்ந்தவர்கள் நேசிக்கும்பொழுது, தங்களது காதலைச் சொல்ல முடியாத சூழல் ஒருபுறம். அப்படியே சொல்லி மணவாழ்வில் இணைந்தாலும் அஞ்சி அஞ்சி வாழ வேண்டிய சூழல் மறுபுறம். “சாதி” என்ற பெயரிலான கொலைகளும், வன்முறைகளும் என மனிதத்திற்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரான சம்பவங்களைப் பட்டியலிட்டு மாளாது. தருமபுரி இளவரசன் போன்றவர்களில் மரணமே இதற்கான சான்றுகள். அந்த வகையில் “பூக்குழி” போன்ற இலக்கிய ஆக்கங்களும், “ஃபேன்ட்றி” போன்ற கலைப் படங்களுமே அந்தந்த காலத்தின் அவலங்களைக் கண்முன் நிறுத்தும் சாட்சியங்களாக விளங்குகின்றன. தர்மபுரி அரசு கல்லூரி ஒன்றில் தற்காலப் பணிமாற்றதில் சென்றிருந்த பொழுது, உயர் சாதி சமூகத்தில் பிறந்த பெண்ணைக் காதல் திருமணம் புரிந்த தலித் இளைஞரான தர்மபுரி இளவரசனின் மரணம் சம்பவித்த பொழுது – “கல்கி” இதழில் தொடராக இந்த நாவலை பெருமாள்முருகன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இளவரசனின் மரணமே இத்தொடரை எழுதுவதற்குக் காரணமாக அமைந்ததாகவும் தனது முன்னுரையில் பெருமாள்முருகன் குறிப்பிட்டிருக்கிறார்.

Perumal_Murugan_Pookkuzhi_Novel_Fiction_Kalki_Story

 
குமரேசனின் தாய் ‘மாராயி’, இருபது வயதில் விதவையானவள். மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தனது ஒரே பிள்ளையான குமரேசனை வளர்த்தெடுக்கிறாள். கிராமத்து சூழலில், சாதிய பின்புலத்தில் வளர்ந்த குமரேசன், பொருளீட்ட வேண்டி சிறுநகரத்திலுள்ள கோலி சோடா கடைக்கு வேலைக்குச் செல்கிறான். அங்கு சரோஜாவுக்கும் குமரேசனுக்கும் காதல் பிறக்கிறது. ரகசியக் காதலானது, திடீர் திருமணத்தில் சென்று முடிகிறது. உறவுகளைச் சமாதானப்படுத்தி சரோஜாவுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது தான் குமரேசனின் விருப்பமாக இருக்கிறது. ஆகவே, திருமணம் முடிந்ததும் மனைவியான சரோஜாவுடன் கிராம வீட்டிற்குச் செல்கிறான்.
“இவ(ள்) என்ன சாதி?” என்பதுதான், குமரேசனின் தாயார் உட்பட அங்குள்ள அனைவரின் கேள்வியாகவும் இருக்கிறது.
“எல்லா(ம்) நம்ம ஆளுங்க தான்…” என்பது மட்டுமே குமரேசனின் பதிலாக இருக்கிறது. இச்சூழ்நிலையில் பதட்டமான மௌனத்தை மட்டுமே சரோஜாவால் வெளிப்படுத்த முடிகிறது. மகனின் அசட்டையான பதிலும், மருமகளின் இறுக்கமான மௌனமும் மாராயியின் உள்மனதை மூர்க்கம்கொள்ள வைக்கிறது. மனதிலுள்ள வருத்தத்தையும் வன்மத்தையும் கசப்பான வார்த்தைகளாக மாராயி வெளிப்படுத்துகிறாள். அவளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறான் குமரேசன். சூழலின் தன்மை உணர்ந்து உள்ளொடுங்கிக் கிடக்கிறாள் சரோஜா. தாயும் மகனும் வாய்ச் சண்டையில் உரசிக் கொள்கிறார்கள். வரம்புமீறிய வார்த்தைகளே அவர்களது அடுத்தடுத்த சிக்கல்களுக்குக் காரணமாக அமைகிறது. அன்றாட வாழ்வின் நெருக்குதல்களுக்கும் காரணமாக அமைகின்றது.
முருகனின் படைப்புகளில் வரும் கதாப்பாத்திரங்கள் சமூகத்தை எதிர்த்துப் பெரிதாக சீற்றம் கொள்வதில்லை. புரட்சி பேசுவதில்லை. மாற்றத்திற்கான குறியீடுகளாக இக்கதையில் வரும் மாந்தர்கள் இருப்பதில்லை. சுற்றிலுமுள்ள மனிதர்களின் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்டு வாழ்க் கூடியவர்களாகவே இருகிறார்கள். ஒரு வகையில் அப்படி வாழப் பழக்கப் பட்டவர்கள் என்று கூட சொல்லலாம். நாவலின் முக்கியப் பாத்திரங்களான “குமரேசனும், சரோஜாவும்” அப்படிப்பட்டவர்கள் தான்.
மேய்ச்சல் ஆடுகளுடன் வீடு திரும்பும் மாராயி, அந்தி சாயும் வேலையில் பாறைகளின் மீது நடக்கும் பொழுது ஆடுகளைப் பார்த்து “ஏ… பசங்களா பாத்து நடங்கைய்யா… பாதம் புண்ணாயிடப் போகுது” என்கிறாள். முட்டை வியாபாரத்தின் பொருட்டு கிராமத்தில் உள்ளவர்களிடம் கோழி முட்டைகளைச் சேகரிக்க வரும் முட்டைக்கார பாய் சில நேரங்களில் குமரேசன் வீட்டுப் படலில் தங்க நேர்கின்றது. அந்த நேரத்தில், “இந்த முட்டக்கார பாய் வேற மனுசனாட்டமே தெரியல. நம்மூட்டு ஆளுங்க மாதிரியே மாறீட்டாரு” என்கிறாள். ஆடுகளிடம் காட்டிய பரிவையும், ஒரு வியாபாரியிடம் காட்டிய பரிவையும் கூட – தனது ஒரே மகனின் காதல் மனைவியின் மீது ‘மாராயி’யினால் செலுத்த முடியவில்லை. தொடர்ந்து அவர்கள் இருவரையும் வார்த்தைகளால் இம்சை செய்கிறாள். இரண்டு பொருள்படும் வார்த்தைகளைப் பிரயோகம் செய்து புதுமணத் தம்பதிகள் இருவரையும் வதைத்தெடுகிறாள்.
“நீ ஏம்மா நாயி நஞ்சுக்கொடிய வாயில வச்சி இழுக்குற மாதிரி… ஆளுகள போட்டு இம்ச பண்ற…” என்று கேட்டுவிடுகிறான் குமரேசன். இந்த வார்த்தைகளைக் கேட்ட மராயியின் மூர்க்கம் உச்ச நிலையை எட்டுகிறது.
“உனக்கு நான் முக்கியமா? என்னோட சந்தோசம் முக்கியமா? அப்படி இல்லன்னா…! ஊருல இருக்கவங்க முக்கியமா?” என்று கேட்கிறான் குமரேசன்.
“எனக்கு ஊருல இருக்கறவங்க தான் முக்கியம்.” என்கிறாள் மாராயி.
தன்னை எதிர்த்து மகன் பேசுவதற்குக் காரணம் சரோஜாவின் வரவுதான் என்று மாராயியின் மனம் யோசிக்கிறது. இருவரையும் பிரித்து வைக்க வேண்டும். இல்லையேல், சரோஜாவைக் கொன்று புதைக்க வேண்டும் என்ற வன்மம் அவளது மனதிற்குள் தோன்றுகிறது. புறச்சூழலின் தன்மையை உணர்ந்த சரோஜா – குமரேசனிடம் சொல்லி கிராமத்தை விட்டு வெளியில் சென்று குடியேற விரும்புகிறாள்.
உறவுகளின் பிரிவையும், நிர்பந்தத்தால் மனிதர்கள் மேற்கொள்ள நேரும் இடப் பெயர்வையும் பெருமாள்முருகன் தனது எல்லா படைப்புகளிலும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் ‘பூக்குழி’ நாவலும் அறுபடலின் துயரத்தைத் தான் பிரதானமாக முன்வைக்கிறது. சாதி கலப்புத் திருமணம் செய்தவர்களின் மனச் சிக்கல்களையும், உயர் சாதி மனோபாவத்தில் வாழ்பவர்களின் குரூர முகத்தையும் ஒருங்கே இப்படைப்பு சித்தரிக்கிறது. நாவல் பயணிக்கும் காலம், கதைக்களம் ஆகியவற்றையும் மீறி நாவல் தொக்கி நிற்கும் கருவானது – சமூகத்தில் சூல்கொண்டு, காலத்தால் புரையோடிப்போன சாதிய அடுக்கின் குரூரத்தைப் பற்றி நுட்பமாகப் பேசுகிறது என்பது முக்கியம். சாதிய ஒடுக்குமுறையைப் பிரதிபலிக்கும் நவீன படைப்புகள் நம்மிடையே ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலான படைப்புகள் தனிமனித ஆழ்மன எண்ணங்களைப் பிரதிபலிக்கும் படைப்புகளாகவே இருக்கின்றன. ‘பூக்குழி நாவல்’, மணமான தம்பதிகளின் ஆழ்மனச் சிக்கல்களைப் பேசும் அதே வேலையில், அந்த சிக்கல்களுக்கும் சிடுக்குகளுக்கும் காரணமான புறச்சூழலை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறது என்பது தான் இந்நாவலின் மீதான கவனத்தை ஏற்படுத்துகிறது.
கடைசியாக, இதனைச் சொல்லி முடிப்பது நேர்மையாகவும் ஞாயமாகவும் இருக்கும் என்றே நினைக்கிறன். “ஃபேன்ட்றி” – உலக திரைப்பட விழாக்களில் தொடர்ந்து திரையிடப்பட்டு, மாற்று சினிமா ஆர்வலர்களின் கவனத்தையும் பாராட்டையும் ஒருங்கே பெற்றுள்ள திரைப்படம். உயர்சாதிக் குடும்பத்தில் பிறந்த பெண்ணை, பன்றி மேய்க்கும் சிறுவன் ஒருதலையாகக் காதலிக்கிறான். காதல் கைகூடாமல் போகிறது. திரைப்படத்தின் முடிவில் அந்தச் சிறுவன் விரக்திகொண்டு கல்லைக் காற்றின் திசையில் வீசவும் – அது திரையின் மையத்திற்கு நகர்ந்து, திரைப்படத்தைக் கண்டுகளித்த பார்வையாளர்களின் மீது விழுவது போல திரையாக்கம் செய்யப்பட்டுள்ளது. புத்தகமோ! ஓவியமோ! திரைப்படமோ! – ஒரு படைப்பு முழுமை பெரும் வரையில் தான் அது படைப்பாளிக்குச் சொந்தமானது. வெளியீடு கண்டதுமே அது அந்தரத்தில் வீசி எறியப்பட்ட கல்லுக்குச் சமமான ஒன்று.
பூக்குழியைப் பற்றி பேசுவதற்கு என்னை அழைத்திருக்கிறார்கள். அரைக்கிழ வயதாகிவிட்டது. நான் இது வரைக்கும் யாரையும் காதல் செய்ததில்லை. எதிர்வரும் காலத்தில் காதல் பூக்குமா என்றும் தெரியவில்லை!. இன்னும் (ஒருமுறை கூட) திருமணம் செய்து கொள்ளவில்லை. அப்படியே செய்துகொள்ள நேர்ந்தாலும் தாழ்த்தப்பட்ட சாதியில் பெண்ணெடுத்து, சமூகத்தின் சமநிலைக்கு ஏதேனும் செய்ய இயலுமா என்றும் தெரியவில்லை!. ஆக, இந்தியச் சூழலில் – குடும்பக் கட்டமைப்பின் மீது கிரகணம் போல விழுந்த சாதியத்தின் நிழலில் தான் என் போன்ற மதில்மேல் பூனைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மதில்மேல் பூனைகள் பாதுகாப்பை மட்டுமே முக்கியக் குறியாகக் கொண்டவை. படித்த, அறிவுள்ள மனிதர்கள் இப்படி சுயநலமாக வாழ்வதில் அர்த்தமில்லை. “பூக்குழி, ஃபேன்ட்றி” போன்ற படைப்புகளை சீர்திருத்தவாதிகளும் முற்போக்குவாதிகளும் கவனிப்பதை விட, என் போன்ற மதில்மேல் பூனைகள் அவசியம் கவனிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்.
ஃபேன்ட்றி படத்தில் வரும் சிறுவனுக்குப் பிஞ்சுக் கைகள். பெருமாள்முருகன் ஒன்றும் சிறுவன் இல்லையே. பெருமாள்முருகன் சிறுவதில் விவசாயம் பார்த்தவர். கரடுமுரடாக வேலை செய்தவர். ஆகவே, முருகனுக்கு முரட்டுக் கைகள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லையே. ‘பூக்குழி’ – என் மீது விசைகொண்டு வீசி எறியப்பட்ட கல். எனக்கு வலிக்கிறது. இந்த நாவலை வாசிக்க நேர்ந்தால் உங்களுக்கும் வலிக்கும்.
வாய்ப்புக்கு நன்றி.

(அக்டோபர் 05, 2014 – அன்று “பொக்கிஷம் புத்தக அங்காடி’யில் பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன், ஆளண்டாப் பட்சி, பூக்குழி’ ஆகிய மூன்று நாவல்களின் கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது. “பூக்குழி” குறித்து என்னால் பேசப்பட்ட கருத்துக்களின் திருத்திய வடிவம். எழுத்துக்காக சில விஷயங்கள் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளன.)

Series Navigation<< அஃகம் சுருக்கேல்ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன் >>

0 Replies to “அறுபடலின் துயரம் – பூக்குழி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.