ஆண்/பெண் சிக்னல்

Advocate_Hansa_Lawyer_Tamil_Nadu_Vakkeel

சிக்னல் 1: உடை

பெண்ணின் ஜீன்ஸ் உடை பற்றி முந்தைய தலைமுறையைச் சார்ந்த திரு. யேசுதாஸ் அவர்கள் தன் கருத்தைப் பதிந்திருந்தார். அதற்கு ஆயிரம் விளக்கங்கள் ஈராயிரம் பதில்கள். இன்றைய தலைமுறையினரை விட ஜீன்ஸ் போன்ற உடை பற்றி முந்தைய தலைமுறைக்கு அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு ஒரு மரியாதை வருவதில்லை. காரணம், அவர்கள் தலைமுறையில் ஒரு இளம் பெண் ஜீன்ஸ் அணிந்திருந்தால் அவள் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவும், அவள் எதிர்பாலினத்தை கவரச் செய்யும் முயற்சியாகவுமே இருந்தது தமிழகத்தைப் பொறுத்தவரையில். அந்த தலைமுறையில் தமிழ் நாட்டில் எவருமே அணியாத உடை அது. சினிமாக்களில் மட்டும் அணிந்துவந்தார்கள். எனவே சமூகமே புழங்காத ஒன்றை ஒரு பெண் சுலபமாக புழங்கினால் அவள் கொஞ்சம் அடாவடியாகவும்,. கவரும் முயற்சியாகவுமே பார்க்கப்பட்டது.
ஆனால், இன்று அப்படி இல்லை,. இன்றைய பதின்மவயதினர் முதல் மத்திய வயதினர் வரை ஜீன்ஸ் என்பது ஒரு உடை என்றே பார்த்துப் பழக ஆரம்பித்தாகிவிட்டது. புழக்கத்திலே ஜீன்ஸ் இருப்பதால், இன்று அது ஒரு உடை மட்டுமே. எனவே ஜீன்ஸ் அணிவதென்பது எதிர்பாலினத்தை கவரச் செய்யும் முயற்சியாக இன்றைய இளைய ஆண் பார்ப்பதில்லை.
அன்றைய ஆணுக்கு எப்படி பெண்ணின் சிக்னல் புரிந்ததோ அது போலவே, இன்றைய ஆணுக்கும் பெண்ணுக்கும் எதிர்பாலினத்தவரின் சிக்னல் புரிந்தே இருக்கிறது. ஒரு ஜீன்ஸ் மூலம் எல்லாம் இன்று சிக்னல் தரத் தேவையில்லை தருவதுமில்லை.
இந்திய குடும்பங்கள் ஆயிரம் சொன்னாலும் மூத்தவர் என இருப்பவரை தலைவராக ஏற்றே வந்திருக்கிறது. மூத்தவர் எது சொன்னாலும் அது அப்படியே ஏற்கப்பட்டுக்கொண்டே வந்திருக்கிறது. அவர்களும் தன் அனுபவத்தை அறிவுரையாகச் சொல்லுவதும் அதற்கான அங்கிகாரம் அடுத்த தலைமுறையால் வழங்கப்படுவதுமாக இருந்து கொண்டே இருக்கிறது.
ஆனால், இந்த சிக்னல் விஷயங்களில் எந்த சமயத்திலும் ஒரு தலைமுறையை அடுத்த தலைமுறையால் புரிந்து கொள்ளவே முடியாது. அப்படிப் புரிந்து கொள்ள முடியாது என்பதை எந்த தலைமுறையும் உணருவதும் இல்லை ஒரு சிலரைத் தவிர..
ஆக, ஜீன்ஸ் எனும் உடை பற்றி அவர் சொன்னது, அவர் தலை முறையின் கணிப்பை அவர் சொன்னார் என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர் ஆண் வர்க்கத்தின் சார்பாகப் பேசவில்லை. முந்தைய தலைமு/றையின் எண்ண வெளிப்பாடுதான் அது.
அதாவது யேசுதாசின் கமெண்ட் ஆண் Vs பெண் அல்ல. முந்தைய தலைமுறை Vs இன்றைய தலைமுறை.
எப்படி அவர் தான் சொன்னதன் முழு வீச்சையும் உணரவில்லையோ அது போலவே அவரின் இந்த கருத்தை எதிர்ப்பவர்களும் எதிர்வினையாற்றுகிறார்கள்.
பெண் உடை பற்றி எவர் கமெண்ட் செய்தாலும், எதிர்வினையாற்றும் பெண்களில் பலர் அதே உடைகளைப் போடுவதில்லையே? ஏன் இந்த இரட்டை வேடம்? என ஒரு கேள்வி எழுந்தது.
அது போன்ற உடைகளை ஏன் உடுத்துவதில்லை அவர்கள்? ஏனெனில், சில ஆண்களின் மனதில் , அது அரைகுறை ஆடை என்றும், அப்படி உடை உடுத்தும் பெண், ஒரு ஆணுக்குத் தரும் சிக்னல் என புரிந்து கொள்ளும் அளவில்தான் அவன் மன முதிர்ச்சி அடைந்திருக்கிறான். (கவனிக்க சில ஆண்கள்)
அவர்களைத் தவிர்க்க. அவன் மன முதிர்ச்சியின்மையை தவிர்க்க..
சரி. ஆனால், அதையே வார்த்தையாகச் சொல்லும் ஆணை/பெண்ணை ஏன் இதே பெண்கள் எதிர்க்கிறார்கள்?
””அது ஆணுக்குத் தரும் சிக்னல் அல்ல. பெண்ணுக்கும் அக்குள் வியர்க்கும். நாறும். எது அவளுக்குச் சுலபமோ அதை அவள் அணியட்டும் என்பதை நீ புரிந்துகொள். மன முதிர்ச்சி பெறு எனச் சொல்லியே … ””பெண் ஆடை பற்றி கமெண்ட் செய்பவர்களை எதிர்க்கிறார்கள். அவர்களின் மன முதிர்ச்சியை வேண்டி. அவனின் மன முதிர்ச்சியை எதிர்பார்த்து. இது இரட்டை வேடமில்லை என இப்போது புரிகிறதுதானே?
டை என்பது தட்ப வெப்ப நிலையைச் சமாளிக்க, பூச்சி களிடமிருந்து பாதுகாக்க, எதிர்பாலினத்தைக் கவர என பல காரணங்களுக்காக உருவாகியது என்றாலும், அதன் ’கவர்தல்’ எனும் அம்சமே இப்போது பேசு பொருள்.
இயற்கை ’தகுதி உள்ளது தப்பிப் பிழைக்கும்’ என்கிறது. அதனாலேயே, திறமையான ஒன்றையே, வலிமையான ஒன்றையே தேர்ந்தெடுக்கிறது இயற்கை. இயற்கை நியதியின் படி வலிமையான ஆணுக்கே பெண் எதிர்கால சந்ததியை உருவாக்க பிள்ளை பெற விரும்புவாள். கவனிக்க…இப்போது உங்கள் மனதில் இருக்க வேண்டியவர்கள் ஆடையற்ற ஆதி மனிதனும், மனுஷியும்தான்.
சரி. எவன் வீரனோ, எவன் தன் குடியைக் காப்பானோ அவனுக்கு பிள்ளை பெறலாம்.  அவன்? எந்தப் பெண் ஆரோக்கியமான குழந்தையை தனக்குப் பெற்றுத்தர இயலுமோ அவளே அவனுக்கும் தேவை. கொழுத்த பெண்… அவனுடைய குழந்தைக்குத் தோதாக பெருத்த மார்புகள்..இவை … ஆரோக்கியம் அன்று. அதாவது ஒவ்வொரு வேளை உணவுக்கும் உணவு தேடிக்கொண்டே இருக்கும் காலகட்டத்தில் இவை அவனைக் கவர்கின்றன.
””அட..? அப்படியா? எனில் உன்னை இன்னும் கவர்கிறேன் பார். ஏனெனில், என் அடுத்த தலைமுறையை நான்தான் உருவாக்க வேண்டும். போடுகிறேன் மூடியை.”” என அவள் மூடுகிறாள்.
சரி ஆண் என்ன செய்கிறான்? அவளுக்குத் தேவையான, அவளைப் பாதுகாக்கக்கூடிய வீரம் அவனிடம் இருப்பதை அல்லது இருப்பதாகக் காட்டிக் கொள்கிறான். அன்றைய ஆணின் எச்சம்தானே இன்றைய ஆண்? பருவவயதில் தான் ஒரு வீரன் எனக் காட்ட ஃபிசிகலாக தீரம் காட்டும் விடலைகளைத்தான் நாம் பேருந்துகளில் பார்க்கிறோமே? இவையும் பெண்ணைக் கவரும் முயற்சிதான்.
இதில் இன்னொரு கோணமும் இருக்கிறது.
செக்ஸாலஜிஸ்டுகளும், மனோதத்துவ நிபுணர்களும் ஆண்/பெண் உறவில் மிக முக்கிய உடற்பாகமாகச் சொல்வது விரல்களையும், தொடு உணர்ச்சியையும்தான். ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுதான் உண்மையும் கூட.
எவர் தொடுகையும், உடனே உணர்வுப் பெருக்கை ஏற்படுத்திவிடாது. அதில் நேரம் காலம் போலவே மிக முக்கியமானது தொடும் நபர். ஆக இயல்பாகக்கூட நான் தொடப்படவில்லை. எனும் தகவலை பெண் சொல்ல விரும்புகிறாள். அதனால் மூடுகிறாள் (அந்தத் தகவலை ஏன் அவள் சொல்ல வேண்டும்? ஏனெனில் சிங்கம் போலவே மனிதனில் ஆண் இனமும், எவை தன் குழந்தை என நிச்சயம் செய்து கொள்ள விரும்புவதே)
இப்படி ஆரம்பமான உடை…எவள் அதிகம் மூடி இருக்கிறாளோ அவள் தொடப்படாதவளாக ஆணின் மனதில். எது மறைக்கப்படுகிறதோ அது கவரும்தானே?
இதனாலேயே ஆணோ பெண்ணோ, ஆடை அணிகிறோம். மேலும் நாமும் இடம் மாறிக்கொண்டே இருப்பதாலும், மாறிக்கொண்டே இருக்கும் தட்ப வெப்பத்திலிருந்தும் நம்மைக் காப்பதற்காகவும் உடை உடுத்துகிறோம்.. அதையும் விட நம்மை நம் உயரத்தை அடுத்தவருக்குச் சொல்லவும் தோதாக இருக்கிறது இந்த உடை அல்லவா? எனவே தொடர்கிறோம்.
சரி ஆடை என்பதே சிக்னல்தானா? இல்லை. .ஆனால் ஆடை கண்டுபிடிப்பின் ஆரம்பப்புள்ளை சிக்னலாக இருந்ததால் கவர்வதாக இருந்ததால் அது இன்றும் அப்படி மட்டுமே பார்க்கப்படுகிறது. எவர் மறைப்பதன் மூலம் அடுத்தவரைக் கவர வேண்டுமோ அவர் மட்டும் ஆடை அணியட்டும் என்றில்லாமல், அந்த காலகட்டத்தை எல்லாரும் கடந்தமையால், எல்லாருமே ஆடை அணிவது என்றாகியது. அது தொடர்வதால், கவரும் தேவை இல்லாதவர் அணியும் ஆடைக்கும் ’அதே நோக்கம்’ என்றே பார்க்கப்படுகிறது. ஆடை மூலம் சிக்னல் தரவேண்டிய அவசியத்தில் இன்று நாம் இல்லை.
 

சிக்னல் 2: மொழி, உடல் மொழி

ரி. இருக்கட்டும். ஏன் பெண்ணின் உடை குறித்து ஆணுக்குள் இத்தனை கேள்விகள் பேச்சுகள்? பெண் எப்போதும் தன்னை(ஆணைக்) கவர வேண்டும் என்றும் அது தன்னை நோக்கி அமைய வேண்டும் என்றே விரும்புகிறான். ஏனெனில் அதுதானே அவனது ஆண்மையை இருப்பை நிருபித்ததாகும்? அதாவது அவனை அவள் அங்கிகரித்ததாகும்?அவன் எவற்றையெல்லாம் பெண் தனக்குத் தரும் சிக்னல் எனப் புரிந்துவைத்திருந்தானோ அதுவே வேறெந்த சமயத்தில் பெண்ணிடமிருந்து வெளிப்பட்டாலும் அது தனக்கானதாகவே அவன் நினைக்கிறான். எங்கே அவன் அப்படி நினைத்துவிடக்கூடாது என நினைக்கும் சமயத்தில் பெண் சக ஆணை, அவனுக்கும் தனக்கும் என்ன ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலுமே, “அண்ணா” எனச்சொல்லி அவனை கட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறாள்.
இந்த “அண்ணா” விளிப்பால் ஆணை ஆஃப் செய்யும் டெக்னிக் எல்லா இடங்களிலும், இருக்கிறதுதானே? பெண்ணின் இந்த சாமர்த்தியம் ஆணுக்குப் புரியாதா என்ன? அவனும் அதை கண்டும் காணாமலும் அக்சப்ட் செய்கிறான். ஆனால், ஆணை ஆஃப் செய்வதாக அல்லாமல், உண்மையாகவே ஒரு ஆணை அண்ணனாக நினைத்து அப்படி விளித்தாலும், ஆண் அவமானமாகவே உணர்கிறான். ஏனெனில் தன் நட்பை, அவள் ‘அழைப்பாக’ எடுத்துக் கொண்டு, அதை மறுக்கும் விதமாக “அண்ணா” என்கிறாளோ என சந்தேகிக்கிறான். இருவருமே அண்ணன், தங்கை வேடமிடாமல், வெறும் நட்பு மட்டுமே இருக்க தேவையானது போதுமான மெசூரிடியும், அதை அடுத்தவருக்கு வெளிப்படுத்தும் திறமையும்தான்.
எல்லா உறவுகளையும், நட்பு, சகோதரத்துவம், என எதோ ஒரு பெயருடனேயே டேக் செய்துவிடுகிறோம். எந்த உறவிலும் உறவுப் பெயரிலும் சேர்த்துவிட முடியாத சில பிரியங்கள் இருக்கிறதுதானே? கவனிக்க… எந்த பெயரிலும் பொருந்தா உறவு என்பது வேறு, பொருந்தா உறவு என்பது வேறு.
இது போன்ற சிக்னல் குழப்பங்களைத் தவிர்க்க கண்டு பிடிக்கப்பட்ட யுக்தியே ஒழுக்கம், கற்பு எனும் முகமூடிகள்.
எங்கே அவன் தன் செயலை அவனைக் கவரும் சிக்னலாகப் புரிந்து கொண்டுவிடுவானோ எனும் அச்சத்திலேயே பல பெண்கள் தன்னை இன்னும் இன்னும் மூடிக்கொண்டு அதுவே கற்பு, ஒழுக்கம் என தானும் நம்பி, அடுத்தவரையும் நம்பச்செய்துவிடுகின்றனர். இவர்கள் வளர்க்கும் பிள்ளைகளும் அதே நம்பிக்கையிலேயே..
 

சிக்னலில் குழப்பம்

ன் எப்போதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் எதாவது லடாய்?ஆண் பெண்ணிற்கும் பெண் ஆணிற்கும் அளிக்கும் விருப்ப சிக்னலில் ஏதும் குழப்பமா? புரிந்து கொள்ள முடியாமல் போயிற்றா? ஏன்? எதனால்?
மிருகங்களுக்கு இது போன்ற குழப்பங்கள் இருப்பதாகத் தெரியவில்லையே? மிருகங்களில் எதிர்பாலினத்திற்கு அளிக்கும் சிக்னல் பிரச்சினை இல்லாததற்குக் காரணம்… அவை எதிர்பாலினத்தை காமத்திற்காக மட்டுமே எதிர்பார்க்கின்றன.
மனிதன் அப்படி இல்லை. காமம் மட்டும் அவன் தேவை இல்லை, பேரண்டல் பர்டனின் நீண்ட காலத் தேவையினால் மற்றவர் உடனிருக்க, காதல் எனும் பட்டுத்துணி தேவை.
பெண்ணும் தன்ன் உடன் இருக்கவும், அது தன் குழந்தை எனும் நிச்சயத்திற்கும் காதலும், கற்பும்(அது ஏன் ஆண் விஷயத்தில் பெரிதாக்கப்படவில்லை.? பிறிதொரு சமயம்) அவசியமாகிறது. ஆனாலும் சில பெண்கள் தவறான ஆணைத் தேர்ந்தெடுப்பதேன்? சோப்ளாங்கியான, உபயோகமற்ற வீணாய்ப் போனவனை தேர்ந்தெடுப்பதேன்.?
ஏனெனில், எல்லா மிருகங்களையும் போல இயற்கை வழி மட்டும் மனிதன் நடப்பதில்லை. பிரபஞ்ச உண்மைக்கு எதிர்த்தே பல சமயங்களில்.
பிரபஞ்ச உண்மை..?
எல்லா மிருகங்களுக்கும் தனக்கு பிறக்கும் அடுத்த தலைமுறையைக் காக்கும் கடமை இருக்கிறது. இங்கே நான் குறிப்பிடுவது பேரண்டல் பர்டன். அந்த வினாடியில்தான் பிறந்த குட்டியை தாய் ஒட்டகச் சிவிங்க நாவால் வருடிக் கொடுப்பதும், சில நிமிடங்களிலேயே அந்த குட்டியைத் தள்ளிவிடுவதும் நாம் டிஸ்கவரியில் பார்த்திருக்கிறோம்தானே? “ஓடு….எழுந்து ஓடு..” என கற்றுத்தரும் முயற்சி. மிகக் குறுகிய காலத்திலேயே பேரண்டல் பர்டன் முடிந்து இரண்டும் வெவ்வேறு தனி மிருகங்களாகிவிடுகின்றன.
மனிதனின் பேரண்டல் பர்டன் எனும் குழந்தைய்ப் பராமரிக்கும் காலம் மிக மிக அதிகம். அது பல சமயங்களில் வாழ்னாள் முழுதும் தொடர்கிறது ஆண் குட்டி என்றால்(அதைப் பிறகு பார்ப்போம்) பெண் மிருகங்களைப் பொறுத்தவரை அடுத்த தலைமுறைய் உருவாக்க வேண்டும் அதற்கு எந்த ஆண் மிருகம் வலிமை மிகுந்தது என அறிந்தால் போதும். மனித இனத்தில் அப்படி இல்லை.

  1. எவன் வலிமையானவன்?
  2. எவன் அந்த பேரண்டல் பர்டன் பீரியடில் உடனிருப்பான்?

இந்த இரண்டு தேவைகளையும் கவனத்தில் கொண்டும்,

  1. எவை என் குழந்தைகள் எனும் ஆணின் கேள்விக்கும்

பதில் சொல்லும் விதமாக நாம் ஏற்படுத்திக் கொண்டதுதான் ’திருமணம்’..’ஒருவருக்கு ஒருத்தி’..எனும் அமைப்புகள் எல்லாம்.உண்மையில் அவை இயற்கை அல்ல. அல்லவா? ஆனால் இயற்கையின் தேவையும்தான்.
ஏனெனில் இயற்கைக்கு வேண்டுவதெல்லாம், இன விருத்தி, தப்பிப்பிழைத்தல். பேரண்டல் பர்டனின் போது பிள்ளையின் தகப்பனாக அவன் இருந்தால் மட்டுமே உடனிருப்பான். எனவேதான் அவள் கற்பு என ஒன்றை தன் மீது போர்த்திக் கொள்கிறாள். அல்லது போர்த்தப்படுகிறாள். அதை ஒட்டிய காமத்தை காதல் என்கிறோம். காதல் என்பதே காமத்தின் மீது போர்த்திய பட்டுத்துணிதானே?
நம் தேவை கருதி, ரோடு ரூல்ஸ் போல நாமே விதித்துக் கொண்ட விதிதான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதெல்லாம். அது முற்றான இயற்கை அல்ல என்பதால்தான் முதிர்ந்த வயதில் சில ச்மயங்களில் ஆண் / பெண் இருவருக்கும் வரும் பிரியங்களும், காதல்களும். ஆண் பெண் உறவு எதுவாக இருந்தாலும், நாம்தான் அதை காதல் என டேக் செய்து விடுகிறோமே?

சிக்னல் குழப்பம் ஏன்? என்ன செய்யப்போகிறோம் நாம்?

னெனில், இயற்கையான மனித தேவைக்கும்,
மனித இனம் தப்பிப் பிழைக்க கற்றுக் கொண்ட அல்லது கண்டுபிடித்த விதிகளுக்கும் உள்ள முரணே, ஆண் பெண் சிக்னலில் குழப்பமாக விடிகிறது.
ஆக, முடிவெடுக்க வேண்டியது நாம்தான். இந்த இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்கவும் முடியாது. இரண்டையும் தள்ளவும் முடியாது.
என்ன செய்யப்போகிறோம்?  இணைந்து பயணப்படப் போகிறோமா? அல்லது…

0 Replies to “ஆண்/பெண் சிக்னல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.