போர்முனையிலிருந்து பெண் பத்திரிகையாளர்கள் செய்தி சொல்லும் இந்நாளிலும் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளைப் பற்றி அலசி எழுதும் பெண் பத்திரிகையாளர் எனத் தெரிந்தால், கொஞ்சம் சந்தேகம் கொஞ்சம் வியப்பு கலந்த மறுவினைகளே வருகின்றன. 25 வருடங்களாய் விளையாட்டுகளைப் பற்றி, அதிலும் முக்கியமாய் ஆண்கள் கிரிக்கெட் பற்றி, எழுதி வரும் ஷார்தா உக்ரா, (ஆங்கிலப் பத்திரிகைகளான) மிட் டே, தி இந்து, இந்தியா டுடே போன்ற பல பத்திரிகைகளில் தனிப் பத்திகள் எழுதியிருப்பவர். தற்போது க்ரிக்இன்ஃபோ (Cricinfo) இணையப் பத்திரிகையின் மூத்த பதிப்பாசிரியர்.
ஒரு பெண்ணாய் இந்தத் துறையில் இயங்குவதைப் பற்றி க்ரிக்இன்ஃபோ பத்திரிகையின் தி க்ரிக்கெட் கௌச் பகுதிக்கு அளித்த விரிவான நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.
இருபதுகளில் பெண் என்பதே ஓர் அவஸ்தை போலிருந்ததாகவும், பின் முப்பதுகளில் பெண் என்ற அடையாளம் உதிர்ந்து கூழ் போல் கரைந்து மற்ற சகாக்களுடன் கலந்தபின் நிம்மதியானதாகவும் , முதல் முதலில் ட்ரெஸ்ஸிங் ரூமில் பத்திரிகையாளர்கள் உணவருந்த அழைக்கப்பட்டபோது நடந்த சம்பவங்களையும், பெண் பத்திரிகையாளர் பகுதியில் பெண்களுக்கு டாய்லெட் வசதியே இல்லாதிருந்ததையும் பற்றிச் சுவையாகப் பகிர்கிறார். இன்று இவரே ஒரு மூத்த பத்திரிகையாளர் என்றபோதிலும் சில ஆண் பத்திரிகையாளர்கள் இவருடன் இன்னும் பேசியதில்லை என்கிறார். பத்திரிகைத்துறை, விளையாட்டு இரண்டிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பற்றியும் , பெண்கள் தொடர்ந்து சந்திக்க வேண்டிய எதிர்ப்புகளையும் பற்றி பேசுகிறார். இவரது அனுபவங்களும், இவர் எதிர்ப்புகளை எதிர்கொண்டவிதமும் பெண்கள் ஒரு உதாரணமாய் எடுத்துக் கொள்ளவேண்டியவை.
இங்கு சொல்வனத்துக்காக சித்தார்த்தா வைத்தியநாதனுடன் அவர் உரையாடியது:
நீங்கள் முதன்முதலாக பத்திரிகையாளர்களுக்கான அறைக்குள் (ப்ரெஸ் பாக்ஸ்) நுழைந்த போது எப்படி எதிர்கொள்ளப்பட்டீர்கள்? அந்த மறுவினை எல்லா வயது ஆண்களிடமிருந்தும் ஒரே மாதிரி இருந்ததா?
அந்தக் குறிப்பிட்ட தருணம் எனக்கு நினைவில் இல்லை ஆனால் கிரிக்கெட் பாக்ஸில் பொதுச் சூழல் எப்படி இருந்தது என நினைவிருக்கிறது. பெரும்பாலானவர்கள் மௌனம் சாதித்தனர். ஆனால் நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு முன்னால் இருந்த ஸ்கோரர்களிடமிருந்து ஒரு வகையான குழப்பமும், திகைப்பும் கலந்த ஆமோதிப்பு இருந்தது. இதற்குப் பின் வந்த நாட்களில் இளம் பத்திரிகையாளர்கள் நட்போடு பழகினார்கள், சில மூத்த எழுத்தாளர்களும் என்னை ஏற்றுக்கொண்டு உதவினர். மேலும் சிலர் அப்போதும் மௌனம்தான் சாதித்தனர்.
வேலையில் சேர்ந்த புதிதில், ஆண்களே நிறைந்த ஒரு துறையில் உங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டி இருந்ததால் அதிக அழுத்தம் இருந்ததா? அல்லது யார் என்ன நினைத்தார்கள் என்பது பற்றி நீங்கள் கவலையே பட்டதில்லையா?
நிச்சயம் கவலைப்பட்டேன். அழுத்தத்தையும் உணர்ந்தேன், ஆனால் அது நானே உருவாக்கிக் கொண்டதாகவும் இருக்கலாம். ஒரு சீரியஸ் எழுத்தாளராய் மதிக்கப்படவேண்டும், வெறுமே ஒரு ரசிகை அல்லது க்ரூப்பியாக (Groupie) கருதப்படக்கூடாது என்றெண்ணி முடிந்தவரையில் ஒரு பெண்ணாய் என்னைக் காட்டிக் கொள்ளாமல், கண்ணுக்குத் தென்படாமல் இருக்க விருப்பப்பட்டேன். 4 வருடங்கள் வரை நான் பத்திரிகையாளர் கூட்டங்களில் கேள்வி கேட்டதில்லை.
தொடக்க காலத்தில் சக பெண் பத்திரிகையாளர்கள் இல்லாத வெறுமையை உணர்ந்தீர்களா? அப்படியானால், ஏன்?
மிக அதிகமாய், ஆனால் பெண்கள் அதிகம் இந்த வேலையில் ஈடுபட ஆரம்பித்த பின்புதான் அவர்கள் இல்லாத வெறுமையை எவ்வளவு உணர்ந்திருந்தேன் என்பது அறிந்துகொண்டேன். சாதாரணமாய் உரையாடுவதற்கு, வேலையைப் பற்றி என்றல்ல அன்றாட விஷயங்களைப் பற்றித்தான். ஆரம்ப வருடங்களில், ஆண்களிடையே வேலை செய்யும் போது எப்போதும் வேலையில் கண்ணாய் விறைப்பாக இருக்கவேண்டும் என்பது போல இருந்தேன். அவர்களிடையேயும் எனக்கு நண்பர்கள் இருந்தனர் என்றாலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இத்துறையில் ஈடுபட ஆரம்பித்தது தளைகளை நீக்கிய உணர்வைக் கொடுத்தது.
நீங்கள் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தபோது உங்கள் குடும்பத்தினரின் மறுவினை எப்படி இருந்தது?
எனக்குப் பிடித்ததை நான் செய்வது பற்றி அவர்களுக்கு சந்தோஷம்தான். எனக்கு எப்போதுமே விளையாட்டுகளைப் பார்ப்பதிலும், அது பற்றி எழுதுவதிலும், இந்தத் துறையில் உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் பயணம் செய்வதற்கு இருந்த வாய்ப்புகளிலும் ஆர்வமும், சந்தோஷமும் இருந்தது. என்றாவது “சீரியஸ்” ஆன ஒரு துறைக்கு மாறும் எண்ணம் இருக்கிறதா என்று ஒரு கட்டத்தில் கேட்டார்கள். நான் மாறவில்லை.
ஒரு பெண்ணாக இல்லாமலிருந்தால் வாழ்க்கை எளிதாக இருந்திருக்கும் என எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அல்லது, பெண்ணாய் இருப்பது எப்போதாவது உங்களுக்கு அனுகூலமாக இருந்திருக்கிறதா?
ஆணாய் இருந்திருந்தால் சௌகரியம் என உணர வைத்த மிகப்பெரிய அனுபவம் டாய்லட்கள் பற்றியது! 15 வருடங்களுக்கு முன் பத்திரிகையாளர் பகுதியில் பெண்களுக்கென தனி கழிப்பறைகள் இருக்கவில்லை. பெண்ணாய் இருப்பதின் அனுகூலம், சில சமயங்களில் சில விளையாட்டு வீரர்கள் தங்கள் போராட்டங்கள், பாதுகாப்பின்மைகள், சந்தேகங்கள் பற்றி ஒரு பெண்ணுடன் பேசுவதை எளிதாக உணர்ந்திருக்கக் கூடும் என்பது. அவ்வளவு மட்டும்தான்.
சிலசமயங்களில் ஒரு பெண் எழுத்தாளர் என்பதால் இன்னாருக்கு இந்த பேட்டி கிடைத்தது என்ற பேச்சு வருகிறதே? உங்கள் அனுபவத்தில் பெண் என்பதால் இப்படிப்பட்ட சலுகைகள் கிடைக்கின்றனவா என்ன?
சிலசமயம் தொலைக்காட்சிப் பேட்டிகளில் இப்படி நடக்கிறது, ஒரு பெண் தொலைக்காட்சி நிருபருக்கு ஒரு ஹை ப்ரொஃபையில் பேட்டி கிடைத்துவிட்டால் இப்படிப்பட்ட அவதூறான பேச்சுக்கள் பேசப்படுகின்றன. பெண் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதில் இத்தகைய பேச்சுக்கள் குறைந்து வருகின்றன.
மேலும் விளையாட்டு வீரர்கள் யாருடன் பேசுகிறோம் என்பதைவிட அவர் எந்தப் பத்திரிகைக்கு எழுதுகிறார் என்பதில்தான் அக்கறை காட்டுகின்றனர். ஒரு சிறு பத்திரிகையைவிட பெரிய பத்திரிகைக்கு பேட்டி எடுக்க அனுமதி கொடுக்கக்கூடும். பேட்டி காண்பவர் ஆணா பெண்ணா என்பது பற்றி அவர் கவலைப்படப் போவதில்லை.
இன்றும் விளையாட்டு பற்றி எழுதும் பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் இல்லையே, என்? தொலைக்காட்சியில் கணிசமாக இருக்கலாம் ஆனால் எழுத்துப் பத்திரிகைகளில்? குடும்பப் பொறுப்பு இருக்கும் பெண்களுக்கு வேலை நேரங்கள், பயணம் போன்ற காரணங்களால் இத்துறை கடினமானதாகக் கருதப்படுகிறதா?
நிஜத்தில் இத்துறையில் நிறைய பெண் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பலரும் அறிவதில்லை. தொலைக்காட்சியில் அதிகமாய் அவர்களைப் பார்க்கிறோம், ஆனால் அச்சுப்பத்திரிகைகளிலும் விளையாட்டுப் பகுதியில் ஒரு பெண் பத்திரிகையாளர் என்பது இன்று ஆச்சரியமே இல்லை. ஒவ்வொரு பெரிய ஆங்கிலப் பத்திரிகையின் விளையாட்டுப் பகுதியிலும் இன்று பெண்கள் இருக்கிறார்கள், சிலவற்றில் தலைமைப் பதவியிலும் இருக்கிறார்கள்.
மற்றபடி பயணங்கள், வேலை நேரங்கள் இவை எல்லாம் தொலைக்காட்சி உட்பட எல்லா விதமான பத்திரிகையாளர்களுக்கும் கடினமானவைதான் இத்துறையில் சம அளவில் பெண்கள் இன்னும் இல்லை அரசியல், பாதுகாப்பு, யுத்த தந்திரம், தொழில்துறைகள் போன்ற எல்லாப்பகுதிகளிலும் பெண்கள் எழுத ஆரம்பித்த பின்னும் ஆண்களின் கோட்டையாய் இருந்த ஸ்போர்ட்ஸ் எழுத்திலும் இன்று முன்பைவிடப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஐபிஎல் ஆட்டங்களின் ஒலிபரப்புகளில், அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்ந்தெடுப்பதால், பெண்களைப் பத்திரிகையாளர்கள் செய்யவேண்டிய வேலைகளுக்குத் தேர்ந்தெடுத்து, அவர்கள் அவற்றைத் தொழில்முறையில் செய்யமுடியாமல் தவிப்பதைப் பார்க்கிறோம். இது உங்களைப் போன்ற சீரியஸ் பெண் எழுத்தாளர்களை எந்த விதத்தில் பாதிக்கிறது?
பத்திரிகையாளர்களின் வேலையைச் செய்ய கஷ்டப்படும் இந்த அழகான பெண்களை நான் குற்றம் சொல்லமாட்டேன். முற்றிலும் இந்தப் பழியைச் சுமக்க வேண்டியவர்கள் ஐபிஎல் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்களே. ‘பெண் பார்வையாளர்களுக்காக’ என்ற சாக்கில் தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் பெண்களைப் பார்வையாளர் கண்ணை ஈர்க்கும் கவர்ச்சிப்பொருளாக்கும் வேலையைச் செய்பவர்கள் இவர்கள்.
இது பெண்களுக்கு எதிரானது, பிற்போக்கானது, குமட்டவைப்பது, இதைச் செய்பவர்களில் சிலர் பெண்கள் என்பதும் இதில் வருத்தமான விஷயம்.
இதைப்பற்றி ஒரு வருடத்துக்கு முன்பே ‘தி இந்து’ பத்திரிகையில் நான் எழுதியிருப்பதை இங்கே படிக்கலாம்.
தொலைக்காட்சி என்பது காட்சித்தொடர்பான ஊடகம் என்பது சரி எனினும், ஐபிஎல் தொலைகாட்சி பரப்புகளில் இந்த “கலர்” பெண்கள் செய்யத் திண்டாடும் பணிகளைச் செவ்வனே செய்யக்கூடிய 10 பெண் பத்திரிகையாளர்களையாவது என்னால் அடையாளம் காட்ட முடியும். ஆனால் ஐபிஎல் டிவி உலகத்துக்குக் காட்ட விரும்புவது அது அல்லவே!
இந்தியாவில் பெண்கள் விளையாட்டின் நிலை பற்றி உங்கள் கருத்துக்கள்? வசதிகள், மனப்பாங்கு, வாய்ப்புகள் போன்ற விஷயங்களில் கடந்த 20 வருடங்களில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளனவா?
இந்தியாவின் பெண்கள் விளையாட்டில் மகிழ்ச்சியளிக்கும் விஷயம், முன்னோடிகளான பெண் விளையாட்டு வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது. பி.டி.உஷாவிலிருந்து 4×400 தொடர் ஓட்டக் குழு, ஸாய்னா நேஹ்வால், ஸானியா மிர்ஜா, எம் ஸி. மேரி கோம், ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பள்ளிகல் இவர்கள் அனைவரும் பெண்களுக்கு எதிரான சூழலில் பல தடைகளைக் கடந்து பல கஷ்டங்களை அனுபவித்து அவர்கள் இன்றிருக்கும் இடத்துக்கு வந்திருக்கிறார்கள். இன்றும் பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்குப் பல பிரச்சினைகள் இருக்கின்றன. மீண்டும் மீண்டும் எச்சரிக்கையுடன் அவர்கள் அவற்றுடன் போராட வேண்டியுள்ளன. பெண் விளையாட்டு வீராங்கனைகள் அவர்களது பயிற்சியாளர்களால் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு இன்று அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நிறுவன ரீதியாய் இத்தகையவர்களுக்கு உதவிசெய்யும் தளங்களும். தோன்றியுள்ளன.
சாந்தி சவுந்தரராஜனை விட நியாயமாகவும் ஆதரவுடனும் டட்டி சந்தின் விவகாரம் கையாளப்பட்டுள்ளது. வசதிக்குறைவுகளும், வாய்ப்புக் குறைவுகளும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவில் இருந்தாலும், பெண் விளையாட்டு வீராங்கனைகள் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான மனச்சாய்வுகளுடன் போராட வேண்டியுள்ளது.
இது மிகக் கடினமான போராட்டம், தொடர்ந்து செய்யவேண்டியுள்ள ஒன்று.
அதே சமயத்தில் இன்று ஹரியானாவிலிருந்து குத்துச் சண்டையிலும் மல்யுத்தத்திலும் ஈடுபடும் பெண் வீராங்கனைகள் வருகிறார்கள் என்றால், இத்தகைய சிறு முன்னேற்றங்களைப் பற்றி நாம் சந்தோஷப்பட வேண்டும்.
முரண்நகையான ஒரு விஷயம், நம் நாட்டின் நம்பர் 1 விளையாட்டான கிரிக்கெட்டில் ஒரு புரையோடிய சாதிச் சட்டகம் அவர்கள் அதிகாரத்துக்குட்பட்ட பெண்களுக்கு எதிராய் செயல்பட்டுக் கொண்டிருப்பதும், அதன் பணம் புரட்டும் இயந்திரமான ஐபிஎல் லின் மூலம் அது ஒட்டுமொத்தமாய்ப் பெண்களைப் பார்க்கும் விதமும்.
மேலைநாடுகளைவிட இந்தியாவில் ஒரு பெண் பத்திரிகையாளராக இருப்பது கடினமா? ஏன்?
அதுபற்றி என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியாது. உண்மையில் அது எளிதாகக்கூட இருக்கலாம், ஆனால் நான் என்னுடைய அனுபவத்தை வைத்து மட்டுமே சொல்கிறேன். ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் ‘lad culture” எனப்படும் (ஆண்மையக்) குழு மனப்பான்மை ஆர்வமுள்ள பெண் பத்திரிகையாளர்கள் விளையாட்டு எழுத்தில் நுழைவதைக் கடினமாக்கியுள்ளது. ஆண்களுக்குக் கிட்டுவது போல் லாக்கர் ரூமுக்குத் தமக்கும் அனுமதி கிடைக்க வேண்டும் எனக் கேட்ட பெண் பத்திரிகையாளர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய பயங்கரமான செய்திகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தியா மேலைநாடுகளை விட மேல் என நான் சொல்லவரவில்லை ஆனால் இது அவ்வளவு மோசமில்லை.
நன்றி ஷார்தா உக்ரா, சித்தார்த்தா