அனிதா சர்க்கீஸியன் (Anita Sarkeesian) இராக்கில் பிறந்தவர். அர்மீனியர். ஐந்து வயதில் வீடியோ விளையாட்டுகளுக்கு அறிமுகமானவர். இன்றளவும் எல்லா விழியப் பந்தயங்களிலும் இறுதி நிலையை அனாயசமாக முடித்துவிடுபவர். இப்படித் தொடர்ச்சியாக பல்வேறு கணினி விளையாட்டுகளை, பல்லாண்டுகளாக ஆடிவரும்போது ஒரு விஷயத்தைத் அவதானிக்கிறார்.
எல்லா கணினி விளையாட்டுக்களிலும் பெண்களைப் போகப் பொருளாகவே சித்தரிக்கிறார்கள். எந்த விளையாட்டுமே பெண்ணை தங்கள் நாயகராக, இலட்சிய புருஷராக வைத்துக் கொள்வதில்லை. ஹாலிவுட் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் கிடைக்கும் குறைந்தபட்ச ஜனக்கலவை கூட கிடைக்கவில்லை. முக்கிய, புகழ்பெற்ற விளையாட்டுகளில் எல்லாம் ஒரே ஒரு குறிக்கோள்தான்: சிறையில் அடைபட்டிருக்கும் இளவரசியை மீட்க வேண்டும்; அல்லது தெருவில் சுதந்திரமாக உலா வரும் பெண்டிரை, நாலு வசவுச்சொல் சொல்லி கொல்ல வேண்டும்.
வீடியோ விளையாட்டுகளில் பெண்களை எவ்வாறு சித்தரிக்கிறார்கள் என்பதை வாரந்தோறும், ஒவ்வொரு ஆட்டமாக எடுத்துக் கொண்டு யூடியுப் மூலமாக Feminist Frequency ஒளிப்பதிவில் பேச ஆரம்பிக்கிறார். இதைக் கண்ட சிலர் கோபம் கொள்கின்றனர். அனிதாவிற்கு எதிராக ஃபாத்வா போல் கொலை தண்டனை பிறப்பிக்கிறார்கள். போலி அடையாளம் ஏற்படுத்தி, இணையத்தில் அவருடைய பெயரை சீரழிக்க முயல்கின்றனர்.
இவருக்கு எதிராக வரும் மிரட்டல்களையும் வெற்று ஊளைச் சத்தம் என்று விட்டுவிடமுடியவில்லை. 1989ல் கனடாவின் மான்ட்ரியால் நகரத்தில் மார்க் லெப்பைன் என்பவன் பதினான்கு பெண்களை கொன்று குவித்தான். அவன் பெயரை தங்கள் பயனர் பெயராக வைத்துக் கொண்டிருப்பவர்களைக் கண்டால் நடுக்கமாகவே இருக்கிறது. யூடா பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவாற்ற வருவது கூட சென்ற வாரம் ரத்தானது.
இது போன்ற மிரட்டல்களை எப்படி எதிர்கொள்வது? உண்மையான போராளிகளை எப்படி அடையாளம் காண்பது? வலையில் நடக்கும் போலிப்பெயர் மோசடிகளை எவ்வாறு அடக்குவது? பெண்கள் சொல்வதை சற்றேனும் காது கொடுத்துக் கேளுங்கள் என்பதை XOXO கொண்டாட்டத்தில் பேசும் காணொளி: