வார்ட் 34பி

ஜெயந்தி சங்கர்
Jeyanthi_Sankar_Jayanthi_Shankar_Authors_Writersசிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை எனப் பல தளங்களில் 1995 முதல் இயங்கி வருபவர். தந்தையின் பணி காரணமாக ஒரிசா, ஷில்லாங் உள்ளிட்ட பல்வெறு ஊர்களில் 13 பள்ளிகளில் +2வரை பயின்று, திருச்சி ராமசாமி கல்லுரியில் 1985ல் இயற்பியல் பட்டம் பெற்றார். 1990ஆம் ஆண்டு முதல் கணவர், இரு மகன்களுடன் சிங்கப்பூரில் வசிக்கிறார். இதுவரை 7 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், 1 குறுநாவல் தொகுப்பு, 1 சீனக் கவிதைத் தொகுப்பு, 2 சீனத்துச் சிறுகதைத் தொகுப்பு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். நல்லி – திசையெட்டும் (மொழியாக்க) விருது, கரிகாலன் விருது, ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது, கு. சின்னப்பபாரதி இலக்கிய விருது, திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் பரிசு , திருப்பூர் வெற்றிப்பேரவைப் பரிசு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – ncbh தனுஷ்கோடி ராமசாமி நினைவுப் பரிசு உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிங்கப்பூர் இலக்கிய விருதுக்கு ‘பின் சீட்’, ‘திரைகடலோடி’ ‘முகப்புத்தகமும் சில அகப்பக்கங்களும்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் தேர்வாகியுள்ளன. இவரது ஆக்கங்கள் ஆங்கில, ஹிந்தி, ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. சுயதொழில் செய்து வந்தவர் 2013 முதல் சிங்கப்பூரின் ‘தமிழ் முரசு’ நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
jeyanthisankar@gmail.com

உடையை மாற்றவைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. “ஏன்லா, என்ன இங்க கூட்டு வந்தாங்க?,” என்று கேட்டவள் கண்களிலிருந்து கொடகொடவென்று கொட்டியது. தலையைக் கட்டச் சொன்னதும் உடனே கேட்டாள். தொளதொளவென்று இருந்த பாசிப்பச்சை நிற உடைக்குள் கொஞ்சம் பூசினாற்போலத் தெரிந்தாள். அழுகை கூட ஒருவரை இவ்வளவு வசீகரமாகக் காட்டுமா? எதற்காக இவள் இத்தனை அழகாக இருக்கிறாள்?
“மாட்டேன், எனக்கு எதுக்கு மருந்து?,” என்று அடுத்த அழுச்சாட்டியம். “இல்லைன்னா ஊசி தான் போடணும்,” என்றதும் வாயைத் திறந்தாள். ஒரு சிட்டலோப்ரமை விழுங்க வைப்பதற்குள் பெரும்பாடாகி விட்டது.விழுங்கிய பிறகும் உறக்கம் கொள்ள முடியாதிருந்தாள். என்ன செய்வதென்று தெரியாமல் அவள் தவித்தது அரை இருளில் தெரிந்தது. ஓரிரு மணிநேரத்துக்கு கேட்டவரோடெல்லாம் சதுரங்கமாடினாள். அதுவரை கண்ணீரைத் துடைத்தவாறிருந்தவள் அழுகையை நிறுத்தி விட்டு சுற்றிலும் பார்த்தவாறு மேசைக்கருகில் இருந்த நாற்காலில் அமர்ந்திருந்தாள். முன்னறையில் திடீரென்று சளசளத்தன புதிய குரல்கள்.
அவளுடைய விவரக் குறிப்பை எடுத்தப் பார்த்தேன். மொட்டை மாடியில் நின்றவாறு, “இப்பவே எட்டாவது மாடிலருந்து குதிச்சிர்றேன்,” என்று சொல்லி அழுததைக் கேட்ட அவளது மேலதிகாரி விரைந்து போலிசுக்குச் சொல்லி, வலுக்கட்டாயமாக அவளைக் கூட்டி வந்து அலுவலக அறையில் அமர வைத்து முன்னிரவில் இங்கே கூட்டி வந்து விட்டிருந்தனர். வீடு புக்கிட் மேராவில். வேலையோ காலாங்கில். கொஞ்ச காலமாக தொட்டதெற்கெல்லாம் அழுதாள் என்பதைக் கடந்து அதில் வேறு ஒரு குறிப்புமில்லை. காலையில் டாக்டர் வந்த பிறகு தான் கூடுதல் விவரம் தெரிய வரும்.
sv-ws-logo copyபெயர் கவிதா. கவிதையாகத் தான் இருந்தன அவளது கண்களும் பார்வையும் ஒயிலாய் அவள் அசைந்ததும். ஆனால், தன்னையே மாய்த்துக்கொள்ள எண்ணியது ஏனென்று தான் புரியவில்லை. ஆழ்மனத்தின் தீவிர யோசனை ஓர் இழையென அவளுக்குள் சதா ஓடியபடி இருந்ததோ என்று பட்டது. செதுக்கியது போன்ற அந்தக் கரிய முகத்திற்கு அது கொடுத்த கவர்ச்சி மிக ஆச்சரியப்படுத்தியது. எலும்பின் மேல் தோலை தடவி இழுத்துக் கட்டியது போன்ற உடலில் தேவையற்ற சதை துளிக் கூட இல்லை. சராசரிக்கும் அதிக உயரமும் பளபளக்கும் சருமமும் கோவில் சிற்பத்தை நினைவு படுத்தின. சற்று முன்னர் இளநீலநிற ஜீன்ஸ், சட்டையில் அலையலையாக வழிந்த கருங்கூந்தலுடன் அவள் ஒய்யாரமாய் உள்ளே நுழைந்த காட்சி சூழலுக்குத் தொடர்பில்லாமல் சுற்றியிருந்தோரை ஈர்த்தது.
கூடத்தின் மறுகோடியில் திடீரென்று சாங்சாங் வீரிட்டுக் கத்தியதும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த கவிதாவின் கண்கள் மீண்டும் பெருகின. படுக்கையோடு சேர்த்துக் கட்ட விடாமல் முரண்டு பிடித்த சாங்சாங் கத்தலும் கூச்சலுமாகத் தள்ளிவிட்டாள். இது போன்ற நேரங்களில் சாங்சாங்கின் முப்பது வயது உடம்பில் வெளிப்படும் பலம் அசாத்தியமானதாக இருக்கும். மருந்து இன்னும் வேலை செய்ய ஆரம்பிக்கவில்லை. பகலில் பார்ப்பவரோடெல்லாம் கைகுலுக்கிக் கொண்டே இருக்கும் சாங்சாங் இரவில் சரியாகத் தூங்குதே இல்லை.
வார்ட்டில் ஒவ்வொரு படுக்கையாகச் சென்று தொட்டு, உலுக்கி, எழுப்பி கைகுலுக்கி மகிழ்ந்து எல்லோர் உறக்கத்தையும் கலைப்பாள். அதனால், காலையில் எல்லோரும் எழும் வரை சாங்சாங்கை படுக்கையோடு கட்டியே வைத்திருந்தனர். கையையும் தான். பின்னிரவில் ‘டையப்பர்’ மாட்டிவிடப்பட்டதையும் மறந்து சில சமயம் காலையில் கழிவறைக்குப் போகவேண்டும் என்று கட்டை அவித்து விடக் கெஞ்சுவாள். கொஞ்ச நேரத்தில் காச் காச் என்று கத்துவாள் என்பதால் கெஞ்சும் போதே அகலமான ஒட்டுப்பட்டையை அழுத்தி ஒட்டி வாயை அடைப்பதுதான் வழக்கம்.
கண்ணைத் துடைத்தவளாக மிரட்சியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கவிதாவின் கைத் தொலைபேசி மினுங்கியது. சுற்றுமுற்றும் பார்த்தவாறே, “நீ எடுக்கல. அதான் மெசேஜ் விட்டேன். அம்மாவுக்கா? ம், இப்ப சொந்தமா படுக்கைய விட்டு எழுந்திருக்க முடியுது. செலவு தான் கண்டபடி ஆகுது. இந்த வேலைய விட்டா ரொம்பவே கஷ்டமாயிரும். அதான், பல்லக்கடிச்சிட்டு இருப்போம்னு நெனச்சேன். ஆமா, அவனே தான். எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு @#$%& அவன கழுத்த நெறிச்சிரலாமான்னிருக்கு. அம்மாவுக்கா? இல்ல, தெரியாது. சொல்லிராத. கொஞ்சம் முன்ன போன் அடிச்சேன். இன்னைக்கி ராத்திரி உங்க வீட்டுக்குப் போறதாச் சொல்லியிருக்கேன். கேட்டா நீயும் அதையே சொல்லிரு. இல்லயே நா அழுவல்ல,” என்று இணைப்பைத் துண்டித்தவள் முகங்கோணி அழுது கொண்டிருந்தாள். அழுகையை மறைக்க நினைத்தவளாக சட்டென்று சுற்றுமுற்றும் பார்த்து விட்டு கைகளால் துடைத்துக்கொண்டாள்.
“ரொம்ப கெஞ்சினதால ஃபோன விட்ருக்காங்க. கண்டிப்பா நாளைக்கி வாங்கிருவாங்க,” என்றேன். கட்டுப்பாட்டையும் மீறி அழுமை மீண்டும் வாயோரம் துடித்து கன்னத்தில் வழிந்தது.
யாரிடமும் பேச விரும்பாதவளாக இருந்தாள். சூழலைக் கண்டு அவள் மிக பயந்தது தெரிந்தது. விளையாடுவோமா என்று கேட்டாலும் தலையசைத்து ஆமோதிப்பதோ புன்னகைப்பதோ கண்களால் ஆமென்பதோ கிடையாது. கேட்ட கேள்விக்குத் தரும் பதிலாக நேராக வந்து உட்கார்ந்து மளமளவென்று காய்களை அடுக்கினாள். படுக்கைக்குப் போவதில்லை என்ற தீர்மானத்துடன் இருந்தவள் போல மேசையை விட்டு அகலவில்லை. மஞ்சள் மின் விளக்கு வெளிச்சத்தில் பல்லாயிரம் கோடுகளாகச் சொறிந்த மழையைப் பார்த்தபடியிருந்தாள்.
நள்ளிரவு முதல் என்னுடன் மூன்றாவது ஆட்டம். இரண்டு முறையும் என்னைத் தோற்கடித்திருந்தாள். இம்முறையேனும் அவளை வெல்ல முடியுமா தெரியவில்லை. சடசடவென்று அதற்கான வாய்ப்புகளை எல்லாம் அவள் துரத்தியடித்தாள். கண்டிப்பாக சதுரங்கத்தில் ஓர் உயர்ந்த நிலையை எட்டியவளாகத் தான் இருக்க முடியும்.
மற்ற பெண்களுடன் மாற்றி மாற்றி ஆடிக் கொண்டிருந்தவளை முதல் தடவை நான் கூப்பிட்ட போது சடாரென்று தலை நிமிர்த்தி என்னை அவள் கண்ட கணத்தில் அவளது கண்கள், “நீங்க ஒரு ஸ்டாஃப் நர்ஸ். நானோ ஒரு நோயாளி. அதுவும் மனநல நோயாளிகள் வார்ட்ல சேர்க்கப்பட்டிருக்கேன். என்னையவா உங்ககூட விளையாடக் கூப்டறீங்க?”, என்று ஏதேதோ பேசின. கண்ணீர் திரண்டு விடுவது போலக் கண்களிரண்டும் மின்னின.
அவளுடைய கைப்பேசி மீண்டும் அடித்தது. என்னைப்பார்த்து லேசாகத் தலையசைத்து விட்டு மறுபுறம் திரும்பி குரலைத் தழைத்துக் கொண்டு பேசினாள். “கண்டிப்பா இல்ல. ஒரு கோபத்துல தான் அப்டி சொன்னேன். அந்த டெரிக் #$%&@ கம்…. சரியான குள்ள நரி. $%&@# விஷயத்த நா வெளிய சொல்லிருவேன், நா குதிச்சிட்டாலும் அவனுக்கு சிக்கல்னு சாமர்த்தியமா முந்திகிட்டான் படுபாவி. நாமட்டும் நல்லாப் படிச்சிருந்தா இவனுகளோட இப்டி கஷ்டப்பட்டிருக்க வேணாம். ப்ளீஸ், காலைல சீக்கிரமா வந்து என்னக் கூட்டுப் போய்ரு,” என்றவாறு இணைப்பைத் துண்டித்து விட்டு என்னைப் பார்த்து உட்கார்ந்து கொண்டு மறுபடியும் காய்களை அடுக்கினாள். ஆறாவது நிமிடத்தில் ஒரு யானை, ஒரு குதிரை, இரு சிப்பாய்களை அனாயாசமாக வெட்டித் தள்ளியிருந்தாள். சலனமில்லாத இறுகிய முகபாவனையைத் தொடர்ந்தாள்.
நான் விளையாடி வருடங்களாகிவிட்டன என்ற காரணத்தைச் சொல்லவே எனக்குத் தயக்கமாக இருந்தது. பள்ளிக் காலங்களில் சதுரங்கத்தில் முதலிரு இடத்துக் கீழே நான் போனதில்லை. இருப்பினும், படிப்பை முடித்தே பத்தாண்டுகளாகின்றன. பார்க்க பதினாறு போலத் தெரிந்த அவளோ இருபத்தியோரு வயது நிரம்பிய யுவதி.
எனக்கு அழைப்பு வந்திருப்பதாகக் கூப்பிட்டார்கள். ஒரேயொரு நிமிடம் பேசி விட்டு வந்து பார்த்தால் கவிதாவைக் காணோம். கழிவறைக்குத் தான் போயிருப்பாள் என்று எண்ணியது போலவே அங்கே கண்ணில் பட்டது அவளது பீதி அப்பிய முகம். சடாரென்று அருகில் சென்று இடப்புறத்தில் எட்டிப்பார்த்தால் அஸ்மா அங்கே ‘டாய்லெட் டிஷ்யூ’ ரோலை விறுவிறுவென்று இழுத்துக் கொண்டே பல்லைக்காட்டிச் சிரித்தது தெரிந்தது. “அய்யய்யோ, லோராஸ்பாம் கொடுக்க மறந்துட்டாங்க போல,” என்றேன் கவிதாவைப் பார்த்து. அவளோ அஸ்மா வைப் பார்த்து அழுது கொண்டிருந்தாள்.
“அஸ்மா, கம் லெட்’ஸ் கோ,” என்று மெதுவாக அவரது கையைப் பற்றி இழுத்து கூடத்துக்குக் கூட்டி வந்து அவரது படுக்கையில் படுக்க வைத்தேன். நெளிந்து திருகியவர் ஓர் அதட்டுப் போட்டதும் அசையாது கால்நீட்டிக் கண்மூடினார்.
மேசையில் தலையைக் கவிழ்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். “பேசாம நீயும் போய் படுத்துத் தூங்கலாம்ல? மணி ஒண்ணாச்சி, தெரியுமா?,” என்றேன்.
சற்று தயங்கியவாறே, “உன் கிட்ட ஒண்ணு கேக்கலாமா?,” என்றேன். என்ன என்பது போல நிமிர்ந்து பார்த்தாள். “நீ எப்டி இங்க?”, என்று நான் கேட்டதுமே முதல் நொடியில், “ப்ச இதுக்குத் தானா இவ்ளோ பீடிகை,” என்பது போன்ற ஏளனம் மின்னி மறைந்தது.
“பிடிக்கல்லனா வேணாம்,” என்ற வாறே நகர்ந்த என் தோளை இறகெனத் தொட்டாள்.
அவளது பார்வையில் அதுவரை இருந்த வெறுமை உயிர் பெற்று சற்றே சலனங்காட்டியது. பதிலாக ஏதோ சொல்ல வருகிறாளோ என்று நினைக்கும் அளவிற்கு ஒரேயொரு கணம் கண்களில் லேசான ஈரமின்னல் தெறித்து மங்கியது. திறந்த வாயைச் சட்டென்று மூடிக் கொண்டாள். கூர்ந்த என் பார்வையைச் சந்திக்க விருப்பம் இல்லாதவளாகக் கண்களைத் தாழ்த்திக் கொண்டவளின் வாயோரம் லேசான துடிப்பு. எதையோ சொல்லவரும் அசைவாக இல்லாமல் அழுகைக்கு முன்பானதாக இருந்தது. வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்வது தெரிந்தது. “பேச ஆரம்பிச்சா அழுக வரும் அதான்,..”, என்றவள் குரலில் மயில் அகவுவது போன்றதொரு பிசிறு தட்டியது.
இருவருமாக மேசையை அடைந்தோம். “இன்னொரு ஆட்டம் ஆடலாம்,” என்று சதுரங்கப் பலகையைச் சுட்டினேன்.
வலது கையால் தன் சிறிய காதுக் கம்மலை நிமிண்டியவாறே, “எப்பயுமே என் பாஸ் பிரச்சினை செஞ்சிட்ருந்தான். ஒரே ஒருநாள் என் கூட வந்து இருந்தா கொறஞ்சா போயிருவன்னு நெறைய தடவ மெரட்னா அந்த சீனத் %&@#$ . போன வாரம் ஆனுவல் டி அண்ட் டில நிறைய நிகழ்ச்சிகள் இருந்துச்சி. நா இன்னொரு கூட்டாளியோட டான்ஸ் ஆட்னேன். நா டிரெஸ் மாத்தரப்ப அம்மணமா வீடியோ எடுத்து ப்ளாக் மெயில் பண்ணான். வெளிய சொன்னா யூட்யூப்ல போட்ருவேன்னான்.”
“போலிஸ்கிட்ட சொல்லிர வேண்டியது தானே.”
“அம்மா ஹார்ட் பேஷண்ட். பொட்டுனு உயிர விட்ருவாங்க.”
முதலில் வெள்ளையை தன் பக்கம் வைத்தவள் திருப்பி கருப்பையே தெரிவு செய்தாள். சில நிமிட ஆட்டம் மௌனமாகவே கடந்தது.
குதிரையைப் பின்னகர்த்திய என்னுடைய அசைவை கவனித்தவள் தனது யானையைக் கொண்டு என் குதிரையைத் துரத்துவதா அல்லது என் ராணிக்கே நெருக்கடியைத் தரலாமா என்று யோசிப்பதை அவள் கண்களும் உடல்மொழியும் காட்டின.
“பேசாம உங்க அப்பாகிட்ட சொல்லிரேன்.”
“அப்பா இல்ல. சூதாடி, குடிச்சி, சூதாடிக் குடிச்சிக் குடிச்சே செத்தாரு. ரெண்டு வருஷமாகப் போகுது. இருந்தப்பயும் நிம்மதி இல்ல. போனப்புறமும் நிம்மதி இல்ல, எங்களுக்கு. அவரு சேத்து வச்ச கடனையெல்லாம் அடக்கறதுக்குள்ள நா கெழவியாயிருவேன்னு தோணுது. எங்கம்மாவுக்கு என்ன விட்டா யாருமில்ல.”
எதிர்பாராத நேரத்தில் உரக்கப் பாட ஆரம்பிப்பது லட்சுமியின் வழக்கம். ஆனால், அன்றைய இரவு பாட்டு வரிசை நிற்கக் காணோம். நேரமாக ஆக, அடுத்தடுத்த பாட்டுக்கு சத்தம் கூடியபடியிருந்தது. ‘சட்டி சுட்டதடா, கை விட்டதடா’, ‘போனால் போகட்டும் போடா,’ என்று எல்லாமே சோகமான, விரக்தியான பழைய தமிழ்த் திரைப்படப்பாடல்கள். இனிமையாகப் பாடுவதாக அவர் நினைத்துக் கொள்வார். ஆனால் அது வெறுமன ஒப்பிப்பது போலவே இருக்கும். எப்போதும் இருக்குமிடம் தெரியாமல் இருக்கும் லக்ஷ்மி பாட ஆரம்பித்தால் எல்லோரையும் ஒருவித பதட்டத்தில் தள்ளுவார். ஹாலோபெரிடோல் ஊசி போட்டால் தான் சற்றே அடங்குவார். சட்டென்று, “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், அது ஆணவச் சிரிப்பு,” என்று கவிதாவை கைநீட்டிப் பாடியதைக் கேட்டதும் எனக்குள் சிரிப்பு கிளம்பியது.
நல்ல வேளை கவிதா கவனிக்கவில்லை. கேட்டிருந்தால் அதற்கும் அழுதிருப்பாள். அச்சொற்கள் அவள் காதில் கூட விழுந்ததாகத் தெரியவில்லை. வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். சன்னல் சட்டத்தில் துளித்துளியாக மழை நீர் இறங்கின.
“லக்ஷ்மிம்மா, ஊசி வேணுமா? பேசாம தூங்குங்களேன்”, என்றதும் சடாரென்று இழுத்து முகத்தைப் போர்த்திக் கொண்டார்.
“இவங்கள்ளாம் தெளிவா இருக்காங்க, இல்ல?”, என்றவளுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் வெறுமன வெறித்தேன்.
குனிந்து கால் செருப்பை நிமிண்டியபடி, “இவங்களயெல்லாம் வெளிய விட்டுட்டு வெளிய உள்ளவங்கள இழுத்துட்டு வந்து உள்ள அடச்சிரணும்,” என்று குரலைத் தாழ்த்திக் கொண்டு அவள் சொன்ன அந்தச் சொற்களில் தெறித்த குரோதமும் விரக்தியும் என்னை ஒரு கணம் அசைத்தன.
நிமிர்ந்தவள் சூன்யத்தில் பார்வையைக் குவித்தாள். மீண்டும் விளையாடப் போகிறோமா என்றே தெரியவில்லை. எல்லோரும் உறங்கிய நிலையில் இவளை அப்படியே விட்டுவிட்டுப்போவதா அல்லது அங்கே உட்கார்ந்திருப்பதா என்று யோசித்தேன். கண்ணைச் சுழற்றியது. வண்டின் ரீங்காரமென மின் விசிறியின் ஓசை மட்டும் கேட்டது.
என் அசைவை உணர்ந்தவளாக மேசை மீது கிடந்த காய்களையே சில நொடிகள் உற்று நோக்கி விட்டு என் முகத்தைக் கூர்ந்து ஆராய்பவள் போலப் பார்த்தாள்.
“பேசாம நா இங்கயே இருந்தர்றேன், சிஸ்டர்.”
 
****
 
 
 
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.