லெமாங்கும் தனி மொழியும்

இக்கதை வாசிப்போம் சிங்கப்பூர் 2013” நிகழ்ச்சியின்போது சிங்கப்பூர் தேசிய நூலகத்தினால் வெளியிடப்பட்ட நான்கு மொழிச் சிறுகதைகளில் ஒன்று.
குறிப்பு: இந்தக் கதையைப் படிக்கத் தொடங்குமுன் மலாய்ப் பண்பாட்டுடன் தொடர்புடைய சில   சொற்களைப் புரிந்துகொண்டு படிப்பது நல்லது  என்பதால் அந்தச் சொற்கள் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
லெமாங்:இது மலாய்ப் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்ட அரிசியைக் கொண்டும் (இதனைக் கவுணி அரிசி என்றும் அழைப்பர்.) தேங்காய்ப்பால்கொண்டும் உட்குழிவான மூங்கில் குழாயில் வாழையிலையை வைத்துச் சமைக்கப்படும் உணவு.
அங்கா: இரண்டாவதாகப் பிறக்கும் குழந்தையை இவ்வாறு அழைப்பர்.பிறக்கும்போது இட்ட பெயர் வேறாக இருக்க அழைக்கும்போது அங்கா என அழைப்பர். மிகவும் செல்லமான ,விருப்பத்திற்குரிய குழந்தையை அழைக்கும் பெயர் என்றும் இதனைக் கொள்ளலாம்.
புசு: அப்பாவுடன் பிறந்த அல்லது அம்மாவுடன் பிறந்த மிக இளைய சகோதரியை இவ்வாறு கிராமப் புறங்களில் அழைப்பர்.
உவான் என்னும் பெயரும் கிராமப்புற மக்கள் அழைக்கும் பெயராகும்.
பெர்பாத்தி வழக்கம்: சுமத்ராவின் மினாங்காபுவிலிருந்து தோன்றிய இந்த வழக்கம் நெகிரி செம்பிலான் மாநிலத்திலும்,மலாக்காவின் சில பகுதிகளிலும் வழக்கில் உள்ளது.
 

Lemang_Cooking_Recipes_Malaya_Eat_Food_Lemong_Malaysia

மிகவும் தாமதமாகிவிட்டது. நான் கல்லறையில் இருக்கும்போது அழுது புலம்பியபடி “புசு! இதை எப்படி நான் சமைப்பது? என் குழந்தைகள் இதைச் சாப்பிட விரும்புகிறார்கள். இதை நான் எப்படி தயாரிப்பது என்று கேட்டால் அப்போது என்னால் உனக்கு உதவ முடியாது.”
அங்காவால் இன்னும் அவள் குரலைக் கேட்க முடிகிறது. அவனுடைய புசுவின் குரல்தான் . புசுவின்   மெத்தென்ற   மென்மையான உடலைக் கதகதப்பிற்காக அணைத்தது அவனது நினைவில் அடிக்கடி வந்துகொண்டிருந்தது. புசுவின் விருப்பத்திற்கு உரிய மருமகன் அங்கா தான் என்பது அங்காவிற்குத் தெரியும். ஒவ்வொரு முறையும் அங்காவின் அப்பா தன் குடும்பத்தை கம்போங்கிற்கு (கிராமத்திற்கு) அழைத்துச்செல்வது அங்காவிற்குப் பெருமகிழ்ச்சி தரும். அங்கா புசுவின் முழுகவனத்தையும் பெறுவான்.
அங்காவுக்கும் புசுவுக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் கூட அவ்வளவு இல்லை.பத்து வயது மட்டுமே. இருவரும் ஒருவருக்கொருவர் நகர வாழ்க்கை , (கம்போங்) கிராம வாழ்க்கை பற்றிய ரகசியங்களைப் பகிர்ந்துகொண்டனர். அங்கா மிகவும் இளைய அத்தையான புசுவைத் தான் பெற்றிருக்காத சகோதரியைப் போலவே கருதினான்.
sv-ws-logo copyஅங்கா கிராமத்து வாழ்க்கை முறையைப் பெரிதும் விரும்பினான். அவனுடைய மூத்த சகோதரனைவிட அந்த வாழ்க்கை முறை அவனுக்கு மிகவும் ஒத்துப்போனது. அவன் புசுவுடன் செடிகளுக்கிடையில் சென்று இருவரும் மூங்கிலின் குருத்துக்களைத் தேடினார்கள். உவானின் வயலில் நடப்பட்ட இளம் டுரியான் நாற்றுக்களைத் தேடினார்கள். சில நேரங்களில் மீன் பிடித்தார்கள். சில சமயங்களில் இருள் கவிந்ததும் கோழிகளையும் வாத்துக்களையும் அவற்றின் கூண்டுகளுக்கு ஒட்டினார்கள்.
அங்காவுக்குக் “கம்போங் வாழ்க்கை வீர சாகசங்கள் மிக்கதாயிருந்தது” என்று ஒரு முறை தன் அண்ணனிடம் கூறியிருந்தான்.அண்ணனோ தன் உதடுகளைப் பிதுக்கி முகத்தைச் சிடுசிடுப்பாக்கிக்கொண்டான். அங்கா அவர்களுக்கிடையே இருந்த வித்தியாசமான ஈடுபாடுகளைப் பொருட்படுத்தவில்லை. அவனுக்குப் பள்ளி விடுமுறை எப்போதெல்லாம் வருகிறதோ அவன் முதலில் கிராமத்திற்குப் போக ஆர்வம் காட்டுவான் அல்லது எவ்வளவு விரைவாக அவனுடைய அப்பாவால் அவனைக் கிராமத்திற்கு அனுப்ப முடிந்ததோ அப்போதெல்லாம் அவன் அங்குச் சென்றான். அவன் பெரியவனாக வளர்ந்த பிறகு அவன் அப்பா அவனைக் கொண்டுவிடும் வரை அவரைச் சார்ந்திராமல் அவனாகவே பேருந்து மூலம் அங்குச் சென்றான்.
விரைவில் அங்காவுக்கு அது வழக்கமாகிவிட்டது. ரமடான் மாதத்தின் முடிவில் அவன் உவான், புசு ஆகியோருடன் கம்போங்கில் காலம் கழித்தான். சில சமயங்களில் அவனுடைய பெற்றோரும் உடன்பிறப்புக்களும் பிறகு வருவார்கள். அங்கா முதலில் வந்து விருந்தளிப்பவர் போலத் தன் குடும்பத்தினரை வரவேற்பான்.
இப்போது எல்லாமே மாறிவிட்டன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரைதான் அவை மகிழ்ச்சியான நினைவுகள். புசுவுடன் இணைந்து விதைத்த டுரியான் பழக்கொட்டைகளை நீண்ட காலமாகக் கவனிப்பதில்லை. மூங்கில் செடிகளில் வளரும் குருத்துகள் பற்றிப் பொருட்படுத்துவதில்லை. உவானின் கோழிகளும் வாத்துகளும் திறந்த வெளியில்தான் தூங்கின. கவலையற்ற அந்த நாள்களின் பழைய நினைவுகளை அங்கா இப்போதெல்லாம் நினைப்பதே இல்லை.
உண்மையில் அங்கா மிகவும் ஏமாற்றம் அடைந்திருந்தான். அவன் மரியாதையின்றி நடத்தப்பட்டதாகவும், ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் உணர்ந்தான். அதற்கு புசுவே காரணம் என நினைத்தான்.
“அப்பா! நாம் லெமாங் தயாரிக்கலாமா ? நீங்கள் அதை நன்றாகச் செய்வீர்கள் என்று அம்மா கூறியிருந்தார். நான் லெமாங் செய்வது எப்படி என்று அறிய விரும்புகிறேன்” என்று அவன் மகள் கேட்டாள்.
அங்கா நம்பிக்கை நிறைந்த அவளது கண்களைப் பார்த்தான்.அப்பார்வை அவனைக் கெஞ்சுவது போல இருந்தது. அவன் அமைதியாக அவளைப் பார்த்தான். மகளின் வேண்டுதல் காரணமற்றது அல்லவே? ஆனால் நான் எப்படிப் பதின்ம வயதுடைய மகளிடம் அதைக் கூறுவேன்? நீண்ட காலத்துக்கு முன்பே தேய்ந்துபோன மரபுகளின் மீது ஏற்பட்ட காதல் அல்லவா? புசு அவனுக்குக் கற்பித்த எதனையும் அவன் நினைவுகூர விரும்பவில்லை.
மகளே! “அம்மாவின் கம்போங்குக்குச் செல்வதற்கு ஒரு நாள் முன்பு லெமாங் வாங்குவோம் .. அம்பாங்கான் அருகில் உள்ள ரமடான் சந்தையில் அல்லது ஜாலான் ஜெலேபுவுக்கு அருகில் வாங்குவோம்” மகளின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் அவன் நம்பிக்கையோடு பதில் கூறினான்.
“அப்பா! வாங்குவதற்கும் செய்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. நான் இணையத்தில் சில நிழற்படங்களைப் பார்த்தேன். லெமாங்கை வறுப்பதற்கு நிறைய இடம் தேவைப்படாது. நம் வீட்டுப் பின்புறத்தில் செய்யலாம்.. உழவர் சந்தையில் நாம் மூங்கிலை வாங்கலாம் என்று நான் இணையத்தளத்தில் படித்தேன். அவர்கள் வாழையிலையை மூங்கில் குழாய்க்குள் வைத்துக்கூட விற்கிறார்கள். தேங்காயைத் துருவி அதலிருந்து பால் எடுக்கச் சிரமமாக இருந்தால் நாம் சிப்பங்களில் (பாக்கெட்டுகளில்) விற்கும் தேங்காய்ப்பாலைக் கூடப் பயன்படுத்திக்கொள்ளலாம். நாம் நோன்பு மாதம் (ரமடான்) தொடங்குவதற்கு முதல்நாளில் அம்பாங்கான் சந்தைக்குச் சென்று பார்க்கலாம்.அங்கு நிச்சயமாக விற்கப்படும் “.
அங்காவின் மகள் அவனுடைய பொறுமையைச் சோதிக்கத் தொடங்கினாள்.
“நீ பேசுவதைப் பார்த்தால் ஏற்கெனவே நீ லெமாங் செய்ததைப்போல அல்லவா இருக்கிறது?நான் உனக்குச்சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை. இணையத்தளம் மூலம் ஏற்கெனவே உனக்குத் தெரிந்திருக்கிறது. நீ அதிலிருந்தே எப்படிச்செய்வது எனத் தெரிந்துகொள்! லெமாங் செய்வது எப்படி என்று யாராவது ஒருவர் வீடியோ படம் எடுத்து அதை இணையத்தில் ஏற்றியிருக்கலாம் என நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் நீ அங்கிருந்து அதனை எப்படித் தயாரிப்பது என்று பார்!”
“இணையத்தில் தகவல் இருந்தாலும் கூட நாமே லெமாங் தயாரிப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்குமே அப்பா!” அங்காவின் மகளும் விடுவதாய் இல்லை. எதிர்காலத்தில் எனக்குக் குழந்தை பிறந்து அவள் லெமாங் சாப்பிட விரும்பினால் அவள் என்னைத் தயாரித்துத் தரச் சொல்லலாம் இல்லையா? யார் அறிவார்கள்? நான் எப்படி அவளுக்குச் செய்து காட்டுவது? நீங்களும் உயிருடன் இல்லாவிட்டால் நான் உங்களின் கல்லறைக்குச் சென்று அழுது புலம்பமுடியாதே அப்பா! இதை எப்படித் தயார் செய்வது? என் குழந்தைகள் இதைச் சாப்பிட விரும்புகிறார்கள். இதைத் தயாரிக்க எனக்குத்தெரியாது. உங்களாலும் எனக்கு உதவமுடியாது என்றால் பிறகு என்ன செய்வது?
அங்கா இரத்த அழுத்தம் அதிகரிப்பதாக உணர்ந்தான். அவனுடைய மகள் கடந்த காலத்து புசு போலவே பேசுகிறாளே! புசு போல சிறப்பான ‘மினாங்காபு’ ஒலிப்புமுறையில் பேசவில்லையே தவிரப் பேச்சில் புசுவை அப்படியே எதிரொலிக்கிறாளே! இவள் புசுவின் மறுபிறப்பா? (மூலத்தில் மறுஅவதாரமா? என்று உள்ளது. அவதாரம் என்பது இந்துமதப்படி இறைவன் மட்டுமே எடுப்பது இறைவன். மேலிருந்து கீழ் இறங்குவது எனப்பொருள்படும். ஆகவே மறுபிறப்பா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.)
அங்காவுக்கு புசுவால் ஏற்பட்ட ஏமாற்றம் உச்சத்தைத் தொட்டது. அப்போது அங்காவின் மனைவி அவனுடைய இளைய மகளைக் கர்ப்பத்தில் சுமந்திருந்தாள். திருமணமாகிய பத்து ஆண்டுகளில் ஒரு முறை கூடக் கம்போங்கில் காலடி எடுத்துவைக்கவில்லை அங்கா. புசு அவனுக்குச் செய்த செயலால் அவனுடைய இதயம் சுக்குநூறாக உடைந்திருந்தது.
அங்காவின் மகள் விடாப்பிடியாக “நாம் லெமாங் தயாரிக்கலாமா? “ என்று நச்சரித்துக்கொண்டிருந்தாள்.
அங்கா முறைத்தான். அது அவள் கண்களை ஊடுருவியது.அப்போது அங்காவின் முறைப்பு அவன் மகளுடைய அந்தக் கோபப் பார்வையைச் சந்தித்தது. அவளுடைய அந்தக் கோபப்பார்வை கூட புசுவின் கோபப்பார்வை போல் தான் இருந்தது. நாம் எப்போதும் போல் “கெத்துப்பாட்டுக்குத் “ தயார் செய்வோம் என்றான்.
அவன் மகள் உற்சாகமில்லாமல் நடந்துபோனாள். அவள் முகத்தில் தவழ்ந்த புன்னகை மறைந்துபோனது. அவள் சமையலறைக்குள் மறைவதற்குள் அவள் சிடுசிடுத்த முகத்துடன் தந்தையைப் பார்த்தாள்.
மகளின் எதிர்வினையால் அங்காவின் மனம் அலைக்கழிக்கப்பட்டிருந்தது. அவனுடைய மகளுக்கும் புசுவுக்கும் நிறைய ஒற்றுமை இருந்தது.எரிச்சல் ஊட்டக்கூடிய தன்மை பெற்றவர் நானா? இல்லை புசுவா? என்று அவன் ஆழ்மனத்தில் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.
“அங்கா! இந்த நிலம் நம் குடும்பத்துக்குச் சொந்தமானது. நம் வழக்கப்படி இந்த நிலம் மகளிடம் தான் கொடுக்கப்படவேண்டும். ஆனால் என்னைப்போலக் குழந்தை இல்லாதவர்களுடைய நிலம் மருமக்களிடம் கொடுக்கப்படவேண்டும். உனக்கும் உடன்பிறந்த சகோதரிகள் இல்லை. அதனால் இந்த நிலம் அத்தை அல்லது மாமன் மகளுக்குக் கொடுக்கப்படவேண்டும் என்பதால் அக்கா லோங் ஹலிமாவுக்குக் கொடுக்கப்படுகிறது.
அங்கா கோபத்தில் சீறினான். “புசு எப்படி இதனை எனக்குச் செய்தாள்? நான் அல்லவா அந்த நிலத்தில் கடுமையாக உழைத்தவன்?செடிகளை எல்லாம் தாண்டிப் புசுவுடன் நான் அல்லவா துணைக்குச் சென்றேன்?எனது அத்தை மகள் அந்த நிலத்தில் அடியெடுத்து வைத்தது கூட இல்லை. இருந்தும் புசு இறந்துபோனதும் நிலம் ஹலிமாவுக்குச் சொந்தமானது.”
விதியின் விளையாட்டை எப்படி அவனால் ஏற்றுகொள்ள முடியும்? புசு இதனை அறிவித்தபோது அவன் மனமுடைந்து போனான்.
அவன் கோபத்தில் கத்தினான். புசு இது அநியாயம்! பெண்களுக்கு மட்டுமே நன்மை செய்வது.
புசு எவ்வளவோ முயற்சி செய்து அவனிடம் பாரம்பரியம் பற்றியும் ,வழக்கங்கள் பற்றியும் ,இருவரும் சம்மதித்தால்கூட வழக்கத்தை மாற்றமுடியாது என்றும் விளக்கினாள். ஆனால் அங்கா கேட்க மறுத்துவிட்டான்.
மாமா லோங் பிறகு விளக்கத்தொடங்கினார். ஓர் ஆண்மகனின் விளக்கம் அங்காவின் கோபத்தைத் தணிக்கும் என்ற நம்பிக்கையில் அவர் பேசினார்.” அங்கா! பெண்களுக்குச் சொந்தமானாலும் ஆண்களாகிய நாம் அதைக் கூட இன்னும் பயன்படுத்திக்கொள்ளலாம். பத்திரத்தில் யார் பெயர் இருந்தால் என்ன? உனது பெயர் இருந்தால் என்ன? அல்லது உன் அத்தை மகள் ஹலிமா பெயர் இருந்தால் என்ன? அது ஒரு பிரச்னையே அல்ல. நீ நன்மைகளை அறுவடை செய்து பயனை அனுபவிப்பதை வழக்கங்கள் ஒரு போதும் தடுத்து நிறுத்தாது. அதனால் நீ குறுகிய மனத்தோடு இருக்க வேண்டாம்.”
அவரது வார்த்தைகள் அவன் தலைக்குள் ஏறவில்லை. காற்றோடு கரைந்து போயின.
அன்று இரவு அங்கா தூங்க முடியாமல் தவித்தான். அவனுடைய மகள்,புசு, மாமா லோங் ஆகியோரின் வார்த்தைகள் அவன் சிந்தனையில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன. அவன் பழைய நினைவுகளை உணர்ந்தான். அதேவேளையில் அமைதியின்மையையும் உணர்ந்தான். அவன் தன் கையில் அணிந்திருந்த கருப்புநிறக் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.
காலை மணி 3.30 .
அவன் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகத் தன் படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான்.அவனும் அவன் மனைவியும் இரவு தூங்கச் செல்லுமுன் ஓதிவிட்டுத் தான் தூங்கச்சென்றார்கள். அதற்குள் அதிகாலைத் தொழுகைக்கு உரிய நேரமாகிவிட்டது. அங்காவால் தூங்கமுடியவில்லை. அவன் அறையை விட்டு வெளியே சென்றான்.
அவனுடைய மகளின் படுக்கை அறையின் கதவுக்குக் கீழிருந்து மங்கலான வெளிச்சம் தெரிந்தது. அவன் பூட்டப்படாத கதவைத் தட்டியபோது பதிலில்லை. அங்கா கதவைத்திறந்தான். அவனுடைய மகள் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். மேசையில் தாள்கள் சிதறிக்கிடந்தன. அவளுடைய அறை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. மடிக்கணினியும் திறந்தபடி இருந்தது. அவளுடைய பள்ளிப் புத்தகங்களில் சில திறந்தபடியே கிடந்தன. கலைந்துகிடந்த அந்தக் காட்சியைக்கண்டு அங்கா தலையை அசைத்துக்கொண்டான்..
அவன் மெதுவாக நகர்ந்தபோது கணினித்திரை இயங்கத்தொடங்கியிருந்தது. குடும்ப நிழற்படங்கள் வரிசைமாறி ஓடிக்கொண்டிருந்தன. அங்கா நிழற்படங்களை முறைத்துப் பார்த்தான். அவனுடைய மகள் பழையதும் புதியதுமாகக் கணினியில் ஏற்றியிருந்தாள்.
ஒரு நிழற்படம் தோன்றியது. அதில் அவனும் புசுவும் தெரிந்தார்கள். அந்த நிழற்படம் அவனுடைய மதவழக்கப்படி நடந்த திருமணநாளன்று எடுக்கப்பட்டது. புசு அங்காவின் பக்கவாட்டில் நின்றுகொண்டு அவனை இறுகப்பிடித்திருந்தாள். புசுவின் பெரிய தோள்கள் அங்காவின் தோள்களை ஏறக்குறைய மறைத்திருந்தன. அவர்கள் இருவரும் கவலையின்றியும் சந்தோஷமாயும் காணப்பட்டனர்.
சோகத்தால் அங்கா பேசமுடியாமல் விக்கித்துப்போய் நின்றான். அவன் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியது. வாழ்க்கை நெடுகிலும் புசுவுடன் இருந்துவந்த நெருக்கத்தை ஒரு கட்டுமனை நிலத்தின் உரிமையாளராவது குறித்த கோபம் எப்படி மாற்றமுடிந்தது? அவன் கணினித்திரையில் தெரிந்த புசுவின் நிழற்படத்தைத் தொட முயன்றான். அவன் தோள் நுண்ணுணர்வுமிக்க எலிக்குட்டியைத் தள்ளிவிட்டதும் நிழற்படம் திடீரென்று காணாமல் போனதும் அங்கா நிலைகுலைந்துபோனான்.
கணினித்திரை ஓடாமலே அவன் மகள் தூங்குவதற்கு முன் எழுதிய மின்னஞ்சல் திரையில் தெரிந்தது. அவள் இன்னும் அதை அனுப்பாமலே இருந்தாள்.
அன்புள்ள எலிசபெத்,
தொலைவில் உள்ள இங்கிலாந்து தேசத்தில் கிளாவ்செஸ்டர்ஷயரில் வசித்தாலும் நீ முன்பு ஒருமுறை, உட்குழிவான மூங்கில் குழாயில் சமைக்கப்படும் உணவு வகை பற்றிக் கேட்டிருந்தாய். நாங்கள் அதை “லெமாங்” என்று அழைப்போம். மலாய் மக்கள் மத்தியில் அந்த உணவைத் தயாரிப்பதில் – வேகவைக்கும் முறையில் ஒரு தத்துவமே அடங்கியுள்ளது. ஒட்டிக்கொள்ளும் தன்மை உடைய கவுணி அரிசி குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உள்ள பிணைப்பையும் ,காரச்சுவை கொண்ட   “ரெண்டாங்” என்பது சோதனை அல்லது விருப்பத்தையும் குறிக்கின்றன. காரம் இல்லாமல் இருப்பது சவால்கள் அல்லது இன்பங்கள் எல்லாவற்றையும் இழப்பதைக் குறிக்கிறது.
எவ்வாறு முதியவர்கள் இளமைமுறுக்குக் கொண்ட இளைஞர்களுக்கு ஆலோசனை கூறி மரியாதையைக் கற்பிக்கிறார்களோ அது போலத் தேங்காய்ப்பாலின் ஆடைச்சத்து கவுணியரிசியின் பசைத்தன்மையைப் பதப்படுத்துகிறது. எரிக்கப் பயன்படும் விறகுக்குக் கூட சொல்வதற்கு ஒரு சொந்தக் கதை இருக்கிறது. தீ தொடர்ந்து எரிய வேண்டும் என்றால் விறகுகளை அடுக்கும்போது குறுக்குமறுக்காக அடுக்கவேண்டும். இவ்வாறு செய்வது வெவ்வேறு விருப்பங்கள் கொண்ட ஒவ்வொரு குடும்ப உறுப்பினரையும் பலப்படுத்தும் ஓர் இணைப்பைப் போன்றது.
வாழையிலை தன்னையே தியாகம் செய்துகொள்ளும் கதையை உனக்குக் கூறவிரும்புகிறேன். சிம்பு அல்லது பட்டைகளாலான மூங்கில் குழாயின் உட்சுவரில் லெமாங்கில் நிரப்பப்பட்டபொருள்கள் கலக்காது (ஒட்டாது) இருக்க வாழையிலையைப் பயன்படுத்துகிறோம். மூங்கில் பிணக்கத்திலும் இணக்கத்தோடு வாழும் வாழ்க்கைத்தத்துவத்தை உணர்த்துகிறது.
இவ்வாறு நாங்கள் எங்கள் பாரம்பரியத்தையும் பழக்கவழக்கங்களையும் விரும்புகிறோம்.
நான் அறிந்ததை மட்டுமே என்னால் உனக்குச் சொல்ல முடிந்தது என்பதையும், அதைத்தயாரித்த அனுபவம் எனக்கு இல்லை என்பதையும் வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மின்னஞ்சல் முடிந்தது. அங்கா அதிர்ந்துபோய் நின்றான்.
அவனுடைய மகளின் கதையில் ஏதோ ஒன்று குறைந்தது.அவன் கண்டு உணரத் தவறியதை அவன் மகள் அவனுக்கு உணர்த்திவிட்டாள். அவன் மின்னஞ்சலின் தொடக்கவரிகளை மீண்டும் படித்தான்.
“ஒட்டிக்கொள்ளும் தன்மை உடைய கவுணி அரிசி குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உள்ள பிணைப்பைக குறிக்கிறது”
அவன் ஆழ்மனம் அசைந்தது. அவன் இன்னும் தன் கிராமத்தை நினைவில் வைத்து மகிழ்கிறான் என்பதை அவனால் என்றுமே மறுக்கமுடியாது. புசு மீது அவன் கொண்ட ஆழமான பாசம் வெளிப்பட்டது. ”பெர்பாத்தி” வழக்கப்படி அவனுடைய அத்தை அவனுடைய அம்மாவைப்போல நெருக்கமானவளாக இருக்கவேண்டும் .
அவன் புசுவுக்காக மீண்டும் ஏங்கினான். அந்த ஏக்கம் மூங்கிலில் கொதிக்கும் தேங்காய்ப்பால் போல இருந்தது. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் வாழ்ந்த பின்னர் இப்போதுதான் அவன் இறுதியாக “லெமாங்” என்பதன் பொருளை உணர்ந்துகொண்டான். அது வெறும் உணவுப்பொருள் மட்டுமல்ல. அது குடும்பப்பிணைப்பின் குறியீடு என்பது புரிந்தது. அதனை மீண்டும் உண்டாக்க அவன் ஏங்கினான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.