பெண்ணியல் சிந்தனைச்சோதனைகள்

சொல்வனத்தின் இந்த இதழ் பெண்கள் சிறப்பிதழாக வெளிவருவதால் சிந்தனைச்சோதனைகளை கொண்டு பெண்களுக்கெதிரான பாலியல் கோடல்களை (Gender Bias) அலச முடியுமா என்று பார்ப்போம்.
sv-ws-logo copyபோன வருடம் ஒரு வழிப்பயணமாக செவ்வாய் கிரகத்துக்கு போக ஆட்கள் தேவை என்று ஒரு விளம்பரம் வந்திருந்தது. சுமார் இரண்டு லட்சம் விண்ணப்பங்கள் வந்து குவிய, கொஞ்சம் கொஞ்சமாக தேர்வுகள் நடத்தி தற்போது சுமார் எழுநூறு விண்ணப்பதாரர்களை வடிகட்டி தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இன்னும் பல சுற்று தேர்வுகளுக்குப்பின் ஒன்றிரண்டு டஜன் விண்வெளி வீரர்களை தனித்தனியாகவோ அல்லது சிறிய குழுக்களாகவோ தேர்ந்தெடுப்பதாக உத்தேசம். நாசவோ, இஸ்ரோவோ அல்லது வேறு எந்த நிறுவனமோ கும்பல் கும்பலாக மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப இன்னும் ராக்கெட் ஏதும் தயாரிக்க ஆரம்பிக்கவில்லை. இந்தத்திட்டப்படி 2025 வருட வாக்கில் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்ப தேவையான நிதியையும் யாரும் கொடுக்க முன்வரவில்லை. ஆனால் இந்தத்தேர்வுகளை நடத்திவரும் மார்ஸ்-ஒன் என்ற லாப நோக்கமற்ற அமைப்பு இந்த மாதிரி தேர்வுகள் நிகழும்போது கிடைக்கும் விளம்பரத்தாலேயே பொதுமக்களும் நிறுவனங்களும் கவரப்பட்டு உற்சாகத்துடன் ஆதரவளித்து இந்த தொலைதூரக்கனவை நிகழ்கால நிஜமாக்குவார்கள் என்று சொல்கிறது.
அந்தக்கனவு நம் வாழ்நாட்களுக்குள் நிஜமாகிறதோ இல்லையோ, அந்த யோசனையை பெரிதாக்கி, ஸ்டேசி ரிட்ஸ் என்ற பெண்மணி ஒரு சிந்தனைச்சோதனையை நான்கு  மாதங்களுக்கு முன் பரிந்துரைத்தார். அதன்படி இருபத்திரெண்டாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் ஐக்கிய நாடுகள் சேர்ந்து வேறு கிரகங்களை  மனிதர்கள் வாழ்வதற்காக காலனிப்படுத்த திட்டமிடுகின்றன. இதற்காக உலகம் முழுதும் எல்லா நாடுகளிலும் தேர்வுகள் நடத்தி, பின்லாந்து நாட்டில் இருந்து ஜான் என்ற ஒரு ஆணும், தாய்லாந்தில் இருந்து ஜாய் என்ற  ஒரு பெண்ணும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் இருவரையும் தனித்தனியே ஒரு விண்கலத்தில் அமர்த்தி செவ்வாய் கிரகத்துக்கும், வீனஸ் கிரகத்துக்கும் அனுப்பி வைக்கிறோம். விண்கலங்களில் தேவையான பிராணவாயு, தண்ணீர், எக்கச்சக்கமாக சாப்பாடு, தங்களை தாங்களே குளோனிங் செய்துகொள்ள தேவையான இயந்திரங்கள்,எல்லாம் இருக்கின்றன. ஒரு நீண்ட பயணத்தின் பின் ஜானும், ஜாயும் தங்கள் கிரகங்களை சென்றடைந்து, ஆய்வகங்களை அமைக்கிறார்கள். தொடரும் மாதம் வருடங்களில் தங்களைப்போன்ற க்ளோன்‌ நகல்களை அவர்கள் உருவாக்கி கிரகத்தில் வாழ விட, இரண்டு கிரகங்களிலும் மக்கள் தொகை நன்கு பெருகி எல்லோரும் சுபிட்சமாய் வாழ்ந்து வருகிறார்கள்.


menmarswomenvenus

இப்படியாக ஒரு நூறு வருடங்கள் கழிந்தபின், முன்பே போட்ட திட்டப்படி, பூமியிலிருந்து ஒரு விஞ்ஞானக்குழு இரண்டு கிரகங்களுக்கும் சோதனைகள் நடத்த வருகிறது. இந்த செவ்வாய், வீனஸ் வாழ்வுமுறை நீண்ட கால மனித வாழ்வுக்கு ஒத்ததா என்று தீர்மானிக்க, விஞ்ஞானிகள் குழு புதிய கிரகவாசிகளிடம் பலவிதமான பரிசோதனைகள் செய்ய முடிவெடுக்கிறது. அவையாவன:

  1. கொழுப்புச்சத்து (LDL cholesterol) அளவீடு
  2. மொழிப்புலமை பற்றி ஒரு தேர்வு
  3. ஒரு மயக்கமருந்து எந்த அளவுக்கு வேலை செய்கிறதென்ற அளவீடு
  4. கால்களின் வலிமை எவ்வளவு என்ற சோதிப்பு
  5. உயர அளவீடு

results

இரண்டு கிரகங்களிலும் எல்லா சோதனைகளையும் முடித்துவிட்டு திரும்பும் விஞ்ஞானிகள் சேகரித்த தரவுகளை ஆராய்ந்து மேலே உள்ள படத்தில் காணப்படும் முடிவுகள் கொண்ட ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கிறார்கள். வேறு கிரகங்களில் இருந்தாலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களின் பாலியல் காரணமாக திறன்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பதை இந்த சோதனை முடிவுகள்  தெள்ளத்தெளிவாக ஊர்ஜிதப்படுத்தி இருப்பதாக அறிவிப்புகள் வெளி வருகின்றன.
செய்த சோதனைகளிலும், அளவுகள் எடுத்த கருவிகளிலும் ஏதும் குறைகள் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு இருப்பதாக வைத்துக்கொண்டு இந்தத்தரவுகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம். ஆண்களுக்கு கொலெஸ்டிரால் அதிகமாக இருப்பதும் அதனால் பெண்களை விட அவர்களுக்கு இருதயம் சம்பந்தப்பட்ட வியாதிகள் அதிகம் வருவதும் பொதுவாக எல்லாருக்கும் தெரியும். பெண்களுக்கு ஆண்களை விட மொழிப்புலமை அதிகமாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. பெண்களைவிட ஆண்களுக்கு கொஞ்சம் அதிகமாக மருந்து கொடுத்தால்தான் மயக்கம் வருவது என்பது அவர்கள் உடல் பெரிதாய் இருப்பதால் இருக்கும். பெண்களுக்கு ஆண்களை விடச்சற்று அதிகமாகவே கால்களில் சக்தி இருப்பது ஆச்சரியம்தான். ஒருவேளை வீனஸ்ஸில் வாழும் அந்தப்பெண்கள் கலாச்சாரத்தில் நிறைய உடற்பயிற்சி செய்வது வழக்கமாகி விட்டதோ என்னமோ. மற்றபடி ஆண்கள் பெண்களை விட உயரமாக இருப்பதும் சகஜம்தான். நம்மைப்போலவே இப்படி எல்லா விஷயங்களையும் அலசிப்பார்த்த தலைமை விஞ்ஞானி, அறிக்கையில் தரப்பட்டிருக்கும் முடிவுகள் எல்லாம் சரிதான் என்று தன் முத்திரையை வழங்கிவிட்டு வீட்டுக்குப்போகிறார். இந்த அலசல்கள் எல்லாம் சரியோ?
சமூகஉயிரியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் துப்பறியும் சாம்புவின்  கொள்ளுப்பேத்தி இந்த முடிவுகள் பல விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்ற சந்தேகத்துடன் துப்புத்துலக்க களம் இறங்குகிறார். ஜான் மற்றும் ஜாய் குடும்பங்கள், அவர்கள் வளர்ந்தவிதம் என்று பல விஷயங்களை முழுமையாய் ஆய்ந்து இந்த வேறுபாடுகள் பாலியலுக்கு சம்பந்தமே இல்லாத பல்வேறு காரணங்கள் வழியே வந்திருப்பதாய் சுட்டிக்காட்டுகிறார்! அவர் சொல்லும் சில காரணங்களைப் பார்ப்போம். முதலில் அவர் சுட்டிக்காட்டுவது இந்த கிரகங்களில் வாழ்பவர்கள் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டவர்கள் என்பதைத்தான். இதனால் சாதாரண மக்கள்தொகையில் இருக்கும் வேறுபாடுகள் எதுவும் இங்கே இல்லாமல், ஜான் மற்றும் ஜாயின்  குணாதிசயங்களே இந்த கிரகவாசிகளிடையே விரவி இருக்கும். அதற்கு மேல் அவர் சொல்லும் காரணங்களை நான்கு வகையாகப்பிரித்து பார்க்கலாம்.
மரபியல் காரணங்கள்: ஜானின் குடும்பத்தவர்கள் கொலெஸ்டிரால் அதிகமானவர்களாகவும், உயரமானவர்களாகவும், மயக்கமருந்தை நன்றாக செரிக்கக் கூடிய உடலமைப்பை கொண்டவர்களாகவும் இருக்க, ஜாயின் குடும்பத்தார் இதற்கெல்லாம் எதிர் மாதிரியாய், சரியான கொலெஸ்டிரால், கொஞ்சம் குள்ள உருவம், மயக்கமருந்து சரியாக செரிக்காத உடல் வாகு என்று இருப்பவர்களாகவும் இருந்தால், எடுத்த அளவீடுகளில் உள்ள வேறுபாடுகள் எல்லாம் விளக்கப்பட்டு விடும்!
சமூகவியல் காரணங்கள்: தாய்லாந்து நாட்டைச்சேர்ந்த ஜாய் நன்றாக ஆங்கிலமும், தாயும் பேசுபவள். எனவே வீனஸ் கிரகவாசிகள் அந்த இரண்டு மொழிகளையும் நன்றாக பழகி இருக்க, பின்லாந்து நாட்டைச்சேர்ந்த ஜானின் ஆங்கிலம் சுமாராகவும், ஃபின்னிஷ் மொழி மிகப்பிரமாதாவும் இருக்க, கொடுக்கப்பட்ட தேர்வு ஆங்கிலத்தில் இருந்துவிட்டதால், ஆண்கள் சரியாக தேர்வை எழுத முடியவில்லை!
சுற்றுப்புறசூழல் காரணங்கள்: பூமியில் புவியீர்ப்பு விசை இருப்பதுபோல செவ்வாயிலும், வீனசிலும் ஈர்ப்பு விசை உண்டு என்றாலும், செவ்வாயில் அது மிகவும் குறைவு, வீனசில் பூமியளவுக்கு இல்லை எனினும், செவ்வாயை விட மிக அதிகம். ஈர்ப்பு விசை குறைந்த செவ்வாயில் மனிதர்கள் இன்னும் உயரமாக வளர வாய்ப்புண்டு.
சுற்றுப்புறசூழல் + மரபியல் காரணங்கள்: ஜானின் குடும்பத்தினர் உயரமானவர்களாக இருந்ததால், செவ்வாய் கிரகவாசிகள் உயரமாய் இருந்ததோடு, அங்கே ஈர்ப்பு விசை கம்மி என்பதால் அந்த ஆண்கள் இன்னும் உயரமாய் வளர்ந்திருக்கலாம். ஆனால் அதே ஈர்ப்பு விசை குறைவு காரணமாக அவர்களின் உடல் எடை கால்களின் மேல் அதிக பளுவை சுமத்தவில்லை. வீனசிலோ குள்ளமான ஜாயின் பிரதிகள், அதிகமான ஈர்ப்பு விசையின் காரணமாக, எப்போதும் உடலின் பளுவை முழுதும் தாங்க வேண்டி இருப்பதால், அவர்களின் கால்கள் காலப்போக்கில் வலுவானதாக மாறியிருக்கின்றன!
வான்வெளியில் பயணம் செய்தபோது ஜாய் அனுபவித்த ஒரு சின்ன கதிரியக்கத்தால், ஜாயின் சில செல்களில் ஓர் பிறழ்வு (mutation) ஏற்படுகிறது. இந்த செல்கள் க்ளோன்களின் உடலில் மயக்க மருந்தை செரிக்கும் தன்மையை மாற்றுகிறது!
இப்படியாக அளவீடுகளில் காணப்படும் மாறுபாடுகளை விளக்க பாலியல் வித்யாசங்களைத்தவிர வேறு ஏதேதோ காரணங்கள் இருக்கலாம். ஆனால், பொதுமக்களில் இருந்து மூத்த விஞ்ஞானிகள் வரை பலரும் இது இப்படித்தான் இருக்கும் என்று முன்கூட்டியே பல கருத்துக்களை வைத்திருப்பதால், அளவீடுகளில் காணப்படும் எண்களை அந்த பாரம்பரிய, நியமன விதி பெட்டிகளுக்குள் போட்டு விளக்கிவிட்டு போய் விடுகிறார்கள். இந்த சிந்தனைச்சோதனை விளக்குவது அந்தக்கோடல் குழப்பத்தைதான்.
whoopiகோடல்கள் (bias) உலகெங்கும் பல்வேறு இன, மொழி, நிற, பாலியல் வேறுபாடுகளுக்கு இடையே வெகு சகஜமாய் விரவிக்கிடக்கிறது. வுப்பீ கோல்ட்பர்க் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து புகழ்பெற்ற, ஆஸ்கார் விருது வாங்கிய நடிகை. தொலைகாட்சியில் பல நிகழ்ச்சிகள் நடத்துபவராய் எல்லாம் கூடப்பெயர் பெற்றவர். அப்படியிருந்தும், அவர் ஒரு பேட்டியில், இப்போது கூட என்னிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது சிலர் என்னைப்புகழ்வதாய் நினைத்துக்கொண்டு, “நீ பேசும் ஆங்கிலம் ரொம்ப நன்றாக இருக்கிறதே!” என்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். பிறந்ததில் இருந்து அவரது தாய்மொழியாய் இருக்கும் அவரது ஆங்கிலம் நன்றாக இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? மற்றவர்கள் அப்படிச்சொல்லக்காரணம் அவரைப்பற்றி ஏதும் தெரியும் முன்பே அவர் ஆப்பிரிக்கஅமெரிக்க இனத்தைச்சேர்ந்த ஒரு பெண் என்பதால் அவருடைய ஆங்கிலம் அவ்வளவு நன்றாக இருக்காது என்ற, முன்கூட்டியே அவர்கள் மனதில் வைத்திருக்கும் ஒரு கருத்துதான். பொதுப்படையான புள்ளிவிவரங்கள் உண்மையாகவே சில விஷயங்களைச்சொன்னாலும், அந்த விஷயங்கள் நாம் சந்திக்கும் தனிமனிதர்களுக்கு பொருந்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை புரிந்து கொள்வது பெரும்பாலோருக்கு மிகவும் கடினமான ஒரு விஷயம்.
இத்தகைய பாலியல் கோடல்கள் பெண்களுக்கு சாதகமாகவும் அமையமுடியும் என்பதும் உண்மைதான். உதாரணமாக பெரிய பதவிகளில் இருக்கும் பெண்கள், அதே போன்ற பதவிகளில் இருக்கும் ஆண்களை விட மற்றவர்களை இன்னும் அனுசரித்து போய், சுமுகமாக தங்கள் நிறுவனங்களை வழி நடத்துவர் என்ற ஒரு பொது கருத்து உண்டு. பெரிய அரசியல் தலைவர்களாய் இருக்கும் பெண்கள் ஆண்கள் அளவுக்கு அதிகார துஷ்பிரயோகம், லஞ்ச ஊழல் முதலியவற்றில் இறங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு. உலக அளவு புள்ளி விவரங்கள் இந்த நம்பிக்கைகளை உறுதிப்படுத்தினாலும் கூட,  தனிநபரான ஒரு பெண்ணிற்கு இந்த விவரிப்புகள் பொருந்தும் என்று நிச்சயம் சொல்ல முடியாதல்லவா? இந்தியாவிலேயே இந்த நம்பிக்கைகளுக்கு கொஞ்சமும் உட்படாத பெண் தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் பெரும்பாலான பாலியல் கோடல்கள் பெண்களுக்கு எதிரானவையாகத்தான் இருக்கின்றன என்பதை புள்ளி விவரங்கள் அடித்துக்கூறுகின்றன.
எனக்கு நன்கு தெரிந்த, திறமை மிகுந்த, அமெரிக்காவில் மருத்துவபயிற்சியை வெற்றிகரமாய் நடத்திவரும் ஒரு இந்திய வம்சாவளி இளம் பெண்மருத்துவர் இப்படிச்சொல்வார், “ஒரு சாதாரண அமெரிக்கரின் எண்ணப்படி ஒரு டாக்டர் என்பவர் ஆறடி உயர, சற்று வயதான வெள்ளை இன ஆண். நான் அந்த மூன்று எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதில்லை என்பதால்,  நான் ஒரு நோயாளியை பரிசோதிக்க அறைக்குள் நுழையும்போதே எனக்கு அனுகூலமற்ற ஒரு இடத்தில் இருந்துதான் சிகிச்சையை தொடங்க வேண்டி இருக்கிறது”. இந்த சூழ்நிலை நிலவும் ஒரு சமூகத்தில் அந்த எதிர்பார்ப்புகளை சரியாக பூர்த்தி செய்யும் ஒரு ஆறடி உயர, சற்றே வயதான வெள்ளைக்கார ஆண் மருத்துவர் உள்ளே நுழைந்தால், நோயாளி அவர் சொல்வதை மரியாதையாய் கேட்டுப்பின்பற்ற தயாராய் இருப்பார். இந்த அனுகூலம் (advantage) அந்த ஆண் டாக்டர்களுக்கு பெரும்பாலும் தெரிவதே இல்லை!
உங்கள் வாழ்விலேயே உங்களை அறியாமல் இப்படி எத்தனையெத்தனை நுட்பக்கோடல்கள் ஒளிந்திருக்கின்றன என்று  யோசித்துப்பாருங்கள். நாம் யோசித்தாலும் கூட, இத்தகைய கோடல்களால் நாம் எவ்வாறு எப்போது பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதுதான் பொதுவாக நினைவுக்கு வரும். ஆனால் நமக்குள்ளே இருக்கும் கோடல்கள் என்னென்ன, அவைகளின் காரணமாக நாம் வாழ்வில் சந்திக்கும் தனிநபர்களை எப்படி தப்பாக நடத்துகிறோம் என்பது நமக்கு சரியாக புரியாது! நம்மூரில் பலகாலங்களாக இருந்து வரும் ஒரு மிகப்பரவலான கோடல் நன்றாக ஆங்கிலம் பேசுபவர்களை அறிவு மிகுந்தவர்கள் என்று பொதுமக்கள் கருதுவது! உயர்கல்வி பெருவாரியாக ஆங்கிலத்தில் புகட்டப்படும் ஒரு காரணத்தால் மட்டுமே கூட புள்ளிவிவரப்படி நன்றாக ஆங்கிலம் பேசும் இந்தியர்களில் பெருவாரியானவர்கள் புத்திசாலிகளாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் அந்தத்தன்மை நாம் சந்திக்கும் ஒரு தனிமனிதருக்கு பொருந்தவேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. வெகு நன்றாக ஆங்கிலம் பேசும் முட்டாள்களையும், தப்பும் தவறுமாக உடைந்த ஆங்கிலம் பேசும் அதி புத்திசாலிகளையும் நான் உலகில் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்!
ஒரே மொழியை பேசுபவர்களிடையே கூட சற்றே உயர்ந்த ஸ்தாயியில் பேசும் பெண்கள் ஆண்கள் அளவுக்கு மதிக்கப்படுவதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்! ஒரு நண்பர் வழியே நியூயார்க் நகரில் வாழும் மோனிகா ஹானா என்ற பெண் வழக்கறிஞரின் அனுபவத்தைப்பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டேன். ஐந்தடி உயரம் மட்டுமே உள்ள மோனிகா பார்ப்பதற்கு பதின்வயது பெண் போல இருப்பார். நன்கு படித்து, பட்டம் பெற்று பல வழக்குகளில் நீதிமன்றங்களில் வழக்காடிய வக்கீல் அவர். இருந்தாலும், அவர் கொஞ்சம் கீச்சுக்குரலில் பேசுகிறார் என்பதாலேயே அவரை அவரது அலுவலகத்திலேயே பணி புரியும் சக ஆண் வக்கீல்களில் இருந்து ஆரம்பித்து பலர் அவரது மூளைத்திறனுக்கு தரவேண்டிய மரியாதையைத்தராதது அவருக்கு புரிய வந்தது. இதற்காக குரல் பயிற்சி தரும் ஒரு நிபுணரிடம் கலந்தாலோசித்து தனது குரலிலும் தான் பேசும் விதத்திலும் சில நுட்பமான மாறுதல்களை கொண்டுவந்து அவர் அந்த பிரச்சினையை சமாளித்த கதையை இந்த வானொலி நிகழ்ச்சியில் நீங்களே கேட்கலாம்! உலகில் பெண்களுக்கெதிராக எத்தனை வகை வகையான கோடல்கள்!
malalaபாகிஸ்தானைச்சேர்ந்த பதினேழு வயது இளம்பெண் மலாலா யூசஃப்சாய்க்கு அமைதிக்கான நோபல் பரிசு இந்தவருடம் கொடுக்கப்பட்டிருக்கும் செய்தியை படித்திருப்பீர்கள். அந்தப்பெண்ணின் நெஞ்சுரமும், இன்னமும் விடாது அவர் பெண்கள் படிக்கும் உரிமை கோரி போராடி வருவதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். இருந்தாலும் இந்த இருபதோராம் நூற்றாண்டிலும் கூட பெண்கள் விரும்பினால் பள்ளிக்கூடம் போய் படிக்க முடியவேண்டும் என்ற எளிய கருத்தை நிலைநாட்ட  இவ்வளவு தூரம் போராட்டங்கள் தேவையாய் இருப்பதும், இதை சொன்னதற்காகப்போய் அவர் குண்டடிபட்டதும், நோபல் பரிசு வாங்கியதும் உலகம் பாலியல் கோடல்களில் இருந்து விடுபட்டு இன்னும் எவ்வளவு தூரம் முன்னேற வேண்டி இருக்கிறது என்பதற்கு ஒரு பரிதாபகரமான எடுத்துக்காட்டு! இந்த நூற்றாண்டு முடிவதற்குள் நம் பேரன் பேத்திகள் மலாலா நோபல் பரிசு வாங்குமளவுக்கு அவ்வளவு சர்ச்சைக்கிடமாக என்ன சொன்னார் என்று தலையை சொறிந்து கொள்ளும் காலம் வரும் என்று நம்புவோம்!
(தொடரும்)