பரிச்சயமற்ற மண் – ஜும்பா லஹிரி

Jhumpa_Lahiri_030708-107

எங்கள் லண்டன் தமிழ்/இந்தியக் குடும்பங்களின் சந்திப்புகளில் தவறாமல் இடம்பெறும் கேள்வி – லண்டனிலேயே நிரந்தரமாக வாழ்கையை அமைத்துக் கொள்வதா அல்லது இந்தியா திரும்ப செல்வதா என்பது. இதில் நான் சந்திக்கும் பெரும்பாலானோர் முப்பது முதல் நாற்பத்தி ஐந்து வயதிற்குள் இருப்பவர்கள். இவர்கள் தான் இந்தியா திரும்பச் சென்று வாழ்கையை அமைத்துக் கொள்ள ஓரளவேனும் வாய்ப்புள்ளவர்கள். அதற்கு மேல் வயதானவர்களுக்குப் பெரும்பாலும் வளர்ந்த பிள்ளைகள் இருப்பார்கள். அவர்களை இந்த நாட்டிலிருந்து எடுத்து முற்றிலும் புதிய கல்விச் சூழலில் பொருந்தச் செய்வது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால் இவர்கள் இந்த நாட்டிலேயே தங்கிவிட முடிவெடுத்திருப்பார்கள்.
இந்தியா திரும்பச் செல்வதா வேண்டாமா என்ற இந்த கேள்வியை எதிர்கொண்ட பின் முதலில் இந்தியாவில் வாழ்வதன் அசௌகரியங்களையும் மேற்குலக வாழக்கையின் வசதிகளையும் பட்டியலிடுவதில் இருந்து தொடங்கும். “நீங்க நம்ப மாட்டீங்க, ஒரு சின்ன இளநீர் அம்பது ரூபா விக்கறான்.பதினஞ்சு ரூபாய்க்கு செவ்வெளனி குடிச்ச காலம் கண்ணுலேயே இருக்கு..வெளி நாட்டில் சம்பாத்திச்சு தான் இந்தியாவில் வாழ முடியும் போல”..மற்றொருவர் பள்ளிக் கல்வி வியாபாரமாகி போனதையும் இன்னொருவர் கட்டுப்படியாகாத மருத்துவ செலவுகள், வேறொருவர் வெயில், சுகாதாரம் என்று முடியும் போது இந்தியாவில் இருந்து தப்பித்து வந்ததன் ஆசுவாசமும் நிம்மதியும் வெளிப்படும்.
ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் வீட்டில் தமிழ் பேசுபவர்கள். ரஜினி/கமல் படங்களை இன்றும் முதல் நாள் முதல் ஷோ பார்க்கக்கூடியவர்கள். தீபாவளி/பொங்கலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்பவர்கள். இன்றியமையாத போது மட்டும் தான் சாண்ட்விச்சும் பர்கரும் சாப்பிடக்கூடியவர்கள்.இவர்களின் நட்பு வட்டத்தில் ஒரு வெள்ளைக்காரரை நீங்கள் காணவே முடியாது. இவர்கள் சுத்தமான ஒரு தமிழராக அல்லது இந்தியராக அந்நிய மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தங்கள் கடைசி நாள் வரை தங்களை இந்தியராகவே உணர்ந்து கொண்டிருப்பார்கள்.
இரண்டாம் தலைமுறை குடியேறிகள் என்று அழைக்கப்படும் இவர்கள் குழந்தைகளின் சவால்கள் வேறு வகையானவை. அந்நிய நாட்டிலேயே பிறந்து வளரும் இவர்களுக்கு தங்கள் குடும்பத்தை தவிர்த்து இந்திய வாழ்கைமுறைகளுக்கு வேறு அறிமுகமே இருப்பதில்லை.வெளியே இருக்கும் போது இவர்கள் அறியும் உலகம் வீட்டின் உலகத்திற்கு முற்றிலும் அன்னியமாக இருக்கிறது. பதின் பருவங்களில் இந்த முரண்பாடு கூர்மையடைகிறது . அவர்கள் பிறந்த நாட்டின் வாழ்க்கையோடு முற்றிலும் இணைய முடியாமலும், தங்கள் பெற்றோர்கள் மனதில் சுமந்தலையும் இந்திய விழுமியங்கள் தங்கள் நாட்டில் செல்லுபடியாகாத காரணத்தினாலும் இவர்கள் இரு வேறு கலாச்சாரங்களிடையே பிளவுப்பட்டு இருக்கிறார்கள்.
sv-ws-logo copyஜும்பா லஹிரியின் கதைகள் இப்படி இரு வேறு கலாச்சாரங்களிடையே மாட்டி கொண்டவர்களின் வாழ்க்கையை பேசுகிறது. அவர்கள் வாழ்க்கையின் சவால்களை, புதிய நிலத்தில் வேரூன்றுவதில் உள்ள வலிகளை, வேரற்று போவதன் வெறுமையை என்று அவர் கதைகள் பெரும்பாலும் இந்த மையத்தை சுற்றியே நிகழ்கின்றன. இவருடைய கதை மாந்தர்களின் பின்னணி எப்போதும் ஒருபோலவே இருக்கிறது. பெங்காலில் பிறந்து படிப்பிற்காக அல்லது பிழைப்பிற்காக அமெரிக்காவில் வந்து வாழ நேர்ந்துவிட்ட ஒரு இந்திய உயர் நடுத்தர வர்க்க குடும்பம். பெரும்பாலும் ஒரு பல்கலைக்கழகத்தை சுற்றியே இவர்கள் குடும்பம் வாழ்கிறது. இவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள். பெங்காலி நண்பர்கள், கொண்டாட்டங்கள், கல்கத்தா பயணங்கள். ஆனால் இந்த சின்ன வட்டத்தில் இவர்தான் எத்தனை விதமான வாழ்க்கைகளை நிகழ்த்திக் காட்டுகிறார்.
இவரது கதை மாந்தர்களின் பின்னணி ஒரு விதத்தில் ஜும்பா லஹிரியின் பின்னணியும் கூட. பெங்காலில் பிறந்து வளர்ந்த இவரது பெற்றோர் இவர் இரண்டு வயதாக இருக்கும் போது 1967 ஆம் வருடம் அமெரிக்காவில் குடியேறுகின்றனர். இப்பொழுது போல் இல்லாமல் தொலைபேசியே மிகவும் அபூர்வமாக இருந்த காலம். இவர் தந்தை நாள் முழுவதும் அலுவலகம் செல்ல தன்னந்தனியே வீட்டில் இருந்தபடி ஜும்பாவையும் அவரது தங்கையையும் வளர்க்கும் தாய். (இந்த தனிமையான தாயின் கதாபாத்திரம் அவரது அத்தனை நூல்களிலும் ஏதேனும் ஒரு வடிவத்தில் காணக்கிடைக்கிறது). “வீட்டிற்க்குள்ளும், வெளியிலும் என்னிடம் வெவ்வேறான எதிர்பார்ப்புகள் இருந்தன. பல சமயம் அவை எதிர் எதிராகவும் இருந்தன. இவ்வைகையான வெவ்வேறு எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே நான் வளரும் காலத்தின் மிகப்பெரிய சவாலாக இருந்தது” என்கிறார் ஜும்பா.
புலிட்சர் விருது வாங்கிய துயரங்களின் மொழிபெயர்ப்பாளர் (interpreter of maladies) சிறுகதை தொகுப்பை தொடர்ந்து சில வருடங்களுக்கு முன் வந்த இவரது சிறுகதை தொகுப்பு பரிச்சயமற்ற மண்(unaccustomed earth). மொத்தம் எட்டு கதைகளை கொண்டுள்ளது இந்த தொகுப்பு. இதில் மூன்று கதைகள் ஒரே கதையின் அடுத்தடுத்த பாகங்களாக இருக்கும் படி அமைக்கப்பட்டுள்ளன. இவரது முந்தைய தொகுப்பை விட இதில் உள்ளவை சற்று நீள்கதைகளாகவும், கதையில் பயின்று வரும் காலம் சற்று விரிவாகவும் அமைந்துள்ளது.
மேலும் இதற்கு முன் வந்துள்ள இவரது படைப்புகளில் முதல் தலைமுறை குடியேறிகளின் அந்நியத்தன்மை மற்றும் இரண்டாம் தலைமுறையினரின் அடையாளத்தை நோக்கிய தத்தளிப்புகளே பிரதானமாக இருந்தது. அந்தப் படைப்புகள் வந்த காலம் அவரது திருமணத்திற்கு முந்தைய அல்லது திருமணத்தை ஒட்டிய காலம். இந்த தொகுப்பு அல்பர்டோவுடனான இவரது திருமணத்திற்கு பின் அவருக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்த பிறகு வருகிறது. அதற்கேற்ப இதில் வரும் இரண்டாம் தலைமுறை இந்தியர்கள் பெரும்பாலும் அமெரிக்க வாழ்க்கைமுறையை சுவீகரித்துக்கொண்டு, தங்களுக்கென ஒரு குடும்பமும் அமைத்துக் கொண்டு முன் நகர்ந்து செல்கின்றனர். இவர்களின் பெற்றோரும் இந்திய வாழ்க்கை குறித்த ஏக்கம் எதுவும் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு தங்களை ஒப்புக் கொடுத்தவர்களாக இருக்கின்றனர். ஆனாலும் இவர்கள் வாழ்க்கையின் எல்லா தருணத்திலும், அவர்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு அனுபவத்திலும் அவர்களின் இந்திய பின்னணியும், மரபற்று போனதன் சுதந்திரமும் சுமையும் ஒரு அடிநாதமாய் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
unaccustomed earthபரிச்சயமற்ற மண் என்ற புத்தகத்தின் தலைப்பை கொண்டுள்ள கதை, சியாட்டிலில் இருக்கும் தன் பெண் ரூமாவின் குடும்பத்தைப் பார்க்க வரும் தந்தையைப் பற்றியது.மனைவியின் மரணத்திற்கு பின் ரூமாவின் தந்தை ஒரு ஆறு மாதங்கள் ஐரோப்பா பயணம் சென்றுவிட்டு தன் மகளுடன் சில நாட்களை கழிக்க அவர் வீட்டிற்கு வருவதிலிருந்து கதை தொடங்குகிறது. அவர் மகள் ரூமா தன கணவர் ஆடம் மற்றும் மகன் ஆகாஷுடன் ஒரு பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறார். அம்மாவின் மரணம் ரூமாவிற்க்கும் அவரது தந்தைக்கும் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறது. தந்தையின் வருகையின் போது ரூமா இரண்டாவது குழந்தையை கருவுற்றிருக்கிறார். அம்மாவை பிரிந்து இருக்கும் அப்பாவை தன்னுடன் வைத்துகொள்ள வேண்டும் என்ற ஆசை ஒரு புறமும் மறுபக்கம் அவர் தனக்கு ஒரு நிரந்தர சுமையாகிவிடுவாரோ என்ற பயத்துடனும் தந்தையை வரவேற்கிறார். அப்பாவைப் பற்றிய அவளது நினைவுகள் எந்த வீட்டு வேலையையும் செய்யாதவராக எந்நேரமும் அம்மாவின் பணிவிடையைச் சார்ந்து இருந்தவராக உள்ளது. ஆனால் ரூமாவின் வீட்டில் அவர் வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறார். ஆகாஷுடன் விளையாடுகிறார். வீட்டின் பின்பக்கம் ஒரு தோட்டத்தை அமைக்கிறார்.
அப்பாவின் மேல் பாசம் இருந்த போதும் அது அம்மாவுடன் உள்ள உறவின் ஒரு ஆழமும் எதையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு எளிமையும் இல்லை என்பதை வருத்தத்துடன் ரூமா உணர்கிறாள். மேலும் ஒரு இந்தியரை திருமணம் செய்யாமல் ஆடமை திருமணம் செய்து கொண்டதில் அவருக்கு மகிழ்ச்சி இல்லை என்பதை அறிந்திருந்ததும் அவர்கள் நடுவே பேசப்படாத ஒரு சுமையாக இருந்து கொண்டிருந்தது. அவள் அம்மாவும் அவள் திருமணத்தை ஆதரிக்காவிட்டாலும் மெல்ல மெல்ல அதை ஏற்று கொண்டு ஒரு கட்டத்தில் தன் மருமகன் ஆடமுடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளவும் செய்தாள். அப்பாவும் ஏற்று கொண்டு தான் விட்டார். அனால் ரூமாவை குடும்பத்தின் காரணமாக அவள் அலுவலக வேலையை விட்டு விட வேண்டாம் என்று எச்சரித்துக்கொண்டே இருக்கிறார். ஆடம் அவளை பிரிந்து சென்றுவிடுவானோ என்ற பயம் அவருக்கு இருப்பதாக ரூமா உணர்கிறாள்.
கதை ரூமா மற்றும் அவர் தந்தையின் தற்போதைய வாழ்க்கைக்கும், அமெரிக்காவில் அவர்கள் வந்திறங்கிய ஆரம்பகட்ட நாட்களுக்குமாய் மாறி மாறி பயணம் செய்கிறது. இறுதியில் ரூமாவின் தந்தை ஒரு விதவை பெங்காலி பெண்மணியை துணையாக ஏற்று கொள்ள போகும் முடிவை ரூமா தெரிந்து கொள்வதில் கதை முடிகிறது. மனைவியின் பிரிவு விட்டுச்செல்லும் தனிமை பரிச்சயமற்ற அந்த மண்ணில் பூதாகரமாய் தெரிகிறது. மனைவியை இழந்து ஐரோப்பா தெருக்களில் தன்னந்தனியாக அலையும் ஒரு வயதான பெங்காலியின் படிமம் படிப்பவர்கள் மனதில் ஒரு பெரும் சுமையை விட்டுச் செல்கிறது. வங்காளத் தெருக்களில் இவருக்கு இத்தனைத் தனிமை இருந்திருக்காதோ என்ற எண்ணம் வருகிறது. அதற்கு காரணம் அந்த மண்ணிடமும் மரபிடமும் அவருக்கு இருந்திருக்கக் கூடிய தொடர்பா?
இந்த தொகுப்பில் எனக்கு மிக விருப்பமான கதைகள் ‘நன்மை மட்டுமே'(only goodness) மற்றும் ஹேமா-கௌசிக் பார்வையில் சொல்லப்படும் ‘வாழ்வில் ஒரு முறை'(once in a lifetime) மற்றும் ‘வருடத்தின் முடிவு'(year’s end) ஆகிய கதைகள். ‘நன்மை மட்டுமே’ கதை மகன் ராகுலுக்கு கார்னல் பல்கலைகழகத்தில் இடம் கிடைத்ததை ஒரு பார்ட்டி நடத்திக் கொண்டாடும் பெற்றோரின் அறிமுகத்துடன் தொடங்குகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் – பிலடெல்பியாவில் முதுகலை படிக்கும் முதல் மகள் சுதா மற்றும் கல்லூரி படிப்பைத் தொடங்கும் ராகுல். இவர்கள் வெற்றிகரமான குடும்பத்தின் முன்மாதிரியாக விளங்குகின்றனர், ராகுல் கல்லூரி படிப்பில் சறுக்கத் தொடங்குவது வரை. முதலில் அது ஒரு தற்காலிக பின்னடைவாகத் தான் எல்லோரும் நினைக்கிறார்கள். சுதா அவனிடம் சென்று பேசி பார்க்கிறாள். “என்னை கல்லூரியில் யாருக்குமே பிடிக்கவில்லை” என்கிறான். இனவெறுப்பின் கசப்பான அனுபவங்களை அவன் கல்லூரியில் அடைந்திருக்கலாம். ஆனால் இதையெல்லாம் கண்டும் காணாமல் இருப்பது தான் இந்திய பெற்றோர்கள் இதை சமாளிக்கும் முறை என்று கதையில் சொல்லிச் செல்கிறார் ஜும்பா.
ஒரு நாள் ராகுல் குடித்துவிட்டு வண்டி ஒட்டி காவல் நிலையம் செல்லும் போது தான் சுதா தான் நெடு நாள் தான் பயந்த ஒரு விஷயத்தை பெற்றோரிடம் பகிர்கிறாள். அவர்கள் மகன் ஒரு குடி அடிமையாக ஆகி இருக்கிறான். சிறிது சிறிதாக அவர்கள் வாழ்க்கை மாறத் தொடங்குகிறது. சுதா மேற்படிப்பிற்காக லண்டன் செல்கிறாள். ராகுல் கல்லூரியை முற்றிலும் நிறுத்திவிட்டு வீட்டோடு இருக்கத் தொடங்குகிறான். நாள் முழுவதும் குடியிலேயே மூழ்கி இருக்கிறான். தன் மகன் படிப்பை நிறுத்தியது வெளியில் தங்கள் பிற இந்திய நண்பர்களுக்கு தெரியாமல் இருக்க, ‘குடும்ப கவுரவத்தை’ தக்க வைக்க அவன் பெற்றோர் பெருமுயற்சி செய்கின்றனர். ஆனால் அவை எல்லாம் ஒரு கட்டத்தில் தோற்று விடுகின்றன.
இதற்கிடையில் சுதா ரோகர் என்ற ஒரு வெள்ளையனை தன் பெற்றோர் சம்மதத்துடன் மணந்து கொள்கிறாள். ராகுல் தன்னை விட பல வருடங்கள் மூத்த எலிஸ் என்பவளை திருமணம் செய்யப்போவதாக அறிவிக்கிறான். அவர்கள் குடும்பமே நடுங்கிப் போகிறது. “நீ இன்னமும் ஒரு சிறுவன் தான்” என்கிறார் அவர் தந்தை. “ஒரு வேலை, இலக்கு, பாதை எதுவும் இல்லாத ஒரு சிறுவன். மேலும் இந்த பெண் உனக்கு தாயாக இருக்கக் கூடிய அளவுக்கு வயதானவள்”. சில நாட்களில் ராகுல் வீட்டை விட்டு வெளியேறுகிறான். அவனைத் தேடுவதை ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டு அவன் பெற்றோர் இந்தியாவிற்கே மீண்டும் செல்கின்றனர். தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வருகின்றனர். ஒரு வட்டம் பூர்த்தியடைகிறது. தன்னுள் மாபெரும் வெறுமையை தாங்கி.
சில வருடங்கள் கழித்து ராகுல் அவன் அக்காவை காண லண்டன் வருகிறான். எலீசுடன் வாழ்கை நடத்துவதாக, எலீஸ் மற்றும் அவள் மகனுடன் வாழ்ந்து வருவதாக சொல்கிறான். குடியை முழுவதும் நிறுத்தி விட்டதாக சொல்கிறான். அதற்கேற்ப சுதாவுடன் இருக்கும் நாட்களில் எல்லாம் அவன் குடிப்பதே இல்லை. அவள் குழந்தையுடன் லண்டனை சுற்றி வருகிறான். ஒரு நாள் அவன் பொறுப்பில் சுதா தன் குழந்தையை விட்டுச் செல்கிறாள். திரும்பும் போது குழந்தை தண்ணீர் தொட்டியில் கழுத்தளவு தண்ணீரில் இருக்கிறது. சிறிது நேரத்திற்கெல்லாம் முழுவதும் மூழ்கியிருக்கலாம். ராகுல் குழந்தையை மறந்து குடித்து மயக்கமாகி இருக்கிறான். மீண்டும் குடி அவனைப் பற்றுகிறது. சுதாவும் ரோகரும் அவனை வீட்டை விட்டு வெளியேற்ற அவன் தனியனாய் தன பைகளுடன் கிளம்புகிறான். யார் முயன்றும் ராகுலை கைத்தூக்கி விட முடியாமல் சிறிது சிறிதாக அவன் சீரழிவதன் சித்திரத்தை மிக நேர்த்தியுடனும் அழுத்தத்துடனும் சொல்கிறார் ஜும்பா.
மிகவும் அமைதியான உணர்ச்சிகளேயற்ற மொழி இவருடையது. அலங்காரங்களோ, மிகைகளோ இல்லாத சாதாரண நடை. பெரும் துயர்களையும் ஒரு செய்தி வாசிப்பின் நடையில் சொல்லிச் செல்கிறார். இவர் கதைக் களன் மிகச் சிறியது. எப்போதும் அது அமெரிக்காவில் குடியேறிய பெங்காலி குடும்பம். மேலோட்டமாகப் பார்த்தால் கதை மாந்தர்களும் ஒரே போல் தான். அவர்கள் செய்யும் வேலை, படித்த படிப்பு, பொருளாதார நிலை போன்றவை. ஆனால் இந்த சிறிய வட்டத்திலும் அவர் தனித்துவமிக்க கதாபாத்திரங்களை உருவாக்குகிறார். இவரது முக்கியப் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் படிப்பவர்கள் மனதில் சிறிது சிறிதாக வளர்ந்து ஒரு உயிருள்ள மனிதரை மிக அருகே சென்று பார்ப்பது போன்ற அனுபவத்தை தருகிறது. அமெரிக்காவில் வீட்டின் தனிமையில் இருக்கும் பெங்காலி மனைவி கதாபாத்திரம் மட்டுமே பல கதைகளில் ஒரே வார்ப்பில் படைக்கப்பட்டிருக்கின்றன. இந்த தொகுப்பில் ‘வாழ்வில் ஒரு முறை’ ‘நரகம்-சொர்க்கம்’ மற்றும் நன்மை மட்டும் கதைகளில் வரும் இந்த பாத்திரம், இந்த தொகுப்பிற்கு வெளியிலும் பல கதைகளில் காணக்கிடைக்கிறது. அவற்றை ஒரு கதையிலிருந்து எடுத்து மற்றொரு கதையில் அப்படியே பொருத்திவிடலாம்.
ஜும்பாவின் எழுத்துக்கள் பொதுவாக குடியேறிகளின் இலக்கியம் என்று வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் அவர் இந்த வகைப்படுத்தலை ஏற்றுக்கொள்வதில்லை. “அப்படிப் பார்த்தால் அமெரிக்காவின் ஒவ்வொரு படைப்புமே குடியேறிகளின் இலக்கியம் தான்” என்கிறார். இவரது கதாபாத்திரங்கள் மரணம், உறவுச்சிக்கல்கள் போன்ற மானுடத்திற்கே பொதுவான பிரச்சனைகளைத் தான் எதிர்கொள்கின்றனர் என்றாலும், புதிய நிலத்தின் மீது இன்னமும் உறுதியாக நிற்கத் தொடங்காத நிலையில் இந்தப் பிரச்சனைகள் அவர்களை மேலும் நிலையிழக்கச் செய்கின்றன. பல சமயங்களில் அப்படி உறுதியாக நிற்க முடியாததும் கூட அவர்கள் பிரச்சனையாக இருக்கிறது. அந்த வகையில் இது குடியேறிகளின் இலக்கியம் தான்.
ஜும்பா தற்போது இத்தாலியில் தன இரண்டு குழந்தைகளோடும் கணவரோடும் வசித்து வருகிறார். முற்றிலும் புதிய நிலத்தில் மொழி கூட தெரியாத ஊரில் வாழத் தொடங்குவதின் அனுபவத்தை இது தன குழந்தைகளுக்கு கொடுக்கிறது என்கிறார். இவரது அடுத்த படைப்பை இத்தாலிய மொழியில் எழுதி கொண்டிருக்கிறார். இப்படி புது புது நிலங்களில் இருக்க நேர்வது மகிழ்ச்சியான அனுபவமாக கருதுவீர்களா என்று கேட்டால் அது ஒருவரின் வாழ்க்கைப் பார்வையை பொறுத்து என்று பதிலளிக்கிறார். சரியானப் பார்வையை கொண்டிருந்தால் இந்த வாழ்க்கையின் வண்ணங்கள், அது அளிக்கும் சுவைகளும், அனுபவச் செல்வங்களையும் காணலாம். ஆனால் இவர் தனது சொந்த மண் என்று ஒன்று இருப்பதாக நினைக்கவில்லை. கணவரோடும் குழந்தைகளோடும் இருக்கும் எந்த ஒரு இடமும் எனது தாய் மண் தான் என்கிறார்.
எங்கள் அடுத்த லண்டன் இந்தியக் குடும்பங்களின் சந்திப்பில் இங்கிலாந்தா அல்லது இந்தியாவா என்ற விவாதம் மறுபடியும் எழும்.. ஏராளமான தரவுகளுடனும் தர்க்கங்களுடனும் ஒவ்வொருவரும் தங்கள் தரப்பை சொல்லிக் கொண்டே இருப்பர். பின் தங்கள் முடிவை எதோ ஒரு வகையில் நியாயப்படுத்திக் கலைந்துச் செல்வார்கள், அடுத்த சந்திப்பில் மீண்டும் இதையே பேசும் வரை. ஜும்பா லஹிரியின் மூலமாக நான் அவர்கள் தத்தளிப்பை புரிந்துக் கொள்கிறேன். இரு வேறு நிலங்களில் ஒரே நேரத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதன் சங்கடங்களை. எத்தனை சொல்லியும் தீராத, சொல்லிப் புரிய வைக்க முடியாத இந்த அனுபவத்தை தன் படைப்புகளில் மீள மீளத் தேடிக் கண்டடைந்து முன்வைக்கும் ஜும்பா, அயல்நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினரால் மேலும் மேலும் விரும்பப்படும் ஒரு படைப்பாளியாக திகழ்வார். குறிப்பாக அந்நிய மண்ணில் இந்தியர்கள் அதிகமாக பரவி வாழும் இந்தக் காலக்கட்டத்தில்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.