நந்துவின் பிறந்தநாள்

Kids_India_Chennai_Madras_Tamil_Nadu_Children_Happy_Run_Water_Village_Temple_Roadside_Suburbs

ந்தகுமாருக்கு ஆறு வயது. அவனுடைய வீட்டில் பிறந்த நாட்களை அதிகமாகக் கொண்டாடும் வழக்கம் இல்லை. ஆனால் பாட்டிக்கு மாத்திரம் சிறிது அஞ்ஞானம். “குழந்தைக்கு எண்ணை தேய்த்து விடு” என்பார். “வடையும் பாயசமும் செய்யச் சொல்லு” என்பார். இந்த வருஷம் நந்து பள்ளியில் மூன்றாவது வகுப்பில் படித்தான். “அவனுக்கு இரட்டைப் பிரமோஷன் செய்து ஹைஸ்கூலில் சேருங்கள்” என்றுகூட அவனுடைய உபாத்தியாயர் சொன்னார். ஆனால் அப்பாவோ, “அது வேண்டாம். பிற்பாடு எஸ்.எஸ்.எல்.ஸியில் தேர்ச்சி பெற்றுக் காலேஜில் சேர முடியாமல் ஒரு வருஷம் கஷ்டப்படுவான்” என்று சொல்லிவிட்டார்.
நந்துவின் நக்ஷத்திரம் திருவோணம். அது அவனுக்குத் தெரியுமாம். “எப்படித் தெரியும்? அதை யார் உனக்குச் சொன்னார்கள்?” என்று நான் கேட்டேன். “நேக்குத் தெரியும். முன்னேயே தெரியும்” என்று சொல்லிவிட்டு அவன் ஓடிவிட்டான்.
அப்பாவின் மேஜை அருகில் சுவரில் ஒரு காலண்டர் மாட்டியிருக்கிறது. தினமும் நந்துதான் அந்தக் காலண்டரில் முந்தியsv-ws-logo copyதினத்துத் தேதிச் சீட்டைக் கிழித்து எடுத்துக்கொண்டு புதுத் தேதி காண்பிக்கும்படி வைப்பான். அந்தக் காலண்டரின் சீட்டில் தேதிக்கு அடியில், ‘திரயோதசி’, ‘அசுவினி’, ‘சதுர்த்தசி’, ‘பரணி’ என்று இம்மாதிரி எழுதியிருக்கும். அதில் ஒவ்வொரு சீட்டாகத் தூக்கித் தூக்கிப் பார்த்ததில் ஏழாம் தேதி அன்று ‘திருவோணம்’ என்று இருந்தது. “அட! திருவோணமா! அன்னிக்குத்தானே நேக்குப் பொறந்தநாள்?” என்று நந்து சொன்னான். அவன் சொன்னதை ஒருவரும் கவனிக்கவில்லை. அக்கா மாத்திரம், ‘பாவம், தன் பிறந்தநாளைத் தானே பார்த்துக் கொள்ளுகிறது!’ என்று நினைத்துக் கொண்டாள்.
“நந்துவிற்குச் செல்லம் கொடுத்துக் கெடுக்காதே. அவனுடைய காரியத்தை அவனே செய்துகொள்ளும்படி பழக்கு” என்று அவனுடைய அப்பா சொல்லுவார். நந்துவின் அம்மாவுக்கு அவர் சொல்வதுபோல எப்படிப் பழக்குவது என்பது தெரியாது. ஆகையால் ஒன்றும் செய்யாமல் பேசாமல் இருந்துவிடுவாள். அவன் தானே குளித்துத் தானே சாப்பிட்டுத் தன் இஷ்டப்படி விளையாடிக்கொண்டிருப்பான். மணிப்படி பள்ளிக்கூடம் போய்விடுவான்.
பிறந்த நாளன்று காலையில் எழுந்ததும் “அக்கா, நேக்கு இன்னிக்குப் பொறந்தநாள்” என்றான்.
“தலைகாணிக்கு அடியிலே பார்” என்று அக்கா சொன்னாள்.
நந்து தலையணையைத் தூக்கிப் பார்த்தான். அங்கே ஒரு துண்டுக் கடிதத்தில் “Many Happy Returns” என்று எழுதியிருந்தது. அது தவிர ஒவ்வொரு தம்படியாகச் சேர்த்து பன்னிரண்டு தம்படிகளை ஒரு முடிச்சாகக் கட்டி வைத்திருந்தது. இது நந்துவிற்கு அக்கா கொடுக்கும் பிறந்த தினப் பணமுடிப்பு. எல்லாம் புதுத் தம்படிகள்.
நந்துவுக்கு வெகு சந்தோஷம். அதை எடுத்துக் கொண்டு கீழே ஓடினான். பல் துலக்கிப் பால் சாப்பிடுவதற்குள் தான் பார்த்தவர்களிடமெல்லாம் “இன்னிக்கு நேக்குப் பொறந்தநாள்” என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டான். அக்கா கொடுத்த பைசாக்களையும் காண்பித்தான்.
‘நந்து, நீ இவ்வளவு காசு வைத்துக்கொண்டிருக்கிறாயே. உன்னுடைய பிறந்த நாளைக்காக ஒரு ‘பார்ட்டி’ கொடேன்” என்று யாரோ கேலியாகச் சொன்னார்கள்.
உடனே “ஆமா, பார்ட்டி கொடுக்கப் போறேன்” என்று நந்து சொல்லி ஓடிப்போய் ஒரு ஸ்லேட்டை எடுத்து அதில் கீழ்க்கண்ட பெயர்களை எழுதினான்:
நந்துவின் பிறந்தநாள்:

ராமானுஜம் ரமணி
பாபு ராம்ஜி
கண்ணன் சுப்பையா
வரதன் சந்த்ரா
வேணு அம்பி

இந்த ஜாபிதாவைக் கொண்டுபோய் ஜகன்னாதனிடம் கொடுத்து, ‘இவாளெல்லாம் என் பார்ட்டிக்கு வரணும். அதற்குக் கடிதாசு எழுதிக் கொடு” என்று நந்து கேட்டான்.
ஜகந்நாதன் நந்துவின் சிற்றப்பா பிள்ளை.எட்டாவது வகுப்பில் படிக்கிறவன். இங்கிலீஷ் தெரியும். வெகுநாட்களாய் விட்டில் இருக்கும் டைப்ரைட்டர் பேரில் கண். இப்போது நந்துவுக்காக என்ற காரணத்தைக் கொண்டு பரபரப்புடன் டைப்ரைட்டரைத் திறந்து, முழு இங்கிலீஷில் தப்புகள் அதிகம் இல்லாமல் அழைப்புக் கடிதங்கள் அடித்துவிட்டான்.

“நந்துவின் பிறந்த தினக் கொண்டாட்டத்திற்குத் தாங்கள் (தாங்கள் மாத்திரம்) எழுந்தருள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன்.

ஜகந்நாதன்”

ரமணியும் ராம்ஜியும் அதை எல்லாருக்கும் கொண்டுபோய்க் கொடுத்தார்கள்.
அம்மா கையிலும் ஒரு கடிதம் கிடைத்தது. “பார்ட்டியா, நந்து? அப்படியானால் நீங்களெல்லோரும் சாப்பிடுவதற்கு வாழைப்பழமும் பக்ஷணமும் நான் கொடுக்கிறேன்” என்றாள் அம்மா.
“இல்லேம்மா, வாழப்பழமும் மிச்சரும்” என்றான் நந்து.
“சரி” என்றாள் அம்மா.
“ஏன், நந்து, வஸந்தாவும் நானும் ‘மாஜிக்’ செய்யட்டுமா?” என்று அக்கா கேட்டாள்.
“உம்” என்று ஒப்புக்கொண்டான் நந்து.
வேணுகோபாலன்  மூன்றாவது வீட்டில் இருக்கும் பையன். ஜகந்நாதனின் சிநேகிதன். பார்ட்டி என்று கேட்டதும் “நான் நிகழ்ச்சி குறிப்புகள் எழுதி கொடுக்கிறேன்” என்றான். அவனுடைய  பள்ளிக்கூடத்தில் பல நிகழ்ச்சிகளை அவன் பார்த்திருக்கிறான். அவை அநேகமாய் கட்டிடத் திறப்பு விழா அல்லது வருஷ கொண்டாட்டங்களாய் இருக்கும். அவன் தயாரித்த குறிப்பு பின்வருமாறு இருந்தது.

வரவேற்பு

விளையாட்டு பந்தயங்கள்.

100 கஜம் ஓடுதல்

50 கஜம் ஓடுதல்

உயரம் தாண்டுதல்

நீளம் தாண்டுதல்

பாட்டு

தேநீரும் சிற்றுண்டியும்

டிராமா

பரிசளிப்பு

வருஷாந்த அறிக்கை

அக்கிராசனர் சொற்பொழிவு

வந்தனம்

வந்தே மாதரம்

ஜகந்நாதன் இதைப் படித்துவிட்டு “போடா டிராமா யார் போடுவா? இன்னிக்குச் சாயங்காலத்துக்குள்ளே எப்படி போட முடியும்?” என்றான்.
“அதான் அக்கா மேஜிக் பண்ண போறாளே!” என்றான் நந்து. அவ்வளவு பெரிய நிகழ்ச்சிக் குறிப்பைப் பார்த்ததும் அவனுக்குப் பெருமை தாங்கவில்லை.
“சரி பிரைஸ் என்ன கொடுக்கிறதாம்?” என்றான் ஜகந்நாதன். அழைப்புக் கடித்ததில் கையெழுத்து இட்டது முதல் அவனுக்கும் இந்தப் பார்ட்டி விஷயத்தில் பொறுப்பு ஏற்பட்டுவிட்டது.
“என்னிடம் ஒரு பம்பரம் இருக்கு. அதை வேணும்னா நான் தரேன்” என்றான் ரமணி.
“எங்கிட்ட சாக்பீஸ் இருக்கு” என்றான் ராம்ஜி.
“அது போறுமோ?” என்று நந்து கவலையுடன் ஜகந்நாதன் முகத்தை பார்த்தான்.
“நாலு விளையாட்டு எழுதி இருக்கே..ரெண்டு பிரைஸ் எப்படி போறும்?” என்று அவன் கேட்டான்.
நந்து உடனே அப்பாவிடம் ஓடினான். “அப்பா எனக்கு கண்ணாடி கோலியும் பால் கோலியும் வாங்கி தரயா?சாயங்காலம் பார்டிக்கு பிரைஸ் கொடுக்கணும்” என்று கேட்டான்.
” தொந்தரவு செய்யாதே. மத்தியானம் மூன்று மணிக்கு வந்து ஞாபகமூட்டு” என்றார் அப்பா.
“அப்படினா அப்பா, நான் வந்து அப்பா, மத்தியானம் பள்ளிக்கூடம் போகாம இருக்கட்டுமா?” என்றான் நந்து.
அவர் சற்று யோசித்துவிட்டு “சரி ஆனால் காலையில் போய் வர வேண்டும்” என்றார்.
நந்து குதித்துக்கொண்டே போய் பாயாசம் வடை எல்லாம் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடம் போனான்.
பிற்பகல் இரண்டு மணிக்கு நந்து பள்ளிகூடத்திலிருந்து வந்து சாப்பிட்டாய்விட்டது. கடிகாரத்தைப் பார்த்து கொண்டே இருந்தான். இரண்டே முக்கால் ஆனதும் அவனால் பொறுக்க முடியவில்லை. மெதுவாக மாடிப்படியில் ஏறி ஜன்னல் வழியாக எட்டி பார்த்தான். அப்பா நாற்காலியில் சாய்ந்து கொண்டு எதோ படித்து கொண்டிருந்தார்.கோபித்து கொள்ள போகிறாரே என்று கீழிறங்கினான்.ஆனால் முழுவதும் இறங்கவில்லை.பாதி படியில் உட்கார்ந்திருந்தான்.
ஐந்து நிமிஷத்திற்கெல்லாம் “நந்து” என்று அப்பாவே வலுவில் கூப்பிட்டார். நந்து ஓடினான். அப்பா இரண்டு கைகளையும் இறுக மூடிக் கொண்டிருந்தார்.
உடனே நந்துவிற்கு அப்பா கைக்குள் என்னவோ இருக்கிறது என்று தெரிந்துவிட்டது.அவசர அவசரமாக அவன் அப்பாவின் கையை பிடித்து, அதை பலமாக திறந்து பார்த்தால் பள பள வென்று புதுக் கோலிகள்! நந்து அவற்றை எடுத்துக்கொண்டு சந்தோஷமாக ஓடி வந்தான்.

oOo

சாயங்காலம் ஆனதும் அழைப்புக் கடிதம் பெற்ற சிநேகிதர்கள் வந்தார்கள். அழைக்கப்படாத சிலரும் வந்திருந்தார்கள்.
வீட்டிற்குள் இடம் இல்லாததால் தெருவில் தான் விளையாட்டு பந்தயங்கள் நடைபெற்றன. ஜகன்னாதனும் வேணுவும் தங்களைத் தாமே தீர்ப்பு உரைப்பவர்களாய் நியமித்துக்கொண்டனர்.
அம்பிக்கு எட்டு வயது. இருந்தாலும் பத்து வயது பையன்களை கூட அவன் தோற்கடித்துவிட்டான்.

உயரம் தாண்டுதல்

முதல் பரிசு              அம்பி

நீளம் தாண்டுதல்

முதல் பரிசு                  அம்பி

100 கஜம் ஓடுதல்

முதல் பரிசு                  அம்பி

50 கஜம் ஓடுதல்

முதல் பரிசு                    அம்பி

அம்பிக்கு அம்மா இல்லை. இருந்தாலும் அவன் எப்போதும் சிரித்த முகமாக தான் இருப்பான். அவனைக் கண்டால் எல்லோருக்கும் பிடிக்கும். மிகவும் இனிமையான சாரீரம்.நன்றாகப் பாட்டுப் பாடுவான்.
விளையாட்டுக்கள் முடிந்ததும் எல்லோரும் உள்ளே வந்தார்கள்.விளையாட்டின் போது அவர்கள் கத்திக் கொண்டே விளையாடினபடியால் எல்லோருக்கும் தாகம் ஏற்பட்டிருந்தது.அதனால் அம்மா நிகழ்ச்சிக்  குறிப்பை மாற்றி “இப்பொழுதே தேநீரும் சிற்றுண்டியும் என்பதை வைத்து கொள்ளுங்கள்’ என்றாள். குடத்தோடு தீர்த்தமும் தட்டில் வாழைப்பழமும் மிக்சரும் வந்தன. அவைதான் தேநீரும் சிற்றுண்டியும். வசந்தா அவற்றை எல்லோருக்கும் சமர்த்தாக எடுத்துக் கொடுத்தாள் .
அடுத்தது பாட்டு. ஆனால் யார் பாடுவது?
”அம்பிதான் பாடணும்” என்று நந்து சொன்னான்.
அம்பி, “ஆடு ராட்டே, சுழன்றாடு ராட்டே” என்ற பாட்டை இனிமையாகப் பாடினான். அதை அவன் கிராமபோனில் கேட்டிருக்கிறானாம்.
அதற்குமேல் அக்காவும் வஸந்தாவும் ‘மாஜிக்’ செய்தார்கள். வஸந்தாவின் கண்களை நன்றாக இறுகக் கட்டி விட்டார்கள். அக்கா ஏதாவது ரகசியமாக ஜாடை செய்தால்கூட வஸந்தாவிற்குத் தெரியாது. அக்கா தூரத்தில் நின்றுகொண்டு, “நான் செய்கிற மாதிரி செய்” என்று வஸந்தாவிடம் சொல்லிவிட்டுக் கீழே உட்கார்ந்தாள்.
உடனே வஸந்தாவும் உட்கார்ந்தாள்.
அக்கா நின்றால் வஸந்தாவும் நின்றாள்.
அக்கா பல்லைக் காண்பித்தால் வஸந்தாவும் காண்பித்தாள். அக்கா அழகு காட்டினால் வஸந்தாவும் காண்பித்தாள். வஸந்தாவின் கண் இறுகக் கட்டியிருந்தது.
அப்புறம், “யாராவது என்னிடம் ரகசியமாய் ஒரு வார்த்தை சொல்லுங்கள். அதை வஸந்தாவைக் கண்டு பிடிக்கச் சொல்கிறேன்” என்றாள் அக்கா.
ரமணி அக்காவின் காதோடு, “ஒட்டகம்” என்று ரகசியமாய்ச் சொன்னான்.
அக்கா வஸந்தாவைப் பார்த்து, “ரமணி நினைத்துக் கொண்டிருக்கும் வஸ்து ஒரு புஸ்தகமா?” என்று கேட்டாள்.
”இல்லை” என்றாள் வஸந்தா.
”ரயில் வண்டியா?”
”இல்லை.”
”வீடா?”
”இல்லை.”
”மரமா?”
’இல்லை.”
”மாடா?”
’இல்லை.”
”ஒட்டகமா?”
”ஆமாம்.” என்றாள் வஸந்தா. இது எப்படி வஸந்தாவிற்குத் தெரிந்தது. அதுதான் அக்காவின் மந்திரம்.
ஜகந்நாதன் நிகழ்ச்சிக் குறிப்பை எடுத்துப் பார்த்தான். “பரிசளிப்பு, வருஷாந்த அறிக்கை, பிரசங்கம்” என்று இருந்தது. “இது மூன்றும் நீதான் செய்ய வேண்டும்” என்றான் அக்காவிடம். அக்காவிற்குப் பரிசுகளைப் பற்றித் தயக்கம்; பிரசங்கம் செய்யத் தெரியாது. ஆகையால், “பரிசுகளை நீ கொடு. வேணு பிரசங்கம் செய்யட்டும். நான் வருஷாந்த அறிக்கை சொல்லுகிறேன்” என்றாள்.
நந்துவுக்கு வருஷாந்த அறிக்கை என்றால் புரியவில்லை. பேசாமல் இருந்தான்.
ஜகந்நாதன் அம்பியையும் மற்றவர்களையும் கூப்பிட்டு ஒவ்வொரு பரிசாகக் கையில் வைத்து மூடி அனுப்பினான். அவனுக்குப் பரிசுகள் இவ்வளவு மட்டமாக இருப்பது பற்றிக் கொஞ்சம் சங்கோசம்.
அக்கா எழுந்து நின்றாள்.
”நந்துவிற்கு இன்று ஆறு வயசு நிரம்புகிறது. அவன் இந்த ஒரு வருஷமாய் ரொம்பச் சமர்த்தாகவும் இல்லை, ரொம்ப அசடாகவும் இல்லை. ஒரு சமயம் எனக்குன்னு வைத்திருந்த சாக்லேட்டைச் சாப்பிட்டு விட்டான்.”
”எப்போ , அக்கா?” என்றான் நந்து.
”எத்தனையோ நாள் அம்மா எண்ணெய் தேய்த்துக் கொள்ளணும்னு சொல்லிக் கொண்டிருக்கச்சே, அவசரமாய்ப் போய்க் குளிச்சுட்டு வருவான். ஆனால் சமர்த்தாகப் படிக்கிறான். அது ஒன்றுதான் நல்லது.” என்று சொல்லி முடித்தாள்.
எல்லாரும் சிரித்தார்கள்.
வேணு கல்வியைப் பற்றிப் பிரசங்கம் செய்தான். அதுவும் நன்றாக இருந்தது.
கடைசியாக எல்லாரும் வந்தேமாதரம் பாடிவிட்டு, இன்னும் கொஞ்சம் மிக்ஸ்சர் எடுத்துப் பையில் போட்டுக் கொண்டு வீட்டுக்குப் போனார்கள். நந்து திருப்தியாகத் தூங்கச் சென்றான்.

oOo

ல அரசாங்கங்கள் தத்தம் வேலைகளைப் பார்த்துக் கொள்ளும் வகைகளை விட நந்துவின் பிறந்த நாளை இந்தக் குழந்தைகள் நடத்திக் கொண்டது செம்மையாக இருக்கிற மாதிரி எனக்குத் தோன்றியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.