இந்தத் தலைப்பு கொண்ட ஆங்கிலப் புதினத்தை, நடியாவுக்கான பாடல் எனவும் பொருள் கொள்ளலாம். இதுதான் சரியான தலைப்பாக அமையும். இந்தப் புதினம் அரபு நாடுகளின் பண்பாட்டின், கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக, பெண்கள் வாழும், (வாழ அனுமதிக்கப்படும்) முறையை விவரித்து, கரிமா அஹமது எனும் ஒரு பெண்ணின் வாழ்வின் வெற்றிப் பெருமிதத்தையும் சோகக் கதையையும் வெகு அழகாக விவரிக்கின்றது. இதை எழுதியவரும் ஒரு பெண்ணே என்பது தான் இதன் கூடுதல் சுவாரசியம்.
பெண்ணுள்ளத்தைப் பெண்ணால் தான் புரிந்து கொள்ள இயலும், விவரிக்க முடியும் என்பதற்கேற்ப, கரிமா எனும் மென்மையான (எல்லாப் பெண்களுமே மென்மையானவர்கள் தான்; ஆனாலும் சமய சந்தர்ப்பங்கள் அவர்களை மன உறுதியும் வலிமையும் கொண்டவர்களாகவும் மாற்றி விடுகின்றன என்பதே உண்மை) ஒரு பெண்ணின் தடை செய்யப்பட்ட காதலையும், அவள் மன ஓட்டங்களையும் வெகு கச்சிதமாக – படிக்க ஆரம்பித்து விட்டால் கீழே வைக்கவே முடியாத சுவாரசியத்துடன், ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் பிரிட்டிஷ் அரசின் ஏகாதிபத்தி யத்தையும், எகிப்து நாட்டின் தேசப்பற்றையும் சரித்திர ஆதாரங்களுடன் கலந்து, உயிரோட்டமான சுவை மிகுந்த ஒரு அருமையான காதல் கதையை, உள்ளத்தைப் பிழியும் உணர்வுகளால் நிரப்பி வடித்திருக்கிறார் இந்தப் பெண்மணி ஸொஹேர் கஷோக்கி. விறுவிறுப்பாகச் செல்லும் கதையை ஒரே மூச்சாகப் படித்து முடித்ததும் உள்ளத்தை நெருடும் ஆற்றாமை விவரிக்க இயலாதது. சில நாட்கள் ஆறப் போட்டபின் திரும்பவும் பல பகுதிகளை நிறுத்தி, நிதானமாக, அதன் சுவை குன்றாத கதைச் சூழலுக்காகவும், கரிமாவின் பாத்திரப் படைப்புக்காகவும் திரும்பப் படிக்கத் தூண்டுவது இந்தப் புதினம். அத்தனை அழகான உணர்ச்சிமயமான கவர்ச்சிகரமான பாத்திரப் படைப்புகளால் நம்மைக் கவர்ந்திழுக்கிறது இந்த நாவல்.
oOo
எகிப்தின் அலெக்சாண்டிரியாவில் காப்ரியெல் மிஸ்ரி (Gabrielle Misry) எனும் பெண் இரண்டாவது முறையாகத் தனது தாயின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்கிறாள். அவளுடைய தாய் கரிமா அஹமது, ‘எகிப்தின் இசைக்குயில்’, எனப் பெருமைப் படுத்தப்பட்டவள். மர்மமான சூழ்நிலையில் கரிமா உயிர் துறக்கிறாள்- அது தற்கொலை எனக் கூறப் படுகிறது. ஆனாலும் காபி எனும் காப்ரியேலுக்கு சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ‘என் தாய் போதை மருந்துக்கோ, குடிப்பழக்கத்துக்கோ அடிமையானவளல்ல,’ என மறுகுகிறாள் காபி. இவ்வாறு துவங்கும் கதை காலத்தில் நம்மைப் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.
‘1940-ல் ஐரோப்பாவை போர் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. எகிப்து நடுநிலைமை வகிக்க முயன்று கொண்டிருந்தது. இத்தாலியப் படைகள் லிபிய நாட்டின் எல்லைகளில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. ஜெர்மானியர்கள் எப்போது தாக்குவார்களென ஒருவராலும் கூற இயலவில்லை. ஸூயஸ் கால்வாயைக் காக்க பிரிட்டிஷார் ஆயிரக் கணக்கில் படைகளை நிறுத்தினர். எகிப்தின் இளம் அரசர் ஃபரூக்கை அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆட்சியிலிருந்து கவிழ்த்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது,’ என ஆதாரம் நிரம்பிய சரித்திரத்தை நம்முன் வைக்கிறார் கதாசிரியை. இதன் பின்னணியில் கதை விறுவிறுப்பாக வளர்கிறது.
ஹென்ரி ஆஸ்டென் எனும் பிரிட்டிஷ் செல்வந்தருக்கு அலெக்ஸாண்டிரியாவில் ஏராளமான பருத்தி விளைநிலங்கள் இருக்கின்றன. மிகவும் வசதியான சொகுசு வாழ்க்கை வாழ்பவர் அவர். அவருடைய மனைவி காதரின் தங்கள் அந்தஸ்தைப் பற்றிய பிரக்ஞையை மிக அதிகமாகக் கொண்டவள். இவர்களின் ஒரே மகனான சார்லஸ் அவர்களின் எகிப்திய கார் டிரைவர் இஸ்மாயிலின் மகளான கரிமாவிடம் காதல் கொள்கிறான். சிறு வயதிலிருந்தே சேர்ந்து விளையாடி வளர்ந்த அவர்கள் நட்பு, பருவம் வந்ததும் காதலாக மாறுகின்றது. இளமையும் துடிப்பும் நிறைந்த எல்லாக் காதலர்களையும் போல, எத்தனை தடைகள் வந்தாலும் ஒன்று சேர்வோம் என்ற உறுதியில் இருவரும் நிற்கின்றனர்.
கரிமா இனிய குரல் கொண்டவள். ஒரு ரமதான் விசேஷத்தின் போது தன் இனிய குரலால் யாரும் எதிர்பாராத விதத்தில் அல்லாவின் கருணை பற்றிய ஒரு பாடலைப் பாடி எல்லாரையும் ஆச்சரியப்பட வைத்துத் தன் தந்தையையும் பெருமை கொள்ள வைக்கிறாள் கரிமா. இந்தப் பாடல் அப்போது எகிப்தின் இசைக்குயிலாகப் பரிமளித்து வந்த உம் கல்தும் என்ற பெண்மணி பாடிப் பிரபலப் படுத்தியிருந்த ‘குஃப் அல்லா’ என்ற பாடல். ( இந்த அம்மையார் ஒரு உண்மையான பாத்திரம்! இவரைப் பற்றி இன்னொரு கட்டுரையில் காணலாம்)
சில கடுமையான, சில இனிமையான சந்தர்ப்பங்கள்- இவற்றைக் கதாசிரியை அழகாக எளிமையாகக் கூறுவது கதைக்குச் சுவை கூட்டுகிறது. ஆனால் நீங்கள் கதைப் போக்கை அறியும் ஆவலில் பக்கங்களை வெகு வேகமாகப் புரட்டுபவரானால், இதை ரசிக்க இயலாது போய்விடும்!
இந்தப் பாடல் நிகழ்ச்சியின் போது கரிமாவின் சகோதரன் ஓமார் தன் தங்கை பொது இடங்களில் பாடுவது தவறு என்ற எண்ணத்தில் அவளைப் பார்த்து முறைத்த வண்ணம் இருக்கிறான். கரிமாவோ, அல்லாவின் புகழைப் பாடினால் என்ன தவறு என நினைக்கிறாள். தந்தையோ, வாஞ்சையும் பெருமிதமும் பொங்கத் தன் மகளின் கரத்தைப் பற்றை அழுத்தித் தன் ஆசியை அளிக்கிறார்.
ரமதானின் முடிவில், கரிமாவின் குடும்பத்திற்கு அவளுடைய தந்தையின் எஜமானான ஹென்ரி ஆஸ்டென் மிகுந்த வெகுமதிகளை அளிக்கிறார். இவற்றை அக்குடும்பம் தங்களை விட வும் வறியவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராகிறது. இஸ்லாமிய மதத்தின் ஐந்து தலையாய கடமைகளுள் ஒன்றான ‘ஆதரவற்றவர்களுக்கு உதவும்’ இந்த நிகழ்ச்சியை ஒரு எளிய காட்சியினால் விளக்குகிறார் கதாசிரியை. கரிமாவின் குடும்பம் கூடைகளில் உணவுப் பொருட்களை வைத்துத் தயார் செய்கின்றது. சார்லஸ் ஓடோடி வந்து கூடைகளைத் தூக்கி கரிமாவுக்கு உதவ முயல்கிறான். கரிமா அவனைத் தடுத்த வண்ணம் கூறுகிறாள், “சார்லஸ், நீ எங்களுடன் வர முடியாது. நாங்கள் உதவப் போகும் மனிதர்கள் ஏழைகளானாலும் தன்மானம் மிகுந்தவர்கள்; இவற்றை அவர்கள் பெற்றுக் கொள்ளும்போது, ஒரு ஆங்கிலேயன் அதைக் காண்பதை விரும்ப மாட்டார்கள்,” என்கிறாள்.
இது போன்ற சின்னச் சின்ன நிகழ்ச்சிகளால் கதைப் பின்னல் சுவையுள்ளதாக வளர்கிறது. இன்னொரு நிகழ்ச்சி:
கரிமாவிற்கு பிரபல இசைப்பாடகியான உம் கல்துமின் இசையில் பேராவல். ஆனால் உம் கல்துமின் இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் நீண்ட நாட்களுக்கு முன்பே அனுமதிச் சீட்டுகள் விற்கப்பட்டு ரசிகர்களால் நிரம்பி வழியுமாதலால் நுழையவே முடியாது. எவ்வாறோ ஒரு நிகழ்ச்சிக்கு, தெரிந்தவர் மூலம் உள்ளே நுழைந்து ஒளிந்து கொண்டு கேட்கிறாள் கரிமா. ஆஹா! மக்களின் ஆர்வத்தைத் தன்பால் சுண்டியிழுக்கும் எப்படிப்பட்ட ஒரு இசைக் கலைஞர் உம் கல்தும்! ரசிகர்களுக்கும் பாடகிக்கும் இடையேயான மிகவும் சக்தி வாய்ந்த ஆத்மத் தொடர்பாக இதைக் காண்கிறாள் கரிமா. உள்ளம் நெகிழ்கிறாள். மூன்று மணி நேரத்தில் மூன்றே மூன்று பாடல்களைப் பாடுகிறார் உம் கல்தும். திரும்பத் திரும்ப ஒரே வரியைப் பாடி, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இசை நுணுக்கங்களை வெளிப்படுத்தி, கேட்பவர்களின் பாராட்டையும், உற்சாகமான, ஆர்வமான கொண்டாடுதலையும் பெறுகிறார் அவர். கனவுலகில் மிதப்பவளைப் போல் வீடு திரும்பும் கரிமா சொர்க்கத்தை அனுபவித்தவள் போல இருக்கிறாள். தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டிய பாதை அந்தச் சின்னஞ்சிறு பெண்ணுக்கு நன்கு விளங்கி விட்டது! ஆமாம்; அவளும் உம் கல்தும் போல் பாடகியாகப் போகிறாள்!- இதுபோன்ற நெகிழ வைக்கும் தருணங்கள் மிகுந்தது இந்தப் புதினம். நீங்கள் ஒரு இசைப் பிரியராக இருந்தால் உங்கள் மனதைக் கவர்ந்து கொண்டு விடும் இசை பற்றிய நுணுக்கங்கள் நிறைந்த நடையழகு!
தன் எஜமானிக்கு உதவி புரியும் ஒரு நேரம், கடற்கரையில் உண்டான ஒரு கலவரத்தில், கரிமாவின் தாய் இறந்து விடுகிறாள். வீட்டை நிர்வகித்து, எஜமானிக்கும் உதவும் பொறுப்பு கரிமாவின் தலையில் விழுகின்றது. சார்லஸ் உடனான கரிமாவின் சந்திப்புகள், அவள் அண்ணன் ஓமாரும், சார்லஸின் பெற்றோரும் அறியா வண்ணம் நிகழ்கின்றன. மனதால் ஒன்றி விட்ட இளங்காதலர்கள் ஒருபொழுதில் உணர்ச்சி வசப்பட்டு உடலாலும் ஒன்று சேர்ந்து விடுகின்றனர். எல்லாக் காதல் கதைகள் போலும் என நினைத்தீர்களானால் நீங்கள் இசையையும் உறவுகளின் மேன்மையையும் கொண்டு அற்புதமாகப் படைக்கப்பட்ட ஒரு புதினத்தின் சுவையை இழந்தவர்களாவீர்கள்!
இந்தக் காதலைப் பற்றி அறிந்த தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபம் கொண்டு காரை எடுத்து வேகமாக ஓட்டிச் சென்று, விபத்துக்குள்ளாகி உயிரிழக்கிறான் சார்லஸ். இந்தத் துயரத்தில் இருந்து விடுபடும் முன்பே தான் கருவுற்றிருப்பதை உணர்கின்றாள் கரிமா. இதை எப்படியோ அறிந்து கொண்ட ஓமார் அவளை அடித்து உதைத்துத் துன்புறுத்துகிறான். இதற்கெல்லாம் முன்பே கரிமாவை மணந்து கொள்ள ஆவலாக இருந்த முனீர் அஹமதுக்கு அவளை மணமுடிக்க ஏற்பாடாகிறது. கரிமாவின் வயிற்றுக் குழந்தை முனீருடையது எனவே உலகம் கருதுகிறது. முனீர் கரிமாவின் இனிமையான இசைத் திறத்தாலும், தன்னை விடப் பல வயது சிறியவளான அவளுடைய மரியாதையும் அன்பும் கலந்த விசுவாசத்தாலும் ஈர்க்கப்பட்டு அவளைத் தேவதையாகத் தாங்குகிறான். அவளுக்குப் பிறந்த பெண் குழந்தை நடியாவைத் தனதென்றே ஏற்று மகிழ்கிறான். கரிமா பெரிதும் மதிக்கும் உம் கல்துமைப் போலவே அவளையும் புகழின் உச்சிக்குக் கொண்டு செல்ல எல்லா முயற்சிகளையும் தனது பண பலத்தாலும் தொடர்புகளாலும் மேற்கொள்கிறான்.
தனது முதல் இசை நிகழ்ச்சியைப் பற்றி மிகுந்த பயத்துடன் இருந்தவளை உற்சாகப் படுத்துகிறான்: “நான் முதல் வரிசையில் அமர்ந்திருப்பேன். நீ என்னைப் பார்த்தபடியே பாடு; எல்லாம் நன்றாக நடைபெறும்,” என்கிறான்.
சோக ரசம் நிறைந்த, ‘என் அன்பே! இன்றிரவு நீ எங்கே? என்னைப் பற்றிக் கனவு காண்கிறாயா? இரவு நேர வானம் நட்சத்திரங்களால் நிரம்பியுள்ளது; எனது சிறிய இதயமோ தனிமையால் நிரம்பி உள்ளது,’ என்ற பாடலைப் பாடி ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடுகிறாள் கரிமா. தொடர்ந்து, வீட்டு நினைவாலும் இழப்பினாலும் அலைக்கழிக்கப்படும் துயரம் மிகுந்த இன்னொரு பாடலையும் உம் கல்தும் பாடுவதைப் போலவே, பாடல் வரிகளை திரும்பத் திரும்ப வெவ்வேறு இசை நுணுக்கங்களை வெளிப்படுத்திப் பாடுகிறாள் கரிமா. ரசிகர் கூட்டம் உற்சாகத்தில் நிலை கொள்ளாமல் கூச்சலிட்டு, “கரிமா, கரிமா, இசைக்குயில்!” என முழங்குகிறது. ‘அவர்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது அவள் அழகாக இருப்பதால் மட்டும் அல்ல; தனது இதய உணர்வுகளை வெளிப்படுத்தி அவர்கள் இதயங்களைக் கவர்ந்து கொண்டதனாலும் தான்,’ என்கிறார் கதாசிரியை.
உம் கல்துமிற்கு மக்களின் இதயங்களில் தனி இடம் இருந்தது; இன்றும் இருக்கிறது. வியாழக்கிழமை இரவு வானொலி ஒலிபரப்பு அவருடைய உரிமை! கரிமா என்னும் இசைக்குயிலையும் மக்கள் அங்கீகரித்தனர்- உம் கல்துமின் போட்டியாக கரிமா வளரவில்லை. ஆனால் அவரது இளைய சகோதரியாக எண்ணப்பட்டாள்!
கரிமாவின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் பட்டாலும், அவளிடம் சென்று பணம் பெற்று தன் வசதிகளைப் பெருக்கிக் கொள்ள அவளுடைய அண்ணன் ஓமார் தயங்கவில்லை.
கதைப் பின்னல் இவ்வாறு வளர்கிறது; ‘நறுக்’கென்ற ஒரு திருப்பத்திற்குத் தயாராகுங்கள்!
‘கறுப்பு சனிக்கிழமை எனப்பட்ட ஜனவரி 26, 1952-ல் கெய்ரோ நகரம் எரிந்து கொண்டிருந்தது! பணக்கார ஐரோப்பியர்களும், பிரிட்டிஷாரும் மட்டும் செல்லும் வெகு விசேஷமான கிளப் நிரம்பி வழிந்தது. மக்கள் கூட்டம் இங்கிலீஷ்காரர்களையும் தங்கள் நாட்டு அரசியல்வாதிகளையும் திட்டியவாறும் அரசர் ஃபரூக்கை எதிர்த்துக் கண்டனக் கோஷங்களை எழுப்பியவாறும் திரிந்தது. முந்தைய தினம் தான் பிரிட்டிஷ் படை ஒன்று பெயர் தெரியாத எகிப்தியப் போலீசார் பலரை சூயஸ் கால்வாயில் படுகொலை செய்திருந்தது. அதற்கு இப்போது கெய்ரோ பழி வாங்கத் துடித்தது. ஆனால் யார் மீது?’- இவ்வாறு தெரிந்த ஒரு சரித்திரப் பின்னணியில் கதை மேலும் தொடர்கிறது. நாம் நாற்காலியின் நுனிக்கு நகர ஆரம்பிக்கிறோம்!! தெரிகிறதா? (தூக்கமாவது, உணவாவது! படித்து முடித்து விட்டுத் தான் மறுவேலை!!)
இங்கு ஒரு தனியார் இசை நிகழ்ச்சி ஏற்பாடாகி அதில் கரிமா பாடுகிறாள். வெளியே கலவர சப்தங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. வெளியே வந்த முனீர் கவலைப் படுகிறான். அப்போது கரிமா எல்லோராலும் மிகவும் விரும்பப்படும் ஒரு பாடலைப் பாடத் துவங்குகிறாள்.
“ஓ, நான் மிகவும் நேசிக்கும் எகிப்து நாடே! நீயும் பருவகாலங்களைப் போல மாறிக் கொண்டு இருக்கிறாய். உன்னில் எழுந்துள்ள புயல், பெரும் காற்றைப் போல உக்கிரமாக இருக்கிறது. நாங்கள் வலியை அனுபவித்திருக்கிறோம்; சந்தோஷத்தையும் கண்டிருக்கிறோம்……”
அவள் திரும்பத் திரும்ப பாடலின் வரிகளை இசைப் பின்னலாகப் பாடும்போது தன் மனைவியின் குரலில் வெளிப்படும் உணர்ச்சியையும், அது பாடலின் பொருளை ஆழமாகக் காட்டும் நேர்த்தியையும் முனீர் தன் மனக்கண்ணில் காண்கிறான். கதவின் அருகில் நிற்கும் ஒரு ஹோட்டல் பணியாளின் கண்களில், பாடல் முடிந்த தறுவாயில், நீர் பெருகுவதையும் காண்கிறான்.
அழகே உருவான, குழந்தைத்தனம் மாறாத, தான் மணந்து கொண்ட அந்த இனிய இருபது வயது இளம் பெண்ணான கரிமாவிடம் முனீர் கொண்டிருந்த காதலும் அன்பும் கொஞ்ச நஞ்சமல்ல; அவளுக்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தான்…….
‘தெருவில் இருந்த கூச்சல் பலமடங்காகி, ஒரு ஜன்னல் உடைபடும் சப்தம் கேட்கிறது.
‘மேடையின் பின்புறம் அவர்களது சிறு குழந்தை நடியா தனது தாதி மடியில் உறங்கிக் கொண்டிருந்தவள், இந்தக் கலவரங்களில் எழுந்து தன் தாயைத் தேடுகிறாள். இதற்குள் அந்தக் கட்டிடம் நெருப்புப் பிடித்துக் கொண்டு விட்டதால் எல்லாரும் திசைக்கொருவராக ஓடலானார்கள்.’
“முனீர், நடியாவைக் காணவில்லையே,” கலவரக் குரலில் கரிமா.
“நல்லவேளை, அவள் நெருப்பிலகப்படாமல் தப்பி வெளியே தாதியுடன் சென்றிருப்பாள்,” முனீர்.
நடியா தப்பிப் பிழைத்ததையும், அவள் எவ்வாறு எங்கே வளர்ந்தாள் என்பதையும் நீங்கள் புத்தகத்தைப் படித்தே தெரிந்து கொள்வது முக்கியம். ஒரு மர்ம நாவலின் விறுவிறுப்புக்கு ஈடான தொடர் நிகழ்ச்சிகள்.
சுருக்கமாக, குழந்தைப் பேறில்லாத புகழ் பெற்ற மருத்துவரான தாரிக் மிஸ்ரியும் அவருடைய மனைவி செலீனும் பயத்துடன் குப்பைத் தொட்டியின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் குழந்தையைக் கண்டெடுத்து பாரிஸுக்குக் கொண்டு சென்று வளர்க்கின்றனர். அவளுடைய பெயர் இப்போது காப்ரியெல் (மிஸ்ரி) – காபி!
குழந்தை நடியா காணாமல் போன தினத்தில் முனீரை இதய நோய் தாக்குகிறது. மெல்ல மெல்ல வலுவிழந்து வரும் அவன் அலெக்ஸாண்டிரியா நகரில் தன் கடைசி நாட்களை எதிர் நோக்கி இருக்கிறான். கரிமா இசை நிகழ்ச்சிகள் செய்து பல நாட்களாகி விட்டன. ஆனால் கரிமாவின் இழப்பின் துயரம் அவளை மேலும் புகழ் பெற்றவளாக ஆக்குகிறது. எகிப்தியர்கள் காதல் கதைகளையும் விட துயரக் கதைகளை அதிகமாக விரும்புபவர்கள்! இசைக்குயிலின் இழப்பின் துயரம் அவர்களுடைய துயரமும் கூட!
மரணப் படுக்கையில் முனீர், கரிமா தொடர்ந்து பாட வேண்டும் என வாக்குறுதி பெற்றுக் கொள்கிறான். அவனுடைய உயிர் பிரிந்ததும் அவள் அவனுக்காக ஒரு புதிய பாடலைப் பாடுகிறாள். ‘அவனுக்கு மிகவும் பிடித்தமானதும் வெள்ளி இழைகளால் நன்றாகப் பூவேலை செய்யப்பட்டதுமான கருநிறப் பட்டு அங்கியை அணிந்து கொண்டு, சுவர்க்கத்திலிருந்து பெறப்பட்ட வார்த்தைகளால் தான் இயற்றிய பாடலைப் பாடுகிறாள் கரிமா’ என்னும் எகிப்திய இசைக்குயில்.
“என் செல்லக் குழந்தையே, நீ எங்கே சென்றாய்?
நான் உன்னை இழந்து மிகவும் தவிக்கிறேனே
என் கண்களை மூடினால், உன்னை என்முன் காண்கிறேனே.
எந்த ரோஜா மலரும் என் வீட்டை அழகு மிளிரச் செய்யாது,
எந்த மெழுகுவர்த்தியும் அதை ஒளிரச் செய்யாது,
நீ என்னிடமிருந்து வெகு தொலைவில் இருக்கும் வரை…..”
இந்தப் பாடல் கூடிய விரைவில் கரிமாவின் புகழ் பெற்ற பாடல்களுள் ஒன்றாகப் போகிறது. இதைக் கேட்பவர்களெல்லாம் கண்ணீர் சிந்தப் போகிறார்கள். கரிமா இதற்கு, ‘நடியாவின் பாடல் (நடியாவுக்கான பாடல்),’ எனப் பெயரிட்டிருந்தாள்.
இதே சமயம் உம் கல்துமின் உடல் நலம் குன்றி அவர் தன் குரலை இழக்க ஆரம்பித்தார். எந்த வைத்தியரும் நூதன சிகிச் சை முறைகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளித்தால், அந்த விலைமதிப்பற்ற குரலை இன்னும் பாழடித்து விடுவோமோ என பயப்பட்டனர். தொடர்ந்த நாட்களில் கரிமாவை எகிப்து நாடு உலகப் புகழ் வாய்ந்த உம் கல்துமின் வாரிசாக அங்கீகரித்துக் கொண்டது.
‘அமெரிக்க மருத்துவர்கள் உம் கல்துமின் குரல்வளையிலிருந்து பெரிய ஒரு கட்டியை அகற்றினர். அதிபர் கமால் அப்தெல்-நாஸரின் தலைமைக் காலத்தில் அமெரிக்க- எகிப்திய உறவு பலப்பட இது ஒரு முக்கிய காரணமாக இருந்தது.‘
‘காப்ரியெல் வளர்ந்து ஒரு புகழ் வாய்ந்த பத்திரிகையின் நிருபராகப் பணியாற்றுகிறாள். உம் கல்துமின் மறைவின் போது அவள் அவருடைய கடைசி ஊர்வலத்தை நேரில் கண்டு எழுதுகிறாள். கரிமா தான் தன் தாய் எனத் தெரிய வரும்போது அவள் உள்ளம் படும் பாட்டை மிக அருமையாகக் கதாசிரியை விவரிக்கிறார். தாயுடன் இணைந்த அவளுடைய இனிய வாழ்வு அதிக நாட்கள் நீடிக்கவில்லை. மர்மமான முறையில் கரிமா ஒரு ஹோட்டல் அறையில் இறந்து விடுகிறாள். தனது காதலனான இன்னொரு பத்திகையாளரின் துணையோடு, தனது தாய் கரிமாவின் அசந்தர்ப்பமான மரணம் பற்றிய விவரங்களைத் துப்புத் துலக்கி அறிகிறாள்,’ எனக் கதை ஓட்டம் அருமையாகச் செல்கின்றது. ‘புத்தகத்தில் படித்துக் கொள்ளுங்கள்,’ எனக் கூறி உங்கள் ஆவலையும் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்யலாமா?
புதினத்தின் முடிவு உள்ளத்தை வருடி, கரிமாவின் பாத்திரத்தை உன்னதமான ஒரு பெண்மணியின் கதையாகப் பெருமைப்படுத்துகிறது.
‘காபி தனது பாட்டி தாத்தாவின் வீட்டில் (தன் தந்தையான சார்லஸ் வாழந்த ஹென்ரி ஆஸ்டெனின் பெரிய வீட்டில்) தன் திருமண உடையில் கண்ணடி முன் நின்றபடி தன்னைப் பார்த்துக் கொண்டவள், திரும்பி, ஜன்னலின் வழியாக சிறிது தூரத்திலிருந்த ஒரு அழகிய சிறிய வீட்டைப் பார்க்கிறாள். அவள் கண் முன் ஒரு கற்பனைக் காட்சி விரிகின்றது: அழகிய கருமையான கூந்தல் கொண்ட இளம்பெண் ஒருத்தி, தோய்த்த துணிகளைக் கொடியில் உலர்த்திக் கொண்டிருக்கிறாள். அவளால் காதலிக்கப்படும் ஒரு இளைஞன் அவளுக்கு உதவ முற்படுகிறான். அவர்களுடைய மகிழ்ச்சி வெகு சில நாட்களே நீடித்தது என்பது எவ்வளவு துயரமானது! ஆனால் அவர்களது அன்பு தானே தனக்கு உயிர் கொடுத்தது, அதற்காக அவளுடைய தாய் ஒருநாளும் வருத்தப் படவில்லை என்ற உண்மையையும் காபி அறிவாள்.
‘உம்மி! (அம்மா!) நீ என்னைப் பார்க்க முடிந்தால், நான் என்னுடைய நஸீபை (வாழ்வின் அதிர்ஷ்டத்தை) கண்டு கொண்டேன் என நீ தெரிந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்,’ என ரகசியக் குரலில் கூறிக் கொண்டாள். பின்பு திரும்பி, தன் மணமேடையை நோக்கி நடக்கலானாள்.’ எனப் புதினத்தை முடித்துள்ளார் ஸொஹேர் கஷோக்கி.
oOo
இந்தப் புதினத்தின் பலமே அது எகிப்து என்னும் பழமை வாய்ந்த நாட்டின் கலாச்சாரத்தையும், அது தற்காலத்தில் பெண்களை நடத்தும் விதத்தை விவரிப்பதும், அதனையும் மீறி எவ்வாறு ஒரு பெண் தனது இசை மூலம் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு தனது சொந்த வாழ்வில் சோகங்களையும் புகழின் உச்சியையும் சந்திக்கிறாள் என்பதும் தான். இவை அத்தனையுமே, ஒரு உண்மையான சரித்திரப் பின்னணியில் அமைந்துள்ளது இன்னுமே அருமையான விஷயம். அராபிய இசையின் நுணுக்கங்களை கதாசிரியை விவரிப்பதும், நிஜமாக நமது காலத்திலேயே வாழ்ந்த இசைப்பாடகியான உம் கல்துமைப் பற்றிய தகவல்களும் அவருடைய இசையைக் கேட்கத் தூண்டுகிறது. ஆச்சரியமான அற்புதமான வித்தியாசமான இசை மரபு. இந்தப் புதினத்தின் கதாநாயகியான கரிமா, பழம் பெரும் பாடகி உம் கல்துமின் நிழலாகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறாள். இதுவே, ஒரு அழகிய கலாச்சாரத்தின் புகழ் பெற்ற இசை மரபைத் தேடிச் சென்று கேட்க வைக்கிறது. You Tube-ல் உம் கல்துமின் இசையைக் கேட்டும் கண்டும் மகிழலாம்.
மேலும் அரபு நாடுகளின் கலாச்சாரத்தையும், பெண்களின் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ள வேண்டுவோர் கதாசிரியையின் மற்ற இரு புதினங்களையும் படிக்க வேண்டும். (Mirage; Mosaic). இருப்பினும் இம்மூன்றிலும், ‘நடியாவின் பாடல்,’ எனும் புதினமே மிகச் சிறந்து விளங்குகிறது.
ஸொஹேர் கஷோக்கி இந்தப் புத்தகத்தைத் தனது உடன் பிறந்தவரின் மகனான டோடி ஃபாயேட்டின் (Dodi Fayed) நினைவுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் நண்பரான டோடி ஃபாயேட் அவருடன் ஒரு கார் விபத்தில் மரணமடைந்ததை நாம் அறிவோம். ஆனாலும் சில இணைய தளங்களில், இந்தக் கதாசிரியை, டோடி ஃபாயேட்டின் உறவினராக இருப்பதால் தான் தேவைக்கு அதிகமாகப் புகழப் படுகிறார் என்ற குற்றச் சாட்டை, வருத்தத்துடன் மறுக்க வேண்டியுள்ளது. நீங்களே படித்துப் பாருங்களேன்- கதையுடனும் பாத்திரங்களுடனும் ஒன்றிப் போய் விடுவது நிச்சயம்.