சிலப்பதிகாரக்கதை – எனது புரிதல்

”கண்ணகி, மாதவி ஆகிய பாத்திரப் படைப்புகளை விமரிசனக் கண்ணோட்டத்தில் அணுகும் ஸ்வர்ணமால்யாவின் முயற்சி குறித்தும் குறிப்பிடவேண்டிய தேவை உள்ளது. கண்ணகியைத் தமிழ்த்தேசிய ஆன்மாவின் அடையாளமாகக் காண்கிற முயற்சி, உலக அனுபவமற்ற எளியவளாக இருப்பினும் தார்மிக ஆவேசங் கொண்டு நீதி கேட்டு அரசாட்சியையே வீழ்த்திய ஒரு பெண்மணியாகக் கண்ணகியைச் சித்திரிக்கும் முயற்சி இவ்வாறு பல கோணங்களில் கண்ணகியைக் கண்டுணர்ந்து பல அறிஞர்கள் பேசியும் எழுதியும் வந்துள்ளனர். சிலம்புக்ச் செல்வர் ம.பொ.சி. அவர்கஷீமீ தொடங்கி, மா.ரா.போ. குருசாமி, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், தற்கால அறிஞர் சிலம்பு நா.செல்வராசு வரை பல அறிஞர்கள் கட்டுரைகளும் நூல்களும் எழுதியுள்ளனர். அவ்வகையில், மனையுறை வாழ்க்கையையே உயிர் மூச்சாகக் கொள்வதற்குப் பயிற்றுவிக்கப்பட்ட, குடும்ப கௌரவத்தின் சின்னமாக வளர்க்கப்பட்ட ஒரு பெண்மணி மலைக்க வைக்கும் ஒரு சவாலை எதிர் கொள்ள நேர்கிற போது எவ்வாறு எதிர்வினையாற்றுகிறாள் என்பதையும், கல்வி கலைப்பயிற்சியுடைய, செவ்வியல் கலைஞரான ஒரு பெண்மணி அதே சவாலை எதிர் கொள்ளும்போது எவ்வாறு எதிர்வினையாற்றுகிறாள் என்பதையும் உளவியல் அடிப்படையில் ஆராய்ந்து எழுதியுள்ளார் ஸ்வர்ணமால்யா. இது எவ்வகையிலும் கண்ணகியைத் தரம் தாழ்த்தும் முயற்சியன்று.”

-கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ்.ராமசந்திரன் எழுதிய இப்புத்தகத்தின் முன்னுரையிலிருந்து ஒரு பகுதி

 

sv-ws-logo copyஇக்காப்பியத்தின் மூலத்தையும் அரும்பத உரையையும் (10-ஆம் நூற்றாண்டு), அடியார்க்கு நல்லார் உரையையும் (12-ஆம் நூற்றாண்டு) படிக்கும் வாளிணிப்பு கிடைத்தபோது  கோவலன், கண்ணகி கதாபாத்திரங்களைவிட மாதவியின் கதாபாத்திரமே என்னை ஆட்கொண்டது. நானே ஒரு நடனக்கலைஞராக இருப்பதால், சிறந்த ஆடலரசியாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் மாதவியின் பாத்திரப் படைப்பு என்னை இயல்பாக ஈர்த்தது என்று பிறர் நினைக்கலாம். அது உண்மையும்கூட. சிலப்பதிகாரக் காலத்தில் தமிழ்ச் சமூகம், இசைக்கும் நடனத்திற்கும் அளித்திருந்த முதன்மையான நிலையையும், மாதவியின் திறமை, ஆளுமை ஆகியவற்றோடு, இக்காப்பியம் விளக்கும் நுட்பமான இசை, நடனக்கூறுகளையும் நான் அறிந்துகொண்டேன். ஆனால், இதற்கும் மேலாக, மாதவி என்ற பெண், என்னைச் சிந்திக்க வைத்தாள். கோவலன், அவளைக் கடற்கரையிலேயே தனித்து நிற்க வைத்துச் சென்றுவிட, மாதவி உடனே தன்னைத் தேற்றிக்கொண்டு, அவனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். இதுவே தமிழ்க் காப்பியங்களின் முதல் காதல் கடிதம் என்று போற்றப்படுகிறது. பதின்மூன்று ஆண்டுகள் வாழ்ந்துவிட்டுத் திடீரெனக் கைவிட்ட காதலனை, இக்கடிதத்தின் மூலம் தன்னிடம் மீண்டும் வந்து சேருமாறு அவள் வேண்டுகிறாள். கோவலனோ, அக்கடிதத்தைப் பார்க்க மறுத்ததோடு, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப்போல், அன்றுவரையிலான அவளது காதலையும் நடத்தையையும் இழித்துப், பழித்து, அவளது செயல் எல்லாம் நடிப்பு என்று பழி சுமத்துகிறான். அத்துடன் நில்லாமல் கண்ணகியுடன் புகார் நகரை விட்டு நீங்கிச் செல்கின்றான்.

மாதவி மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறாள். இந்த இரண்டாம் கடிதத்தின் தொனியே வேறு. ‘அடிகள் முன்னர்’ என்று தொடங்கும் இக்கடிதத்தில் கண்ணகியைக் ‘குலப்பிறப்பாட்டி’ என்று உயர்த்தி, ‘உங்கள் தாய், தந்தையரிடம்கூட விடை பெற்றுக்கொள்ளாமல் இரவோடு இரவாகப் புகார் நகர் நீங்கியது, தங்களது தெளிவான உள்ளத்துக்கும் உண்மையைக் கண்டு உணரும் சிந்தனைக்கும் நடத்தைக்கும் பேரிழுக்கு அல்லவா? நான் செய்த குற்றம் யாது என்று உணராமல் தவிக்கிறேன். மனம் பதைக்கின்றது’ என்று இரங்குகின்றாள் (Rajaram 2003).

தன்னை இழித்துப் பேசி, தன்னையும், தனது மகள் மணிமேகலையையும் தவிக்கவிட்டுச் சென்ற கோவலனிடத்தில் மாதவி காட்டிய அடிபணிதலை நவீன யுகத்தைச் சேர்ந்த நாகரிகப் பெண் என்ற முறையில் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. எது எவ்வாறாயினும், சிலப்பதிகாரக் காலத்தில் ஒருதார மணம் என்பது ஆண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கவில்லை. கணிகையர் குலத்தின் தர்மத்துக்கு உட்பட்டு வாழ்ந்த மாதவியைக் கோவலனும் அச்சமூகமும் ஏதோ ஒரு வகையில் வஞ்சித்தனர். சிலப்பதிகாரக் கதையில் மாதவியின் முக்கியத்துவத்தை எவ்வித விருப்பு வெறுப்புமின்றி இளங்கோவடிகள் முன்வைத்திருக்கிறார். அவர் ஒரு துறவியாக இருந்தபோதிலும் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டைத் தழுவிய கலைகளைச் சித்திரிப்பதற்கு ஒரு கருவியாகக் கணிகையர் குலத்து மாதவி என்ற நேர்த்தியான பாத்திரப்படைப்பைப் படைத்துள்ளார். ஆனால் தமிழ்ச்சமூகம் இளங்கோ, மாதவிக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லையோ என்று நான் ஐயுறுகின்றேன். மாதவி அப்பழுக்கற்ற நடத்தையையுடயவள் என்பதையும் தான் அவளைவிட்டு நீங்கியது தனது மனச்சஞ்சலத்தினாலேயே என்பதையும் மாதவியின் இரண்டாவது கடிதத்தைக் கொண்டுவந்த கோசிக மாணியிடம் மதுரை மாநகர் நுழையும் முன்பாகக் கோவலன் ஒப்புக் கொண்டதாக இளங்கோ சித்திரிக்கிறார்.

இவ்வாறு கோவலனது கதாபாத்திரத்தைக்கொண்டே மாதவியின் உயர்வை இளங்கோவடிகள் நிறுவி விடுகிறார்.

s_malya

 பல நூற்றாண்டுகளாக இக்காப்பியத்தைக் கட்டுரைகளாகவும், இசை, நடனம், நாடகம் போன்ற கலைப்படைப்புகளாகவும் வெளிக்கொண்டுவந்திருக்கும் முயற்சிகளில் பெரும்பாலானவை, மாதவியை ஒரு சிறந்த நாட்டிய நங்கையாகவும் கணிகையர் குலத்தில் தோன்றியவளாகவும், அவளே கதாநாயகன் கதாநாயகியைப் பிரிவதற்குமுழுமுதற் காரணமானவள் என்றும் சித்திரிக்கின்றன.

இளங்கோ என்ற ஈடிணையற்ற கவிஞர் தம் காப்பியத்தில் மாதவியின் நுட்பமான, ஆளுமை பற்றிய சிந்திக்க வைக்கும் ஒரு சித்திரத்தை நம் கண்முன் படைக்கிறார். ஆழ்ந்த ரசனை உள்ளவர்களால் மட்டுமே அதை உணரமுடியும்.. மாதவியின் மன உரம், தெளிவான சிந்தனை, பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவரும் பெண்மையின் ஆழ்மனத் தோற்றம் போன்றவற்றின் மனக்காட்சிகள் அவர்களுக்குப் புலப்படும்.

கோவலன் கைவிட்டபிறகு மாதவியின் கதி என்னவாயிற்று? இவ்வுலக வாழ்க்கையில் எந்த அழகும் திறமையும் அவளுக்கு வரமாக அமைந்தனவோ அவையே அவளுக்குச் சாபமாகவும் அமைந்தன .

எனது வேறொரு ஆராய்ச்சிக் கட்டுரையில் பெண்ணியத்தை ஒரே வடிவத்தின் இரு பக்கங்கள் என்பதாக நான் குறிப்பிட்டுள்ளேன். மாதவி என்ற பெண் அவள் வாழ்ந்துவந்த சமூகத்துக்கு ஒரே நேரத்தில் அழகின் வடிவமாகவும், கோரமாகவும், புனிதமாகவும், கற்பற்றவளாகவும், நல்லவளாகவும், வஞ்சகமே வடிவானவளாகவும் தோற்றமளிக்கிறாள்.

என் கட்டுரையிலிருந்து மேற்கோள் கீழ்வருமாறு “WOMANITY: a psychic continuum of Selhood and Tenacity, keynotes of Sangam Women.” New Delhi: Cambridge University Press, 2014″ :

‘அக்காலச் சமூக அமைப்புக்குக் கட்டுப்பட்டபோதிலும், அதை எதிர்க்கும் ஒரு சின்னமாகவே மாதவியைப் பார்க்கவேண்டும். எந்தச் சமூகத்தின் ஆணாதிக்க மரபுகளும் அவளது கணிகையர் குல அறமும் ஒன்றுசேர்ந்து அவளுக்குக் கல்வி மூலம் அறிவின் ஆளுமையை அளித்தனவோ அந்த ஆளுமையையே ஆயுதமாகக் கொண்டு அச்சமூகத்தில் மாதவி கலகத்தை நிகழ்த்தினாள்.

பலவகையில் அவளைச் செயலிழக்கச் செய்யவிருந்த மரபுகளை, அவள் புறக்கணித்தாள். ஆடவர்களால் அவளுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட சமூகச் சூழலில் தனக்கென ஒரு தனியிடத்தை அவள் செதுக்கிக்கொண்டாள். குலமரபு என்ற விலங்கை உடைத்தாள். கோவலனுடன் கூடிவாழ்ந்த வாழ்க்கையை, அவன் பற்றிய நினைவுகளை  மறக்க மறுத்ததன்மூலமும் மற்றொரு நாயகனை ஏற்க மறுத்ததன்மூலமும், மரபுகளையும் சமுதாய விதிமுறைகளையும் அவள் கடந்தாள். மாறாக அவளது கல்வியையும் அறிவையும் மாற்றத்தின் கருவியாக முன்வைத்தாள். தன் மகள் மணிமேகலையையும் தன்னையும் பௌத்த பிக்குணிகளாக மாற்றிக்கொண்டாள். கருமையான நீண்ட கூந்தலை மழித்து, பட்டாடைகளையும் ஆபரணங்களையும் நீத்து, காவி உடை தரித்ததின்மூலம் மணிமேகலையும் மாதவியும் அக்காலத்துச் சமூக மரபுகளின் உள்ளிருந்தபடியே அவற்றை எதிர் கொண்டனர். இதன்மூலம் ஆணாதிக்கச் சமுதாயத்தில் தம் நிலைப்பாடுகளை முற்றிலுமாக மாற்றிக்கொண்டனர்”.

சிலப்பதிகாரத்தின் கண்ணகி, பல நூற்றாண்டுகளாகப் போற்றப்படும் பெண்மையின் சின்னமாகத் திகழ்ந்தாள். மீண்டும் தன்னிடம் வந்த கோவலனை எவ்விதச் சலிப்பும் இன்றி ஏற்றுக் கொண்டாள் கண்ணகி. ஒரு புது மனைவிக்கு அவன் இழைத்த அநீதியை மனத்துக்குள்ளேயே வைத்து வைத்துப் பொருமியதல்தான் போலும், அச்சீற்றம் மதுரையையே தீக்கிரையாக்கும் ஆங்காரமாக மாறிவிட்டது.

பல ஆண்டுகள் மனத்துக்குள்ளேயே குமுறிக்கொண்டிருந்த கண்ணகியின் மன வருத்தம் சீறும் கோபமாக உருவெடுத்தது. கண்ணகி என்ற ஒரு கதாபாத்திரத்தின் மூலமாக நாம் உதாரணப் பெண் வடிவு ஒன்றைப் பல நூற்றாண்டுகளாகச் செதுக்கிப் போற்றுகின்றோம். கண்ணகி ஒருபுறம் பொறுமையின் வடிவாக இருக்க அவள் பெருஞ்சீற்றம் கொண்டதுகூடத் தன் கணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டுதானே

தவிர, அவனால் குடும்ப ரீதியாகத் தனக்கு ஏற்பட்ட அநீதியினால் அல்ல. கைவிட்ட கணவனுக்கு நேர்ந்த அநீதியைக் கண்டவுடன் கொதித்தெழுந்து நகரைத் தீயூட்டுகிறாள். அதன் பின்னரும் அச்சீற்றத்தின் காரணமாக நாட்டில் பஞ்சம், வறட்சி, பட்டினி, வைசூரி போன்ற கொடுமைகளுக்கு மக்கள் ஆளாகின்றனர். அக்கோபத்தைத் தணிக்க ஆள்வோரும் மக்களும் தெளிணிவங்களும் பாடுபடுகின்றனர். ‘தன்னைக் கைவிட்ட ஒரு கணவனுக்காகப் பிறரை எரித்துச் சாம்பலாக்கியது, அவளின் ஆழ்மனத்தில் வெகு ஆண்டுகளாக முடங்கியிருந்த இயலாமையின் விளைவான கோபம்தான். இவ்வாறு பெண் மனது முடங்கியிருப்பதும், கணவன் தனக்கு விளைத்த கொடுமைகளை வாய் பேசாமல் பொறுத்துக்கொள்வதும் சமுதாய அமைப்பின் ஆதிக்க நிலையால் விளைந்த ஒரு பிற்போக்கான அவலம்தான். கண்ணகி ஏன் இதைப் பொறுத்துக்கொண்டாள்?

ஒரு புறம் கோவலனால் கைவிடப்பட்டு, அவன் கொலைக்களப்பட்டதும், அவனது மரணத்தால் தன் வாழ்வில் நேர்ந்த அவலத்தை ஆடல் மகளான மாதவி தனக்கென ஒரு நல்ல பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பாக மாற்றிக்கொள்கிறாள். மறுபுறம், கண்ணகியோ வெகு ஆண்டுகள் மனத்துக்குள்ளேயே கொந்தளித்துக்கொண்டிருந்த குமுறலைப் பெரும் கோபமாக வெளிப்படுத்தி, “பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடொழிப்பேன் மதுரையை என் பட்டிமையுங் காண்குறுவாளிணி” என்ற படிமத்தை நூற்றாண்டுகளுக்கும் சமூகத்தில் விதைத்துவிட்டாள்.

ஆகையால், ஒரு நடனக் கலைஞராகவும் ஒரு பெண் என்ற முறையிலும் மாதவியின் கதையைப் பார்க்கின்றபோது அவள் வாழ்வின் மையம் துன்பியல் அன்று; அது சிகரங்களைத் தொட்டுக் கடக்கின்ற நிலை என்பது புரிந்தது. பெண் மனதின் உறுதி, கல்வியால் வளர்கின்ற தனித்தன்மை, அதனால் விளையும் நல்மாற்றங்கள் என அனைத்துக்கும் மாதவி ஒர் அடையாளச் சின்னம்.

ஆகவே எங்களது நாட்டிய நாடகம் முழுமையாக மாதவியின் கதையைச் சித்திரிப்பதாக இளங்கோவின் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு, அக்காலத்தின் வாழ்வியல் நுட்பங்கள், விழாக்கள், இசை, நடனம், ஆடை அலங்காரங்கள், வண்ணங்கள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

அத்தகைய கலை வெளிப்பாட்டுடன், கவிதைவரிகள், அவற்றின் உட்பொருள், கதைப் பின்னணி போன்றவை அடங்கிய இந்த நூலையும் வெளியிடுகிறோம். ரசிகர்கள் எனது நடன அமைப்பில் மாதவியென்னும் கதாபாத்திரத்தையும், இசை அமைப்பாளர் திரு .சசிகிரனின் பங்களிப்பின்மூலம் தமிழ் இசை மரபுகளையும் சுவைக்கலாம்.

 

References :

Rajaram, Durai. Nenjai allum Cilappadhigaram. Chennai: Narmadha Pathipagam, 2003.

குறிப்பு : சிலப்பதிகாரக் கதையின் சில பகுதிகளை நாட்டிய நாடகமாக அளிக்கும் ஸ்வர்ணமால்யா, அது குறித்து எழுதியிருக்கும் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி இங்கு வெளியிடப்பட்டிருக்கிறது.
’நம்மை மறந்தாரை நாம் மறக்கமாட்டோமால்..’(SISHRI வெளியீடு)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.