சிங்கப்பூர் அரசியலில் பெண்கள்

இந்தியாவில் பாராளுமன்றத்தில்  பெண்களுக்கு 33 சதவிகிதம் கட்டாயமாக ஒதுக்கப்பட வேண்டும் என்ற மசோதா பல வருடங்களாகக் கிடப்பில் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்த மசோதா சட்டமாகிவிடும் என்று எதிர்பார்க்கும்போது எதிர்ப்புகள் கிளம்பி முட்டுக்கட்டை போடப்பட்டு விடுகிறது.

33 சதவிகிதம் ஒதுக்கீடு தருவது  ஒருபக்கம் இருக்கட்டும். பொதுவாகவே முழு நேர அரசியலில் ஆர்வம் காட்டும் பெண்களும் குறைவாகவே இருக்கிறார்கள். பலருக்கு அரசியலில் ஆர்வம் இருந்தாலும்  முழுநேர  அரசியல்வாதியாக மாறுவதற்கு  தயங்குகிறார்கள். காரணங்கள் பல.

இது இந்தியாவில் மட்டுமல்ல. உலகில் பல இடங்களில் இந்த மனோபாவம் இருப்பதைக் காணலாம். ஒவ்வொரு sv-ws-logo copyநாட்டிலும் முழு நேர அரசியலில் ஈடுபட்டிருக்கும் ஆண் – பெண் விகிதாசாரத்தைப் பார்த்தால் ஆண்கள் அதிகமாகவும் பெண்கள் குறைவாகவும் இருப்பதைப் பார்க்கிறோம்.

சிங்கப்பூரும் விதிவிலக்கல்ல. அங்கே பணியாற்றியபோது நான் எழுதியக் கட்டுரைகளில் ஒன்று  பெண்கள்  அதிகம் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பது பற்றி. பலவித காரணங்கள், பலவித தயக்கங்கள்.

ஆனால் இந்தியாவில் கிராமப் பஞ்சாயத்துகளில் 50 சதவிகிதம் பெண்களுக்கு கட்டாயமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி பின்னால் தடத்தின் மற்றொரு கதையில்  பார்ப்போம்.

இங்கே என் தடத்தில் அடுத்து வரும் கதையில் சிங்கப்பூரின் அனுபவம். ஆனால் பல உணர்வுகள், மற்றும் கருத்துக்கள் இந்திய சூழ்நிலையோ  என்று எண்ண வைத்தால் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

வருடம் 1996. இடம்: சிங்கப்பூர்.

பலவிதங்களிலும் பெண்கள் பல துறைகளில் கால்பதித்து பெரும் பதவிகள் வகித்தாலும், உலகில் பல நாடுகளில் பெண் அரசியல்வாதிகள் குறைவாகவே காணப்படுகின்றனர். ஆங்காங்கே நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாகவும், நாட்டின் தலைவர்களாகவும் பெண்கள் தென்படுகிறார்களே  தவிர, பெருமளவில் கணிசமான அளவில் பெண் அரசியல்வாதிகள் இல்லை என்பதுதான் உண்மை.

கன்வல்ஜித் சாயின் 
kanwaljit soin

பெண்கள் அரசியலில் ஈடுபட்டு, மக்கள் மன்றங்களில் அதிக அளவில் இடம் பெறும்போதுதான்  பெண்களை  பாதிக்கும் பல முடிவுகளில் பெண்களுக்கு சாதகமாக தாக்கம் ஏற்படுத்த முடியும். இப்படி  தங்கள் நாடாளுமன்றத்தில் பெண்கள் குறைவாக இருப்பதை உணர்ந்து,  இதற்கு ஏதாவது தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு  முயற்சிகள் மேற்கொள்கிறது. பெண்கள் அதிகளவில் அரசியலில் பங்கேற்காமல் இருக்கும் நிலை  பற்றி பிரதமர்  கோ சோக் டாங்க் சமீபத்தில் கவலை தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பெண்கள் அதிகம் வரவேண்டும் என்ற பிரதமர் கூறினாலும் சிங்கப்பூர் பெண்கள் என்னவோ அதை கவனிப்பதாக தெரியவில்லை. பிரதமரின் உரையைத் தொடர்ந்து சிங்கப்பூரின்   நாளிதழான ஸ்ட்ரைட் டைம்ஸ், முக்கிய பெண் புள்ளிகளுடன் ஒரு ஆய்வு நடத்தியது. ஆய்வு  பெண்மணிகள் ஒவ்வொருவரும்  தங்கள் தங்கள் துறையில் சாதனைகள் செய்து ஓரளவு சமூகத்தில் முக்கிய இடங்களில் இருப்பவர்கள்.

” அரசியல்” என்றதுமே அந்தப் பத்து  பேரில்  ஆறு பேர் எந்தவித கருத்தும் சொல்ல மறுத்துவிட்டனர். பாக்கி நாலுபேரும், தாங்கள் தேர்ந்தேடுத்து  உழைக்கும் துறையிலிருந்து வெளியேறி முழு நேர அரசியலில் நுழைவதற்கு ஆர்வம் இல்லை என்று ஒதுங்கிவிட்டனர்.

வாழ்க்கையில் வெற்றிகரமாக பொருளும் புகழும் அடைந்த பெண்களே இந்த நிலை எடுக்கிறார்களென்றால் சாதாரணமானவர்கள் நிலைப்பாடு பற்றி கேட்கவே வேண்டாம்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தற்சமயம் பரிந்துரைக்கப்பட்ட  உறுப்பினராகவும் மௌண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் எலும்பியல்  நிபுணராகவும்  இருக்கும் டாக்டர் கன்வல்ஜித் சாயின் – Dr. Kanwaljit Soin – இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.  அவர் என்னிடம் பேசும்போது, ” நாட்டின் முக்கிய திட்டங்கள் பற்றி முடிவேடுக்கும்போது பெண்களின் பங்களிப்பு நாடாளுமன்றத்தில் மிக அவசியமாகிறது. சிங்கப்பூர்  அரசு இதை நன்கு உணர்ந்து இருக்கிறது. என்ன இருந்தாலும் பல்வேறு மனிதர்களின் வித்தியாசமான  கருத்துக்களும் உணர்வுகளும் ஒரு மக்கள் அவையில் பிரதிபலிக்கப்பட வேண்டும் அல்லவா?” என்று குறிப்பிட்டார்.

“பெண்கள் நாடாளுமன்றத்தில் சரிபாதி அங்கம் வகிக்காமல் இருக்கும்போது அவையின் ஒவ்வொரு விவாதத்திலும், செயல்பாட்டிலும் முடிவிலும்  எப்படி நடுநிலைமை இருக்கமுடியும்? ஒரு நாட்டில் சரிபாதி பெண்கள் அல்லவா? அவர்களின் கருத்துக்களும், திறமைகளும் நாட்டின் முன்னேற்றத்தில் பங்களிக்க வேண்டாமா?” என்று சாயின் கூறுகிறார்.

பிரிட்டிஷ் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த இவர் குடும்பம் பிரிவினையின்போது இந்தோனேஷியவிற்கு குடியேறியது. பின்னர் இவர் படித்தது எல்லாம் சிங்கப்பூரில். பெண்கள் பிரச்சனைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இவர் தொடங்கிய அமைப்பான Association of Women for Action and Research மூலம் சிங்கப்பூர் பெண்கள் மேம்பாட்டுக்கு பெரும் பங்காற்றி வருகிறார். பெண்கள் முன்னேற்றத்திற்கு  இவரது  பங்களிப்பை அங்கீகரித்து, சிங்கப்பூர் அரசு 1992ல்  இவரை நாடாளுமன்றத்தில் பரிந்துரைக்கபட்ட முதல் பெண்  உறுப்பினராக தேர்வு செய்தது.

“பெண்கள் அரசியலில் இன்னும்  அதிக அளவில் ஈடுபடவேண்டும் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை.  வரும் நாட்களில் இது நிறைவேறும்; இன்னும் அதிக பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இடம் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று தெரிவிக்கிறார் கன்வல்ஜித் சாயின்.

சரி இதர பெண்கள் என்ன சொல்கிறார்கள்? ஜோசபின் லிம்  ஒரு ரியல் எஸ்டேட்  ஏஜென்ட்.

“எனக்கு அரசியலில் பெருமளவு ஆர்வம் இல்லை என்பதே உண்மை. அப்படியே இருந்தாலும், எனக்கு என் குடும்பம் முக்கியம். முழு நேர அரசியலில் இருந்தால் என்னால்  குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியாது. இது எனக்கு சம்மதமில்லை. இது என் வாழ்க்கையைப் பற்றி தனிப்பட்ட கருத்து. ஆனால் பொதுவாக  பெண்கள் அரசியலில் ஈடுபடுவதைப் பற்றி எனக்கு ஆட்சேபணை  இல்லை. ஆணோ, பெண்ணோ அரசியலில் நுழைவதற்கான தகுதிகள் – மக்களுக்கு சேவை  செய்ய வேண்டும் நாடு முன்னேற புத்தம் புதுசாக ஆக்கபூர்வமான திட்டங்கள், தொலை நோக்குப் பார்வை என்று எல்லாமும் இருந்து ஆர்வமும் இருந்தால், அவர்கள் ஏன் அரசியலில் நுழையக்கூடாது? கட்டாயம் இப்படிப்பட்ட ஆர்வமும் தகுதியும் திறமையும் உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் நுழைய வேண்டும்.” என்கிறார் இவர்.

ஸ்ட்ரெயிட்  டைம்ஸ் ஆய்வு கண்ட பெண்களில் ஒருவர் பேராசிரியர். அவர் ஐக்கிய நாடுகள் சபையிலும் சிங்கப்பூர் பிரதிநிதியாக இருந்திருக்கிறார். சமூகப் பணிகளிலும் மற்றும் அரசின் பல திட்டங்களிலும்  இன்றும் தொடர்ந்து பங்க்களித்துக்கொண்டிருக்கிறார். இவர் சொல்கிறார், ” என்னால் அரசியலில் நுழைய முடியாது. தற்போது எனக்கு இருக்கும் பணிகளே என் முழு நேரத்தையும் எடுத்துகொள்கின்றன.  தற்போது செய்யும் பணிகளே எனக்கு சமூகப் பணியும் அரசியல் பணியும் செய்த திருப்தியைக் கொடுக்கின்றன. வேறு என்ன வேண்டும் எனக்கு?”

சிங்கப்பூரை பொறுத்தவரையில்  பெண்கள் அதிக அளவில் அரசியலில் காணப்படாததற்கு மற்றொரு காரணமும்  கூறப்படுகிறது. பிரிட்டிஷ் காலனிகளாக இருந்த மலேஷியாவும் சிங்கப்பூரும் சுதந்திர நாடுகளாக ஆனபோது சிங்கப்பூர் ஆரம்பத்தில்  மலேஷியாவுடன் இணைந்து, மலேஷியா, சிங்கப்பூர், சேரவாக், புருணை, வட போர்னியோ என்ற பிரதேசங்கள் அடங்கிய மலேஷிய பெடரேஷன் அமைப்பாக இருந்தது. ஆனால்  சேர்ந்து இருக்க இயலாது என்ற நிலைமை வந்ததும், பிரிந்து தனி நாடாக – சிங்கப்பூர் குடியரசாக – மாறியது.

பிரச்சினைகள் காரணமாக மலேஷியாவிலிருந்து பிரிந்து சிங்கப்பூர் தனி நாடாக ஆகும்போது போராடி சுதந்திரம் பெறும் அவசியம் இருந்திருக்கவில்லை. மலேஷியாவும் சிங்கப்பூர் பிரிவதை விழைந்தது. அப்படி பெருமளவில்  சுதந்திரப் போராட்டம், என்று ஒன்று இல்லாமல் இருந்த அரசியல் சூழ்நிலையில் பெருமளவில் சமூக எழுச்சியோ அதன் காரணமாக பெண்களின் பங்கோ இருந்திருக்க வாய்ப்பில்லாமல் போனது என்று சில சரித்திராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில்  பெண்கள் அரசியல் ஆரம்பம், பெருமளவில் சுதந்திரப் போராட்டத்தில் மக்கள் எழுச்சியாக ஆரம்பித்ததால் ஒரு தலைமுறைப் பெண்கள் அரசியலில் ஈடுபட சுதந்திரப் போராட்டம் காரணமாக அமைந்தது. ஆனால் இங்கே அதற்கு அவசியம் இல்லாமல் போனதால்  பெண்கள் மக்கள் எழுச்சியின்  அங்கமாக அரசியலில் ஈடுபடும்  வாய்ப்பு இருந்திருக்கவில்லை.

“இப்படி ஒரு சுதந்திரப் போராட்டமற்ற சரித்திரப்  பிண்ணனியில், பெண்கள் என்றில்லாமல் சிங்கப்பூரின் ஆண்களுமே பெருமளவில் அரசியலில் தீவிரம் காட்டுவதில்லை.” என்கிறார்  சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர். ” அரசியல் என்றில்லாமல், குறைந்த பட்சம் சமூக ஏற்றத்தாழ்வு அல்லது சமூக அநீதி என்று இருந்திருந்தாலாவது ஒரு மக்கள் எழுச்சி இருந்து, அமைப்புகளும்  தலைவர்களும் உருவாகியிருப்பார்கள். ஆனால், அதற்கும் இங்கே காரணம் இருந்திருக்கவில்லை. இப்படி வாழ்க்கை எந்தவித முரண்பாடு அல்லது சொல்லிக்கொள்ளும் அளவு குறைபாடுகளோ இல்லாமல் அமைதியாக செல்லும் சூழ்நிலையில் அரசியலில் ஈடுபட எந்த உந்துதலும் இல்லாமல் போகிறது.” என்கிறார் இவர்.

சிங்கப்பூரின் வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் தலைவராக இருக்கும் கணேசன், இதை ஆமோதிக்கிறார். ” அரசியலில் நுழைய அவசியமில்லாமல் இருக்கும் சூழ்நிலைதான் இங்கே. மக்களுக்கு தங்கள் அரசு தங்கள் நன்மைக்காக உழைக்கிறது என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது. பெண்களும்  அரசியல் என்பது பெரும்பாலும் ஆண்களின் ஆர்வம் என்று ஒதுங்கி தங்களின் இதர வேலைகளில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இந்த நிலையில் அரசியலில் ஆர்வமோ அல்லது உந்துதலோ இருப்பதில்லை.” என்கிறார் இவர்.

இப்படி அனைவருமே உந்துதல் இல்லை; ஆர்வம் இல்லை என்று காரணம் காட்டினாலும், அரசியலில் பெண் தலைவர்கள் இல்லை என்பதும் அதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்றும் அரசு முயல்கிறது.

“அரசியல் என்பது தங்கள் எல்லா பொறுப்புகளையும் நிறைவேற்றிய பின்னர் – ஓய்வெடுத்துக்கொண்டு – பின்னர் ஈடுபடலாம் என்ற கருத்தும் அதிகமாக நிலவுகிறது. ” 40 வயது அடைந்தபின்னர்தான் பல பெண்கள் அரசியல் பற்றியே சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள். என்கிறார் கன்வல்ஜித் சாயின். அந்த வயதில் அரசியல் ஏணியில் ஏறி தலைமை பதவியடைவதும் சிரமம். இதனால்தான் பெண் அரசியல் தலைவர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்கிறார் இவர்.

மாறாக, வணிக அல்லது இதர கல்வி அல்லது சமூக அமைப்புகளில் பெண்கள் பெரும் பொறுப்பு வகிக்கும் நிலை அதிகரித்து வருகிறது. இன்றைய பெண்கள் தலைவிகளாக திகழ்ந்தால்தான் நாளைய தலைமுறைப்பெண்களுக்கு பின்பற்ற  ஆதர்ச தலைவர்கள் இருப்பார்கள். அரசியல் என்பது பொது வாழ்க்கை. பொது வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் இன்றைய பெண்கள் அந்தக்  கஷ்டங்களைத்  தவிர்க்கவே விழைகிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.

பல திறமையுள்ள பெண்கள் தங்கள் திறமையால் எந்த துறையிலும் பிரகாசிக்கலாம் என்று இருக்கும்போது கஷ்டங்கள் நிறைந்த அரசியலில் நுழைவானேன் என்று நினைக்கிறார்கள். தவிர பெரும்பாலோர் தங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தையும், தங்கள் தனி வாழ்க்கையையும் மிக மதிக்கிறார்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தங்கள் தனிமனித சுதந்திரத்தை இழக்க விரும்புவதில்லை. சிங்க்கப்பூரின் அரசியல் கலாசாரப்படி, மக்கள் ஆதரவினால் மட்டுமே அரசியல் தலைவர்கள் உருவாவதில்லை. ஒரு கட்சியினுள்ளே  அழைக்கப்பட்டு  ஆரம்பத்திலிருந்து பல பொறுப்புகளில் உழைத்து படிப்படியாகவே மேல் நிலைக்கு வந்து அரசியல்வாதியாக முடியும்.

இந்த சூழ்நிலையில் சிங்க்கப்பூரில் ஒரு பெண் பிரதமர் வர வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு கன்வல்ஜித் சாயின் சொல்கிறார்: “இன்று யோசித்தால் அது பிரமிக்கத்தக்க சாதனையாகத்தான் தோன்றுகிறது. ஆனால் எதிர்காலத்தில் கட்டாயம் நடக்கும் என்று நம்புகிறேன். இன்னும் 10 வருடங்களில் அப்படி பிரமிப்பாகத்  தோன்றாது. ஆனால் அதற்கு இன்றைக்கே பல பெண்கள் அரசியலின் மேல்மட்டத்தில் இருக்க ஆரம்பிக்க  வேண்டும்.

ஜோசபின்னும் அப்படி ஒரு சூழலுக்கு ஆவலுடன் காத்திருக்கிறார். “பெண் பிரதமர்? ஆ….அந்த நினைப்பே இனிமையாக இருக்கிறது. ஆனால் அந்த பிம்பம்  எங்கோ ரொம்ப தூரத்தில் இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் பெண்கள், அரசியல் என்பதே  ஆண்களின் வேலை என்று ஒதுங்கி விடுகிறார்களே. சிங்கப்பூரில் பெண் பிரதமர் வரலாம். ஆனால் எங்கோ தொலை தூரத்தில்….” என்கிறார் இவர்.

ஒரு சமூகத்தில் மாறுதல்கள் ஒரு இரவில் ஏற்படுவதில்லை. இன்றைய நிலையில் பெண்கள் இங்கே அதிக அளவில் அரசியல் ஆர்வம் காட்டாமல் இருக்கலாம். பெண் பிரதமரும் வெகு தொலைவில் இருக்கலாம். ஆனால் பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டும் என்று அரசு சிந்திக்க ஆரம்பித்து அதற்கான முயற்சிகள் எடுக்க ஆரம்பித்து விட்டது. காலப்போக்கில் பெண்கள் பிரதமர் கோ சோக் டாங்கின் வேண்டுகோளைப பூர்த்தி செய்யலாம்.

காலம் பதில் சொல்லும்.

வருடம் 2014: 

இந்திராணி ராஜா
indranee rajah

18 வருடங்கள் ஓடிவிட்டன. அன்று கருத்து தெரிவித்த பலரது நம்பிக்கையும் வீண் போகவில்லை. பெண் பிரதமர் சிங்கப்பூரில் இன்னும் உருவாகவில்லை. ஆனால் அரசியலில் பெண்களின் பங்கு முன்பை விட கணிசமாக அதிகரித்துள்ளது என்று அங்கிருந்து வரும் செய்திகள் சொல்லுகின்றன. இன்று நாடாளுமன்றத்தில் 18 பெண்  மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இரண்டு அமைச்சர்கள், மற்றும் ஒரு மேயர் என்று மூன்று பெண்கள் தலைப் பொறுப்பில் இருக்கிறார்கள். பரிந்துரைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்  9 பேரில் 5 பேர் இன்று பெண்கள். எதிர்கட்சியிலும் இன்று ஒரு பெண் மக்கள் பிரதிநிதி இருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.