குருவி

prathiba_Nandakumar_Prathibha_Nandhakumar_Kannada_Writers_Authors
ப்ரதிபா நந்தகுமார் சமகால கன்னட எழுத்துலகின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவர். கன்னடம், ஆங்கிலம் இருமொழிகளிலும் எழுதும் இவர் பல கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ஆவணப்படங்கள் தயாரிப்பதிலும் ஈடுபட்டுள்ள இவர் பல பத்திரிக்கைகளிலும் எழுதி வருகிறார். 2000 வருடத்திய சாஹித்ய அகாதமி விருதும் 2003ம் வருடம் மஹாதேவி வர்மா காவ்ய ஸன்மான் விருதும் பெற்றுள்ளார். இவருடைய கவிதைகள் 5 தொகுப்புகளாய் வெளிவந்துள்ளன. இவருடைய பல படைப்புகள் கவிதை மற்றும் சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. தற்சமயம் இவர் ஒரு திரைப்படத்தை இயக்குவதில் ஈடுபட்டுள்ளார்.

குருவி

எல்லாம் கச்சிதமாய் நேர்த்தியாய் இருக்கவேண்டும் சதாசிவனுக்கு. வீடு பளபளவென்று மின்னவேண்டும், தேடினாலும் sv-ws-logo copyசின்ன தூசி கூட  தென்படக்கூடாது. பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் இருந்தால் அவை அந்தந்த இடத்தில் இருக்கும் என்பது அவனுடைய சட்டம். தொலைபேசி இடதுகையால் எட்டும் இடத்திலேயே இருக்கவேண்டும். அதிலிருந்து ஓரடி இடம் விட்டு சின்ன அலமாரி. இடதுகோடி மூலையில் சின்னதாய் பேனாக்களுக்கான ஸ்டாண்டு. அது ஒரு இஞ்ச் கூட நகர்ந்திருக்கக்கூடாது. அப்புறம் திவான், சோபா, டீப்பாய், பேப்பர் எல்லாம் அளவு எடுத்து கோடுபோட்டு வைத்தது போல அதனதன் இடத்தில் இருக்கவேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலை முழு வீட்டையும் தூசி தட்டும் வேலை சதாசிவனுடையது. அதை முடித்த உடனேயே “மாலு, குப்பையைப் பெருக்கிவிடு” என்று குரல் கொடுத்துவிட்டு குளிக்க ஆயத்தமாவான். குளியலறையில் தேய்த்துத்  தேய்த்து மூன்று தரம் சோப்பு போட்டுக் குளித்து ஜிவு ஜிவு என்று சிவந்த உடம்புடன் ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே அவன் வெளியில் வருவதற்குள் அவள் வீட்டைத் துடைத்து ஈரம் உலர்ந்திருக்கவேண்டும். இல்லையென்றால் அன்று மாலினியின் கதி அவ்வளவுதான். சற்று நேரம் காலின் ஈரத்தை ‘தண் தண்’ என்று மிதியடியில் அழுத்தித் தேய்த்துக்கொண்டே சுற்றிலும் கூர்ந்து கவனிப்பான். எங்காவது ஒரு மூலையில் கொஞ்சம் தூசி கண்ணில் பட்டுவிட்டால் அன்றைக்கு மாலினியை உண்டு இல்லை என செய்துவிடுவான்.
இப்படிப்பட்ட வீட்டில் ஒருநாள் பொழுது விடியும்போது யாரையும் கேட்காமல் ஒரு சின்னக் குருவி புகுந்துவிட்டது. ‘சீப் சீப்’ என்று இரண்டு முறை சுற்றிவிட்டு சதாசிவன் ஆபீசுக்கு போகும் வரையில் சும்மா இருந்துவிட்டு பிறகு ஒன்றொன்றாய் சிறு குச்சிகளை எடுத்து வந்து மாடத்தில் கூடுகட்ட ஆரம்பித்தது. முதலில் ஒரு குச்சி, அப்புறம் உலர்ந்த புல், சின்னப் பஞ்சுத் துண்டு, நைலான் கயிற்றுத் துண்டு என்று எங்கெங்கிருந்தோ கொண்டுவந்து, அப்பா என்ன சாமர்த்தியம், என்ன புத்திசாலித்தனம்?
சதாசிவன் ஆபீஸ் செல்லும் வரை குதிகாலில் நின்று பரபரக்கும் மாலினிக்கு அதற்குப் பின் ஒரு மணி வரையில் ஓய்வு. கிடுகிடுவென்று வேலைகளை முடித்து, பாதி படித்து விட்டிருந்த கதைப் புத்தகத்தை படித்து முடிக்கும் தருணத்தில் குருவியை எங்கே கவனித்தாள்? மத்தியானம் சாப்பிடும்போது ‘பர்’ரென்று அவள் தலைமேல் பறந்து போயிற்று குருவி. ‘அரரே’ என்று பார்க்கையில், அது வெளியே பறந்து போனது. கூடு அவள் கண்ணில் படவே இல்லை. வேறெதையும் கவனிக்காமல் அவள் பாட்டுக்கு சாப்பிட்டு, பாத்திரம் கழுவி, துணி மடித்து வைத்து, மாலை டிபன் தயார் செய்து காப்பிக்கு டிகாக்ஷன் போடுவது என்று வேலைகளை முடித்து முகம் கழுவிக் கொண்டாள். தலை வாரி, சேலை மாற்றி வரவேற்புக்குத் தயாரானாள். அப்பொழுதுதான் தரையில் விழுந்திருந்த ஓரிரண்டு புற்களும் குச்சிகளும் கண்ணில் பட்டன. உடனே துடைப்பத்தை எடுத்து வந்து சுத்தமாய் பெருக்கிக் குப்பையை எடுத்துப் போட்டாள். இதற்குள் ஐந்தரை ஆகிவிட்டது. வாசலில் ஸ்கூட்டர் சப்தம். சதாசிவன் உள்ளே வந்து வழக்கம்போல முதலில் பையை எடுத்து வைத்து, கைகால் முகம் கழுவித் துடைத்துக் கொண்டு, துண்டை பிரித்துக் காயப்போட்டு வந்து நாற்காலியில் உட்காரும் வரை காத்திருந்து அளவாய் எடுத்துவைத்த சிற்றுண்டியைக் கொண்டுவந்து கொடுத்தாள். காப்பி கலக்கிக் கொண்டு வந்து பக்கத்து சேரில் உட்கார்ந்து கழுத்துச் சங்கிலியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
முழுப் பேப்பரையும் படித்து முடித்து, பக்கத்தில் வைத்த சதாசிவன் சோம்பல் முறித்துக் கொண்டே” என்ன மேடம், வெளியே போய்விட்டு வருவோமா?” என்றான். “ஓக்கே” என்றவள் சேலை மாற்றிக்கொண்டு வந்தாள். இருவரும் தயாராகி, கதவுக்குத் தாளிட்டுக் கிளம்பினர். ஷாப்பிங் காம்ப்ளெக்சுக்கு வந்து கடைகளையும், பலதரப்பட்ட மனிதர்களையும் பார்த்துக்கொண்டு ஒரு பக்கமாய் நின்று பேல்பூரி, ஐஸ்க்ரீம் சாப்பிட்டனர். மறுநாளுக்கான காய்கறி, பூ எல்லாம் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினர்.
sparrow
வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே காலை வைத்த நிமிடமே சதாசிவன் கண்ணில் பட்டது தரையில் சிதறியிருந்த குச்சி, புல், குப்பை. ‘இது எங்கிருந்து வந்தது?” என தலையை நிமிர்த்திப் பார்த்தான். இவர்களின் சப்தத்தால் அதிர்ந்து தன் குட்டிக் கண்களால் பார்த்துக் கொண்டிருந்த குருவி பர் ரென்று பறந்து வெளியே போயிற்று. சதாசிவன் மடமடவென்று ஒரு ஸ்டூலை எடுத்து வந்து அதன்மேல் ஏறிப் பார்த்தான். மாடம் முழுவதும் தெரியவில்லை. இன்னொரு சிறிய ஸ்டூலை எடுத்து வந்து அதன் மேல் போட்டு, “மாலி, கொஞ்சம் பிடித்துக்கொள்” என்றான். மாலி ஜாக்கிரதையாக பிடித்துக்கொண்டதும் நிதானமாய் ஏறிப் பார்த்தான். குட்டிக் குருவிகூடு தயாராகியிருந்தது. குச்சி, காய்ந்த புல், பஞ்சு, நூல்துண்டுகள் எல்லாவற்றையும் சேர்த்து பாவம், அழகாய் கட்டியிருந்தது. அதற்கென்று அதை அப்படியே விட்டுவிடமுடியுமா? என்ன குப்பை, அப்பப்பா, தன் வீட்டிலே குருவி கூடு கட்டுவதாவது! சரசரவென்று கூட்டை எடுத்துத் தூக்கிப் போட்டான். மாலினியை ஒரு பழைய துணியை எடுத்துத் தரச் சொல்லி மாடத்தை சுத்தமாகத் துடைத்தான். இறங்கி ஸ்டூல்களை அதனதன் இடத்தில் வைத்துவிட்டு தானே குப்பையை எடுத்துப் போட்டுவிட்டுப் பெருக்கினான். “மாலி, துணியை ஈரம் செய்து நன்றாய் துடைத்துவிடு” என்றான்.
சப்பாத்தி செய்யத் தொடங்கியிருந்த மாலினி அதை அப்படியே விட்டுவிட்டு வந்து துடைத்தாள். கை அலம்பிக் கொண்டு வந்த சதாசிவன் பாண்ட், ஷர்ட்டைக் களைந்து கச்சிதமாய் ஹாங்கரில் நீவி மாட்டி, அலமாரியின் வலதுபக்க மூலையில் மடித்து வைத்திருந்த லுங்கியை எடுத்து உடுத்திக்கொண்டான். தடாரென்று அடித்துக் கொண்ட கக்கூஸ் கதவைத் தாள் போட்டு பத்திரப்படுத்திவிட்டு, சோப்பு போட்டு கைகழுவி, காலலம்பி, திரும்பவும் ‘தண் தண்’ என கார்ப்பெட்டில் காலின் ஈரம் போகத் துடைத்து, மடித்துக் கட்டிய லுங்கியை பிரித்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தான். கச்சிதமாய் எங்கே எத்தனை இருக்கவேண்டுமோ அத்தனை வைத்து மாலினி பரிமாறினாள்.
மறுநாள் ஆபீசுக்குப் போகுமுன் சதாசிவன் ஒருதரம் தலை உயர்த்தி மாடத்தைப் பார்த்து “கொஞ்சம் பார்த்துக் கொள். குருவி வந்தால் விரட்டிவிடு” என்று சொல்லிவிட்டுப் போனான்.
வேலைகளை முடித்த மாலினி, படிக்க எதுவுமில்லாமல் போகவே கழுத்துச்சங்கிலியுடன் விளையாடிக் கொண்டே படுக்கையில் சாய்ந்தாள். இருந்தாற்போலிருந்து ‘சீப் சீப்’ என்று சப்தம் கேட்டது. குருவி வந்து கூட்டைத் தேடியது. கிடுகிடுவென்று எழுந்து வந்தவள் ஒரு கணம் நின்று அதைப் பார்த்தாள்  பிறகு வேகமாய் கதவைத் திறந்து தடதடவென்று இத்தனை குச்சிகள், உலர்ந்த புல் ஆகியவற்றைப் பொறுக்கி வந்து டைனிங் டேபிள் மேல் குருவியின் கண்ணில் படும்படி வைத்தாள். சமையலறையிலிருந்து அரிசி, பருப்பு வகைகளை பிடிப்பிடியாய் எடுத்து வந்து அதன் பக்கத்திலேயே பரப்பினாள். அதன்பின் மூச்சுவிடவும் மறந்து குருவிக்காக காத்து, சப்தமின்றி நின்றிருந்தாள்..

*****

தமிழில்: உஷா வை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.