கவிதைகள் – பா. கண்மணி, பா.சரவணன், ராமலக்ஷ்மி, கு.அழகர்சாமி

உன் குடைக்குள் அடங்காவென் கிளைகள்

 என்
இதழ்பிரியா புன்னகைக்குச்sv-ws-logo copy
சிலிர்த்துப் போகும் நீ
நான் பைத்தியமாகி
நாணமின்றி வெடித்துச் சிரிக்கையில்
என்ன செய்வாய்?
ஆபரணங்கள் பூட்டி என்னை
அழகுபார்க்க விழைகிறாய் -உன்
தங்கக் கூண்டிற்குள் .
நிலவின் கள்ளருந்தி
நடுச்சாமம் திரிந்தலையும்
யட்சி நான்.
மலர்கள் கொய்து பூஜிக்கிறாய்
நம் தேவனை .
நானோ ,
முட்கள் வளர்த்து கிழித்தெறிகிறேன்
அவன் முகமூடியை.
அணைக்க நீளும் உன் கைகள்
ரணப்படலாம்;விலகிநில் !
என் வேர்களில்
அமிழ்தூற்ற வேண்டாம்.
விஷத்தைப் பருகிப் பூத்திருக்கும்
என் நீலமலர்களின்மேல்
இதழ்பதிக்க ……..
நீலம் தாங்குவாயா நீ?
குழலும் யாழும்
கொஞ்சிடும் உன்  மாளிகைக்குள் .
காதைப் பிளக்கும் போர்முரசு
என் காட்டிற்குள்.
வண்ணங்களால்
அலங்கரிக்கப்பட்ட பகல்
உன் உலகம்.
எண்ணங்களால் முயங்கிக்கிடக்கும்
நிறபேதமில்லா இரவு
என் உலகம்.
அறுசுவையும் அறிந்த
உன் நாவிற்கு
பசியின் சுவைமட்டும்
அறிந்த என்னால்
ருசி கொடுக்கவியலுமோ ?
வெடித்த நிலத்துள்
வேராழப் பாய்ச்சி
செந்நீரும் கண்ணீரும் உறிஞ்சிக்
கிளைகள் விரித்து
நிமிர்ந்து நிற்கின்றேன் ,
எண்ணிலாக் கூடுகள் தாங்கி
இறுமாந்து.
என் நிழலில்
நீ கடைபரப்பியிருக்கும்
காதல் பொம்மைகளைக்
குனிந்து பார்க்க  இயலாது.
சாம்பிராணிப் புகைபோட்டு
வாசனைத் திரவியம் தடவி
உன்னைச் சுற்றிய காற்றைமட்டும்
சுத்தம்செய்து சுவாசிக்கிறாய்.
அழுகிய பிணங்களைத் தீயிட்ட
புகைமூட்டத்தில் கசியும்
என் கண்களுக்குத் தெரியவில்லை
நீயும் உன் கட்டழகும்.
பூஞ்சை பூத்துக்கிடக்கும்
அரண்மனைக்கு உன் பாதை.
சூரியனில் குளித்தெழுந்து
புயல்வேலியில் தலைவிரித்து
பிஞ்சு,பூ,தளிருடன்
பழங்கிளைகள் முறித்தெறிந்து
ஊழித் தாண்டவமாடுகிறேன் …….
விலகி நில் நண்பா!

oOo

Gated_Thorns_Kambi_Mul_Crowns_Adornments_Circles_Rings_Women_Female

இல்லத்தரசியின் பகல்

இட்லி சட்னியாய் ஷூ பாலீஷாய்
பள்ளிக்கூட பையாய்
அவசரத்தில் தேடும் மூக்குக்கண்ணாடியாய் மாறி
அவனையும் குழந்தையையும் அனுப்பியபின்
தொலைக்காட்சித் தொடர்களில்
அவளாய் இவளாய் அவனாய்
மாறிக் களைத்து
உண்டு
புறாக்கள் கூடும் சத்தம் கேட்கும்
புழுக்கம் நிறைந்த மதிய வேளையில்
தூங்கும் அவள்
கனவில் மீண்டும் இளவரசியாவதை
கண்களை உருட்டிப் பார்த்தபடி
காத்திருக்கிறது
கழற்றி வைத்த முள் கிரீடம்.
பா. சரவணன்
 

oOo

யன்னல் நிலவு

சுற்றி வளரும் புற்றினை உணராது
தியானத்திலிருக்கும் துறவியின் தலையில்
விழுகிறது இலையொன்று.
காற்றில் பறந்து நதியில் விழுந்து
கப்பலாகிறது
தத்தளிக்கும் கட்டெறும்புக்கு.
பாயும் நீரில் பலமைல்கள் பயணித்து
நாளின் இறுதியில் எறும்பைக் கரைசேர்த்து
ஏற்ற கடமை வழுவாத களிப்பில்
இளைப்பாறத் தொடங்கிய இலையின்மேல்
நதியின் மிச்சங்கள் நீர்த்திவலைகளாக.
ஒவ்வொரு திவலைக்குள்ளும்
ஒளிர்ந்த தேய்பிறையை
வெறித்து நிற்கிறாள்
புவனத்தின் வேறோர் மூலையில்
யன்னல் சீலைகளின் அணைப்பில்
யசோதரை.
[பெங்களூரில் வசிக்கிறார். 90_களில் எழுதத் தொடங்கி 2008_லிருந்து இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் போன்ற பல தளங்களில் இயங்கி வருகிறார். இந்த வருடம் ஒரு சிறுகதைத் தொகுப்பும், கவிதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. கவிதை நூலுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விருதும், திருப்பூர் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை – மு. ஜீவானந்தம் இலக்கியப் பரிசும் கிடைத்துள்ளன. ]
கோலத்திற்கு வெளியே ஒரு புள்ளியாய்
கு.அழகர்சாமி
சமைத்து
சோறு பரிமாறி பாத்திரங்கள் ஒழித்துக் கழுவி
துணிகளைத் துவைத்து உலர்த்தி
அடுக்கி வைத்து
வீட்டைப் பெருக்கித் துடைத்து சுத்தமாக்கி
ஒழிந்த நேரத்தில் தொலைக்காட்சித் தொடர் பார்க்கும் சுதந்திரமும்
ஓய்வு பெற்ற கொழுநன்
வீட்டில் முடங்கிக் கிடப்பதால் முடங்கிப் போவதோடு மட்டுமல்லாமல்
கொழுநனையும் முழு நேரம் பேணி
‘விட்டுப் போனால்’ போதுமென்று கொஞ்ச நேரம்
வாசலில் வந்து உட்காரும் அவள்
கூட்டிப் போகக் காத்திருப்பது போல் இருக்கும்  தெருவை
வெறித்துப் பார்ப்பாள்.
அதிகாலைக் குளிரில் எழுந்து  வாசல் பெருக்கித் தண்ணீர் தெளித்து  அவள் போட்ட சிக்குக் கோலம்
எவ்வளவு ’அழகாய்ப்’ புள்ளிகளைப் பின்னியிருக்கும்?
’கோலத்தின் வெளியே ஒரு புள்ளியாய் இருக்க வேண்டும்
தான் ஒரு பெண்ணாய்ச் சுயம் கொள்ள”.
யோசனையில் மூழ்கி
ஒரு கணம் தன் வாழ்வின் ஆயாசம் தீர்வாள் அவள்.
 ***
ஒரு பெண்ணின் உடற்பயணம்
கு.அழகர்சாமி
 
அறியாச் சிறு வயதில்
சிறுமியென்று சடை பின்னி ரிப்பன் கட்டி விட்டு
கால்களில் கொலுசும் கைகளில் வளையலும்  கவுனும் போட்டு விட்டு
ஒரு வித்தியாசத்தைப் பிஞ்சில் உருவேத்தியும்
அறியாது வளர்ந்து
பூப்பெய்தியதுந்தான் தாமதம்
இது நாள் வரை இறக்கை கட்டிப் பறந்த உலகம் பலூனாய் உடைந்து போக
வீட்டின் மூலையில் உயிர் பொம்மையாய்த் தனியாய் உட்கார வைத்து
‘பெரிய மனுஷி’யாகி விட்டதாய்ச் சேலையணிவித்து சிங்காரித்து மேடையில் ஊர் சொல்லி விழவெடுத்து
அவையினர் கண்ணீக்களெல்லாம் தன் உடல் மேல் மொய்க்க  நெளிந்து சங்கடத்தில் நிலை குலைந்து
நாளும் வளர
’நெடுநெடு’வென வளர்ந்து போனதாய்
இனியும் நெருப்பை மடியில் கட்டி வைத்துக் கொள்ள முடியாதென்று
’கட்டிக் கொடுத்து’ விட
பெற்றவர்கள் ஒற்றைக் காலில் நிற்க
எவன் எவனோ  ’பெண்’ பார்க்க வந்து தன் உடல் பார்த்துத்  தட்டிக் கழிக்க
தேடித் தேடிக் கடைசியில் முன் பின் தெரியாத ஒரு ஆணுக்குச் சம்மதமாகி
மனைவியெனக் ‘கன்யா தானம்’ செய்வித்து
மல்லுக்கட்டி கணவனென அவனோடு வாழ நேர்ந்த மனை வாழ்க்கையில்
ஊர் சுற்றத்தின் உலை வாய் மூட
வெகுகாலம் கழித்து கருத்தரித்து தலைப்பிரசவத்தில் உயிர் பிழைத்து
தான் பெற்ற மகவு
பெண்ணெண அறிந்ததும் பெருமூச்செறிவாள்  பாலூட்டும் தாயாகி விட்ட அந்தப் பெண்.
இது வரை கடும் வெயில் வழி தன்னுடலில் கடந்து வந்து களைத்திருக்கும் அவளுக்குத் தான் தெரியும்
தன் மகவு குறித்து ஒரு பெண்ணாயுணரும் தன்  கவலை.
  
ஒரு மனைவியின் சினம்
கு.அழகர்சாமி
வெகுண்டு ஒரு நாள் வெடிப்பாள் முதல் முறையாய்
வெகு காலமாய்த் துப்பாக்கிக்குள் போட்டு வைத்திருந்த குண்டுகள் வெடித்தன போல்.
அடுக்குவாள்
பிரேதமாய்க் குற்றச்சாட்டுகளை என்  மேல்.
சற்றும்
ஏறெடுத்துப் பார்க்காமல் சல்லடையாக்குவாள் என்னை.
அவள் உக்கிரத்தில் என்  உயிர்க் கேணி
வற்றும்.
உடைந்திருப்பேன்
அவள் சொல்லெறிந்து உடைந்து கிடக்கும்  என் மனக் கண்ணாடியில்.
புதிதாய் முத்தமிடப் போன என் உதடுகளைப் பறித்து
பதித்த என் பழைய முத்தங்களையும் அழித்திருப்பாள் அவள்.
கலைப்பாள்
என் கவனமான அரிதாரத்தை.
முன் பின் தெரியாத ஒரு நெட்டை ஆணாய்
முன் நிற்பேன்.
நேற்று வரை பழக்கப்பட்ட என் மனைவியை
நேருக்கு நேர் எதிர் கொள்ளும்  நெருப்பு விழிகளில் தேடுவேன்.
அவ் விழிகள்
இது வரை பார்த்திராத ஒரு பெண் புலியினுடையவையாயிருக்கும்.