கவிதைகள் – உமா ஷக்தி

ருவரும் கைகோர்த்து
நடந்து சென்ற
சாலையோரத்தில்
ஒரு புறா விழி திறவாமல்
அசைவின்றிக் கிடந்ததைப்
பார்த்தாயா பூர்ணா?
சிறகினில் படிந்திருந்த
சாம்பலை
விழியில் நிரப்பி
வீடடைந்தோம்.
ஆசையின் புயல்வீச்சில்
நழுவிப் போன
சாவியைத் தேடியபடி
பூட்டின் முன்
எத்தனை காலம்
நிற்கப் போகிறோம்?
தாள் உடைத்து
இருளில்
உயிர் துழாவி கண்டடைந்து
மீண்டும் வெளியேறி
பூத்துக் கிடக்கிறோம்
அரைவிழித் திறப்பில்
சாம்பல் கசிந்தது
இப்போது
பூட்டைக் காணவில்லை
சாவிகள் இனி எதற்கு?
சொல் பூர்ணா..

oOo

புதிதாய் முளைத்துள்ளது
இருவருக்குமிடையே
கண்ணாடித் தடுப்பு
ஓங்கிய குரலால்
சமன் குலைக்க
ஒவ்வொரு கணமும்
முயன்று தோற்கிறாய்.
குளிர் முத்தங்கள்
தலையணைத்
தொட்டாலும்
விலகிய மனதுடன்
பொம்மையானேன்
கண்ணுக்குப் புலப்படாத
தூண்டு விசைகள் ஓயும் வரை
கோப்பைக்குள்
தளும்பிக் கொண்டிருக்கும்
உனக்கான நுரை.

Lines_Moving_Awaay

வண்ணக் கலவை

னது ஓவியத் தீற்றல்களில்
செழித்து வளர்கின்றது
அவளது செந்நிற தேகத்தின்
ஆசை நரம்புகள்.
முகிலின் வெண்மை வழித்து
பருகத் தந்தாள்
வண்ணக் குடுவையிலிருந்து
சிந்தி விழுகின்றது
நீள் இரவுகள்…
கருங்கூந்தலில் தொலைந்த
முகத்தை கண்டெடுத்து
மின்னும் முத்தங்களின்
இடம் மாற்றினாள்
ஈற்றில்
ஸ்பரிசத்தின் நிறம்
நீலம் என்றாள் அவள்
ஆரஞ்சு என்றான் அவன்