வருடங்கள் பிசுபிசுக்கும் கோயில்தரை உடைந்த புல்லாங்குழலிலிருந்து ஊர்கிறது பெயரற்ற ராகம் மணிகளில் மௌனம் கனத்துத் தொங்க நிழலொளி நேரத்தில் நினைவுகளற்ற பிரார்த்தனைகளை வில்வ இலைகள் விசாரிக்கின்றன் திரியிலுறங்கும் சுடர் கோலங்களசையும் வாசல் குரல்கள் பெருக கோரிக்கைகள் ஆரத்தி கற்பூரத்திலேறுகின்றன கடவுள்கள் உறங்குகிறார்கள்.
oOo
மழை வெளுத்த மனம் முல்லைப் பந்தற் கீழ் காற்று கவிழ்த்த நந்தியாவட்ட விரிமலரை எடுப்பதோ, தொடுப்பதோ, தீண்டுவதோ, நுகர்வதோ... பார்ப்பதும் கூட, இல்லையில்லை; நீள்காம்பையும் பச்சை மலராக்குகிறது உடனடியாக.
oOo
நீயும், நானும் நிழல் விழும் இரவும் நீலக் கருமரமும் இருந்தோம் அப்பொழுது இயங்காத கடிகாரங்கள். புலர்தலில்லாப் பொழுது. கசங்காத காலம். பிறகு, நீயில்லை நானும், நட்சத்திரக் கனவுகளும். அப்புறம் நானுமில்லை ஒரேயொரு எழுதாத வரிமட்டும்.
oOo
தளிர்கள் இமைக்காமல் மரம் விழித்திருக்கிறது. தொட்டிலுறக்கம் நீட்டிய கிளைகளில்.குழந்தை விழித்திடுமென அசையாது கவனம் காக்கும் கர்ண மரம். வெளிர்பாதம் வெளித் தொங்க, பனிக்கு உடல்குறுகக் குழந்தை தூங்க... பெற்றவள் எவளோ. சுற்றமும் ஏதோ. தனி மழலை தவிக்காமல். அமைதியாய் ஆர்ப்பரிக்கும் உள்மறைத்துக் காக்கும் ஆலின் மடி மட்டும் நீளுமிரவில்.
oOo
வருடங்கள் பிசுபிசுக்கும் கோயில்தரை,நிழலொளி நேரத்தில், மழை வெளுத்த மனம், கர்ண மரம்……. அழகாக வார்த்தைகளை கோர்கிறீர்கள் உமா, வாழ்த்துக்கள்.
தேன்மொழி சின்னராஜ்