கசாப்புக்காரர்

“86 வருடங்கள் (1909-1995) நிறைவாழ்வு வாழ்ந்த ஆஷாபூர்ணா தேவி, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து அதன் இறுதி வரை, வங்க சரித்திரம், சமூகம் அடைந்த மாற்றங்களை, குறிப்பாக பெண்களைச் சுற்றிச் சுழலும் சரித்திர கதியை, ஏற்றத்தாழ்வுகளை, மாற்றங்களைத் தம் எழுத்துக்களில், தம் இயல்பில் பதித்தவர். எழுதியது என்னவோ அவர் அறிந்த வீட்டுச்சுவர்களுக்குள் அடைந்துகிடந்த அநுபவங்களை. அவை சரித்திர ஆவணங்களாகிவிட்டன. இது அவ்வெழுத்துக்களின் இன்னொரு பரிமாண உண்மை. வாழ்ந்தது உக்கிராண அறையில், கூடத்தில். பள்ளிப்படிப்பில்லாத சிறுமி கற்றது தாயின் அரவணைப்பில் – மகாபாரதம், ராமாயணம், வகையறாக்கள். பெண்களுக்கு பள்ளிப்படிப்பு மறுக்கப்பட்ட காலம். ஆனால் 13 வயதுப் பெண் டாகூருக்குக் கடிதம் எழுதி, அக்கவியரசர் இச்சிறு பெண்ணை மதித்து பதிலும் எழுதிவிட்டார் என்றால் “நான் சாதிக்க முடியாததை நீ சாதித்துக் காட்டிவிட்டாய்” என்று தாய் மகிழ்து போகிறாள்.அது தாயின் ஆதரவு. அது பிறந்த வீட்டுச் சூழல். கவிதை, அரசியல், சங்கீதம் எல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் மதிக்கப் பெற்ற ஒரு சமூகச் சூழல்- பெண்களுக்கு அவை மறுக்கப்பட்டாலும் 20களில் சங்கீதம் கற்க டி.கே.பட்டம்மாள் அனுமதிக்கப்படவில்லை தமிழ்நாட்டில்!
Ashapurna Devi Indian Literary Personalityசிறுபெண்ணாக மணம் புரிந்து புகுந்த வீட்டிலும் “வீட்டுக் காரியங்களில் குறை வைக்காதே. மற்றப்டி, மிகுந்த நேரத்தில் நீ படித்துக் கொள். எழுதிக்கொள்” என்ற அளவில்தான் அவர்கள் தடை இருந்தது. மேலும் ஆஷாபூர்ண தேவிக்கு முன் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே, சமூக எதிர்ப்புகளையும், வறுமையையும், குடும்பச் சுமைகளையும், படிப்பறிவில்லா நிலைகளையும் மீறி எழுத்தை ஒரு போராட்டமாகவே கொண்டு வாழ்ந்து மறைந்த பெண் எழுத்தாளர்களின் ஒரு நூற்றாண்டு நீண்ட மரபு மிகவும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வலுவில் ஒரு மரபு – ஆஷாபூர்ணா தேவியின் தடைகளற்ற எழுத்து வாழ்வுக்கு ஆதரவான சூழல் ஒன்றை, பாதை ஒன்றை அமைத்துக் கொடுத்திருந்தது.- ஒரு பார்வையில், என்றும் சொல்ல வேண்டும். அம்மரபு ஆஷாபூர்ணா தேவியைத் தொடர்ந்து இன்னும் வேகத்தோடு மஹாஸ்வேதா தேவியிடம் காணப்படுகிறது என்றும் சொல்லவேண்டும். இத்தொடர்ச்சியும் போலியற்ற , உண்மையான புரட்சிக் கனல், கோபாக்கினி இவரையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
இருக்கட்டும். என்ன ஆதரவு இருப்பினும் கூட்டுக்குடும்ப வாழ்வில் படிக்க, எழுத ஒழிந்த நேரத்துக்கு எங்கே போவது?
எழுதுவது ஒரு தணியாத தாகமாகவே, ஆஷாபூர்ணா தேவிக்கு இருந்தது. ஒழிந்த நேரப் பொழுதுபோக்காக 200-250 புத்தகங்கள் எழுதியிருக்க முடியாது. தானறிந்த உலகையும், மனிதர்களையும், வாழ்வையும், அநுபவித்ததையும் மீறி அவர் ஏதும் எழுதியதில்லை. எந்த சித்தாந்தமும் அவர் எழுத்தை நிர்ணயித்ததில்லை. ஆனால் அவர் சித்தரித்துள்ள சMஊகத்தில் இந்நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே பெண்ணுரிமைக் குரல் கேட்கிறதே என்றால், அது இயல்பாக மனிதருக்குள் எழும் விடுதலை உணர்வு. அடம் பிடிக்கும் குழந்தையிலிருந்து முகம் சுளிக்கும் பெண் வரை. முகம் சுளிப்பும் எதிர்ப்புதான், தன் உரிமை வலியுறுத்தல்தான், ப்ராவை எரிக்கவேண்டாம். ஆஷாபூர்ணா தேவியின் பார்வையில் பெண் உரிமை என்பது பெண் தன் பெண்மையை மறுக்கும், உதறி எறியும், உரிமை அல்ல. தாய்மையை உதாசீனம் செய்யும் உரிமையும் அல்ல. ஆணுடன் சேர்வதே ஆணின் ஆதிக்க குணத்திற்கு அடிமை ஆவது என்று யார் சொல்வதையோ திரும்பச் சொல்லும் அடிமைத்தனமும் அல்ல. பெண்ணும் இன்னுமொரு மனித ஜீவன்தான். அதற்கும் தனித்தேயான டையாளங்களும், வளர்ச்சியும், சுதந்திர வாழ்வும் உண்டு என்பதை அங்கீகரிக்க, உணர, கடல்கடந்து வரும் எந்த சித்தாந்தக் குரலும் தேவையில்லை.
ஆஷாபூர்ணாதேவி தன் வாழ்க்கையில், வாழ்காலத்தில், தன்னைச் சுற்றிய சமூகத்தில் கேட்ட இக்குரலைத்தான், தன் அநுபவங்களை, அன்றாட வாழ்வைப் பதிவு செய்யும் போக்கில் தானறியாத இக்குரலையும் பதிவு செய்து விடுகிறார். இதுதான் எந்த உயர்ந்த இலக்கியத்தின் பண்பும்.”
( ‘கறுப்புச் சூரியன்’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து வெளியான ஆஷாபூர்ணா தேவியின் கதைத்தொகுப்பின் விமரிசனத்தில் திரு வெங்கட் சாமிநாதன்)

ஞானபீட விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர்  வங்க எழுத்தாளர் ஆஷா பூர்ணா தேவி.

 

கசாப்புக்காரர் [ ‘Koshai’]

வங்காளக்கூட்டுக் குடும்பங்களில் பெண் நிலை பற்றியது இது. தான் பெண்ணாக இருந்தபோதும் பெண்ணின் எதிர்த்தரப்பை எடுத்துக்கொண்டு இதில் நடுநிலையோடு பேசியிருக்கிறார் ஆசிரியர்; பெண்ணின் மீட்சி அவளிடமிருந்துதான் வர வேண்டும் என்பதையும் கழிவிரக்கம் தேவையில்லை என்பதையும் உணர்த்தும் அருமையான படைப்பு இது.
வங்க மூலம்: ஆஷா பூர்ணாதேவி  தமிழில்: M.A.சுசீலா
[SOURCE THE MATCH BOX-SELECTED STORIES OF ASHA PURNA DEVI,TRANSLATED BY MONABI MITRA -RUPA AND CO., N.DELHI]
 
அழுகை ….அழுகை…!
ஓயாத …..ஒழியாத அழுகை !
 
சகிக்கமுடியாத……., காரணமே தெரியாத இடைவிடாத அழுகை ! இப்படிப்பட்ட அழுகை உங்கள் மனதைப் முறுக்கிப் பிசைந்து வலிக்க வைப்பதையும், இரக்க மேலீட்டால் கண்ணீர் சிந்த வைப்பதையும் விட எரிச்சலூட்டுவதாகவும் உங்களை வெறுப்படைய வைப்பதாகவுமே இருக்கும். ஆனாலும் …நிறைய நேரம் செல்லமாகத் தட்டிக்கொடுத்து,இதமான வார்த்தைகள் பலவும் சொல்லி இந்த அழுகையை நிறுத்த ஏதாவது ஒருமுயற்சி செய்துதானாக வேண்டும்…! ஆனால் அந்த முயற்சிகளெல்லாம் எப்போதுமே வெற்றியடைந்து விடும் என்றும் சொல்லி விடவும் முடியாது.
நோயாளியான தன் குழந்தைப்பையனை வைத்துக்கொண்டு பொறுமை எல்லை கடந்து போனநிலையில் தவித்துக்கொண்டிருந்தான் சமரேஷ்; ஆனால் கமலா..எங்கேயுமே தென்படவில்லை.
சமையலறையில் அப்படி என்னதான் மிதமிஞ்சிய வேலைகள் இருந்துவிடக்கூடும்? சமரேஷுக்கு உண்மையிலேயே அது விளங்கவில்லை. குடும்பத்தில் இருக்கும் இன்னும் இரண்டு மருமகள்களோடு அவனுடைய விதவைச் சகோதரியும் இருக்கிறாள்; மற்ற வேலைகளுக்குக் கூடமாட உதவியாக வயதில் மூத்த அவனுடைய மாமாபெண் ஒருத்தியும் அந்த வீட்டில் இருக்கிறாள். அப்படியும் கூட சமையல் அறையில் தான் இருந்துதான் ஆக வேண்டும் என்ற பிடிவாதத்துடன் கமலா குழந்தையை ஏன் விட்டு விட்டுப்போக வேண்டும் என்பது சமரேஷுக்கு இன்னும் கூட ஒரு புதிராகத்தான் இருந்தது.
தரையை ஓங்கி உதைத்தபடி அங்கே சட்டென்று நுழைந்து விடலாமா என்ற ஆவேசத்தின் விளிம்புக்குத் sv-ws-logo copyதள்ளப்பட்டிருந்தான் அவன். ஆனால்….மற்றவர்கள் முன்னிலையில் அப்படி நடந்து கொண்டு ஒரு நாடகத்தனமான காட்சியை அவன் அரங்கேற்றினால் பிறகு கமலா அதற்காகத் தன்னைத்தான் கடிந்து கொள்வாள் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. ஒருவேளை அந்தச்செயலால் அதிகமாகப் புண்பட்டுப்போகும் அவள், வேண்டுமென்றே இன்னும் கொஞ்சம் காலதாமதம் செய்து விட்டால்…அப்புறம் சமரேஷால் அதற்கு மேல் எப்படி சமாளிக்க முடியும்?
மகன் போடும் கூக்குரல்கள் அதிகரித்துக்கொண்டே சென்றன. அடுப்படியில் வேலை செய்வதற்காகக் கதறிக்கொண்டிருக்கும் குழந்தையின் அழுகையைக் கண்டு கொள்ளாமல் புறக்கணித்துக்கொண்டிருக்கும் மனைவியின் வித்தியாசமான நடவடிக்கை சமரேஷுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு புறம் அவள் மீது கோபம் பொங்கி வந்தாலும் – அவள் குழந்தையை விட்டு விட்டு விருப்பமில்லாமல் வீட்டு வேலைகளை செய்துகொண்டிருப்பது ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தினால் மட்டுமே என்பதையும் தன் உள்ளத்தின் ஆழத்தில் அவன் உணர்ந்துதான் இருந்தான்.
சமரேஷின் சொந்தக்காரர்களெல்லாம் அவ்வளவு கொடுமைக்காரர்களா என்ன…? இப்படி எதையுமே கண்டு கொள்ளாமல் அசட்டையாகவா இருப்பார்கள் அவர்கள்…? மனிதர்கள்…..அதிலும் குறிப்பாகப்பெண்கள் ..இப்படி இதயம் இல்லாதவர்களாக இருப்பது சாத்தியம்தானா ?
சற்று தூரத்தில் சமையல் அறையில் இருந்த கமலாவின் பதட்டம் சிறிது சிறிதாகக்கூடிக்கொண்டே சென்றது. உச்ச ஸ்தாயியில் உயர்ந்து கொண்டே செல்லும் குழந்தையின் ஓலமும் அவன் போடும் கூச்சலும் அவளையும் எட்டாமல் இல்லை.ஆனாலும் அவளால் என்ன செய்ய முடியும்? இன்று சமைக்க வேண்டியது அவளுடைய ‘முறை’. அதிலிருந்து விலக்குப்பெறுவதற்கு ….தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ‘முறை’யை விட்டு விலகிச் செல்வதற்கு அவளுக்கு அனுமதி கிடைக்கப்போகிறதா என்ன? ஒருக்காலும் இல்லை.
‘என்ன…? நீ ஒருத்தி மட்டும்தான் கைக்குழந்தைக்காரியா…?
இந்த உலகத்திலேயே வியாதிக்காரக்குழந்தையைப் பார்த்துக்கிற அம்மா நீ மட்டும்தானா?
ஆனா ஒண்ணு மட்டும் நெஜம்…! இந்த உலகத்திலேயே ரொம்ப மோசமா செல்லம் கொடுத்துக்கெட்டுப்போன ஒரு குழந்தை உன்னோடதுதான்!’
கமலாவை நோக்கி வீசப்படுபவை இப்படிப்பட்ட வார்த்தைகள்தான்.
குறிப்பாக எல்லோருக்கும் மூத்தவளான அவளது ஓரகத்தி.
அடுப்பில் சுடுவதற்காகத் தேய்த்து வைக்கப்பட்ட சப்பாத்திகள் நிறைந்த ஒரு தட்டைக் கமலாவின் பக்கம் தள்ளி விட்டுக்கொண்டே அவள் பேசினாள்.
‘’ சே….என்ன ஒரு அழுகை ! கடவுளே…! இப்படி ஒரு கத்தலா….? இந்தவீடே செவிடாப்போயிடும் போல இருக்கே? சின்ன மருமகளோட பையன் ரொம்ப சாது …..அப்படித்தானே ? பார்த்தா…எலும்பும் தோலுமா வவ்வால் மாதிரி இருக்கான்,ஆனா..குரலைப்பாரு…விரிசல் விழுந்த கண்டாமணி மாதிரி’’
தட்டில் தேய்த்து வைக்கப்பட்டிருந்த ரொட்டிகளையும் அருகே குன்றுபோலக்குவித்து வைக்கப்பட்டிருந்த உருண்டைகளையும் வன்மத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள் கமலா.பெருமூச்சொன்றை உதிர்த்தபடி சலிப்பான தொனியில்’’என்னன்னே தெரியலை..இன்னிக்குன்னு இப்படிக் கிறுக்குத்தனமா நடந்துக்கறான் அவன். ஒருவேளை வெளியே சொல்லத் தெரியாம ஏதாவது ஒரு வலியோ தொந்தரவோ அவனைக் கஷ்டப்படுத்துதோ என்னவோ’’என்றாள்.
அதைக்கேட்ட அவளது மூத்த ஓரகத்தி தன் முகத்தைச்சுளித்துக்கொண்டு அவளுக்குப் பழிப்புக்காட்டினாள். ‘’ சின்ன மருமகளே…! மூளை கெட்ட தனமாப்பேசாதே. உன் பையன் தினம் தினம் இப்படித்தான் அழுதுக்கிட்டிருக்கான். தன்னோட அம்மா எப்பவும் தன்னோடயே உட்கார்ந்திருக்கணும்னு ஆசைப்படறான் அவன். அவனுக்குக் காய்ச்சலும் இல்லை…வேறெந்த வியாதியும் இல்லை. சும்மா தேவையில்லாம நாள் முழுக்கக் கத்திக் கூப்பாடு போட்டுக்கிட்டிருக்கான். நானும்தான் என்னோட ஆயுசிலே எத்தனையோ குழந்தைகளைப் பாத்திருக்கேன்…ஆனா உன்னோட பையனைப்போல ஒரு குசும்புக்காரனைப் பாத்ததே இல்லை’’
அந்த நேரம் பார்த்து பூஜை அறையிலிருந்து சமையலறைக்குள் பிரவேசித்த கமலாவின் விதவை நாத்தனார் அங்கே நடந்து கொண்டிருந்த உரையாடலின் எந்தநொடியையும் தவற விட்டு விடாமல் தானும் அதில் கலந்து கொண்டாள்.
‘’காதே செவிடாப்போற மாதிரி இப்படி ஒரு பயங்கரமான சத்தம் இருந்தா அப்புறம் நான் எப்படித்தான் பூஜைபண்றது…..சே….போயும் போயும் இப்படி ஒரு பிள்ளையைப் பெத்திருக்கே பாரு..! அது சாகத்தான் லாயக்கு….நெஜமாவே அது ஒரு மனுஷ ஜன்மமா……இல்லே ஏதாவது ஒரு மிருகமான்னே தெரியலை.’’
கமலாவின் நாத்தனார் அப்படி ஒரு முடிவுக்கு வந்து சேர்ந்தது கொஞ்சம் குரூரமானதுதான் என்றாலும் அதில் ஒரேயடியாக உண்மையில்லை என்றும் சொல்லிவிட முடியாது. வீடு முழுவதும் வியாபித்திருந்த அந்த ஓலக்குரல் ஏதோ ஒரு வினோதமான விலங்கு எழுப்பும் சத்தத்தைப்போலத்தான் இருந்தது. இனம் புரியாத அந்த ஓலத்துக்குக் காரணம் என்னவென்பது யாருக்குத் தெரியும்? மருத்துவரும் கூட அதற்கு முன்பு தோற்றுத்தான் போனார்; ஆனாலும் அதைகௌரவமாக ஒத்துக்கொள்வதைவிட்டுவிட்டு ஏதோ ஒரு ‘அலர்ஜி’ காரணமாக இருக்கலாம் என்று மேலெழுந்தவாரியாக அறிவித்து முடித்துக்கொண்டு விட்டார். அவர் பயன்படுத்திய –தாங்கள் கேள்விப்பட்டிராத அந்தப் புதிய வார்த்தைப்பிரயோகத்தைக் கேட்டபிறகு அந்தக்குடும்பம் அந்தப் பிரச்சினையைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை; உண்மையில் அதைப்பற்றிக் கவலைப்படவுமில்லை.
அந்தக் குழந்தையின் கதறல் ,இப்போது சினத்துக்கும் பரிகாசத்துக்கும் உரிய ஒன்றாகவே மாறிப்போய்விட்டிருந்தது. ஆரோக்கியமான ஒருகுழந்தையை வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு நோயாளிக்குழந்தையைப்போல ஆக்குபவள் கமலாதான் என்றும் அதற்கு அந்தக்குழந்தையும் கூட உடந்தையாக இருக்கிறது என்றுமே அங்கிருந்த எல்லாரும் முடிவு கட்டிக்கொண்டிருந்தனர்.
நாத்தனாரின் கொடூரமான சொற்களால் கண்ணீர் மல்கிக்கொண்டிருந்தாள் கமலா; அதற்குச்சரியான பதிலடி கொடுக்கவேண்டுமென்று அவள் துடித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், அழுது கரைந்து கொண்டிருந்த – மெலிந்து போயிருந்த அந்தக்குழந்தையைக் கையில் ஏந்தியபடி உள்ளே நுழைந்தான் சமரேஷ்; அதை முரட்டுத்தனமாகக் கதவருகிலேயே கிடத்தி விட்டுக்கத்தினான்.
‘’என்ன …..சாவு விருந்து போட எல்லா ஏற்பாடும்பண்ணி முடிச்சிட்டியா இல்லையா……? இந்த வேலையை வேற யார் கிட்டேயாவது விட்டுட்டு வர உன்னாலே முடியாதா …? இப்படி விஸ்தாரமா சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறதுக்குப் பதிலா கடையிலேயிருந்து காய்ஞ்ச ரொட்டித் துண்டை வாங்கி சாப்பிட்டா அது என்ன தொண்டைக்குழிக்குள்ளே எறங்காமேபோயிடுமா’’
சமரேஷின் பொறுமை எல்லை கடந்து சென்றுவிட்டது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.தன் கோபத்தையெல்லாம் கொட்டித் தீர்த்து விட்டு அங்கிருந்து வெளியேறினான் அவன்.
சமையல் அறையில் இருந்த எல்லோரும்கணநேரம் வாயடைத்துப்போனபடி இருந்தார்கள்; ஆனால்…அது கணநேரம் மட்டும்தான். அடுத்த நொடியிலேயே மூத்த ஓரகத்தி தன் அருவருப்பான கீச்சுக்குரலில் கத்தத் தொடங்கியிருந்தாள்.
‘’போம்மா போ .., என் செல்லப்பொண்ணே !! இந்த வீட்டுச்சின்ன மருமகளே போ! நல்லாப் போய் உன்னோட கண்ணான குழந்தையை மடியிலே போட்டுக்கிட்டு உட்கார்ந்துக்கோ. உன் பையனோட புண்ணியத்திலே நம்ம எல்லாரோட இராத்திரிச் சாப்பாடும் சாவு விருந்தா மாறப்போறதை நல்லா பார்த்துக்கிட்டே இரு. இப்படிப்பேசினதுக்கு பதிலா இனிமே தன்னோடபெண்டாட்டி சமையல் பண்ணணும்னு யாரும் எதிர்பார்க்கக்கூடாதுன்னு குழந்தையோட அப்பா நேருக்கு நேராவே சொல்லியிருக்கலாமே….வேணும்னே தன்னோட பிள்ளையைக் கிள்ளி விட்டு அழ வச்சிட்டுஅப்பறம் நம்ம கிட்டே வந்து இப்படி நிஷ்டூரமா ஏன் பேசணும்?’’
கை கழுவிக்கொண்டு குழந்தையைத் தூக்கிக்கொள்வதற்காகக் கமலா அவசரமாக எழுந்துசென்றாள்; அந்த மாதிரி வார்த்தைகளைக்கேட்டதில் அவளுக்குள் கோபம் குமுறிக்கொண்டுவந்தது. கதவருகே கிடந்தபடி இன்னும் சிணுங்கிக்கொண்டிருந்த குழந்தையை ஓங்கி ஒரு போடு போட்டுவிட்டு மீண்டும் தன் வேலைக்குத் திரும்பிச் சென்றாள் அவள். ஆனால் அது அவள் மகனைக் கட்டுப்படுத்தக் கொஞ்சமும் உதவவில்லை; அவளை அதற்காகப் பழிவாங்குவதைப் போலவே அவன் பெருங்குரலெடுத்துக் கத்த ஆரம்பித்ததும் அங்கே என்னதான் நடக்கிறதென்று பார்ப்பதற்காகக் குடும்பத்திலிருந்த மற்றவர்களும் அங்கே வந்து சேர்ந்திருந்தனர். நாள் முழுக்க-இரவும் பகலும் எந்த நேரமும் அந்தக்குழந்தை ஓயாமல் அழுதுகொண்டே இருப்பது வழக்கம்தான் என்றாலும் இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது அதன் கூக்குரல் உச்ச ஸ்தாயியை எட்டியிருந்தது. சின்ன மருமகள் எங்கேதான் போய்விட்டாள் என்று அவர்கள் ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இறுதியில் ஒரு வழியாக – வேலை செய்து கொண்டிருப்பதைப்போன்ற பாவனைகளையெல்லாம் விட்டு விட்டுக் குழந்தையை சமாதானப்படுத்த இறங்கி வந்தாள் கமலா.
‘’இதுக்கு பதிலா ஒரேயடியா நீ செத்து ஒழிஞ்சு இந்தக்கூப்பாட்டுக்கெல்லாம் ஒரு முழுக்குப்போட வேண்டியதுதானே’’ என்று கண்ணீர் மல்கக் கத்தியவள் மறுபடியும் ஒரு தடவை அதை பலமாக அடித்துவிட்டு சமையலறையை விட்டுச் சென்றாள்.
அறைக்கு வந்த பிறகு கணவனோடு வாக்குவாதம் செய்து சண்டை போடுவதற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டாள் கமலா;ஆனால் சமரேஷை எங்கேயுமே காணவில்லை.
வீட்டு விஷயங்கள் பொறுக்க முடியாதபடி போகும்போது வெளி உலகத்துக்குத் தப்பித்துச் செல்லும் வாய்ப்பு ஆண்களுக்கு எப்படியோ கிடைத்து விடுகிறது. நான்கு சுவர்களுக்குள் மட்டுமே சிறைப்பட்டுக்கிடக்கும் அநாதரவான பெண்ணுக்கு அப்படிப்பட்ட ஆறுதல் கிடைப்பது கடினம்தான்.ஆனால்….அவர்களுடைய பொறுமை மட்டும் எல்லை தாண்டிச்செல்லக்கூடாதா என்ன?
என்னசெய்வதென்றே புரிபடாத நிலையில் திகைத்துப்போயிருந்த கமலா, முனகிக்கொண்டிருந்த குழந்தையைப்பாதி தூக்கிக்கொண்டும் பாதி இழுத்துக்கொண்டும் மூன்றாவது மாடியிலிருந்த கூரை வேய்ந்த மேல்மாடிக்குச்சென்றாள்.
அவள்,அங்கேயே…….அப்படியே உட்கார்ந்திருப்பதுதான் தேவை என்றால்……கீழே இருக்கும் குடும்பத்தாருக்கு அதுதான் நிம்மதியைத் தரும் என்றால் அவள் அவ்வாறேசெய்யவும் கூடத் தயாராக இருந்தாள். சக்தியெல்லாம் வடிந்து போய் ஜீவனே இல்லாமல் இருந்த அவளால் அதற்கு மேலும் தன் அழுகையைக்கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
சைத்ர மாதத்துக்காற்று குளுமையாகவும் இனிமையாகவும் வீசிக்கொண்டிருந்தது. இரவு ஒன்பது மணியாகியிருந்தது. அந்த மேல்மாடியின் கூரைக்கடியில் இதுவரையில் தான் அனுபவித்து வந்த தவிப்பையெல்லாம் தணிக்கக்கூடியதான பேரமைதி ஒன்று திடீரென்று தன்மீது கவிந்து கொண்டதைப்போல உணர்ந்தாள் அவள். வீட்டின் கீழ்ப்பகுதியில் அவள் அனுபவித்து வந்த துயரங்கள், அழுக்கும் அசிங்கமுமான அந்த உலகம் – அதற்கெல்லாம் மாற்றாக இங்கே மேலே, ஒரு புதிய உலகத்தைத் தான் கண்டு கொண்டு விட்டதைப்போல அவளுக்குத் தோன்றியது. அதே நேரத்தில் – கீழேயுள்ள கடினமான வீட்டு வேலைகளில் சிறைப்பட்டுக் கிடப்பவர்களிடமிருந்து நழுவிக்கொண்டுவருவதற்கு வாய்த்திருக்கும் தற்காலிகமான கணங்கள் மட்டுமே அவை என்ற உண்மையையும் அந்த அமைதிக்கு நடுவே அவள் புரிந்துதான் வைத்திருந்தாள்.
அழும் குழந்தையைத் தன்னருகே கிடத்தியபடி தானும் அழுது கொண்டிருந்தாள் கமலா. சிறிது நேரம் அப்படியே கழிந்த பிறகுதான்….குழந்தையின் அழுகை தானாகவே நின்று போயிருந்த அதிசயம் அவளுக்கு உறைத்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு அவனைத் திரும்பிப் பார்த்தபோது ஏதோ ஒரு கட்டத்தில் அழுதபடியே அவன் தூங்கிப்போயிருக்க வேண்டும் என்று அவள் நினைத்துக்கொண்டாள்.
கமலாவுக்குள் சட்டென்று ஒரு சிந்தனை ஓடியது. வீட்டில் இருக்கும் கரிபடிந்த அழுக்கான அடைசலான அறைகளில் புழுக்கமாக இருந்ததனால்தான் அவன் அப்படி இடைவிடாமல் அழுதிருப்பானோ? குழந்தைக்குச் சளி பிடிக்கக்கூடாது என்று பயந்து கொண்டே அதை எப்போதும் போர்வை மடிப்புகளுக்குள் பொதிந்து வெம்மையாகவே வைத்திருப்பான் சமரேஷ். பாவம்….சூடு தாங்காமல் அந்த ஜீவன் கஷ்டப்பட்டிருக்க வேண்டும்.மறுநாளிலிருந்து தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வீட்டு வேலைச்சுமைகளுக்கு நடுவில் எப்படியாவது யாருக்கும் தெரியாமல் கொஞ்ச நேரத்தையாவது பிய்த்துத் திருடிஒதுக்கிக்கொண்டு இந்த மாடிக்கு வந்து குழந்தையைத் தூங்க வைத்து விட வேண்டுமென்று உறுதி எடுத்துக்கொண்டாள் கமலா. அதன் அருகில் நகர்ந்து சென்று தன் முந்தானையால் அதற்குப் போர்த்தி விட்டாள். சமரேஷ் வந்து தன்னை சமாதானப்படுத்திக் கீழே இருக்கும் குடும்பத்தாரோடு சேர்த்துவைக்கும் வரை அங்கேயே இருக்க வேண்டுமென்றும் முடிவு கட்டிக்கொண்டாள்.
சண்டை போட்டு விவாதம் செய்யுமாறு வீட்டிலுள்ளவர்களைத் தூண்டிவிட்டு விட்டு – அவர்கள் தொடுக்கும் தாக்குதல்களையெல்லாம் தனியே எதிர்கொள்ளுமாறு அவளை விட்டுவிட்டுத் தான் மட்டும் தப்பித்துப்போய்விட்ட சமரேஷை அவள் இன்னும் மன்னித்திருக்கவில்லை.
இரவின் அடர்த்தி கூடிக்கொண்டே வந்தது. முன்னிரவில் மெல்லிதாக வீசிக்கொண்டிருந்த காற்று இப்போது வலுத்திருந்தது;அதில் குளிரும் கூடியிருந்தது.உறங்கிக்கொண்டிருந்த குழந்தையின் மீது நிலவொளி சாய்வாகப்படர்ந்திருந்தது.அமானுஷ்யமான அந்த வெளிச்சத்தில் பார்க்கும்போது குழந்தையின் உருவம் வினோதமாகத் தென்பட்டது. கணநேரம் திடுக்கிட்டுப்போன கமலாவை மயிர்க்கூச்செறியும் திகிலும் பயமும் ஆட்கொண்டன. குழந்தைக்குக் கவசமாக இருக்க எண்ணியதைப்போல அதை நெருக்கமாக அணைத்துக்கொண்டு மறுபடியும் படுத்துக்கொண்டாள் அவள்.
தன்னையும் அறியாமல் சற்று நேரம் கண்ணயர்ந்திருந்த அவள் உலுக்கப்பட்டவள் போல விழித்துக்கொண்டபோது சமரேஷ் குனிந்து குழந்தையைப் பார்த்துக்கொண்டிருந்தது கண்ணில் பட்டது. ஆனால் கீழே போய் சாப்பிடும்படி அவளை சமாதானம் செய்வதற்கோ தன் குடும்பத்தாரைக் குற்றம் சொல்வதற்கோ –எதற்குமே அவன் முனையவில்லை.
அமைதியாக வீசிக்கொண்டிருந்த காற்றைத் துளைத்துக்கொண்டு அவனது முரட்டுத்தனமான குரல் மட்டும் இப்படிக்கத்தியது.
‘’என்ன இது…..? இப்படி ஒரு விரிப்புக்கூடப்போடாம வெறும் தரையிலே போய்க் குழந்தையைப் படுக்க வச்சிருக்கே…? அவனை சாகடிச்சிடலாம்னு நெனக்கிறியா?’’
கமலா எந்த பதிலும் சொல்ல விரும்பாதவளாய் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவள் எப்போதுமே எதையும் சுலபமாக விட்டுக்கொடுத்து விடுவதில்லை; அதிகநேரம் கெஞ்சி,சமாதானம் செய்த பிறகு பேசுவதே அவள் வழக்கம்.
‘’அவனைக் கீழே கூட்டிக்கிட்டுவா. டாக்டர் வந்திருக்கார்’’
‘’என்னது…டாக்டரா..?’’
புண்பட்டுப்போயிருந்த தன் சுய உணர்வுகளை அதற்கு மேலும் வளர்த்துக்கொண்டு செல்ல அவளால் முடியவில்லை.
தான் இருந்த இடத்திலிருந்து வேகமாய் எழுந்தவள்,
‘’அப்படீன்னா…நீங்க ….டாக்டரைக்கூப்பிடவா போயிருந்தீங்க’’
என்று நடுங்கும் குரலில் அவனிடம் கேட்டாள்.
‘’பின்னே நான் என்ன சும்மா எங்கேயோ உலாவப்போயிட்டேன்னு நெனச்சிக்கிட்டு இருந்தியா ? அதிருக்கட்டும்….என்ன கொடுமை இது? அவனுக்கே காய்ச்சல் பொரிஞ்சிக்கிட்டு இருந்தது’’ என்றபடி குழந்தையைத் தூக்கிக் கொள்வதற்காகக் குனிந்தான் சமரேஷ். அதன் மெலிவான உடல் மீது அவன் விரல்கள் உராய்ந்தபோது அவன் குரல் அச்சத்தால் கனத்துப்போயிருந்தது.
கமலா ஏதோ கனவில் இருப்பவளைப்போலக் குழந்தையை அவனிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காகக் கைகளை நீட்டினாள். அவனோ அவளிடமிருந்து அதைப்பிடுங்கிக்கொண்டு செல்பவனைப்போல அதை அகற்றிக்கொண்டான்.
கடுமை நிறைந்த குரலில் ‘’விடு அவனை’’என்றான்.
குளிர்ந்து போய் விறைத்துக்கிடந்த குழந்தையின் தொடுகை , தொடர்ந்து வரப்போகும் ஏதோ ஒரு பெரிய அபாயத்தின் அறிகுறியைப்போல பயங்கரமாக அச்சமூட்டியது.
மருத்துவருக்கு முன்னால் இருந்த படுக்கையில் குழந்தையைக் கிடத்தியபோது அவன் முகம் பீதியின் விளிம்பில் உறைந்திருந்தது.
‘’டாக்டர்….! அவனோட கழுத்து விறைப்பா இருக்கு..’’
அப்படி ஒரு அமைதி…….அப்படி ஒரு திகிலூட்டும் நிசப்தம்! மிக மோசமான துயரத்தின் மௌனத்தில் நிரம்பிக் கிடந்தது அந்த வீடு. தங்கள் காதுகளை எரிச்சலோடு பொத்திக்கொள்ள வேண்டிய தேவை இப்போது அந்தக் குடும்பத்தில் யாருக்கும் இல்லை. அங்கே நிரந்தரமாக நின்றுபோயிருந்தது அந்த அழுகைமட்டுமல்ல,…..அந்த வீட்டிலிருந்த அனைவருமே அமைதியாகி விட்டிருந்தனர். மறைவான ஏதோ ஒரு மூலையிலிருந்து மட்டும் மெல்லிதான கீற்றுப்போன்ற இலேசான விசும்பல் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.
ஆனால்…..எத்தனை நாட்களுக்குத்தான் வீடு அப்படி நிசப்தமாக இருக்கமுடியும்? ஒரு குடும்பம் என்பது எண்ணிக்கையில் அடங்காத எத்தனையோ தனி நபர்களின் விருப்பங்கள், தேவைகள் ஆகிய சிக்கலான கலவைகளால் அல்லவா கட்டமைக்கப்பட்டிருக்கிறது? சின்னஞ்சிறிய ஒரு ஜீவனின் இழப்புக்காக அது எத்தனைகாலம்தான் துக்கம் கொண்டாடிக்கொண்டிருக்கமுடியும்? மேலும் ஒரு துக்கத்தின் அளவு எந்த எல்லை வரை செல்ல வேண்டும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதானே? அற்ப ஆயுள் கொண்டவர்களுக்கு அவர்களுக்கேற்றதுதான் கிடைக்க முடியும். குழந்தையின் இறப்புக்காக துக்கம் அனுசரிப்பதும் கூட அதற்கேற்றபடிதான்!
காலப்போக்கில் அந்த விஷயமே மறக்கப்பட்டுப்போய் ….எந்தமாற்றமுமே இல்லாத இயந்திர கதியில் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. சமையலறையில் கமலாவின் ’வேலை முறை’ என்ற சடங்கு மாத்திரம் என்றென்றைக்குமாய்த் தகர்ந்து போயிருந்தது. அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வேலைகள் மற்றவர்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டு அவள் தனியே விடப்பட்டிருந்தாள். பிரமை பிடித்தவளைப்போலத் தன் அறைக்குள் அடைந்து கிடந்த கமலாவின் ஒவ்வொரு நாளும் முடிவில்லாத வெறுமை மண்டிய கடலைப்போல நீண்டு கொண்டிருந்தது.
ஒரு நாள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய சமரேஷ் வியர்வையில் நனைந்து போயிருந்த தன் சட்டையைக்கழற்றி வீசியபடி அவளிடம் கேட்டான்.
“ஆமாம்…எத்தனை காலத்துக்குத்தான் நீ இப்படியே இருக்கப்போறே….உன் உடம்பை வீணடிச்சுக்கிட்டு – இப்படி கொஞ்சம் கொஞ்சமா பாழடிச்சுக்கிட்டே. இருக்கிறதிலே ஏதாவது அர்த்தம் இருக்கா…..ஒருவேளை திடீர்னு பெரிசா ஏதாவது வியாதி வந்துட்டா நல்லா இருக்கும் நெனக்கிறியா”
கணவனின் வார்த்தைகள் கமலாவை விஷம் போலத்தீண்ட அவள் எழுந்து உட்கார்ந்தாள்.
“சரிதான்…..நீங்களும் மத்தவங்க மாதிரியே லாபநஷ்டக் கணக்கு பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா…..அப்படீன்னா பழையபடி நான் என்னோட வேலைக்குத் திரும்பிப் போகணும்….என்னோட சுமையை மறுபடி சுமக்க ஆரம்பிக்கணும்னு கூட சொல்லிடுவீங்க போல இருக்கே….”
“நான் ஒண்ணும் அப்படியெல்லாம் சொல்லலை . நீ இப்படியே இருந்தா ரொம்ப முடியாமல் போய்ப் படுக்கையிலே விழுந்திடுவேன்னுதான் அப்படி சொன்னேன்…”
“உங்களோட உண்மையான உணர்ச்சிகளை மறைச்சுக்கப் பாக்காதீங்க. அதையெல்லாம் அப்படி ஒண்ணும் மறைச்சுக்கவும் முடியாது.எனக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பிலே உங்களுக்கெல்லாம் துக்கம் பொங்கிக்கிட்டு வருது….இல்லே? சே..எல்லாரும் சரியான சுயநலக்காரங்க…..!
இந்த வீட்டிலே இருக்கிற நீங்க எல்லாருமே வெறும் மிருகங்கதான்……!
கல்லு மனசோட இருக்கிற மிருகங்கள்…! இப்பல்லாம் நான் என்னோட ரூமுக்குள்ளேயே – ஒரு சுண்டுவிரலைக்கூட அசைக்காம படுத்துக்கிட்டுத்தான் கெடக்கேன். அதனாலே இந்த வீடு இப்ப என்ன ஸ்தம்பிச்சா போயிடுச்சு….? அப்புறம் ஏன் இந்த வீட்டு வேலை செய்யறதுக்காக என்னோட குழந்தையைப் பார்த்துக்க முடியாமப்போச்சு….? கடைசி நாள் வரைக்கும் நான் அந்த அடுப்படியிலே வேலை பார்க்க வேண்டியதாத்தான் இருந்தது. ’பாவம்….அவளோட குழந்தை செத்துப்போய்க்கிட்டிருக்கு….அவ போகட்டும்’னு ஒருத்தர் கூடச் சொல்லலியே . கசாப்பு விக்கறவங்க….நீங்க எல்லாருமே மட்டமான கசாப்புக்காரங்கதான்”
சமரேஷ் எதுவுமே பேசாமல் அமைதியாகவே உட்கார்ந்திருந்தான் .மனைவி சொன்ன வார்த்தைகளில் நெகிழ்ந்து போய் விடாமல் அவள் சொன்ன எதுவுமே காதில் விழாதவனைப்போல இருந்தான் அவன். ஒருமுறை கூட அவன் அவளிடம் மன்னிப்புக் கோரவும் இல்லை,தன் குடும்பத்தாரைத் தாக்குவது போலவும் அவன் பேசவில்லை.
கமலா எல்லாவற்றையும் சொல்லி முடித்தபிறகு அவனிடம் மெல்லிதான ஒரு புன்னகை மட்டும் அரும்பியது .வழக்கமாகப் பெண்களின் இதழ்களில் மட்டுமே காணக்கூடிய கேலிப்புன்னகை அது;அந்தப் புன்னகையை ஒரு ஆணின் முகத்தில் காண்பது சகிக்க முடியாததாக இருந்தது.அதே புன்னகையைத் தொடர்ச்சியாகத் தன்னிடம் தவழ விட்டபடி சமரேஷ் பேசினான்.
“கசாப்புக்காரங்க நாங்க இல்லே …..அது நீதான்”
“என்னது நானா”
“ஆமாம்…நீயேதான்…..! நீங்க எல்லாப் பெண்களுமேதான். நீ பெத்த குழந்தை அப்படி உடம்பு சரியில்லாம அழுதுக்கிட்டிருந்தபோது கூட நீ அதை கவனிக்காம இருந்ததுக்குக் காரணம் மத்த பெண்கள் உன்னைப்பத்திப்பேசறதையும் திட்டறதையும் உன்னாலே தாங்கிக்க முடியாததனாலேதான். பெண்களான நீங்க எதை வேணும்னாலும் பொறுத்துக்குவீங்க. கண்ணுக்கு எதிரிலே சொந்தக்குழந்தை கஷ்டப்படறதைக்கூடப் பொறுத்துக்குவீங்க….ஆனா….மத்தவங்க உங்களை வையறதையும் பரிகாசமாப் பேசறதையும் மட்டும் உங்களாலே தாங்கிக்க முடியாது. அன்னிக்கு அவங்க பேசின கொடூரமான வார்த்தைகளைக் காதிலேயே போட்டுக்காம…..வீட்டு வேலையை விட்டுட்டு வந்து உன் குழந்தையை மட்டுமே நீ கவனிச்சிருந்தியானா….அதுக்காக உன்னை யாராவது தூக்கிலேயா போட்டிருப்பாங்க? ஏதோ கொஞ்ச நாள் , கொஞ்ச நேரம் கத்தியிருப்பாங்க…சபிக்கக்கூட செஞ்சிருப்பாங்க.
ஆனா….அதனாலே என்ன ? உன்னோட குழந்தைக்காக அந்தக்கஷ்டத்தை உன்னாலே பொறுமையாய்த் தாங்கிக்கிட்டிருக்க முடியாதா? ஆனா….நீ அப்படி செய்யமாட்டே….! எதுக்காக செய்யணும்? குடும்பப்பெண்ங்கிற பெருமைக்காக……தியாகிப்பட்டத்துக்காக உன்னோட குழந்தையையே கூட நீ காவு கொடுத்திடுவே. ஆனா….உனக்குப்பிரியமான ஒருத்தரோட நல்லதுக்காக எல்லா இடைஞ்சல்களையும் தாங்கிக்கிட்டு எதிர்த்து சண்டை போடற துணிச்சல் மட்டும் உனக்கு வராது. புருஷனையும் குழந்தையையும் விட தங்களோட சொந்தப்பெருமையும் கௌரவமும் மட்டும்தான் ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமானதா இருக்கு. இந்தப்பெண்கள்தான் எவ்வளவு சுயநலவாதிகளா இருக்காங்க….? தங்களைத் தவிர வேற யாரையுமே அவங்களாலே அன்பு செய்யவும் முடியாது, தங்களோட பிரியத்தைக்கொடுக்கவும் முடியாது’’
ஒரு துண்டை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான் சமரேஷ். திகைத்துப்போனவளாய் அவன் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தாள் கமலா.
தன்னை நியாயப்படுத்திக்கொள்வதற்காக – மிகுந்த கவனம் எடுத்து அவள் கட்டியிருந்த கோட்டைக்குக் கடைசியில் இப்படி ஒரு முடிவா நேர வேண்டும்..?
ஒரே அடியில் அதைத் தரை மட்டமாக்கித் தகர்த்துப்போட்டு விட்டான் சமரேஷ். செங்கல்லால் கட்டப்பட்ட வீட்டைப்போல இல்லாமல் சீட்டுக்கட்டு வீட்டைப்போல அது குலைந்து போய்விட்டது. அந்த சீட்டுக்களுக்குக் கல்லைப்போன்ற வலிமை இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டிருந்த அவள் அவற்றை வைத்தே உணர்ச்சிகளால் ஆன ஒரு சுவரையும் வேறு எழுப்பியிருந்தாள்…..ஆனால்….எல்லாமே இப்படி சரிந்து விழுவதற்குத்தானா? என்ன கேவலம் இது…..எத்தனை துன்பகரமானது இது..?
தன்னுடைய நோயாளிக்குழந்தைக்கு வஞ்சகம் செய்தவள் அவள்….! அவனை சாவை நோக்கித் தள்ளியவள் அவள்….! தன் சுயநலமான நடத்தையால் நடந்த எல்லாவற்றுக்குமே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டியவள் அவள்…! இவ்வளவையும் வைத்துக்கொண்டு தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அவள் முறையிட்டபோது சமரேஷ் அவளைக் குற்றவாளியாக்கித் தூற்றி விட்டுப்போய் விட்டான்….

0 Replies to “கசாப்புக்காரர்”

 1. மிகச் சரளமான மொழிபெயர்ப்பு, அதிக வர்ணனைகள் இல்லாது மனித உணர்வுகளுக்கே முக்கியத்துவம் தந்திருப்பதால்
  எந்த ஒரு மொழியிலும் இயல்பாக இணைந்துவிடும் கதை அமைப்பு. எதைத் தன் கடமை என்று எண்ணி தன் வாழ் நாள்
  முழுவதும் ஒரு பெண் ஏற்றுக் கொள்கிறாளோ அதுவே கேள்விக்குரிய விஷயமாகிறது, அதன் எல்லை எது என்பதையும்
  ஒரு பெண் என்றும் உணர்ந்திருக்க வேண்டும் என்பதை அழகாக சுட்டிக் காட்டுகிறது.
  சுசீலா அம்மாவிற்கு, தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள், சிறந்த உலக இலக்கியங்கள் தங்கள் மொழிபெயர்ப்பு
  மூலம் தமிழ் இலக்கிய உலகின் நல் வரவாகட்டும்.
  தேன்மொழி சின்னராஜ்.

 2. ////புருஷனையும் குழந்தையையும் விட தங்களோட சொந்தப்பெருமையும் கௌரவமும் மட்டும்தான் ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமானதா இருக்கு. இந்தப்பெண்கள்தான் எவ்வளவு சுயநலவாதிகளா இருக்காங்க….? தங்களைத் தவிர வேற யாரையுமே அவங்களாலே அன்பு செய்யவும் முடியாது, தங்களோட பிரியத்தைக்கொடுக்கவும் முடியாது’’///
  என்ன சொல்றதுன்னு தெரியல. ஆனா உண்மைதான் எல்லாம். அருமை சுசீலாம்மா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.