ஆகஸ்ட் 3, 2012 அன்று லண்டன் நகரில் நடந்த ஒலிம்பிக் பந்தயங்களின் ஜூடோ போட்டியில் பதினாறு வயது வோஜ்டான் ஷாஹெர்கானி பங்குபெற்றார். போட்டி ஆரம்பித்த ஒன்றரை நிமிடங்களிலேயே தோற்கடிக்கப்பட்டார். அது அவ்வகைப் பந்தயங்களில் மிகக் குறைவான நேரமே நடந்த போட்டிகளில் ஒன்று. சாதாரணமாய் இதில் குறிப்பிடும்படி எதுவும் இருந்திருக்காது. இது யாருடைய கவனத்தையும் கவர்ந்திருக்க வாய்ப்பும் இல்லை. ஆனாலும் ஷாஹெர்கானியை பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுத்தனர். சமூக ஊடக வலைத்தளங்கள் இதைப்பற்றிப் பேசின. ட்விட்டரில் ஒருவர்
“இதற்குப் பின் எங்கள் நாட்டுக் கொடியை கழுத்தைச் சுற்றிக் கட்டிக்கொண்டு, ஒலிம்பிக் பந்தயங்களின் சரித்திரத்திலேயே மிக உயர்ந்த பதக்கத்தை வென்றது போல் பெருமையுடன் தலை நிமிர்த்தி நடந்து போவேன்”
வோஜ்டான் ஷாஹெர்கானி
பந்தயங்களில் பங்கு பெற்றதாலேயே அன்று சரித்திரம் படைத்தார் ஷாஹெர்கானி. ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்ற முதல் சவுதிப் பெண் என்கிற பெருமையை அவர் அடைந்தார். 1972லிருந்து சவுதி அராபியா ஒலிம்பிக் பந்தயங்களில் பங்குபெற்ற போதும் 2012ம் ஆண்டு ஒலிம்பிக் கமிட்டி மற்றும் இதர பெண்ணுரிமை குழுக்களின் வற்புறுத்தலுக்குப் பின்னரே அந்நாட்டுப் பெண்கள் போட்டியில் பங்கெடுக்க அனுமதிக்கப்பட்டனர். ஷாஹெர்கானி போட்டியில் பங்குபெற்ற ஒரு வாரத்துக்குப் பின் அந்நாட்டின் சாரா அட்டார் என்கிற 800 மீ ஓட்டப்பந்தய வீராங்கனை ஒலிம்பிக் சரித்திரத்தின் முதல் சவுதி தடகளப் பந்தயப் போட்டியாளர் என்ற பெருமையைப் பெற்றார். கத்தார், ப்ரூனை போன்ற நாடுகளும் பெண் போட்டியாளர்களை அனுப்பியிருந்ததில் 2012 ஒலிம்பிக்கில் இதிகாசத்தில் முதன் முறையாக பங்குபெற்ற அனைத்து நாடுகளிலிருந்தும் ஒரு பெண் போட்டியாளராவது அனுப்பப்பட்டிருந்தார்.
சாரா அட்டார்
இவற்றுக்கான ஆரம்பமே கடந்த 30 ஆண்டுகளில்தான் நடந்துள்ளது.1984ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் மொராக்கோ நாட்டை சேர்ந்த நவல் எல் முடாவாகெல் 400 மீ ஹர்டில் போட்டியில் தங்கம் வென்று ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் அராபிய ஆப்பிரிக்க இஸ்லாமியப் பெண் என்கிற பெருமையை அடைந்தார். அவரது வெற்றிக்குப் பின் அவர் பேசியபோது,
“சுற்றிலும் இருப்பவர்கள் அவர்களுக்குத் தடையாய் இல்லாமல் இருந்திருந்தால் மொரோக்கோவில் பல பெரிய பெண் விளையாட்டு வீராங்கனைகள் உருவாக்கியிருப்பார்கள்”
என்றார் .
“பலரும் 13 வயதில் தொடங்கி 18 வயதில் நிறுத்திவிடுகிறார்கள் ஏனெனில் இது பெண்களுக்கானதல்ல என அவர்களுக்குச் சொல்லப்படுகிறது.”
நவல் எல் முடாவாகெல்
அவருக்குப் பின் அல்ஜீரியா, சிரியா, இந்தோனேசியா, துருக்கி, கஜக்ஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து அராபிய மற்றும் இஸ்லாமியப் பெண்கள் பதக்கங்களை வென்றுள்ளார்கள். இத்தகைய வெற்றிகளுக்குப் பின்பும், இந்நாடுகளில் விளையாட்டுத் துறையின் தலைமைப் பொறுப்பில் பெண்கள் நியமிக்கப்பட்ட போதும், நிறைய பெண்கள் விளயாட்டுத் துறையில் ஆர்வமாக ஈடுபட ஆரம்பித்தனர். தற்போது துருக்கி, எகிப்து, ஐக்கிய அராபிய ஆமிராத்துகள் போன்ற நாடுகளின் பெண்கள் பெருமளவில் பந்தயங்களில் பங்கு பெற்று வருகிறார்கள். அராபிய நாடுகளில் முற்போக்கு சிந்தனையுள்ள நாடான கத்தார் நாட்டில் 1000 விளையாட்டுக்காரர்கள் பயிற்சி பெறக்கூடிய வசதிகளோடு கூடிய பிரம்மாண்ட அரங்கம் உள்ளது.
பெரும்பாலான இஸ்லாமிய நாட்டுப் பெண்களுக்கு மதம் மற்றும் சமூகக் கட்டுபாடுகள்தான் தடையாய் உள்ளன, பணம் ஒரு பிரச்சினை அல்ல. வட ஆப்பிரிக்கா மற்றும் பல ஆசிய நாடுகளின் பெண்கள் இறுக்கமான சமூகத் தடைகளோடு, மிகக் குறைந்த பயிற்சி வசதிகள், உபயதாரர்கள் இன்மையால் நிதிப் பற்றாக்குறை போன்ற கடினமான சூழல்களை சமாளிக்க வேண்டியுள்ளது. இதனால் ஒலிம்பிக் பந்தயங்களின் சரித்திரத்திலேயே இஸ்லாமிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஆசிய கண்டங்களின் வறிய நாடுகள் பெண்கள் பிரிவில் வென்ற பதங்கங்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. இந்நிலை கடந்த சில வருடங்களாகத்தான் ஓரளவுக்கு மாறி வருகிறது.
இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கான இன்னொரு தடை, இப்போட்டிகளின்போது அணிய வேண்டிய உடை சார்ந்த விதிகள் பல போட்டிகளின் போது இஸ்லாமியப் பெண்கள் அணியவேண்டியுள்ள ஹிஜாப் என்கிற தலைமறைப்பை பாதுகாப்புக் காரணங்களுக்காக பந்தய விதிகள் அனுமதிப்பதில்லை. இது அவர்களுக்கு ஒரு கூடுதல் பிரச்சினை ஆகிவிடுகிறது. 2012 ஒலிம்பிக்கில் பல சர்ச்சைகளுக்குப் பின் ஷாஹெர்கானி ஜூடோ பந்தயத்தின் போது ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட்டார்.
சமீபத்திய வருடங்கள் வரை இவ்வாறு வெவ்வேறு காரணங்களுக்காக பெரும்பாலான நாடுகள் பெண்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டாதது சில நாடுகளுக்குச் சாதகமாய் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்கா, சைனா போல் சிறந்த கட்டமைப்புள்ள விளையாட்டு அமைப்புகள் உள்ள நாடுகள் இத்தகைய போட்டிகளில் தொடர்ந்து பதக்க எண்ணிக்கையில் முன்னணியில் இருப்பதற்கு இந்த நிலை சாதகமாய் உள்ளது. 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் அந்நாட்டின் ஆண்கள் வென்ற தங்கப்பதக்கங்களை விட 12 பதக்கங்கள் கூடுதலாய் 29 தங்கப் பதக்கங்களை ஐக்கிய அமெரிக்காவின் பெண்கள் அணி தட்டிச் சென்றது. பல்வேறு வகை விளையாட்டிகளிலிருந்தும் இவை வெல்லப்பட்டிருந்தாலும் இவற்றில் முக்கியமானவை நீச்சல் போட்டிகள், தடகளப் பந்தயங்கள் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டிகள். ரஷியா, சைனா நாடுகளின் பெண்கள் அணிகளும் அந்நாடுகளின் ஆண்கள் அணிகளை விட அதிக பதக்கங்கள் வென்றிருந்தன. ஓலிம்பிக் பதக்கங்களில் பெண்களுக்கான பதக்கங்களை விட ஆண்களுக்கு 30 அதிக பதக்கங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் பணக்கார நாடுகளிலும் கூட பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் எளிதாகக் கிடைத்து விடவில்லை. 1976ல் முதல் அமெரிக்க கூடைப்பந்து அணிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதி 500 டாலர்கள் மட்டுமே. அப்பணத்தில் அவர்களால் குளிர்சாதன வசதியற்ற ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் மட்டுமே தம் பயிற்சியை நடத்த முடிந்தது. தம் சாப்பாடு ஏற்பாட்டுக்களுக்கு ரோட்டரி கிளப்பை அண்டியிருந்தனர். அமெரிக்க கூடைப்பந்து விளையாட்டின் இயக்குனர் பில் வால் என்பவர் தம் சொந்த பணத்தில் இந்த அணியை மாண்ட்ரியால் போட்டிக்கு அனுப்பினார். அவர்கள் போட்டிக்குத் தேர்வானபோது அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் கூட செய்யப்பட்டிருக்கவில்லை. ராசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியிலும், ஒரு 2 படுக்கை அறை கொண்ட காண்டோவிலும் தங்கியிருந்தனர். அணியில் 12 பேரும், பயிற்சியாளர்களும் கொண்ட குழுவில் சிலர் சமையலறையில் தூங்கினர். போட்டியின் இறுதிவரை சென்ற இந்த அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது.
சமீபத்திய ஒலிம்பிக் போட்டியின் போது கூட உலகச் சாம்பியன்களான ஜப்பானின் பெண்கள் சாக்கர் அணி எகானமி வகுப்பில் பயணம் செய்ய அந்நாட்டின் ஆண்கள் அணி முதல்வகுப்பில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஜப்பானிய பெண்கள் சாக்கர் அணி
1984ல் லாஸ் ஏஞ்சலஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், 24% தடகளப் போட்டியாளர்கள் மட்டுமே பெண்கள்.1992 பார்சிலோனா ஒலிம்பிக்கின்போது மொத்த போட்டியாளர்களிலேயே 25% தான் பெண்கள். இது 1996 ஒலிம்பிக் போட்டியின் போது 36% ஆகவும் பீஜிங் ஒலிம்பிக்கின் போது 42% ஆகவும் அதிகரித்துள்ளது. லண்டன் ஒலிம்பிக்கில் 44% போட்டியாளர்கள் பெண்கள் என்பதும் பங்குபெற்ற ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒரு பெண் போட்டியாளராவது (டோக்கனாகவாவது) வந்திருந்தனர் என்பதும் ஒலிம்பிக் பந்தயங்களில் வருங்காலத்தில் பெண்களுக்கான இடம் பற்றிய நல்ல சகுனங்கள் எனக் கொள்ள வேண்டும். கூடிய விரைவிலேயே ஆண்களுக்கும் பெண்களுக்குமான பதக்கங்கள் சம எண்ணிக்கையில் இருக்கும், அவர்கள் எல்லாவிதத்திலும் சமமாக நடத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
தற்போது மேலைநாடுகளிலும் பொருளாதார அளவில் முன்னிலையில் உள்ள நாடுகளிலும், இஸ்லாமிய நாடுகள் நீங்கலாய், பெண்களுக்கு முதல்தர பயிற்சி வசதிகளும், அரசாங்க ஊக்குவிப்பும், சமூக அங்கீகாரமும் உள்ளதற்குக் காரணமே ஆரம்ப நாட்களில் பெண்கள் அணியினர் விளையாட்டில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தாலே போதும் என்ற முனைப்புடனும் ஆர்வத்துடன் விளையாடி வெற்றிபெற்றுக் காட்டியதன் விளைவுதான். வெற்றியைப் போல வெற்றியடைவது வேறொன்றுமில்லயே!
இன்று இந்தியாவில் பெண்களுக்கான விளையாட்டுக் களம் இவ்விரண்டு மூலைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளது. இங்கும் பெண்கள் சமூகத் தடைகள், வசதியின்மை இவற்றோடு திறமையற்ற, ஊழல் நிறைந்த நிர்வாகங்களுடன் போராடி முன்னேற வேண்டியுள்ளது. இவற்றையும் சமாளித்து மேரி கோம், சரிதா தேவி, பூஜா ராணி போன்ற குத்துச்சண்டை வீராங்கனைகளும், ஸாயினா நேவால், பி வி சிந்து போன்ற பூப்பந்து ஆட்டக்காரர்களும், அஞ்சலி பாக்வத், அனிஷா ஸையத் போன்ற துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் சர்வதேச அளவில் சாதனை படைத்துக் கொண்டிருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.
அமெரிக்கா போல எல்லா வகை விளையாட்டுகளிலும் உலக அளவில் போட்டியிடும் திறமைசாலிகளை உருவாக்குவதே இந்தியாவின் நீண்டநாள் திட்டமாக இருக்கவேண்டும் எனினும் முதல் கட்டமாக இங்கிலாந்தின் பாதையை முன்னோடியாகக் கொண்டு குறிப்பிட்ட சில விளையாட்டுகளில் கவனம் செலுத்தி அவற்றில் முதல் தர போட்டியாளர்களை தயார் செய்ய முயலலாம். 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இங்கிலாந்து வென்ற 10 தங்கப் பதக்கங்கள் ஆறு வகை போட்டிகளிலேயே வெல்லப்பட்டன – படகு செலுத்துவதில் 3, சைக்கிள் போட்டிகளில் 3, குத்துச் சண்டையில் 1, குதிரையேற்றத்தில் 1, டேக்வாண்டூ வில் 1 மற்றும் தடகளப் போட்டிகளில் 1. வெள்ளிப்பதக்கங்களும் பெரும்பாலும் இந்தப் போட்டிகளிலேயே வெல்லப்பட்டன.. நாமும் முதற்கட்டமாக இதுபோல் சில சிறப்புத் துறைகளில் திறமைகளை வளர்த்து வெற்றிகான வாய்ப்புகளை அதிகரிக்க முயலவேண்டும்.
சமீபத்திய ஆசிய விளையாட்டுகளில் நம் நாட்டுக் குழுக்களின் செயல்பாட்டை ஆராய்ந்து குத்துச்சண்டை, பூப்பந்து, சுடுதல் போன்ற போட்டிகளில் சிறந்த திறமைசாலிகளை உருவாக்க முயலவேண்டும். இளம் பெண்களுக்கு இந்தத் துறைகளில் உலக அளவிலான திறமைசாலிகள் முன்னோடிகளாய் நம் நாட்டிலேயே உள்ளனர் என்பது ஒரு கூடுதல் ஊக்கம் அளிக்கும். நிறுவனரீதியான ஆதரவு வாய்ப்பு இப்பெண்களுக்குக் கிட்ட ஊக்குவிக்கப்படவேண்டும். திறமையுள்ள இளம்பெண்களைக் கண்டுபிடிக்கும் முனைப்பும் , அவர்களுக்கு கட்டுப்பாடான சிறந்த பயிற்சிமுறைகளும் கொடுக்கப்பட்டால், வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியப் பெண்களுக்கும் சிறந்த வெற்றி வாய்ப்புகள் உண்டு என்பது பற்றிய சந்தேகமே வேண்டாம்.