என்னுயிர் நீயல்லவோ!

Oum-Khaltoum

முன்னுரையாக சந்தூர் அல்லது ஒரு தந்தி வாத்தியத்தின் சில இசைக் கீற்றுகள். தொடர்ந்து பின்னணி இசையாக அராபிய இசை வாத்தியங்களின் அணிவகுப்பு. கரவொலி எழுப்பித் தங்கள் ஆவலையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தும் தாங்க முடியாத ஆர்வம் நிரம்பி வழியும் ரசிகர்கள் கூட்டம். வாத்தியங்களே கிட்டத்தட்ட எட்டு நீண்ட நிமிடங்கள் இசைக்கப்பட்டு  ரசிகர்களைப் பொறுமையிழக்க வைக்கின்றன, அல்லது அவர்களின் பேராவலைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கின்றன.
மனிதக் கூட்டத்தால் நிரம்பி வழியும் அரங்கம்! எகிப்தின் பெரிய நகரங்களான கெய்ரோ, அல்லது அலெக்சாண்டிரியா- அந்த அற்புதமான பாடகியின் இசை நிகழ்ச்சியைக் கேட்கக் கூட்டம் ஆவலாகக் காத்திருக்கின்றது!
மணிகள் ஒலிப்பது போன்ற கம்பீரமான கணீரென்ற இனிமை நிரம்பிய பாடகியின் குரல் ஒலிக்கத் தொடங்குகிறது. மயக்கும் தனித்தன்மை வாய்ந்த பிசிறில்லாத குரல், வார்த்தைகளால் விவரிக்க இயலாத உணர்வுகளை உள்ளத்தில் எழுப்பி எதிரொலிக்கச் செய்கிறது. ரசிகர்களின் கைதட்டல் ஒலியும் சீழ்க்கை ஒலியும் அரங்கை நிறைக்கின்றன. அப்போது கிடைத்த நான்கைந்து நொடிகள் இடைவெளியிலும் மனதில் ரீங்கரிக்கும் அபூர்வக் குரல் அந்தப் பாடகிக்கு!
ஆஹா! அற்புதமான ஒரு காதல் ரசம் ததும்பும்  பாடல்- எகிப்தியர்கள் காதல் ரசத்தையும் சோக ரசத்தையும் மிகவும் அனுபவிப்பவர்கள் எனக் கூறுவார்கள்.
“உனது கண்கள் கடந்து சென்ற எனது நாட்களுக்கு என்னை
         அழைத்துச் சென்றன.
         அவை என்னை எனது கடந்த நாட்களைப் பற்றியும் நான் பட்ட
       துயரங்களைப் பற்றியும் வருத்தம் கொள்ள வைத்தன.
         உன்னைக் காண்பதற்கு முன் என் கண்ணால் கண்டவை அனைத்தும்
       வீணான வாழ்வே       
         எனது வாழ்வின் அந்த நாட்களை எவ்வாறு முக்கியமானதாகக் கருத
       முடியும்?
         நீ எனது உயிர்! (எனது வாழ்வு!) அதன் விடியல் உன்னுடன்
       துவங்கியது.”
‘எந்தே ஓம்ரீ’ ( என்னுயிர் நீயல்லவோ) என்ற பாடல். ஆஹா! பொருளும் இனிமையும் காதலும் நிரம்பி வழிகின்றதே!
sv-ws-logo copyகூரையைப் பிய்த்துக் கொண்டு போகும் அளவுக்கு ரசிகர்களிடமிருந்து உற்சாகக் குரல்கள் எழுகின்றன. பாடகியின் முகத்தில் மகிழ்ச்சி. ரசிகர்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் கம்பீரமான உருவம். மேடைத் தோற்றத்திற்கேற்ற நீண்ட அங்கி போன்ற உடை- கருப்புக் கண்ணாடி அணிந்தவர்; உயரமாக முடிந்த கொண்டை. காதில் தொங்கி ஊஞ்சலாடும் லோலாக்குகள். வலது கையில் ஒரு பெரிய பட்டுக் கைக்குட்டை. புன்சிரிப்பு தவழும் இன்முகம்.
அவர் யார் தெரியுமா? அவர் பெயர் உம் கல்தும். எகிப்தியர்களைப் பொறுத்தவரை அவர் தான் உலகிலேயே மிகப் புகழ் வாய்ந்த பாடகி. பிரதி வியாழக்கிழமை தோறும் வானொலியில் அவர் பாடல்கள் ஒலிபரப்பப் படும் போது அரபு நாடுகள் முழுதிலும் போக்குவரத்து, வணிகம் மற்றும் எல்லாமே அசைவற்று நின்று விடும் அளவுக்கு அவருடைய இசை அவர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்தது.
மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து மிகுந்த பணம் படைத்த அராபிய வணிகர்கள் விமானம் மூலமாக அவருடைய பாட்டைக் கேட்க வருவார்கள். லெபனானிலிருந்து பெரும் தனவந்தர்கள், சவுதியிலிருந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்கள் என எல்லாருமே வந்து விடுவார்கள். சும்மா சொல்வானேன்! ஜனாதிபதி நாஸர் கூடத் தன் மக்களுக்குக் கூற வேண்டிய எவ்வளவு முக்கியமான செய்தியாக இருந்தாலும் அதை உம் கல்துமின் பாடல் ஒலிபரப்பின் போது வானொலியில் வைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டாராம்! அவருடைய பாடல் ஒலிபரப்பைத் தொடர்ந்துதான் அதிபரின் செய்தி ஒலிபரப்பாகும்!
இப்படிப் புகழ் வாய்ந்த ஒரு பாடகி உம் கல்தும்!
“உன்னைக் காணும் முன்பு எனது வாழ்க்கை முற்றும் வீணாகி
         இருந்தது.
         என் இதயம் வலியையும் துன்பத்தையும் தவிர மகிழ்ச்சி என்பதை
     அறிந்திருக்கவில்லை.
         இப்பொழுது தான் நான் வாழ்க்கையை நேசிக்க ஆரம்பித்தேன்
         அது என்னிடமிருந்து நழுவிப் போய் விடுமோ என அச்சம்
       அடைந்தேன்.
         உன்னைக் காணும் முன் நான் மகிழ்ச்சிக்காக ஏங்கினேன்
         இப்போது எனது கனவுகள் உனது கண்களின் ஒளியில் அவற்றைக்
       கண்டு கொண்டன.
         ஓ! என் இதயத்தின் உயிரே! நீ என் உயிரை விட விலை
         மதிப்பற்றவள்.”
பாடல் வரிகள் திரும்பத் திரும்பப் பாடப் படுகின்றன. ஒவ்வொரு திருப்பத்திலும் வெவ்வேறு இசை நுணுக்கங்களை அமைத்து உம் கல்தும் பாடுவது உள்ளத்தை உருக்கி, ஒவ்வொரு நரம்பையும் சுண்டி இழுக்கிறது. (இது நமது சாஸ்திரீய சங்கீதத்தில் வரிகளைத் திரும்பத் திரும்ப வெவ்வேறு சங்கதிகளை அமைத்துப் பாடுவது போல!).
ரசிகர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மிதக்கிறார்கள். அடிக்கடி கேட்ட பாடல் தான். இருப்பினும் திரும்பவும் கேட்கும் பொழுது, எம். எஸ். ஸின் ‘காற்றினிலே வரும் கீதம்,’ போல, பி.சுசீலாவின், ‘தமிழுக்கும் அமுதென்று பேர்,’ போல ரசிகனைத் தன்பால் இணைத்துக் கொள்ளும் பாடல் அது!
You tube-ல் பாருங்கள்- கண் கொள்ளாக் காட்சி! செவிக்கு இனிமையான இசை உணவு.
பாத்திமா இப்ராஹிம் என்ற பெயரில் பிறந்த உம் கல்தும் அம்மையார் அரேபிய சாஸ்திரீய சங்கீதத்தில் பெரும் புகழ் பெற்றவர். ‘கிழக்கு நாடுகளின் தாரகை’ எனப் புகழப் பட்டவர். அரபி நாட்டுச் சரித்திரத்திலேயே மிகுந்த புகழ் பெற்ற பாடகி இவர் தான். முஸ்லிம் மதகுருவாக இருந்த இவருடைய தந்தை இவருக்கு மிகச் சிறு வயதில் குரானை ஓதக் கற்றுக் கொடுத்தார்; உம் கல்துமும் விரைவில் முழுக் குரானையுமே மனப்பாடம் செய்து விட்டார்! வயது வளர வளர, தகப்பனார் கொடுத்த ஆதரவில் அற்புதமான இசைப்பாடகியாகப் பரிமளிக்கலானார் உம் கல்தும். 1934- ல் கெய்ரோ வானொலி நிலையம் துவங்கப் பட்டபோது, அதன் திறப்பு விழாவில் பாடினார். ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக் கிழமைகளில் அவருடைய பாடலை நேரடி ஒலிபரப்பு செய்வார்கள்.
கலையுலகையும் தாண்டி அவர் புகழ் வளர்ந்தது. அரச குடும்பம் தங்களுக்கென ஏற்பாடு செய்து கொண்டு அவருடைய பிரத்தியேகக் கச்சேரிகளைக் கேட்பார்கள்; அல்லது அவருடைய பொதுக் கச்சேரி நிகழ்ச்சிகளுக்குமே வருகை புரிந்தனர். எகிப்திய அரசர் ஃபரூக் 1, 1944-ல் இவருக்கு, அரச குடும்பத்துக்கும் அரசியல்வாதிகளுக்குமே அளிக்கப்படும் தேசத்தின் மிக உயர்ந்த விருதை அளித்தாராம்.
எளிமையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்த உம் கல்தும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை விரும்பவில்லை; தனது இசை நிகழ்ச்சிகளைத் தவிர பொது இடங்களில் பிறர் காணத் தோன்ற மாட்டார். அஹமது ராமி என்ற கவிஞர் உம் கல்தும் பாடுவதற்காக 137 பாடல்களை எழுதினார். பிரெஞ்சு இலக்கியத்தையும் இவருக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் அராபிய இலக்கியத்திலும் உம் கல்தும் தேர்ச்சி பெற்றிருந்தார். அராபியக் கலை அரங்கில் தனது வெற்றிகளைத் தொடர்ந்து பெற்றார் உம் கல்தும்.
உணர்ச்சி மயமாகப் பாடல்களைப் பாடுவதில் அவருக்கு இணையாக ஒருவரும் இல்லை. குரலை நன்கு பழக்கித் தன் வசப்படுத்தி வைத்திருந்தார் உம் கல்தும். இதனால் பாடலாசிரியர்களும், இசையமைப்பாளர்களும் இவருடன் இணைந்து பணியாற்ற விரும்பினார்கள். மெல்ல மெல்ல, சாஸ்திரீய, மத சம்பந்தமான பாடல்களிலிருந்து தனது பாடல் முறையினை எல்லா மக்களும் விரும்பும் இசையாக மாற்றிக் கொண்டு அரபு நாட்டு ரசிகர்களின் ஈடு இணையற்ற அபிமானத்தைத் தனதாக்கிக் கொண்டார் உம் கல்தும்.
அராபிய -இஸ்ரேலி குழப்பத்தின் போது பாதிக்கப்பட்ட படைவீரர்களுக்காக அவர்கள் வேண்டிக் கேட்ட ஒரு பாடலைப் பாடி மகிழ்வித்தார். அதிபர் நாஸர் இவருடைய முக்கியமான விசிறிகளில் ஒருவர். எகிப்திய ராணுவ சேவைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தவர் உம் கல்தும்.
எத்தனையோ புகழ் பெற்ற கவிஞர்கள் இவருக்காகப் பாடல்களை எழுதிக் கொடுத்தனர். அரபு நாட்டவரும், எகிப்து நாட்டவரும் மிகவும் விரும்பும் காதல், சோகம், துயரம் ஆகிய உணர்வுகளை அபரிமிதமாக வெளிப்படுத்தும் பாடல்களைப் பாடுவதில் சிறந்து விளங்கி ரசிகர்கள் அனைவரின் அபிமானத்தையும் பெற்றிருந்தார்.
‘எந்தே ஓம்ரீ’ ( என்னுயிர் நீயல்லவோ) என்ற அவரது பாடல் உலகப் புகழ் பெற்றது. இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். எகிப்தியர்களும், அராபியர்களும் இவரைக் கிழக்கு நாடுகளின் ஈடு இணையற்ற இசைக் கலைஞராகக் கருதினார்கள். இன்றளவும் இவர் அந்நாட்டு மக்களிடையே ஒரு உயர்வான தேவதை ஸ்தானத்தை வகிப்பவராக உள்ளார். இன்றும் கூட இவருடைய இசைத் தட்டுகளும் குறுந்தகடுகளும் மிக அதிகமாக விற்பனையாகின்றன.
1975-ல் உம் கல்தும் மரணமடைந்த போது அவரது இறுதி ஊர்வலத்தில் அதிபர் நாஸரும் கூடக் கலந்து கொண்டார். ஆயிரக் கணக்கில் ரசிகர்கள் குழுமி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அவரைப் பற்றிய, மியூசியம், அவருக்காக பெரிய ஒரு சிலை, நினைவுச் சின்னம், அத்தனையும் எகிப்தில் உள்ளதாம்.
இத்தனையையும் அறிந்து கொண்டபின், அவருடைய இசையின், அந்தக் குரலின் அழுத்தத்தையும், அதில் வழிந்து நிறையும் உணர்ச்சியையும் அனுபவிக்கும் போது, ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா,” என பாரதியாருடன் சேர்ந்து பாடத் தான் தோன்றுகிறது.

oOo

பி.கு.: என்னை உம் கல்துமின் இசைக்கு அறிமுகப்படுத்தியது ‘நடியாவின் பாடல்,’ எனும் நாவல்- ஸொஹேர் கஷோக்கி எழுதியது. அற்புதமான நாவல். இது பற்றிய விமரிசனத்தை ஒரு கட்டுரையில் படிக்கலாம்! பின்பு இந்த நாவலை வாங்கிப் படிக்கும் வாய்ப்பை இழக்காதீர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.