அர்ஜுன்

mahaswetadeviமஹாஸ்வேதாதேவி
1926ம் ஆண்டு டாக்கா (இன்றைய வங்கதேசத்தின் தலைநகரம்) வில் பிறந்த மஹாஸ்வேதா தேவியின் பெற்றொர் இருவருமே  எழுத்தாளர்கள். கொல்கத்தா பலகலைக்கழகத்தில் முதுகலைப் படிப்புக்குப் பின் ஆசிரியராகவும் , பத்திரிகையாளராகவும் பணி புரிந்துகொண்டே  தன் எழுத்துப் பணியில் ஈடுபட்டு வந்தார். வங்காள மொழியில் இவர் 100 புதினங்களும்  20 தொகுப்புக்களாய் வந்துள்ள சிறுகதைகளையும்   எழுதியுள்ளார். 1995-ம் ஆண்டில் ஞானபீட விருது பெற்ற  இவருக்கு அதற்கடுத்த ஆண்டில் ஆசியாவின் உயர்ந்த விருதான மக்ஸேஸே விருதும் வழங்கப்பட்டது.
நான் பெண்களுக்காக மட்டும் எழுதவில்லை.சாதிப் பிரிவுகள்,சுரண்டல் பற்றியே என் எழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் சமூகப் பிரக்ஞை வேண்டும். . உண்மை வரலாறு என்பது சாதாரண மனிதர்களின் உருவாக்கம்தான்.  நாட்டுப் பாடல்கள் ,தொன்மை ,பழமை என்பவை சாதாரண மக்களால் தான் பரவுகிறது.மீள் பார்வை அடைகிறது.சுரண்டப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளப் பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளாத மனிதர்கள். அவர்கள் தான் எனது எழுத்துக்களுக்கு பலம். இம் மனிதர்களைப் பற்றிச் சொல்ல ஏராளமான வியக்கத்தகு செய்திகள் உண்டு. எனக்கு நன்றாகத் தெரிந்ததை விட்டு விட்டு வேறு ஒன்றை நான் ஏன் தேட வேண்டும்? சில சமயங்களில் என் எழுத்தே அவர்கள் தான் என்று தோன்றுகிறது என்று பொதுவாக தன்னைப் பற்றி குறிப்பிடுகிறார்.
 

அர்ஜுன்

ஆவணி முடிந்து புரட்டாசி வரப் போகிறது.அத்தனை குளிர்ச்சி இல்லாவிட்டாலும் சூரியனின் வெம்மை வந்தால் போதும் என்றிருந்தது. பிஶால் மகதோவின் பண்ணை வயல் நேற்று அறுவடை செய்யப் பட்டது. நேற்று முழுவதும் அறுவடை செய்தவர்கள் ,தானியம் பொறுக்குபவர்கள், கீது செபர் என்று அனைவரும் வயல்களில் பரவி இருந்த நெல்லை பொறுக்கினர். கீதுவுக்கு இப்போது உடல் வலியைப் போக்கவும், சூடு பரவவும் சிறிது கள் தேவைப்பட்டது. அப்போது அந்த ஆசை பொருத்தமற்றது என்றாலும் அதை நினைத்துப் பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று சமாதானம் செய்து கொண்டான்.
sv-ws-logo copyமனைவி மொகோனி அப்போது அவனுடன் இல்லை. கீது அடிக்கடி சிறைக்குப் போவான். எனவே அவன் இல்லாத நேரங்களில் மட்டுமே அவள் வயலுக்கு வருவாள்.அவன் செய்த குற்றம் மகதோவிற்காக காட்டை அழித்ததுதான். கீதுவிற்கும் இதற்கும் தொடர்பில்லை. ராம் ஹல்தார் கொடுத்த வேலையை அவன் செய்தான். வெட்டப் பட்ட மரங்களில் இருந்து கிடைத்த லாபத்தை ஹல்தார் சம்பாதித்துக் கொண்டான்.  கீதுவும் ,மற்ற வர்களும் ஜெயிலுக்குப் போனார்கள். ஆனால் அவனால் என்ன செய்ய முடியும்? நாளின் இறுதியில் நான்கு துண்டுகள் — மரத்தை வெட்டினாலும், மனிதர்களை வெட்டினாலும் .. இன்னும் சொல்லப் போனால் மனிதனை வெட்டுவது சுலபம் தான் . ஏன் யாரும் அவனிடம் அதைச் சொல்வதில்லை என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். அதனால் அவனுக்கு முழு நான்கு ரூபாய் கிடைக்குமே. ஐயோ ! அந்த அர்த்தத்தில் நான் சொல்லவில்லை என்று உடனடியாகத் திருத்திக் கொண்டான்.
அந்த சங்கடமான தன் நிலையைப் பற்றி அவன் கேள்வி கேட்டுக் கொண்டது கூட இல்லை. புருலியாவில் சபர் பழங்குடியாகப் பிறந்திருந்தால் கண்டிப்பாக மரங்களை வெட்டியாக வேண்டும்.  ஜெயிலுக்குப் போக வேண்டும்.வேறு வழியில்லை. ஒரு கீது ஜெயிலில் இருக்கிற போது வெளியில் வேறு ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்றால் ஹல்தாருக்கு இன்னொரு கீது கிடைப்பான். ஒரே இழப்பு அந்தக் குடும்பப் பெண் வேலைக்குப் போக வேண்டி இருக்கும்.
வனத்துறைக்குச் சொந்தமான மரங்களை வெட்டியதால் கடந்த முறை கீது ஜெயிலுக்குப் போனான். மொகோனி வேலைக்குப் போக வேண்டி இருந்தது.  என்ன நடந்தது என்று யாருக்குத் தெரியும்? தவிர்க்க முடியாத அந்தச் சூழலில் கீது காலியான குடிசைக்கு வரவேண்டிய நிலையை ஏற்க முடியாது.  மனமும்,உடலும் கள்ளைத் தேடியதில் அதிசயம் இல்லை. கொஞ்சம் போதை கொஞ்சம் மறதி ….நினவுகளில் தன்னை இழந்த போது பிஶால் மகதோ தடுத்து நிறுத்தினான். ”உனக்கு ஒரு வேலை இருக்கிறது” என்றான்.
“ஓட்டுக்கள் சம்பந்தப்பட்டதா பாபு?”
“இல்லை.இல்லை. எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. நான் யாரை நினைக்கிறேனோ அவரைத்தான் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். மாட்டார் களா?”
ஹூம் பாபு.”
“ராம் ஹல்தார் உன்னிடம் என்ன சொன்னான்?”
“நீங்கள் சொன்னதைதான்.”
“உன் பதில் என்ன”
“உங்களுக்குச் சொன்னதுதான்”
“இது என்ன பதில்?”
ஐயோ!  நான் ஒரு முட்டாள் பாபு”
“பரவாயில்லை. நீ எனக்கு ஒரு வேலை செய்ய வேண்டும். செய்வாயா?”
ராம் ஹல்தாரும் மதோவும் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள்.  கீதுவுக்கும்,அவன் சகாக்களுக்கும் இருவரும் ஒரே மாதிரியானவர்களே.  அவர்கள் அருகே இருக்கும் போது செவிடாக இருக்க வேண்டும். அந்த இடத்தில் வாழ வேண்டுமானால் இந்த இரு தெய்வங்களையும் மகிழ்ச்சிப் படுத்த வேண்டும். யாரால் தைரியமாக இவர்களிடம் இல்லை என்று சொல்ல முடியும்? சபர்கள் இன்றியமையாதவர்கள் என்று இருவருக்கும் தெரியுமே. அவர்கள் ஜெயில் சாதனை படைத்தவர்களாயிற்றே.!
கீதுவுக்கு இப்போது வேகம் ஏற்பட்டது.  தேர்தல்கள் வரப் போகின்றன.  மீட்டிங்குகள்,மேடைப் பேச்சுகள் என்று மகதோ ஓய்வு இல்லாமல் இருக்கிறான். ஓட்டுக்கள் பற்றிய பேச்சு இல்லை என்றால் வேறு எதுவாக இருக்க முடியும்? எதுவாக இருந்தாலும் அது முறையில்லாத ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.
“நீ அர்ஜூன் மரத்தை வெட்ட வேண்டும்” என்றான் பிஶால் மகதோ
“ஏன் பாபு” நடுக்கமாகக் கேட்டான்
“நான் சொன்னதைச் செய்”
“என்னை விட்டு விடுங்கள் பாபு.  நான் இப்போதுதான் ஜெயிலில் இருந்து வந்திருக்கிறேன் பாபு”
“நான் இப்போது உன்னை அனுப்ப வேண்டும் என்றால் உன்னால் தடுக்க முடியுமா”
“இல்லை”
“இது ஹல்தாரின் சம்பந்தம் போல் இல்லை. அவனுடைய முறையற்ற செயல்களினால் தான் நீ ஜெயிலுக்குப் போனாய். அரசுக்குச் சொந்தமான சாலையில் உள்ள மரத்தை நான் வெட்டச் சொன்னால் யாருக்கு உன்னைக் கைது செய்ய தைரியம் வரும்?”
கீதுவின் மனம் வெறுமையானது.  இதைப் பற்றி அவன் யோசிக்கவில்லை. ஆனால் அது உண்மை. ராம் ஹல்தாருக்காக உழைத்தால் உடனடியாக ஜெயில். இன்னொரு முறை ஜெயிலுக்குப் போக நேரலாம். ஆனால் பிஶால் பாபுவின் வார்த்தைகள் சட்டம். அவன் உண்மையில் நாட்டையே நிர்வாகம் செய்கிறான்..அரசு சாலையில் அந்த மரம் இருக்க்க் கூடாது என்று அவன் சொன்னால் யாரால் உன்னை ஜெயிலுக்கு அனுப்ப முடியும்?
அவன் மனதில் ஒரு திட்டம் உதித்தது.”பாபு. ஓட்டுக்களை வாங்க நீங்கள் இங்கு சாலை போடப் போகிறீர்களா?”
“ ரோடா? இங்கா? உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? இந்த முப்பது வருடங்களில் அது நடக்கவில்லை. இனியும் அது நடக்காது. எனக்கு அந்த மரம் வேண்டும்”.
“முழு மரமுமா”?
“ஆமாம். முழுவதும்தான்.”
“எப்படி அதைப் போக்குவரத்து செய்வீர்கள்?”
“வேறெப்படி?ராம் ஹல்தாரின் வண்டியில்தான்.”
பூமி காலைக்கு விடை கொடுத்து இரவை வரவேற்கும் ஓர் அற்புதமான நேரம் அது. பந்திகியின் வயல்களில் இருந்து முற்றிய நெல் மணத்தைச் சுமந்தபடி காற்று பரவியது. ஆனால் கீது இது எதுவும் அறியாதவனாக இருந்தான் மகதோவின் வேண்டுகோள் அவனை அதிர்ச்சியாக்கி இருந்தது. நெஞ்சின் மீது பெரிய பாறாங்கல்லை வைத்தது போல இருந்தது. அறுவடைப் புரட்சியின் போது சந்திரா சந்த் இந்த வகையான உணர்வைத்தான் அடைந்திருக்க வேண்டும். மிகக் கனமான கல்லோடு அவனைச் சேர்த்து ..அந்த கனம் ..பயமுறுத்துகிறது.
மகதோவும், ராம் ஹல்தாரும் வேறு வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் . வார்த்தையால் மட்டுமே அவர்கள் எதிர்க்கட்சியினர்கள். அந்த மாவட்டத்தின் எல்லையில் ஒருவர் பஞ்சாயத்து நடத்துகிறார். இன்னொருவர் ஒரு மில் வைத்து உள்ளார். ஒருவர் அர்ஜூன் மரத்தை வெட்டச் சொன்னால் மற்றவர் மகிழ்ச்சியோடு அதை வேறிடத்திற்கு எடுத்துச் செல்வார்.
ஹே! அந்த மரத்தைக் காப்பாற்ற முடியாது. ஜமீன்தார் பகுதியில் அது ஒரு மரம் தான் பந்திகி காடுகளில் காப்பாற்றப் பட்டு இருந்தது. கீது மற்றும் அவனது சகாக்களின் மத்தியில் அது இன்னமும் பழைய நினைவுகளை மலர வைத்துக் கொண்டிருந்தது.
அந்த காடுகள் பெயரளவில் மட்டும் காடுகள் இல்லை.சபர்கள் காட்டு வாசிகள்,  அங்கு வசிப்பவர்கள்.ஒரு காலத்தில் ஒரு வழிப் போக்கனைப் பார்த்து விட்டாலோ, புதிய சத்தம் கேட்டு விட்டாலோ காடுகளின் இருட்டுக்குள் பதுங்கிக் கொள்வார்கள் முயல்களைப் போல. அதனால் தானோ என்னவோ அவர்கள் சென்சஸ் ரெக்கார்டுகளில் கிடீயா சபர்கள் என்று பதிவு செய்யப் பட்டார்கள்
மூத்த பழங்குடியினர் இன்னமும்அர்ஜூன் மரத்தை பூஜிக்கின்றனர். அதைக் கடவுளின் அவதாரம் என்று நினைக்கின்றனர். இப்போது கீது அதன் மரணத்துக்குக் காரணமாக வேண்டும்.
“சரி பாபு.அதை நான் வெட்டி விடுகிறேன்.”கீது சொன்னான். பத்து ரூபாய்காக கையை நீட்டினான்.
எவ்வளவு மோசமான மாலை இது. அவன் கேட்டதுகூடக் கிடைத்து விட்டது.
’போ.போய்க் குடி.” மகதோ சொன்னான்.’”இது நீ தனியாகச் செய்யக் கூடிய வேலை இல்லை.ஜெயிலில் இருந்து விடுதலையானவர்களை எல்லாம் கூட்டிக் கொண்டு வா. உங்கள் எல்லோரையும் நான் கவனித்துக் கொள் கிறேன்.
ராம் ஹல்தாரின் வியாபாரம் ஒன்றிரண்டு மரங்களோடு நின்று விடுவதில்லை.முதலில் அவன் ’காடுகளைப் பாதுகாப்போம் ’என்று போஸ்டர்கள் ஒட்டுவான். பிறகு காடுகளைச் சூறையாடுவான். அரிவாள் கொண்டு வெட்டின கைகளை கடிகாரங்களாலும், டார்ச்சு லைட்களாலும், ரேடியோக்களாலும், சைக்கிள்களாலும் அலங்கரிப்பான். தவிர அளவில்லாமல் கள்ளும் தருவான் . ஒவ்வொருவரின் தகுதிக்கும் செயலுக்கும் தகுந்தபடி.. அப்பாவியாக இருந்தாலும், முரடனாக இருந்தாலும் சபர்கள் கண்டிப்பாக காட்டு இலாகா போலீசார்களால் தண்டிக்கப் படுவார்கள்.
மகதோ அவர்களுக்குத் தருவது அதிகம்தான். யார் தருவார்கள் அப்படி?
“சரி.நான் ஒரு மீட்டிங்குக்க்காக டவுன் வரை போகிறேன். சில போஸ்டர் களைக் கொண்டு வர வேண்டும். சுவர்கள் இல்லாமல் எப்படி ஒருவனால் பிரச்சாரம் செய்ய முடியும்?
“எனக்கும் வாங்கி வாருங்கள் பாபு”
எதற்கு? அவைகளை ஒட்டுவதற்கு உனக்குச் சுவர்கள் இருக்கிறதா?
“இல்லை .இல்லை. நான் தூங்கும் போது அவைகளைத் தரையில் விரித்துக் கொள்வேன்.அப்போது எனக்கு குளிர் நடுக்கம் தெரியாது”
“சரி.சரி.இரண்டு மூன்று நாட்களில் மரத்தை வெட்டப் பார். நான் வந்த பிறகு அதை அனுப்பி விட வேண்டும்.”
“அந்த அர்ஜூன் மரத்தையா பாபு?”
“ஆமாம். ஆமாம்.அதுதான். அது ஒரு அருமை உயிரின் மரணம் போலத் தான்.” குரங்குக் குல்லாய் போட்டிருந்த மகதோ சொல்லி விட்டு இருட்டில் மறைந்தான்.
கீது ஆழமான சிந்தனையில் இருந்தான். பானாமலி, டிகா .பீதாம்பர் என்று தன் நண்பர்களைப் பார்க்கப் போனான். அவர்களால் ஏதாவது இதற்கு சரியான முடிவு தர முடியுமா என்று அறிய.
அவன் கையில் கள் இருந்த்தால் அவர்கள் அவனை அன்பாக வரவேற் றனர். அனைவரும் கையில் அரிவாள் வைத்திருந்தனர். எல்லோரும் அப்போது தான் ஜெயிலில் இருந்து வந்தவர்கள். கையில் அரிவாள் வைத்திருப்பவன் கண்டிப்பாக ஜெயிலுக்குப் போக வேண்டும்.  அதுதான் அந்த மண்ணின் சட்டம். பங்குரா மற்றும் புருலியா பகுதிகளில் ராம் ஹல்தார் பங்களாக்கள் கட்டுவது போலத்தான் இது. அதுதான் விதி. எப்படி அவர்களால் அதை மாற்ற முடியும்?
“என்னை யோசிக்க விடு “என்றான் டிகா . அவர்களிடையே அவன் சிறிது மதிப்பிற்கு உரியவன். முறை சாராக் கல்வியில் நான்கு முழு நாட்கள் அவன் பள்ளிக்குப் போனவன். அரிச்சுவடி கற்றவன்.
அந்த நான்கு சபர்களும் சிந்தனையிலும் , குடியிலும் ஆழ்ந்தனர். பண்டிகை நாட்களிலும்,திருவிழாக்களின் போதும் அவர்கள் அர்ஜூன் மரத்தைச் சுற்றி ஆடிப் பாடியவர்கள். தங்கள் ஆசை நிறைவேறிய பிறகு பழங்குடியினர் முடியைக் காணிக்கையாக அந்த மரத்தின் அடியில் புதைப்பார்கள். டிகாவின் அப்பா கூட அந்த மரத்திற்கு மருத்துவ குணம் இருப்பதாகச் சொல்லி இருக்கிறாரே!
“பத்னா ஜகோரன் விழாவின் போது மாடுகள் நடனத்திற்காக சந்தால்களும்கூட வருவார்களே”  குடி போதையோடு பீதாம்பர் சொன்னான்.
என்ன கொடுமை இது? மரத்தை வெட்டு.  ஜெயிலுக்கு போ:  மரத்தை வெட் டாதே அப்படியும் ஜெயிலுக்குப் போவாய். சபர்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த பந்திகி கிராமம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. இப்போது அது காட்டிலாகாவின் கீழ் இருக்கிறது. ஆனால் சபர்களுக்குத்தான் எந்த உரிமையும் இல்லையே.
“நாம் மட்டும் ஏன் அந்த குற்றத்திற்கு ஆளாக வேண்டும்? சபர்கள் மட்டும் ஏன் பொய்யான வழக்கில் பிடிபட வேண்டும்? நான் மற்றவர்களிடம் சொல்லப் போகிறேன். அவர்களும் அந்த அர்ஜூன் மரத்தைப் பூஜிப்பவர்கள்தான்..என்ன சொல்கிறீர்கள்? என்று சிறிது யோசனைக்குப் பின்பு டிகா சொன்னான்.
எவ்வளவு காலமாக அர்ஜூன் அங்கே இருக்கிறதோ யாருக்குத் தெரியும்? இவ்வளவு காலமாக யாரும் அதை கவனித்த்தில்லை. உலகம் தோன்றினது முதல் உலகம் இருக்கிற வரை இருப்பது போல .. ஆனால் இப்போது திடீரென அது எல்லோருக்கும் முக்கியமானதாகி விட்டது. அவர்களின் இருப்பைக் காட்டும் அடையாளம் போல.
காட்டிலாகா காடுகளை மட்டும் கட்டுப்படுத்துவதில்லை. அங்குள்ள நிலங்களையும் தான். சபர்கள் எங்கே போவார்கள்? இடத்திற்கு இடம் மாறி அலைந்து கொண்டு.. எங்கெல்லாம் பசுமையைப் பார்க்கிறார்களோ அங்கே தங்கி விடுவார்கள். அப்புறம் காடு மறையத் தொடங்கி வெறும் தரிசு நிலம் விற்கப் பட்டு விடும். திரும்பவும் சபர்கள் வீடில்லாமல் தவிப்பார்கள்.  அர்ஜூன் மரம் இளமையாக இருந்தபோதேஅவர்கள் வேட்டைக்குப் போவதற்கு முன்னால் பிரார்த்தனை செய்து விட்டுப் போவார்கள். மின்னும் மரக்கிளை உச்சி வானத்தைத் தொடுகிறது. பௌர்ணமி நாட்களில் மரமும்,நிலா வெளிச்சமும் ஒன்றே போலத் தெரியும். சித்திரை,வைகாசிகளில் இலைகள் பரவி அது மாதிரியான அழகைக் கொடுக்கும். அது அவர்களைப் பொறுத்த வரை மிகப் பெரிய அற்புதம். எவ்வளவு காலமாக அந்த் அர்ஜூன் மரம் நம்மைக் காப் பாற்றிக் கொண்டு இருக்கிறது. அந்த ஒரு மரம் தான் நமக்கு முழு காடு.   குடும்பங்கள் காட்டின் குழந்தைகள். இப்போது மகதோ அந்த மரத்தை விரும்பு கிறானே “பீதாம்பர் கேட்டான்.
“நாம் என்ன செய்வது?எல்லாம் மகதோவுக்கும், ராம் பிரபுவுக்கும் தான் சொந்தம்”
“நாம் குடிசைகளைக் கட்டுகிறவரை அர்ஜூனின் கீழ்தான் வாழ்ந்தோம். அப்புறம் தான் மகதோ நமக்கு நிலம் கொடுத்து குடிசைகள் கட்டினோம்.” பீதாம்பர் சொல்லிக் கொண்டு போனான்.
“ஹல்தார்   குடிசைகளை எரித்த பிறகு சந்தால்கள் அடைக்கலம் தேடி இங்கு வரவில்லையா’  டிகா குறுக்கிட்டுச் சொன்னான். ஒவ்வொருவரும் அர்ஜூன் மரம் பற்றிய கதைகளை ஞாபகப் படுத்திக் கொண்டு பேசி னார்கள். தங்கள் வாழ்க்கையும்,விதியும் அர்ஜூனோடு அசைக்க முடியாத பந்தம் கொண்டிருப்பதை உணர்ந்தனர்.  சமூகமும்,அமைப்பும் செயல்பாடும் தொடர்ந்து பழங்குடியினரைச் சுரண்டியும், எதையும் புரியாமல் செய்தும் வந்திருக்கிறது . இப்போது அதே விதி அவர்களின் கடைசி இருப்பை, அடையாளத்தை அழிக்கிறது.
பிஶால் பாபு டவுனுக்குப் போகிறான். போவதற்கு முன்னால் அவனிடமிருந்து பணத்தை நாம் வாங்கி விட வேண்டும் “என்று டிகா சொன்னான்.
“அப்படியானால் நீ மரத்தை வெட்டப் போகிறாயா?”
“மரத்தை வெட்ட ஐந்து பேர் வேண்டும்.நாம் நூறு ரூபாய் கேட்போம்.என்ன சொல்கிறீர்கள்”
“நீ ஜெயிலுக்குப் போக வேண்டி இருக்கும்.”
ஜெயிலுக்கு அடிக்கடி போகும் நிலை, சமுதாயம் தொடர்ந்து அவர்களைச் சுரண்டுவது ஆகியவை அவர்களுக்கு தங்கள் உண்மை உணர்வுகளையும் நோக்கங்களையும் மறைக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது. மகதோவுக்குக் காட்டும் வகையில் ஒரு முகமும், மற்றொரு முகம் அவர்கள் மட்டும் அறிந்ததாகவும் இருக்கிறது .ஆங்கிலேயர் காலத்தில் சபர்கள் மட்டும் தான் போலீஸ் நிலையங்கள், செக் போஸ்டுகள் ஆகியவறை எரிக்க நம்பப் பட்டவர்கள். இன்று பாபுக்கள் அவர்களை நம்பி உள்ளனர்.  நில ஆக்கிரமிப்பு, பயிர் திருட்டு, பிணங்களை அப்புறப்படுத்துதல் அரசுக்குச் சொந்தமான காடுகளை சுத்தம் செய்வது என்று இன்று பாபுக்கள் அவர்களை நம்பி உள்ளனர்.
“ஒரே ஒரு மரத்தை வெட்டியதற்காக ஜெயிலுக்குப் போகும் மடையனாக யார் இருப்பார்கள்?” டிகா கேலியாகச் சிரித்தான்.”நீங்கள் கவலைப் படாதீர்கள்”என்று மற்றவர்களிடம் சொன்னான். ஜம்ஷெட்பூர், சாங்பசா, மேதின்பூர். பங்குரா மாவட்டங்களில் உள்ள ஜெயில்களுக்குச் சென்று இருக்கிறான். அவனுக்கு அரிச்சுவடி தெரியும்.
பிஶால் பாபு திரும்பி வருவதற்குள் மரம் வெட்டும் வேலை முடிந்து விடும் என்று அவனுக்கு உறுதி தரப்பட்டது.”நீங்கள் உங்கள் தேர்தல் மீட்டிங்குகளை பயமில்லாமல் செய்யுங்கள். எங்களுக்கு பணம் கொடுங்கள்.நீங்கள் திரும்பி வரும் போது மரம் அங்கு இருக்காது.”
“ நடப்பது எதுவும் ஒரு குந்துமணி அளவு கூட ராம் பாபுவுக்குத் தெரிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.”
“ஏன் அவர் உங்களுக்கு லாரி தருவதாகச் சொல்லி இருக்கிறாரே?”
“ஆமாம். பிகு செய்து கொள்கிறான்.தவிர இது எந்த வெளியாட்களுக்கும் இது தெரியக் கூடாது.”
“சரி பாபு” மேலோட்டமாக அரசியல்வாதிகள் விதவிதமான கொடிகளை ஏற்றலாம். உள்ளுக்குள் அவர்கள் பாலில் உள்ள சர்க்கரை போன்றவர்கள். பிஶால் பாபு நீங்கள் முட்டாள்களான சபர்களுக்கு பல பாடங்கள் கற்றுத் தந்து விட்டீர்கள் இல்லையா? முறைசாராக் கல்வி என்பார்களே!
பொதுக் கூட்டங்களில் இரு கட்சித் தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் மிக மோசமாகப் பேசிக் கொள்வார்கள். கட்சி உறுப்பினர்களுக்கு இது புரியாது. முறை தவறிய பேச்சு, சிறு சண்டைகள், அபூர்வமான இரத்தச் சிந்தல்கள் எல்லாம் அரசியல் அமைப்பில் ஒரு பிரிவுதான். அர்ஜூன் மரத்திற்காகவும் அப்படி ஏதாவது சண்டை இருந்தாக வேண்டும். உண்மையில் ராம் ஹல்தாரை எவ்வளவு பேர் ஆதரிப்பார்கள்.முழு கிராமமும் மகதோவின் அதிகாரத்திற்கு உட்பட்டது.
ஒரு சின்னக் குறிப்பு நகரத்தில் அதிகக் கோபத்தை ஏற்படுத்தி விடுகிறது என்று மகதோ நினைத்தான். பொது இடங்களிலும்,மார்க்கெட்டுகளிலும் கலந்து கொண்டு பேச வேண்டியவை இருந்தன. டவுனில் பல வேலைகள் கவனத்தில் வைக்கப் பட வேண்டியதாக இருந்தன. மொபெட் வண்டியின் விளக்கை ரிப்பேர் செய்வது புதிய லாந்தர் வாங்குவது,மனைவிக்கு புதிய கம்பளி, மருந்துகள் என்று எல்லாவறையும் முடித்துக் கொண்டு மகதோ பந்திகி வந்தான்.வோட்டுக்கள் பற்றிய பிரச்னை முடிந்து விட்டது.கடவுளே!
எப்போது கிராமத்திற்கு சரியான ரோடு போடுவார்கள். வழுக்கும் வழிகள் சமமற்ற சாலை என்று யோசித்துக் கொண்டு போனான். கிராமத்தை அடையும் போது தலை சுழன்றது.
நீல வானத்தின் பின் புலத்தில் அர்ஜூன் மரம் கம்பீரமாக நின்றது. அந்த கிராமத்திற்கு பாதுகாவலன் போல.
ஒரு காலத்தில் இந்த நிலம் நூற்றுக் கணக்கான படை வீரர்களால் பாதுகாக்கப் பட்டது. ஒவ்வொருவராக மறைந்துபோய் இப்போது யாரும் இல்லை. இப்போது அந்த அர்ஜூன் மரம் மட்டும் அவனுடைய புறக்கணிக்கப் பட்ட நிலத்திற்குப் பாதுகாப்பாக..
மகதோவிற்கு ஒரு பழமொழி நினைவிற்கு வந்தது.”அர்ஜூன் மரத்தின் இலைகள் ஒரு மனிதனின் நாக்கைப் போன்றது.” அந்த இடத்தைச் சுற்றிலும் தூள்..  தமதம் .. சப்தம்.. வெறி அடைந்த மகதோ கிராமத்திற்குள் போனான். அர்ஜூன் மரத்தைச் சுற்றி பெரிய கூட்டம் கூடி இருந்தது. அதனுடைய அடிமரம் பெரிய மாலைகளால் சுற்றப்பட்டு இருந்தது.
ஹல்தார் கூட்டத்தின் நடுவில் எல்லைக் கோடு போல சைக்கிளில் நின்றி ருந்தான்.
“என்ன ஆயிற்று? மகதோ கேட்டான்.
“கிராம தேவதை அவர்களை இப்படிச் செய்யச் சொல்லியிருக்கிறது “ஹல்தார் சொன்னான்.
என்ன? எந்த மடையன் சொன்னான் அப்படி?
“டிகா ஒரு கனவு கண்டான். அந்தக் கனவில் நீங்கள் அவனுக்குப் பணம் கொடுத்து அடி மரத்தைச் சுற்றிலும் கான்கிரீட் போடச் சொன்னீர்களாம் .சர்கோல்,கேடியா ஹோகித் ,பூமிக் என்று எல்லாப் பழங்குடி மக்களும் காணிக்கை கொடுக்க இப்போது இங்கு கூடி உள்ளனர்.”
“கிராம தேவதைக்கா?”
“ஆமாம். கூட்டம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.உண்மையாகச் சொல்லப் போனால் ஒரு மேளா போலத்தான் இருக்கிறது. இவர்கள் முட்டாள்கள் என்று நாம் நினைத்தோம். ஆனால் அவர்கள் நம்மை முட்டாள் ஆக்கி விட்டார்கள் மகதோ”
மகதோ மேலே நடந்தான். தன் தோல்வியை முழுவதும் அறிய விரும்பியவன் போல.
என்ன வியப்பூட்டும் கூட்டம்?கீது பித்துப் பிடித்தவன் போல சுற்றி சுற்றி ஆடிக் கொண்டிருந்தான்.மத்தோவுக்கு திடீரென பயம் வந்தது. இந்த மரம்,மனிதர்கள் எல்லோரையும் அவனுக்குத் தெரியும். ஆனால் இன்று எல்லோரும் புதியவர்களாக….
பயம்… ஒர் அமானுஷ்யமான பயம் அவனுக்குள் பரவியது.

oOo

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.