அந்த டப்பா
– ப்ரதிபா நந்தகுமார்
எட்டவில்லை அட்டத்தில் இருக்கும் டப்பா
யார் எடுத்து வைத்தாரோ தெரியவில்லை
முக்காலி, ஏணி ஏதும் கிடைக்கவுமில்லை.
குள்ளருக்கு ஏற்றதில்லை இச்சமையலறை
உயரமாய் இருக்கவேண்டும். சுவர் கட்டை
சாமானை எட்டி எடுக்க
சமையல் மேடை போதும். தட்டுவது
சதா நுனிக்காலில் நிற்பது
முதுகை வளைப்பது
கம்பிமேல் நடப்பதுபோல தட்டுத்தடுமாறுவது.
ஏன்தான் கட்டினார்களோ
இத்தனை பெரிய சமையலறை
அத்தனை உயரத்தில் அட்டம். சுவற்றில் கட்டை.
பக்கத்திலிருக்கும் சின்ன அலமாரி போதாது
நூற்றெட்டுப் பொருட்களுக்கு.
மேடைக்குக் கீழ் அரிவாள்மணை
குழாய் மூலையின் கதகதப்பில்
பதுங்கிக் காக்கும் கரப்பான்பூச்சிகள்
சரக்கென விரையும் பல்லிகள்.
சதா சக்கரைதேடி ஊறும் எறும்புகள்
திறந்துவைத்ததை பறித்துப் போகும் எலிகள்
வாரக்கணக்கில் தொடப்படாமல்
புழுத்துப் போன மாவுகள்.
ஒருவழியாய் உபயோகிக்க
ஊறவைத்த பருப்புகள்
யாரோ தந்த வடாத்தூள்கள்
கற்கவென வாங்கி வந்த புது சமையல் வஸ்துக்கள்
அத்தனையையும் மீறி மேலே வைத்துவிட்டார்
அந்த டப்பா. அது அவசியம் வேணும் இப்போ
அவள் தப்பல்ல குள்ளமாய் இருப்பது.
நேரமாச்சென்று அவசரத்தில் விரட்டுகிறார்
“சமையல் இன்னும் முடியலையா?”
“ஆச்சு. இதோ பரிமாறுகிறேன்”
ஆனால் எட்டவில்லை அட்டத்தில் அந்த டப்பா.