அதே வீடு

தெற்குப் பார்த்த வீடு. மிகப்பழமையானது.. ஏழெட்டு தலைமுறைகளாக இந்தக்குடும்பத்தில் இருக்கிறது.  உள்ளே சில மாறுதல்கள் இருக்கலாம். வெளியிலிருந்து பார்த்தால் இராமானுஜர் காலம் போல தோன்றும்.  தேரோடும் வீதி. விசாலமானது. இந்த வீட்டின் பரப்பு  அறுபது அடிக்கு எண்பது அடி. ஒன்றரை அடி சுவர்கள். வெய்யில் காலத்தில் குளுமையாக இருக்கும். உள்ளே மண் சுவர்தானே! கல்யாண கூடம்.  அதை ஒட்டி விசாலமான பெருமாள் சந்நிதி.  இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சந்நிதியில் எழுந்தருளியிருப்பது ஸ்ரீநிவாசப் பெருமாள். இரண்டு கிணறுகள்.  அவற்றில் ஒன்று திருமடைப்பள்ளி என்று வைணவபரிபாஷையில் அழைக்கப்படும் சமையலறையில் இருக்கிறது. இதற்கு வெய்யில் படுவதற்காக அதற்கு நேர்மேல்   கூரையில் கம்பி போட்ட திறந்த சாளரம். இரவிலும், மழை பெய்யும்போதும் சாளரத்தை மூடுவதற்காக  நகற்றக்கூடிய கூடை போன்ற கூறை. இந்தக்கிணற்றில் தண்ணீர் தூக்கி ஆசாரமாகத்தளிகை. சமையலறைக் கதவைத்திறந்ததும் புறக்கடையில் நாற்பது கலம் கொள்ளும் களஞ்சியம்.  இந்த வீட்டினுள்தான் பத்து வயது மணப்பெண்ணாக ரங்கநாயகி காலடி வைத்தாள்.  குமுதினி என்னும் அற்புதமான எழுத்தாளராக, காந்தியவாதியாக, சமூக சேவகியாக, தமிழகப் பெண்ணியத்தின் விடிவெள்ளியாக வாழ்ந்து தன் வாழ்வினை அர்த்தமுள்ளதாகச்செய்துகொண்டது இந்த வீட்டில்தான். இதுவே திருவரங்கத்தில் அனைவரும் அறிந்த முதல் திருமாளிகை..
 
 
அதே வீட்டில் நான் இப்பொழுது குடியிருக்கிறேன்.  ஒன்றுமே மாறவில்லை என்று சொல்லலாம். அதனால் ஒவ்வொரு கணமும் என் மாமியார் குமுதினி அவர்களைப்பற்றி எண்ணிப்பார்க்கிறேன். அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு மாபெரும் சாதனைகளை புரிந்திருக்கிறார் என்று எண்ணும்போது என்னை மறந்துவிடுகிறேன். அப்படி இருக்ககூடாது, திரு ரவி அவர்கள் கேட்டு, நான் ஒப்புக்கொண்ட கட்டுரையை எழுதி முடிக்கவேண்டும் எனும் நினைவு வந்தபின் எழுதுகிறேன்.
sv-ws-logo copyகுமுதினி  (1905-1986) அவர்கள் தன்  வாழ்வில்  முரண்பாடுகளை எப்படி ஒருங்கிணைத்தார் என்பது எனக்கு இன்னும் ஆச்சரியமே.  அவர் மிகவும் ஆசாரம்.  கடைசிவரை அஸ்கா சர்க்கரை சேர்த்துக்கொள்ளவில்லை. காபி. முதலிய ஏதும் அருந்தியதில்லை. பால், அதில் வெல்லம், அவ்வளவுதான். எளிய உணவு.  ஆனால் அவர் அகம் நோக்கி  வருவோருக்கு அன்னம் இடுவதும் தவிர, அவர்களது ருசியைக்கேட்டு அதன்படி உணவிடுவார். வீட்டில் வந்து தங்கும் உறவினர்கள், நண்பர்களுக்கு ஒரே மாதிரி சமையல் தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்யக்கூடாது என்று என்னிடம் சொல்வார். தான் மற்ற இடங்களுக்குச்  சென்றாலோ அவர்களது சௌகரியப்படி தன் வேலைகளை அமைத்துக்கொள்வார்.
அவர் தீவிர காந்தியவாதி.  முரட்டுக்கதர் புடவையை மடிசாராக உடுத்துவார்! தேய்ந்த இரு பொன் வளையல்கள், திருமாங்கல்யச்சரடு, ஒற்றைக்கால் தோடு, மூக்குத்தி. அவரை என் சிறு வயதிலிருந்து  நாற்பதாண்டுகள்   பார்த்திருக்கிறேன்.  இந்த ஆடையிலும், அணியிலும் மாறுதலே கிடையாது. ஆனால் எங்களை தன்னைப்போல் இருக்கவேண்டும் என்று சொன்னதில்லை.
1970களில் துணிகளில் ஓவியம் (fabric painting) எனும் ஆர்வம் பரவியபோது தன் பெயர்த்திக்கு ஒரு பாவாடை அப்படி தானே வரைந்து கொடுத்தது மட்டுமின்றி, “என்னுடைய கலையை நீ ரசிப்பாயோ?” என்று கேட்டு ரோஜா வண்ணப் புடவையில் சிவப்பு ரோஜாமலர்களைத்தீட்டிப் பரிசளித்தார்.  புது நூல்கள், புதிய கலைகள், புதிய இடங்களுக்குப் பிரயாணம், புதிய சமையல் என்று அவருக்கு உத்சாகம் வரும்.  வாழ்வில் பட்ட ஏமாற்றங்களை, துயரங்களை மறப்பதற்கும, புத்துணர்ச்சி பெறுவதற்கும் அவர் கையாண்ட உத்தி போலும்.  அவருக்கு உண்மையான துணைவனாக, அவரது மனமறிந்து வாழ்ந்த என் மாமனார் ஸ்ரீ ஸ்ரீனிவாச தாத்தாச்சாரியாரை இங்கு நான் நன்றியுடன், வணக்கமுடன் குறிப்பிடுகிறேன்.
தன கணவரின் உதவியுடன் குமுதினி படித்தாள், வீட்டு வேலையை சுறுசுறுப்பாக, நெருவிசாகச்செய்து மாமியாரிடம் நல்ல பெயர் வாங்கினாள்.  கூட்டுக்குடும்பத்தில் நிறையக்குழந்தைகள்.  அனைவருக்கும் அவர்கள் உணவு அருந்தும்போது  கதைகள் சொல்வாள். இதுவே அவளது எழுத்துப்பட்டரையானது. அவள் இலக்கிய உலகில் காலடி எடுத்து வைக்க உதவியது. ௨௨வயதில் இரு குழந்தைகளுக்குத் தாய் ஆகிவிட்டாலும், ஒரு கணத்தைக்கூ’ட வீணாக்காமல் தமிழ், ஆங்கில, சமஸ்கிருத நூல்களைப்படித்து, தன அறிவாற்றலை வளர்த்துக்கொண்டாள்.


 
மொழிபெயர்ப்பு; கதைகள்; புதினம்; சமூகவியல்; உளவியல்; நாடகங்கள்  என்று அவரது எழுத்துக்களில் பல கோணங்கள்.  அனைத்திற்கும் அந்தர்வாகினியாக மெல்ல, மெல்ல  நடந்தது அவரது நகைச்சுவை. கூட்டுக்குடும்பத்தில் வாழும் பிரச்சினைகளில் மனத்தை அலைபாய விடாது அவற்றை நகைச்சுவை உணர்வுடன் அவர் எதிர் கொண்டது, அவரது எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்  A Suitable Boy என்று விக்கிரம் சேத் எழுதிய ஆங்கில நாவலை நாம் படித்துச்சிரித்தது நினைவிருக்கலாம். அதற்கு கால்நூற்றாண்டிற்கு முன்னரே குமுதினி அவர்கள் அந்த மாப்பிள்ளை தேடும் படலத்தை அற்புதமான நாடகமாக எழுதி மேடை ஏற்றிவிட்டார்!  அதுவும் தன் கணவருக்கு எண்பதாவது பிறந்தநாள் பரிசாக!  இதுவே புத்திமதிகள் பலவிதம்.
அன்று நான் அரங்கில் அமர்ந்திருந்தேன். சதாபிஷேக வைபவம் முடித்த அசதி.  உற்றார், உறவினர், கூடிப்பேச்சு.  திடீரென்று எல்லோரும் மௌனமாகிவிட்டோம்.  அவ்வளவு ரசமாக மேடையில் பேச்சு.  புராண கதாநாயகிகள் இன்றைய பெண் ஒருத்திக்கு புத்திமதி சொல்கிரார்களாம். ஐ.ஏ.எஸ்?  ஆடிட்டர்?  துபாய் எஞ்சினியர்?  யாரை மணப்பது?  சீதைக்கும் சந்திரமதிக்கும் மிகவும் சுலபமாக சொல்லமுடிகிறதாம்.  தந்தை சொல்வதைக்கேட்கும் மாப்பிள்ளை வேண்டாம்! உண்மை பேசும் மாப்பிள்ளை வேண்டாம்! அரங்கில் ஒரே சிரிப்பலைகள் (ஆண்கள் உட்பட). 
சகுந்தலை மேடையில் தோன்றுகிறாள்.  அடி கீதா!  மறதி உள்ளவனுக்கு  மணமாலை சூட்டிவிடாதே

“தபாலைப் போட்டீரோ? மறந்தேவிட்டேன்
தக்காளி எங்கே மறந்துபோச்சு
காபிப் பொடி எங்கே வாங்க மறந்தேன்
காலின் செருப்பு மறந்து விட்டேன்
மருந்து சாப்பிட மறந்தே விட்டேன்
…மாசச்செலவு கொடுக்கலை உனக்கு?
பெட்டி எங்கே எங்கோ மறந்தேன்
பெண்டாட்டி யாரு? ஐய்யோ மறந்தேன்
மறந்து போறவர் வேண்டாம் அம்மா
மறந்து போறவர் வேண்டவே வேண்டாம்.”

 
இறுதியாக ​ ​ சாவித்திரி வந்து​ ‘கவலைப்படாதே. கணவனையும் ஒரு குழந்தையாக நினைத்துக் கொண்டு வாழ்க்கையை நிம்மதியாக நடத்து’ என்று விடுகிறாள். நாம் ஆண்களை வீரர்கள், உதவும் கரங்கள், காப்பாற்றும் இறைவன், சம்பாதித்துக் கொடுப்பவர் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு விடுகிறோம். அதுதான் பிரச்சினை. ஆண்கள் எல்லாம் குழந்தைகள்தாம். கீதை விழித்துக் கொள்கிறாள். பிரச்சினை தீர்ந்துவிட்டதே! கீதை, அவளது தாய், அத்தை, பாட்டி அனைவரும் குதூகலமாகப் பாடுகிறர்கள்:

தீர்ந்தது தீர்ந்தது தீர்ந்தே விட்டது
தீர்ந்தது தீர்ந்தது நம் சிக்கல்
கணவன்மார்கள் கைக்குழந்தை
அருமைக் கடைசி கைக்குழந்தை
வெளியே போனால் வீரசூரர்கள்
வீட்டில் வந்தால் கைக்குழந்தை.

அன்று அரங்கிலும் அதன் பின் பல நாட்கள் வீட்டிலும் அனைவரும் இந்த வரிகளைப்பாடி மகிழ்ந்தது மறக்கமுடியாத அனுபவம். மாமியார் குமுதினி அவர்கள் எந்த நிலையிலும் இருக்குமிடத்தை பிருந்தாவனமாக மாற்றும் ஆற்றல் படைத்திருந்தார்.  அந்த நாளும் வந்திடாதோ?