யூடியூப்புடன் நான்கு வாரக் கடைசிகள்

முதல் வாரக்கடைசி

அரசியல்வாதிகள் மட்டும்தான் பதவியோடு ஒட்டிக் கொள்வார்களா என்ன?
அந்த சனிக்கிழமை காலை என்னுடைய புல்வெட்டும் எந்திரம் நம்மூர் அரசியல்வாதிகளே தேவலாம் என்று தோன்ற வைத்துவிட்டது. பெட்ரோலில் வேலை செய்யும் இந்த எந்திரங்கள், பார்த்தால் எளிமையாக இருக்கும். ஆனால், பழுதானால், எந்திரப் பொறியியல் நிபுணத்துவம் தேவை என்று பயமுறுத்தும். இதை இயக்க, முதலில் சொஞ்சம் பெட்ரோல் எஞ்சினுக்குள் பாய்ச்ச ரப்பர் பாகம் ஒன்று இருக்கும். இதை மூன்று முறை அழுத்தி எந்திரத்தை உயிர்ப்பிக்க வேண்டும். ஆனால், அந்த சனிக்கிழமை, உள்ளே ஒட்டிக் கொண்ட ரப்பர் பாகம் வெளியே வர மறுத்தது.
புல்வெட்டும் எந்திரங்கள் சீனாவில் செய்து, வட அமெரிக்காவில் 400 டாலருக்கு சிரிக்கின்றன. ஒன்றை மறந்து விடக் கூடாது. சாதாரணக் காரில் சத்தியமாக இவற்றை ஏற்ற முடியாது. எடையும், வடிவமும் முற்றிலும் காருக்குச் சரிவராத மோசமான எந்திரம்! நானோ காரில் சுமோ குத்துச்சண்டைகாரர்களை ஏற்றுவதைப் போன்ற விஷயம் இது. இவ்வகை எந்திரங்களைப் பழுது பார்க்கப் புதிய எந்திரம் வாங்குவதை விட அதிக செலவாகும். ஒரு சின்ன ரப்பர் பாகத்திற்காக, எந்திரத்தை துறக்கவும் மனம் வரவில்லை. இருக்கவே இருக்கு கூகிளும், யூடியூப்பும்!
பழைய இங்க் நிரப்பியில் (ink filler) உள்ள ரப்பர் போல காட்சியளிக்கும் இந்த பாகத்திற்கு என்ன பெயர்? கூகிளில் பலவாறு தேடி, இதன் பெயர் primer bulb  என்று அறிந்து, உடனே யூடியூபில் தேடினால், எவ்வளவு எளிதாக இதை மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

’உன்னால் முடியும் தம்பி’ என்று மனதில் சொல்லிக் கொண்டு பக்கத்தில் உள்ள புல்வெட்டி போன்ற எந்திரங்களுக்குப் பாகங்கள் விற்கும் பெருங்கடைக்கு காரை விரட்டினேன். அங்கு 30 நிமிடங்கள் எனக்கு வேண்டிய ரப்பர் பாகத்தைக் கண்டுபிடிக்கவே ஆயிற்று. 10 சைஸ்களில் primer bulb இருக்கவே உடனே நம்முடைய தேவைக்கு என்ன சைஸ் என்று குழப்பம். பாழாய் போன யூடியூபில், மாற்றுபவருக்கு சரியான சைஸ் கிடைக்கிறது. கடை உதவியாளரைக் கோட்டால், என் புல்வெட்டி எந்திரத்தின் ஜாதகத்தை கேட்கவே, வெறுப்புடன், குத்து மதிப்பாக ஒரு சைஸ் பாகத்தை வாங்கி வீட்டிற்கு எடுத்து வந்தால், அது எந்திரத்தில் இருக்கும் ரப்பர் பாகத்தைவிட சிறிதாக இருந்தது. வீடு முழுவதும், 6 வருடம் முன்பு வாங்கிய புல்வெட்டும் எந்திரக் குறிப்பேடைத் (lawn mower manual) தேடினால், கிடைக்கவில்லை. சரி, கூகிளில், எந்திர மாடலை வைத்து, குறிப்பேட்டை தறவிறக்கம் செய்வது, அடுத்த வேலை. தேடிப் பிடித்த குறிப்பேட்டில் பார்த்தால், primer bulb  பற்றி எந்த விவரமும் இல்லை. நான்கு பக்கத்திற்கு மேல் அச்சடிக்கக் கூடாது என்று கங்கணம் கட்டியவர்கள் இவர்கள். இந்த உதவாக்கரை நான்கு பக்கத்திற்கு, 7 மொழிகளில் மொழிபெயர்ப்பு வேறு!
கடைசியாக, எந்திர பாகக் கடைக்குச் சென்று, எல்லா சைஸ் பாகங்களையும் வாங்கி வந்தேன். வட அமெரிக்காவில், பயன்படுத்தப்படாத பொருடகளைக் கடைக்கே திருப்பி விடலாம். கடை உதவியாளர், பொருளைத் திருப்பும் பொழுது சற்று குழம்பி விடுவார்! முதலில் கொடுத்த பில்லில் வரி ஒவ்வொன்றாக அடித்து, நமது 3 –ஆம் வகுப்பு கணக்கு விடைத்தாளை ஞாபகப்படுத்தி இன்பம் காணும் விந்தை மனிதர்! இத்தனைப் பொருட்களைத் திருப்புகிறோமே, முகம் சுளுக்குவாரோ என்று கவலை தேவையில்லை. ”நாள் நன்றாக இருக்கட்டும்” என்று வாழ்த்தி விடை கொடுக்கும் பொழுது, அதில் கிண்டல் எதுவும் கிடையாது. கடைசியாக, அதில் ஒரு சைஸ் சரியாக வர, யூடியூப்பில் சொன்னது போல அவ்வளவு எளிதாக ஒன்றும், ரப்பர் பாகத்தை மாற்ற முடியவில்லை. ஒரு வழியாக, மாற்றி முடிக்க பகல் மூன்று மணியாகி விட்டது. அதற்குள், எந்த வேலையும் உருப்படியாக முடிக்காததற்காக, மனைவியிடம் கிட்டிய சில பல அர்ச்சனைகள் பற்றிக் கேட்கவே வேண்டாம்!
அடுத்த திங்கள் அலுவலகத்தில், வாரக் கடைசி எப்படி இருந்தது என்று விசாரிப்பது இங்கு ஒரு பழக்கம். நானும் ஸ்டைலாக, ‘Did some work around the house’ என்று பெருமைப் பட்டுக் கொண்டேன். நல்ல வேளை, சென்ற ஆண்டு இங்கு வந்து போன மதன் இதைப் படிக்க மாட்டான் என்று நினைக்கிறேன். கோடை காலத்தில் ஒரு வாரம் இந்தியாவிலிருந்து இங்கு வந்து விட்டு எங்களை அவன் கிண்டலடித்தது இன்னும் நினைவிருக்கிறது. யூடியூபில் சந்தானம் காமெடி பார்ப்பதை விட்டுவிட்டு, இப்படியா அல்லாடுவது?
 

இரண்டாம் வாரக்கடைசி

இது ஒன்றும் ஒரு வாரக் கடைசியில் முடியும் விஷயமல்ல. ஆனால், ஆரம்பத்தில் அசட்டுத்தனமாக அப்படித்தான் நம்ப வைத்துக் கழுத்தறுத்து விட்டார்கள்.
வட அமெரிக்காவில் வீட்டு முன்னும் பின்னும் அவசியம் புல் வளர்க்க வேண்டும். சிக்கல் என்னவென்றால், புல்லைத் தவிர மற்றச் செடிகள் மிகவும் தெம்பாக வளர்ந்து விடும். அதுவும் இவற்றைப் பிடுங்கி எடுப்பது, மருந்து அடித்துப் புல்லைப் பாதுகாப்பது என்பது, இங்கு ஒரு பெரிய தொழில். வட அமெரிக்காவில், வளர்க்கப்படும் மிகப் பெரிய விவசாயப் பொருள் என்ன தெரியுமா? புல் தான்! போதாத குறைக்கு, இங்கு கால்ஃப் விளையாட்டுக்காக ஏராளமான நிலம் புல் வளர்ப்புக் கலைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சோளம், கோதுமை எல்லாம், புல்லுக்கு அடுத்தபடியாகத்தான்.
உண்மையிலேயே புல் வளர்ப்பது எனக்குச் சற்றும் வராத ஒரு கலை என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய இந்திய நண்பன் மதன், “இவ்வளவு பெரிய படிப்பு படித்துவிட்டு, வட அமெரிக்காவில் களை எடுப்பது பார்க்கவே ரொம்ப பாவமாக இருக்கு” என்று கிண்டலடிப்பான். நிச்சயமாக, வல்லவனுக்குப் புல்லா ஆயுதம்? இந்த பழமொழியை உருவாக்கியவர்கள் வட அமெரிக்கா பக்கம் வந்ததே இல்லை!,
ஆரம்பத்தில், குளிர்காலம் முடிந்தவுடன் புல் அழகாக மேல்வரும். அட, நம் வீட்டில் இவ்வருடம் பிரமாதமாக இருக்கப் போகிறது என்று நினைப்பதற்குள், களையும் (இதை weed என்கிறார்கள்), பிரமாதமாக வளர்ந்து தொலைத்துவிடும். இதைக் களைய என்ன வழி? சரி, ஹோம் டெப்போ கடையில் போய்க் கேட்கலாம் என்று காரை விரட்டிச் சென்றால், ஏராளமாகக் குழப்பி விடுவார்கள். முதல் கட்ட, களைத் தாக்குதல் என்னவென்றால், இதை பிடுங்கி எடுக்கும் எந்திரங்கள். இதில் 20 வகைகள் இருக்கும். கடை உதவியாளர் (சத்தியமாக உதவியைத் தவிர எல்லாம் செய்ய வல்லவர்) 2 நிமிடத்தில், பல வகை களை பிடுங்கிகளைப் பற்றி விளக்கித் தள்ளுவார். எப்படி இன்னும் 20 டாலர் கொடுத்தால், அடிவேர் வரை தோண்டும் விந்தை எந்திரம் வாங்கலாம் என்று ஆசை காட்டுவார்! இவர் சொல்வதைப் பார்த்தால், இன்றோடு ஒழிந்தது களை என்று மனதில் தெம்பு பிறக்கும்!
நம்பிக்கையுடன் வாங்கி வந்த களை பிடுங்கியுடன் சனி முழுவதும் ஒரு வழியாக களைகளைப் பிடுங்கி, புல் வெட்டி, மிகவும் திருப்தியாக இருக்கும். நல்ல வேளை, இவ்வகை எந்திரங்கள் உதவுகின்றன என்று நினைத்துச் சில நாட்களில், வேரோடு பிடுங்கிய களைகள் மீண்டும் தலை தூக்கும். என்ன செய்வது? மீண்டும் கூகிள் மற்றும் யூடியூப்.
இம்முறை, எப்படி மாய தெளிப்பான் (sprays) களையை முழுவதும் அழித்துவிடும் என்று கூகிள் மற்றும் யூடியூப் பறை சாற்றும். ஆஹா, யூடியூப்பில் தெளிப்பான் மருந்தை தெளித்தவுடன் உடனே எப்படி மாயமாய் இந்த பாழாய் போன களைகள் மடிகின்றன?!

உடனே ”ஓம் டிப்போ” வுக்கு பயணம் (கடவுள்தான் இந்த களைகளை அழிக்க வேண்டும்!). சில டாலர்கள் செலவு செய்து தெளிப்பான் வாங்கலாம் என்று போனால், அங்கு 17 வகை தெளிப்பான்கள் பல்வேறு சைஸ்களில் கிடைக்கும். கடை உதவியாளர், உங்கள் தோட்டம் எத்தனை பெரியது என்று சில பயனற்ற கணக்குகளைப் போட்டு, இருப்பதிலேயே பெரிய தெளிப்பானை நம் தலையில் கட்டி விடுவார்!
வீட்டிற்கு வந்து, மருந்தை தெளித்தால், ஒரு பிரமை ஏற்படும் பாருங்கள் – இது ஒரு விற்பனை ஜாலம்! அட, களை சாவது போலத் தோற்றமளிக்கிறதே, என்று தோன்றும். இது வேறு ஒன்றும் இல்லை – உள்மனதில் நம்முடைய உழைப்பால் ஈன்ற காசு வீண் போகக்கூடாதே என்ற வெறும் நப்பாசை. அடுத்த நாள் காலை வெய்யிலில், மீண்டும் அந்த களை அப்படி ஜொலிக்கும், சொன்னால் நம்ப மாட்டீர்கள்!
வேலை செய்யாத மருந்தை கடையில் திருப்பி, மேலும் பல கூகிள் தேடல்களுக்குப் பிறகு, களை எப்படியோ போகட்டும் என்று, புல்வெட்டும் எந்திரத்தால், புல் மற்றும் களையை அழகாக வெட்டிவிட்டு, ஒன்றுமே நடக்காதது போல நடிக்க வேண்டியது அவசியம்! கடை உதவியாளர், மருந்தைத் திருப்பும் பொழுது, அதில் என்ன பிரச்னை என்று கேட்பார். உடனே, நம்முடைய அத்தனை பயனற்ற அனுபவத்தையும் முதலில் சொல்லி மாட்டிக் கொள்வேன். முதல் நாள், கற்பூரத்து மேல் சத்தியம் செய்து தெளிப்பானை விற்ற மனிதர், அன்று இருக்க மாட்டார். இன்றைய உதவியாளர், நம்மை மேலும் குழப்பி, இன்னொரு தெளிப்பானை விற்று விடுவார்!
மனைவியின் ஒரே கேள்வி என்னவென்றால், ஹோம் டிப்போவில் ஏன் பிள்ளையார் கோயில் ஒன்றை கட்டவில்லை என்பதே. அவள் பார்வையில், தன் கணவருக்குப் புண்ணியமாவது கிடைத்திருக்கும்! பிள்ளைகளுக்கு, தோட்ட வேலை என்றவுடன் வீட்டுப் பாட ஞாபகம் உடனே வந்துவிடும்!

மூன்றாம் வாரக்கடைசி

வீடு பல ஆண்டுகளாகி விட்டதால், சற்று டல்லாக காட்சியளித்ததாக மனைவி சொல்ல, வீட்டில் ஒரு அறையை, குறிப்பாக வரவேற்பறைக்கு வண்ணம் பூசுவது என்று முடிவெடுக்கப் பட்டது. பெயிண்ட் காண்ட்ராக்டர்கள் ஏகத்துக்குப் பணம் கேட்பதோடு, நமக்குத் தோதான நேரத்திற்கும் வர மாட்டார்கள். ஆரம்பத்தில், இவர்கள் கேட்கும் கூலியைப் பார்த்தால், நம் வீட்டை நமக்கே வாடகைக்கு விடும் மனிதர்களா என்றுகூடத் தோன்றும்!
பல வன்பொருள் கடைகளுக்கு (எல்லாம் இதோ எட்டும் தூரத்தில் வைத்து ஆசை காட்டும் வியாபாரத் தந்திரம்!) படை எடுப்பு. சில வாரக் கடைசிகள் எந்த வண்ணம் பூச வேண்டும் என்ற விவாதத்திலேயே போய்விடும். வண்ண விஷயத்தில் மட்டும் தாய்குலமே வெற்றி பெறும்!
வண்ணத்தில் கவனம் செலுத்தியதால், எப்படி வண்ணம் அடிப்பது என்று கவலைப்படவிலை. இதற்காக இலவசமாக பெரிய வன்பொருள் கடைகள் வகுப்புகள் நடத்துகின்றன – இலவசமா என்று வகுப்புக்குச் சென்றால், அரைகுறையாகச் சொல்லிக் கொடுத்து விட்டு, பொருட்களை விற்கும் ஒரு வியாபாரத் தந்திரம்தான்! வண்ணம் அடிக்க உருளை தூரிகை (cylindrical brush) மற்றும் ஏராளமான உபரி விஷயங்களை வாங்கி வந்தால், கடையில் சொன்ன பாதி விஷயம் மறந்து விடும். நாம் கேட்கும் கேள்விகளிலிருந்தே, முதல் முறை வண்ணம் பூசும் கிராக்கி என்று கடை உதவியாளருக்குத் தெரிந்துவிடும். உடனே தேவை இல்லாமல், ப்ரைமர், நாடா, பாலிதீன் காகிதம், சில பல தூரிகைகள் என்று விற்றுத் தள்ளி விடுவார்கள்.
மேலும் வண்ணம் வாங்கப் போனால், இதில் பலநூறு வகைகள் வேறு. மரத்திற்கு ஒன்று, குளியலறைகளுக்கு ஒன்று, சமயலறைகளுக்கு ஒன்று, மற்ற அறைகளுக்கு இன்னொன்று, வீட்டின் வெளியே பூசுவதற்கு ஒன்று, உலோகத்தின் மேல் பூசுவதற்கு ஒன்று, என்று குழப்பித் தள்ளி விடுவார்கள். இதிலும் பல நிறுவனங்கள் தங்களது வண்ணம்தான் உயர்ந்தது என்று ஏதோதோ சொல்லி மேலும் குழப்புவார்கள்.
வண்ணம் பூசுவதில், அறையை தயார் செய்யும் வேலைகளுக்கு வண்ணம் பூசுவதை விட அதிகமான நேரமாகும் என்று யாரும் சொல்லுவதில்லை. ஒரு வழியாக வண்ணம் பூசத் தொடங்கினால், அங்கும் இங்கும் வண்ண வேறுபாடு கண்ணை உறுத்த ஆரம்பிக்கும். மேலும், மனதில் எண்ணியிருந்த வண்ணம், சுவரில் தோன்றாதது வேறு தாய்குலத்திற்கு உறுத்த ஆரம்பிக்கும். வண்ண விஷயத்தில் சிக்கல் என்னவென்றால், திறந்த வண்ண டப்பாவை கடைக்குத் திருப்ப முடியாது. மீண்டும் ப்ரைமர், மீண்டும் ஒரு புது வண்ணம். இப்படி முதல் முறை வண்ண டப்பாவைத் திருப்பச் சென்றால், கடை உதவியாளர், ஒரு கிண்டலுடன், “வண்ணம் வழியும் இப்படிப்பட்ட டப்பாவை நீங்கள் கடையில் வாங்குவீர்களா? பேசாமல் வீட்டின் கராஜில் பயன்படுத்துங்களேன்!” என்று அறிவுரை வேறு சொல்லி நம்மைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விடுவார்.
இப்படி போகும் வண்ணம் பூசும் வேலையில், இன்னொரு விஷயம், எல்லா சுவர்களிலும் வண்ணம் பூசுவது எளிது. ஆனால், இரு சுவர்கள் சேரும் இடத்தில் பூசுவது ஒரு தனிக்கலை. இருக்கவே இருக்கிறது யூடியூப். அதே போல உட்கூரை அருகே வண்ணம் பூசுதல் என்பது எளிதாகச் சொதப்பக்கூடிய விஷயம்.

உடனே வண்ணம் பூசும் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு, வன்பொருள் கடைக்கு ஓடி, அத்தகைய கருவியை வாங்கி வர வேண்டும். இத்துடன், வண்ணம் சரியாக பூசுவதற்கு பல வித்தைகள் உள்ளன.

இவை தெரியாமல், தவிப்பது மிகவும் சாதாரண நிகழ்வு. இதில் வேடிக்கை என்னவென்றால், யூடியூபில் பல மோசமான வீடியோக்கள் நம்மை தவறான வழியில் எளிதாக அழைத்துச் சென்று மேலும் பண விரயம் என்பதும் சாதாரணம். இத்துடன், பல சீனத்துத் தயாரிப்பான வண்ணம் பூசும் தூரிகைகள், வண்ணம் பூசும் போதே, அதிலுள்ள இழைகள் வெளியேறி கழுத்தறுக்கும். இதெல்லாம் கூடப் பரவாயில்லை. எந்தச் சிக்கல் வந்தாலும், ஏன் நாம் காண்ட்ராக்டர்களை பயன்படுத்தாமல் இப்படி அல்லாடுகிறோம் என்ற இந்திய நண்பன் மதனின் கிண்டலும் நினைவில் வந்து மிரட்டும்! தொலைபேசி உரையாடலில், “என்ன, Photoshop  வேலை எப்படி போகுது?” என்ற மதன் கிண்டலடிப்பும் வந்து போகும்!
வண்ணம் பூசுவதில் இன்னொரு சிக்கலும் உண்டு. கடைசியில் டேப்பை எடுத்தால், அதன் ஓரங்களில் வண்ணம் சரியாக ஒட்டியிருக்காது. இதை சரி செய்ய தேடினால், வண்ண டப்பா காலியாகியிருக்கும். மீண்டும் இன்னொரு டப்பா (வட அமெரிக்காவில் 3.78 லிட்டர் டப்பா சகிதமே விற்கிறார்கள்) வாங்கி, 95% வீணடிப்பது எங்கள் வழக்கம்! இப்படி வீட்டின் பல்வேறு வண்ண ப்ராஜக்ட்டுகளின் மிச்சத்தை வட அமெரிக்க வீடுகள் ஒவ்வொன்றும் பறை சாற்றும்! சில வருடங்களில், எதற்காக எந்தக் கருவியை வாங்கினோம் என்றே மறந்துவிடும்! வீட்டில் பாதாள அறையில் மறைந்து கிடக்கும் கருவிகளை, மீண்டும் மீண்டும் வாங்குவதில் இருக்கும் சுகம் இருக்கிறதே, அது, மதனுக்கு என்ன தெரியும்!

நான்காம் வாரக்கடைசி

வீட்டில் ஒரு அறையில் சரியான அலமாரி இல்லை என்று கோடை காலத்தில் திடீரென்று தோன்றித் தொலைக்கும். உடனே ஐகியா (Ikea) போன்ற கடைகளுக்குப் போய்ப் பல மணி நேரங்கள், கால் கடுக்க நின்று/நடந்து (இவர்களது கடை அமைப்பில், ஒரே ஒரு பொருள் வாங்க வேண்டுமானாலும், விற்கும் அத்தனை பொருட்களையும் தாண்டியே வர வேண்டிய கட்டாயம்!) வாங்கி வருவது, சில நேரங்களில் சரிப்படும். பல நேரங்களில், அந்த அலமாரியை ஒன்று சேர்த்த பிறகுதான், தேவையான பொருள் இதுவல்ல என்று தெரியவரும். அட, நம்முடைய வீடு மட்டும் ஏன் கடையில் கிடைக்கும் அலமாரிகளோடு ஒத்துழைக்க மறுக்கிறது?
நாமே, ஏன் இந்த அலமாரியை செய்யக் கூடாது என்ற விபரீத யோசனை தோன்றித் தொலைக்கும்! என்றோ படித்த கேத்திர கணிதம் இப்பொழுது கைவருமா?  முதல் வேலையாக, காகிதத்தில் ஒரு அவசர வடிவமைப்பு.. இதற்கான மூலப் பொருள்கள் வாங்குவதற்குள், கிழிந்துவிடும். என் இந்திய நண்பன் மதன் சொல்வது போல, “கணினி விஞ்ஞானம் படித்துவிட்டு, ஏன் தச்சு வேலை உனக்கு வரும் என்று அபத்தமாக சிந்திக்கிறாய்?”
கடைக்குப் போய் மரப் பலகைகள் வாங்க வேண்டும். அத்துடன் பலகைகளை அறுக்க, தகுந்த மின் ரம்பங்கள், மின் துளைக்கருவி மற்றும் மின்திருப்புளி வேறு தேவை. சொன்னால் நம்ப மாட்டீர்கள். படித்த படிப்பெல்லாம் வீண் என்று தோன்றும் அளவிற்கு, அத்தனை மாடல்கள், அத்தனை யூடியூப் வீடியோக்கள், மற்றும் விமர்சனங்கள். மின் ரம்பங்களில்,  மரத்தை வெட்ட, உலோகத்தை வெட்ட என்று பல வகை உண்டு. அதுவும், பலகை வெட்டும் மின்ரம்பங்களை, பெரிய மரத்தை வெட்டப் பயன்படுத்த முடியாது.
https://www.youtube.com/results?search_query=electric+saw+for+wood
மேலே உள்ள மர மின் ரம்ப சுட்டி, பல்லாயிரம் வீடியோக்களுடன் (ஏறக்குறைய 46,000) உங்களை பயமுறுத்தும் என்றால் பாருங்களேன். இது போல, மின்துளை கருவிகளுக்கும் அத்தனை வீடியோக்கள் உண்டு!
மின்கலத்தில் இயங்கும் கருவிகள், மின்சாரத்தில் இயங்கும் கருவிகள் என்று ஒரு பாரதப் போரே நடத்தி முடிக்க வேண்டும். மின்கலத்தில், 6 வோல்ட், 12 வோல்ட், 18 வோல்ட் என்று மேலும் சில வகைகள் வேறு!
ஹோம் டிப்போ, அல்லது ஹார்பர் ஃப்ரெயிட் (Home Depot or Harbor Freight) சென்றால், ஒரு கருவி வாங்குவதற்குள் திக்கு முக்காடும். அடுத்து தேவையான திருகாணி வாங்குவதும், ஒரு தனிக்கலை. பலகை எத்தனை அகலமானது என்பதைப் பொறுத்து சரியான திருகாணிகள் வாங்குவதும் ஒரு சின்ன தீரச்செயல்!
ஒரு வழியாக மரத்தால், தேவையான பாகங்களை உருவாக்குவது வெறும் முதல்படிதான். சரியான 45 டிகிரியில் வெட்ட வேண்டும் என்றால், சாதாரண ரம்பத்தால் இயலாது. இதற்கு Mitre Saw  என்ற ரம்பம் உள்ளது,
https://www.youtube.com/results?search_query=mitre+saw
உடனே யூடியூப்பில் இன்னும் ஒரு 45000 வீடியோக்கள் ரெடி! தலை சுற்றும் விஷயம் ஒரு அலமாரி செய்வது என்பது!. ஒரு வழியாக, சில சோதனைகளும் ஏராளமான மரக் கழிவுகளுக்கும் பின் ஒரு வழியாக அலமாரி ரெடியாகிவிடும். ஏராளமாக எதற்கும் பயனில்லாத அறுக்கப்பட்ட மரப் பலகைகள் பாக்கி இருக்கும்! எத்தனை செலவாயிற்று என்று மட்டும் கேட்காதீர்கள். இம்முறை அதிகமாகத் தோன்றலாம். எதிர்காலத்தில், வெறும் மரம் மட்டும் இருந்தால் போதும் – எத்தனை அலமாரிகள், மேஜைகள் நாற்காலிகள் எல்லாம் செய்ய முடியுமாக்கும்! அட, அலமாரி செய்யத் சற்றும் தளராத மனம் வேண்டும் என்று யாராவது உங்களிடம் சொல்லியிருக்கிறார்களா? விடக் கூடாது. 40 டாலர் அலமாரி சரியில்லையெனில், நாமே ஒரு தொழிற்கூடம் அமைப்போம். யூடியூப் இருக்க பயம் வேண்டாம்! இதற்குப் பின், மர அலமாரி அழகாக இருக்க இன்னும் சில வார்னிஷ்களுக்காக படையெடுப்பும் உண்டு.
முடிவுரை
கடைசியாக, ஒரு வாரக் கடைசியில், நண்பர்களை வீட்டிற்கு ஒரு விருந்துக்காக அழைப்பதும் வழக்கம். வந்த நண்பர்கள், எங்களது வண்ண வேலையைப் (paint job) புகழ்ந்து தள்ளுவார்கள். அட, என்னமாக தோட்டத்தை பராமரிக்கிறீர்கள் என்று புகழாரம் வேறு. நானும் யூடியூப் விஷயத்தைப் பற்றிச் சொல்ல மாட்டேன், நண்பர்களும் தங்களது யூடியூப் ரகசியங்களைச் சொல்ல மாட்டார்கள். இது சூர்யா படமா என்ன, சொல்லிப் பெருமைப் படுவதற்கு?
ஆனால், யூடியூப் மட்டும் இல்லையேல், புதிய பல திறன்களை வளர்த்துக் கொள்ள முடியாது. மேலும், திரும்பத் திரும்ப, புரியும் வரை பார்த்து, வேலையை தெரிந்து கொள்வதன் மன நிறைவு, என் நண்பன் மதனுக்குப் புரியுமா என்ன? முக்கியமாக, சில ஆண்டுகளுக்குப் பின், யாரையும் எதிர்பார்க்காமல், நம்முடைய தேவைகளை நாமே பார்த்துக் கொள்வது மிகவும் மன நிறைவான விஷயம்.
 

0 Replies to “யூடியூப்புடன் நான்கு வாரக் கடைசிகள்”

  1. நீங்கள் எப்போது எங்க வீட்டிற்கு வந்தீர்கள்? எல்லார் வீட்டிலும் ஒரே கதை தான் போலும். அதுவும் இந்த யூ ட்யுப் பார்த்து கற்றுக் கொள்வது இருக்கிறதே… சில முறை கை கொடுத்து பல முறை கீழே தள்ளிய அனுபவம் தான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.