பழந்தமிழர் வேளாண்மைத் தொழில் நுட்பம்

துலா – பயன்பாடும் வடிவமைப்பும்

அந்தக்காலத்தில், (1930 களில்) யாழ்ப்பாணத்தின் தோட்டங்களின் தண்ணீர்த் தேவைகளை நிவர்த்தி செய்ய துலாக்கள் இன்றியமையாததாக இருந்தன. மின்சாரப் பாவனையும், பெட்ரோல் டீசல் பாவனையும் மிக அரிதான அந்தக் காலக்கட்டத்தில் நீர் இறைக்கும் இயந்திரங்களோ, நவீன சாதனங்களோ இருக்கவில்லை. பணம் படைத்தவர்கள் கூட்டாகச் சேர்ந்து அமைத்து தமக்கு தேவையான காலத்தில் தமது தோட்டங்களுக்கு பயன்படுத்திய, மாடுகளைக் கட்டி இழுக்கும் சொரிவாளி சூத்திரங்களும் சங்கிலி பூட்டி மாடு இழுக்கின்ற இரட்டை வாளி சூத்திரங்களும்கூட மிக அரிதாகத்தான் காணப்பட்டன.
அப்போது பெரும்பாலான தோட்டங்களில் கிணறுகளும் அவற்றில் நீர் இறைக்க ஒவ்வொரு கிணற்றுக்கும் தலா ஒவ்வொரு துலாவும் இருக்கும். துலாவின் எல்லாப் பாகங்களும் பனைமரத்தின் பகுதிகளைப் பயன்படுத்தியே செய்யப்பட்டிருக்கும். இதன் இயக்கம் ரயில்வே கடவைகளில் பயன்படுத்தப்படும் தடுப்பை அல்லது ஒரு சீசா (see saw)வை ஒத்திருக்கும்.

Pulley_Wheel_Village_Farming_Ancient_Axis_Water_Agriculture_Pumps_Manual

துலாவால் நீர் இறைத்தல்

துலாவைப் பயன்படுத்தி பெரிய தோட்டங்களுக்கு நீர் இறைக்க முடியும். ஒவ்வொரு இழுவையிலும் 35 கலன் (130 லிட்டர்) நீரை துலாவால் இழுக்கக் கூடியதாக இருக்கும். ஆனால், அவ்வளவு எடையுள்ள நீரை, கைகளால் இழுக்க முடியாது என்பதால், துலாவில் மனிதர்கள் ஏறி, தமது எடையைப் பயன்படுத்தி நீர் இறைப்பார்கள். கிணற்றின் அளவைப் பொறுத்து இரண்டு பேர் அல்லது நான்கு பேர் துலாவில் ஏறவேண்டியிருக்கும்.
ஆரம்பத்தில், படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு துலா நிமிர்ந்து நின்றுகொண்டிருக்கும்போது அதன் பின்புறம் நிலத்தில் தொட்டுக்கொண்டிருக்கும். துலாவின்மேல் ஏணிப்படிகள் போன்ற அமைப்புகளில் மனிதர்கள் ஏறி இறங்க முடியும். சிறு கிணறு ஒன்றுக்கு, முதலில் இரண்டு பேர் துலாவில் ஏறுவார்கள். சமநிலை தவறி விழுந்துவிடாமல் இருப்பதற்கு, ஆடுகால் மரங்களில் கட்டப்படிருக்கும் ஓடுகயிற்றை லேசாகப் பிடித்துக்கொள்வார்கள். ஒருவர் அடிப்பாகத்தில், நிலத்துக்கு அருகிலும், மற்றவர் முன்பாகத்தில் அச்சுலக்கைக்கு மேலும் நிற்பார்கள். இப்போதும் துலா நிமிந்து நிற்கும். துலாவைப் கீழே பதித்து நீர் அள்ளச் செய்வதற்கு அச்சுக்கு மேல் நிற்பவர் துலாவின் நுனியை நோக்கி ஏற ஆரம்பிக்கும் அதேநேரம், துலாவின் பின்புறம் இருப்பவரும் அச்சை நோக்கி ஏறுவார். இதனால் துலா பதிந்து, பீலிப்பட்டை கிணற்றினுள் நீரைத் தொட்ட உடனேயே அது சரிந்து நீரை அள்ளத் துவங்கும்.
இப்போது துலா நுனியில் நிற்பவர் நீர் அள்ளப்படுவதைக் கவனிப்பார். நீர் கோலி முடிந்ததும், அவர் துலாவின் அச்சை நோக்கி பின்னோக்கி நகர்வார். அதேநேரம் துலாவின் அச்சுக்குக் கீழ் நிற்பவரும் துலாவின் பின்புறமாக நகர்வார். இப்போது, துலா மேலே நிமிரத் துவங்கும். பீலிப்பட்டை நீருடன் மேலே வந்ததும், கிணற்று வாயிலில் (மிதியில்) நிற்பவர் பீலிப்பட்டையை சரித்து மிதியில் இருக்கும் பீலியில் நீரை ஊற்றுவார். அந்நீர் பீலி வழியாக வாய்க்கால் ஊடாக தோட்டத்துக்கு ஓட, தோட்டத்தில் நிற்பவர் அந்நீரை திருப்பிவிட்டு பயிர்களுக்கு பாய்ச்சுவார்.
பீலிப்பட்டையிலிருந்து நீர் வெளியேறிய உடனே துலா கொஞ்சம் கீழ்நோக்கி பதிய ஆரம்பிக்கும். அப்போது, துலாவை இன்னும் பதிய வைப்பதற்காக, துலாவில் நிற்கும் இருவரும் மறுபடியும் முன்னோக்கி ஏறுவார்கள். இப்படியாக முன்னும் பின்னும் நடந்து நடந்து துலாவால் நீர் இறைப்பார்கள். தொடர்ந்து நீர் இறைப்பதால், வாய்க்காலில் நீர் தடையில்லாமல் தொடர்ந்து பாய்ந்துகொண்டிருக்கும்.
அன்றாடத் தேவைகளுக்காக நீர் அள்ளப்படும் கிணறுகளில், மேற்படி துலாவில் துலாக்கயிறு இல்லாமல் சாதாரண கயிற்றில் சாதாரண வாளி பொருத்தப்படிருக்கும். பெண்களும்கூட கயிற்றை இழுத்து துலாவை பதியவைத்து நீர் கோலி, அள்ள முடியுமாறு சமநிலையில் துலா வைக்கப்படிருக்கும். அவ்வாறு சமநிலையில் இல்லையென்றால், தேவையான பக்கத்தில் பாரமான கற்கள் கட்டப்பட்டு சமநிலை பேணப்படும்.
இத்தகைய பயனுள்ள துலாவினால் ஆபத்துக்களும் இல்லாமலில்லை. எனக்கு 13 வயதாக இருக்கும்போது (1941 இல்), நாங்கள் குத்தகைக்கு எடுத்த தோட்டமொன்றில், ஒருநாள் நானும் இரண்டு அண்ணர்களும் துலாவால் நீர் இறைத்துக்கொண்டிருந்தோம். நான் துலாவின் நுனிப்பகுதியிலும் எனது இரண்டாவது அண்ணர் (பண்டிதர் என்று அழைக்கப்பட்டவர்) துலாவின் பின்பகுதியிலும் ஏறி நடந்துகொண்டிருக்க மூன்றாவது அண்ணர் கீழே, கிணற்று மிதியில் நின்றுகொண்டிருந்தார். வழக்கம்போல நீர் கோலிவிட்டு துலா நிமிர்ந்துகொண்டிருக்கும்போது திடீரென்று பீலிப்பட்டைக் கயிறு அறுந்துவிட்டது. பெருத்த ஓசையோடு பீலிபட்டை கிணற்றுக்குள் விழ, துலா முழுவிசையோடு சட்டென்று நிமிர்ந்தது. பலமுறை துலாவில் நீர் இறைத்துப் பழக்கப்பட்டதால், துலாவில் நின்ற நாங்கள் இருவரும் ஓடுகயிற்றை இறுக்கமாகப் பிடித்திருக்கவில்லை. எனவே, துலா நிமிர்ந்த வேகத்தில், கண்ணிமைக்கும் நேரத்தில் நான் சமநிலை தவறி வாய்க்காலில் விழ, இரண்டாவது அண்ணர் துலாவிலிருந்து தூக்கி வீசப்பட்டார். உயரம குறைவாக இருந்ததால், இருவரும் பெரிய காயங்கள் இல்லாமல் தப்பிவிட்டோம். ஆனால் எங்கள் அப்பு (அப்பா) ஒருமுறை இவ்வாறு பெரிய துலாவொன்றிலிருந்து வீசப்பட்டு படுகாயம் அடைந்திருக்கிறாராம்.

Thula_Antique_Well_Wheel_Pulley

துலா ஒன்றைத் தயார்செய்தல்

துலா ஒன்றைச் செய்வதற்கு, முதலில் 20 – 25 முழம் நீளமுள்ள வைரமான பனையைத் தேர்ந்தெடுப்பார்கள். அதனை சரிசமமான இரு பாதிகளாக நீளவாக்கில் பிளந்து அதன் வெளித்தோலை (பட்டையை) அழுத்தமாகச் சீவியெடுப்பார்கள். அந்த இரு பாதி பனைமரத்துண்டுகளிலும் நிறையத் துளைகளை வரிசையாக இட்டு, அவை இரண்டையும் ஒருசேர வைத்துப் பொருத்தி, சீவிய சிறு பனைமரத் துண்டுகளை அத்துளைகளூடாக செலுத்தி சேர்த்துவிடுவார்கள். துலாவில் ஏறுவதற்கு ஒரு ஏணிபோல இந்தத் துண்டுகள் பயன்படுத்தப்படும்.
பின்பு, துலாவின் அச்சுலக்கையைச் (Axis) செய்வதற்கு பனை மரத்திலான இன்னொரு கட்டையை எடுத்துக்கொள்வார்கள். அதைக் கிடையாக வைத்து, அதன் உருளையான சுற்றுப்புறத்தில் மேல் அரைவாசியை தட்டையாகவும் கீழ் அரைவாசி சுற்றுப்புறத்தை சீரான வளைவாகவும் (ஆடுகால் கட்டைகளில் உருள்வதற்கு வசதியாக) செதுக்குவார்கள். பிறகு மேற்கூறிய முழுப்பனைமர அமைப்பினை எடுத்துக்கொண்டு நடுவில் பனைமரத்தின் பாரமான அடிப்பாகம் பின்புறமாகவும், பாரம் குறைந்த நுனிப்பாகம் முன்புறமாகவும் இருக்கும்படி வைத்து, சமநிலைப்புள்ளியைக் கண்டறிந்து, ஒரு பெரிய துளையிட்டு அதில் அச்சை இறுக்கமாகச் செருகிவிடுவார்கள். இப்போது துலா தயார். இனி இதனை ஆடுகாலில் பொருத்தவேண்டும்
ஆடுகால் என்பது, கிணற்றிற்கு அருகில் துலாவைத் தாங்கி நிற்பதற்காக மரங்களால் அமைக்கப்படுவதாகும். நான்கு மரங்களை 10 அடி சதுரத்தில் கிணற்றுக்கு அருகில் நடுவார்கள். இரண்டு வைரமான கட்டைகளை மரங்களில் வைத்து அம்மரங்களை இரண்டிரண்டாக இணைத்து கீழே படத்தில் காட்டியதுபோல் கட்டிவிடுவார்கள். பிறகு துலாவைத் தூக்கி அச்சுலக்கை ஆடுகாலின் கட்டைகளில் பொருந்துமாறு வைக்கவேண்டும். இதற்கு, முதலில், துலாவை ஆடுகால் கட்டைகளுக்கு இடையில் நிலத்தில் வைப்பார்கள். பிறகுஆடுகாலின் கட்டையொன்றில் கயிறு கட்டி, துலாவிற்குக் கீழாக கயிற்றை செலுத்தி, மறுபக்கம் அடுத்த ஆடுகாலுக்கு மேலே கயிற்றை எடுத்து இழுப்பார்கள். அதேநேரத்தில் ஒருவர் தரையில் கிடக்கும் துலாவின் பின்புறத்தை நெம்பி எழுப்புவார். விளைவாக துலா உயர்ந்து ஆடுகால் கட்டைகளுக்கு மேலே வரும்போது, அச்சு துளையில் அச்சை நுழைத்து இறுக்க அடிப்பார்கள். அச்சு நன்கு இறுகியதும், கயிற்றை எடுத்துவிடுவார்கள். துலா ஆடுகாலில் தங்கி நுனிப்பக்கம் நிமிர்ந்து நிற்கும்.

rope_pulley_Vintage_Design_Engineering_Well_Farming_Water_Land_Ground

துலாக்கயிறு என்பது பனம் ஈர்க்கினால் பின்னப்பட்ட தடித்த கயிறாகும். பனங்குருத்தில் இருந்து ஓலை பிரித்தெடுக்கும்போது ஈர்க்குகளையும் பிரித்து வெயிலில் உலர்த்துவார்கள். பின்பு அவற்றை 15-20 ஈர்க்குகள் கொண்ட புரிகளாக பிரித்து, பெண்கள் ஜடை பின்னுவதுபோல் மூன்று புரிகள் வைத்துக் கயிறாக பின்னுவார்கள். இக்கயிறு ஒவ்வொரு இழுவையிலும் 130 கிலோ நீரை தூக்கும் அளவிற்கு பலமுள்ளதாகவும் பலவருடங்களுக்கு அறுந்து போகாதபடியும் இருக்கும்
இப்போது துலாவின் நுனியில் பனம் ஈர்க்கினால் திரித்த துலாக்கயிற்றை நிமிர்ந்து நிற்கும் நுனித்துலாவில் கட்டி, கீழே இழுத்தால், துலா முன்பக்கம் பதிந்து கிணற்று வாயிலுக்கு (மிதிக்கு – நின்று தண்ணீர் அள்ளும் இடத்துக்கு-) வரும். இப்போது ஈர்க்குக் கயிற்றின் மறுமுனையில் வாளி/கடகம் போன்ற பெரிய பீலிப்பட்டையைக் கட்டுவார்கள்.
பீலிப்பட்டை என்பது 35 கலன் (130 லிட்டர் அல்லது 13 வாளி) நீரைக் கொள்ளக்கூடியதாக பனை ஓலையால் பெட்டி இழைப்பதுபோல் இழைத்துச செய்யப்படுவது. அடிப்பாகத்தில் ஒரு மூலையும் மூன்று பக்கங்களில் மூன்று மூலைகளும் வரும்படியாக பனை ஓலையால் இழைத்து, மேல் விளிம்புக்கு பனை மட்டையைச சீவி வளைத்துச சுற்றிக் கட்டி பலப்படுத்துவார்கள். பின்பு, பீலிப்பட்டை கிணற்றின் உட்சுவர்களில் உரசும்போது, மூலைகளைப் பாதுகாப்பதற்காக, பனைமட்டையிலிருந்து உரிந்து எடுத்த நாரினால் நான்கு மூலைகளுக்கும் பொத்துவார்கள். இந்தப் பீலிப்பட்டையில் பட்டைக்கல் பொருத்தப்படும்.
பட்டைக்கல் – ஒரு வைரமான கல்லை வட்டவடிவமாக 3-4 அங்குலத் தடிப்பில் வெட்டி எடுத்து அதன் நடுவில் துளையிட்டு, உருண்டையான மரக்கம்பு ஒன்றை கல்லின் துவாரத்தில் இறுக்கி பீலிப்பட்டையின் மட்டையுடன் இணைத்துக் கட்டுவார்கள். பட்டைக்கல் என்பது பீலிப்பட்டை தண்ணீர் கொண்டுவரும்போது சுருங்காமல் இருக்கவும், கிணற்றுக்குள் தண்ணீரில் தாமதமில்லாமல் சரிந்து தண்ணீர் கோலவும் உதவுகின்றது. இனி, துலாக்கயிற்றின் முனையில் முடிச்சுப் போட்டு பீலிப்பட்டை அமைப்பை அதில் பிள்ளைக் கயிற்றால் இணைப்பார்கள்.
பிள்ளைக் கயிறு என்பதும் பனை ஈர்க்குகளால் ஆனது. ஆனால், துலாக்கயிறு போல தடிப்பாக இல்லாமல் ஓடுகயிறு போல நீளமாக இருக்கும். இதைப் பயன்படுத்தி பீலிப்பட்டையையும் பட்டைக்கல்லையும் சுற்றிக்கட்டி மேலே கொண்டுவந்து துலாக்கயிற்றில் போட்டிருக்கும் முடிச்சில் கட்டிவிடுவார்கள்.
ஓடுகயிறு என்பது பனை ஈர்க்கினால், துலாக்கயிறைவிட மெலிதாக, ஒரு கைப்பிடிக்குள் அடங்குமாறு செய்யப்படுவது. துலா மேல் நடப்பவர்கள் பிடித்துக்கொள்வதற்காக இது ஆடுகாலில் கட்டப்பட்டிருக்கும்.
இப்படியாக ஒரு துலாவை முழுமையாக உருவாக்கி நிலைப்படுத்துதல் என்பது ஒரு கலை. தச்சர்களும் தச்சு வேலை தெரிந்த மற்றவர்களும்தான் இவ்வேலைகளை செய்ய முடிந்தது. துலாவின் உருவாக்கத்தில்கூட யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதிகளின் அடையாளமான, கற்பகத் தருவான பனைமரத்தின் பகுதிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டமை இவ்வகையான துலாவின் வடிவமைப்பானது சென்ற நூற்றாண்டு யாழ்ப்பாணப் பாரம்பரியத்தின் எச்சங்களில் ஒன்று என்பதை சுட்டிநிற்கின்றது.

0 Replies to “பழந்தமிழர் வேளாண்மைத் தொழில் நுட்பம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.